search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திதி"

    • தர்ப்பணம் கொடுக்க ஏராளமானோர் திரண்டதால் முதலைப்பண்ணை பகுதியில் கூட்டம் அலை மோதியது.
    • சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்றுவிடமால் இருக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    ஒகேனக்கல்:

    தை அமாவாசை நாளில் காவிரியில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தால் குடும்பத்தில் வளம் செழிக்கும் என்பது ஐதீகம். வருடத்தின் ஆடி, புரட்டாசி, தை மாதங்களில் வரும் முக்கிய அமாவாசை நாட்களில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

    இதைத்தொடர்ந்து தை அமாவாசையான இன்று ஒகேனக்கல்லில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். முதலைப் பண்ணை பகுதியில் காவிரி கரையில் ஏராளமான பொதுமக்கள் வாழை இலை, பச்சரிசி, தேங்காய், பழம், காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட வற்றை வைத்து பூஜைகள் செய்து முன்னோர்களை நினைத்து வழிபட்டனர்.

    பூஜை செய்த பொருட்களை காவிரி ஆற்றில் விட்டனர். பின்னர் அவர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி அங்குள்ள காவிரி அம்மனை வழிபட்டனர்.

    இதில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், வேலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் என ஏராளமானவர்கள் ஒகேனக்கல்லுக்கு வந்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். ஒகேனக்கல்லில் இன்று தர்ப்பணம் கொடுக்க ஏராளமானோர் திரண்டதால் முதலைப்பண்ணை பகுதியில் கூட்டம் அலை மோதியது.

    இதனால் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும், சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்றுவிடமால் இருக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் கர்நாடகா அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதால் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து இன்றும் வினாடிக்கு 300 கனஅடியாக நீடித்து வருகிறது. இதன் காரணமாக மெயினருவி, சினிபால்ஸ் ஆகிய அருவிகளில் தண்ணீர் குறைந்த அளவே கொட்டுகிறது.

    இருந்தபோதிலும் சுற்றுலா பயணிகள் அருவியிலும், காவிரி ஆற்றில் தேங்கிய உள்ள நீரிலும் குளித்து மகிழ்ந்தனர்.

    ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால், பஸ் நிலையம், கடைவீதி ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டன.

    • தாமிரபரணி நதியில் நீராடி பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும்.
    • கர்மவினைகள் நீங்கி நல்வாழ்வு பெற பெருமாள் அருள்புரிவார்.

    வியதீபாதம் யோகத்தில் ஒருவன் பிறந்தால், அவன் குடும்பத்தில் மோட்சம் அடையாத ஆன்மாக்களின் சாபம் ஏற்படும். அப்படி இந்த யோகத்தில் பிறந்தவரோ அல்லது அவரது தந்தையோ, ஒவ்வொரு மாதத்தில் வருகின்ற வியதீபாதம் யோக நாளில் (ஜோதிடர் மூலம் இந்த நாளை அறிந்து கொள்வதே சரியானது)

    அதிகாலை நேரத்தில் இந்தத் திருத்தலத்தில் உள்ள தாமிரபரணி நதியில் நீராடி பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும். பின்னர் நதிக்கரையில் உள்ள கோவிலில் எழுந்தருளியுள்ள பக்தவத்சலப் பெருமாளை வணங்கி, அர்ச்சனை மற்றும் ஆராதனைகளைச் செய்ய வேண்டும். பின்னர் தங்களால் முடிந்த அளவு (குறைந்தது 10 பேருக்கு) அன்னதானம் செய்தால், பித்ரு தோஷம் மற்றும் கர்மவினைகள் நீங்கி நல்வாழ்வு பெற பெருமாள் அருள்புரிவார்.

     பரிகாரம் செய்வது எப்படி?

    அசுப யோகங்களின் தோஷம் உள்ளவர்கள், முதலில் இந்தத் திருத்தலத்தின் புனித நீரான தாமிரபரணி நதியில் நீராட வேண்டும். நீராடும்போது உடுத்தி இருந்த ஆடையை அங்கேயே களைந்து, அதற்கென வைக்கப்பட்டிருக்கும் தொட்டியில் போட்டுவிட்டு, புதிய ஆடையை அணிந்துகொள்ள வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும், பழைய ஆடைகளை ஆற்றில் விட்டு, அதனை மாசுபடுத்தக்கூடாது.

    பின்னர் ஆலயத்திற்குள் சென்று பக்தவத்சலப் பெருமாள் முன்பாக நின்று, அவரை வழிபட வேண்டும். பெருமாளுக்கு உகந்த துளசி மாலையை வாங்கிச் சென்று, பூஜை செய்யும் பட்டாச்சாரியாரிடம் கொடுத்து சுவாமிக்கு அணிவிக்கச் செய்ய வேண்டும். அதோடு சுத்தமான நெய் வாங்கிச் சென்று, சுவாமியின் முன்பாக இருக்கும் விளக்கில் சேர்க்கச் சொல்ல வேண்டும். பின்னர் உங்களது குறைகள் தீர இறைவனை வழிபட வேண்டும்.

