என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் கேஎன் நேரு"

    • இந்த நான்கரை ஆண்டு காலங்களில் தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை நமக்கு வழங்கி இருக்கிறார்.
    • நம்முடைய 9 சட்டமன்ற தொகுதிகளிலும் சமச்சீரான வளர்ச்சியை முதலமைச்சர் வழங்கியிருக்கிறார்.

    திருச்சி:

    திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உறையூர் பகுதி பெருமாள் கோவில் 39-வது வார்டில் நடைபெற்ற 'என் வாக்குச் சாவடி வெற்றி வாக்குச்சாவடி' கூட்டம் தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-

    திருச்சி மாவட்டத்தில் கடந்த பத்தாண்டு காலத்தில் என்னென்ன பணிகள் விடுபட்டு போயிருந்ததோ, அந்தப் பணிகளையும் சேர்த்து இந்த நான்கரை ஆண்டு காலங்களில் தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை நமக்கு வழங்கி இருக்கிறார். குறிப்பாக நம்முடைய 9 சட்டமன்ற தொகுதிகளிலும் சமச்சீரான வளர்ச்சியை முதலமைச்சர் வழங்கியிருக்கிறார்.

    மத்திய அரசு வேண்டுமென்றே என் மீது வழக்கு தொடுத்து இருக்கிறது. நேருவை அடித்தால் இந்த பகுதியில் தி.மு.க.வை அழித்து விடலாம் என்ற உள்நோக்கத்தோடு அதற்கான பணியை செய்து கொண்டிருக்கிறார்கள். உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான் ஒரு தவறும் செய்யவில்லை, செய்ததும் இல்லை, செய்யப்போவதும் இல்லை என்ற உறுதியை உங்களுக்கு அளிக்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    சமீபத்தில் தமிழகத்தில் நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமனங்களில் ரூ.1,020 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாகவும், அது தொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி.க்கு அமலாக்கத்துறை பரிந்துரை கடிதம் அளித்திருந்தது. அதுதொடர்பாக அவர் கூறுகையில், மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை என்றும், பிரச்சனையை சட்டப்படி எதிர்கொள்வேன் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • வேலைக்கான ஒப்பந்தங்கள் உள்ளிட்ட டெண்டர்கள் மற்றும் ஒப்பந்தங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறப்பட்டு இருந்தது.
    • ஊழல் 1,020 கோடி ரூபாய் வரை நடந்திருக்கலாம் என்றும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது.

    தமிழக நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு 1,020 கோடி ரூபாய் வரை நகராட்சி துறையில் ஊழல் செய்திருப்பதாகக் குற்றம்சாட்டி வழக்குப்பதிவு செய்ய அமலாக்கத்துறை தமிழக தலைமை செயலாளர் மற்றும் டி.ஜி.பி.க்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தது.

    அமலாக்கத்துறையின் அக்கடிதத்தில், கே.என்.நேரு அமைச்சராக இருக்கும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் கட்டட நிர்மாணம், கழிப்பறைகள் அமைத்தல், அவுட்சோர்சிங், NABARD (வேளாண்மை வங்கி மற்றும் கிராம வளர்ச்சி வங்கி) திட்டங்கள், தூய்மைப்பணியாளர்கள் பணிக்கான அவுட்சோர்சிங் ஒப்பந்தங்கள், தூய்மைப் பணியாளர்கள் குடியிருப்புத் திட்டங்கள், நீர்/குளம் வேலைக்கான ஒப்பந்தங்கள் உள்ளிட்ட டெண்டர்கள் மற்றும் ஒப்பந்தங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறப்பட்டு இருந்தது.

    நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் டெண்டர்கள் மற்றும் ஒப்பந்தங்கள் முன்பே யாருக்குக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு, ஒவ்வொரு டெண்டர்களுக்கும் 7.5% முதல் 10% வரை லஞ்சமாக வசூலிக்கப்பட்டிருப்பதாகவும், இந்த ஊழல் 1,020 கோடி ரூபாய் வரை நடந்திருக்கலாம் என்றும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது.

