search icon
என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • பெங்களூருவில் மழை பெய்ததால், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு கடும் துர்நாற்றத்துடன் நுரை பொங்கியவாறு தண்ணீர் வந்துள்ளது.
    • கடந்த இரண்டு நாட்களாக கெலவரப்பள்ளி அணையில் இருந்து 560 கன அடிநீர் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு இந்த ஆண்டில் கடந்த மார்ச் 9-ந் தேதி முதல், மார்ச் 25-ந் தேதி வரை இரண்டு முறை நீர்வரத்து முற்றிலும் நின்றது. மூன்றாவது முறையாக கடந்த மார்ச் 31-ந் தேதி முதல் மே 6-ந் தேதி வரை, 37 நாட்கள் நீர்வரத்து முற்றிலும் நின்றது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வந்தது.

    மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால், மே 7-ந் தேதி முதல் 9&ந் தேதி வரை மூன்று நாட்கள் அணைக்கு நீர்வரத்து இருந்த நிலையில் பின்னர் மழையின்றி நான்காவது முறையாக மே 10 முதல் நேற்று வரை 5 நாட்கள் நீர்வரத்து முற்றிலும் நின்றது.

    இந்த நிலையில், கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் மழை பெய்ததால், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு கடும் துர்நாற்றத்துடன் நுரை பொங்கியவாறு தண்ணீர் வந்துள்ளது. இதனால் கடந்த இரண்டு நாட்களாக கெலவரப்பள்ளி அணையில் இருந்து 560 கன அடிநீர் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.

    இந்த நீர் நேற்று காலை 1,126 கன அடியாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு வந்தடைந்தது. கடும் துர்நாற்றத்துடன் கழிவுநீர் கலந்து அணைக்கு நீர் வந்ததால், அணையின் மேல் பகுதியில் ஒரு கிலோ முதல் ஒன்றரை கிலோ எடை வரையில் வளர்ந்திருந்த மீன்கள் செத்து மிதந்தன. கெலவரப்பள்ளி அணையில் இருந்து வந்த அசுத்தமான நீரால், 3 டன் அளவிற்கு மீன்கள் இறந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதனால் மீன்களை பிடித்து வரும் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அணையில் இருந்து இடது மற்றும் வலதுபுற வாய்க்காலில் 12 கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் மொத்த உயரமான 52 அடியில் நேற்று 40.20 அடியாக இருந்தது.

    • கடந்த ஆண்டு 85.36 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
    • கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இன்று எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.

    கிருஷ்ணகிரி:

    தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி தொடங்கி கடந்த மாதம் 8-ந் தேதி வரை நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து 12,716 மாணவர்கள் 12,425 மாணவிகள் என மொத்தம் 25,141 மாணவர்கள் தேர்வு எழுதினர்.

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இன்று எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.

    இதில் தேர்வு எழுதிய 12716 மாணவர்களில் 11345 பேரும், 12425 மாணவிகளில் 11642 பேரும் என மொத்தம் மாவட்டத்தில் 22987 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 91.43 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 85.36 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்தாண்டு கூடுதலாக 6.07 சதவீதம் பேர் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ராஜேந்திரன் யானையிடம் இருந்து தப்பி ஓட முயன்றபோது, கால் இடறி கீழே விழுந்தார்.
    • யானை தாக்கி விவசாயி ஒருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வருவது குறிப்படதக்கது.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட் டம், தேன்கனிக்கோட்டை வனப்பகுதி வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளது. இதனால், அங்குள்ள நீர்நிலைகள் முற்றிலும் வறண்டுள்ளன. மேலும் இலை, தழைகளும், காய்ந்து சருகாகி வருவதால், வன விலங்கினங்கள் உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்வது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக யானைகள் ஊருக்குள் வருவது அதிகரித்துள்ளது. இதனால், பயிர் சேதம் ஏற்படுவதோடு உயிர் சேதமும் அதிகரித்துள்ளது.

    தேன்கனிக்கோட்டைம் அருகே ஆலள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜேந்திரன்(வயது 48)என்பவர், இன்று காலை விவசாய நிலத்திற்கு சென்றார்.

