search icon
என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • இலங்கை கடலோர பகுதிகளில் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
    • மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    வேதாரண்யம்:

    தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள தெற்கு இலங்கை கடலோர பகுதிகளில் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் பல இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வருகிற 20-ந்தேதி வரை கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    மேலும் கடல் சீற்றமாக காணப்படும் எனவும், மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராம சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

    மேலும் மீன்வளத் துறை எச்சரிக்கை எடுத்து 2000-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளை கடலில் இருந்து கரைக்கு பாதுகாப்பாக இழுத்து வைக்கும் பணியில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    மீன்பிடி தடைகாலம் உள்ள நிலையில் விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லாத இந்த வேளையில் மீன் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது.

    இந்த நிலையில் பைபர் படகு மீனவர்களும் மீன்பிடிக்க செல்லாததால் 4 நாட்களுக்கு மீன் வியாபாரம் முற்றிலுமாக இருக்காது என மீனவர்கள் தெரிவித்தனர்.

    • கோடியக்கரை கடற்கரை அருகே இந்திய கடற்படை ரோந்து பணியில் ஈடுபட்டது.
    • மீனவர்களுக்கு சொந்தமான 5 படகுகளை இந்திய கடற்படை பறிமுதல் செய்துள்ளது.

    இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த 14 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவர்களுக்கு சொந்தமான 5 படகுகளை இந்திய கடற்படை பறிமுதல் செய்துள்ளது.

    தமிழ்நாட்டில் மீன்பிடி தடைகளும் அமலில் உள்ளதால் விசைப்படகு மீனவர்கள் கடலில் சென்று மீன் பிடிக்காமல் இருந்து வந்தனர். இந்த சூழலை பயன்படுத்து அந்நிய நாட்டை சேர்ந்தவர்கள் யாரும் இந்திய கடல் எல்லையில் ஊடுருவ கூடாது என்பதற்காக இந்திய கடற்படை நாள்தோறும் ரோந்து சென்று வந்துள்ளனர்.

    நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை கடற்கரை அருகே இந்திய கடற்படை ரோந்து பணியில் ஈடுபட்டது. அப்போது இந்திய எல்லையில் அத்துமீறி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 14 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இந்திய கடற்படை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

    நாளை அவர்களது 5 படகுகளை நாகை கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் இந்திய கடற்படை அதிகாரிகள் ஒப்படைக்க உள்ளனர்.

    • அந்தமானில் இருந்து நாகைக்கு வரவேண்டிய பயணியர் கப்பல் தாமதமானதால மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
    • முன்பதிவு செய்த பயணிகள் பயண தேதியை மாற்றிக்கொள்ளலாம்.

    நாகப்பட்டினம்:

    இந்தியா - இலங்கை இடையேயான பன்னாட்டு பயணியர் படகு போக்குவரத்து சேவை மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. நாளை 17-ந்தேதி படகு சேவை தொடங்க இருந்த நிலையில் மீண்டும் வரும் 19-ந் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

    அந்தமானில் இருந்து நாகைக்கு வரவேண்டிய பயணியர் கப்பல் தாமதமானதால், வரும் 19-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

    இந்த அறிவிப்பால் யாழ்ப்பாணம் செல்லவிருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    முன்பதிவு செய்த பயணிகள் பயண தேதியை மாற்றிக்கொள்ளலாம் அல்லது கட்டணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தவிர்க்க முடியாத சில சட்டரீதியான அனுமதிகள் காரணமாகவும், தாமதமான கப்பலின் வருகையினாலும் திட்டமிட்ட நாகை - காங்கேசன் - நாகை பயணிகள் கப்பல் சேவையினை இயக்க முடியவில்லை என்றும் சேவையினை 19-ந் தேதியில் இருந்து இயக்குவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

    பதிவு செய்த பயணிகள் 19-ந் தேதி அன்று அல்லது அதற்குப் பின்னர் அவர்கள் விரும்பிய தேதிகளில் பயணிக்கலாம் அல்லது செலுத்திய கட்டணத்தினை முழுமையாக பெற விரும்பினால் கட்டணத்தினை திரும்ப பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ரெயில் சென்னையில் இருந்து இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு வேளாங்கண்ணிக்கு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்றடையும்.
    • மயிலாடுதுறை, பேரளம், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    நாகப்பட்டினம்:

    தெற்கு ரெயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் ஆர். வினோத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கோடை விடுமுறை தொடங்கியுள்ளதையடுத்து கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அந்தவகையில், சென்னை எழும்பூரில் இருந்து வேளாங்கண்ணிக்கு மே 17-ந் தேதி முதல் ஜூன் 30-ந்தேதி வரை வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விரைவு ரெயில் (06037) இயக்கப்படவுள்ளது. இந்த ரெயில் சென்னையில் இருந்து இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு வேளாங்கண்ணிக்கு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்றடையும்.

