search icon
என் மலர்tooltip icon

    திருச்சிராப்பள்ளி

    • புளியஞ்சோலைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
    • கொல்லிமலை அடிவாரமான புளியஞ்சோலை பகுதியில் உள்ள ஆற்றில் பெருக்கெடுத்து கரைபுரண்டு ஓடுகிறது.

    உப்பிலியபுரம்:

    திருச்சி மாவட்டம் துறையூர் வனப்பகுதியில் அமைந்துள்ளது புளியஞ்சோலை சுற்றுலா தலம். இயற்கை எழில் கொஞ்சும் அழகிய மலை முகடுகள், அடர்ந்த மரங்கள், காடுகள், சிற்றோடைகள் என காண்போர் மனதை மயக்கும் இடங்கள் ஏராளமாக இங்குள்ளன. தற்போது அக்கினி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயிலின் தாக்கத்தை குறைக்கும் அளவில் மழை பெய்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள். இதனால் புளியஞ்சோலைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

    நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதிகளில் தொடர் மழை காரணமாக அங்குள்ள மிகப்பெரிய ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்த தண்ணீர் அங்கிருந்து சிற்றோடையாக கொல்லிமலை அடிவாரமான புளியஞ்சோலை பகுதியில் உள்ள ஆற்றில் பெருக்கெடுத்து கரைபுரண்டு ஓடுகிறது.

    செந்நிறத்தில் ஓடும் இந்த தண்ணீரின் அழகை பார்க்க அப்பகுதி மக்கள் ஏராளமானோர் திரண்டு வருகிறார்கள். நாமக்கல் மாவட்ட வனத்துறை சார்பில் கொல்லிமலை மற்றும் அடிவாரம் புளியஞ்சோலை பகுதிக்கு சுற்றுலா வரும் பொதுமக்கள் கவனமாக செயல்பட பல்வேறு முன்னேற்பாடுகள் மற்றும் எச்சரிக்கை விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டுமாய் கேட்டுக்கொண்டுள்ளது. குறிப்பாக நீர் நிலைகளுக்கு அருகில் அபாய எச்சரிக்கை வாசகங்கள் அடங்கிய போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அதே போல் பாறைகளிலும், எச்சரிக்கை, கற்கள் நிறைந்த பகுதி, பாறையின் மேல் ஏறி குதிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இதனிடையே திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பனியன் கம்பெனி தொழிலாளி சிவக்குமார் தனது குடும்பத்தினருடன் கடந்தவாரம் புளியஞ்சோலைக்கு சுற்றுலா வந்துள்ளார் அப்போது சிவகுமார் எதிர்பாராத விதமாக அங்கிருந்த நீரில் தவறி விழுந்து மூழ்கி இறந்தார்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் கலாநிதி உத்தரவின் பேரில் வனச்சரகர் பெருமாள் மற்றும் வனத்துறையினர் அந்த பகுதியில் ஆய்வு செய்தனர். இதன் தொடர்ச்சியாக புளியஞ்சோலை நாட்டாமடு பகுதியில் பொக்லைன் மூலம் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை தொடர்ந்து புளியஞ்சோலை வனப்பகுதிக்கு பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    • பெலிக்ஸ் ஜெரால்டு இன்று கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
    • பெண் போலீசார் குறித்து உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டேன் தப்புதான்.

    திருச்சி:

    ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலில் பிரபல யூ டியூபர் சவுக்கு சங்கர் பெண் போலீசார் குறித்து அவதூறு பேசியதாக அவர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    அதன் பின்னர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில் பெண் போலீசார் குறித்து அவதூறு பேசியது தொடர்பாக முசிறி டி.எஸ்.பி. யாஸ்மின் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார்.

    அதன் அடிப்படையில் சவுக்கு சங்கர் மற்றும் அவருடைய பேட்டியை ஒளிபரப்பிய ரெட் பிக்ஸ் சேனலை சேர்ந்த பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கரை திருச்சி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

    அதேபோன்று டெல்லியில் ஜெரால்டை கைது செய்து ரெயில் மூலம் அழைத்து வந்து திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர். பின்னர் சவுக்கு சங்கரை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோடிலிங்கம் மனு தாக்கல் செய்தார்.

