search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    • தாயின் உடல் தகனம் செய்வதற்கு முன் அதற்கான செலவுகளை சகோதரிகள் மூன்று பேரும் சமமாகப் பங்களிக்க வேண்டும் என்று சைதி ரெட்டி கூறினார்.
    • ஊர் பெரியவர்களின் வழிகாட்டுதலின் கீழ், சைதி ரெட்டி இறுதியில் தகனத்தை செய்ய ஒப்புக்கொண்டார்.

    உயில் எழுதுவது ஏன் முக்கியம் என்பதை இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.

    79 வயதான வேமு லக்ஷ்மம்மா என்ற மூதாட்டிக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இளைய மகளுடன் வசித்து வந்தார் வேமு லக்ஷ்மம்மா. சில நாட்களுக்கு முன் குளியலறையில் விழுந்ததில் தலையில் ஏற்பட்ட காயத்தால் வேமு லக்ஷ்மம்மா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். இருப்பினும் அவரது உடல்நிலை மோசம் அடைந்ததால் மருத்துவர்கள் அவரை வீட்டிற்கு அழைத்து செல்லும்படி குடும்பத்தினருக்கு அறிவுரை வழங்கினார்.

    அதுவரை தாயாரை கண்டுகொள்ளாத மகனான சைதி ரெட்டி, சகோதரிகளிடம் சண்டையிட்டு மூதாட்டியை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். இதை தொடர்ந்து மூதாட்டி வேமு லக்ஷ்மம்மா கடந்த செவ்வாய்கிழமை இரவு காலமானார்.

    இதையடுத்து மூதாட்டி மரணத்தை தொடர்ந்து, அவர் விட்டு சென்ற ரூ.21 லட்சம் மதிப்பிலான சொத்துக்களால் ஏற்பட்ட தகராறால் அவரது இறுதிச் சடங்குகளை செய்வதில் இருந்து குடும்பத்தினர் பின்வாங்கினர்.

    ரூ.21 லட்சம் மதிப்பிலான சொத்துக்களில் மருத்துவ செலவுக்கு 6 லட்சம் ரூபாயும், மீதமுள்ள 15 லட்ச ரூபாயை, சைதி ரெட்டி எடுத்துக்கொண்டுள்ளார். மூன்று மகள்களும் தங்களுக்குள் 25 சவரன் தங்க நகைகளை சமமாக பகிர்ந்து கொண்டனர்.

    இருப்பினும் தாயின் உடல் தகனம் செய்வதற்கு முன் அதற்கான செலவுகளை சகோதரிகள் மூன்று பேரும் சமமாகப் பங்களிக்க வேண்டும் என்று சைதி ரெட்டி கூறினார். இதனால் ஏற்பட்ட பிரச்சனையில் மூதாட்டியின் உடல் ஆம்புலன்சிலும், பின்னர் ஐஸ் பெட்டியிலும் என இரண்டு நாட்களாக வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து கிராமப் பெரியவர்கள் தலையிட்டு, இறுதிச் சடங்குச் செலவுகளை ஏற்க சைதி ரெட்டியை வற்புறுத்திய பின்னரே பிரச்சனை தீர்க்கப்பட்டது. அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், சைதி ரெட்டி இறுதியில் தகனத்தை செய்ய ஒப்புக்கொண்டார்.

    ஆறறிவு கொண்ட மனிதர்களாகிய நாம் வாழும் போது தாய், தந்தையரிடம் அன்பு காட்டுவதில்லை. அவர்கள் இருக்கும் போது நாம் சொத்துக்காக சண்டை, பெற்றோரை யார் பார்ப்பது என்பதில் சண்டை என தொடங்கி நம்முடைய பாசத்தை காட்ட தவறுகிறோம். ஐந்தறிவு கொண்ட விலங்குகளிடம் இருக்கும் பாச உணர்வு நம்மில் பல பேருக்கு இருப்பதில்லை. தேடி தேடி அலைந்தாலும் கிடைக்காத சொத்து தாய், தந்தை பாசம் மட்டுமே என்று உணர்ந்தால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாது.