    இந்நிலையில், நகராட்சி நிர்வாகத்துறை வேலைக்கு பணம் பெற்றதாக அமலாக்கத்துறை அனுப்பிய கடிதத்தின்படி அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அ.தி.மு.க. எம்.பி. இன்பதுரை கடிதம் அனுப்பி உள்ளார்.

    நகராட்சி நிர்வாகத்துறையில் ரூ.1,020 கோடி ஊழல் நடந்துள்ளதாக டி.ஜி.பி.க்கு அமலாக்கத்துறை அனுப்பி உள்ள கடிதத்தை சுட்டிக்காட்டி அவர் தெரிவித்துள்ளார்.

    அமலாக்கத்துறை கடிதத்தின் அடிப்படையில் அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிந்து செய்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் அ.தி.மு.க. எம்.பி. இன்பதுரை கோரிக்கை விடுத்துள்ளார்.

    • தி.மு.க. நிர்வாகிகளிடம் விடை பெற்றுக் கொண்டு, காரையும் எஸ்கார்டு வண்டியையும் தில்லை நகர் வீட்டுக்கு புறப்பட கூறிவிட்டு விறுவிறுவென நடக்க தொடங்கினார்.
    • அமைச்சரை அடையாளம் கண்டுகொண்ட மக்கள் அவருக்கு வணக்கம் தெரிவிக்க அவரும் புன்னகையுடன் திரும்ப வணக்கம் தெரிவித்தார்.

    திருச்சி:

    மலைக்கோட்டை மாநகரில் எண்ணிலடங்கா திட்டங்களை ஆளுங்கட்சியில் தான் அமைச்சராக இருந்த காலத்திலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்த காலத்திலும் சரி போராடி பெற்றத்தந்தவர் என்று மக்கள் மத்தியில் பெயர் பெற்றவர் கே.என்.நேரு. தற்போது நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராகவும், டெல்டா மாவட்டங்களின் பொறுப்பு அமைச்சராகவும், தி.மு.க.வின் முதன்மை செயலாளராகவும் இருந்து வருகிறார்.

    தமிழக அமைச்சர்களில் பரபரப்பாகவும், சுறுசுறுப்பாகவும் இயங்கிக் கொண்டிருக்கும் அமைச்சர் கே.என்.நேரு, தி.மு.க.வில் மாபெரும் மாநாடு மற்றும் பொதுக்கூட்டங்களை பிரமாண்டமாக நடத்தி மறைந்த முன்னாள் தலைவர் கருணாநிதியிடமும், தற்போதைய தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினிடமும் பாராட்டு பெற்றவர்.

    2026 சட்டமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு பரபரப்பான அரசியல் புயல் தமிழகத்தை மையம் கொண்டுள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் பம்பரமாக பணியாற்றி வருகின்றன. ஒருபுறம் மக்கள் சந்திப்பு பயணங்கள் வேகமெடுத்துள்ள நிலையில், மறுபுறம் செயற்குழு, பொதுக்குழு கூட்டங்களால் அனல் பறக்கிறது.

    இதற்கிடையே அமைச்சர் கே.என்.நேரு நேற்று இரவு 7 மணி அளவில் திருச்சி உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோவில் அருகே நடைபெற்ற தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவரின் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காரில் வந்தார். பின்னர் மணமக்களை வாழ்த்திவிட்டு வெளியே வந்த அவர் தி.மு.க. நிர்வாகிகளிடம் விடை பெற்றுக் கொண்டு, காரையும் எஸ்கார்டு வண்டியையும் தில்லை நகர் வீட்டுக்கு புறப்பட கூறிவிட்டு விறுவிறுவென நடக்க தொடங்கினார்.

