search icon
என் மலர்tooltip icon

    கரூர்

    • 7291 ஏக்கர் அந்த வகையில் நடப்பு ஆண்டில் 7,291 ஏக்கர் நிலப்பரப்பில் 9 ஆயிரம் விவசாயிகள் முருங்கை சாகுபடி செய்தனர்.
    • மகாத்மா காந்தி 100 நாள் வேலைத்திட்டத்தை பெரும்பாலான கூலித் தொழிலாளர்கள் விரும்புகிறார்கள்.

    கரூர்:

    தமிழகத்தில் முருங்கை சாகுபடியில் கரூர் மாவட்டம் புகழ்பெற்று விளங்குகிறது. இங்குள்ள பருவநிலை மற்றும் மண்ணின் தன்மை முருங்கைக்கு உகந்ததாக உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் முருங்கைக்காய் ருசியாகவும், சதை பிடிப்பு அதிகமாகவும் இருக்கும்.

    இந்த முருங்கைக்காய்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    இங்கு அரவக்குறிச்சி, மூலனூர், சின்னதாராபுரம், பள்ளப்பட்டி, க. பரமத்தி ஆகிய பகுதிகளில் அதிகம் முருங்கை சாகுபடி செய்யப்படுகிறது. ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 6 மாதங்கள் முருங்கைக்காய்கள் அறுவடை செய்ய இயலும் என்பதால் விவசாயிகளும் முருங்கை சாகுபடி செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    7291 ஏக்கர் அந்த வகையில் நடப்பு ஆண்டில் 7,291 ஏக்கர் நிலப்பரப்பில் 9 ஆயிரம் விவசாயிகள் முருங்கை சாகுபடி செய்தனர். வறட்சியை தாங்கும் பயிராக கருதப்படும் முருங்கைக்காய் கூட கடந்த இரண்டு மாதங்களாக மழை பெய்யாததாலும், வரலாறு காணாத வெப்பத்தாலும் விளைச்சல் பாதியாக குறைந்துள்ளது. இது விவசாயிகளை கவலையடைய செய்துள்ளது.

    இதுபற்றி அரவக்குறிச்சி ஈசநத்தம் பகுதியைச் சேர்ந்த முருங்கை விவசாயி செல்வராஜ் கூறும்போது, நான் 2 ஏக்கர் நிலத்தில் முருங்கை பயிரிட்டேன். வழக்கமாக மார்ச் முதல் ஜூன் வரையிலும் அக்டோபர் முதல் நவம்பர் வரையிலும் நல்ல மகசூல் கிடைக்கும். ஆனால் இந்த முறை மழை இல்லாத காரணத்தினால் விளைச்சல் 70 சதவீதம் சரிந்து விட்டது. ஒரு சில மரங்கள் ஓரளவு மகசூல் கொடுத்தாலும் தரம் குறைந்து விட்டதால் விலை கிடைக்கவில்லை என்றார்.

    கரூர் லிங்கம நாயக்கன்பட்டியை சேர்ந்த விவசாயி பாலசுப்ரமணியன் கூறும்போது, அமராவதி மற்றும் குடகனாறு தண்ணீரை நம்பி நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம். ஆனால் இந்த இரண்டு ஆறுகளும் இந்த ஆண்டு வறண்டு விட்டன.

    எனவே நிலத்தடி நீரை பயன்படுத்தி பயிர்களுக்கு நீர் பாசனம் செய்து முயற்சி செய்து பார்த்தோம். ஆனால் மரங்களை பாதுகாக்க முடியவில்லை. இந்த முறை எல்லா மரங்களும் பலன் தரவில்லை. பொதுவாக நல்ல மகசூல் காலத்தில் ஒரு ஏக்கருக்கு ஒன்றரை டன் முருங்கை கிடைக்கும். ஆனால் தற்போது கோடை வெப்பத்தால் 60 சதவீத இழப்பை சந்தித்துள்ளோம்.

    ஒரு பருவத்தில் ஒரு மரத்திலிருந்து 300 முதல் 400 வரை முருங்கைக்காய் கிடைக்கும். சுவை மற்றும் சதைப்பற்று அடிப்படையில் விலை கிடைக்கும். ஆனால் இப்போது சதைப் பற்று சுருங்கி விட்டது. இதனால் விலையும் குறைந்து விட்டது. மகாத்மா காந்தி 100 நாள் வேலைத்திட்டத்தை பெரும்பாலான கூலித் தொழிலாளர்கள் விரும்புகிறார்கள்.

    இதனால் வேலை ஆட்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதே போன்று மயில் மற்றும் பூச்சிகளின் தாக்கமும் அதிகம் உள்ளது. வெப்ப காலங்களைத் தவிர விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துவதற்கு இவையும் ஒரு காரணமாக உள்ளது என்றார்.

