search icon
என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வருகை தருகின்றனர்.
    • வனப்பகுதியில் பெய்த பலத்த மழையால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் அமணலிங்கேசுவரர் கோவில் உள்ளது. கோவிலின் அடிவாரத்தில் இருந்து 950 மீட்டர் உயரத்தில் உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி உள்ளது.

    அருவியில் விழுகின்ற மூலிகை தண்ணீரில் குளித்து புத்துணர்வு பெறவும், பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளை தரிசனம் செய்யவும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வருகை தருகின்றனர்.

    இந்தநிலையில் கோடை வெப்பத்தின் தாக்கத்தால் நீர் வரத்து இல்லாமல் வறண்டு வந்த பஞ்சலிங்க அருவிக்கு கடந்த 4 நாட்களாக நீர்வரத்து ஏற்பட்டு உள்ளது. இதற்கு குருமலை, குலிப்பட்டி, மேல் குருமலை உள்ளிட்ட அருவியின் நீராதாரங்களில் தொடர்ந்து மழைப்பொழிவு ஏற்பட்டு வருவதே காரணமாகும்.

    வனப்பகுதியில் பெய்த பலத்த மழையால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அருவிக்கு குடும்பத்தோடு வருகை தந்த சுற்றுலா பயணிகள் உற்சாகத்தோடு குளித்து மகிழ்ந்தனர். மேலும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமான அளவில் உயர்ந்து வருகிறது.

    • கல்லூரி வளாகம் முழுவதுமே சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேர கண்காணிப்பில் இருந்து வருகிறது.
    • அரசியல் கட்சி முகவர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூரில் பாராளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் பல்லடம் சாலை எல் ஆர் ஜி அரசு கலைக் கல்லூரியில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு , கோபி , அந்தியூர் , பவானி , பெருந்துறை ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகளுக்கும் தனித்தனியாக ஸ்ட்ராங் ரூம் அமைத்து போலீசார் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. கல்லூரி வளாகம் முழுவதுமே சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேர கண்காணிப்பில் இருந்து வருகிறது.

    இந்தநிலையில் நேற்று இரவு பவானி சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் மின்சாரம் தடை ஏற்பட்டது. சுமார் 20 முதல் 25 நிமிடங்களுக்குள்ளாக மின்தடை நீடித்ததால் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் செயல்படவில்லை.

    இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சி முகவர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கிறிஸ்துராஜ் மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் எல் ஆர் ஜி கல்லூரிக்கு சென்றனர். மின்வாரிய சிறப்பு குழுவினர் பழுதை சீரமைத்தனர். ஆட்டோமேட்டிக் ஜெனரேட்டர் மூலம் உடனடியாக மின் இணைப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் ஆன் செய்யப்பட்டது.

    மழையின் காரணமாக மின்தடை ஏற்பட்டதாகவும் , 20 நிமிடங்களுக்குள்ளாக உடனடியாக சரி செய்யப்பட்டதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இதனால் எல்.ஆர்.ஜி கல்லூரி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • கடந்த ஆண்டு திருப்பூர் மாவட்டம் 96.38 சதவீதம் பெற்று முதலிடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.
    • 5001 மாணவர்களும், 6426 மாணவிகளும் என மொத்தம் 11,427 பேர் தேர்ச்சி பெற்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வை ஆண்கள் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் 1,952 பேரும், பெண்கள் பள்ளியை சேர்ந்த 4,431 மாணவிகளும், இருபாலர் பள்ளிகளை சேர்ந்த 19, 781 பேரும் என மொத்தம் 26,164 பேர் எழுதினர்.

    இந்தநிலையில் இன்று வெளியாக பிளஸ்-1 தேர்வு முடிவில் 24,917 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 1702 பேரும், மாணவிகள் 4237 பேரும், இருபாலர் பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் 18,978 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் திருப்பூர் மாவட்டம் 95.23 சதவீதம் பெற்று மாநில அளவில் 3-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டு திருப்பூர் மாவட்டம் 96.38 சதவீதம் பெற்று முதலிடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.