    இறுதியாக நாம் செய்ய வேண்டிய ஒன்று உள்ளது. அது என்னவென்றால், கோவிலில் இருந்து வீட்டிற்கு வரும் முன்பாக, கோவிலிலோ, அல்லது வரும் வழியிலோ குறைந்தது 10 பேருக்கு கட்டாயமாக அன்னதானம் செய்ய வேண்டும். இதற்கான பணத்தை பிறரிடம் கொடுத்து அன்னதானம் செய்யச் சொல்வதில் எந்த பலனும் இல்லை. நீங்களே நேரடியாக உங்கள் கைகளால் இந்த அன்னதானத்தை வழங்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    • `பஞ்சாங்கம்’ என்பது மிகவும் உயிரோட்டமான சொல்.
    • பக்தர்களால் அதிகம் அறியப்படாத பழமையான ஆலயம்.

    ஜோதிடத்தில் `பஞ்சாங்கம்' என்பது மிகவும் உயிரோட்டமான சொல். நாள் அல்லது தினம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய ஐந்து அங்கங்களில், யோகம் என்பது முக்கியமானது. நட்சத்திரமும், கிழமையும் இணைவதும் யோகம் தான். தவிர ஜோதிடத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட யோகங்கள் இருப்பதாகவும், அவற்றில் பல, தனிநபர் ஜாதகங்களில் இருப்பதாகவும் ஜோதிடர்கள் சொல்வதுண்டு.

    இந்த யோகங்களைத் தவிர இன்னும் சில யோகமும் உண்டு. 27 நட்சத்திரங்களை போல, 27 யோகங்களும் உள்ளன. அவற்றில் பிரீதி, ஆயுஸ்மன், சவுபாக்கியம், சோபனம், சுகர்மம், விருத்தி, ஹர்ஷணம், வஜ்ரம், சித்தி, வரியான், சிவன், சித்தம், சாத்தியம், சுபம், சுப்பிரம், பிராம்யம், ஐந்திரம் ஆகிய 17-ம் சுப யோகங்கள் ஆகும். மீதமுள்ள விஷ் கம்பம், அதிகண்டம், திருதி, சூலம், கண்டம், விகாதம், துருவம், வியதீபாதம், பரிகம், வைதிருதி ஆகிய 10-ம் அசுப யோகங்கள் ஆகும்.

    சுப யோகங்களில் பிறந்தவர்களுக்கு எந்த சிக்கலும் இல்லை. ஆனால் அசுப யோகங்களில் பிறந்தவர்கள், தங்களின் வாழ்க்கையில் பல துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். ஒரு சில குடும்பங்களில் நிறைய பேருக்கு திருமணமே கைகூடி வராத நிலையை நாம் பார்த்திருப்போம்.

    அண்ணன், தங்கை, அக்கா, அத்தை என ஒரு கூட்டமே திருமணமாகாமல், சரியான தொழில், உத்தியோகம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும். ஒரு சிலர் குழந்தை இல்லாமல் இருப்பார்கள். சில குடும்பங்களில் தொடர் மரணங்கள், அகால மரணங்கள் போன்ற துன்பங்கள் நிகழலாம். இவற்றிற்கெல்லாம் இந்த அசுப யோகங்கள் காரணமாக அமையலாம்.

    அதேபோல் சில குடும்பங்களில் இறந்தவர்களின் ஆன்மாக்கள் சொர்க்கமா?, நரகமா?, மறுபிறவியா?, தண்டனையா? என்று, எதுவுமே இல்லாமல் ஒரு உறுதியற்ற தன்மையில் அல்லாடிக் கொண்டிருக்கும். அதற்கும் அசுப யோகத்துடன் அவரின் குடும்பத்தில் பிறந்தவர்களின் ஜாதகமே காரணம்.

    இவற்றிற்கெல்லாம் வழிபாட்டுத் தலமாக அமைந்ததுதான், திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே அமைந்துள்ள பக்தவத்சலப் பெருமாள் கோவில். பக்தர்களால் அதிகம் அறியப்படாத பழமையான ஆலயங்கள் பலவற்றில் இதுவும் ஒன்று.

    திருநெல்வேலியில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, சேரன்மகாதேவி. இங்கிருந்து வடக்கே சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையில் இருக்கிறது, பக்தவத்சலப் பெருமாள் ஆலயம்.