    அப்போது, அங்கு வந்த ஒற்றை யானையை கண்டு திடுக்கிட்டார். திடீரென ராஜேந்திரனை நோக்கி வந்துள்ளது. இதையடுத்து ராஜேந்திரன் யானையிடம் இருந்து தப்பி ஓட முயன்றபோது, கால் இடறி கீழே விழுந்தார். இதில், அந்த யானை ராஜேந்தரின் வலது காலை மிதித்து, தும்பிக் கையால் தூக்கி வீசி விட்டு சென்றது.

    ஒற்றை யானை தாக்குதலில் படுகாயமடைந்த ராஜேந்திரனை அங்கிருந்தவர்கள் மீட்டு தேன்கனிக் கோட்டை அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவம்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றபோது கிராம மக்கள் 20-க்கும் மேற்பட்டோர் வன துறையினரை சிறை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தேன்கனிகோட்டை டி.எஸ்பி. சாந்தி, இன்ஸ்பெக்டர் தவமணி, போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து வாக்கு வாதத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.

    மேலும் அப்பகுதியில் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஊருக்குள் புகுந்த ஒற்றை யானையிடம் சிக்கி விவசாயி படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நேற்று அப்பகுதியில் யானை தாக்கி விவசாயி ஒருவர் படுகாயம் அடைந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வருவது குறிப்படதக்கது.

    • பொதுமக்கள் மத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
    • சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள சின்ன ஆலேஅள்ளி பகுதியில் பிரசித்தி பெற்ற முருகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வளாகத்தில் காளியம்மன் கோவிலும் அமைந்துள்ளது.

    இந்த நிலையில் நேற்று பூசாரி கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இன்று காலையில் மீண்டும் கோவிலை திறப்பதற்காக அவர் வந்தார்.

    அப்போது கோவிலின் பூட்டை உடைக்கப்பட்டு இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது, அங்கு காளியம்மன் சாமி கழுத்தில் இருந்த தங்கத்தாலி ¾ பவுன் நகையும், உண்டியல் பணம் ரூ.5000-த்தையும் மர்ம நபர்கள் திருடிச் சென்று உள்ளனர் என்பது தெரிய வந்தது.

    உடனே அவர் ஊர் கிராம மக்களிடம் தகவலை தெரிவித்தார். தகவலறிந்த கிராம மக்கள் கோவிலில் திரண்டு வந்து பார்வையிட்டனர்.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கோவிலிலை ஆய்வு செய்தனர்.

    மேலும் கோவிலை சுற்றியுள்ள பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • யானை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • வனத்துறையினர் மக்னா யானை உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேன்கனிகோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி, ஜவளகிரி போன்ற வனப் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இங்குள்ள யானைகள் கோடை காலங்களில் உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்கும், விவசாய நிலங்களுக்குள் நுழைந்து வருவது வழக்கம்.

    இந்நிலையில் தேன்கனிகோட்டை அருகே சந்தனப்பள்ளி கிராமத்திற்கு அடுத்துள்ள ஏரி பகுதியில் நேற்று இரவு மக்னா யானை ஒன்று உணவு தேடி வனப்பகுதியை விட்டு கிராமத்திற்கு நுழைந்துள்ளது.

    இதையடுத்து அங்குள்ள ஏரியில் தாழ்வாக சென்ற மின்சார கம்பியில் யானையின் தும்பிக்கை பட்டு மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து கிடந்தது.

    தொடர்ந்து இன்று காலை அந்த பகுதிக்கு வந்த கிராம மக்கள் யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து தேன்கனிகோட்டை வனச்சரகர் விஜயனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் மக்னா யானை உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்ய மருத்துவர்கள் வர வழைக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு பிறகு அதே இடத்தில் மக்னா யானை உடலை அடக்கம் செய்ய உள்ளனர்.

    கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராம பகுதிக்குள் நுழையும் யானைகள் அடிக்கடி மின்சாரம் தாக்கி உயிரிழப்பது தொடர்கதையாக உள்ளது. மேலும் யானைகள் உயிரிழப்பை தடுப்பதற்கு வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    மேலும் யானை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் 89 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
    • கடந்த ஆண்டைவிட இந்தாண்டு மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 2.87 சதவீதம் அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    கிருஷ்ணகிரி:

    தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கான முடிவு வெளியிடப்பட்டது.

    இதேபோல கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.