    அரசு பள்ளிகள் அளவில் 92.06 சதவீதம் பெற்று திருப்பூர் மாவட்டம் மாநில அளவில் 3-வது இடத்தை பிடித்துள்ளது. 78 அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 5 ஆயிரத்து 666 பேரும், மாணவிகள் 6746 பேரும் என மொத்தம் 12,412 பேர் தேர்வு எழுதினர். இதில் 5001 மாணவர்களும், 6426 மாணவிகளும் என மொத்தம் 11,427 பேர் தேர்ச்சி பெற்றனர்.

    கொரோனாவுக்கு முன் 2018, 2019 ஆகிய 2 ஆண்டுகளும் மாநிலத்தில் திருப்பூர் இரண்டாம் இடம் பெற்றது. கடந்த 2020ம் ஆண்டு 3 இடங்கள் பின்தங்கி, 5-ம் இடத்தை எட்டியது. 2021-ம் ஆண்டு அனைவரும் தேர்ச்சி பெற்றனர். கடந்த 2022ம் ஆண்டு பிளஸ் 1 தேர்வில் மாநிலத்தில் 11வது இடம் பெற்ற திருப்பூர் கடந்த 2023ம் ஆண்டு 96.83 சதவீத தேர்ச்சியுடன், 10 இடங்கள் முன்னேறி மாநிலத்தில் முதலிடம் பெற்று பாராட்டு பெற்றது. நடப்பாண்டு(2024) பிளஸ்- 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதித்த திருப்பூர், பிளஸ் 1 தேர்வில் 3-வது இடத்தை பிடித்துள்ளது.

    • பிரகாசை தொடர்பு கொண்ட பெண் ஒருவர் வங்கியில் இருந்து பேசுவதாக தெரிவித்துள்ளார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் நல்லூர் பிள்ளையார் கோவில் 2-வது வீதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 36). பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் ஒரு வங்கியின் கிரெடிட் கார்டு பெற்றிருந்தார்.

    இந்நிலையில் பிரகாசை தொடர்பு கொண்ட பெண் ஒருவர் வங்கியில் இருந்து பேசுவதாக தெரிவித்துள்ளார். இதனை நம்பிய பிரகாஷ் அந்த பெண் கேட்ட கேள்விகளுக்கு செல்போன் மூலம் பதில் அளித்துள்ளார். அப்போது கிரெடிட் கார்டு சேவையை நிறுத்த வேண்டும் என்று பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து அந்த பெண், செல்போனுக்கு ஒருமுறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல்(ஓ.டி.பி.) வரும் என்றும், அதனை தெரிவிக்குமாறும் கூறியுள்ளார். இதனை நம்பிய பிரகாஷ் கடவுச்சொல்லை பெண்ணிடம் தெரிவிக்கவே, சிறிது நேரத்தில் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை வாங்கியதாக பிரகாஷின் செல்போனுக்கு குறுந்தகவல் கிடைத்துள்ளது.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனே வங்கிக்கு சென்று முறையிட்டார். அப்போது வங்கியில் இருந்து யாரும் பேசவில்லை என்று தெரிவித்துள்ளனர். இதன் மூலம் தான் ஏமாற்றப்பட்டதை பிரகாஷ் உணர்ந்தார்.

    உடனே இது குறித்து சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். இருப்பினும் ரூ.1லட்சம் பறிபோனதால் விரக்தி அடைந்த பிரகாஷ், விஷம் குடித்து விட்டார். உடனடியாக உறவினர்கள் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பிரகாசை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நீண்ட நாட்களாகியும் அர்ஜூன் கிருஷ்ணன் பரிகார பூஜைகள் எதுவும் செய்யவில்லை. இதனால் பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார்.
    • சாமியார் அர்ஜூன் கிருஷ்ணன் நடத்தி வந்த கோவில் மற்றும் மாந்திரீக நிலையம் பூட்டப்பட்டுள்ளதுடன், சாமியார் தலைமறைவாகிவிட்டார்.

    திருப்பூர்:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த 39 வயது பெண் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அருள்புரத்தில் தங்கி அங்குள்ள தனியார் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் தனது கணவன் மற்றும் மகன் ஆகியோரை பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் நிலையில் தனது கணவன்-மகனுடன் சேர்ந்து வாழ விரும்பினார். இதற்காக அவர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.

