search icon
என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • 10 நாட்கள் நடைபெறும் கோடை விழாவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் விதவிதமான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
    • ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு 61-வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா இன்று கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் தொடங்கியது.

    10 நாட்கள் நடைபெறும் கோடை விழாவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் விதவிதமான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. குறிப்பாக படகு அலங்கார போட்டி, சைக்கிள் போட்டி, குதிரை சவாரி, வாத்து பிடிக்கும் போட்டி, நாய் கண்காட்சி உள்ளிட்டவை நடைபெற உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளது. இதனால் கோடை விழாவை முன்னிட்டு கடந்த 2 நாட்களாகவே கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.

    இந்த நிலையில், இன்று மதியம் கொடைக்கானல் வத்தலகுண்டு மலை சாலையில் மூளையார் என்ற இடத்தில் கர்நாடகா மாநிலத்திலிருந்து சுற்றுலாப் பயணிகள் வந்த கார் மீது எதிரே வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை.

    இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோடை விழாவை முன்னிட்டு கடந்த 2 நாட்களாகவே கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.
    • 10 நாட்கள் நடைபெறும் கோடை விழாவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் விதவிதமான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு 61-வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா இன்று காலை 8 மணிக்கு கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் தொடங்கியது.

    மலர் கண்காட்சியில் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளை சுற்றுலா, பண்பாட்டு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசகன் தொடங்கி வைத்தார். வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மை செயலாளர் அபூர்வா மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக சுற்றுலா ஆணையர் சமயமூர்த்தி, தோட்டக்கலை இயக்குனர் குமாரவேல் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


    மாவட்ட கலெக்டர் பூங்கொடி, போலீஸ் சூப்பிரண்டு பிரதீப், டி.ஐ.ஜி. அபினவ்குமார், கொடைக்கானல் நகர் மன்ற தலைவர், துணைத் தலைவர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சிக்காக லட்சக்கணக்கான மலர்ச்செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தன. அதில் பூக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் காண்போரை கவரும் வகையில் இடம் பெற்றிருந்தது. இது தவிர மலர்களால் ஆன மயில், கரடி, விலங்குகளின் உருவம் ஆகியவையும் வடிவமைக்கப்பட்டு இருந்தது.

    இதனை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கோடை விழாவை முன்னிட்டு கடந்த 2 நாட்களாகவே கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.

    10 நாட்கள் நடைபெறும் கோடை விழாவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் விதவிதமான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. குறிப்பாக படகு அலங்கார போட்டி, சைக்கிள் போட்டி, குதிரை சவாரி, வாத்து பிடிக்கும் போட்டி, நாய் கண்காட்சி உள்ளிட்டவை நடைபெற உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளது.

    இது தவிர இந்த ஆண்டு கோடை விழாவில் தினந்தோறும் கலையரங்கில் விதவிதமான கலை நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கலை நிகழ்ச்சிகளை திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்களை பங்கேற்க வைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு அவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகளை நடத்த நாள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


    தமிழர்களின் பாரம்பரிய கலை, பண்பாட்டு, வீரவிளையாட்டு ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் மாணவர்கள் தங்கள் திறமையை கொண்டு வர அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கொடைக்கானலில் கடந்த சில நாட்களாகவே சாரல் மழை பெய்து வரும் நிலையில் அதனையும் பொருட்படுத்தாது சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

    சாரல் மழையில் நனைந்து கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை காண பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளதால் கொடைக்கானலில் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள வியாபாரிகளும், தொழிலாளர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    கொடைக்கானலுக்கு வருபவர்கள் இ-பாஸ் பெற்று செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி பெரும்பாலான சுற்றுலா பயணிகள் எவ்வித சிரமமுமின்றி இ-பாஸ் பெற்று வருகின்றனர். ஒருசிலர் இ-பாஸ் இல்லாமல் வந்தாலும் அவர்களுக்கு சோதனைச் சாவடிகளில் உடனுக்குடன் அவர்களது செல்போனிலேயே இ-பாஸ் பெறப்பட்டு உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

    கோடை விழாவை முன்னிட்டு கொடைக்கானலில் அனைத்து சுற்றுலா இடங்களிலும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    • வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
    • மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான வைகாசி விசாகத் தேரோட்டம் 22ந் தேதி நடக்கிறது.