    இதேபோல, மறு மார்க்கத்தில் வேளாங்கண்ணியில் இருந்து சென்னை எழும்பூருக்கு மே 18-ந் தேதி முதல் ஜூலை 1-ந் தேதி வரை சனிக்கிழமை மற்றும் திங்கள்கிழமைகளில் விரைவு ரெயில் (06038) இயக்கப்படவுள்ளது. இந்த ரெயில் வேளாங்கண்ணியில் இருந்து பிற்பகல் 2.45 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு இரவு 11.30 மணிக்கு சென்றடையும்.

    தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாப்புலியூர், கடலூர் போர்ட், சிதம்பரம், சீர்காழி, வைதீஸ்வரன் கோவில், மயிலாடுதுறை, பேரளம், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நாகைக்கு வரவேண்டிய பயணியர் கப்பல் தாமதமானதால் வரும் 17-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
    • யாழ்ப்பாணம் செல்லவிருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    நாகையில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14-ந்தேதி முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து இயக்கப்பட்டது. கேரள மாநிலம் கொச்சியில் இருந்து 'செரியாபாணி' என்ற பெயர் கொண்ட பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது.

    வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதியுடன் இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து இயக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானது. ஏற்கனவே இயக்கப்பட்ட 'செரியாபாணி' கப்பலுக்கு மாற்றாக 'சிவகங்கை' என்ற பெயர் கொண்ட மற்றொரு பயணிகள் கப்பல் நாகை-இலங்கை இடையே பயணத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியானது.

    திருச்சியை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் சுபம் குரூப் ஆப் கம்பெனி மற்றும் இன்ட் ஸ்ரீ ப்ரே சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆகியவை இணைந்து 'சிவகங்கை' என்ற பெயரில் நாகையில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு பயணிகள் கப்பல் சேவையை நாளை முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

    இந்நிலையில் நாகையில் இருந்து இலங்கைக்கு நாளை தொடங்கவிருந்த கப்பல் போக்குவரத்து மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. நாகைக்கு வரவேண்டிய பயணியர் கப்பல் தாமதமானதால், வரும் 17-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

    இந்த அறிவிப்பால் யாழ்ப்பாணம் செல்லவிருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    முன்பதிவு செய்த பயணிகள் பயண தேதியை மாற்றிக்கொள்ளலாம் அல்லது கட்டணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • 160 பயணிகள் பயணிக்கும் இந்த கப்பலில் 133 சாதாரண இருக்கைகளும், 27 பிரீமியம் இருக்கைகளும் என இரு வகைகளாக இருக்கைகள் பிரிக்கப்பட்டுள்ளது.
    • கப்பலில் பயணம் செய்ய விரும்பும் பயணிகள் காலை 5.30 மணிக்குள் நாகை துறைமுகத்திற்கு வந்துவிட வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகையில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14-ந்தேதி முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து இயக்கப்பட்டது.

    கேரள மாநிலம் கொச்சியில் இருந்து 'செரியாபாணி' என்ற பெயர் கொண்ட பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது.

    வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதியுடன் இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து மீண்டும் கப்பல் போக்குவரத்து எப்போது தொடங்கப்படும்? என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

    இதையடுத்து நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து இயக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானது. ஏற்கனவே இயக்கப்பட்ட 'செரியாபாணி' கப்பலுக்கு மாற்றாக 'சிவகங்கை' என்ற பெயர் கொண்ட மற்றொரு பயணிகள் கப்பல் நாகை-இலங்கை இடையே பயணத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியானது.

    ஆனால் அந்த கப்பல் போக்குவரத்து குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகாமல் இருந்தது.