    இதை தொடர்ந்து கோவை ஜெயில் இருந்து சவுக்கு சங்கரை பெண் போலீசார் நேற்று முன்தினம் திருச்சி அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி பின்னர் லால்குடி கிளை சிறையில் அடைத்தனர்.

    பின்னர் நேற்று காலை காவலில் எடுத்து விசாரிப்பது தொடர்பான மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து சவுக்கு சங்கர் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    அப்போது சவுக்கு சங்கரின் தரப்பில் ஆஜரான வக்கீல்கள் ஏற்கனவே இந்த வழக்கில் கோவை போலீசார் ஒருநாள் காவலில் எடுத்து விசாரித்துள்ளனர். ஆகவே போலீஸ் காவலுக்கு அனுமதி அளிக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.

    பின்னர் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயப்பிரதா, சவுக்கு சங்கரை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். அதைத் தொடர்ந்து அவரை திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர்.

    அங்கே விடிய விடிய போலீசார் அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது,பெண் போலீசார் குறித்து அவதூறு பேசியதற்கு பின்னணியில் யார் யார்? கேட்டனர்.

    அதற்கு சவுக்கு சங்கர் பதிலளிக்கும் போது, யாரும் என்னை தூண்டவில்லை. ஆளுங்கட்சியை விமர்சிப்பது தான் ஜார்னலிசம். எடப்பாடி பழனிச்சாமி ஆளுங்கட்சியாக இருந்தபோது அவரை விமர்சனம் செய்துள்ளேன்.

    பெண் போலீசார் குறித்து உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டேன். அது தப்புதான். அதை இப்போது உணர்ந்துள்ளேன் என கூறியதாக விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த நிலையில் ஒருநாள் போலீஸ் காவல் முடிந்து மீண்டும் இன்று மாலை 4 மணிக்கு சவுக்கு சங்கர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

    இதனிடையே பெலிக்ஸ் ஜெரால்டு இன்று கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். இதற்காக திருச்சி சிறையில் இருந்து அவரை போலீசார் பாதுகாப்புடன் கோவைக்கு அழைத்து சென்றனர்.

    • செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்தபோதுகூட போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்தனர்.
    • உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியது தொடர்பாக பல்வேறு மாநிலங்களில் வழக்கு.

    சவுக்கு சங்கர பேசியது காவலரை மட்டுமின்றி ஒட்டுமொத்த பெண் சமுதாயத்தையே பாதித்துள்ளது என திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் காரசார விவாதம் நடந்துள்ளது.

    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரித்தால் தான் வழக்கில் தொடர்புடைய நபர்களை கண்டிறிய முடியும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்தபோதுகூட போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்தனர். உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியது தொடர்பாக பல்வேறு மாநிலங்களில் வழக்கு தொடரப்பட்டது என்று குறிப்பிடப்பட்டது.

    ஒரு லட்சம் போலீசார் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் அனைவரும் புகார் அளித்தால் எப்ஐஆர் போட்டு விசாரிப்பார்களா ? என்று சவுக்கு சங்கர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

    மேலும், சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் ஜெரால்டு வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடந்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டு விசாரணையும் நடந்து வருகிறது. ஆவணங்கள், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவை கைப்பறறப்பட்ட பிறகு திருச்சியில் எதற்காக போலீஸ் கஸ்டடி கேட்கிறார்கள் ? என சவுக்கு சங்கர் தரப்பு கூறப்பட்டது.

    இதைதொடர்ந்து, பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கி திருச்சி மகிளா நீதிமன்றத்தின் நீதிபதி ஜெயப்பிரதாக உத்தரவிட்டுள்ளார்.