    • மக்கள் என்னை 3-வது முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்க முடிவு செய்து தேர்தலில் வாக்களித்து உள்ளனர்.
    • ஜெகன்மோகன் ரெட்டியும் 2-வது முறையாக அதிக இடங்களில் வெற்றி பெற்று முதல் மந்திரியாக வருவார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே பிரசித்தி பெற்ற கெங்கையம்மன் கோவில் உள்ளது.

    கெங்கையம்மன் கோவிலில் தற்போது கூழ்வார்க்கும் திருவிழா நடந்து வருகிறது.



    இந்த விழாவில் ஆந்திர மாநில விளையாட்டுத்துறை மந்திரி ரோஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அம்மனுக்கு பட்டு சேலை உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை வழங்கினார். பின்னர் அம்மனுக்கு தீபாரதனை செய்து வழிபட்டார்.

    நகரி தொகுதி மக்கள் என்னை 3-வது முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்க முடிவு செய்து தேர்தலில் வாக்களித்து உள்ளனர்.


     நான் 3-வது முறையாக வெற்றி பெறுவது உறுதி. அதேபோல் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியும் 2-வது முறையாக அதிக இடங்களில் வெற்றி பெற்று முதல் மந்திரியாக வருவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உயிர் காக்கும் ஊசி மருந்துக்காக 9 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டது
    • இதில் பிரபல நடிகர், கிரிக்கெட் வீரர் முதல் காய்கறி விற்பனையாளர் வரை அனைவரும் அடக்கம்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் போலீஸ் எஸ்.ஐ. ஆக இருந்து வருபவர் நரேஷ் ஷர்மா. இவரது 2 வயதில் ஹிருதயான்ஷ் ஷர்மா என்ற மகன் உள்ளார்.

    ஷர்மா ஸ்பைனல் மஸ்குலர் அட்ராபி (எஸ்எம்ஏ) எனப்படும் அரிய மரபணு கோளாறால் பாதிப்பு அடைந்துள்ளார். இதற்கு ஒற்றை டோஸ் மரபணு சிகிச்சை ஊசி மூலம் மட்டுமே சிகிச்சை அளிக்க முடியும். இந்த மருந்தின் விலை ரூ.17. கோடி. இது உலகின் மிக விலை உயர்ந்த மருந்துகளில் ஒன்றாகும்.

    ஷர்மா இடுப்பிற்குக் கீழே உள்ள அனைத்து உடல் செயல்பாடுகளையும் கிட்டத்தட்ட இழந்திருந்தான். ஊசி போடப்படுவதற்கு முன் அவனால் இயல்பான வாழ்க்கையை நடத்தமுடியும் என்பதை உறுதிப்படுத்தினர்.

    ஜெய்ப்பூரில் உள்ள ஜே.கே.லோன் மருத்துவமனையில் 3 மாதத்துக்குள் ₹9 கோடி திரட்டப்பட்டு, ஹிருதயன்ஷுக்கு ஊசி போடப்பட்டது. மீதமுள்ள தொகையை ஒரு வருடத்திற்குள் 3 முறை செலுத்தவேண்டும்.

    பிரபல நடிகர், கிரிக்கெட் வீரர் முதல் காய்கறி விற்பனையாளர் வரையிலான பலரது முயற்சியால் நிதி திரட்டப்பட்டது.

    பிரபல நடிகர் சோனு சூட் மற்றும் கிரிக்கெட் வீரர் தீபக் சாஹர் ஆகியோர் சமூக வலைதளங்களில் வேண்டுகோள் விடுத்தனர். ஜெய்ப்பூரில் பழம் மற்றும் காய்கறி விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் பழங்களை விற்பவர்கள் உள்பட அனைத்து இனத்தைச் சேர்ந்த தனிநபர்களும் நிதி திரட்டுவதில் பங்களித்தனர். பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக குழுக்கள் பிரசாரத்திற்காக நிதி திரட்ட உதவியது.

    மாநில காவல்துறை பணியாளர்கள் தங்களது ஒருநாள் சம்பளமான 5 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளனர். ராஜஸ்தானில் இதுபோன்று நிதி திரட்டப்படுவது முதல் நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.

