search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nagai fisherman"

    • நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினர்.
    • இந்தத் தாக்குதலில் முருகன் என்ற மீனவர் படுகாயம் அடைந்தார்.

    நாகை:

    நாகப்பட்டினம் மாவட்டம் செருதூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவருக்கு சொந்தமான நாட்டுப் படகில் முருகன் மற்றும் அக்கரைபேட்டையை சேர்ந்த முத்து, முருகவேல், சின்னையன் உள்ளிட்ட 4 பேர் கடந்த 28-ம் தேதி காலை 11 மணியளவில் மீன் பிடி தொழிலுக்காக கடலுக்குச் சென்றனர். அவர்கள் கோடியக்கரையில் தென்கிழக்கே சுமார் 15 நாட்டிக்கல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

    இந்நிலையில், நேற்று இரவு அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது அங்கு திடீரென படகில் இலங்கை கடற்கொள்ளையர்கள் வந்தனர். அவர்கள் முருகன் உள்ளிட்ட மீனவர்களிடம் பிடித்து வைத்துள்ள மீன்கள், மீன்பிடி வலைகள் மற்றும் தொழில்நுட்ப கருவிகளை கேட்டு மிரட்டினர். ஆனால் மீனவர்கள் அவற்றை கொடுக்க மறுத்தனர்.

    இதனால் ஆத்திரமடைந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்களை இரும்பு கம்பி மற்றும் கட்டையால் தாக்கினர். இதில் படகின் உரிமையாளர் முருகனுக்கு தலை மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. மற்ற 3 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து மீனவர்கள் மீன்பிடிக்க பயன்படுத்திய மீன் வலை, ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கி, டார்ச் லைட், செல்போன், உள்ளிட்ட சுமார் ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருட்களை இலங்கை கடல் கொள்ளையர்கள் கொள்ளையடித்து தப்பிச்சென்றனர்.

    பலத்த காயங்களுடன் இன்று அதிகாலை 3 மணி அளவில் கரை திரும்பிய மீனவர்களை செருதூர் மீனவர்கள் மீட்டு நாகை ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இச்சம்பவம் குறித்து வேளாங்கண்ணி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் மீன்பிடி தடையை மீறி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடந்துவருகிறது.

    மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ள நிலையில் தமிழக எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்டத்தைச் சேர்ந்த நாட்டு படகு மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட சம்பவம் நாகை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×