search icon
என் மலர்tooltip icon

    அரியலூர்

    • சிமெண்ட் ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
    • தனியார் சிமெண்ட் ஆலை தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரியலூர் மாவட்டம் ஓட்டக்கோவில் கிராமத்தில் தனியார் சிமெண்ட் ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்நிலையில், சிமெண்ட் ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், சிமெண்ட் ஆலையில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கழிவுகளில் தீ பற்றியது. தீ விபத்து குறித்து உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


    இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்தால் ஆலையை சுற்றி பல கிலோ மீட்டர் தொலைவிற்கு கரும்புகை சூழ்ந்தது. இதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டனர். தீ விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தனியார் சிமெண்ட் ஆலை தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாவட்டத்தில் 9,565 பேர் தேர்வு எழுதினர்.
    • தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் சிறிய மாவட்டங்கள் தான் முதல் 2 இடங்களை பிடித்துள்ளது.

    10-ம் வகுப்பு தேர்வில் அரியலூர் மாவட்டம் முதலிடத்தை பெற்றுள்ளது. அந்த மாவட்டத்தில் 9,565 பேர் தேர்வு எழுதினர். இதில் 9,308 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 97.31 சதவீதமாகும்.

    சிவகங்கை மாவட்டத்தில் தேர்வு எழுதிய 17,707 பேரில 17,179பேர் வெற்றி பெற்று 2-வது இடத்தையும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 15,692 பேர் தேர்வு எழுதியதில் 15,121 பேர் வெற்றி பெற்றனர். இது 95.17 சதவீதம் தேர்ச்சி பெற்று 3-வது இடத்தையும் பெற்று உள்ளது.

    தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் சிறிய மாவட்டங்கள் தான் முதல் 2 இடங்களை பிடித்துள்ளது.

    மாவட்டம் வாரியாக தேர்ச்சி விவரம் வருமாறு:-

    அரியலூர்97.31, சிவகங்கை 97.02, ராமநாதபுரம்96.36, கன்னியாகுமரி96.24, திருச்சி95.23, விருதுநகர்95.14, ஈரோடு95.08, பெரம்பலூர்94.77, தூத்துக்குடி94.39, விழுப்புரம்94.11, மதுரை94.07, கோவை94.01, கரூர்93.59, நாமக்கல்93.51, தஞ்சாவூர்93.40, திருநெல்வேலி93.04, தென்காசி92.69, தேனி92.63, கடலூர்92.63, திருவாரூர்92.49, திருப்பூர்92.38, திண்டுக்கல்92.32, புதுக்கோட்டை91.84, சேலம்91.75, கிருஷ்ணகிரி91.43, ஊட்டி90.61, மயிலாடுதுறை90.48, தர்மபுரி90.49, நாகப்பட்டினம்89.70, சென்னை88.21, திருப்பத்தூர் (வி)88.20, காஞ்சீபுரம்87.55, செங்கல்பட்டு87.38, கள்ளக்குறிச்சி86.83, திருவள்ளூர்86.52, திருவண்ணாமலை86.10, ராணிப்பேட்டை85.48, வேலூர்82.07, காரைக்கால்78.20, புதுச்சேரி91.28.

    • ஆசை மனைவியை காப்பாற்றுவதற்காக கோபாலகிருஷ்ணன் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று மருத்துவம் பார்த்தார்.
    • பல லட்சம் ரூபாய் செலவு செய்தும், டாக்டர்கள் ஒரு கட்டத்தில் கை விரித்து விட்டனர்.

    அரியலூர்:

    எத்தகைய சூழலிலும் கணவருக்கு மனைவியும், மனைவிக்கு கணவரும் பக்கபலமாக இருந்து, அவர்களின் இன்பத்திலும், துன்பத்திலும் முழுமையாக பங்கெடுத்து வாழ்வை முழுமையாக்குகிறார்கள்.

    அவ்வாறு அமைந்த கணவருக்கோ அல்லது மனைவிக்கோ கோவில் கட்டி கும்பிட வேண்டும் என்று சொல்வது உண்டு. அதனை நிஜமாக்கும் வகையில் ஒருவர் தனது மனைவிக்கு கோவில் கட்டி, கும்பாபிஷேகமும் நடத்தியுள்ளார்.

