search icon
என் மலர்tooltip icon

    கடலூர்

    • கடலூர் மஞ்சக்குப்பம் ஆல்பேட்டை சோதனை சாவடியில் போலீசார் அவ்வழியாக வந்த தனியார் பஸ்சை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
    • போலீசார் வருமானவரித்துறை அதிகாரியிடம் பணம் கைப்பற்றியது தொடர்பாக தகவல் தெரிவித்தனர்.

    கடலூர்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ந்தேதி நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் ஜூன் 4-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால், மாநில எல்லைப் பகுதியில் தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

    இந்த நிலையில் இன்று காலை கடலூர் மஞ்சக்குப்பம் ஆல்பேட்டை சோதனை சாவடியில் போலீசார் அவ்வழியாக வந்த தனியார் பஸ்சை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒருவரிடம் இருந்த கைப்பையை சோதனை செய்தபோது, கட்டுக்கட்டாக பணம் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் பணம் தொடர்பாக கேள்வி எழுப்பிய போது சரியான முறையில் தகவல் கூறவில்லை . இதனைத் தொடர்ந்து பணம் மற்றும் அந்த நபரை கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

    அப்போது அவர் சென்னையை சேர்ந்த ராஜா (வயது 27) என்பதும் அவர் பையில் 10 லட்சம் ரூபாய் பணம் இருந்தது தெரியவந்தது. கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள ஒரு நபர் வீடு கட்டி வரும் நிலையில் அவருக்கு இந்த 10 லட்சம் ரூபாய் பணம் வழங்குவதற்காக கொண்டு வந்தேன் என ராஜா கூறினார். இதனைத் தொடர்ந்து போலீசார் வருமானவரித்துறை அதிகாரியிடம் பணம் கைப்பற்றியது தொடர்பாக தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வருமானவரித்துறை அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை நடத்தினர். இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

    • மாதந்தோறும் பூச நட்சத்திர நாளில் ஜோதி தரிசனம் நடைபெறுவது வழக்கம்.
    • நேற்று இரவு 6 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது.

    வடலூர்:

    கடலூர் மாவட்டம் வடலூரில் சத்திய ஞானசபை உள்ளது, இங்கு மாதந்தோறும் பூச நட்சத்திர நாளில் ஜோதி தரிசனம் நடைபெறுவது வழக்கம். தமிழ் வருடத்தின் முதல் மாதமான, சித்திரை மாத பூச நட்சத்திரம் நேற்று இரவு 7.45 மணிக்கு தொடங்கியது.

    இதனை முன்னிட்டு நேற்று இரவு சத்திய ஞான சபையில், 6 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதில் திரளாக கலந்து கொண்ட பக்தர்கள், அருட்பெருஞ் சோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை, அருட்பெருஞ்ஜோதி என்ற வள்ளலாரின் மகா மந்திரத்தை உச்சரித்தவாறு ஜோதியை தரிசித்தனர்.

    தமிழகத்தின் பல்வேறு பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான, சன்மார்க்க அன்பர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர், ஜோதி தரிசனத்தை தொடர்ந்து சபை வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது, தொடர்ந்து வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் திரு மாளிகையில், நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு வழிபாடும், மவுன தியானமும் நடைபெற்றது.

    ஞானசபை உள்ள பொதுவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பது தொடர்பான பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில், வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் ஜோதி தரிசனத்திற்கு வந்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

    • ஆண்டு தோறும் பிரம்மோற்சவ விழா விமர்சையாக நடை பெறுவது வழக்கம்.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்

    கடலூர்:

    கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி சிங்கிரி குடியில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் ஆண்டு தோறும் பிரம்மோற்சவ விழா விமர்சையாக நடை பெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பிரமோற்சவம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலையில் சாமிக்கு பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

