search icon
என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • நீர்வரத்தானது பெய்யும் மழையை பொறுத்தே அதிகரிக்கவோ அல்லது குறையவோ வாய்ப்பு உள்ளது.
    • ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்ததால், கோடை கால சீசனில் இந்த முறை சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    ஒகேனக்கல்:

    கர்நாடகா மாநிலம் மற்றும் தமிழக-கர்நாடகா எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் நேற்று கனமழை பெய்தது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

    இந்த நீர்வரத்து ஒகேனக்கல், அஞ்செட்டி, நாட்றம்பாளையம், ஓசூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மலை குன்றுகளில் பெய்த மழையின் காரணமாகவும், காவிரி கரையோர எல்லைப் பகுதியில் பெய்த மழையின் காரணமாகும் அதிகரித்து உள்ளது.

    காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதியிலும் நீர்வரத்து அதிகரித்து வர தொடங்கியது.

    இந்த நிலையில் நேற்று காலை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு ஆயிரம் கனஅடியாக இருந்த நிலையில் கனமழை காரணமாக படிப்படியாக அதிகரித்து நேற்று இரவு 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

    தொடர்ந்து இன்று காலை நிலவரப்படி 3 ஆயிரம் கன அடியாக நீடித்து வருகிறது. இதன் காரணமாக மெயின்அருவி, சினிபால்ஸ் ஆகிய அருவிகளில் தண்ணீர் சீறி பாய்ந்து சென்றது. காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    இந்த நீர்வரத்தானது பெய்யும் மழையை பொறுத்தே அதிகரிக்கவோ அல்லது குறையவோ வாய்ப்பு உள்ளது. எனவே, தொடர்ந்து மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் பிலிக்குண்டுலுவில் காவிரி ஆற்றில் நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர்.

    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்ததால், கோடை கால சீசனில் இந்த முறை சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்க தொடங்கி உள்ளது. எனவே, மீன் சமையல் தொழிலாளர்கள், வியாபாரிகள், பரிசல் ஓட்டிகள், மசாஜ் தொழிலாளிகள் என அனைத்து தொழிலாளர்களும் மகிழ்ச்சியடைந்தனர்.

    • கிராமப்ப குதிகளில் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்தன.
    • சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் நிம்மதி.

    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வனப்பகுதிகளில் 2 ஆண் காட்டு யானைகள் முகாமிட்டு சுற்றித்திரிந்து வருகின்றன.

    இந்த யானைகள் அவ்வப்போது கிராமப்ப குதிகளில் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி கிராம மக்களை அச்சுறுத்தி வந்தது. இந்த யானைகளை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    இதனையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு யானைகளை வனத்து றையினர் கர்நாடக மாநி லத்திற்கு விரட்டினர்.

    இதையடுத்து அந்த காட்டு யானைகள் மீண்டும் கும்பளம், கடத்தூர் வழியாக செட்டிப்பள்ளி வனப்பகுதிக்கு வந்து தஞ்சம் அடைந்தது.

    இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட வன அலுவலர் கார்த்திகாயினி உத்தரவின் பேரில் ஒசூர் வனசரகர் பார்த்தசாரதி தலைமையில் வன குழுவினர்கள் சூளகிரி, செட்டி பள்ளி, சானமாவு வனப்பகுதியில் உள்ள சுற்றுவட்டார மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் பொது மக்கள் யாரும் விவசாய நிலங்களுக்கு வரவேண்டாம், என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இந்த நிலையில் செட்டிப்பள்ளி வனப்ப குதியில் இருந்த 2 யானைகளை வனத்து றையினர் தீவிரமாக கண்கா ணித்து வந்த நிலையில் நேற்று இரவு 11.30 மணிய ளவில் செட்டிப்பள்ளி வனப்பகுதியில் இருந்து 2 யானைகள் காட்டை விட்டு வெளியேற முயன்றது.

    இதை அறிந்த வனத்துறையினர் அந்த யானையை குண்டு குறுக்கி, கோனேரிப்பள்ளி வழியாக சான மாவு வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர். இதனால் அந்த சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

    • கோடை விடுமுறை மற்றும் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் ஒகேனக்கல்லுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
    • ஓட்டல்கள், கடைவீதி ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

    ஒகேனக்கல்:

    பருவ மழை பொய்த்து போனதாலும், கர்நாடகா மாநில அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதாலும், தமிழக-கர்நாடக எல்லைப் பகுதியில் உள்ள பிலிகுண்டுலு வழியாக செல்லக்கூடிய காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நீர்வரத்து சரிந்து வண்ணமாக இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒகேனக்கல்லில் 200 கனஅடியாக குறைந்து இருந்தது.

    இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மற்றும் அஞ்செட்டி, கேரட்டி, நாட்ரபாளையம், ஊட்டமலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிக்க தொடங்கியது. நேற்று காலை 1200 கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது. தற்போது கோடை மழை குறைந்ததால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சற்று சரிந்து இன்று காலை 9 மணி நிலவரப்படி வினாடிக்கு 1000 கனஅடி அளவில் குறைந்து வந்து கொண்டிருக்கிறது.

    இதன் காரணமாக மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் சீராக தண்ணீர் கொட்டுகிறது. மேலும் காவிரி ஆற்றில் தண்ணீர் சீராக பாய்ந்து செல்கிறது.

    கோடை விடுமுறை மற்றும் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் ஒகேனக்கல்லுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு செல்லக்கூடிய சோதனை சவாடிகளில் சுற்றுலா வாகனங்கள் அணிவகுந்து நின்றன.

    இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின்அருவியில் குளித்து மகிழ்ந்தனர். இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் பரிசல் நிலையத்தில் இருந்து ஊட்டமலை வரை பரிசலில் சவாரி செய்து மகிழ்ந்தனர். இதனால் பரிசல் நிலையத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

    மேலும், ஓட்டல்கள், கடைவீதி ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

    ஒகேனக்கல்லில் கோடைகாலம் தொடங்கியதாலும் காவிரி ஆற்றில் சீராக தண்ணீர் செல்வதாலும், கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து மேலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்க தொடங்கின.

    • 5 தலைமுறைகளாக குடியிருந்து வரும் மக்களை வீட்டில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
    • யானை வழித்தடங்கள் மற்றும் யானை வாழ்விடங்களில் குடியிருப்பவர்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியில் ஏமனூர், சிங்காபுரம், மணல் திட்டு உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பு பகுதிகள் வனத்துறையால் அகற்றப்பட்டது.

    இதையடுத்து 5 தலைமுறைகளாக குடியிருந்து வரும் மக்களை வீட்டில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்நிலையில் பென்னாகரத்தில் பூர்வக்குடி மக்களை வெளியேற்றிய விவகாரம் தொடர்பாக வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில்,

    மாவட்ட கலெக்டர் மற்றும் நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

    யானை வழித்தடங்கள் மற்றும் யானை வாழ்விடங்களில் குடியிருப்பவர்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவுப்படியே பூர்வக்குடி மக்கள், மீனவர்கள் உள்ளிட்டோரின் வீடுகள் வனத்துறை சட்டத்திற்கு உட்பட்டு அகற்றப்பட்டது என்று தெரிவித்துள்ளது.

    • காவிரி ஆற்றின் கரையோரப் பகுதியில் ஆங்காங்கே மழை பெய்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    • ஒகேனக்கல் ஐந்தருவி, சீனி அருவி, மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டிகிறது.

    ஒகேனக்கல்:

    தமிழக கர்நாடக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது. கோடை காலம் மற்றும் மழை இன்மையால் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்து, தொடர்ந்து கடந்த 20 நாட்களாக வினாடிக்கு 200 கன அடியாக நீர்வரத்து தற்போது காவிரி ஆற்றின் கரையோரப் பகுதியில் ஆங்காங்கே மழை பெய்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இதனால் நேற்று வினாடிக்கு 800 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது அதிகரித்து வினாடிக்கு 1200 கன அடியாக அதிகரித்துள்ளது.

    இதனால் ஒகேனக்கல் ஐந்தருவி, சீனி அருவி, மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டிகிறது.

    • தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இன்று எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.
    • இந்தாண்டு கூடுதலாக 1.01 சதவீதம் பேர் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    தருமபுரி:

    தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி தொடங்கி கடந்த மாதம் 8-ந் தேதி வரை நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின.

    தருமபுரி மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து மொத்தம் 20651 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத தகுதி பெற்றிருந்தனர். இதில் தருமபுரி மாவட்டத்தில் இருந்து 10593 மாணவர்கள், 10058 மாணவிகள் என மொத்தம் 18679 மாணவர்கள் 94 மையங்களில் தேர்வு எழுதினர்.

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இன்று எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.

