search icon
என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • முக்கிய சாலைகளில மழைநீர் குளம்போல் தேங்கியது.
    • நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை.

    ராமேசுவரம்:

    தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கோடை வெயில் தாக்கம் அதிகளவில் இருந்தது. பெரும்பாலான மாவட்டங்களில் 100 டிகிரிக்குள் வெயில் பதிவானது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். கோடை மழையும் சரிவர பெய்யாதததால் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி முதல் மாநிலம் முழுவதும் பரவலாக கோடை மழை வருகிறது. இதனால் வெப்பம் தணிந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் கடந்த சில தினங்களாக காலை மற்றும் மாலை நேரங்களில் லேசான சாரல் மழை பெய்தது. சில இடங்களில் அரை மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    நேற்று காலை முதல் ராமநாதபுரம் மாவட்டத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது சாரல் மழை பெய்தது. நேற்று மாலை ராமேசுவரம், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்தன. சிறிது நேரத்தில் மழை கொட்ட தொடங்கியது. இந்த கோடை மழை அவ்வப்போது நின்று நின்று பெய்தது.

    பின்னர் நள்ளிரவு முதல் விடிய விடிய ராமேசுவரம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் மழை பெய்தது. இதனால் ராமேசுவரம் கோவில், அப்துல்கலாம் மணிமண்டபம், பஸ் நிலையம் மற்றும் முக்கிய சாலைகளில மழைநீர் குளம்போல் தேங்கியது.

    மழை காரணமாக நேற்று இரவு ராமேசுவரம் பகுதியில் மின்தடை ஏற்பட்டது. பல மணி நேரம் ஆன பின்னும் மின்சாரம் வரவில்லை. இதனால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அவதியடைந்தனர். இன்று காலை 7 மணிக்கு ராமேசுவரத்திற்கு மின்விநியோகம் செய்யப்பட்டது.

    ராமேசுவரம் மன்னார்வளைகுடா, பாக்நீரினை கடலில் 55 கி.மீ வேகத்திற்கு சூறாவளி காற்று வீசக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து தற்போது மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல கூடாது என தடை விதித்து மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அப்துல்காதர் ஜெய்லானி உத்தரவிட்டுள்ளார்.

    இதனால் ராமேசுவரம்,பாம்பன்,தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் அந்தந்த துறைமுகங்களில் படகுகள் பாதுகாப்புடன் நிறுத்தப்பட்டுள்ளது.

    மதுரை மாவட்டத்தில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. புறநகர் பகுதிகளான மேலூர், வாடிப்பட்டி, சோழவந்தான், உசிலம்பட்டியில் மழை பெய்தது. மதுரை நகரில் நேற்று மாலை குளிர்ந்த காற்றும் வீசியது. அதனை தொடர்ந்து இரவு 7.30 மணியளவில் மழை பெய்தது.

    பெரியார் பஸ் நிலையம், சிம்மக்கல், கோரிப்பாளையம், புதூர், ஒத்தக்கடை, திருப்பரங்குன்றம், அவனியாபுரம், வில்லாபுரம், கைத்தறிநகர், வண்டியூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டியது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

    கடந்த வாரம் முழுவதும் 105 டிகிரிக்கு வெயில் பதிவாகி வந்த நிலையில் திடீரென கடந்த 2 நாட்களாக மதுரை நகரில் மழை பெய்து வருவது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

    • வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளார்.

    கமுதி:

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இதில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ரஹ்மானியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி காவிய ஜனனி 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

    அவர் ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்களும், தமிழ் பாடத்தில் மட்டும் 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

    கமுதி தாலுகா பேரையூரை சேர்ந்த தர்மராஜ்-வசந்தி தம்பதியின் மகளான மாணவி காவிய ஜனனிக்கு பள்ளி ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

    • பேருந்தில் பயணித்த 24 ஆண்கள், 15 பெண்கள் காயமடைந்தனர்.
    • காயமடைந்த பயணிகள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    கீழக்கரை:

    ராமநாதபுரம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து கீழக்கரை நோக்கி அரசு நகர் பேருந்து ஒன்று புறப்பட்டது. இந்த பேருந்தில் 28 ஆண்கள், 18 பெண்கள் உள்பட மொத்தம் 46 பயணிகள் பயணம் செய்தனர். இந்த பேருந்தை ஆர்.எஸ்.மடை கிராமத்தை சேர்ந்த ஓட்டுநர் ஆத்திமுத்து(வயது 50) என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் திருப்புல்லாணி அருகே சென்று கொண்டிருந்தபோது பேருந்து தாறுமாறாக ஓடியதை கண்டு பயணிகள் கூச்சலிட்டுள்ளனர்.