    இந்த நிலையில் 'சிவகங்கை' கப்பல் அதிகாரப்பூர்வமாக இயக்கப்படும் என்று கப்பலை இயக்கும் தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் நேற்று நாகையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருச்சியை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் சுபம் குரூப் ஆப் கம்பெனி மற்றும் இன்ட் ஸ்ரீ ப்ரே சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆகியவை இணைந்து 'சிவகங்கை' என்ற பெயரில் நாகையில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு பயணிகள் கப்பல் சேவையை வருகிற 13-ந் தேதி(திங்கட்கிழமை) முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளது.

    160 பயணிகள் பயணிக்கும் இந்த கப்பலில் 133 சாதாரண இருக்கைகளும், 27 பிரீமியம் இருக்கைகளும் என இரு வகைகளாக இருக்கைகள் பிரிக்கப்பட்டுள்ளது.

    இந்திய ரூபாயின்படி 18 சதவீத ஜி.எஸ்.டி.யுடன் ரூ.4800 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு பயணி 60 கிலோ எடை வரை உடைமைகள் எடுத்து செல்லலாம்.

    நாகை துறைமுகத்தில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு செல்லும் கப்பல் நண்பகல் 12 மணிக்கு காங்கேசந்துறையை சென்றடைகிறது. மீண்டும் அங்கிருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு மாலை 6 மணிக்கு நாகை துறைமுகத்தை வந்தடைகிறது. ஆன்லைன் மூலம் டிக்கெட் பதிவு செய்து கொள்ளலாம்.

    கப்பலில் பயணம் செய்ய விரும்பும் பயணிகள் காலை 5.30 மணிக்குள் நாகை துறைமுகத்திற்கு வந்துவிட வேண்டும். காலதாமதம் ஏற்படாதவாறு பயணிகளை பரிசோதனை செய்வதற்காக 4 கவுண்ட்டர்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வேதாரண்யத்தில் உள்ள உப்பு சத்தியாகிரக நினைவு கட்டிடத்தில் இருந்து பேரணி புறப்பட்டது.
    • உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபியில் உப்பு அள்ளி வந்தே மாதரம் என முழக்கமிட்டனர்.

    வேதாரணயம்:

    இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்திய வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக 93-வது நினைவு பேரணி திருச்சியில் உப்பு சத்தியாகிரக ராஜன் நினைவு இல்லம் அருகே இருந்து உப்பு சத்தியகிரக யாத்திரை கமிட்டி தலைவர் சக்திசெல்வ கணபதி தலைமையில் தொடங்கியது.

    அந்த பேரணி கல்லணை, திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு , தஞ்சை, பாபநாசம், ஆலங்குடி மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி தகட்டூர் ஆயக்காரன்புலம், கருப்பம்புலம் வழியாக நேற்று வேதாரண்யத்திற்கு வந்தடைந்தது.

    வேதாரண்யம் வடக்கு வீதியில் உள்ள உப்பு சத்தியாகிரக நினைவு கட்டிடத்தில் யாத்திரை குழுவினர் உபவாசம் (உண்ணாவிரதம்) இருந்தனர்.

    இன்று வேதாரண்யத்தில் உள்ள உப்பு சத்தியாகிரக நினைவு கட்டிடத்தில் இருந்து பேரணி புறப்பட்டது.

    வேதாரண்யம் வடக்கு வீதி உப்பு சத்தியாகிரக நினைவு கட்டிடத்திலிருந்து பாதயாத்திரையாக சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் உள்ள அகஸ்தியன்பள்ளிக்கு நடந்து சென்றனர்.

    தொடர்ந்து உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபியில் உப்பு அள்ளி வந்தே மாதரம் என முழக்கமிட்டனர். பின்னர் உப்பு சத்தியாகிரக நினைவு நினைவு ஸ்தூபியில் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தி தேசபக்தி பாடல்களை பாடினர். இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வ பெருந்தகை, முன்னாள் தலைவர் தங்கபாலு, முன்னாள் எம்.பி. ராஜேந்திரன், சுதந்திரப் போராட்ட தியாகி சர்தார் பேரன் வேதரத்தினம், கேடிலியப்பன்உள்ளிட்ட நூற்றுக்கணக்கான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினர்.
    • இந்தத் தாக்குதலில் முருகன் என்ற மீனவர் படுகாயம் அடைந்தார்.