    அப்போது யூ டியூப்பில் பல்லடம் அருகே பணிக்கம்பட்டியில் உள்ள அர்ஜூன் கிருஷ்ணன் என்ற சாமியார் மாந்திரீகம் மூலம் பல்வேறு பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் வீடியோ க்களை பார்த்துள்ளார். இதையடுத்து கணவரை தன்னுடன் சேர்த்து வைப்பதற்காக சாமியார் அர்ஜூன் கிருஷ்ணனின் வராகி அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு சாமியாரிடம் நடந்த விவரத்தை கூறியதுடன் கணவரை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு தெரிவித்துள்ளார்.

    அப்போது கணவன் மற்றும் மகனை சேர்த்து வைப்பதற்கான பரிகாரங்கள் செய்ய முன்பணமாக ரூ.10 ஆயிரம் கட்டுமாறு அர்ஜூன் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். உடனே அந்த பெண் ரூ.10ஆயிரம் பணத்தை கட்டியுள்ளார். கட்டிய சிறிது நாட்களுக்கு பின் பரிகாரம் செய்ய அதிக செலவாகும். ரூ.1.50 லட்சம் கொடுத்தால்தான் பரிகார பூஜைகளை ஆரம்பிக்க முடியும் என சாமியார் தெரிவித்துள்ளார்.

    கணவனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆசையில் அந்த பெண் தனது சக ஊழியர்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுவில் கடன் வாங்கி பணத்தை சாமியாரிடம் கொடுத்துள்ளார். ஆனால் நீண்ட நாட்களாகியும் அர்ஜூன் கிருஷ்ணன் பரிகார பூஜைகள் எதுவும் செய்யவில்லை. இதனால் பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். இதற்கு தனது வீட்டிற்கு வந்து பணத்தை பெற்று கொள்ளுமாறு சாமியார் தெரிவித்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து அர்ஜூன் கிருஷ்ணன் வீட்டிற்கு சென்ற நிலையில் அந்த பெண்ணை , சாமியார் கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. மேலும் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

    இதனால் பாதிக்கப்பட்ட பெண் திருப்பூர் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் மேற்கண்ட விவரங்களை தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கிய நிலையில், சாமியார் அர்ஜூன் கிருஷ்ணன் நடத்தி வந்த கோவில் மற்றும் மாந்திரீக நிலையம் பூட்டப்பட்டுள்ளதுடன், சாமியார் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    மேலும் பரிகார பூஜைகள் செய்வதாக கூறி 50 பெண்களிடம் பணம் பெற்று சாமியார் ஏமாற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சாமியாரை கைது செய்து விசாரித்தால் இந்த சம்பவத்தில் மேலும் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

    • சம்பவத்தன்று காலை பிச்சை எடுப்பதற்காக பெண்கள் 2பேரும் மத்திய பஸ் நிலையத்திற்கு வந்தனர்.
    • எஸ்கலேட்டர் பகுதிக்கு சென்ற 2 பேரும், கர்ப்பிணி போல் நடிப்பதற்காக தங்களது வயிற்றில் துணியை சுற்றி கொண்டிருந்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து கோவை, சேலம், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கும், திருப்பூரின் கிராமப்புற பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் தினமும் பஸ் நிலையத்திற்கு ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இதன் காரணமாக மத்திய பஸ் நிலையம் காலை முதல் இரவு வரை எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

    இந்தநிலையில் பயணிகளின் கூட்டத்தை பயன்படுத்தி சிலர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மது பிரியர்கள் குடித்து விட்டு ரகளையில் ஈடுபடுவது, பிச்சை எடுத்து பயணிகளை தொந்தரவு செய்வது உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்தநிலையில் மத்திய பஸ் நிலையத்தில் 2 பெண்கள் கர்ப்பிணி போல் சுற்றி திரிந்து பயணிகள் மற்றும் அங்குள்ள கடைக்காரர்களிடம் மருத்துவ செலவுக்காக பணம் பெற்று வந்தனர். கர்ப்பிணி என்பதால் பயணிகளும் தாமாக முன்வந்து பணம் கொடுத்தனர். இதனிடையே அவர்கள் ஒரு நாள் மட்டுமின்றி தொடர்ந்து பஸ் நிலையத்திற்கு வந்து பயணிகளிடம் பிச்சை கேட்டதுடன், திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் சுற்றி திரிந்து பொதுமக்களிடம் பிச்சை கேட்டு வந்துள்ளனர். இது பொதுமக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