    சவுக்கு சங்கருக்கு ஏற்கனவே ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கி இருந்த நிலையில், தற்போது வேறொரு வழக்கில் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • வசந்த உற்சவத்தின் போது 9 நாட்களும் வசந்த மண்டபத்தில் சூர்ணாபிஷேகம் என்றழைக்கப்படும்
    • வசந்த உற்சவ நாட்களில் இரவு 8 மணிக்கு பிறகு ஆரியபடாள் வாசலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

    திருச்சி:

    பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு தோறும் வசந்த உற்சவம் நடைபெறும். வசந்த உற்சவத்தின் போது நம்பெருமாள் கோவிலின் நான்காம் பிரகாரமான ஆலிநாடன் திருச்சுற்றில் சக்கரத்தாழ்வார் சன்னதி வடபுறம் அமைந்துள்ள அழகிய தோட்டத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளுவார்.

    உற்சவத்தையொட்டி தினமும் மாலை 5 மணிக்கு நம்பெருமாள் மூலஸ் தனத்திலிருந்து புறப்பட்டு வசந்த மண்டபதிற்கு மாலை 6 மணிக்கு சென்றடைவார். அங்கு மண்டபத்தில் நடுவில் நம்பெருமாள் ஒய்யாரமாக வீற்றிருப்பார்.

    வசந்த உற்சவத்தின் போது 9 நாட்களும் வசந்த மண்டபத்தில் சூர்ணாபிஷேகம் என்றழைக்கப்படும் மஞ்சள் பொடியினை நம்பெருமாள் மீது தூவும் நிகழ்ச்சி இரவு 8 மணிக்கு நடைபெறும். வசந்த உற்சவத்தின் முதல் நாளான நேற்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு வசந்த மண்டபத்திற்கு மாலை 6 மணிக்கு வந்து சேர்ந்தார். அங்கு அலங்காரம், அமுது செய்து சூர்ணா பிஷேகம் கண்டருளினார். பின்னர் வசந்த மண்டபத்திலிருந்து இரவு 9மணிக்கு புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.


    வசந்த உற்சவ விழாவின் 7ம் நாளான்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளி நெல்லளவு கண்டருளுகிறார். 9ம் திருநாள் அன்று நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளுகிறார். தீர்த்தவாரி மற்றும் திருமஞ்சனம் கண்டருளுவார்.

    வசந்த உற்சவ நாட்களில் இரவு 8 மணிக்கு பிறகு ஆரியபடாள் வாசலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரியப்பன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • மீண்டும் காவல்துறை விசாரணைக்கு எடுத்தால் கை எலும்பு முறிவு ஏற்பட்டது போல் நாளை கால் முறிவு ஏற்படும் என கூறிய சவுக்கு சங்கர்.
    • நீதிமன்ற காவலில் இருக்கும்போது கை எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது சவுக்கு சங்கர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    திருச்சி:

    போலீஸ் அதிகாரிகள் மற்றும் மகளிர் போலீசார் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் மீது சென்னையில் அடுத்தடுத்து வழக்குகள் பதிவானதால் சென்னை பெருநகர காவல்துறை சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தது.

    இதனையடுத்து திருச்சி மாவட்டம் முசிறி டி.எஸ்.பி யாஸ்மின் கொடுத்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    அந்த வழக்கு தொடர்பாக திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பெண் காவல்துறை அதிகாரிகள் கோவைக்கு சென்றனர். அங்கிருந்து சவுக்கு சங்கரை திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயப்பிரதா முன்னிலையில் ஆஜர்படுத்தப்படுத்த அழைத்து வந்தனர்.

    போலீஸ் அதிகாரிகள் மற்றும் மகளிர் போலீசார் குறித்து அவதூறாக சவுக்கு சங்கர் பேசியதால் அவரை திருச்சிக்கு அழைத்துச்செல்லும் போலீஸ் வாகனத்தில் காவலுக்காக முழுவதும் மகளிர் போலீசார் மட்டுமே உடன் சென்றனர்.