    இதில் மாணவர்கள் 7801 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 89.34 சதவீதம் ஆகும். தேர்வு எழுதிய மாணவிகளில் 9,538 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகளில் 94.04 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு எழுதிய 18,874 மாணவ, மாணவிகளில் 17,339 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 91.87 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    கடந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் 89 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். கடந்த ஆண்டைவிட இந்தாண்டு மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 2.87 சதவீதம் அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    • அப்பைய்யா யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் காட்டுத்தீ போல் பரவியது.
    • தேன்கனிக்கோட்டை பகுதியில் சுற்றி திரியும் ஒற்றை யானையை கர்நாடகா மாநில வனப்பகுதியில் விரட்டியக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மேடுமுத்துகோட்டை பகுதியைச் சேர்ந்தவர் அப்பைய்யா (வயது55). விவசாயியான இவருக்கு நாகம்மா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் அப்பைய்யா இன்று அதிகாலை வழக்கம்போல் தனது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக கிணற்றில் மின்மோட்டாரை ஆன் செய்வதற்காக சென்றார்.

    அப்போது அங்கு மறைந்து இருந்த ஒற்றை யானை ஒன்று வேகமாக வந்து அப்பைய்யாவை தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சத்தம் போட்டு அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அந்த ஒற்றை யானையை விரட்டினர்.

    பின்னர் காயமடைந்த அப்பைய்யாவை மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர்.

    இதற்கிடையே அப்பைய்யா யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் காட்டுத்தீ போல் பரவியது. உடனே சம்பவ இடத்திற்கு வந்த ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ், தளி ஒன்றிய குழு தலைவர் சீனிவாசலுரெட்டி, தேன்கனிக்கோட்டை பேரூராட்சி தலைவர் சீனிவாசன் ஆகியோர் யானை தாக்கி உயிரிழந்த அப்பைய்யாவின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர்.

    இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி. சாந்தி, போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி, ஜவளகிரி வனச்சரகர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    இதைத்தொடர்ந்து அப்பைய்யாவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேன்கனிக்கோட்டை பகுதியில் சுற்றி திரியும் ஒற்றை யானையை கர்நாடகா மாநில வனப்பகுதியில் விரட்டியக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து அந்த யானையை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டியடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • போலீசார் சுப்ரியாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • சம்பவம் குறித்து சாமல்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்குமாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார். விவசாயி. இவரது மகள் சுப்ரியா (வயது 16). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    இவர் இன்று காலை தக்காளி பறிப்பதற்காக அவரது வீட்டின் பின்புறம் தோட்டத்திற்கு சென்றார். அப்போது அங்குள்ள ஒரு விவசாய கிணற்றில் மாணவி சுப்ரியா தவறி விழுந்தார். இதில் நீச்சல் தெரியாததால் மாணவி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஊத்தங்கரை தீயணைப்பு துறையினர் மற்றும் சாமல்பட்டி போலீசார் மாணவியின் உடலை மீட்டனர்.

    இதைத்தொடர்ந்து போலீசார் சுப்ரியாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சாமல்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் மாணவி சுப்ரியாவின் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • தென்பெண்ணை ஆற்றங்கரையோரம், நூற்றாண்டு பழமை வாய்ந்த அனுமன்தீஸ்வரர் கோவில் உள்ளது.
    • கடந்த ஒரு மாதமாக அனுமன் தீர்த்தம் தென்பெண்ணை ஆறு வற்றியுள்ளதால் கோவிலுக்கு வருவோர் குளிக்க முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அனுமன்தீர்த்தம் தென்பெண்ணை ஆறு வறண்டு காணப்படுவதால், ஆஞ்சநேயர் கோவிலுக்கு வரும் பக்தர்கள், குளிக்க முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்ட எல்லையில் தென்பெண்ணை ஆற்றின் கரையில் உள்ளது அனுமான் தீர்த்தம். இங்கு தென்பெண்ணை ஆற்றங்கரையோரம், நூற்றாண்டு பழமை வாய்ந்த அனுமன் தீஸ்வரர் கோவில் உள்ளது.

    தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களை சேர்ந்தவர்களும், கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமானோர் இங்கு வருவர்கள். இவர்கள் ஆற்றில் குளித்து விட்டு அனுமன் கோவிலில் சாமி தரிசனம் செய்வார்கள், இந்நிலையில், கே.ஆர்.பி., அணையில் இருந்த ஆற்றில் தண்ணீர் திறந்து விடுவது தற்போது வறட்சி என்பதால் நிறுத்தப்பட்டது.