    ஓட்டுநர் அலட்சியமாக செல்போனில் பேசியபடியே பேருந்தை ஓட்டி சென்றதாக பயணிகள் தெரிவித்தனர். ஆனால் இதை கவனத்தில் கொள்ளாத ஓட்டுநர் தொடர்ந்து அலட்சியமாக செல்போனில் பேசியபடி பேருந்தை ஓட்டி சென்றுள்ளார்.

    இந்த சூழலில் திருப்புல்லாணி அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த டிராக்டருக்கு வழி கொடுப்பதற்காக பேருந்தின் ஓட்டுநர் பேருந்தை சாலையின் ஓரமாக இறக்கினார்.

    அப்போது திடீரென பஸ் நிலைத்தடுமாறி சாலையோரம் உள்ள பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 24 ஆண்கள், 15 பெண்கள் காயமடைந்தனர். உடனடியாக அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து தலைகுப்புற கவிழ்ந்து கிடந்த பேருந்தில் சிக்கிய பயணிகளை மீட்டனர். மேலும் மீட்புபடையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசாரும், மீட்புப்படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பஸ்சுக்குள் சிக்கியிருந்த அனைவரையும் விரைவாக உயிருடன் விரைவாக மீட்டனர். இந்த விபத்தில் காயமடைந்த பயணிகள் அனைவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கீழக்கரை தாசில்தார் பழனிக்குமார் காயமடைந்த சிலரை தனது வாகனத்தில் ஏற்றி உடனடியாக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

    இந்த விபத்து குறித்து திருப்புலாணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.செல்போனில் பேசியபடியே டிரைவர் பேருந்தை அலட்சியமாக ஓட்டி சென்றதே விபத்துக்கு காரணம் என பயணிகள் தெரிவித்தனர். பொதுமக்களை ஏற்றி செல்லும் போக்குவரத்து

    துறை ஊழியர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு பேருந்துகளை இயக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபடுவது வழக்கம்.
    • 22 தீர்த்தங்களில் நீராடி ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் ஸ்ரீராமர்,சீதை,அனுமன் வழிபட்ட சிவாலாயமாகும். இந்துக்களின் தீர்த்த மூர்த்தி ஸ்தலமாக விளங்குகிறது. அமாவாசை நாட்களில் பக்தர்கள் தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபடுவது வழக்கம்.

    இந்த நிலையில், இன்று சித்திரை மாத சர்வ அமாவா சையை முன்னிட்டு அதி காலையில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் நீராடி முன்னோர்களுக்கு திதி, தர்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    இதன் பின்னர் ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்று கோவிலுக்குள் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீராடி ராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர்.

    பக்தர்கள் வருகை அதிகளவில் இருந்ததால் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் உத்தரவின் பேரில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    மேலும் அக்னி தீர்த்த கடற்கரையில் பக்தர்கள் விட்டுச்செல்லும் துணிகளை நகராட்சி நிர்வாகம் சார்பில் உடனுக்குடன் அகற்றும் பணியில் 50-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். குடிநீர் வசதிகள் செய்யப்பட்டிருந்தது.

     ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக நகராட்சி நிர்வாகம் சார்பில் கிழக்கு வாசல் பகுதியில் 500 மீட்டர் வரை தற்காலிக நிழல் தரும் பந்தல் அமைக்கப்பட்டது.

    ராமேசுவரம் ராம நாதசுவாமி கோவிலுக்கு நாள் தோறும் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்லுகின்றனர்.மேலும் திருவிழா நாட்கள் அமாவாசை போன்ற காலங்களில் பக்தர்கள் அதிகளவில் வருகை தருகின்றனர். கிழக்கு வாசல் வழியாக சுவாமி தரி சனத்திற்கு பக்தர்கள் சென்று வருகின்றனர்.