    சம்பவத்தன்று காலை பிச்சை எடுப்பதற்காக பெண்கள் 2பேரும் மத்திய பஸ் நிலையத்திற்கு வந்தனர். பின்னர் அங்குள்ள எஸ்கலேட்டர் பகுதிக்கு சென்ற 2 பேரும், கர்ப்பிணி போல் நடிப்பதற்காக தங்களது வயிற்றில் துணியை சுற்றி கொண்டிருந்தனர். இதனை அந்த வழியாக சென்ற பயணிகள் சிலர் பார்க்கவே அதிர்ச்சிக்குள்ளாகினர். பின்னர் 2பேரையும் கையும் களவுமாக பிடித்து எச்சரித்தனர். பொதுமக்கள் சிலர் தாக்கவே, 2பேரும் தங்களை அடிக்காதீர்கள் என்றனர். பின்னர் பொதுமக்கள் பிடியில் இருந்து தப்பி சென்றனர்.

    இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • வாகனத்தின் பின்புறத்தில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர்.
    • விபத்து குறித்து மூலனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மூலனூர்:

    திண்டுக்கல் மாவட்டம் ராமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியம் ( வயது 56). இவர் தனது உறவினர்கள் 20 பேருடன் இன்று காலை லோடு ஆட்டோவில் திருப்பூர் மாவட்டம் மூலனூர் அருகே பட்டுத்துறை என்ற இடத்தில் உள்ள மலையாள கருப்பண்ணசாமி கோவிலில் வழிபடுவதற்காக சென்றார்.

    தாராபுரம் அருகே மூலனூர் அடுத்த துலுக்க வலசு அருகே செல்லும் போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் கவிழ்ந்தது.

    இதில் வாகனத்தின் பின்புறத்தில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். சிலர் வாகனத்தின் அடியில் சிக்கினர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த விபத்தில் 20 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை ஆம்புலன்ஸ் உதவியுடன் தாராபுரம் மற்றும் வெள்ளகோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் பழனிசாமி என்பவரின் மனைவி பொட்டியம்மாள் (55) இறந்தார். சத்யா (14), மணிமேகலை (35,) நாகரத்தினம் (36), மாரியம்மாள் (36), செல்வபிரியா(13), ஈஸ்வரி (39), மற்றொரு ஈஸ்வரி (30), லட்சுமி (47), சுப்பிரமணி (60) , பழனியம்மாள் ( 70) உள்பட 19 பேர் காயம் அடைந்தனர்.12 பேர் தாராபுரம் அரசு மருத்துவமனையிலும்,7 பேர் வெள்ளக்கோவில் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த விபத்து குறித்து மூலனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றிச்செல்லக்கூடாது என போலீசார் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இருப்பினும் சிலர் சரக்கு வாகனத்தில் பொதுமக்களை அழைத்து செல்கின்றனர். எனவே இதனை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து உள்பட 20 நாடுகள் பங்கேற்கின்றன.
    • வடக்கு பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் மிரட்டல் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    போர்ட் ஆப் ஸ்பெயின்:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடக்கிறது.

    இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்பட 20 நாடுகள் பங்கேற்கின்றன.

    ஏ பிரிவில் இந்திய அணி இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தானும் இதே பிரிவில் இருக்கிறது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் ஜூன் 9-ந் தேதி நியூயார்க்கில் மோதுகின்றன.

    இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் விடுத்து இருப்பதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) இன்று தெரிவித்து உள்ளது.

    வடக்கு பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் மிரட்டல் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதை டிரினிடாட் பிரதமரும் வெளிப்படுத்தி உள்ளார். இதை தொடர்ந்து போட்டி நடைபெறும் நகரங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்று ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.

    • அரசுப்பள்ளி மாணவர்கள் தேர்ச்சி மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • 3-வது முறையாக மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.