    பழனி:

    தமிழ் கடவுள் முருகனின் 3-ம் படை வீடான பழனிக்கு வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

    இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் திருவிழா கொண்டாடப்படுவதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இங்கு கொண்டாடப்படும் திருவிழாக்களில் வைகாசி விசாகம் பிரசித்தி பெற்றதாகும். 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் முதல் நாள் நிகழ்ச்சியாக இன்று பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு வேல், சேவல், மயில் உருவம் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிற கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு உட்பிரகாரமாக வலம் வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து காலை 9 மணியளவில் சிறப்பு பூஜைகளுடன் கோவில் கொடிமரத்தில் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடந்தது. அப்போது வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு வழிபட்டனர்.


    திருவிழா நடைபெறும் 10 நாட்களும் வள்ளி-தெய்வானை சமேதரராக முத்துக்குமாரசாமி ரத வீதிகளில் தங்க மயில், தந்த பல்லக்கு, காமதேனு, ஆட்டுக்கிடா, சப்பரம், வெள்ளியானை, வெள்ளி மயில் உள்ளிட்ட வாகனங்களில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாணம் வருகிற 21ந் தேதி மாலை 6 மணி முதல் 6.30 மணிக்குள் நடைபெறுகிறது.

    மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான வைகாசி விசாகத் தேரோட்டம் 22ந் தேதி நடக்கிறது. அன்று காலை 11.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் சிம்ம லக்கனத்தில் தேரேற்றம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறும்.

    10 நாட்களும் பக்தி சொற்பொழிவு, இசை நிகழ்ச்சி, நடனம், கிராமிய பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ் தலைமையிலான அதிகாரிகள் செய்து வருகின்றனர். 

    • கோடை சீசனில் மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் குளு குளு சீசன் களைகட்டி உள்ளது.
    • மலர் கண்காட்சி நடைபெற உள்ள நிலையில் தற்போதே சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.

    கொடைக்கானல்:

    தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி எடுத்ததை போலவே கொடைக்கானலிலும் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வந்தது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து மழை பெய்து வருகிறது.

    குறிப்பாக தினந்தோறும் 2 மணி நேரத்துக்கு மேலாக இடைவெளி விட்டு விட்டு ஒரு சில இடங்களில் கன மழையாகவும், ஒரு சில இடங்களில் சாரல் மழையாகவும் பெய்து வருகிறது.

    இதனால் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக உள்ள வெள்ளி நீர் வீழ்ச்சி அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களாக தண்ணீர் குறைந்து காணப்பட்ட நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது பெய்த மழையால் வெள்ளி நீர் வீழ்ச்சி அருவியில் ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டி வருகிறது. இதனால் அருவிக்கு வந்த சுற்றுலாப்பயணிகள் மழையில் நனைந்தபடி அருவியை கண்டு ரசித்ததுடன், செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இதேபோல் பாம்பார் அருவி, பியர்சோழா உள்ளிட்ட பல்வேறு அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    தற்போது பெய்து வரும் மழையால் குடிநீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கோடை சீசனில் மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் குளு குளு சீசன் களைகட்டி உள்ளது.

    வருகிற 17ந் தேதி கோடை விழா, மலர் கண்காட்சி நடைபெற உள்ள நிலையில் தற்போதே சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.

    • நெடுஞ்சாலையின் இரு புறங்களிலும் கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால் வாகனங்களின் சூட்டை தணிக்க ஒதுங்கி நிற்கக்கூட இடம் இல்லாத நிலை உள்ளது.
    • கோடை சீசன் தொடங்கிய நிலையிலும் கடந்த சில தினங்களாக சுற்றுலாப்பயணிகள் வருகையின்றி காணப்பட்ட கொடைக்கானல் மலைப்பகுதி தற்போது சுற்றுலாப்பயணிகள் வருகையால் களைகட்ட துவங்கியுள்ளது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இ-பாஸ் நடைமுறை அமுல்படுத்தியதைத் தொடர்ந்து சுற்றுலாப்பயணிகளின் வருகை முற்றிலும் குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் வார விடுமுறையான நேற்றும் இன்றும் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநில சுற்றுலாப்பயணிகளின் வருகை காலை முதலே அதிகரித்து காணப்பட்டது. உகார்த்தேநகர், சீனிவாசபுரம், மூஞ்சிக்கல், ஏரிச்சாலை, அப்சர்வேட்டரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றுலாப்பயணிகளின் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து சாலையில் காத்திருந்து தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் வாகனங்கள் ஊர்ந்தப்படி சென்றன.