    இதனையடுத்து நீதிபதி ஜெயப்பிரதா முன்பு சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார்.அப்போது, கோவையில் இருந்து அழைத்து வரப்பட்ட போது, பாதுகாப்பிற்கு வந்த பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாகவும் அதனை வீடியோவாக பதிவு செய்து காவல்துறையை சேர்ந்த வாட்சப் குழுக்களுக்கு அனுப்பியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

    ஆனால் பெண் காவலர்களின் விரல் கூட சவுக்கு சங்கர் மீது படவில்லை என காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

    இதனையடுத்து அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    பின்பு மீண்டும் சவுக்கு சங்கர் வழக்கில் திருச்சி நீதிமன்றத்தில் நீதிபதி முன்பாக காரசார விவாதம் நடந்தது. அப்போது, இந்த ஒரு விவகாரம் தொடர்பாக தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் வழக்கு தொடர்வது தேவையில்லாத ஒன்று சவுக்கு சங்கர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. ஆனால் அரசு தரப்பில் சவுக்கு சங்கரை போலீஸ் காவலில் வைத்து விசாரித்தால் தான் உண்மை தெரிய வரும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

    போலீஸ் வேனில் தன்னை தாக்கிய பெண் காவலர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் சவுக்கு சங்கர் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த விவாதம் நடந்து கொண்டிருக்கையில் சவுக்கு சங்கரை அழைத்து வந்த பெண் காவலர் ஒருவர் நீதிமன்றத்தில் ஆஜராகி சவுக்கு சங்கர் தன்னை மிரட்டியதாகவும், எங்களது பெயரை மீடியாவில் சொல்லி தவறான தகவல்களை பரப்புவேன் என்று கூறியதாக குற்றம் சாட்டினார்.

    அதே சமயம் இன்னொரு பெண் காவலர், "வேனில் வரும் போது திருமணம் ஆகாத என்னிடம் சவுக்கு சங்கர் செல்போன் நம்பரையும், பெயரையும் கேட்டார் என்றும் ஒருவேளை என் பெயரை சொல்லி இருந்தால் எனக்கு சவுக்கு சங்கர் அவப்பெயர் ஏற்படுத்தி இருப்பார்" என்று குற்றம் சாட்டினார்.

    இதற்கு பெண் காவலர்கள் சட்டையில் பெயர் பட்டை இல்லாமல் தன்னை வாகனத்தில் அழைத்து வந்தனர் என்று சவுக்கு சங்கர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    மீண்டும் காவல்துறை விசாரணைக்கு எடுக்கும்போது கை எலும்பு முறிவு ஏற்பட்டது போல் நாளை கால் முறிவு ஏற்படும் சூழல் ஏற்படும் என்றும் நீதிமன்ற காவலில் இருக்கும்போது கை எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று சவுக்கு சங்கர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    பின்பு சவுக்கு சங்கருக்கு மே 28 வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சவுக்கு சங்கரை திருச்சிக்கு அழைத்துச்செல்லும் போலீஸ் வாகனத்தில் காவலுக்காக முழுவதும் மகளிர் போலீசார் மட்டுமே உடன் சென்றனர்.
    • பெண் காவலர்களின் விரல் கூட சவுக்கு சங்கர் மீது படவில்லை என காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

    திருச்சி:

    போலீஸ் அதிகாரிகள் மற்றும் மகளிர் போலீசார் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் மீது சென்னையில் அடுத்தடுத்து வழக்குகள் பதிவானதால் சென்னை பெருநகர காவல்துறை சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தது.

    இதனையடுத்து திருச்சி மாவட்டம் முசிறி டி.எஸ்.பி யாஸ்மின் கொடுத்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    அந்த வழக்கு தொடர்பாக திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பெண் காவல்துறை அதிகாரிகள் கோவைக்கு சென்றனர். அங்கிருந்து சவுக்கு சங்கரை திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயபிரதா முன்னிலையில் ஆஜர்படுத்த அழைத்து வந்தனர்.