    திருப்பூர்:

    பிளஸ்-2 தேர்வில் 97.45 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. இது குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 97.45 சதவீதம் தேர்ச்சி பெற்றுக்கொடுத்த மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    தேர்ச்சி பெற்ற 23,242 மாணவர்களும், உயர்கல்வியை தொடர வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோள். இதுபோல் 95.75 சதவீதம் அரசுப்பள்ளி மாணவர்கள் தேர்ச்சி மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அரசு பள்ளிகள் அளவிலும் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. 3-வது முறையாக மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருப்பூர் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை பாராட்டு.
    • திருப்பூர் மாவட்ட மாணவர்கள், பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 10,810 மாணவர்கள், 13,039 மாணவிகள் என மொத்தம் 23,849 பேர் எழுதினர். இந்தநிலையில் இன்று வெளியான பிளஸ்-2 தேர்வு முடிவில் 10,440 மாணவர்கள், 12,802 மாணவிகள் என 23,242 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 97.45  சதவீத தேர்ச்சி ஆகும்.

    இதன் மூலம் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த திருப்பூர் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் திருப்பூர் மாவட்ட மாணவர்கள், பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிறந்த கல்வி அளித்த ஆசிரி யர்களுக்கு மாணவர்களின் பெற்றோர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். மேலும் ஆசிரியர்கள்-மாணவர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

    இதேப்போல் அரசு பள்ளிகள் அளவிலும் திருப்பூர் மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 77 அரசு பள்ளிகள் உள்ளன. இதில் 4,548 மாணவர்கள், 5,935 மாணவிகள் என மொத்தம் 10,483 பேர் எழுதினர்.

    இதில் 4,274 மாணவர்கள் ,5,763 மாணவிகள் என மொத்தம் 10,037 மாண வர்கள் தேர்ச்சி பெற்று ள்ளனர். இதன் மூலம் 97.75 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் சாதனை படைத்துள்ளது.

    பிளஸ் 2 பொதுத்தேர்வில் கடந்த 2021 - 2022 ம் கல்வியாண்டில் மாநிலத்தில் 5-ம் இடம் பெற்ற திருப்பூர் மாவட்டம் கடந்த 2022 - 2023-ம் கல்வியாண்டில் 3 இடங்கள் முன்னேறி 2-ம் இடம் பெற்றது.

    24 ஆயிரத்து 732 பேர் தேர்வு எழுதி 24 ஆயிரத்து 185 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்வு எழுதிய வர்களில் 547 பேர் மட்டும் தேர்ச்சி பெறவில்லை. 97.79 தேர்ச்சி சதவீதம் பெற்று திருப்பூர் மாநிலத்தில் 2-ம் இடம் பெற்று பாராட்டுக்களை பெற்றது.

    100 சதவீத தேர்ச்சி பெற வைத்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், முக்கிய பாடங்களில் சென்டம் பெற உதவிய வகுப்பாசிரியர் உட்பட ஆசிரிய, ஆசிரியை களுக்கு மாவட்ட நிர்வாகம், கல்வித்துறை சார்பில் காங்கயத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

    கடந்த ஆண்டு 2-ம் இடம் பெற்றாலும் 2019, 2020 ஆண்டுகளில் முதலிடம் பெற்று பாராட்டுகளை அள்ளிய திருப்பூர் நடப்பு 2023-24ம் கல்வியாண்டில் 97.45 சதவீதத்துடன் மீண்டும் முதலிடம் பெற்று புதிய சாதனையை படைத்துள்ளதாக திருப்பூர் மாவட்ட கல்வியாளர்கள் தெரிவித்தனர்.

    • கடந்த சில மாதங்களாக வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது.
    • அணையின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட கம்பி வேலி சேதமடைந்ததே இதற்கு காரணம்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்தி மலையில் உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி உள்ளது. அருவிக்கு மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உற்பத்தியாகும் குறுமலை ஆறு, பாரப்பட்டி ஆறு, கிழவிப்பட்டி ஓடை, உழுவி ஆறு, கொட்டை ஆறு, உப்பு மண்ணம் பள்ளம் உள்ளிட்ட ஆறுகள் மூலமாக மழைக்காலங்களில் நீர்வரத்து ஏற்படுகிறது.

    அப்போது வனப்பகுதியில் நீர்வழித்தடங்களில் தேங்கி இருக்கும் மருத்துவ குணமிக்க மூலிகைகள் தண்ணீருடன் கலந்து பஞ்சலிங்க அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. அதில் குளித்து புத்துணர்வு பெறுவதற்காக வெளியூர், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வருகை தருகின்றனர்.