    அரவக்குறிச்சி மொத்த முருங்கை விற்பனை வியாபாரி கே.ஆர்.கே.குப்புசாமி கூறும்போது, இந்த ஆண்டு விளைச்சல் குறைந்ததால் சந்தைக்கு முருங்கைக்காய் வரத்து மிகவும் மோசமாக உள்ளது. அரவக்குறிச்சியில் இருந்து கேரளா, சத்தீஸ்கர், ஐதராபாத், பெங்களூரு போன்ற இடங்களுக்கு இந்த சீசனில் மார்ச் முதல் ஜூன் வரை நாங்கள் முருங்கைக்காய் கொண்டு செல்வோம். இருப்பினும் குறைந்த அளவு கிடைப்பதால் எங்களால் வணிகத்தை வழக்கம்போல் நடத்த முடியவில்லை.

    பொதுவாக சந்தைகளுக்கு ஒரு நாள் 300 டன் முருங்கை வரும். ஆனால் இந்த ஆண்டு 150 முதல் 200 டன்னாக குறைந்துள்ளது என்றார்.

    வேளாண் வணிகம் மற்றும் சந்தைப்படுத்துதல் துறையின் அதிகாரி ஆர்.கண்ணன் கூறும்போது, பருவநிலை மாற்றத்தால் இந்த ஆண்டு விவசாயிகளுக்கு 70 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்ப ட்டுள்ளது. அரவக்குறிச்சி பகுதியில் முருங்கை பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க வேண்டும் என விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இப்போது ரூ. 4 கோடி செலவில் முருங்கை பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    கிட்டத்தட்ட இந்த பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. மகசூல் அதிகமாகும்போது பச்சை முருங்கைக்காய்க்கு குறைந்த விலை கிடைப்பதால், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக உற்பத்தி செய்வதற்கான விருப்பங்களை ஆராய விவசாயிகளை ஊக்குவித்து வருகின்றோம் என்றார்.

    • பள்ளி விடுமுறை காலம் என்பதால் 3 பேரும் ஜாலியாக ஊரை சுற்றி விளையாடி வந்துள்ளனர்.
    • 3 சிறுவர்கள் கிணற்றில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கரூர்:

    கரூர் ஆண்டாங் கோவில் புதூர் கீழ்பாகம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரின் மகன் அஸ்வின்(வயது 12). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர். அவரது மகன் ஸ்ரீவிஷ்ணு (14). இவர் அரசு பள்ளியில் 8- ம் வகுப்பு பயின்று வந்தார்.

    ஆண்டாங் கோவில் கிழக்கு பகுதி செல்வன் நகரை சேர்ந்தவர் இளங்கோவன் இவரது மகன் மாரி முத்து (13). இந்த மாணவர்கள் 3 பேரும் நண்பர்கள்.

    பள்ளி விடுமுறை காலம் என்பதால் 3 பேரும் ஜாலியாக ஊரை சுற்றி விளையாடி வந்துள்ளனர். வழக்கம் போல நேற்று மாலை தங்கள் பெற்றோர்களிடம் விளையாட செல்கிறோம் என்று கூறி விட்டு வெளியே சென்றுள்ளனர்.

    ஆனால் இரவு வெகு நேரம் ஆகியும் அந்த மாணவர்கள் வீடு திரும்பவில்லை. அதை தொடர்ந்து பெற்றோர்கள் அவர்களை தேட தொடங்கினர்.

    பல்வேறு இடங்களில் தேடி அலைந்த போது இரவு 11 மணியளவில் அப்பகுதியில் உள்ள ரவிச்சந்திரன் என்பருக்கு சொந்தமான இடத்தில் சிறுவர்கள் 3 பேரின் செருப்பு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    செருப்பு கிடந்த இடத்திற்கு அருகே கிணறு ஒன்றும் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த சிறுவர்களின் உறவினர்கள் கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

    நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் பிரத்யேக டார்ச் லைட் அடித்து பார்த்தனர். ஆனால் அங்கு ஏதும் தென்படவில்லை.

    பின்னர் அந்த நள்ளிரவிலும் கயிற்றின் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி, நீரில் மூழ்கி தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு முழுவதும் தேடும் பணி நடைபெற்றது.

    இந்நிலையில் கிணற்றின் ஆழப்பகுதியில் சிறுவர்களின் உடல் தட்டுப்பட்டது, இதன் பின்னர் மேலும் சில வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி சிறுவர்களின் உடல்களை இறந்த நிலையில் ஒன்றன் பின் ஒன்றாக மீட்டனர். சிறுவர்களின் உடல்களை கண்டு பெற்றோர்கள் கதறி துடித்தனர்.