    • மனைவி உடலை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு பல்வேறு கோணங்களில் செல்பி எடுத்து அதை தனது செல்போனில் பதிவு செய்து கொண்டார்.
    • கதவை உடைத்து உள்ளே சென்றபோது பெண் படுக்கை அறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிந்தது.

    காசியாபாத்:

    உத்தரபிரதேச மாநிலம் இடாக் பகுதியைச் சேர்ந்த தம்பதி காசியாபாத் பகுதியில் வசித்து வந்தனர். அங்குள்ள லோனி என்ற இடத்தில் கணவர் பணிபுரிந்து வந்தார்.

    அவரது மனைவி டெல்லி புறநகர் பகுதியான நொய்டாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

    கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. மனைவி வேலைக்கு செல்வது கணவருக்கு பிடிக்கவில்லை. இது தொடர்பாக இருவரும் கடும் வாக்குவாதத்தில் அடிக்கடி ஈடுபடுவது உண்டு.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த கணவர் தாவணியால் மனைவியின் கழுத்தை சுற்றி சுருக்கு போட்டு இழுத்தார். இதில் அந்த பெண்ணின் கழுத்து எலும்புகள் நொறுங்கி அங்கேயே பிணமானார்.

    மனைவி உயிரிழந்ததை உறுதி செய்த கணவர் பிணத்துடன் செல்பி எடுத்தார். மனைவி உடலை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு பல்வேறு கோணங்களில் செல்பி எடுத்து அதை தனது செல்போனில் பதிவு செய்து கொண்டார்.

    பிறகு செல்பி காட்சிகளை அவர் தனது தம்பி மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி வைத்தார். அதை கண்டதும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த நபரை தொடர்பு கொள்ள செல்போனில் முயற்சிகள் மேற்கொண்டனர். அதற்கு பதில் கிடைக்கவில்லை.

    இதையடுத்து அந்த நபரின் தம்பி காசியாபாத்தில் உள்ள வீட்டுக்கு வந்து பார்த்தார். கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்றபோது அந்த பெண் படுக்கை அறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிந்தது.

    அதே அறையில் கணவர் கொலை செய்ய பயன்படுத்திய அதே தாவணியை பயன்படுத்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிந்தது. இருவரின் உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அரவணை டின்கள் மாளிகைபுரம் கோவிலுக்கு அருகே உள்ள குடோனில் தனியாக வைக்கப்பட்டன.
    • அரவணை தயாரித்து 6 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டதால் அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கோவிலான சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்கு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள். மேலும் ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் முதல் 5 நாட்கள் நடைபெறும் மாதாந்திர பூஜையின்போதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

    சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு அரவணை மற்றும் அப்பம் பிரசாரமாக விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தின் போது பக்தர்களுக்கு வழங்கப்பட்ட அரவணை பிரசாரத்தில் பூச்சி மருந்தின் அளவு அதிகமாக இருப்பதாக கூறப்பட்டது.

    இதையடுத்து பூச்சி மருந்து அதிகளவில் இருப்பதாக கூறப்பட்ட 6.65 லட்சம் டின் அரவணையை பக்தர்களுக்கு வழங்கக்கூடாது என்று கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அந்த அரவணை டின்கள் மாளிகைபுரம் கோவிலுக்கு அருகே உள்ள குடோனில் தனியாக வைக்கப்பட்டன.

    இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்த கருத்தில், அரவணை சாப்பிட உகந்ததாக இருப்பதாக தெரிவித்தது. ஆனால் அரவணை தயாரித்து 6 மாதத்திற்குள் மட்டுமே சாப்பிட உகந்ததாக இருக்கும். ஆனால் அந்த அரவணை தயாரித்து 6 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டதால் அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

    அந்த அரவணை டின்கள் குடோனிலேயே தனியாக வைக்கப்பட்டிருந்தன. ஒரு ஆண்டுக்கு மேல் ஆகியும் அந்த அரவணை டின்களை அழிப்பது பற்றியும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் அந்த அரவணைகளை உரமாக மாற்ற முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. தேவசம்போர்டு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    இதற்காக டெண்டர் கோரப்பட உள்ளது. டெண்டரில் பங்கேற்க ஏராளமான ஏஜென்சிகள் விரும்பம் தெரிவித்துள்ளன. டெண்டர் பணிகள் ஒரு வாரத்தில் முடியும். அதன்பிறகு அரவணை டின்கள் எடுத்துச் செல்லப்படும் என தெரிகிறது.