    நாகை:

    நாகப்பட்டினம் மாவட்டம் செருதூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவருக்கு சொந்தமான நாட்டுப் படகில் முருகன் மற்றும் அக்கரைபேட்டையை சேர்ந்த முத்து, முருகவேல், சின்னையன் உள்ளிட்ட 4 பேர் கடந்த 28-ம் தேதி காலை 11 மணியளவில் மீன் பிடி தொழிலுக்காக கடலுக்குச் சென்றனர். அவர்கள் கோடியக்கரையில் தென்கிழக்கே சுமார் 15 நாட்டிக்கல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

    இந்நிலையில், நேற்று இரவு அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது அங்கு திடீரென படகில் இலங்கை கடற்கொள்ளையர்கள் வந்தனர். அவர்கள் முருகன் உள்ளிட்ட மீனவர்களிடம் பிடித்து வைத்துள்ள மீன்கள், மீன்பிடி வலைகள் மற்றும் தொழில்நுட்ப கருவிகளை கேட்டு மிரட்டினர். ஆனால் மீனவர்கள் அவற்றை கொடுக்க மறுத்தனர்.

    இதனால் ஆத்திரமடைந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்களை இரும்பு கம்பி மற்றும் கட்டையால் தாக்கினர். இதில் படகின் உரிமையாளர் முருகனுக்கு தலை மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. மற்ற 3 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து மீனவர்கள் மீன்பிடிக்க பயன்படுத்திய மீன் வலை, ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கி, டார்ச் லைட், செல்போன், உள்ளிட்ட சுமார் ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருட்களை இலங்கை கடல் கொள்ளையர்கள் கொள்ளையடித்து தப்பிச்சென்றனர்.

    பலத்த காயங்களுடன் இன்று அதிகாலை 3 மணி அளவில் கரை திரும்பிய மீனவர்களை செருதூர் மீனவர்கள் மீட்டு நாகை ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இச்சம்பவம் குறித்து வேளாங்கண்ணி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் மீன்பிடி தடையை மீறி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடந்துவருகிறது.

    மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ள நிலையில் தமிழக எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்டத்தைச் சேர்ந்த நாட்டு படகு மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட சம்பவம் நாகை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பஸ்சின் அடிப்பாகத்தின் தரம் குறித்தும், என்ஜின் உள்ளிட்டவைகள் முறையாக செயல்படுகிறதா? என்பது குறித்தும் போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    • இதையும் பொருட்படுத்தாமல் தொழில் நிமித்தமாகவும், அத்தியாவசிய தேவைக்காகவும் பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    சமீபத்தில் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து கிளம்பிய அரசு பஸ் புறப்பட்ட சில நேரத்தில் வளைவில் திரும்பும் போது பஸ்சின் இருக்கை கழன்று அதில் அமர்ந்திருந்த கண்டக்டர் வெளியே தூக்கி வீசப்பட்டார். இச்சம்பவம் சர்ச்சையை கிளப்பி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களாக அரசு பஸ்களின் உள்புறத்தில் மழை நீர் வடிகிறதா? பிரேக், ஆக்சிலேட்டர், ஸ்டீயரிங் மற்றும் பஸ்சின் அடிப்பாகத்தின் தரம் குறித்தும், என்ஜின் உள்ளிட்டவைகள் முறையாக செயல்படுகிறதா? என்பது குறித்தும் போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    இது ஒருபுறம் இருக்க, மற்றொருபுறம் பின்பக்க கண்ணாடி இல்லாமலேயே அரசு பஸ் ஒன்று இயங்கி வருகிறது. ஆம், வேளாங்கண்ணியில் இருந்து நாகை நோக்கி செல்லும் அரசு பஸ்சில் பின்புற கண்ணாடி இன்றி முழுவதுமாக திறந்த நிலையில் பஸ் புறப்பட்டது. வேளாங்கண்ணி கடற்கரையோர பகுதி என்பதால் வெளியில் வீசும் குளிர்காற்று பஸ்சின் உள்ளே தான் முழுவதுமாக வீசுகிறது. இதையும் பொருட்படுத்தாமல் தொழில் நிமித்தமாகவும், அத்தியாவசிய தேவைக்காகவும் பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.

    அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த பஸ்சின் பின்னால் சென்ற வாகன ஓட்டிகள் இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. திருச்சி பஸ் சம்பவம் பரவலாக பேசப்பட்டு வந்த சில நாட்களுக்குள் நாகையில் பின்பக்க கண்ணாடி இன்றி அரசு பஸ் இயங்கிய சம்பவம் மீண்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. 