    போலீஸ் அதிகாரிகள் மற்றும் மகளிர் போலீசார் குறித்து அவதூறாக சவுக்கு சங்கர் பேசியதால் அவரை திருச்சிக்கு அழைத்துச்செல்லும் போலீஸ் வாகனத்தில் காவலுக்காக முழுவதும் மகளிர் போலீசார் மட்டுமே உடன் சென்றனர்.

    இதனையடுத்து நீதிபதி ஜெயபிரதா முன்பு சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, கோவையில் இருந்து அழைத்து வரப்பட்ட போது, பாதுகாப்பிற்கு வந்த பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாகவும் அதனை வீடியோவாக பதிவு செய்து காவல்துறையை சேர்ந்த வாட்சப் குழுக்களுக்கு அனுப்பியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

    ஆனால் பெண் காவலர்களின் விரல் கூட சவுக்கு சங்கர் மீது படவில்லை என காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

    இதனையடுத்து அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கரின் கையை ஸ்கேன் செய்து வர நீதிபதி ஜெயபிரதா அறிவுறுத்தினார்.

    • இருசக்கர வாகனத்தில் இருந்த பணம் காணாமல் போனதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
    • பல்வேறு மாவட்டங்களில் குற்ற செயல் ஈடுபட்டதற்கான வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    டால்மியாபுரம்:

    திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி அடுத்த வெங்கடாசலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி மகன் சோலை ராஜன்(வயது47) .

    இவர் புள்ளம்பாடி வங்கியில் தன் சொந்த தேவைக்காக தங்க நகைகளை வங்கியில் அடகு வைத்து ரூபாய் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பெற்று தனது இருசக்கர வாகனத்தில் வைத்துள்ளார் .

    பிறகு புள்ளம்பாடி திருமழாம்பாடி சாலையில் உள்ள இ சேவை மையத்தில் வண்டியை நிறுத்திவிட்டு சேவை மையத்திற்கு சென்று விட்டு திரும்பி வந்து இருசக்கர வாகனத்தில் இருந்த பணத்தை எடுக்க பெட்டியை திறந்த உள்ளார்.

    அப்பொழுது இருசக்கர வாகனத்தில் இருந்த பணம் காணாமல் போனதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    உடனடியாக கல்லக்குடி காவல் நிலையத்திற்கு அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இருசக்கர வாகனத்தில் பணத்தை கொள்ளை அடித்தவர்களை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

    இந்நிலையில் கல்லக்குடி மால்வாய் ரோடு பிரிவில் சப்-இன்ஸ்பெக்டர் பூபதி தலைமையில் தனி படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியாக ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக அளித்த தகவலின் பெயரில் அவர்களை கல்லக்குடி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையத்தை சேர்ந்தவர்கள் என்றும் தற்போது திருச்சி மாவட்டம் திருவரம்பூர் அருகே வாஷிங்டன் நகரில் வசித்து வரும் கணேசன் (62 ) மற்றும் அவரது மகன் ராமு (26) எனவும், இவர்கள் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. ஒரு லட்சத்து 30 ஆயிரத்தை திருடியது தெரியவந்து.

    இதனை தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்து லால்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி லால்குடி கிளை சிறையில் அடைத்தனர்.

    இவர்கள் இருவர் மீதும் கோவை, நாகை உட்பட பல்வேறு மாவட்டங்களில் குற்ற செயல் ஈடுபட்டதற்கான வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நிர்வாகம் சார்பில் தெற்கு கோபுர வாசலில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • பெருமாள் புகைப்படம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.

    திருச்சி:

    ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு பெருமாள் புகைப்படம் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

    ஜார்க்கண்ட் மாநில ஆளுநரும் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி பொறுப்பு ஆளுனருமான சி.பி.ராதாகிருஷ்ணன் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய இன்று காலை வந்தார்.

    அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் தெற்கு கோபுர வாசலில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பின்னர் கோவிலில் இருக்கும் கருடாழ்வார், மூலவர், பெரிய பெருமாள், தாயார், சக்கரத்தாழ்வார், இராமானுஜர் உள்ளிட்ட சன்னதிகளுக்கு நடந்தே சென்று தரிசனம் செய்தார்.