    இது குறித்து கரூர் டவுன் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையிலான போலீசார் சிறுவர்களின் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் இந்த சிறுவர்கள் குளிக்கும் போது அஸ்வின் என்ற சிறுவனுக்கு நீச்சல் தெரியாத நிலையில் அவர் மூழ்க, நண்பனை காப்பாற்றும் முயற்சியில் மற்ற 2 சிறுவர்களும் இறங்கி இருக்கலாம். இதில் 3 பேரும் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என கூறினர்.

    உடல்களை கரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

    3 சிறுவர்கள் கிணற்றில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • இளம் வாலிபர்களும், பெண்களும் வெள்ளை எருமையுடன் செல்பி எடுத்து அதனை வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
    • வெளிநாடுகளில் உள்ள கலப்பின மாடுகளில் இருந்து பெறப்பட்ட விந்தணு கலந்து வந்திருக்கலாம்.

    வேலாயுதம்பாளையம்:

    கரூர் மாவட்டம் நொய்யல் அருகே சேமங்கி பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (55). விவசாயியான இவர் மாடுகள் வளர்த்து வருகிறார். இவர் வளர்த்து வந்த எருமை மாடு ஒன்று சினை பிடிக்காததால், கால்நடை மருத்துவரை அணுகி, சினை ஊசி போட்டுள்ளார். இதன் காரணமாக எருமை மாடு சினையானது. உரிய நாட்களுக்கு பின்னர் அந்த எருமை, கன்று ஒன்றை ஈன்றுள்ளது. எருமை ஈன்ற கன்றை பார்த்த முருகேசன் ஆச்சரியம் அடைந்துள்ளார். காரணம் அந்த கன்று வெள்ளை நிறத்தில் இருந்துள்ளது. இதன் காரணமாக அந்த கன்றை மிகவும் கவனமாக அவர் வளர்த்து வருகிறார்.

    இந்நிலையில் வெள்ளை எருமை மாட்டை பார்ப்பதற்கு நாள்தோறும் அப்பகுதி மக்கள் விவசாயினுடைய வீட்டிற்கு வந்து செல்கின்றனர். இதனால் முருகேசன் வீட்டில் எப்போதும் பொருட்காட்சி நடப்பதை போல கூட்டம் இருந்து கொண்டே இருக்கிறது. இளம் வாலிபர்களும், பெண்களும் வெள்ளை எருமையுடன் செல்பி எடுத்து அதனை வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

    இது குறித்து கால்நடை வளர்ப்பில் அனுபவம் வாய்ந்த முதியவர் ஒருவர் கூறும்போது:-

    சினை பிடிப்பதற்காக போடப்படும் ஊசி வெளிநாடுகளில் இருந்து வருகிறது. அவ்வாறு வந்த ஊசியில், வெளிநாடுகளில் உள்ள கலப்பின மாடுகளில் இருந்து பெறப்பட்ட விந்தணு கலந்து வந்திருக்கலாம். எனவே எருமை வெள்ளையாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மருத்துவரீதியாக இதற்கான காரணம் மெலனின் என்று சொல்லப்படுகிறது. உடம்பில் மெலனின் சுரக்காதபோது இவ்வாறு வெண்மை நிறம் ஏற்படுவதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்களால் சொல்லப்படுகிறது. இப்படிப் பிறக்கும் விலங்குகளை அல்ஃபினோ வகை விலங்குகள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 10 ஆயிரத்து ஓர் உயிரினம் இப்படிப் பிறப்பதாக அவர்களின் ஆய்வில் தெரியவந்துள்ளது. 

    • வெப்ப அலை வீசுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
    • கரூர் மாவட்டத்தில் வெறும் 4 சதவிகிதம் தான் காடுகளின் அளவு உள்ளது.

    கரூர்:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. தினமும் வெயில் சதம் அடித்து வருவதால் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    அதிலும் குறிப்பாக கரூர் மாவட்டத்தில் அதிக பட்சமாக நேற்று முன்தினம் 113 டிகிரி பதிவானது. நேற்று 112 டிகிரி வெப்ப நிலை பதிவாகியுள்ளது. கரூர் பரமத்தியில் கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெயில் பதிவாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது, கரூர் பரமத்தியில் ஒவ்வொரு ஆண்டும் வெப்பம் அதிகரிப்பதற்கு நிலப்பரப்பின் தன்மையே காரணம் என்கின்றனர் அறிவியலாளர்கள். இந்த பகுதியில் சூரிய கதிர்கள் செங்குத்தாக விழுகின்றன.