    இதில் தேர்வு எழுதிய 10,598 மாணவர்களில் 9270 பேரும், 10058 மாணவிகளில் 9409 பேரும் என மொத்தம் மாவட்டத்தில் 18679 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    தருமபுரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 90.45 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 89.46 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்தாண்டு கூடுதலாக 1.01 சதவீதம் பேர் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

    • இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு சுமார் 500 கன அடியாக நீர்வரத்து அதிகரித்திருந்தது.
    • ஒகேனக்கல்லில் நீர்வரத்து 1500 கனஅடிக்கு மேல் வரும் பட்சத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கக்கூடும்.

    ஒகேனக்கல்:

    பருவ மழை பொய்த்து போனதாலும், கர்நாடகா மாநில அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதாலும், தமிழக-கர்நாடக எல்லைப் பகுதியில் உள்ள பிலிகுண்டுலு வழியாக செல்லக்கூடிய காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நீர்வரத்து சரிந்து வண்ணமாக இருந்தது.

    கடந்த சில நாட்காளக கோடை காலம் மற்றும் மழை இன்மையால் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்து, ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து வினாடிக்கு 200 கனஅடியாக நீடித்து வந்தன.

    இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மற்றும் அஞ்செட்டி, கேரட்டி, நாட்ரபாளையம், ஊட்டமலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிக்க தொடங்கியது. இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு சுமார் 500 கன அடியாக நீர்வரத்து அதிகரித்திருந்தது.

    படிப்படியாக மேலும் அதிகரித்து காலை 9 மணி நிலவரப்படி வினாடிக்கு சுமார் 800 கனஅடி அளவில் உயர்ந்து வந்து கொண்டிருக்கிறது. 

    கர்நாடகா அணைகளில் நீர் திறப்பு நிறுத்தப்பட்டதாலும், மழை அளவு குறைந்ததாலும், ஒகேனக்கல்லில் கடந்த சில நாட்களாக காவிரி ஆற்றில் தண்ணீர் வறண்டு பாறைகளாக காட்சியளித்தன.

    மேலும், மெயின் அருவியில் மட்டும் குறைந்த அளவிலான தண்ணீர் கொட்டியது. ஐந்தருவி, சினிபால்ஸ் ஆகிய அருவிகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்பட்டன.

    மேலும் கடந்த சில நாட்களாக வீசிய கடும் வெப்ப அலை காரணமாக ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாவுக்காக வந்த பயணிகள் காவிரி ஆற்றில் குளிக்க முடியாமல் சிறிதளவில் தண்ணீர் கொட்டிய மெயின் அருவியில் குளித்து சென்றனர்.

    இந்த நிலையில் இன்று காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் ஒகேனக்கல் அருவிகளான ஐந்தருவி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டிச்செல்கின்றன. ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் அருவிகளிலும், காவிரி ஆற்றிலும் குளித்து மகிழ்ந்தனர்.

    இதேபோன்று வறண்ட காவிரி ஆற்றில் பாறைகளாக காட்சியளித்த நிலையில் கடந்த 3 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பரிசல் சவாரி நேற்றுடன் மீண்டும் இயக்க தொடங்கியது. இந்த நிலையில் காவிரி ஆற்றில் சீராக தண்ணீர் செல்வதால் அத்திமரத்துகடுவு பகுதியில் இருந்து ஊட்டமலை பரிசலில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் சவாரி செய்தனர். மேலும், ஓட்டல்கள், கடைவீதி, பரிசல் நிலையம் ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

    தற்போது நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியதாலும், கோடைகாலம் தொடங்கியதாலும் கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் கர்நாடகா மாநிலத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகரிக்க தொடங்கின.

    கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் கர்நாடகா மாநிலத்தில் இன்னும் சில தினங்களுக்கு கோடை மழை பெய்ய இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்கக்கூடும் என்பதால், மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் பிலிக்குண்டுலுவில் நீர்வரத்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    ஒகேனக்கல்லில் நீர்வரத்து 1500 கனஅடிக்கு மேல் வரும் பட்சத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • வீட்டில் சின்னசாமி மனைவி சாந்தி மட்டும் தனியாக தூங்கி கொண்டு இருந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து முகமூடி கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி நகரில் அடுத்தடுத்து 2 இடங்களில் நள்ளிரவில் முகமூடி கொள்ளையர்கள் வீடு புகுந்து பெண்களிடம் 7 1/2 பவுன் தங்கச் சங்கிலி , ரூ.47ஆயிரம் பணம் மற்றும் 2 செல்போன்களை கொள்ளையடித்து சென்றனர்.