    கோவிலுக்கு வருகை தந்த ஆளுநருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் இணை ஆணையர் மாரியப்பன் மற்றும் அர்ச்சகர்கள் மரியாதை செய்யப்பட்டு பெருமாள் புகைப்படம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.

    • செயினை பறிக்க விடாமல் எழிலரசி போராடினார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம், மணப்பாறை நகரைச் சேர்ந்தவர் எழிலரசி. இவர் இன்று காலை வேப்பிலை மாரியம்மன் கோவிலுக்குச் சென்றுவிட்டு மணப்பாறை பட்டி சாலை வழியாக தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    உதயம் தியேட்டர் அருகே செல்லும்போது இவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென இவரது கழுத்தில் அணிந்து இருந்த ஏழு சவரன் தாலி செயினை பறிக்க முயன்றார். செயினை பறிக்க விடாமல் எழிலரசி போராடினார்.

    செயினை அறுக்க முடியாத நிலையில் அவரை கீழே தள்ளிவிட்ட வாலிபர் அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்தார். அப்போது அப்பகுதியில் கடை வைத்துள்ள குமரேசன் என்பவர் மர்ம நபரை ஓடிச்சென்று பிடித்தார். பின்னர் அப்பகுதி பொதுமக்கள் மர்ம நபரை அங்குள்ள மின்கம்பத்தில் கட்டி வைத்தனர்.

    மக்கள் அவனிடம் விசாரித்த போது காரைக்குடி என மட்டும் கூறி பெயர் உள்ளிட்ட மற்ற விபரங்களை கூறவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அப்பகுதி பொதுமக்கள் வாலிபருக்கு தர்மஅடி கொடுத்தனர்.

    இதுகுறித்து மணப்பாறை காவல்துறையினருக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் மர்ம நபரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தில் கை மற்றும் கழுத்தில் காயம் அடைந்த எழிலரசி மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். காலை நேரத்தில் கோவிலுக்கு சென்று விட்டு வந்த பெண்ணிடம் வாலிபர் செயின் பறிப்பில் ஈடுபட முயன்று பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் மணப்பாறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
    • கார் தீப்பற்றி எரிந்த தகவல் அறிந்ததும் நூற்றுக்கணக்கான மக்கள் அந்த இடத்தில் திரண்டனர்.

    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த இடையபட்டியைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 45). இவர் தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது காரை மணப்பாறை எடத்தெரு பகுதியில் நிறுத்தி வைத்திருந்தார்.

    இன்று காலை வேலைக்கு செல்வதற்காக காரை ஸ்டார்ட் செய்ய முயன்ற போது திடீரென காரின் முன் பகுதியில் இருந்து தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் காரில் இருந் இறங்கி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மண்ணை கொட்டி தீயை அணைக்க முயன்றார்.

    ஆனாலும் சிறிது நேரத்தில் தீப்பற்றி எரிந்தது. சுட்டெரிக்கும் வெயிலில் நெருக்கு கொழுந்து விட்டு எரியவே அக்கம் பக்கத்தினர் இதுபற்றி மணப்பாறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    இருப்பினும் கார் முழுவதுமாக எரிந்து நாசமானது. பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கார் தீப்பற்றி எரிந்த தகவல் அறிந்ததும் நூற்றுக்கணக்கான மக்கள் அந்த இடத்தில் திரண்டனர். சுட்டெரிக்கும் வெயில் காரணமாக கார் தீப்பற்றி எரிந்ததாக தெரிகிறது. இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது. 

    • கடந்த 1-ந்தேதி தங்க கருட வாகனத்திலும், நேற்று காலை வெள்ளிக்குதிரை வாகனத்திலும் வீதி உலா வந்தார்.
    • தேரின் முன் பக்தர்கள் தேங்காய் உடைத்தும், நெய் விளக்கு, சூடம் ஏற்றி வழிபட்டனர்.