    வரலாறு காணாத வெயில் பதிவினால் கரூர் மாவட்ட மக்கள் கடும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். க.பரமத்தி பகுதிக்குட்பட்ட தென்னிலை, பவித்ரம், சின்ன தாராபுரம், அரவக்குறிச்சி உள்ளிட்ட பகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமப் பகுதியில் விவசாயம் சார்ந்த ஆடு, மாடு வளர்ப்பு தொழில் செய்து வருகின்றனர். வெப்பம் அதிகரித்து காணப்படுவதால் விவசாயிகள், ஆடு மாடு தொழில் செய்பவர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அங்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், பொதுமக்களின் நடமாட்டம் வெளியே குறைந்து உள்ளது. மேலும், கிராமப்புற சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன. மதிய நேரங்களில் அனல் காற்று வீசுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

    கொளுத்தும் வெயிலால் சாலைகளில் கானல் நீர் மற்றும் வெப்ப அலை வீசுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வெயிலில் இருந்து தற்காத்து கொள்ள பொதுமக்கள் சாலைகளில் குடைபிடித்தப்படி செல்கின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களில் சென்றவர்கள் முகத்தை துணியால் சுற்றிக் கொண்டு செல்கின்றனர்.

    பொதுவாக கோடை காலங்களில் வேலூர் மாவட்டத்தில்தான் அதிகம் வெப்பம் பதிவாகும். ஆனால், கடந்த சில வருடங்களாக கரூர் மாவட்டத்தில் உள்ள க.பரமத்தி பகுதிதான் அதிகம் வெயில் அடிக்கும் பகுதியாக மாறியுள்ளது. அதற்கு காரணம், இங்கு மரங்கள் குறைவாக உள்ளதும், மழையை அதிகம் ஈர்க்காத சுண்ணாம்பு மண் நிறைந்த பகுதி என்பதும் தான். பொதுவாக நல்ல இயற்கை சூழல் இருக்க வேண்டும் என்றால், ஒரு மாவட்டத்தில் 32 சதவிகிதம் காடுகள் இருக்க வேண்டும்.

    ஆனால், கரூர் மாவட்டத்தில் வெறும் 4 சதவிகிதம் தான் காடுகளின் அளவு உள்ளது. இதனால், வெப்பம் கடுமையாக இருக்கிறது. அதேபோல், க.பரமத்தி பகுதியில் அதிக வெயில் அடிக்க காரணம் இங்கு இயங்கி வரும் 300-க்கும் மேற்வட்ட கல்குவாரிகள் தான். இங்கு அதிகம் மரங்கள் வளர்க்க வேண்டும். கல்குவாரிகளை கட்டுப்படுத்த வேண்டும். அப்போதுதான் வருங் காலங்களில் இங்கு வெயில் தணியும். இல்லையென்றால், க.பரமத்தி பகுதியே மனிதர்களே வசிக்க முடியாத அளவுக்கு பாலை வனமாக மாறிவிடும் அபாயம் இருக்கிறது.


    காவிர் பாயும் மாவட்டத்தில் உள்ள க.பரமத்திக்கு அரசு கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் என்கின்றனர் மக்கள். இந்தப் பகுதி மக்கள் அதிகம் வெயிலிலிருந்து தங்களை காத்துக்கொள்ள வீட்டில் இருப்பது நல்லது. அல்லது குடை போன்ற தற்காப்பு பொருள்களை பயன் படுத்துவது சிறந்தது. முதியவர்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். தேவையான தண்ணீரை அனைத்து மக்களும் அருந்த வேண்டும்" என்று அறிவுரை வழங்கியுள்ளனர்.

    இது தொடர்பாக கரூர் மாவட்ட அறிவியல் இயக்க தலைவர் ஜான் பாஷா கூறியதாவது:-கடந்தாண்டு இதே காலகட்டத்தில் அதிகபட்சமாக 90 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை மட்டுமே பதிவானது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய பின்னரே 100 டிகிரி தாண்டியது. மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள வானிலை ஆராய்ச்சி மையம் கரூரில் பரமத்தி பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.

    பூமியின் அட்சரேகையில் நேரடியாக பரமத்தி பகுதி வருவதால் அங்கு வானிலை ஆராய்ச்சி மையம் நிறுவப்பட்டுள்ளது. பொதுவாக பரமத்தி பகுதியில் அதிகபட்ச வெயில் பதிவாகி வருவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

    குறிப்பாக இங்கு பவர் கிரேட் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மட்டுமல்லாமல் சுற்றுவட்டார பகுதிகளிலும் மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. கல் குவாரிகள் இந்த பகுதியில் இயங்கி வருகிறது. இந்த குவாரி இருக்கும் பகுதிகளிலும் மரங்கள் இல்லை.

    இது போன்ற காரணங்களால் பரமத்தி பகுதியில் அதிகபட்ச வெயில் பதிவாகி வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கும் போது 120 டிகிரியை தாண்டிவிடுமோ என்ற அச்சம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

    அந்த அளவுக்கு உயர வாய்ப்பில்லை. 120 டிகிரியை தாண்டிவிட்டால் பொதுமக்கள் வெளியே நடமாட முடியாது. அதையும் மீறி வெளியே சென்றால் பக்கவாதம், மாரடைப்பு மயக்கம் போன்றவை ஏற்படும்.