    தருமபுரி அருகே உள்ள மொன்னையவன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி, டாஸ்மாக் ஊழியர். இவர் பழைய தருமபுரி அருகே உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சாந்தி. இந்நிலையில் நேற்று இரவு சின்னசாமி பணியை முடித்து விட்டு வீட்டுக்கு செல்லாமல் அவருடைய தாய் வீட்டுக்கு சென்று அங்கேயே தங்கி உள்ளார். அவரது வீட்டில் சின்னசாமி மனைவி சாந்தி மட்டும் தனியாக தூங்கி கொண்டு இருந்தார்.

    இந்நிலையில் நள்ளிரவில உடல் உபாதை கழிப்பதற்காக சாந்தி எழுந்து வெளியே வந்தார். அப்போது முகமூடி அணிந்த 2 நபர்கள் சாந்தியின் வீட்டுக்குள் சென்று பீரோவில் இருந்த ரூ.47 ஆயிரம் பணம், 2 விலை உயர்ந்த செல்போன்களை திருடி கொண்டிருந்தனர். அப்போது சத்தம் கேட்ட சாந்தி மின் விளக்கை ஆன் செய்த போது சாந்தியின் கழுத்தில் இருந்த 71/2 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு, அங்கிருந்து மர்ம நபர்கள் தப்பி ஓடி விட்டனர்.

    இதேபோல் பென்னாகரம் சாலையில் உள்ள நந்தி நகர் பகுதியில் 6-வது தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி. தனியார் சிப்ஸ் கடை உரிமையாளர். அவரது மனைவி ரேவதி. சம்பவத்தன்று 2 பேரும் வீட்டில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர்.

    அப்போது நள்ளிரவில் கதவை தட்டிய முகமூடி அணிந்த 4 மர்ம நபர்கள் ரேவதியின் கழுத்தில் அணிந்து இருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர். ஆனால் அவரது கணவர் ராஜீவ் காந்தி தடுத்ததால் கொள்ளையர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதை தொடர்ந்து ராஜீவ் காந்தியை தாக்கி விட்டு கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இது குறித்த தகவல் அறிந்த தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசு பாதம் ,கொள்ளை நடந்த 2 வீடுகளையும் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும் தருமபுரி நகர போலீசார் வழக்கு பதிவு செய்து முகமூடி கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இந்த கொள்ளை சம்பவம் நடந்த வீடுகளில் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டது. மேலும் கைரேகை நிபுணர்களும் அங்கிருந்து தடையங்களை பதிவு செய்தனர்.

    தருமபுரி நகரில் நள்ளிரவில் அடுத்தடுத்து 2 வீடுகளில் நடந்த கொள்ளை சம்பவம் இப்பகுதி பொது மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    • தொப்பூர் டோல்கேட் பகுதியில் நேற்று இரவு கஞ்சா தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • பிரிந்து பார்த்து அதில் சுமார் 11 கிலோ எடையுள்ள கஞ்சா மற்றும் விதைகளுடன் கஞ்சா செடிகள் இருந்தன.

    தொப்பூர்:

    தருமபுரி மாவட்டத்தில் கள்ள சந்தையில் மது, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், கஞ்சா ஆகியவை சகஜமாக விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் கஞ்சா, தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதையும், மேலும் மாவட்டம் வழியாக கஞ்சா கடத்தப்படுவதையும் தடுக்க வேண்டும் என்று மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டார்.

    அவரது உத்தரவின் பேரில் அவ்வப்போது போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை கடத்தி வருபவர்களை கைது செய்தும் வருகின்றனர்.

    இந்த நிலையில் தருமபுரி அருகே தொப்பூர் டோல்கேட் பகுதியில் நேற்று இரவு கஞ்சா தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு வாகனத்தை வழிமறித்து சோதனை செய்தனர்.

    அதில் பயணம் செய்த 2 பேரின் பைகளை போலீசார் சோதனை செய்ததில் பொட்டலங்களாக கட்டி வைக்கப்பட்டிருந்தது. அதனை பிரிந்து பார்த்து அதில் சுமார் 11 கிலோ எடையுள்ள கஞ்சா மற்றும் விதைகளுடன் கஞ்சா செடிகள் இருந்தன.

    அதனை ஒடிசா மாநிலம் கேந்திராபுரா அருகே உள்ள ராஜி நகரைச் சேர்ந்த பாய்லோசார் பெகரோ (வயது25), புத்தாதீப் ரோத் ஆகிய 2 பேரும் ஒடிசாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது.