    அதுபற்றிய விவரம் வருமாறு:-

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள தேவாமங்கலம் காந்தி நகரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(வயது 42). இவர் திருப்பூரில் பின்னலாடை தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி கற்பகவல்லி(36). இவர்களுக்கு தற்போது 5 வயதில் கோமகன் என்ற மகன் உள்ளார்.

    இந்நிலையில் கற்பகவல்லிக்கு 2 சிறுநீரகங்களும் செயல் இழந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆசை மனைவியை காப்பாற்றுவதற்காக கோபாலகிருஷ்ணன் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று மருத்துவம் பார்த்தார். பல லட்சம் ரூபாய் செலவு செய்தும், டாக்டர்கள் ஒரு கட்டத்தில் கை விரித்து விட்டனர்.

    இதனால் வேதனை அடைந்து கோபாலகிருஷ்ணன் சோர்ந்துபோனாலும், போராடுவதை விடவில்லை. தனக்காக கணவர் படும் வேதனையை அறிந்த கற்பகவல்லி ஒரு தருணத்தில் இனிமேல் எனக்கு மருத்துவம் பார்க்க வேண்டாம், விட்டு விடுங்கள் என்றார். இந்த நிலையில் கடந்த 2023-ம் ஆண்டு கற்பகவல்லி உயிரிழந்தார்.

    மனைவி இறந்த துக்கத்திலும், மீளா துயரத்திலும் இருந்த கோபாலகிருஷ்ணன், தனது வீட்டின் அருகில் உள்ள சொந்த நிலத்திலேயே மனைவியை அடக்கம் செய்தார்.

    பின்னர் ஷாஜகான் தன் மனைவி மும்தாஜுக்காக தாஜ்மஹால் கட்டியதுபோல், கோபாலகிருஷ்ணனும் தன் மனைவி அடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே அவருக்கு சொந்தமான 3 சென்ட் இடத்தில் ரூ.15 லட்சம் செலவில் கோவில் ஒன்றை கட்டி, அதில் 3 அடி உயரத்தில் கற்பகவல்லியை அம்மன் உருவத்தில் சிலை செய்து வைத்து நேற்று கும்பாபிஷேகம் நடத்தினார்.

    இதனை அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியுடன் பார்த்து சென்றனர்.

    • அரியலூர் - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது.
    • அரியலூரில் நடந்த ஒரு சுபநிகழ்ச்சியில் ஹோமம் வளர்த்துவிட்டு ஊர் திரும்பியபோது இந்த கோர விபத்து நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

    அரியலூர் மவராட்டம் ஏலாக்குறிச்சி அருகே அரியலூர் - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ஜல்லிக்கற்களை ஏற்றிக் கொண்டு வந்த லாரி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது.

    அப்போது வேகமாக வந்த கார் அந்த லாரி மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர்.

    முதல்கட்ட தகவல்களின்படி இந்த விபத்தில் ஈஸ்வரன்(24), புவனேஷ் கிருஷ்ணசாமி(18), செல்வா (17), சண்முகம் (23) ஆகியோர் உயிரிழந்துள்ளனர் என்றும், இவர்கள் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும், அரியலூரில் நடந்த ஒரு சுபநிகழ்ச்சியில் ஹோமம் வளர்த்துவிட்டு ஊர் திரும்பியபோது இந்த கோர விபத்து நடந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

    ஏலாக்குறிச்சி பிரிவு சாலை அருகே நிகழ்ந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • அரியலூர் மாவட்டம் 97.25 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
    • அரியலூர் மாவட்டம் 3-வது இடத்தை பிடித்துள்ளது.

    அரியலூர்:

    பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் அரியலூர் மாவட்டம் 97.25 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. மாவட்டத்தில் 8769 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 7992 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இதன் மூலம் மாநில அளவில் அரியலூர் மாவட்டம் 3-வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு இந்த மாவட்டம் பிளஸ்-2 தேர்வில் 97.25 சதவீத தேர்ச்சி பெற்று மாநில அளவில் 10-வது இடத்தில் இருந்தது. இந்த ஆண்டு அதிவேகமாக முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளது.

    இதையடுத்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா பாராட்டு தெரிவித்து உள்ளார்.