    குழந்தைகளுக்கு அம்மை மற்றும் காசநோய் வர வாய்ப்புள்ளது. அவ்வாறான சூழல் இப்போதைக்கு ஏற்பட வாய்ப்பு இல்லை. சுற்றுச்சூழலை பாதுகாக்க தவறினால் 2040 காலகட்டத்தில் 120 டிகிரியை தாண்டிய வெப்பநிலையை சந்திக்க நேரிடும் என்றார்.

    இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கரூர் பரமத்தி பகுதிக்கு பிரத்யேக திட்டம் தயாரித்து அதிகளவில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க நட வடிக்கை எடுக்க வேண்டும். திரும்பும் திசையெல்லாம் மரங்கள் நடப்பட்டால் நிச்சயமாக வரும் காலங்களில் வெயில் அதிகரிப்பை கட்டுப் படுத்தலாம் என்றனர்.

    • போலீசார் ரமேஷ் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
    • ஆத்திரமடைந்த ரமேஷ், ஆல்வினை சரமாரியாக அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.

    கரூர்:

    கரூர் மாவட்ட கடவூர் தே.மு.தி.க தெற்கு ஒன்றிய செயலாளராக இருப்பவர் ஆல்வின் (வயது47) முன்னாள் கவுன்சிலரான இவர் நேற்றுமுன் தினம் பாலவிடுதி காவல் நிலையம் அருகே தனது கட்சி நிர்வாகிகளுடன் பேசிக் கொண்டு இருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த கூட்டணி கட்சியான அ.தி.மு.கவை சேர்ந்த மணிகண்டன், ஆல்வினிடம் பேச்சு கொடுத்துள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    அப்போது அங்கு வந்த அ.தி.மு.க கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான ரமேஷிடம் ஆல்வின் கருத்து மோதலில் ஈடுப்பட்டார். இதில் ஆத்திரமடைந்த ரமேஷ், ஆல்வினை சரமாரியாக அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த ஆல்வின், கரூர் அரசு தலைமை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    இது தொடர்பாக ஆல்வின் அளித்த புகாரின் பேரில் பாலவிடுதி போலீசார் ரமேஷ் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    இதுகுறித்து தே.மு.தி.க ஒன்றிய செயலாள் ஆல்வின் கூறுகையில், கொலை வெறி தாக்குதல் நடத்திய அ.தி.மு.க கவுன்சிலர் ரமேஷை போலீசார் கைது செய்ய வேண்டும். அ.தி.மு.க கவுன்சிலர் ரமேஷை போலீசார் கைது செய்ய வேண்டும். அ.தி.மு.கவினர் கூட்டணி கட்சியனர் என்றும் பாராமல் தேர்தல் முடிந்ததும் தங்கள் வேலையை காட்டி உள்ளனர்.

    இதற்கு அ.தி.மு.க தலைமை பதில் செல்லியே ஆக வேண்டும் என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்த முழு தேர்தலை மிக மிக நேர்மையாக நடத்தி இருக்கிறேன்.
    • பணத்தை வைத்து கோவை மக்களை தமிழ்நாடு முழுவதுமே வாங்கி விடலாம் என்று திமுக மற்றும் வேறு வேறு கட்சிகள் நினைக்கிறார்கள்.

    கரூர்:

    இந்தியாவில் 18-வது பாராளுமன்ற தேர்தல் இன்று தொடங்கி ஜூன் மாதம் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

    இந்நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் உள்ள வாக்குச்சாவடியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது வாக்கை பதிவு செய்தார்.

    வாக்களித்த பின் கோவை தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலையிடம், செய்தியாளர்கள் GPay மூலம் பணப்பட்டுவாடா செய்ததாக திமுக அளித்துள்ள புகார் குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:

    இந்த முழு தேர்தலை மிக மிக நேர்மையாக நடத்தி இருக்கிறேன்.

    திமுக-வை பொறுத்தவரை பணத்தை வைத்து கோவையை வென்றுவிடலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

    கோவையில் பாஜக கட்சியில் இருந்து யாருக்கேனும் பணம் கொடுத்துள்ளதாக சொன்னார்கள் என்றால் அந்த நிமிடம் அரசியலை விட்டு விலகி விடுகிறேன்.

    இது தர்மத்தின் போராட்டம், நியாயத்தின் போராட்டம். களத்தில் நின்று கொண்டிருக்கிறேன். எல்லோரையும் எதிர்த்து நின்று கொண்டிருக்கிறேன்.

    பணத்தை வைத்து கோவை மக்களை தமிழ்நாடு முழுவதுமே வாங்கி விடலாம் என்று திமுக மற்றும் வேறு வேறு கட்சிகள் நினைக்கிறார்கள். இந்த தேர்தலை முழு நேர்மையாக வெளிப்படையாக அறம் சார்ந்து நடத்தி இருக்கிறோம்.