    உடனே 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 11 கிலோ எடையுள்ள கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கைதான 2 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    • பென்னாகரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டத்தில் கோடைக்கு முன்பே கடுமையாக வெப்பம் வீசி வந்தது. கோடை வெயில் தொடங்கியவுடன் 100 பாரன்ஹீட் வெயில் பதிவாகி சதம் அடித்து வந்த நிலையில் ஏப்ரல் மாதம் முழுவதும் 104 பாரன்ஹீட் வெப்பம் தொடங்கி 108. 7 பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. கடும் வெப்பத்தால் அனல் காற்று வீசியதில் பொதுமக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகினர்.

    இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு 108.5 பாரன்ஹீட் அளவில் கடுமையான வெப்பம் தாக்கியதில் தார் சாலைகளில் வெப்பம் பட்டு வெப்பத்துடன் சேர்ந்து அனல் காற்று வீசியதால் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச் சோடி காணப்பட்டது. பின்னர் மாலை திடீரென 5 மணிக்கு மேல் சூறாவளி காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது. இதனால் குளிர்ந்த சீதோசன நிலை நிலவி பொதுமக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் வானம் போர்வையால் போர்த்தியது போல் மேக மூட்டத்துடன் காணப்பட்டாலும் வெப்பத்தின் தாக்கம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று 106.1 பாரன்ஹீட் வெப்பம் பதிவான நிலையில் மாலை திடீரென தருமபுரி , பாரதிபுரம், ஒட்டப்பட்டி, அதனைச் சுற்றியுள்ள தடங்கம், ஆட்டுக்காரன் பட்டி, சோலை கொட்டாய், வத்தல்மலை உள்ளிட்ட பகுதிகளிலும் இடி மின்னலுடன் மழை கொட்டி தீர்த்தது.

    பாலக்கோடு, அரூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் அனல் காற்றின் தாக்கம் தணிந்து குளிர்ந்த சீதோசன நிலை நிலவியது. மேலும் இந்த திடீர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    கத்திரிப்பிறந்த முதல் நாளே மழை ஆலங்கட்டியுடன் கொட்டி தீர்த்தது. தொடர்ந்து கோடை மழை பெய்தால் வறட்சியால் தண்ணீர் இன்றி கருகும் பயிர்களை பாதுகாக்க முடியும் என விவசாயிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    நேற்று இரவு திடீரென பென்னாகரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஏரியூர் செல்லும் சாலை ஓரத்தில் இருந்த மரங்கள் சாய்ந்தது. இதனால் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் மின்சரா துறையினர் சாலையில் விழுந்த மரங்களை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.கடும் வெயில் தாக்கம் அதிகம் இருந்த நிலையில் திடீரென மழை பெய்ததால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • தருமபுரி மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் தொடர்ச்சியாக இன்று காலை வெப்பம் தணிந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
    • கடும் வெயிலால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    தருமபுரி:

    தமிழகம் முழுவதும் வெப்ப அலை வீச தொடங்கியதால் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

    தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 100 டிகிரி வரை வெயில் அடித்து சதம் அடித்தது.

    இதைத்தொடர்ந்து வெப்பசலன காற்று வீசி கடந்த 5 நாட்களாக தருமபுரி மாவட்டத்தில் 100 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் கொளுத்தியது. இதில் தருமபுரி மாவட்டத்தில் நேற்று காலை முதல் மாலை வரை 45 வருடங்களுக்கு பிறகு 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் அடித்தது. இதனால் கடுமையான வெயிலை தாக்குபிடிக்க முடியாமல் பொதுமக்கள் சிலர் குடைபிடித்தப்படி சாலைகளில் நடமாடினர்.

    இந்த நிலையில் நேற்று மாலை திடீரென்று வெப்ப சலன காற்று குறைய தொடங்கி வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. இரவு திடீரென்று கோடை மழை பெய்தது. இதனால் தருமபுரி, பாலக்கோடு, காரிமங்கலம் ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சில இடங்களில ஆலங்கட்டியுடன் மழையும் பெய்தது. இதனால் கடுமையான வெயிலால் வாட்டி வதைந்து வந்த பொதுமக்களுக்கு இந்த கோடை மழை சற்று ஆறுதலாக குளிர்ச்சியை தந்தது. இதனால் அவர்கள் இரவில் நிம்மதியாக தூங்க சென்றனர்.