    • பீகாரில் போலீஸ் கஸ்டடியில் இருந்த கணவன் மனைவி மர்மமான முறையில் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் காவல் நிலையத்தை தீவைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்டுத்தியுள்ளது.
    • மைனர் பெண்ணை திருமணம் செய்ததற்காக கணவனை கைது செய்து பெண்ணையும் கணவனையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.

    பீகாரில் போலீஸ் கஸ்டடியில் இருந்த கணவன் மனைவி மர்மமான முறையில் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் காவல் நிலையத்தை தீவைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்டுத்தியுள்ளது. பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் உள்ள தார்பாரி கிராமத்தில் தனது மனைவி இறப்பதற்கு 2 நாட்கள் முன்பு அவரது 14 வயதுடைய தங்கையை கணவனர் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

    மைனர் பெண்ணை திருமணம் செய்ததற்காக கணவனை கைது செய்து பெண்ணையும் கணவனையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று (மே 17) மதியம் கைது செய்யப்பட்ட அவர்கள் இருவரும் காவல் நிலையத்தில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக கிடைத்துள்ள சிசிடிவி பதிவில் ஒரு நபர் தூக்கில் தொங்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இதற்கிடையே அவர்கள் போலீசாரால் தாக்கப்பட்டதாலேயே உயிரிழந்துள்ளதாக கிராம மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    காவலர்களை கல்லால் தாக்கிய பொதுமக்கள் அங்குள்ள பொருட்களையும் ஜன்னல்களையும் அடித்து நொறுக்கி காவல் நிலையத்தை மொத்தமாக தீவைத்து எரித்தனர். இந்த சம்பவத்தில் 5 போலீசார் படுகாயமடைந்துள்ளனர். மேலும் அந்த பகுதியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. 

    • குடும்பத்தினருடன் 3 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்.
    • பினராயி விஜயனின் வெளிநாட்டு பயணம் விமர்சனத்துக்குள்ளானது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன், விடுமுறைக்காக தனது குடும்பத்தினருடன் கடந்த 6-ந்தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தோனேசியா, சிங்கம்பூர் ஆகிய 3 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்.

    பினராயி விஜயனுடன் அவரது மனைவி கமலா, பேரன், மகள் வீணா விஜயன், அவரது கணவரும் மாநில சுற்றுலாத்துறை மந்திரியுமான முகமது ரியாஸ் உள்ளிடடோரும் சென்றனர்.

    மக்களவை தேர்தலுக்கு மத்தியில் பினராயி விஜயனின் இந்த வெளிநாட்டு பயணம் குறித்து காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் கேள்வி எழுப்பின.

    மேலும் அவரது வெளிநாட்டு பயணத்துக்கு ஸ்பான்சர் செய்தது யார்? என்பதை தெரிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதனால் பினராயி விஜயனின் வெளிநாட்டு பயணம் விமர்சனத்துக்குள்ளானது.

    இந்நிலையில் பினராயி விஜயன் திட்டமிட்டிருந்தபடி இல்லாமல், 2 நாட்களுக்கு முன்னதாகவே வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு கேரளா திரும்பினார். பயண நாட்களை குறைத்துக்கொண்டு திரும்பியது குறித்து கேட்டதற்கு பினராயி விஜயன் பதிலளிக்கவில்லை.

    • ஸ்வாதி மலிவால் குற்றம் சாட்டியுள்ள விவகாரம் டெல்லி அரசியல் களத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
    • நேற்று முன்தினம் (மே 16) ஸ்வாதி மலிவால் போலீசாரிடம் எழுத்துபூர்வமாக புகார் அளித்தார்.