    கே.ஆர்.பி அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக தற்போது திறந்து விடப்படும் தண்ணீர், அரசம்பட்டி வரை மட்டுமே செல்கிறது. இதனால், கடந்த ஒரு மாதமாக அனுமன் தீர்த்தம் தென்பெண்ணை ஆறு வற்றியுள்ளதால் கோவிலுக்கு வருவோர் குளிக்க முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    தற்பொழுது கோவில் நிர்வாகம் சார்பாக தண்ணீர் தனியாக பைப்புகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் குளிப்பதற்காக காலையில் குறித்த நேரத்துக்கு மட்டும் தண்ணீர் விடுதொக கூறப்படுகிறது. மேலும் இந்த பைப்புகளில் ஆண்கள், பெண்கள் என இருபாலரும் ஒரே இடத்தில் குளிப்பதால் பெண்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே பெண்களுக்கு தனியாக குளிப்பதற்கு அறைகளை ஏற்படுத்தி தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வினித் வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது கையில் வைத்திருந்த 5 ரூபாய் நாணயம் எதிர்பாராத விதமாக முழுங்கியுள்ளார்.
    • தொண்டை பகுதியில் சிக்கிக்கொண்டதால் அறுவை சிகிச்சை செய்யாமல் அப்புறப்படுத்த முயற்சி செய்தனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் மிட்டப்பள்ளி காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த சிவா-விஜய பிரியா தம்பதியரின் 10 வயது குழந்தை வினித் வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது கையில் வைத்திருந்த 5 ரூபாய் நாணயம் எதிர்பாராத விதமாக முழுங்கியுள்ளார்.

    இதனை கண்ட அவரது உறவினர்கள் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது தொண்டை பகுதியில் 5 ரூபாய் நாணயம் சிக்கி இருந்தது உறுதி செய்தனர்.

    தொண்டை பகுதியில் சிக்கிக்கொண்டதால் அறுவை சிகிச்சை செய்யாமல் அப்புறப்படுத்த முயற்சி செய்தனர். இதையடுத்து குறித்த நேரத்தில் சிறுவன் முழுங்கிய நாணயத்தை அப்புறப்படுத்தினார்.

    இந்த சிகிச்சையில் மருத்துவர்கள் மதன்குமார், காது மூக்கு, தொண்டை மருத்துவர் செந்தில், மயக்கவியல் நிபுணர் மருத்துவர் சதீஷ்குமார் ஆகியோருக்கு சிறுவனின் பெற்றோர், உறவினர்கள் பொதுமக்கள் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

    • மர்ம கும்பல் தாக்குதலில் இருந்து சின்னத்தம்பி அவரது மகன் வெற்றி ஆகிய இரண்டு பேரையும் மீட்டனர்.
    • கார்த்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை சாலை அருகே உள்ள திண்ணக்காலனி கிராமத்தில் முனியப்பன் கோவில் உள்ளது.

    இந்தக் கோவிலின் அருகே புதர் நிறைந்த இடங்களில் இரவு நேரங்களில் அடிக்கடி மர்ம நபர்கள் சிலர் மது குடிப்பதும், போதையில் பாட்டில்களை போட்டு உடைப்பதும், தகராறு செய்வதும் வாடிக்கையாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு சிலர் முனியப்பன் கோவிலின் அருகே மது குடித்தனர்.

    அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் அவர்கள் போதையில் ஆபாசமாக திட்டிக் கொண்டனர். இதனை அதே பகுதியில் வசித்து வந்த சின்னத்தம்பியும் அவரது மகன் வெற்றியும் அந்த போதை ஆசாமிகளிடம் குடித்துவிட்டு ஏன் இப்படி தகராறில் ஈடுபடுகிறீர்கள். இங்கிருந்து உடனே புறப்படுங்கள் என்று கூறினர். இதனால் சின்னதம்பிக்கும் போதை ஆசாமிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    உடனே போதையில் இருந்து அவர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றனர்.

    பின்னர் அவர்கள் சிறிது நேரத்தில் மீண்டும் சிலரை முனியப்பன் கோவில் அருகே அழைத்து வந்தனர்.

    அப்போது சின்னதம்பியையும் அவரது மகன் வெற்றியையும் போதை ஆசாமிகளுடன் அந்த மர்ம நபர்கள் சரமாரியாக தாக்கினார்.