    மேலும் இந்த போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கூடுதல் வாகனங்கள் நிறுத்தும் இடம், மற்றும் மாற்று சாலையை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் நெடுஞ்சாலையின் இரு புறங்களிலும் கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால் வாகனங்களின் சூட்டை தணிக்க ஒதுங்கி நிற்கக்கூட இடம் இல்லாத நிலை உள்ளது.

    வாகனங்கள் அதிக சூடாகி ரேடியேட்டர் பழுதானாலும் வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்தக்கூட இடமில்லாத நிலையும், ஒரே சீராக நெடுஞ்சாலையில் பயணிக்க முடியாத அளவில் நெடுஞ்சாலைகளில் ஆக்கிரமிப்பு நிலவி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோடை சீசன் தொடங்கிய நிலையிலும் கடந்த சில தினங்களாக சுற்றுலாப்பயணிகள் வருகையின்றி காணப்பட்ட கொடைக்கானல் மலைப்பகுதி தற்போது சுற்றுலாப்பயணிகள் வருகையால் களைகட்ட துவங்கியுள்ளது. ஆனால் கோடை சீசன் முடியும் காலம் நெருங்கி உள்ள நிலையில் இதுவரை அடிப்படை வசதிகளை மேம்படுத்தாமல் அலட்சியம் காட்டி வருவதும் வேதனைக்குரியதாக உள்ளதாக சுற்றுலா பயணிகள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.

    ஒவ்வொரு சீசன் காலங்களிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த தவறும் நிலையில் கொடைக்கானலுக்கு சுற்றுலா வருவதை எதிர்வரும் காலங்களில் சுற்றுலாப் பயணிகள் தவிர்க்கும் நிலை உருவாகி வருகிறது. கொடைக்கானல் சுற்றுலாவை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசின் சுற்றுலாத்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

    • உலக முத்தமிழ் முருகப் பக்தர்கள் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
    • உலகம் முழுவதும் முருகன் கோவில்களை நிர்மாணித்துள்ள அறங்காவலர்கள் அழைக்கப்படுவார்கள்.

    பழனி:

    பழனியில் உலக முருகபக்தர்கள் மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலைக்கல்லூரியில் இன்று நடைபெற்றது.

    இதற்காக தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று அதிகாலை பழனிக்கு வந்தார். அவர் ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்று கால பூஜையில் பங்கேற்று தண்டாயுதபாணி சுவாமியை வழிபட்டார்.

    அவருக்கு கோவில் சார்பில் இணை ஆணையர் மாரிமுத்து பிரசாதங்களை வழங்கினார். அதனைத் தொடர்ந்து கோவிலில் தயாரிக்கப்பட்டு வரும் பஞ்சாமிர்தம், விற்பனைக்கான ஏற்பாடுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க சென்ற அமைச்சர் சேகர்பாபு தெரிவிக்கையில்,

    திராவிட மாடல் ஆட்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள உயர்மட்டக் குழுக் கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் நடந்தது. இந்த கூட்டத்தில் அறநிலையத் துறைக்கான 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஒரு தீர்மானம் தமிழ்க் கடவுளான முருகப் பக்தர்கள் மாநாடு நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி உலக முத்தமிழ் முருகப் பக்தர்கள் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த மாநாடு ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் பழனியில் நடைபெறும்.

    2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டுக்கு உலகம் முழுவதும் முருகன் கோவில்களை நிர்மாணித்துள்ள அறங்காவலர்கள் அழைக்கப்படுவார்கள். எப்படியும் 500-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் அழைக்கப்படுவார்கள்.

    வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு உணவு, தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும். உள்ளூர் போக்குவரத்தும் இலவசமாக வழங்கப்படும்.

    2 நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டில் முருகனை பற்றிய ஆய்வுகள், முருகனின் புகழ் பரப்பும் கருத்தரங்கங்கள், சொற்பொழிவுகள், இடம்பெறும்.

    மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மாநாடு நடைபெறும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

    இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் ரூ.98 கோடி மதிப்பீட்டில் அழகு தமிழால் நடத்தப்பட்டது.

    அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் அறநிலையத்துறை நிதி ரூ.100 கோடி மற்றும் தனியார் பங்களிப்பு ரூ.200 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடக்கிறது.

    இதே போல் திருத்தணி, திருப்பரங்குன்றம் கோவில்களிலும் திருப்பணிகள் நடக்கிறது.