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக ஆம் ஆத்மி மாநிலங்களவை பெண் எம்.பி ஸ்வாதி மலிவால் குற்றம் சாட்டியுள்ள விவகாரம் டெல்லி அரசியல் களத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.நேற்று முன்தினம் (மே 16) ஸ்வாதி மலிவால் போலீசாரிடம் எழுத்துபூர்வமாக புகார் அளித்தார். அவரிடம் டெல்லி போலீஸ் உயர் அதிகாரிகள் குழு 4 மணி நேர வாக்குமூலம் பெற்றது.

    இதனைத் தொடர்ந்து பிபவ் குமார் தனது வயிற்றில் காலால் எட்டி உதைத்து கடுமையாக தாக்கினார் என்று சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார். கெஜ்ரிவாலின் இல்லத்தில் ஸ்வாதி மலிவால் அனுமதியின்றி நுழைந்து அதிகாரிகளை மிரட்டும் வீடியோவை வெளியிட்டு, இது தேர்தல் சமயத்தில் கெஜ்ரிவாலின் பெயருக்கு களங்கம் விளைவிக்க பாஜக செய்த சதியே இது என்று ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் அன்றைய தினம் கெஜ்ரிவாலின் இல்லத்தில் இருந்து ஸ்வாதியை பாதுகாப்பு அதிகாரிகள் வெளியில் அழைத்துச் செல்லும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

    இந்த மொத்த விவகாரத்திலும் அவிழ்க்க முடியாத பல முடுச்சுகள் உள்ள நிலையில் டெல்லி காவல்துறை அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதும், இந்த விவகாரம் டெல்லி தேர்தல் களத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்பதுமே தற்போது அனைவரின் கேள்வியாகவும் உள்ளது. 

    • நான் பேசுவதை அப்படியே பிரதமர் மோடி பிரதிபலிக்கிறார்.
    • ரேபரேலி தொகுதியை மிகவும் நம்பிக்கையுடன் என் கையில் ஒப்படைத்து இருக்கிறார்கள்.

    புதுடெல்லி:

    உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் நடந்த பிரசார கூட்டத்தில் சோனியாவுடன் பங்கேற்ற ராகுல்காந்தி பேசும்போது கூறியதாவது:-

    தேர்தல் பிரசாரங்களில் நான் என்னவெல்லாம் பேசுகிறேனோ அதை அப்படியே பிரதமர் மோடி பிரதிபலிக்கிறார். தொழில் அதிபர்கள் அதானி, அம்பானி பெயரை மோடியால் சொல்லாமல் இருக்க முடியாது என்று நான் சமீபத்தில் பேசினேன்.

    2 நாட்கள் கழித்து அதானி, அம்பானி பற்றி மோடி பேசினார். நான் என்னவெல்லாம் பேசுகிறேனோ அதை அப்படியே பிரதமர் மோடி காப்பி அடித்து பேசுகிறார்.

    இதில் என்ன தெரிகிறது? என்னால் அவரை எந்த விசயத்திலும், எப்படியும் பேச வைக்க முடியும்.

    நீங்களும் பிரதமர் மோடி ஏதாவது சொல்ல வேண்டும் என்று விரும்பினால் அதை நீங்கள் என்னிடம் சொல்லுங்கள். நான் பிரசார மேடைகளில் பேசுகிறேன். அதை அடுத்த நாளே பிரதமர் மோடி எடுத்து பேசுவார்.

    மோடி பிரசாரங்களில் இப்போது இதுதான் நடக்கிறது. புதிதாக அவர்கள் எதுவும் சொல்வது இல்லை.

    இன்று இங்கு பேசிய எனது தாயார் ரேபரேலி தொகுதியை என்வசம் ஒப்படைத்து இருப்பதாக தெரிவித்தார். அவரது இந்த பேச்சு என் வாழ்க்கையில் மிகவும் உணர்வுப்பூர்வமான ஒன்றாகும்.

    பாரம்பரியமிக்க ரேபரேலி தொகுதியை மிகவும் நம்பிக்கையுடன் என் கையில் ஒப்படைத்து இருக்கிறார்கள். இதை நான் ஏற்றுக் கொள்கிறேன். பெருமையுடன் நான் இதை சொல்கிறேன். எனது தாயின் ஒவ்வொரு வார்த்தைக்கும் நான் மதிப்பு கொடுப்பேன் என்பதை இந்த நேரத்தில் வாக்குறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.