    இந்நிலையில் தற்போது கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில் பக்தர்கள் வசதிக்காக நகராட்சி நிர்வாகம் சார்பில் கிழக்கு வாசல் பகுதியில் 500 மீட்டர் தூரம் வரையில் நிழல் தரும் வகையில் தற்காலிக பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

    தரிசனம் செய்ய செல்லும் பக்தர்கள் காலணி அணி யாமல் செல்லும் நிலையில் வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்த நிலையில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளதற்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    • வருகிற 9-ந்தேதி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
    • கள்ளக்கடல் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படும்.

    ராமேசுவரம்:

    தமிழக பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று முதல் வருகிற 9-ந்தேதி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதன் தொடர்ச்சியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதற்கிடையே தமிழகத்தின் தென் கடல் பகுதியில் எந்த வித அறிவிப்பும் இன்றி திடீரென்று ஏற்படும் கடல் சீற்றமான கள்ளக்கடல் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படும் என இந்திய வானிலைமையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் கரையோரம் நிறுத்தப்பட்டுள்ள படகுகள் நீண்ட இடைவெளி விட்டு பாதுகாப்புடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நேற்று கேரளா மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் கள்ளக்கடல் நிகழ்வு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி கன்னியாகுமரி, திருவனந்தபுரம், பூந்துறை உள்ளிட்ட கடலோர பகுதிகளில் கடல் நீர் ஊருக்குள் புகுந்தது.

    இந்த நிலையில், தென் கடல் பகுதியான தனுஷ் கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, மூக்கை யூர் உள்ளிட்ட கடல் பகுதியில் வழக்கத்தை விட காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் கடல் சீற் றத்துடன் காணப்பட்டது.

    கரையோரம் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றும் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து சுற்றுலா பயணிகளுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    • வலி நிவாரண மாத்திரைகள் கடத்தப்பட இருப்பதாக திருப்புல்லாணி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • டிரைவர் ஸ்ரீதரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கீழக்கரை:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கடல் வழியாக அண்டை நாடான இலங்கை 30 மைல் தொலைவில் உள்ளது. இதன் காரணமாக இரு நாடுகளிடையே அடிக்கடி கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

    குறிப்பாக இலங்கையில் இருந்து தங்கம், போதை பொருட்கள் கடத்தப்படுவதும், இங்கிருந்து பீடி இலைகள், மஞ்சள், வலி நிவாரண மாத்திரைகள் உள்ளிட்ட பொருட்கள் கடத்துவதும் நடந்து வருகிறது. கடத்தலை தடுக்க ராமநாதபுரம் மாவட்டம் கடலோர கடற்படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    கடந்த சில மாதங்களில் மட்டும் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 10 கிலோவிற்கும் மேற்பட்ட தங்க கட்டிகளை கடத்தல் காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளனர்.

    இந்த நிலையில் ராமநாதபுரம் அருகே உள்ள பெரியபட்டிணம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு வலி நிவாரண மாத்திரைகள் கடத்தப்பட இருப்பதாக திருப்புல்லாணி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து இன்று காலை போலீசார் பெரியபட்டிணம் கடற்கரை ரோட்டில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை மறித்து அதிலிருந்த நம்பியான் வலசை சேர்ந்த டிரைவர் ஸ்ரீதர் என்பவரிடம் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார்.

    இதைத் தொடர்ந்து போலீசார் வேனை சோதனையிட்டனர். அதில் பெட்டி பெட்டியாக 11 லட்சத்து 88 ஆயிரம் வலி நிவாரண மாத்திரைகள் இருப்பது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.2.37 கோடி ஆகும்.

    இலங்கைக்கு கடத்துவதற்காக வேன் மூலம் கடற்கரைக்கு கொண்டு சென்ற போது போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதற்கு மூளையாக செயல்பட்டது யார்? யாருக்காக கடத்தி செல்லப்படுகிறது? என டிரைவர் ஸ்ரீதரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இலங்கையில் ஏற்பட்டு உள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்கள், மருந்து, மாத்திரைகள் விலை அதிகரித்துள்ளன. வலி நிவாரண மாத்திரைக்கு அங்கு தேவை அதிகமாக உள்ளதால் இங்கிருந்து கடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • உணவில், கருவாடுக்கு எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு.
    • உள்ளூர் சந்தை மட்டுமின்றி வெளியூர்களுக்கும் ஏற்றுமதியாகிறது.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் நீண்ட கடற்கரையை கொண்டுள்ள பகுதியாக திகழ்கிறது. விவசாயத்திற்கு அடுத்தபடியாக இருக்கும் தொழில் மீன்பிடி தொழில் உள்ளது. சுமார் 1,650-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறது.

    ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலாளர்களாக உள்ளனர். இந்த பகுதியில் கிடைக்கும் இறால்மீன், நண்டு, கனவாய் உள்ளிட்ட பல்வேறு வகையாக மீன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் அன்னிய செலாவணியும் அதிக அளவில் கிடைக்கிறது. ஆனால் மீன்களை காய வைத்து கருவாடு ஆக்கினால் அதன் சுவையே தனித்தன்மை கொண்டது.

    தமிழர்களின் உணவில், கருவாடுக்கு எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு. ஆனால் ஏனோ, மீனை உணவில் சேர்த்து கொள்ளும் அளவுக்கு கருவாடை சேர்த்து கொள்வதில்லை. ஒருவேளை அதன் வாடை காரணமாகவும் இருக்கலாம் என்ற கருத்தும், அல்லது அதன் சுவை சிலருக்கு பிடிக்காமல் இருப்பதும் காரணமாக கூறப்படுகிறது. எனினும், நிறைய மருத்துவ குணங்களை இந்த கருவாடுகள் ஒளித்து வைத்து இருக்கிறது.

    கோடை வெயில் கொளுத்தும் நிலையில் பாம்பனில் மீன்களைக் கருவாடாக்கும் பணியில் பெண்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

    அரியவகை மீன்கள் கிடைக்கும் பாம்பன் பகுதியில் விற்பனைக்குப் போக மிஞ்சும் மீன்கள் மற்றும் கருவாட்டுக்கு நல்ல சுவையுள்ள மீன்களைத் தேர்ந்தெடுத்து கருவாடாக்கி வெளி மாவட்டம் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இங்கு தயார் செய்யப்படும் கருவாடு உள்ளூர் சந்தைகள் மட்டுமில்லாமல் வெளியூர்களுக்கும் அதிகளவில் ஏற்றுமதியாகிறது. மீன்பிடி தடைக்காலம் என்பதால் மீன்களைக் கருவாடாக்கும் பணி பாம்பனில் மும்முரமாக நடந்து வருகிறது.

    இந்நிலையில், மீன்பிடி தடைக்காலம் தொடங்கிய நிலையில் நாட்டுப்படகு மீனவர்கள் மட்டுமே மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாகக் கோடை வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியதால் டன் கணக்கிலான மீன்களைக் கருவாடாக காய வைக்கும் பணியில் மீனவ பெண்கள் பாம்பன் பாலத்தின் கீழ் ஈடுபட்டு வருகின்றனர்.

     இதில், மருத்துவ குணம் கொண்டுள்ள நெத்திலி, திருக்கை, சாவாளை, வாழை, நகரை, கட்டா, மாசி, கனவாய், பால்சுறா போன்ற மீன்களை அதிகளவில் கருவாடாக்கி வருகின்றனர். தற்போது மீன் வரத்தினை பொறுத்து விலை இருக்கும் நிலையில், தடைக்காலம் என்பதால் கருவாடு விலை அதிகரித்துள்ளது.

    அசைவ உணவுகளிலேயே, அதிக கொழுப்பு சத்து இல்லாத உணவு இந்த கருவாடுதான். 80-85 சதவீதம் வரை புரதம் இந்த கருவாடில் உள்ளது. கருவாட்டினை அதிக அளவில் எடுத்துக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும்.

    கருவாடுகளில் ஆண்டி ஆக்ஸிடன்ட் எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக காணப்படுவதால், இருமல் மற்றும் சளி உள்ளவர்களுக்கு கருவாட்டு குழம்பு சிறந்த மருந்தாகும். உடல் நலம் குன்றியவர்கள் கருவாட்டுக் குழம்பினை எடுத்துக் கொண்டால், உடல் நலம் தேறுவார்கள் என்பது நம்பிக்கையுடன் கூடிய மருத்துவ முறையாக இன்றும் கருதப்படுகிறது.