    ஆனால் அதற்கு கோவை மக்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள். கரூரிலும் பதிலடி கொடுப்பார்கள் என்று கூறினார்.

    • மோடியின் சிறப்பான ஆட்சியால் இந்தியா, முதல் பணக்கார நாடாக மாறும் எனவும் அவர் தெரிவித்தார்.
    • மோடிக்கு எதிராக பிரதமர் பதவிக்கு போட்டியிட இந்தியா கூட்டணியில் யாருமே இல்லை.

    கரூர் மாவட்டம் பஞ்சப்பட்டி பகுதியில் பரப்புரை மேற்கொண்ட டாக்டர் பாரிவேந்தர், பஞ்சப்பட்டி ஏரிக்கு காவிரி நீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

    பஞ்சப்பட்டி பகுதியில் பிரசாரம் செய்த பெரம்பலூர் தொகுதி ஐ.ஜே.கே. வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தரை தொண்டர்கள் மாலை அணிவித்து வரவேற்றனர். அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் அவர் பேசினார். அப்போது, குடும்ப ஆட்சி அகற்ற வேண்டும் எனவும், ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தான் எம்.பி ஆனால் பஞ்சப்பட்டி ஏரிக்கு காவிரி நீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். அதனைத் தொடர்ந்து வேங்காம்பட்டி கிராமத்தில் டாக்டர் பாரிவேந்தர் ஆதரவு திரட்டினார்.

    அப்போது எம்.பி தொகுதி நிதி 17 கோடி ரூபாயை பெரம்பலூர் தொகுதிக்கு, தேவையான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு முழுமையாக செலவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். வாக்குறுதியின்படி ஆயிரத்து 1200 பேரை பட்டதாரிகளாக மாற்றியுள்ளதாக அவர் கூறினார். மோடியின் சிறப்பான ஆட்சியால் இந்தியா, முதல் பணக்கார நாடாக மாறும் எனவும் அவர் தெரிவித்தார். நல்லவர்களை MPயாக அனுப்புங்கள், ஊழல் வாதிகளை தேர்ந்தெடுக்கக்கூடாது என அவர் கேட்டுக் கொண்டார். உங்கள் தேவைகளை நிறைவேற்ற நல்லவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார். தொடர்ந்து புனவாசிப்பட்டி பகுதியில் ஆதரவு திரட்டிய டாக்டர் பாரிவேந்தருக்கு திரளான பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது 5 ஆண்டுகளில், தான் செய்த பணிகளை புத்தகமாக வழங்கி உள்ளதாக குறிப்பிட்டார். உங்களின் தேவைகள் அனைத்தையும் கேட்டறிந்து முழுமையாக நிறைவேற்றி உள்ளதாக அவர் கூறினார். புண்ணியம், கருணை, உதவி என்ற நோக்கத்திற்காக ஆயிரத்து 200 மாணவர்களை பட்டதாரியாக்கியதாக பெருமிதம் தெரிவித்தார்.

    மோடிக்கு எதிராக பிரதமர் பதவிக்கு போட்டியிட இந்தியா கூட்டணியில் யாருமே இல்லை என குறிப்பிட்டார். இந்தியா முழுவதும் ஊழல் செய்த கட்சி என்றால் திமுகவை தான் அழைக்கிறார்கள் என விமர்சித்தார். பேருந்த வசதி, கால்நடை மருத்துவமனை, பள்ளி கட்டடம் உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என அவர் உறுதி அளித்தார்.

    லாலாப்பேட்டை பகுதியில் பிரசாரம் செய்த டாக்டர் பாரிவேந்தர், தன்னை வெற்றிபெறச் செய்தால் ஆயிரத்து 200 மாணவர்களுக்கான இலவச உயர்கல்வி திட்டம் தொடரும் என்றும், ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு இலவச உயர் சிகிச்சை வழங்கப்படும் எனவும் வாக்குறுதி அளித்தார். நாடு வளர்ச்சியடைய வேண்டும் என்பதற்காக மோடி இரவு பகலாக உழைப்பதாக அவர் குறிப்பிட்டார். மோடி நமக்கு கிடைத்திருப்பதற்கு, மிகப்பெரிய புண்ணியம் செய்திருப்பதாகவும் டாக்டர் பாரிவேந்தர் புகழாரம் சூட்டினார். 

    • பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பள்ளி கட்டிடங்கள், சமுதாயக்கூடங்கள், சாலைகள், வடிகால்கள், பேருந்து நிலையம் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் செய்துள்ளேன்.
    • பிரசாரத்தில் பாரிவேந்தரை வாக்காளர்கள் ஆரத்தி எடுத்து வெற்றி திலகமிட்டு வரவேற்றனர்.

