search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பழனியில் நடைபெறும் உலக முருக பக்தர்கள் மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம்
    X

    பழனியில் நடைபெறும் உலக முருக பக்தர்கள் மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம்

    • உலக முத்தமிழ் முருகப் பக்தர்கள் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
    • உலகம் முழுவதும் முருகன் கோவில்களை நிர்மாணித்துள்ள அறங்காவலர்கள் அழைக்கப்படுவார்கள்.

    பழனி:

    பழனியில் உலக முருகபக்தர்கள் மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலைக்கல்லூரியில் இன்று நடைபெற்றது.

    இதற்காக தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று அதிகாலை பழனிக்கு வந்தார். அவர் ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்று கால பூஜையில் பங்கேற்று தண்டாயுதபாணி சுவாமியை வழிபட்டார்.

    அவருக்கு கோவில் சார்பில் இணை ஆணையர் மாரிமுத்து பிரசாதங்களை வழங்கினார். அதனைத் தொடர்ந்து கோவிலில் தயாரிக்கப்பட்டு வரும் பஞ்சாமிர்தம், விற்பனைக்கான ஏற்பாடுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க சென்ற அமைச்சர் சேகர்பாபு தெரிவிக்கையில்,

    திராவிட மாடல் ஆட்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள உயர்மட்டக் குழுக் கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் நடந்தது. இந்த கூட்டத்தில் அறநிலையத் துறைக்கான 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஒரு தீர்மானம் தமிழ்க் கடவுளான முருகப் பக்தர்கள் மாநாடு நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி உலக முத்தமிழ் முருகப் பக்தர்கள் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த மாநாடு ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் பழனியில் நடைபெறும்.

    2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டுக்கு உலகம் முழுவதும் முருகன் கோவில்களை நிர்மாணித்துள்ள அறங்காவலர்கள் அழைக்கப்படுவார்கள். எப்படியும் 500-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் அழைக்கப்படுவார்கள்.

    வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு உணவு, தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும். உள்ளூர் போக்குவரத்தும் இலவசமாக வழங்கப்படும்.

    2 நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டில் முருகனை பற்றிய ஆய்வுகள், முருகனின் புகழ் பரப்பும் கருத்தரங்கங்கள், சொற்பொழிவுகள், இடம்பெறும்.

    மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மாநாடு நடைபெறும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

    இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் ரூ.98 கோடி மதிப்பீட்டில் அழகு தமிழால் நடத்தப்பட்டது.

    அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் அறநிலையத்துறை நிதி ரூ.100 கோடி மற்றும் தனியார் பங்களிப்பு ரூ.200 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடக்கிறது.

    இதே போல் திருத்தணி, திருப்பரங்குன்றம் கோவில்களிலும் திருப்பணிகள் நடக்கிறது.

    26 ராமர் கோவில்களில் கும்பாபிஷேகங்கள் நடத்தப்பட்டுள்ளது. திராவிட மாடல் ஆட்சி மதத்துக்கு எதிரானதல்ல. கடவுளை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கோவில்கள் தூய்மையாகவும், சிறப்பாகவும் பராமரிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×