    சளித் தொல்லை, இருமல் பிரச்சினை உள்ளவர்கள் கருவாட்டுச்சாறு எடுத்துக்கொள்வது சிறந்த மருந்தாக இருக்கும் என்று கருத்து நிலவுகிறது. கருவாடு சாப்பிடுவதால் பூச்சிகளை அகற்றும். பித்தம், வாத, கப நோய்களைக் கட்டுப்படுத்தும் தன்மை இந்த கருவாடுக்கு உண்டு. மாதவிலக்கு பலவீனம், சீரமைப்பிற்கும், உடல் தேற்றத்திற்கும் இந்த சுறா கருவாடு உதவுகிறது. கருவாடு எலும்பு மற்றும் பற்களை உறுதிப்படுத்துகிறது.

    கொடுவா கருவாடு வாங்கி குழம்பு வைத்தால், அதுவே பலருக்கு மருந்தாகிவிடும். காரணம், கொடுவாமீனை விட கொடுவா கருவாடில்தான் சத்துக்கள் அதிகம் உள்ளது. 100 கிராம் கொடுவா மீன், நமக்கு 79 கலோரி ஆற்றலை தருகிறது என்றால், 100கிராம் கொடுவா கருவாடு, 266 கலோரி ஆற்றலை நமக்கு தருகிறதாம்.

    அதாவது, கொடுவாமீனுடன் ஒப்பிடும்போது, புரதச்சத்து 4 மடங்கும், தாதுப்புக்களின் செறிவு 10 மடங்கும், இரும்புச் சத்து 5 மடங்கும், சுண்ணாம்புச்சத்து 2 மடங்கும் அதிகமாக இருக்கிறதாம்.

    இந்த கருவாடை சாப்பிட்டால், உடல்பலவீனம் மறைந்து, நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். ரத்த சோகை உள்ளவர்களுக்கு சிறந்த தீர்வு இந்த கருவாடு. அதுபோலவே, கெளுத்தி மீனைவிட, உப்பங்கெளுத்தி கருவாட்டில்தான் சத்து அதிகம்.

    சீலா மீனைவிட, சீலா கருவாட்டில்தான் சத்து அதிகம். இறால் கருவாடை அடிக்கடி உணவில் பயன்படுத்தினால், ரத்த விருத்திக்கு மிகவும் நல்லது. வாய்வுப் பிடிப்பு, பசிமந்தம், மூட்டுவலி, அரிப்பு, வயிறு உப்புசம் போன்றவற்றிலிருந்தும் விடுபடலாம். இன்னும் ஏராளமான கருவாடுகள் இருக்கின்றன. ஆனால், எல்லா கருவாடுமே நன்மை தரக்கூடியதுதான்.

    • பாம்பன் ரெயில் தூக்கு பாலத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
    • வரும் செப்டம்பர் மாதம் ரெயில் போக்குவரத்து தொடங்கிட பணிகள் தீவிர மடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம்-ராமேசுவரம் தீவுப்பகுதியை இணைக்கும் வகையில் 2.2 கிலோ மீட்டர் தொலைவில் கடலில் 1914-ம் ஆண்டு கப்பல்கள் வந்து செல்ல திறந்து மூடும் வகையில் மீட்டர் கேஜ் ரெயில் பாதை அமைக்கப்பட்டது.

    இந்த வழித்தடத்தில் தொடர்ந்து ரெயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் 2007-ம் ஆண்டு மீட்டர் கேஜ் பாதை மாற்றப்பட்டு அகல ரெயில் பாதை அமைக்கப்பட்டு ரெயில் போக்குவரத்து நடைபெற்று வந்தது.

    இந்நிலையில், பாம்பன் ரெயில் தூக்கு பாலத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதன் பின்னர் 2019-ம் ஆண்டு ரூ.560 கோடி மதிப்பிட்டில் அதிநவீன தொழில் நுட்பத்துடன் தூக்கி இறக்கும் வகையில் புதிய ரெயில் பாலம் கட்டுமான பணி தொடங்கியது.

    இதில் மண்டபத்தில் இருந்து பாலத்தின் மையப் பகுதி வரை ரெயில் தண்டவாளங்கள் முழுமையாக அமைக்கப்பட்டுள்ளது. பாம்பனில் இருந்து மையப் பகுதி வரை பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் கப்பல்கள் வந்து செல்லும் வகையில் மையப்பகுதியில் அமைக்கப்படும் தூக்கி இறக்கும் பாலம் 600 டன் எடை உள்ளதால் கொண்டு செல்லும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் 10 நாட்களுக்குள் அந்த பணி நிறைவடைந்து அதிக குதிரை திறன்கொண்ட மின் மோட்டர் மூலம் தூக்கி இறக்கிடும் வகையில் இணைப்புகள் பொருத்தப்பட்டு அதற்கான பணிகள் நடைபெறும்.