    நாட்டு மக்களுக்காக உழைக்க 20 ஆண்டுகளாக வாய்ப்பு கொடுத்த இந்த பகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் உங்களை ஏமாற்ற மாட்டேன்.

    இவ்வாறு ராகுல் பேசினார்.

    • டெல்லி முதல் மந்திரியின் தனிச்செயலர் தாக்கியதாக ஆம் ஆத்மி பெண் எம்.பி. குற்றச்சாட்டு.
    • ஆம் ஆத்மி கட்சி வீடியோ பதிவை வெளியிட்டு சதி என பா.ஜ.க.வை குற்றம்சாட்டியது.

    புதுடெல்லி:

    ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யான ஸ்வாதி மாலிவால், கெஜ்ரிவால் வீட்டில் அவரது தனிச்செயலாளரால் தாக்கப் பட்டேன் என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுகுறித்து டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஸ்வாதி மாலிவால் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். அப்போது, பிபவ் குமார் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே, கெஜ்ரிவால் வீட்டில் வைத்து ஸ்வாதி மாலிவால் தாக்கப்படவில்லை. இது பா.ஜ.க.வின் சதி என ஆம் ஆத்மி கட்சியின் மந்திரி அதிஷி குற்றம்சாட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக அதிஷி கூறுகையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் கிடைத்ததில் இருந்து பா.ஜ.க. கலக்கம் அடைந்துள்ளது. இதனால் ஸ்வாதி மாலிவாலை கெஜ்ரிவால் வீட்டிற்கு கடந்த 13-ம் தேதி அனுப்பி பா.ஜ.க. சதித்திட்டம் வகுத்துள்ளது. முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை குற்றம்சாட்ட வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம். ஆனால், அவர் அங்கே இல்லை என்பதால் அவர் பாதுகாக்கப்பட்டார். பா.ஜ.க.வின் இந்த சதியில் ஸ்வாதி மாலிவால் பயன்படுத்தப்பட்டுள்ளார் என தெரிவித்தார்.

    இந்நிலையில், முதல் மந்திரி கெஜ்ரிவாலின் தனிச்செயலாளர் பிபவ் குமார், ஸ்வாதி மாலிவால் மீது சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

    அந்தப் புகாரில், ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. தவறான அழுத்தத்தை உருவாக்கும் முயற்சியில் என்னை சிக்கவைக்க முயன்றார். மே 13 அன்று டெல்லி முதல் மந்திரி இல்லத்திற்குள் பலவந்தமாகவும், அங்கீகரிக்கப்படாமலும் நுழைந்துள்ளார். ஒரு குழப்பத்தை உருவாக்கி என்னை தாக்க முயன்றார் என குறிப்பிட்டுள்ளார்.

    • டாக்டர் ரவளி சிறுவனின் மார்பில் கையை வைத்து அழுத்தினார்.
    • முதலுதவி சிகிச்சைக்கு பிறகு சிறுவன் உடலில் அசைவு ஏற்பட்டது.

    திருப்பதி, மே.18-

    ஆந்திர மாநிலம் விஜயவாடா அய்யப்ப நகரை சேர்ந்தவர் சாய் (வயது 6) கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மின்சாரம் தாக்கி சிறுவன் மயங்கி விழுந்தான்.

    இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுவனை தோளில் தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடிக்கொண்டிருந்தனர்.

    அந்த நேரத்தில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மகப்பேறு பெண் டாக்டர் நன்னப்பனேனி ரவளி என்பவர் வந்தார்.

    அவர் பெற்றோர் குழந்தைகளை தோளில் சுமந்து கொண்டு பதறியடித்து ஓடுவதை கண்டு திடுக்கிட்டு என்ன நடந்தது என்று கேட்டார். பெற்றோர் நடந்த விஷயத்தை கூறினர்.

    உடனடியாக டாக்டர் சிறுவனை பரிசோதித்தார். அப்போது இதயத் துடிப்பு நின்றிருந்தது.