    • மழை காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் 20-ந்தேதி சேவையானது நிறுத்தப்பட்டது.
    • பொதுமக்கள் கப்பலில் இலங்கை செல்ல பாஸ்போர்ட் மட்டுமே போதுமானது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை கடந்த ஆண்டு (2023) அக்டோபர் மாதம் 14-ந்தேதி தொடங்கப்பட்டது. இந்த கப்பல் சேவையை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

    இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை மூலம் நாகை துறைமுகத்தில் இருந்து 60 நாட்டிக்கல் மைல் தொலைவில் உள்ள இலங்கை காங்கேசன்துறையை சுமார் 3.30 மணி நேரத்தில் சென்றடையும் வகையில், வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்த கப்பல் 'செரியாபாணி' என்ற பெயரில் அழைக்கப்பட்டது. இந்நிலையில், மழை காரணமாக கடந்த ஆண்டு (2023) அக்டோபர் 20-ந்தேதி சேவையானது நிறுத்தப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து, நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு மீண்டும் கப்பல் சேவை தொடங்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தமானில் தயாரிக்கப்பட்ட 'சிவகங்கை' என்ற கப்பல் அடுத்த மாதம் (மே) 13-ந்தேதி நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு கப்பல் சேவை தொடங்கப்பட உள்ளது. இதற்காக இந்த கப்பல் அடுத்த மாதம் (மே) 10-ந்தேதி நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு வர உள்ளது. இந்த 'சிவகங்கை' கப்பலின் கீழ்தளத்தில் 133 இருக்கைகளும், மேல்தளத்தில் 25 இருக்கைகளும் உள்ளவாறு பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த கப்பலின் கீழ்தளத்தில் உள்ள இருக்கைகளில் மக்கள் பயணிக்க ஜி.எஸ்.டி. வரியுடன் ரூ. 5 ஆயிரமும், மேல்தளத்தில் உள்ள சிறப்பு வகுப்பில் மக்கள் பயணிக்க ஜி.எஸ்.டி. வரியுடன் ரூ.7 ஆயிரமும் வசூல் செய்யப்பட உள்ளது. இந்தியர்களுக்கு விசா கிடையாது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ள காரணத்தால், பொதுமக்கள் இந்த கப்பலில் இலங்கை செல்ல பாஸ்போர்ட் மட்டுமே போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஒரு விசைப்படகை கரையேற்ற எந்திரம் மட்டுமல்லாமல் அதனுடன் சேர்ந்து 15 முதல் 20 பேர் வரை மனித உழைப்புகள் தேவைப்படுகிறது.
    • இந்த ஆண்டு வெப்ப அனல் காற்று அதிகமாக வீசுவதால் வெயிலில் நின்று வெல்டு செய்யும் போது அதிக அனல் ஏற்படுகிறது.

    நாகப்பட்டினம்

    மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் தமிழகம் உள்ளிட்ட கிழக்கு கடலோர மாநில மீனவர்களுக்கு 61 நாட்கள் கடலில் மீன்பிடிக்கத்தடை விதிக்கப்பட்டு வருகிறது. அரசு அறிவித்த மீன்பிடி தடைகாலம் கடந்த 15 தேதி அதிகாலை முதல் அமலுக்கு வந்தது.

    நாகை மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பேட்டை, கல்லார், கீச்சாங்குப்பம், செருதூர், கோடியக்கரை, நம்பியார் நகர், நாகூர், புஷ்பவனம், ஆறுகாட்டுதுறை, வேதாரணி யம் உள்ளிட்ட 27 மீனவ பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை துறை முகங்களில் கட்டி பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

    கடலுக்கு மீன் பிடிக்க செல்லாததால் படகில் உள்ள வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பழுது நீக்கும் பணியில் மீனவர்கள், தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பழுது நீக்கம் செய்து வர்ணம் பூசுவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இது குறித்து மீனவர்கள் கூறும்போது :-

    ஒரு விசைப்படகை கரையேற்ற எந்திரம் மட்டுமல்லாமல் அதனுடன் சேர்ந்து 15 முதல் 20 பேர் வரை மனித உழைப்புகள் தேவைப்படுகிறது. இரும்பு விசைப்படகின் பழுதான சில பாகங்களை கேஸ் கட்டர் மூலம் வெட்டி எடுப்போம். அதேபோல் புதிய இரும்பினை பழுதான இடங்களில் பொருத்தும் போது ஆர்க் வெல்டு செய்வது வழக்கம்.