    அப்போது வெற்றி தனது நண்பரான எலக்ட்ரீசியன் கார்த்திகையை செல்போனில் உதவிக்கு அழைத்தார்.

    உடனே சம்பவ இடத்திற்கு கார்த்தக்கும் அவரது தந்தை தேவராஜும் விரைந்து வந்தனர்.

    மர்ம கும்பல் தாக்குதலில் இருந்து சின்னத்தம்பி அவரது மகன் வெற்றி ஆகிய இரண்டு பேரையும் மீட்டனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மர்ம கும்பல் தேவராஜையும் அவரது மகன் கார்த்திகையும் சரமாரியாக தாக்கினார். பின்பு கார்த்திக்கின் கால்களின் இடையே மோட்டார் சைக்கிளை மர்ம கும்பலை சேர்ந்த சிலர் ஏற்றி வெறிச்செயலில் ஈடுபட்டனர். இதில் கார்த்திக் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனே அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடினர்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் திரண்டனர். இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுக்கா போலீஸ் நிலையத்திற்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். சமம் குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனே அங்க விரைந்து வந்து காயமடைந்த தேவராஜை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்த கார்த்திக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அப்போது கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் நிலையத்தில் இறந்த கார்த்திக் உறவினர்களும், அப்பகுதியைச் சேர்ந்த கிராமங்களும் திரண்டு வந்து போதையில் தகராறில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோசங்களை எழுப்பினார். இதனால் இந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே தகவல் அறிந்த ஏ.டி.எஸ் பி சங்கு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கார்த்திக்கின் உறவினர்களிடம் சமாதானம் பேச்சுவார்த்தை நடத்தினர் அதன் பின்பு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளை ஏற்றி கொலை செய்த கார்த்திக்குக்கு கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு தன் திருமணம் ஆனது. அவருடைய மனைவி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    திருமணம் ஆகி ஒன்றரை வருடத்தில் கார்த்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பல்வேறு கோணங்களில் தளி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • பலியான சதீஷிற்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும், ஒரு குழந்தை உள்ளனர்.

    தேன்கனிக்கோட்டை:

    ஒசூர் அருகே உள்ள தளியில் ஜெயந்தி காலனி அருகே பிரபல ரடிவுயான தளி சதீஷ் என்பவரை அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதுகுறித்து தளி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தளி ஜெயந்தி காலனியில் உள்ள ஒரு எஸ்டேட் முன்பு நேற்று இரவு சுமார் 35 வயது மதிக்கத்தக்க ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    இதுகுறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனே தளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு தளி போலீசார் மற்றும் தேன்கனிக்கோட்டை இன்ஸ்பெக்டர் ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டனர். பின்னர் இறந்தவர் யார்? என்ற விவரம் குறித்து விசாரித்தனர்.

    இதில் தளி அருகே குனிக்கல் பகுதியைச் சேர்ந்த சந்திரப்பா மகன் சதீஷ் என்கிற குனிக்கல் சதீஷ் (வயது34) என்பவர் தெரியவந்தது.

    பிரபல ரவுடியான இவர் கஞ்சா கடத்தல், கொலை வழக்கு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவந்தது.

    வீட்டில் இருந்த சதீஷை நேற்று இரவு சில மர்ம நபர்கள் மதுகுடிப்பதற்காக ஜெயந்தி காலனியில் உள்ள எஸ்டேட்டிற்கு அழைத்து வந்தனர்.

    பின்னர் அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சதீஷை தலை மற்றும் கழுத்து பகுதியில் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டனர்.

    பலியான சதீஷிற்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும், ஒரு குழந்தை உள்ளனர். இதில் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து வாங்கி கொண்டு அவர் குழந்தையுடன் தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இதைத்தொடர்ந்து அவர் 2-வதாக வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. சதீஷின் உடலை போலீசார் கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இறந்து போன சதீஷ் மீது ஒரு கொலை வழக்கு, 3 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த சம்பவம் குறித்து தளி போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை வழக்கில் சிக்கியுள்ள சதீஷை யாராவது பழிவாங்குதற்காக வெட்டி கொலை செய்தனரா? அல்லது முன்விரோதம் காரணமாக யாராவது வெட்டி கொலை செய்துள்ளனரா? அல்லது குடிபோதை தகராறில் நண்பர் வெட்டி கொலை செய்தனரா? என்று பல்வேறு கோணங்களில் தளி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×