    பின்னர் ஸ்ரீதேவி பூதேவி யுடன் லட்சுமி நரசிம்ம பெருமாள் சிறப்பு அலங்கா ரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். பின்னர் வேத மந்திரம் முழங்க பிரம்மோற்சவ கொடியேற்றம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கொடி மரத்திற்கும் சாமிக்கும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர் பல்லக்கில் சாமி வீதியுலா நடைபெற்றது. இதனை தொடர்ந்து தினந்தோறும் இரவில் ஹம்ச வாகனம், சிம்ம வாக னம், அனுமந்த வாகனம், நாக வாகனத்தில் சாமி வீதியுலா நடைபெறுகிறது. 1-ந் தேதி இரவு கருட சேவை விமர்சையாக நடை பெற உள்ளது. பின்னர் விமானத்தில் வசந்த உற்சவம், இரவு யானை வாகனம், மங்களகிரி வாகனம், 21-ந்தேதி காலை வெண்ணைத் தாழி திருக்கோலத்துடன் வீதி உலா, இரவு குதிரை வாகனம் மற்றும் பரிவேட்டை நடைபெறுகிறது.

    விழாவின் சிகர நிகிழ்ச்சியான தேரோட்டம் வருகிற 22-ந்தேதி நடைபெறுகிறது. அன்று காலையில் லட்சுமி நரசிம்ம பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெறும். இதனைத் தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஊர்வலமாக கொண்டு வந்து தேரில் கம்பீரமாக எழுந்தருள்வார்.

    பின்னர் அதிகாலை 4.30 மணி அளவில் தேரோட்டம் தொடங்கி முக்கிய மாட வீதியில் சென்று வந்து நிலையை அடையும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு "கோவிந்தா கோவிந்தா"என்ற பக்தி கோஷம் எழுப்புவார்கள். அன்று இரவு தீர்த்தவாரி அவரோகணம், 23-ந்தேதி மட்டையடி உற்சவம், இரவு இந்திர விமானத்தில் வீதிஉலா, 24-ந் தேதி புஷ்ப யாகம், 25-ந் தேதி ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.

    • காயம் அடைந்தவர்களை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனை மற்றும் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
    • விபத்து காரணமாக கடலூர்-புதுச்சேரி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    கடலூர்:

    அரசு பஸ் மீது ஆம்னி பஸ் மோதி 29 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

    சென்னையில் இருந்து காரைக்கால் நோக்கி அரசு பஸ்பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. கடலூர் அருகே உள்ள ரெட்டிச்சாவடி கரிக்கன் நகர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, அரசு பஸ் திடீரென்று சாலையின் நடுவே இருந்த தடுப்பு கட்டையில் பயங்கர சத்தத்துடன் மோதி ஏறி நின்றது.

    அந்த சமயம் அரசு பஸ்சுக்கு பின்னால் வந்த தனியார் ஆம்னி பஸ் கட்டுப்பாட்டை இழந்து அரசு பஸ்சின் பின்புறம் மோதியது. அப்போது பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அலறினார்கள். இத்தகவல் அறிந்த ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் அரசு மற்றும் ஆம்னி பஸ்சில் பயணம் செய்து காயம் அடைந்தவர்களை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனை மற்றும் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.


    இந்த விபத்தில் 29பேர்கள் காயம் அடைந்து உள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். விபத்தில் அரசு பஸ் முன்புறம் சிதைந்தது. ரெட்டிச்சாவடி போலீசார் உடனடியாக ஜே.சி.பி. மற்றும் கிரேன் போன்ற வாகனங்கள் மூலம் இடிப்பாட்டில் சிக்கிக் கொண்டிருந்த அரசு மற்றும் ஆம்னி பஸ்சை மீட்டு சாலையின் ஓரமாக நிறுத்தினார்கள். இந்த விபத்து காரணமாக கடலூர்-புதுச்சேரி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

    • விழாவின் சிகர நிகிழ்ச்சியாக தேரோட்டம் விழா வருகிற 22-ந்தேதி நடைபெறுகிறது.
    • லட்சுமி நரசிம்ம பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெறும்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி சிங்கிரிகுடியில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் ஆண்டு தோறும் பிரம்மோற்சவ விழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் வருகிற 14-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி முதல் 7 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி காலையில் சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று ஸ்ரீதேவி பூதேவியுடன் லட்சுமி நரசிம்ம பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருள்வார். பின்னர் வேத மந்திரம் முழங்க பிரம்மோற்சவ கொடியேற்றம் நடைபெறுகிறது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். இதனைத் தொடர்ந்து தினந்தோறும் காலையில் பல்லக்கில் சாமி வீதியுலாவும், இரவில் ஹம்ச வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், நாக வாகனத்தில் சாமி வீதியுலா நடைபெறுகிறது. 18-ந் தேதி இரவு கருட சேவை விமர்சையாக நடைபெற உள்ளது. பின்னர் விமானத்தில் வசந்த உற்சவம், இரவு யானை வாகனம், மங்களகிரி வாகனம், 21-ந்தேதி காலை வெண்ணைத்தாழி திருக்கோலத்துடன் வீதி உலா, இரவு குதிரை வாகனம் மற்றும் பரிவேட்டை நடைபெறுகிறது .