    அவருடன் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமுவும் சென்றார். பஞ்சவர்ண சுவாமி கோவில் ரோட்டில் இருந்து சாலை ரோடு வழியாக தில்லைநகர் பகுதிக்குள் நுழைந்து தனது வீடு வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றது வழியெங்கிலும் அவரை கடந்து சென்றோரை வியப்பில் ஆழ்த்தியது. முன்னதாக தில்லை நகரில் உள்ள சாலையோர டீக்கடையில் அமர்ந்து டீ குடித்த அமைச்சர் கே.என்.நேரு தன்னை சந்தித்த பொதுமக்களிடம் நலம் விசாரித்ததுடன் ஆட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்தும், நிர்வாகிகளிடம் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்றும் ஓரிரு வரிகளில் கேள்விகளுடன் பதில்களையும் அளித்தவாறு சென்றார்.

    அமைச்சரை அடையாளம் கண்டுகொண்ட மக்கள் அவருக்கு வணக்கம் தெரிவிக்க அவரும் புன்னகையுடன் திரும்ப வணக்கம் தெரிவித்தார். நகராட்சி துறையில் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை திரும்பத் திரும்ப நடவடிக்கை எடுக்கச் சொல்லி தமிழக டி.ஜி.பி.க்கு ஒருபுறம் கடிதம் எழுதி வரும் நிலையில், மடியில் கனமில்லை வழியில் பயமில்லை என்பது போல அவர் சொந்த ஊரில் மிகவும் இயல்பாக நடந்து சென்றது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 

    • ஈஷா அறக்கட்டளை தமிழ்நாட்டில் கடந்த 15 வருடங்களாக பல்வேறு பகுதிகளில் உள்ள மயானங்களை பராமரித்து வருகிறது.
    • ஈஷா அறக்கட்டளை தற்போது தமிழக அரசுடன் இணைந்து 17 எரிவாயு தகன மயானங்களை பராமரித்து இயக்கி வருகிறது.

    சென்னை:

    ஈஷா அறக்கட்டளை சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் எரிவாயு மயானங்களில், 'வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு இலவச தகன சேவை வழங்கும் திட்டத்தை', நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் நேற்று தொடங்கி வைத்தார்.

    சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இத்திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர், இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்ட உடல்களை கண்ணியத்துடன் முறைப்படி தகனம் செய்துள்ள ஈஷாவின் பணிகளை பெரிதும் பாராட்டினார்.

    சத்குருவின் வழிகாட்டுதலில், ஈஷா அறக்கட்டளை தமிழ்நாட்டில் கடந்த 15 வருடங்களாக பல்வேறு பகுதிகளில் உள்ள மயானங்களை பராமரித்து வருகிறது. தமிழ்நாடு அரசுடன் இணைந்து ஈஷா நிர்வகிக்கும் மயானங்களில் பழமையான சடங்குகள் மற்றும் சக்திமிக்க இறுதிச் சடங்குகள் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளன. இதை ஈஷா வணிக நோக்கமின்றி, சேவை மனப்பான்மையுடன் செய்து வருகிறது.

     

    இன்று துவங்கப்பட்டுள்ள வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கான இலவச தகன சேவையானது, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் இறுதிச் சடங்குகளை கண்ணியத்துடன் எந்தவித நிதிச்சுமையுமின்றி மேற்கொள்ள உதவும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.

    ஈஷா அறக்கட்டளை தற்போது தமிழக அரசுடன் இணைந்து 17 எரிவாயு தகன மயானங்களை பராமரித்து இயக்கி வருகிறது. சென்னை, வேலூர், தஞ்சாவூர், நெய்வேலி மற்றும் கோவை மாவட்டத்தில் நஞ்சுண்டாபுரம், வீரகேரளம், துடியலூர், போத்தனூர், வெள்ளலூர், ஆலாந்துறை, தொண்டாமுத்தூர், காரமடை, கவுண்டம்பாளையம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள மயானங்களை பராமரித்து வருகிறது. இதனுடன் கூடுதலாக 3 மயானங்களின் பராமரிப்புப் பொறுப்பையும் ஈஷா அறக்கட்டளை ஏற்க உள்ளது.