    இந்த சூழலில் கடந்த சில மாதங்களாக வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக பஞ்சலிங்க அருவியின் நீர்பிடிப்பு பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள் நீர்வரத்தை முற்றிலுமாக இழந்து விட்டன. இதனால் பஞ்சலிங்க அருவி தண்ணீர் இல்லாமல் வெறுமனே காட்சி அளிக்கிறது.

    இதன் காரணமாக திருமூர்த்திமலைக்கு வருகை தருகின்ற சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றமடைந்து திரும்பிச் செல்கின்றனர். ஆனாலும் அருவிக்கு சென்று பார்வையிட்டு திரும்பிச் செல்வதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர். வெப்பத்தின் தாக்கம் குறைந்து வனப்பகுதியில் மழை பெய்து அருவிக்கு நீர்வரத்து ஏற்படும் என பக்தர்கள், சுற்றுலா பயணிகள் ஆவலோடு எதிர்பார்த்து காத்துள்ளனர்.

    கோவிலுக்கு வந்து விட்டு திரும்பி செல்கின்ற பக்தர்கள் குறைவான நீர் இருப்பு உள்ள திருமூர்த்தி அணைப்பகுதியில் இறங்கி ஆபத்தான முறையில் குளித்து வருகிறார்கள். அணையின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட கம்பி வேலி சேதமடைந்ததே இதற்கு காரணம். அதை புதுப்பிப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் விலைமதிப்பற்ற மனித உயிர் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. அணையில் சேதம் அடைந்த கம்பி வேலியை சீரமைத்தும், கோடைகாலம் முடியும் வரையில் தகுந்த போலீஸ் பாதுகாப்பையும் போடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நடனமாடி வனதேவதைக்கு விழா எடுத்த மக்கள்.
    • மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைந்தது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள கோடந்தூர், பொருப்பாறு, ஆட்டுமலை, ஈசல்தட்டு, தளிஞ்சி, தளிஞ்சிவயல், கருமுட்டி, காட்டுப்பட்டி, குலிப்பட்டி, மாவடப்பு, குருமலை, மேல்குருமலை உள்ளிட்ட குடியிருப்புகளில் மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள்.

    தற்போது நிலவும் கடும் வெப்பத்தின் காரணமாக வனப்பகுதி காய்ந்து விட்டது. அதைத்தொடர்ந்து வன தேவதைகளுக்கு விழா எடுத்து அதன் மூலமாக குளிர்வித்தால் மழைப்பொழிவு ஏற்படும் என்ற நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் அடிப்படையில் மலைவாழ் மக்கள் சாமிகளுக்கு விழா எடுத்து வருகின்றனர். அதன்படி கோடந்தூர் கட்டளை மாரியம்மன், சாப்ளிஅம்மாள், தளிஞ்சி கொண்டம்மாள் உள்ளிட்ட வன தேவதைகளுக்கு விழா எடுப்பது என மலைவாழ் மக்கள் முடிவு செய்து நோன்பு சாட்டினார்கள்.

    அதைத் தொடர்ந்து கம்பம் போடுதல் நிகழ்வு, மாவிளக்கு, பூவோடு எடுத்தல் நிகழ்ச்சியும் அம்மன் திருக்கல்யாணமும் நடைபெற்றது.

    விழாவை பாரம்பரிய இசைக் கருவிகளுடன் மலைவாழ் மக்கள் ஆடல் பாடல் நடனத்துடன் உறவினர்களுடன் சேர்ந்து மகிழ்வுடன் கொண்டாடினார்கள். முடிவில் மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைந்தது.

    இதே போன்று மாவடப்பு மற்றும் சம்பக்காட்டு பகுதியிலும் மழைப்பொழிவு வேண்டி வன தேவதைகளுக்கு மலைவாழ் மக்கள் விழா எடுத்தனர். சமவெளி பகுதியில் கிராமங்கள் மற்றும் நகரப்புறத்தில் உள்ள கோவில்களில் மழைப் பொழிவு வேண்டி சிறப்பு யாகம் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்று வருகிறது.

    ×