    இதன் பின்னர் பாம்பன் பகுதியில் இருந்து மையப் பகுதிக்கு தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெறும் என ஊழியர்கள் தெரிவித்தனர். மேலும் வரும் செப்டம்பர் மாதம் ரெயில் போக்குவரத்து தொடங்கிட பணிகள் தீவிர மடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கும்பாபிஷேகத்திற்கு யாகசாலை பூஜை கணபதி ஹோமத்துடன் கடந்த 24-ந் தேதி தொடங்கியது.
    • சிவாச்சாரியார்கள் வேதம் முழங்க மங்கள வாத்தியத்துடன் கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    பனைக்குளம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை அடுத்த தங்கச்சிமடம் ராஜா நகரில் நடைபெற்ற கோவில் கும்பாபிஷேகத்தில் மும்மதத்தினர் சீர்வரிசையுடன் வந்து கலந்து கொண்ட நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தங்கச்சி மடத்தில் இஸ்லாமியர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் என மும்மதத்தினரும் இணைந்து மத நல்லிணக்கத்துடன் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

    இந்நிலையில் தங்கச்சி மடம் ராஜா நகரில் புதிதாக கட்டப்பட்ட ராஜ பெரிய கருப்பசாமி மற்றும் ராக்காச்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு யாகசாலை பூஜை கணபதி ஹோமத்துடன் கடந்த 24-ந் தேதி தொடங்கியது.

    நேற்று காலை சிவாச்சாரியார்கள் வேதம் முழங்க மங்கள வாத்தியத்துடன் கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இந்த கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் பூ, பழம், மாலை, இனிப்பு குத்து விளக்கு உள்ளிட்ட சீர்வரிசைகளுடன் ஊர்வலமாக வந்து கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து நெற்றியில் விபூதி இட்டு தீபாராதனை எடுத்துக் கொண்டனர்.

    கோவிலுக்கு வந்த இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவர்களை அன்புடன் வரவேற்ற இந்துக்கள் அவர்கள் கொடுத்த சீர்வரிசைகளை பெற்று கொண்டு அன்பை பரிமாறிக் கொண்டனர்.

    தங்கச்சிமடத்தில் மும்ம தத்தினர் கலந்து கொண்டு மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நடை பெற்ற கோவில் கும்பாபிஷேக விழா அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து இருவரையும் கைது செய்தனர்.
    • லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் பகுதியை சேர்ந்தவர் முகமது பிலால். இவர் தனது வீட்டின் மேலே செல்லும் மின்சார கம்பியை மாற்றி அமைக்க வேண்டி மனு செய்து இருந்தார். மேலும் அதற்கான கட்டணம் ரூ.42 ஆயிரத்து 900-ஐ ஆன்லைன் மூலம் செலுத்தி விட்டு தேவிபட்டினம் மின் உதவி பொறியாளர் அலுவலகத்தில் பணிபுரியும் வணிக ஆய்வாளர் ரமேஷ் பாபு என்பவரை சந்தித்து கடந்த ஒரு மாதமாகவே முறையிட்டு வந்துள்ளார்.

    இது சம்பந்தமாக நேற்று வணிக ஆய்வாளரை சந்தித்து மனு சம்பந்தமாக கேட்டபோது உங்க வேலை சீக்கிரம் நடக்க வேண்டுமானால் உதவி பொறியாளருக்கு ரூ.3 ஆயிரமும், ஊழியர்களுக்கு கொடுக்க ரூ.6 ஆயிரமும் என மொத்தம் ரூ.9 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    முகமது பிலால் இன்று காலை மீண்டும் வணிக ஆய்வாளரை சந்தித்தபோது ரூ.9 ஆயிரம் பணத்தை கொடுத்தால் மட்டுமே வேலை நடக்கும் என்று கறாராக கூறியுள்ளார். இந்நிலையில் லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர் ராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரின் அறிவுத்தலின்பேரில் ரசாயணம் தடவிய ரூ.9 ஆயிரத்தை வணிக ஆய்வாளர் ரமேஷ் பாபுவிடம் இன்று காலை முகமது பிலால் கொடுத்தார். அப்போது அதில் ரூ.3 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு மீதி பணம் ரூ.6 ஆயிரத்தை அங்கு பணிபுரியும் வயர் மேன் கந்தசாமி என்பவரிடம் கொடுக்க சொல்லியுள்ளார்.