    விழாவின் சிகர நிகிழ்ச்சியாக தேரோட்டம் விழா வருகிற 22-ந்தேதி நடைபெறுகிறது. காலையில் லட்சுமி நரசிம்ம பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெறும். இதனைத்தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஊர்வலமாக கொண்டு வந்து தேரில் கம்பீரமாக எழுந்தருள்வார். அதிகாலை 4.30 மணி அளவில் தேரோட்டம் தொடங்கி முக்கிய மாடவீதியில் சென்று நிலையை அடையும். இரவு தீர்த்தவாரி அவரோகணம், 23-ந்தேதி மட்டையடி உற்சவம், இரவு இந்திர விமானத்தில் வீதியுலா, 24-ந் தேதி புஷ்ப யாகம், 25-ந் தேதி ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • திருமண விழாவில் உணவு சாப்பிட்ட 20-க்கும் மேற்பட்டோருக்கு அடுத்தடுத்து வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக தெரிகிறது.
    • பாதிக்கப்பட்ட அனைவரும் புலியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள புலியூர் கிராமத்தை சேர்ந்த வாலிபருக்கும், பள்ளி நீர்ஓடையைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 3-ந்தேதி குள்ளஞ்சாவடியில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.

    திருமணம் முடிந்ததும் மண்டபத்தில் காலை உணவு பரிமாறப்பட்டது. திருமண விழாவுக்கு வந்த இரு வீட்டாரின் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் உணவு சாப்பிட்டனர்.

    அதேபோல் புலியூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி திருவேங்கடம் (வயது 65) என்பவரும் உணவு சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். வீட்டுக்கு சென்ற சிறிது நேரத்தில் அவருக்கு திடீரென வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

    இதில் உடல் சோர்வுடன் காணப்பட்ட அவரை உறவினர்கள் மீட்டு குள்ளஞ்சாவடி தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

    இவரை தொடர்ந்து திருமண விழாவில் உணவு சாப்பிட்ட 20-க்கும் மேற்பட்டோருக்கு அடுத்தடுத்து வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக தெரிகிறது.

    இதையடுத்து பாதிக்கப்பட்ட அனைவரும் புலியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இவர்களில் சிலர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியிலும், புதுச்சேரி தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். சிலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதற்கிடையில் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த திருவேங்கடம் சிகிச்சை பலன் இன்றி கடந்த 2 நாட்களுக்கு முன்பும், புலியூர் காட்டுசாகை தெற்கு தெருவை சேர்ந்த வைத்தியலிங்கம் மகன் விவசாயி களிகானம் என்கிற நாராயணசாமி (55) நேற்று முன்தினம் இரவும் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றவர்களுக்கு அந்தந்த ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    • தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் இந்த பணி தொடங்கியது. போலீஸ் பாதுகாப்புடன் இந்த பணிகள் நடைபெற்றது.
    • வடலூரில் சர்வதேச மையம் அமைப்பதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    வடலூர்:

    கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் சத்யஞானசபை உள்ளது.

    இங்கு உள்ள பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கு பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து சர்வதேச மையம் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் இந்த பணி தொடங்கியது. போலீஸ் பாதுகாப்புடன் இந்த பணிகள் நடைபெற்றது.

    வடலூரில் சர்வதேச மையம் அமைப்பதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் வருகிற 10-ந்தேதி வரை பணி நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டனர். மேலும் சர்வதேச மையம் அமைக்கும் இடத்தை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கோர்ட் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து தொல்லியல் துறை துணை இயக்குனர் டாக்டர் சிவானந்தம் தலைமையிலான அதிகாரிகள் 6 பேர் இன்று வடலூர் வந்து வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் இடத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.

    • பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
    • போராட்டம் அறிவித்த தெய்வதமிழ் பேரவை நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் சத்யஞானசபை உள்ளது.

    இங்கு உள்ள பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கு பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து சர்வதேச மையம் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் இந்த பணி தொடங்கியது. போலீஸ் பாதுகாப்புடன் இந்த பணிகள் நடைபெற்றது.

    வடலூரில் சர்வதேச மையம் அமைப்பதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் வருகிற 10-ந் தேதி வரை பணி நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டனர். இதனை தொடர்ந்து பணி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் வடலூரில் சர்வதேச மையம் அமைக்கும் பணியை கண்டித்து நாளை(சனிக்கிழமை) தனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார். இதற்காக போலீசாரிடம் அக்கட்சியினர் அனுமதி கோரினர். ஆனால் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

    வடலூரில் சர்வதேச மையம் அமைக்க எதிர்த்த வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளதாலும், தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதையும் சுட்டிக்காட்டி அனுமதி மறுப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர். மேலும் போராட்டம் அறிவித்த தெய்வதமிழ் பேரவை நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து இன்று நடைபெற இருந்த போராட்டத்தை ஒத்திவைப்பதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். அதில் அவர் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பலர் தடுப்பு காவலில் கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே நீதிமன்றத்தில் சட்ட போராட்டம் நடத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தபடும் என தெரிவித்துள்ளார்.

    • தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் இந்த பணி தொடங்கியது. போலீஸ் பாதுகாப்புடன் இந்த பணிகள் நடைபெற்றது.
    • வடலூரில் சர்வதேச மையம் அமைப்பதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் சத்யஞானசபை உள்ளது. இங்கு உள்ள பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கு பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து சர்வதேச மையம் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் இந்த பணி தொடங்கியது. போலீஸ் பாதுகாப்புடன் இந்த பணிகள் நடைபெற்றது.

    வடலூரில் சர்வதேச மையம் அமைப்பதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் வருகிற 10-ந்தேதி வரை பணி நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டனர். இதனை தொடர்ந்து பணி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் வடலூரில் சர்வதேச மையம் அமைக்கும் பணியை கண்டித்து நாளை(சனிக்கிழமை) தனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார். இதற்காக போலீசாரிடம் அக்கட்சியினர் அனுமதி கோரினர். ஆனால் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

    வடலூரில் சர்வதேச மையம் அமைக்க எதிர்த்த வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளதாலும், தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதையும் சுட்டிக்காட்டி அனுமதி மறுப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளிடம் நெய்வேலி டி.எஸ்.பி. சபியுல்லா தெரிவித்துள்ளார்.

    • கஸ்தூரி தவறி கீழே விழுந்த உடன் உறவினர்கள், அந்த பெட்டியில் இருந்த அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர்.
    • கஸ்தூரி பலியான இடம் திருச்சி ரெயில்வே கோட்டத்தில் வருவதால் திருச்சி கோட்ட அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.

    விருத்தாசலம்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீழிதநல்லூர் கிழக்குத்தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 25). இவர், சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கும், சென்னை பெரியார் நகர் திரிசூலத்தை சேர்ந்த பி.எஸ்சி. நர்சிங் பட்டதாரியான கஸ்தூரி (22) என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கஸ்தூரி 7 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

    இதனிடையே மேலநீழிதநல்லூரில் நடைபெறும் கோவில் திருவிழாவில் பங்கேற்கவும், அங்கு நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கஸ்தூரிக்கு வளைகாப்பு நடத்தவும் உறவினர்கள் திட்டமிட்டனர்.

    அதன்படி கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சொந்த ஊருக்கு செல்ல சுரேஷ்குமார் தனது மனைவி மற்றும் உறவினர்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். அந்த ரெயிலில் எஸ்-9 என்ற பெட்டியில் அனைவரும் பயணம் செய்தனர்.

    இந்த ரெயில் நேற்று இரவு 8 மணி அளவில் உளுந்தூர்பேட்டை பகுதியில் வந்து கொண்டிருந்த போது, கஸ்தூரிக்கு வாந்திக்கான அறிகுறி ஏற்பட்டது. உடனே அவர், தனது உறவினர்கள் உதவியுடன் எஸ்-9 பெட்டியில் உள்ள கை கழுவும் இடத்திற்கு வந்தார்.