    26 ராமர் கோவில்களில் கும்பாபிஷேகங்கள் நடத்தப்பட்டுள்ளது. திராவிட மாடல் ஆட்சி மதத்துக்கு எதிரானதல்ல. கடவுளை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கோவில்கள் தூய்மையாகவும், சிறப்பாகவும் பராமரிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிறு வயதிலிருந்தே படிப்பில் மிகுந்த ஆர்வமுடன் இருந்தேன்.
    • தினசரி பாடங்களை அன்று வீட்டிற்கு சென்றதும் படித்து முடித்துவிடுவேன்.

    ரெட்டியார்சத்திரம்:

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடந்து முடிந்த 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள மண்டவாடி புதூர் கிராமத்தை சேர்ந்த காவ்யாஸ்ரியா என்ற மாணவி 500க்கு 499 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

    இவர் தமிழில் 99 மதிப்பெண்களும், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியில் ஆகிய 4 பாடங்களிலும் தலா 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஒட்டன்சத்திரம் அக்ஷயா அகாடமி பள்ளியில் படித்த மாணவியான இவரது தந்தை கருப்புச்சாமி விவசாயி. தாய் ரஞ்சிதம் குடும்பத்தலைவியாக உள்ளார்.

    மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவியை பள்ளி தாளாளர், ஆசிரியர்கள், மாணவிகள் ஆகியோர் இனிப்பு கொடுத்து வாழ்த்தினர். தனது வெற்றி குறித்து மாணவி கூறுகையில்,

    சிறு வயதிலிருந்தே படிப்பில் மிகுந்த ஆர்வமுடன் இருந்தேன். குறிப்பாக 10-ம் வகுப்பு வந்தவுடன் தொலைக்காட்சி பார்ப்பதை முற்றிலும் நிறுத்தி விட்டேன். தினந்தோறும் பள்ளியில் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை கவனமுடன் படித்தாலே போதும். அவ்வப்போது ஏற்படும் சந்தேகங்களை உடனுக்குடன் ஆசிரியர்களிடம் கேட்டு நிவர்த்தி செய்து கொள்வேன்.

    தினசரி பாடங்களை அன்று வீட்டிற்கு சென்றதும் படித்து முடித்துவிடுவேன். இதனால் எந்த சிறப்பு வகுப்பிற்கும் நான் செல்லவில்லை. எனது படிப்பிற்கு பெற்றோர்கள் உறுதுணையாக இருந்தனர். மேலும் தாளாளர் மலர்விழி செல்வி, ஆசிரியர்கள் ஆகியோர் ஊக்கமளித்து என்னை சிறந்த மாணவியாக உருவாக்கி உள்ளனர்.

    எதிர்கால லட்சியம் என்பது ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி கலெக்டர் ஆகவேண்டும் என்பதே ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டம் உள்ளிட்ட அனைத்து வாகனங்கள் 07.05.2024 அன்று முதல் 30.06.2024 வரை இ-பாஸ் (ePass) பதிவு செய்து வர வேண்டும்.
    • பயணிகள் "epass.tnega.org" என்ற இணைய முகவரியில் விபரங்களை பதிவேற்றம் செய்து இ-பாஸ் பெற்றுக்கொள்ளலாம்.

    திண்டுக்கல் :

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் பூங்கொடி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின்படி திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிக்கு வருகை தரும்

    வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டம் உள்ளிட்ட அனைத்து வாகனங்கள் 07.05.2024 அன்று முதல் 30.06.2024 வரை இ-பாஸ் (ePass) பதிவு செய்து வர வேண்டும்.

    பயணிகள் "epass.tnega.org" என்ற இணைய முகவரியில் விபரங்களை பதிவேற்றம் செய்து இ-பாஸ் பெற்றுக்கொள்ளலாம். இ-பாஸ் பெற விண்ணப்பிப்பது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் உள்ளூர் வாகனங்களுக்கு இ-பாஸ் (Local ePass ) பெறுவது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களுக்கு 0451 2900233 என்ற தொலைபேசி எண் 9442255737 என்ற கைபேசி எண் வாயிலாக சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ரெயிலில் 3 நேரமும் சைவ உணவுகளுடன் பயணத்தின் போது போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தி தரப்படும்.
    • புண்ணிய யாத்திரை மேற்கொள்ளும் பயணிகளுக்கு தென் தமிழக பாரம்பரிய உணவுகள் தயாரித்து வழங்கப்படும்.