     சாலையிலேயே படுக்க வைத்து அதன் பிறகு சி.பி.ஆர். என அழைக்கப்படும் முதலுதவி செய்ய ஆரம்பித்தார். ஒருபுறம் டாக்டர் ரவளி சிறுவனின் மார்பில் கையை வைத்து அழுத்தினார். அங்கிருந்து மற்றொரு நபரிடம் வாயில் காற்று வீசுமாறு கூறினார்.

    அவ்வாறு 7 நிமிடங்களுக்கு மேல் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு சிறுவன் உடலில் அசைவு ஏற்பட்டது. உடனடியாக சிறுவனை பைக்கில் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு சென்றதும் சிகிச்சைக்கு பின் சிறுவன் பூரண குணமடைந்தான்.

    சாலையில் வைத்து சிறுவனுக்கு டாக்டர் சிகிச்சை அளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதற்கு பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

    இது குறித்து டாக்டர் ரவளி கூறுகையில்:-

    நான் மூத்த டாக்டர் ஒருவரை வீட்டில் இறக்கிவிட்டு மருத்துவமனைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தேன்.

    அப்போது சிறுவனை அவருடைய தந்தை கண்ணீர் விட்டு அழுதபடி தூக்கி சென்ற காட்சியை பார்த்தேன். உடனே வாகனத்தை நிறுத்திவிட்டு அவரிடம் நடந்ததை கேட்டறிந்தேன்.

    சிறுவனை பரிசோதித்ததில் அவருக்கு சிபிஆர் முதலுதவி அவசியம் என்பதை உணர்ந்து முயற்சி செய்தேன். நல்ல பலன் கிடைத்தது.

    சிறுவனின் உயிரை காப்பாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சிபிஆர் முதலுதவி செய்வதை அனைவரும் கற்றுக் கொண்டால் பல விலை மதிப்பு மிக்க உயிர்களை காப்பாற்றி விடலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது.
    • ஆபாசமான கருத்துகள் தெரிவித்த விவகாரத்தில் ஹரிஹரனை போலீசார் கைது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் செயல்படும் புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியில் இடம்பெற்றிருக்கிறது. இந்த கட்சியின் தலைவர் ஹரிஹரன்.

    இவர் சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில் வடகரா தொகுதியில் இடது சாரி ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்ட முன்னாள் மந்திரி சைலஜா மற்றும் நடிகை மஞ்சு வாரியர் ஆகியோரை தொடர்புபடுத்தி ஆபாசமான கருத்துக்களை தெரி வித்தார். அவரது அந்த கருத்துக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும் அவர் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் ஹரிஹரன் மீது 509, 153 ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

    தனக்கு எதிராக கண்ட னங்கள் அதிகமானதையடுத்து ஹரிஹரன், தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவை வெளியிட்டார். இந்நிலையில் கோழிக்கோட்டில் உள்ள ஹரிஹரனின் வீட்டின் மீது கடந்த 12-ந்தேதி மர்மநபர்கள் வெடிகுண்டுகளை வீசினர்.

    அவை வீட்டின் சுற்றுச்சுவரில் விழுந்து வெடித்தன. இதுதொடர்பாகவும் போலீசார் வழக்குபபதிந்து விசாரணை நடத்தி வரு கிறார்கள். வெடிகுண்டுகள் வீசப்பட்ட சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

    இந்நிலையில் முன்னாள் மந்திரி சைலஜா மற்றும் நடிகை மஞ்சுவாரியர் பற்றி ஆபாசமான கருத்துகள் தெரிவித்த விவகாரத்தில் ஹரிஹரனை போலீசார் கைது செய்தனர். அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்பு போலீஸ் நிலைய ஜாமீனில் ஹரிஹரன் விடுவிக்கப்பட்டார்.

    ஜாமீனில் வெளியே வந்த ஹரிஹரன் கூறும்போது, 'கேரளாவில் நிறையபேர் தங்களது பேச்சில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை சொல்கிறார்கள். ஆனால் அவர்களின் மீது வழக்கு பதியப்படுவதில்லை' என்றார்.

    ×