    அந்த இடத்தில் வாந்தி எடுத்தபடி கஸ்தூரி நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் நிலை தடுமாறி ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்து பலியானார்.

    கஸ்தூரி தவறி கீழே விழுந்த உடன் உறவினர்கள், அந்த பெட்டியில் இருந்த அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். ஆனால் ரெயில் நிற்கவில்லை. அப்போதுதான், அந்த அபாய சங்கிலி, வேலை செய்யாமல் செயல் இழந்து இருந்தது தெரிய வந்தது.

    உடனே உறவினர்கள் பக்கத்தில் உள்ள எஸ்-8 பெட்டிக்கு ஓடிச் சென்று, அங்குள்ள அபாய சங்கிலியை பிடித்து இழுத்துள்ளனர். அதன் பிறகே ரெயில் நின்றுள்ளது. அதற்குள் அந்த ரெயில் கர்ப்பிணி விழுந்த இடத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்று விட்டது. உடனடியாக ரெயில் நின்றிருந்தால் கர்ப்பிணியை காப்பாற்றி இருக்கலாம் என்று கஸ்தூரியின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இதற்கிடையே கஸ்தூரி இறந்தது குறித்து விசாரணை நடத்த தெற்கு ரெயில்வே உத்தரவிட்டுள்ளது. கஸ்தூரி பலியான இடம் திருச்சி ரெயில்வே கோட்டத்தில் வருவதால் திருச்சி கோட்ட அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.

    மேலும் கஸ்தூரி பலியான ரெயில் தற்போது கொல்லம் சென்றடைந்து விட்டதால் அங்கு வைத்து அபாய சங்கிலி சரியாக வேலை செய்கிறதா? என்பது தொடர்பாக ஒவ்வொரு பெட்டியிலும் ரெயில்வே பணியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    இதற்கிடையே கஸ்தூரிக்கு திருமணமாகி 9 மாதங்களே ஆவதால் அவரது இறப்பு குறித்து விசாரிக்க ஆர்.டி.ஓ.வுக்கு (கோட்டாட்சியர்) விருத்தாசலம் ரெயில்வே போலீசார் பரிந்துரை செய்துள்ளனர். அதன்படி திருக்கோவிலூர் ஆர்.டி.ஓ. கண்ணன் விசாரணை நடத்த உள்ளார்.

    • கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சொந்த ஊருக்கு செல்ல சுரேஷ்குமார் தனது மனைவி மற்றும் உறவினர்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார்.
    • கோவில் திருவிழாவில் பங்கேற்க செல்வதெனவும், அங்கேயே நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) கஸ்தூரிக்கு வளைகாப்பு நடத்தவும் உறவினர்கள் திட்டமிட்டனர்.

    விருத்தாசலம்:

    சென்னையில் நேற்று பயணிகளை ஏற்றிக்கொண்டு கொல்லத்துக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயில் உளுந்தூர்பேட்டைக்கும், விருத்தாசலத்துக்கும் இடையே வந்தபோது, 7 மாத கர்ப்பிணி பெண் தவறி கீழே விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் உறவினர்கள், உடனடியாக பக்கத்து பெட்டியில் உள்ள அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நடுவழியில் நிறுத்தினர். பின்னர் ரெயிலில் இருந்து இறங்கிய உறவினர்கள், கர்ப்பிணி தவறி விழுந்த இடம் நோக்கி ஓடிச் சென்று பார்த்தனர். ஆனால் அந்த கர்ப்பிணி கிடைக்கவில்லை.

    பின்னர் அந்த ரெயில் அங்கிருந்து புறப்பட்டு, விருத்தாசலம் ரெயில் நிலையத்துக்கு வந்தது. அதாவது இரவு 8.10 மணிக்கு வர வேண்டிய ரெயில், 20 நிமிடம் தாமதமாக இரவு 8.30 மணிக்கு வந்தடைந்தது.