    திண்டுக்கல்:

    ஐ.ஆர்.சி.டி.சி. தென் மண்டல குழு பொது மேலாளர் ராஜலிங்கம் திண்டுக்கல்லில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஐ.ஆர்.சி.டி.சி. சார்பில் பாரத் கவுரவ் சுற்றுலா ரெயில் அறிமுகம் செய்யப்பட்டது. அது தற்போது ஜூன் 6-ந் தேதி நெல்லையில் இருந்து புண்ணிய தீர்த்த யாத்திரை என்ற பெயரில் 500க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட உள்ளது.

    நெல்லையில் தொடங்கி விருநகர், மதுரை, சென்னை வழித்தடத்தில் 16 இடங்களில் நின்று பயணிகளை ஏற்றிக் கொண்டு புண்ணிய தலங்களான காசி, அயோத்தி, திருவேணி சங்கமம், கயா போன்ற இடங்களுக்கு செல்கிறது. 16 பெட்டிகளை கொண்ட இந்த ரெயிலில் 3 நேரமும் சைவ உணவுகளுடன் பயணத்தின் போது போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாவலர்கள் பணியில் இருப்பார்கள். புண்ணிய யாத்திரை மேற்கொள்ளும் பயணிகளுக்கு தென் தமிழக பாரம்பரிய உணவுகள் தயாரித்து வழங்கப்படும்.

    இதில் பயணிக்க பெரியவர்களுக்கு ரூ.18650, குழந்தைகளுக்கு ரூ.17560 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. முன் பதிவு தற்போதே தொடங்கி விட்டதால் பயணிகள் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • முதல் நாளான நேற்று இரவு 8 மணி வரை 15 ஆயிரத்து 945 வாகனங்கள் வெவ்வேறு தேதிகளில் கொடைக்கானலுக்கு வருவதற்காக விண்ணப்பிக்கப்பட்டது.
    • கொடைக்கானலுக்கு இன்று மட்டும் வருவதற்கு 3 ஆயிரத்து 792 வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டு உள்ளது.

    திண்டுக்கல்:

    'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலுக்கு ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதில் கோடைகாலத்தில் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்து விடுகின்றனர். தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் பயணிகள் வருவது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் கொடைக்கானலுக்கு வரும் வெளிமாநில மற்றும் வெளி மாவட்ட வாகனங்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 30.06.2024 வரை இ-பாஸ் பெற்று வர வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன்படி கொடைக்கானலுக்கு வரும் அனைத்து வாகனங்களுக்கும் 'epass.tnega.org' என்ற இணையதளத்தின் மூலம் நேற்று முதல் இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.

    இதில், முதல் நாளான நேற்று இரவு 8 மணி வரை 15 ஆயிரத்து 945 வாகனங்கள் வெவ்வேறு தேதிகளில் கொடைக்கானலுக்கு வருவதற்காக விண்ணப்பிக்கப்பட்டது. அந்த வாகனங்கள் அனைத்துக்கும் இ-பாஸ் வழங்கப்பட்டது. இதன்மூலம் 3 லட்சத்து 61 ஆயிரத்து 919 பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தர உள்ளனர். இதில் கொடைக்கானலுக்கு இன்று மட்டும் வருவதற்கு 3 ஆயிரத்து 792 வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டு உள்ளது. அதன்மூலம் 28 ஆயிரத்து 168 சுற்றுலா பயணிகள் வருகை தர இருக்கின்றனர்.

    இந்நிலையில், கொடைக்கானலுக்கு வரும் வெளிமாநில மற்றும் வெளி மாவட்ட வாகனங்கள் இ-பாஸ் பெற்று வர வேண்டும் என்ற நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. வாகனங்கள் அனைத்தும் கடும் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சுற்றுலாப்பயணிகள் வடுகையால் கடும் போக்குவரத்து நெரிசல்.
    • அரசு பஸ்களில் வருபவர்களுக்கு இ-பாஸ் அவசியம் இல்லை.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் கோடை வாசஸ்தலங்களாக உள்ள ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு கோடை காலத்தில் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்துமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

    அதன்படி கொடைக்கானலுக்கு வரும் வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட சுற்றுலா பயணிகள் நாளை (7-ந் தேதி) முதல் ஜூன் 30-ந் தேதி வரை இ-பாஸ் பதிவு செய்து வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான நடைமுறையையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கொடைக்கானலுக்கு வருகை தரும் அரசு பஸ்களில் விபரங்கள் மற்றும் அதில் பயணிப்பவர்களின் விபரங்கள் நேரடியாக போக்குவரத்து துறை மேலாண்மை இயக்குனரிடமிருந்து பெற்றுக்கொள்ள மாவட்ட நிர்வாகத்தால் திட்டமிடப்பட்டுள்ளது.