    குளித்தலை:

    திருச்சி மாவட்டம் துறையூர் தொகுதி உப்பிலியபுரம் ஒன்றியம் சோபனாபுரத்தில் பெரம்பலூர் பாராளுமன்ற வேட்பாளர் பாரிவேந்தர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசும்போது,

    நான் கடந்த முறை இந்த தொகுதியில் ஜெயித்து எண்ணற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கி உள்ளேன். மேலும் எனது பல்கலைக்கழகம் மூலம் லால்குடி, மண்ணச்சநல்லூர், துறையூர், பெரம்பலூர், முசிறி, குளித்தலை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 1200 மாணவ- மாணவிகளுக்கு உயர்க்கல்வி எனது சொந்த செலவில் வழங்கி உள்ளேன். மேலும் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பள்ளி கட்டிடங்கள், சமுதாயக்கூடங்கள், சாலைகள், வடிகால்கள், பேருந்து நிலையம் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் செய்துள்ளேன்.

    இந்நிலையில், இம்முறை நான் உங்களின் பேராதரவோடு தேர்தலில் நிற்கிறேன். நான் வெற்றி பெற்றவுடன் 1500 குடும்பங்களுக்கு 10 லட்சம் மதிப்பில் உயர் மருத்துவம் சிகிச்சை பெறவும், தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் மீண்டும் வரும் ஆண்டுகளில் 1200 மாணவ- மாணவிகளுக்கு உயர்கல்வி பெற வழிவகை செய்வேன்.

    மேலும் அனைத்து ஏரி, குளங்கள் தூர்வாரவும், இன்னும் பேருந்து கூடுதல் வசதிகள் செய்து தருவேன். விவசாயிகளின் பிரச்சனைகளை கவனத்தில் எடுத்து அவர்களின் பிரச்சனையை தீர்க்கும் வகையில் பாடுபடுவேன் என பேசினார்.

    தொடர்ந்து பாதர்பேட்டை, வைரிசெட்டிபாளையம், பா.மேட்டூர், பச்சபெருமாள்பட்டி, அழகாபுரி, எரகுடி உள்ளிட்ட கிராமங்களில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். உடன் இந்திய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் ஜெயசீலன், முதன்மை செயலாளர் சத்தியநாதன், முதன்மை அமைப்பு செயலாளர் வெங்கடேசன், அன்புதுரை, துறையூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் சபா ராஜேந்திரன், பாஸ்கர், பார்த்திபன், செந்தில், ராஜ்குமார், தமிழரசி மற்றும் கூட்டணி கட்சிகள் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். பிரசாரத்தில் பாரிவேந்தரை வாக்காளர்கள் ஆரத்தி எடுத்து வெற்றி திலகமிட்டு வரவேற்றனர்.

    • தேர்தல் கண்காணிப்பாளர் வினோத்குமார் சென்ற அரசு வாகனத்தை வழிமறித்து தகராறு செய்ததாக தெரிகிறது.
    • 5 பேர் மீது அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல், ஆபாச வார்த்தைகளால் திட்டுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

    கரூர்:

    கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே உள்ள நெரூர் அரங்கநாதன்பேட்டையில் தேர்தல் கண்காணிப்பு அலுவலர் வினோத்குமார் தலைமையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நெரூர் அருகே உள்ள மறவாபாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் அ.தி.மு.க. தேர்தல் பிரசார வாகனங்களுக்கு பின்னால் கண்காணிப்பு குழுவினர் சென்றனர்.

    இந்த வேளையில் கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அ.தி.மு.க.வை சேர்ந்த ரமேஷ்குமார், மதுசூதணன், கார்த்திக், ஜெகன் மற்றும் பலர் தேர்தல் கண்காணிப்பாளர் வினோத்குமார் சென்ற அரசு வாகனத்தை வழிமறித்து தகராறு செய்ததாக தெரிகிறது.

    இது தொடர்பாக வாங்கல் காவல் நிலையத்தில் வினோத்குமார் புகார் செய்தார். அதன்பேரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 5 பேர் மீது அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல், ஆபாச வார்த்தைகளால் திட்டுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

    • நாகப்பட்டினத்தில் 9 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
    • காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் மற்றும் சுயேட்சைகள் உள்ளிட்ட 54 பேர் இறுதியாக களத்தில் உள்ளனர்.

    கரூர்:

    பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் தமிழகத்தில் கடந்த 20-ந் தேதி தொடங்கி 27-ந் தேதியுடன் நிறைவடைந்தது. 28-ந் தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. 29-ந் தேதி வேட்பு மனுக்கள் திரும்ப பெற கடைசி நாளாக இருந்தது. இதனையொட்டி நேற்று மாலை 3 மணிக்கு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

    அதன்படி தமிழகம் முழுவதும் 39 பாராளுமன்ற தொகுதிக்கு 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் அதிக வேட்பாளர் போட்டியிடும் தொகுதியாக கரூரும், மிக குறைந்த வாக்காளர்கள் போட்டியிடும் தொகுதியாக நாகப்பட்டினமும் உள்ளன.