    ரெயிலில் இருந்து இறங்கிய கர்ப்பிணியின் உறவினர்கள் கதறி அழுதனர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் மனைவி கஸ்தூரி என்ற 7 மாத கர்ப்பிணி பெண் தவறி விழுந்து விட்டதாகவும், அவரை உடனடியாக மீட்டு தருமாறும் கூறினர்.

    இதையடுத்து போலீசார் விரைந்து சென்று கஸ்தூரியை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது உளுந்தூர்பேட்டையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் கஸ்தூரி இறந்து கிடந்தார். அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் வெளியான தகவல் விவரம் வருமாறு:-

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீழிதநல்லூர் கிழக்குத்தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(வயது 25). இவர், சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், சென்னை பெரியார் நகர் திரிசூலத்தை சேர்ந்த பி.எஸ்சி. நர்சிங் பட்டதாரியான கஸ்தூரி(22) என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கஸ்தூரி 7 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

    இதனிடையே மேலநீழிதநல்லூரில் நடைபெறும் கோவில் திருவிழாவில் பங்கேற்க செல்வதெனவும், அங்கேயே நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) கஸ்தூரிக்கு வளைகாப்பு நடத்தவும் உறவினர்கள் திட்டமிட்டனர்.

    அதன்படி கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சொந்த ஊருக்கு செல்ல சுரேஷ்குமார் தனது மனைவி மற்றும் உறவினர்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். அந்த ரெயிலில் எஸ்-9 பெட்டியில் அனைவரும் பயணம் செய்தனர். இந்த ரெயில் இரவு 8 மணி அளவில் உளுந்தூர்பேட்டை பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, கஸ்தூரிக்கு வாந்திக்கான அறிகுறி ஏற்பட்டது. உடனே அவர், தனது உறவினர்கள் உதவியுடன் எஸ்-9 பெட்டியில் உள்ள கை கழுவும் இடத்திற்கு வந்தார். அந்த இடத்தில் வாந்தி எடுத்தபடி கஸ்தூரி நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் நிலைதடுமாறி ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்து பலியானார்.

    மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    • மகளின் உடலில் மாற்றம் ஏற்படுவதை அறிந்த பெற்றோர், அந்த சிறுமியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
    • இன்ஸ்பெக்டர் ஜோதி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    பண்ருட்டி:

    நண்பர்கள் என்றால் உயிரையும் கொடுப்பார்கள் என்பார்கள். ஆனால், நண்பரிடம் பழகி அவரது தங்கையையே பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுவனுக்கு விழுப்புரத்தில் நண்பர் உள்ளார்.

    அவரது வீட்டுக்கு அச்சிறுவன் அடிக்கடி சென்று வருவார். அப்போது நண்பரின் 15 வயது தங்கையிடம் பழக்கம் ஏற்பட்டது.

    நண்பரிடம் பழகுவது போல்தான் சிறுமியிடமும் பழகி வந்துள்ளார். திடீரென அவர் அந்த சிறுமியை ஆசைவார்த்தை கூறி தனது சொந்த கிராமத்துக்கு அழைத்து வந்தார். அங்கு வைத்து அந்த சிறுமியை பலாத்காரம் செய்தார். இதில் சிறுமி கர்ப்பமானார்.

    மகளின் உடலில் மாற்றம் ஏற்படுவதை அறிந்த பெற்றோர், அந்த சிறுமியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர், அந்த சிறுமி 4 மாதம் கர்ப்பமாக உள்ளதாக கூறினர். இதை அறிந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து அந்த சிறுமியிடம் கேட்டபோது தன்னை அண்ணனின் நண்பர்தான் கர்ப்பமாக்கினார் என்று கூறினார்.

    இது தொடர்பாக பண்ருட்டி யூனியன் சமூக நல விரிவாக்க அலுவலர் காவேரிக்கு தகவல் தெரிய வர அவர் பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசாரிடம் கூறினார். இன்ஸ்பெக்டர் ஜோதி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    இதேபோல் பண்ருட்டி பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி வீட்டில் தனியாக இருந்தார். அவரை அதே கிராமத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் பலாத்காரம் செய்தார். இது குறித்து சிறுமியின் தாய் மகளிர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் அந்த தொழிலாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    பண்ருட்டி பகுதியில் தொடர்ந்து இதேபோன்று சம்பவங்கள் நடைபெற்று வருவதால் அந்த பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    ×