    இந்த நிலையில் இன்றும் வடமாவட்டங்களில் உள்பகுதிகளில் சில இடங்களில் கடுமையான வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிக்கை விடுத்து இருந்தது. ஆனால், மாறாக தருமபுரி மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் தொடர்ச்சியாக இன்று காலை வெப்பம் தணிந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தருமபுரி மாவட்டத்தில் இன்று 100 டிகிரி கீழ் சென்று 96 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் தலைகாட்ட தொடங்கியது.

    கடந்த ஒரு வாரமாக வெப்பஅலையால் பொது மக்கள் வெளியில் தலை காட்ட முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்த நிலையில் இன்று காலை குளிர்ந்த சீதோஷ்ண நிலையுடன் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் சற்று நிம்மதியடைந்தனர்.

    இதேபோன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெப்ப அலை காரணமாக கடுமையான வெயிலால் பொது மக்கள் பாதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் நேற்று காவேரிப்பட்டணம், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, ஓசூர், பாரூர் ஆகிய பகுதிகளில் கோடை மழை பெய்தது. இதில் சூளகிரி, ஓசூர், காவேரிப்பட்டணம், பாரூர் ஆகிய பகுதிகளில் ஆலங்கட்டியுடன் மழை பெய்தது.

    இதனால் கடும் வெயிலால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் இன்று காலை கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், ஓசூர், சூளகிரி பகுதிகளில் வெயில் தாக்கம் இல்லாமல் குளிர்ந்த சீதோஷ்ண சூழ்நிலை நிலவியது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று 96 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகி இருந்தது.

    இதனால் காலை வேளையில் வேலைக்கு செல்பவர்கள், விவசாயி கூலி தொழிலாளிகள் சற்று நிம்மதியடைந்தனர்.

    • பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றியதாக புகார்.
    • கைது செய்து சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், கேசர்குளி சாலை கிராமத்தை சேர்ந்தவர் விஜயரங்கன். இவர் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம், தீர்த்தகிரி நகர் பகுதியை சேர்ந்தவர் சாம்ராஜ். இவரும், இவரது மனைவி புனிதாவும் சேர்ந்து தனியார் பைனான்ஸ் இன்வெஸ்ட்மென்ட் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர்.

    அதில் ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். அதில் முதலீடு செய்தால் அதிகலாபம் கிடைக்கும் என்று ஆசைவார்ததை கூறினர். அதனை நம்பி, 3.10.2015-ம் தேதி வங்கி மூலம் ரூ.2 லட்சமும் , பணமாக ரூ.2 லட்சமும் என ரூ.4 லட்சம் டெபாசிட் செய்தேன்.

    மேலும் இரண்டு ஏலச்சீட்டில் சேர்ந்து அதன் மூலம் பணத்தை கட்டி வந்ததாகவும், இவ்வாறாக டெபாசிட் செய்த தொகை மற்றும் ஏலச்சீட்டில் கட்டிய தொகை என மொத்தம் ரூ.13 லட்சத்து 33 ஆயிரம் பணத்தை திருப்பி தராமல் காலம் கடத்தி வந்தனர்.

    இது குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுத்து என்னுடைய பணத்தை மீட்டு தர வேண்டும். என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இவ்வழக்கானது விசாரணைக்காக சேலம் பொருளாதார குற்றப்பிரிவில் இருந்து தருமபுரி பொருளாதார குற்றப்பிரிவிற்கு மாறுதல் செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    விசாரணையில் சாம்ராஜ் ரூ.36 லட்சத்து 83 ஆயிரத்து 40 பணத்தை 4 நபர்களிடமிருந்து டெபாசிட் மற்றும் ஏலச்சீட்டுக்காக பெற்றுக்கொண்டு பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றியதாக புகார்கள் பெறப்பட்டுள்ளன.

    இவ்வழக்கில் சாம்ராஜ் என்பவரை தருமபுரி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தேடி வந்த நிலையில் 25.03.2024 -ம் தேதி அவரை கைது செய்து கோவை முதலீட்டாளர்கள் நலன் மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தற்போது அவர் நீதிமன்ற காவலில் இருந்து வருகிறார்.

    எனவே தனியார் பைனான்ஸ் - இன்வெஸ்மெண்ட் பிரைவேட் லிமிடேட் நிறுவனத்தில் டெபாசிட் மற்றும் ஏலச்சீட்டில் பணம் முதலீடு செய்து, பாதிக்கப்பட்டவர்கள் உரிய ஆவணங்களுடன் தருமபுரி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் கொடுக்க அறிவுறுத்தப்படுகிறது.

    இவ்வாறு தருமபுரி பொருளாதார குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கற்பகம், தெரிவித்துள்ளார்.

    ×