    • எந்திரம் மூலம் பணி நடைபெற்று கொண்டிருக்கும் போது வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் கற்சிலை கண்டுபிடிக்கப்பட்டது.
    • சிலை கண்டெடுக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கூவத்தூர் கிராமம் மேல தெருவில் 400 ஆண்டு பழமையான பிரசித்தி பெற்ற வரலாறு சிறப்புமிக்க விசாலாட்சி உடனுறை விஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த சிவாலயம் சிதலமடைந்து ஆக்கிரமிப்பு காரணமாக பராமரிப்பு இல்லாமல் கிடந்தது.

    அதை ஊர் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து விஸ்வநாதர் கோவில் கட்டுவதாக முடிவெடுத்து கோவில் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எந்திரம் மூலம் பணி நடைபெற்று கொண்டிருக்கும் போது வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் கற்சிலை கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த சிலை ஊர் பொதுமக்களுடைய பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் அம்பாள், விநாயகர் மற்றும் சாமி சிலைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் சிலை கண்டெடுக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    மேலும் இந்த கோவில் கட்டும் பணிகளை ஊர் பொதுமக்களே செய்ய முன் வந்தது சிறப்பாகும்.

    • போலீசார் கடந்த ஜனவரி 15-ந்தேதி போக்சோ சட்டத்தில் அன்புத் துரையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    • குழந்தையை கொன்ற சிறுமி மற்றும் உடந்தையாக இருந்த அவரது தாய் இருவரையும் மீன்சுட்டி போலீசார் கைது செய்தனர்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே செம்போடை விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த உத்ராபதி மகன் அன்பு துரை (21) . இவரும் 18 வயதுக்கு உட்பட்ட சிறுமியும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் சிறுமி கர்ப்பம் ஆனார்.

    இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் திருமணம் செய்ய இரு வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது. இது குறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இதை தொடர்ந்து போலீசார் கடந்த ஜனவரி 15-ந்தேதி போக்சோ சட்டத்தில் அன்புத் துரையை கைது செய்து சிறையில் அடைத்தனர். அன்புத்துறை திருச்சி மத்திய சிறையில் உள்ள நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அச்சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது.

    இதனிடையே சிறுமி கர்ப்பமான வழக்கில் குழந்தையின் டி.என்.ஏ. பரிசோதிக்க கோர்ட்டு உத்தரவிட்டது. அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தையின் டி.என்.ஏ. பரிசோதனைக்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் குழந்தை காணவில்லை என்று குழந்தையின் அம்மாவான சிறுமி மீன்சுருட்டி போலீசில் புகார் அளித்தார்.

    இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் உத்தரவின் பேரில் ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி. ராமச்சந்திரன் மேற்பார்வையில் குற்ற புலனாய்வு துறை சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் சிறுமி, தனது ஒரு மாத குழந்தையை கழுத்தை நெரித்து கொன்று வீட்டின் பின்புறம் உள்ள கழிப்பிடம் அருகே புதைத்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து எஸ்.பி. செல்வராஜ் சம்பவ இடத்தில் நேரில் விசாரணை செய்தார்.

    இன்ஸ்பெக்டர்கள் பிரேம்குமார், ராமராஜன் உட்பட 50-க்கும் மேற்பட்ட போலீசாரின் பாதுகாப்பில் தாசில்தார் கலிலூர் ரஹ்மான் தலைமையில் விஏஓ காமராஜ் உட்பட வருவாய்த் துறையினர் குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    குழந்தையை கொன்ற சிறுமி மற்றும் உடந்தையாக இருந்த அவரது தாய் இருவரையும் மீன்சுட்டி போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். கைதான சிறுமியின் தாய் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், என் மகள் திருமணம் செய்யும் முன்பே கர்ப்பமாக குழந்தை பெற்றது எனக்கு வேதனையை அளித்தது.

    இந்த விவகாரம் போலீஸ் நிலையம், கோர்ட்டு வரை சென்றது. கோர்ட்டு டி.என்.ஏ. பரிசோதனைக்கு உத்தரவிட்டதால் அதற்கு பயந்து குழந்தையை கொலை செய்ய திட்டமிட்டோம். மகள் வயிற்றில் பிறந்த குழந்தையை கொஞ்சி மகிழ வேண்டிய சூழலில் குழந்தையை கொன்று புதைத்துவிட்டோம்.