    இந்த வேலை கடும் வெப்பத்தை ஏற்படுத்தும். அதிலும் இந்த ஆண்டு வெப்ப அனல் காற்று அதிகமாக வீசுவதால் வெயிலில் நின்று வெல்டு செய்யும் போது அதிக அனல் ஏற்படுகிறது. அவ்வப்போது தண்ணீரை மேலே ஊற்றிக் கொண்டும் ஈரத்துணியை சுற்றிக்கொண்டும் எங்கள் பணியை தொடர்கிறோம் என்றனர்.

    • வீட்டின் மேற்பகுதியில் தீ பிடித்ததால் தண்ணீர் ஊற்றி அணைக்க முடியவில்லை.
    • வீட்டின் உரிமையாளர்கள், விஏஓ கொடுத்த புகாரின்பேரில் 3 வழக்குகள் பதிவு செய்து வெளிப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலையொட்டி பட்டாசுகள், மேளதாளங்கள் முழங்க கட்சியினர், தங்களது ஆதரவு வேட்பாளரை உற்சாகமாக வரவேற்று வருகின்றனர்.

    நாகை பாராளுமன்ற தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.ஜி.எம். ரமேஷ் நேற்று காலை நாகூர் சிவன் தேரடி தெருவில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்கினார். அங்கிருந்து நாகூர் பட்டினச்சேரி, நாகூர் பஸ் நிறுத்தம், நாகை காடம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    தொடர்ந்து நாகை மேட்டுபங்களாவில் அவர் பிரசாரத்தை முடித்து விட்டு புதிய நம்பியார் நகருக்கு செல்ல தொடங்கினார். அப்போது நாகை நகராட்சி அலுவலகம் அருகே மெயின் ரோட்டில் பா.ஜனதாவினர் பட்டாசு வெடித்து வேட்பாளர் ரமேசுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பட்டாசு வெடித்ததில் அதிலிருந்து தீப்பொறிகள் பறந்து அருகில் உள்ள ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர் பக்கிரிசாமி(வயது 61) என்பவரது கூரை வீட்டில் விழுந்ததில், அவரது கூரை வீட்டில் தீப்பற்றி எரிந்தது. பின்னர் தீயானது காற்றின் வேகம் காரணமாக மளமளவென எரிய தொடங்கியது.

    அப்போது வீட்டில் இருந்த பக்கிரிசாமி, அவரது மனைவி பானுமதி, மகள் ஸ்ரீபிரியா, அவரது மகள் ஸ்ரீலேகா, மருமகள் ரேவதி ஆகியோர் அலறி அடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தனர்.

    வீட்டின் மேற்பகுதியில் தீ பிடித்ததால் தண்ணீர் ஊற்றி அணைக்க முடியவில்லை. இது குறித்து நாகை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு 2 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    ஆனாலும் வீட்டில் இருந்த 2 டி.விக்கள், 2 பிரிட்ஜ்கள், 2 கட்டில்கள், வாஷிங் மெஷின், 6 பீரோக்கள், 6 மின்விசிறிகள், பாத்திரங்கள் மற்றும் புத்தகங்கள் என அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலானது. இதன் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    இதையடுத்து வீடு தீப்பற்றி எரிந்ததை கண்டுகொள்ளாமல் சென்றதாகக்கூறி, பா.ஜனதாவினரை கண்டித்து பக்கிரிசாமியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த தாசில்தார் ராஜா சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக சாலை மறியல் போராட்டம் நடந்தது.

    இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்த பா.ஜனதா மாவட்ட தலைவர் கார்த்திகேயன், பக்கிரிசாமி வீட்டுக்கு வந்து சேதங்களை பார்வையிட்டு உரிய இழப்பீடு தருவதாக பக்கிரிசாமியின் குடும்பத்தினரிடம் தெரிவித்தார். இதையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

    இந்நிலையில் பிரசாரத்தின்போது வெடி வெடித்து குடிசை வீடுகள் எரிந்த விவகாரத்தில் பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    வீட்டின் உரிமையாளர்கள், விஏஓ கொடுத்த புகாரின்பேரில் 3 வழக்குகள் பதிவு செய்து வெளிப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தடை செய்யப்பட்ட வெடியை விற்பனை செய்த கடைக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    ×