    அதன்படி இருவரும் ரசாயணம் தடவிய பணத்தை பெற்றுக்கொண்ட போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து இருவரையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் அலுவலக உதவி மின் பொறியாளர் செல்வி என்பவருக்கு முக்கிய பங்கு இருப்பது தெரிய வந்துள்ளதால் அவரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    • இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள நீச்சல் வீரர்கள் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி நீந்தி வருவதை ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    ராமேசுவரம்:

    தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு 13 பேர் நீந்திய நிலையில் இன்று அதிகாலையில் ஒருவர்க்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். உடல் ராமேசுவரம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது குறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள நீச்சல் வீரர்கள் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி நீந்தி வருவதை ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், கர்நாடாக மாநிலம் பெங்களுர் மாவட்டம் பகுதியை சேர்ந்த கோபால்ராவ்(78) தலைமையில் 13 பேர் 22 ஆம் தேதி தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை நீந்தி வருவதற்கு ராமேசுவரம் வருகை தந்தனர்.

    இதனைதொடர்ந்து, 31 பேர் கொண்ட குழுவினர் ராமேசுவரம் சங்குமால் கடற்கரையில் இருந்து 22 ஆம் தேதி படகில் தலை மன்னார் சென்றனர். இன்று அதிகாலை 12.10 மணிக்கு 13 பேர் கடலில் குதித்து நீந்த தொடங்கிய நிலையில் இரண்டு மணி நேரம் வரை நீந்திய நிலையில் திடிரென கோபால் ராவுக்கு உடல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. படகில் இருந்த மருத்துவ குழுவினர் அவரை மீட்டு பரிசோதனை செய்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டது தெரிய வந்தது.

    இதனைதொடர்ந்து, நீந்தி வருவதை ரத்து செய்து விட்டு உயிரிழந்தவர் உடலை தனுஷ்கோடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்த ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இது குறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த சில வாரங்களாக வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்தனர்.
    • இலங்கையில் இருந்து படகு மூலம் ஒரு சிறுவன் உள்ளிட்ட 3 பேர் படகு மூலம் தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கு வந்தனர்.

    ராமேசுவரம்:

    இலங்கையில் இருந்து படகு மூலம் சிறுவன் உள்ளிட்ட 3 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்தனர். அவர்களை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பாதுகாப்புடன் மண்டபம் முகாமிற்கு அழைத்து சென்றனர்.

    இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த சில வாரங்களாக வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்தனர்.

    அவர்களிடம் போலீசாரும், வெளியுறவு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி பின்பு அவர்களை மண்டபம் முகாமில் அமைந்துள்ள இலங்கை தமிழர்கள் மறு வாழ்வு மையத்திற்கு அனுப்பி வைத்து வருகின்றனர். அங்கு அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட குடியிருப்புகளில் குடும்பம் வாரியாக தனித்தனி வீடுகளில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்நிலையில் இன்று இலங்கையில் இருந்து படகு மூலம் ஒரு சிறுவன் உள்ளிட்ட 3 பேர் படகு மூலம் தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கு வந்தனர்.

    அவர்களை குறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு மீனவர்கள் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார் அரிச்சல் முனையில் அகதிகள் வந்திறங்கிய பகுதிக்கு சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்களிடம் நடத்தி விசாரணையில் மட்டக் களப்பு பகுதியை சேர்ந்த கஜேந்திரன்(45),அவரது மகன் சஜித்மேனன்(8) சிவனேசுவரன்(49) என்பது தெரியவந்தது.

    இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடுமையான விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளதால் போதிய வருவாயின்றி தவிப்பதாகவும் இதனால் படகு மூலம் தனுஷ்கோடிக்கு வந்ததாகவும் தெரிவித்தனர்.

    இதனைதொடர்ந்து, மண்டபத்தில் உள்ள கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அவர்கள் மண்டபம் முகாமிலில் உள்ள இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு மையத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். 

    ×