    இந்த விவகாரம் வெளியில் தெரியாமல் இருக்க புதைத்த இடத்தில் வாசனை திரவியங்களை தெளித்தோம். பின்னர் குழந்தையை காணவில்லை என நாடகம் ஆடினோம். போலீசார் விசாரித்து எங்களை கைது செய்துவிட்டனர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ஒரு மாத குழந்தையை தாயே கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    • மயிலாடுதுறை, குற்றாலம், அரியலூர் பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட கூண்டுகள் வைக்கப்பட்டன.
    • கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சிறுத்தை அல்லது அதன் கால் தடம் எதுவும் புதிதாக கண்டறியப்படவில்லை.

    அரியலூர்:

    மயிலாடுதுறை செம்மங்குளம் பகுதியில் கடந்த 2-ம் தேதி நள்ளிரவு சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டது.

    பின்னர் அந்த சிறுத்தை குற்றாலம் பகுதிக்கு இடம் பெயர்ந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் அடுத்த சில நாட்களில் அரியலூர் செந்துறை அரசு மருத்துவமனை அருகே உள்ள சிசிடிவி கேமராவில் சிறுத்தை நடமாட்டம் பதிவானது.

    இந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது அதைத் தொடர்ந்து மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் 89 சிசிடிவி கேமராக்கள் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டன. மேலும் மயிலாடுதுறை, குற்றாலம், அரியலூர் பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட கூண்டுகள் வைக்கப்பட்டன.

    ஆனால் அதன் பின்னர் சிறுத்தை நடமாட்டம் எங்கும் தென்படவில்லை.

    இதுகுறித்து மூத்த வன அதிகாரி ஒருவர் கூறும்போது, அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சிறுத்தை அல்லது அதன் கால் தடம் எதுவும் புதிதாக கண்டறியப்படவில்லை. இருப்பினும் மேற்கண்ட மாவட்டங்களில் வனத்துறையினர் தொடர்ந்து 2 பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர் அதிகாரிகள், உள்ளூர் மக்களுடன் தொடர்பில் உள்ளனர்.

    சந்தேகப்படும்படியாக மர்ம விலங்கு ஏதும் நடமாட்டம் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றார்.

    • மயிலாடுதுறையில் இருந்து சுமார் 74 கி.மீ. தொலைவில் உள்ள அரியலூர் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருந்தது.
    • சிறுத்தையை கண்காணிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    அரியலூர்:

    மயிலாடுதுறை செம்மங்குளம் பகுதியில் கடந்த 2-ந்தேதி நள்ளிரவு சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டது. இதன் காரணமாக தானியங்கி கேமராக்கள் பொருத்தியும், கூண்டுகள் வைத்தும் சிறுத்தை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

    ஆனால் அங்கிருந்து குற்றாலம் பகுதிக்கு சிறுத்தை இடம் பெயர்ந்தது. காஞ்சிவாய், பேராவூர், நண்டலாறு, வீரசோழன் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் 89 நவீன கேமராக்களும், 7 குண்டுகளும் வைக்கப்பட்டது. இருப்பினும் சிறுத்தை சிக்கவில்லை.

    இந்நிலையில் மயிலாடுதுறையில் இருந்து சுமார் 74 கி.மீ. தொலைவில் உள்ள அரியலூர் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருந்தது. செந்துறை அரசு மருத்துவமனை அருகே உள்ள சிசிடிவி கேமராவில் சிறுத்தை நடமாடுவது பதிவாகி இருந்தது. இதனால் அரியலூர் செந்துறை, மஞ்சுநாதபுரம் பகுதிகளில் உள்ள முந்திரி தோப்பு, கால்வாய் என 11 இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டது. போலீசார் மற்றும் வனத்துறையினர் 45 பேர் சிறுத்தையை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால் சிறுத்தை யார் கண்ணிலும் படவில்லை.

    தற்போது சிறுத்தை எங்கே இருக்கிறது? என்று தெரியவில்லை. ஆனாலும் தொடர்ந்து சிறுத்தையை தேடும் பணியை வனத்துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள். குத்தாலம் பகுதியில் 4 இடங்களில் கூண்டு, 20 இடங்களில் கேமராக்கள், அரியலூர் மாவட்டம் குன்னூர் வனப்பகுதி, மங்காரம் ஓடை பகுதியில் 2 இடங்களில் கூண்டு, 15 இடங்களில் கேமராக்களும் பொருத்தப்பட்டு சிறுத்தை நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இது பற்றி வனத்துறை வட்டாரத்தினர் கூறியதாவது:-