    இந்த மயானங்களில் அழகான பூங்காவைப் போன்று பசுமையான சூழலை உருவாக்குதல், மயானத்தை சுற்றி அடர் மரங்களை நட்டு பராமரித்தல், முறையான நடைபாதை வசதிகளை உருவாக்குதல், சுகாதாரமான முறையில் குளியல் மற்றும் கழிவறைகளை பராமரித்தல் மற்றும் அரசின் உதவியோடு சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படாத வகையில் சிறப்பான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல் எனப் பல்வேறு பணிகளை ஈஷா மேற்கொண்டு வருகிறது.

    ஈஷா சார்பில் மயானங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு இறந்தவர்களின் உடலை கண்ணியமாக கையாளவும், அந்த இறுக்கமான சூழலில் உரிய முறையில் நடந்து கொள்ளவும் சிறப்பான பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

     

     

    மேலும் மயான வளாகத்தில் இறந்தவர்களுக்கான இறுதி சடங்கு செய்வதற்கான மண்டபம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனுடன் எரிவாயு மின் மயானங்களை பராமரிக்க மாசுக்கட்டுபாட்டு வாரியம் மற்றும் தமிழ்நாடு அரசு வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றி, அதனை உறுதி செய்யும் பணிகளிலும் ஈஷா ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    சத்குருவின் நோக்கம், நாடு முழுவதும் 1000 முதல் 3000 மயானங்களை தத்தெடுத்து, அவற்றின் பாரம்பரியமான புனிதத்தையும், கண்ணியமான செயல்பாட்டு முறையையும் மீட்டெடுப்பதாகும்.

    • திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.
    • நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மாவட்ட செயலாளர்களிடம் பேசினார்.

    திருச்சி:

    என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி என்ற தலைப்பில், திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.

    அதில் காணொளி மூலமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். அதனை தொடர்ந்து நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மாவட்ட செயலாளர்களிடம் பேசினார்.

    இதனை தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது,

    அமலாக்கத்துறை இரண்டாம் முறையாக தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி. க்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அதெல்லாம் ஒன்றும் இல்லை. நான் பார்த்துக் கொள்கிறேன் என்று பதில் அளித்து அங்கிருந்து அமைச்சர் புறப்பட்டு சென்றார்.

    • திருச்சி சத்திரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கலை அறிவியல் கல்லூரிக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
    • சோதனை முடிவில் இது வெறும் புரளி என தெரிய வந்தது.

    திருச்சி:

    தமிழக காவல்துறை இயக்குனர் அலுவலக மின்னஞ்சலுக்கு இன்று காலை ஒரு மெயில் வந்தது.

    அதில் திருச்சியில் உள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு வீடு, அலுவலகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீடு, அலுவலகத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    உடனே திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மாநகர காவல் துறையினர் உஷார்படுத்தப்பட்டனர். பின்னர் போலீஸ் அதிகாரிகள் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள், மெட்டல் டிடெக்டர் கருவி மற்றும் மோப்பநாய் உதவியுடன் தில்லைநகர் 5-வது கிராஸில் உள்ள அமைச்சர் கே .என்.நேரு வீடு மற்றும் சாஸ்திரி நகர் பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் வெடிகுண்டு அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர்.

    இதேபோன்று தென்னூர் அண்ணா நகரில் உள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீடு மற்றும் சத்திரம் வி என் நகர் பகுதியில் அமைந்துள்ள திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    சோதனை முடிவில் இது வெறும் புரளி என தெரிய வந்தது.