    திருச்சி:

    கோவிந்தா. கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் இன்று நடை பெற்றது. இதில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

    பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவத்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்க நாதர்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்த்திருவிழா 11 நாட்கள் நடைபெறும்.

    இவ்வகையில் இந்த ஆண்டிற்கான சித்திரை தேர்த்திருவிழா கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினமும் காலை, மாலை வேளைகளில் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    கடந்த 1-ந்தேதி தங்க கருட வாகனத்திலும், நேற்று காலை வெள்ளிக்குதிரை வாகனத்திலும் வீதி உலா வந்தார். மாலை நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் வீதி உலா வந்து, சித்திரைத்தேர் அருகில் வையாளி கண்டருளினார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி நம்பெருமாள் அதிகாலை 4.30 மணியளவில் கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு காலை 5 மணியளவில் சித்திரைத் தேர் ஆஸ்தான மண்டபம் வந்து சேர்ந்தார். இதையடுத்து காலை 5.15 மணிக்கு மேஷ லக்னத்தில் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.


    பின்னர் காலை 6 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர். கீழச்சித்திரைவீதியிலிருந்து புறப்பட்டு தேர் தெற்குசித்திரை வீதி, மேற்கு சித்திரை வீதி மற்றும் வடக்கு சித்திரை வீதிகளில் வலம் வந்து மீண்டும் காலை 10 மணிக்கு நிலையை அடைந்தது. பின்னர் தேரின் முன் பக்தர்கள் தேங்காய் உடைத்தும், நெய் விளக்கு, சூடம் ஏற்றி வழிபட்டனர்.

    சித்திரை தேர்த்திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் பகுதிகளில் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் மற்றும் தனியார் அமைப்புகள் மூலம் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு நீர் மோர், பானகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    தேரோட்டத்தை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் ஆகியவை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தேரோட்டத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநகர போலீசார் செய்திருந்தனர். நாளை(7-ந்தேதி) இரவு சப்தாவரணம் நிகழ்ச்சியை தொடர்ந்து திருவிழாவுக்கென ஏற்றப்பட்ட கொடியிறக்கப்படும். நாளை மறுநாள் (8-ந்தேதி) இரவு ஆளும்பல்லக்குடன் தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் , இணை ஆணையர் மாரியப்பன், கோவில் உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • சூறாவளி காற்று வீசியதில் அப்பகுதியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கின் மேற் கூரை பறந்து சென்றது.
    • காற்றுடன் பெய்த மழையின் காரணமாக வாழை மரங்கள் முறிந்து போனதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    தொட்டியம்:

    தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியது முதலே சுட்டெரிக்கும் வெயிலால் பொது மக்கள் கடும் அவதி அடைந்து உள்ளனர். அக்னி நட்சத்திரம் தொடங்கியதால் அனல் வீசும் வெப்ப காற்றினால் பொதுமக்கள் வெளியே தலை காட்ட அஞ்சிய நிலையில் நேற்று இரவு சுமார்7.30 மணி அளவில் தொட்டியம் அருகே காட்டுப்புத்தூர் பகுதியில் திடீரென வானில் கருமேகங்கள் சூழ்ந்தது. சூறாவளி காற்று வீசியதில் அப்பகுதியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கின் மேற் கூரை பறந்து சென்றது. அப்போது இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    பலத்த காற்று மற்றும் மழை காரணமாக சில இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளது. இது தவிர வயல் வெளியில் காட்டுப்புத்தூர், சீலை பிள்ளையார்புத்தூர், ஸ்ரீராமசமுத்திரம், மஞ்சமேடு, மற்றும் காட்டுப்புத்தூர் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் விவசாயிகள் ரஸ்தாலி, பூவன், ஏலரசி, கற்பூரவள்ளி, உள்பட பல்லாயிரக் கணக்கான வாழையை பயிரிட்டு வந்தனர். இந்த சூறாவளி காற்றுடன் பெய்த மழையின் காரணமாக வாழை மரங்கள் முறிந்து போனதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட வாழை பயிருக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×