    மயிலாடுதுறை பகுதியில் உலாவிய சிறுத்தை கடலூர் அல்லது விழுப்புரம் வனப்பகுதிகளில் பதுங்கி இருக்கலாம். இது புலி மாதிரி ஒரே இடத்தில் இருக்காது. நகர்ந்து கொண்டே இருக்கும். மேலும் மனித நடமாட்டம் இருந்தால் பதுங்கிக் கொள்ளும். சத்தமே காட்டாது. இரவிலேயே அதிகம் நடமாடும். அதனால்தான் சிறுத்தையை அதிகமாக யார் கண்ணிலும் சிக்கவில்லை. சிறுத்தையை கண்காணிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் பொதுமக்கள் பீதி அடைய தேவை இல்லை.

    இவ்வாறு அவர்கள் கூறினர்

    • ஒருபுறம் இந்திய நாட்டு மக்கள், இன்னொரு புறம் நாட்டுக்கு எதிரான சங்பரிவார் கும்பல்.
    • நாடு முழுவதும் இந்திய கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

    செந்துறை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தனது சொந்த கிராமமான அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள அங்கனூர் அரசு நடுநிலைப் பள்ளியில் தனது தாயாருடன் வரிசையில் நின்று வாக்கினை பதிவு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த பொது தேர்தல் 2 கட்சிகளுக்கும் இடையே நடக்கும் அதிகார போட்டி அல்ல. ஒருபுறம் இந்திய நாட்டு மக்கள், இன்னொரு புறம் நாட்டுக்கு எதிரான சங்பரிவார் கும்பல்.

    சங்பரிவாருக்கும் நாட்டு மக்களுக்கும் இடையே நடக்கிற ஒரு தர்மயுத்தம் இந்த பொது தேர்தல். இதில் நாட்டு மக்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மக்களின் பக்கம் இந்தியா கூட்டணி இருக்கிறோம்.

    இந்தியா கூட்டணிக்கு இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வாக்களியுங்கள் என்று நாட்டு மக்களுக்கு அழைப்புகள் விடுத்துள்ளோம். அரசியலமைப்பு சட்டத்தை ஒரு பொருட்டாக மதிக்காமல் ஜனநாயக விளிம்பியங்களை சிதைக்க துடிக்கிற சங்க பரிவார் கும்பல் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது.

    ஜனநாயகத்தையும் அரசியலப்பு சட்டத்தையும் பாதுகாக்க வேண்டும் என்ற பெரும் கவலையோடு இந்தியா கூட்டணி களத்தில் நிற்கிறது. நாடு முழுவதும் இந்திய கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி 40க்கு 40 இடங்களில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

    கூட்டணி பலம், இன்னொரு புறம் திமுக அரசின் மூன்றாண்டு கால நலத்திட்டங்கள், மூன்றாவதாக இந்தியா கூட்டணி முன்வைக்கக்கூடிய நாட்டு பாதுகாப்பு ஜனநாயக பாதுகாப்பு என்கிற கருத்தியல் பலம் ஆக இந்த 3 பலங்களுடன் இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

    எனவே பாண்டிச்சேரி உள்ளிட்ட 40 இடங்களிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். இந்த தேசத்தை காப்பதற்கான தீர்ப்பை தமிழகத்திலிருந்து எழுத தொடங்குகிறோம் என்பதை அறிவிப்பதற்கான நாள்தான் இன்றைய வாக்குப்பதிவு நாள்.

    தமிழக மக்கள் தி.மு.க. கூட்டணியின் பக்கம் இருக்கிறார்கள். எனவே ஜனநாயகம் பாதுகாக்கப்படும். அரசியல் அமைப்பு சட்டம் பாதுகாக்கப்படும். டெல்லியில் பாசிச பா.ஜ.க. அரசு தூக்கி எறியப்படும். இந்திய கூட்டணியின் ஆட்சி மலரும் என்ற நம்பிக்கை உள்ளது.

    தேர்தல் ஆணையம் நேர்மையோடு செயல்பட வேண்டும். தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியான பாஜக அரசுக்கு சாதகமாக செயல்படுவதாக அனைத்து தரப்பு மக்களாலும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. அந்த ஆட்சியே தொடரும் என்ற எண்ணத்தில் அவர்கள் அவ்வாறு செயல்படலாம்.