    அமைச்சர்கள் மட்டுமல்லாமல் திருச்சி சத்திரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கலை அறிவியல் கல்லூரிக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

    அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் கல்லூரி அலுவலக அறைகள் வகுப்பறைகள் ஆய்வறைகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சல்லடை போட்டு தேடினர். ஆனால் அங்கும் எந்த பிரச்சனையும் இல்லை.

    அமைச்சர்கள் வீடு மற்றும் அலுவலகம் தனியார் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஆள்தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது.
    • எந்தத் தவறும் செய்யவில்லை என அந்த துறையின் அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்தார்.

    தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறைக்கு 2,538 பணியாளர்கள் நியமன ஆள்தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது.

    ஒவ்வொரு பணிக்கும் ரூ.35 லட்சம் வரை லஞ்சம் பெறப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாகவும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தும்படி தமிழக காவல்துறைக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியது.

    அரசு வேலை பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் புகாரில், எந்தத் தவறும் செய்யவில்லை என அந்த துறையின் அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்தார்.

    இந்நிலையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறைக்கு ஆள்தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றது தொடர்பான வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய தமிழக காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி அமலாக்கத் துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

    • தி.மு.க.வில் மூத்த தலைவர்களை ஓரங்கட்டும் வேலையை யாரும் செய்யவில்லை.
    • அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து தான் ஒவ்வொருவராக வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.

    திருச்சி:

    திருச்சி மத்திய வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வாக்குச்சாவடி ஆலோசனை கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. கூட்டம் முடிந்தபின் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அமலாக்கத்துறை நடத்திய சோதனையின் பொழுது சில ஆவணங்கள் கிடைத்ததாகவும், அது குறித்து ஆய்வு செய்யுமாறு அமலாக்கத்துறை தமிழக காவல்துறைக்கு கடிதம் எழுதி உள்ளது. அதன் அடிப்படையில் தமிழக போலீசார் அந்த ஆவணங்களை ஆய்வு செய்வார்கள்.

    முறைகேடு நடந்ததா? என்பதை போலீசார் விசாரிப்பார்கள். ஆனால் நான் எந்தவித தவறும் செய்யவில்லை. விசாரணையில் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபித்து காட்டுவோம்.

    தி.மு.க.வை மிரட்டி பார்ப்பதற்காக கூட இதுபோன்று அவர்கள் செய்யலாம். தி.மு.க.வில் மூத்த தலைவர்களை ஓரங்கட்டும் வேலையை யாரும் செய்யவில்லை.

    தேர்தல் நேரத்தில் எங்களை விமர்சிக்க எதிர்க்கட்சிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அவ்வளவுதான். எங்கள் கூட்டணியில் இருந்து யாரும் வெளியே செல்லவில்லை. அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து தான் ஒவ்வொருவராக வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.

    ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன் உள்ளிட்டோரை தி.மு.க.வின் பி.டீம் எனக் கூறும் எடப்பாடி பழனிசாமி அவர் வாயில் வந்ததை பேசிக்கொண்டு உள்ளார்.

    சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் நேர்மையாக நடந்தால் சரியாக இருக்கும். ஆனால் வேண்டுமென்றே பல வாக்காளர்களை கொத்துக்கொத்தாக வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதையும், நீக்குவதையும் தான் நாங்கள் எதிர்க்கிறோம் என்றார்.

    • முதல்வர் மற்றும் அதிகாரிகள் கரூர் விவகாரம் குறித்து தெளிவான விளக்கங்களை அளித்திருக்கிறார்கள்.
    • யாரை பற்றியும் குறை கூறாமல் தெளிவான அறிக்கையை முதல்வர் வெளியிட்டிருக்கிறார்.

    திருச்சி:

    திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறும் போது,

    தமிழ்நாட்டில் எவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறது, முறையான நிதியை தமிழகத்திற்கு வழங்கவில்லை என தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.