    கரூரில் போட்டியிடுவதற்காக மொத்தம் 62 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். அதனையடுத்து வேட்பு மனு பரிசீலனையின்போது 6 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 56 பேர் களத்தில் இருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று வேட்பு மனு திரும்பப் பெறும் நாளில் 2 சுயேச்சை வேட்பாளர்கள் தங்களது மனுவை வாபஸ் பெற்றனர். இதையடுத்து, காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் மற்றும் சுயேட்சைகள் உள்ளிட்ட 54 பேர் இறுதியாக களத்தில் உள்ளனர்.

    இதனால் கரூர் தொகுதி தமிழகத்திலேயே அதிக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதி என்ற அந்தஸ்தை பெற்றுளது. வாக்குப்பதிவின் போது தமிழகத்தின் மற்ற பாராளுமன்ற தொகுதியை விட கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்கள் கரூர் தொகுதியில் பயன்படுத்தப்பட உள்ளது குறுப்பிடத்தக்கது.

    தமிழகத்திலேயே மிக குறைவாக நாகப்பட்டினத்தில் 9 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    • டெல்லியை நோக்கி போராடும் விவசாயிகளை தீவிரவாதிகள்போல் மோடி அரசு நடத்துகிறது.
    • கார்ப்பரேட் நிறுவனங்களின் ரூ.68 ஆயிரம் கோடி கடன்களை ரத்து செய்துள்ளது பா.ஜ.க. அரசு.

    கரூர்:

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இன்று அவர் கரூர் கிருஷ்ணராயபுரம் கடைவீதி, வெங்கமேடு அண்ணாசிலை அருகில், க.பரமத்தி கடை வீதி ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    பா.ஜ.க. ஆட்சியில் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டது. 100 நாள் வேலை திட்டத்தின் ஊதியத்தை வழங்காமல் ஒன்றிய பா.ஜ.க. அரசு ஏமாற்றியது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்த பின்னர் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.500ஆக குறைக்கப்படும்.

    பெட்ரோல், டீசல் விலையும் குறைக்கப்படும். டோல்கேட் அகற்றப்படும். இந்தியா கூட்டணி ஆட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் ஊதியம் ரூ.400 ஆக உயர்த்தப்படும். 100 நாள் வேலைத்திட்டம் 150 நாட்களாக அதிகரிக்கப்படும்.

    ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுக்கப்பதாக கூறி மோடி அரசு ஏமாற்றியுள்ளது. விவசாயிகள் கடன்கள், மாணவர்களின் கல்விக் கடன்களை ரத்து செய்ய மோடி அரசு மறுத்துள்ளது. டெல்லியை நோக்கி போராடும் விவசாயிகளை தீவிரவாதிகள்போல் மோடி அரசு நடத்துகிறது.

    கார்ப்பரேட் நிறுவனங்களின் ரூ.68 ஆயிரம் கோடி கடன்களை ரத்து செய்துள்ளது பா.ஜ.க. அரசு. பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பா.ஜ.க. எம்.பி.க்கள் 44 பேர் நாடாளுமன்றத்தில் உள்ளனர். தேர்தல் பத்திரங்கள் மூலம் இமாலய ஊழல் நடந்துள்ளது.

    மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகளை மிரட்டுகிறது. வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராக வேண்டும்

    இவ்வாறு அவர் பேசினார்.

    • அமைச்சர் கே.என்.நேரு இன்று காலை கொசூர் பகுதியில் இருந்து பிரசாரம் மேற்கொண்டார்.
    • எனக்கு மயக்கமாக வருகிறது என்று கூறி உடனடியாக பிரசாரத்தை நிறுத்திக் கொண்டார்.

    கரூர்:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து தேர்தல் பிரசாரத்திற்கு இன்னும் 21 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில், பெரம்பலூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட குளித்தலை சட்டமன்ற தொகுதிகளில் தி.மு.க. வேட்பாளர் அருண் நேருவுக்கு ஆதரவு கேட்டு அமைச்சர் கே.என்.நேரு தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இன்று (புதன்கிழமை) காலை கொசூர் பகுதியில் இருந்து பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. எனக்கு மயக்கமாக வருகிறது என்று கூறி உடனடியாக பிரசாரத்தை நிறுத்திக் கொண்டார்.

    பின்னர் அமைச்சர் கே.என்.நேரு, பிரசார வாகனத்திலிருந்து கீழே இறங்கி தனது காரில் ஏறி மருத்துவமனைக்கு சென்றார். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

    ×