    அது தவறு. தேர்தல் ஆணையம் இந்த நாளிலிருந்து நடுநிலைமையோடு ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும். ஒரு சார்பு இல்லாமல் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் 20 பேர் களத்தில் உள்ளனர். அவர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராமதாஸ் என் மூச்சு இட ஒதுக்கீடு, சமூக நீதி என்று சொன்னார். அதற்கு எதிரான பாஜகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளார்.
    • தமிழ்நாட்டு மக்களுக்கு சமூக நீதிக்காக போராடும் மக்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி செய்த மிகப்பெரிய துரோகம்.

    ஜெயங்கொண்டம்:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்துக்குமான போர் இது. பாஜக தலைவர்கள் என்னென்ன சொன்னார்களோ அதில் எல்லாம் எடப்பாடி கையொப்பமிட்டுவிட்டார்.

    டாக்டர் ராமதாஸ் என் மூச்சு இட ஒதுக்கீடு, சமூக நீதி என்று சொன்னார். அதற்கு எதிரான பாஜகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளார்.

    வன்னியர்களுக்கு எவ்வளவு பெரிய துரோகம். பாஜக சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க கூடாது என்கிறது. மோடியின் அதையே சொல்கிறார். தமிழ்நாட்டு மக்களுக்கு சமூக நீதிக்காக போராடும் மக்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி செய்த மிகப்பெரிய துரோகம்.

    மோடி கொண்டு வந்த பண மதிப்பிழப்பு எல்லா வேலைவாய்ப்பும் போயிடுச்சு. மோடி 10 ஆண்டுகள் ஆட்சியில் ஒவ்வொரு குடிமகன் தலையிலும் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடன் சுமையை வச்சிருக்கார். இந்தக் கடனை அம்பானிக்கும் அதானிக்கும் வாங்கியுள்ளார். அவர்களுக்கு இதுவரை 14 லட்சம் கோடி ரூபாயை தாரை வார்த்து கொடுத்து இருக்கிறார். தமிழ்நாட்டில் கொடுத்த ஒரு வாக்குறுதி கூட மோடி நிறை வேற்றவில்லை, திராவிட முன்னேற்றக் கழகம் கொடுத்த வாக்குறுதிகளை 80 சதவீதம் 2 ஆண்டுகளிள் நிறைவேற்றி உள்ளார்கள். சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

    • அ.தி.முக.வை யாரும் மிரட்ட முடியாது, எந்த பூச்சாண்டிக்கும் அ.தி.மு.க. பயப்படாது.
    • அ.தி.மு.க.வை யார் அழிக்க நினைத்தாலும் அவர்கள் காற்றோடு கரைந்து போய் விடுவார்கள் என்றார்.

    அரியலூர்:

    அரியலூரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசியதாவது:

    இந்த தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க., காணாமல் போகும் என சிலர் பேசுகின்றனர். ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு யார் காணாமல் போவார் என்று மக்கள் முடிவு செய்வார்கள். வெயில் காலத்தில் உஷ்ணம் அதிகமாகி விட்டதால்தான் இப்படி பேசுகின்றனர்.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களை பார்க்கவே இல்லை. தேர்தல் காரணமாக தற்போதுதான் தேநீர் கடைக்கு வந்து மக்களைச் சந்தித்துள்ளார்.

    சைக்கிள் ஓட்டுவது, உடற்பயிற்சி மற்றும் நடைபயணம் செய்வதை மட்டுமே முதல்வர் செய்கிறார். தி.மு.க.வினர் அராஜகத்தில் ஈடுபடுகின்றனர்.

    மகளிர் உரிமைத்தொகை கிடைக்க அ.தி.மு.க. கொடுத்த அழுத்தமே காரணம்.

    மக்கள் எங்கள் பக்கம் இருக்கின்றனர் என ஸ்டாலின் கூறுகிறார். ஆம் அவர்கள் பக்கம் இருக்கின்றனர். ஆனால், எங்களுக்கு ஓட்டுப் போடுவார்கள்.

    எப்போதும் குடும்பத்தைப் பற்றி சிந்திக்கும் முதல்வராக ஸ்டாலின் உள்ளார். தமக்கு மக்கள் செல்வாக்கு இல்லாததால் இந்தியா கூட்டணியை ஏற்படுத்தி வாக்கு கேட்கிறார் என தெரிவித்தார்.

    ×