    ஆனால் இந்த கரூர் விவகாரத்தில் 8 பாஜக எம்.பி.க்கள் உடனடியாக தமிழகத்திற்கு வருகிறார்கள். தமிழகத்திற்கான எந்த பிரச்சனைகளுக்கும் பா.ஜ.க. குரல் கொடுக்கவில்லை,

    முதல்வர் மற்றும் அதிகாரிகள் கரூர் விவகாரம் குறித்து தெளிவான விளக்கங்களை அளித்திருக்கிறார்கள். யாரை பற்றியும் குறை கூறாமல் தெளிவான அறிக்கையை முதல்வர் வெளியிட்டிருக்கிறார்.

    வேண்டுமென்றே பிரச்சனை உண்டு செய்வதற்காக பா.ஜ.க. இது போன்ற உண்மை கண்டறியும் குழுவை அனுப்பி அரசியல் செய்கிறது. இதை மக்கள் ஏற்க மாட்டார்கள். அவர்களுக்கு உண்மை என்ன என்பது தெரியும்.

    இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

    • பஞ்சப்பூரில் புதிதாக மார்க்கெட் கட்டுவதால் காந்தி மார்க்கெட் மாற்றப்படாது.
    • காந்தி மார்க்கெட்டை மேம்படுத்த ரூ. 50 கோடியில் வளர்ச்சி பணிகள் தொடங்கப்பட உள்ளது.

    திருச்சி:

    திருச்சியில் இன்று அமைச்சர் கே.என். நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பஞ்சப்பூரில் புதிதாக மார்க்கெட் கட்டுவதால் காந்தி மார்க்கெட் மாற்றப்படாது. காந்தி மார்க்கெட்டை மேம்படுத்த ரூ. 50 கோடியில் வளர்ச்சி பணிகள் தொடங்கப்பட உள்ளது. காந்தி மார்க்கெட் அங்கே தான் இருக்கும்.

    தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மதுரை மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அங்கிள் என விமர்சனம் செய்துள்ளாரே என கேட்டதற்கு?

    அவருடைய தராதரம் அவ்வளவுதான். ஒரு மாநில முதலமைச்சரை, பெரிய கட்சியின் தலைவரை, 40 ஆண்டு காலமாக அரசியலில் இருப்பவரை நேற்று அரசியலுக்கு வந்தவர் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வதற்கு மக்கள் நல்ல பதில் சொல்வார்கள்.

    நாங்களும் தேர்தலில் சரியான பதில் சொல்வோம். அதில் ஒன்றும் மாற்றம் இல்லை. 10 பேர் 50 பேர் கூடிட்டாங்க என்பதற்காக எது வேணாலும் பேசுவது சரியாக இருக்குமா? சரியாக இருக்காது என கோபமாக பதிலளித்தார்.

    • எங்களுக்கு கூடும் கூட்டத்தை விட அங்கு கூடிய கூட்டம் குறைவுதான்.
    • பா.ஜ.க. அரசு ஆளில்லா ரெயில்வே கேட்டுக்கு தீர்வு காண மாட்டார்கள். பாலம் கூட மாநில அரசுதான் கட்டி வருகிறது.

    புதுக்கோட்டை:

    தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எடப்பாடி பழனிசாமி முன்பு இது போன்றுதான் பிரசாரத்தை ஆரம்பித்தார். அதை மீறிதான் தி.மு.க. வெற்றி பெற்று தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றார். இந்தமுறை இப்போது தான் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பணியை ஆரம்பித்திருக்கிறார். நாங்கள் முன்னரே எங்கள் பணியை தொடங்கி விட்டோம்.

    அ.தி.மு.க. தொண்டர்களுக்கு பா.ஜ.க.வோடு கூட்டணி வைத்தது பிடிக்கவில்லை. அதனால் பா.ஜ.க. வை நன்மை பயக்கும் கட்சி என்று மாற்றுகிறார். நாங்கள் என்ன நன்மை செய்யாமலா இருக்கின்றோம்.