    எனவே அரசு பஸ்களில் பயணிக்கும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

    கொடைக்கானலுக்கு வருகை தர உள்ள சுற்றுலா பயணிகள் இன்று காலை முதல் விபரங்களை பதிவு செய்து இ-பாஸ் பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டது. 3 வகையான அடையாள கோடுகளுடன் இ-பாஸ் வழங்கும் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது.

    உள்ளூர் பகுதி பொதுமக்களுக்கு பச்சை நிற அடையாள கோடும், வேளாண் விளை பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள், அடிப்படை தேவை மற்றும் சரக்கு வாகனங்களுக்கு நீல நிற அடையாள கோடு, சுற்றுலா மற்றும் வர்த்தக ரீதியான வாகனங்களுக்கு ஊதா நிற அடையாள கோட்டுடனும் இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.

    கொடைக்கானல், வெள்ளி நீர்வீழ்ச்சி, சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்ட உள்ளூர் வாகனங்களுக்கு நாளை முதல் ஜூன் 30-ந் தேதி வரை ஒரு முறை மட்டும் விண்ணப்பித்து உள்ளூர் இ-பாஸ் பெற்றுக் கொண்டால் போதுமானது.

    சுங்க கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ள வாகனங்களுக்கு தங்கள் வாகனத்தின் அசல் பதிவுச்சான்று, காப்புச்சான்று, நடப்பில் உள்ள புகைச்சான்று ஆகியவற்றுடன் வத்தலக்குண்டு வட்டார போக்குவரத்து அலுவலகம் அல்லது வெள்ளி நீர்வீழ்ச்சி சுங்கச்சாவடி அருகில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு சேவை மையத்தில் பதிவு செய்து இ-பாஸ் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    கொடைக்கானல் வரும் அனைத்து வாகனங்களும் வெள்ளி நீர்வீழ்ச்சி சுங்கச்சாவடிகளில் இ-பாஸ் சோதனை மேற்கொண்ட பின்னரே கொடைக்கானலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

    சுங்கச்சாவடியில் பணிபுரியும் பணியாளர்கள் தங்கள் செல்போன் செயலி மூலம் கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்து அந்த சுற்றுலா பயணிகளின் பயண விபரங்களை தெரிந்து கொள்வார்கள்.

    இ-பாஸ் தொடர்பான துரித சேவைகளுக்கு வெள்ளி நீர்வீழ்ச்சி சுங்கச்சாவடி அருகில் நகராட்சி அலுவலர்கள், போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து துறை அலுவலர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

    • படிப்பாதை, யானைப்பாதை, மின்இழுவை ரெயில் நிலையம், ரோப்கார் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
    • முகூர்த்த தினத்தையொட்டி பல்வேறு விஷேசங்கள் நடைபெற்றதால் திருமண மண்டபங்களிலும் கூட்டம் அலைமோதியது.

    பழனி:

    தமிழ் கடவுள் முருகனின் 3ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். வருடம் முழுவதும் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும் பழனியில் தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் உள்ளிட்டவை பிரசித்தி பெற்றவையாகும்.

    இதில் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். கேரளாவில் இருந்து அதிக அளவு பக்தர்கள் வந்திருந்தனர். மேலும் இன்று முகூர்த்த தினம் என்பதால் அடிவாரம், கிரிவீதி, பஸ்நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.

    மேலும் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை போலீசார் சீரமைத்தனர். படிப்பாதை, யானைப்பாதை, மின்இழுவை ரெயில் நிலையம், ரோப்கார் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தபோதும் மலைக்கோவிலில் நீண்டநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    பக்தர்கள் வசதிக்காக மலைக்கோவிலில் மேட் விரிக்கப்பட்டிருந்தது. மேலும் அதில் தண்ணீர் தெளிக்கப்பட்டிருந்ததால் வெப்பத்தின் தாக்கம் ஓரளவு குறைந்தது. இதனால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய எளிதாக இருந்தது. மேலும் பஸ்நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. முகூர்த்த தினத்தையொட்டி பல்வேறு விஷேசங்கள் நடைபெற்றதால் திருமண மண்டபங்களிலும் கூட்டம் அலைமோதியது.

    ×