    முன்பு பா.ஜ.க.வோடு கூட்டணி இல்லை என்று கூறினார். தற்போது கூட்டணி வைத்து நன்மை பயக்கும் கட்சி என்று கூறுகிறார். அதனை நீங்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும்.

    எடப்பாடி பழனிசாமிக்கு கூடும் கூட்டத்தை விட பல மடங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது. பிரசாரத்தின் தொடக்க இடம் என்பதால் அதனை ஒருங்கிணைப்பு செய்து அந்த கூட்டத்தைக் கூட்டி உள்ளனர்.

    எங்களுக்கு கூடும் கூட்டத்தை விட அங்கு கூடிய கூட்டம் குறைவுதான். நாளை முதலமைச்சர் திருவாரூர் வருகிறார். திருவாரூருக்கு வந்து பாருங்கள். முதலமைச்சருக்கு எவ்வளவு கூட்டம் கூடுகிறது என்று. 15-ந்தேதி மயிலாடுதுறைக்கு முதலமைச்சர் வருகிறார். அப்போது பாருங்கள் யாருக்கு கூடிய கூட்டம் அதிகம் என்று.

    ஓரணியில் தமிழ்நாடு சிறப்பாக இருக்கிறது. அனைத்து இடத்திலும் அதிகப்படியான உறுப்பினர்கள் சேருகின்றனர். மக்களே முன்வந்து சேருகின்றனர். மிகவும் பிரியமாக இருக்கின்றனர். சர்வர் சரியாக வேலை செய்யும் இடத்தில் எல்லாம் 30 ஆயிரம் பேர் வரை சேர்ந்துள்ளனர்.

    சர்வர் சில இடங்களில் வேலை செய்யவில்லை. அந்த இடத்தில்தான் கொஞ்சம் தாமதம் ஆகிறது. சர்வர் வேலை செய்யும் இடத்தில் சிறப்பாக இருக்கிறது. பா.ஜ.க. அரசு ஆளில்லா ரெயில்வே கேட்டுக்கு தீர்வு காண மாட்டார்கள். பாலம் கூட மாநில அரசுதான் கட்டி வருகிறது.

    பாலம் இணைப்பு கூட கொடுக்கவில்லை, நிலத்தை கையகப்படுத்தி நாங்கள் கொடுக்காமல் இல்லை, நிலம் கையகப்படுத்தும் பொழுது நிலத்திற்கு சொந்தக்காரர்கள் நீதிமன்றத்திற்கு சென்று விடுகின்றனர். நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகுதான் நிலத்தை கையகப்படுத்தி கொடுக்கும் சூழல் இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வருகிற 9-ந்தேதி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் வருகை தருகிறார்.
    • கூட்டணி கட்சியினர் ஏதாவது பிரச்சனை என்றால் முதலமைச்சரிடம் தெரிவிப்பார்கள்.

    திருவாரூர்:

    திருவாரூர் தி.மு.க. மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் மற்றும் பிஎல் 2 பாக நிலை முகவர்கள் கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, சட்டமன்ற உறுப்பினர் பூண்டி. கலைவாணன் உள்ளிட்ட ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-

    வருகிற 9-ந்தேதி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் வருகை தருகிறார். 9 மற்றும் 10-ம் தேதி திருவாரூருக்கு வருகை தந்து முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.

    கூட்டணி கட்சியினர் ஏதாவது பிரச்சனை என்றால் முதலமைச்சரிடம் தெரிவிப்பார்கள். உடனடியாக அதனை முதலமைச்சர் சரி செய்து வைப்பார்.

    கட்சி தலைமையை பொறுத்தவரை ஆங்காங்கே கட்சியில் இருப்பவர்கள் அங்குள்ள பிரச்சனைகளை கூறுவார்கள். அதனை முதலமைச்சர் உடனடியாக சரி செய்து வைப்பார். தோழமை கட்சியினர் முதலமைச்சர் உடன் இணக்கமான முறையில் உள்ளனர்.

    சிவகங்கை காவலாளி மரணம் விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×