    வியாச முனிவரால் பெருமைப்படுத்தப்பட்ட 12 ஆலயங்களில் இதுவும் ஒன்று. இந்த ஆலயத்தின் அடிப்பகுதியில் நரசிம்மப் பெருமாள் யோக நிலையில் கோவில் கொண்டிருப்பதாக ஐதீகம். பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான இந்த ஆலயம், 1921-ம் ஆண்டு முதல் தொல்லியல் துறை காட்டுப்பாட்டில் இருக்கிறது.

    அசுப யோகங்களில் பிறந்தவர்களின் முன்னோர்களுடைய ஆன்மா சாந்தி பெற, சேரன்மகாதேவியில் உள்ள பக்தவத்சலப் பெருமாள் கோவிலில் செய்யும் வழிபாட்டு முறைதான் சிறப்பானது என்பது ஆன்மிகவாதிகளின் கருத்தாகும். தாமிரபரணியை ஒட்டினாற்போல் அமைந்துள்ள இந்த ஆலயத்தின் பிரமாண்டம் நம்மை வியக்க வைக்கிறது.

    கிழக்கு நோக்கி அபயக்கரம் நீட்டி அருளும் பக்தவத்சலப் பெருமாள், `நான் இருக்கிறேன்.. இனி உன் துன்பம் நீங்கி விடும்" என்பதுபோல் முத்திரைக் காட்டி கருவறையில் நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். கருவறைக்கு வெளியே வலதுபுறத்தில் லட்சுமிதேவியுடன் நரசிம்மர் அருள்பாலிக்கிறார்.

    அசுப யோகங்களில் ஏதாவது ஒன்றில் பிறந்திருந்தாலும் கூட, அவர்கள் தன் துயரங்கள் நீங்க நேராக இந்தத் திருத்தலம் வந்து, கோவிலைத் தொட்டுச் செல்லும் தாமிரபரணி ஆற்றில் நீராடி வழிபட வேண்டும். இதுபற்றியும், இந்த நதி பற்றியும் வியாசரால் எழுதப்பட்டுள்ளது. அது தாமிரபரணி மகாத்மீயத்தில் காணப்படுகிறது.

    10 வகையான அசுப யோகத்தில் பிறந்தவர்கள், குடும்பத்தில் உள்ளவர்களின் ஆத்மா நற்கதி அடையாத தோஷம் உள்ளவர்கள், இங்கு வந்து நதியில் நின்று, தன் குடும்பத்தில் இறந்த ஆன்மாக்களை நினைத்து நீராடினால், அவர்களின் ஆன்மா நற்கதி அடையும் என்று, தாமிரபரணி மகாத்மீயம் கூறுகிறது.

    மேலும் மேற்கண்ட தோஷம் உள்ளவர்கள், இந்த நதியில் நீராடி, வியாசர், மார்க்கண்டேயர், அகத்தியர், சப்த நதிகள், பக்தவத்சலப் பெருமாள் ஆகியோரை தரிசித்து, அன்னதானம் செய்தால் `நவகிரிச்சினி பலன்' (ஒரு லட்சம் காயத்ரி உச்சரித்த பலன்) கிடைப்பதுடன், தோஷங்களும் நீங்கி சிறப்பான பலன் கிடைக்கும் என்கிறார்கள்.

    சில ஆலயங்களுக்கு நாம் என்னதான் முயற்சித்தாலும், அந்த இறைவனின் கருணைப் பார்வை நம்மீது படவில்லை என்றால், அங்கு செல்ல முடியாத நிலையே ஏற்படும். இருப்பினும் அந்த இறைவனை நினைத்து மனமுருக வேண்டிக்கொண்டால், அவரை வழிபடுவதற்கான வாய்ப்பை அவரே ஏற்படுத்தித் தருவார். இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 11.45 மணி வரை திறந்திருக்கும்.

    • முன்னோர் பெயரைச் சொல்லி அதில் எழுந்தருள்க என்று சொல்ல வேண்டும்.
    • ஏழைகளுக்கு அன்னம் இடலாம்.

    மறைந்த அப்பா, அம்மா படத்தை எடுத்து சுத்தம் செய்து உரிய திதி நாளில் துளசி, மலர்மாலை சாற்றி பொட்டு வைத்து அதற்கு முன்பாக ஒரு தாம்பளத்தை வைத்து தர்ப்பை மூலம் சட்டம் போட வேண்டும். அதன்மேல் முன்னோர் பெயரைச் சொல்லி அதில் எழுந்தருள்க என்று சொல்ல வேண்டும். அதாவது, எனது தாயே எழுந்தருள்க! தந்தையே எழுந்தருள்க! என்று எள்ளும் தண்ணீரும் விட வேண்டும். பிறகு சிவ (அல்லது) விஷ்ணு கோத்ரத்தை சேர்ந்தவருக்கு தர்ப்பணம் செய்கிறேன் என்று கூறி 3 முறை நீர் எள் விடவும், அடுத்ததாக, எனது தந்தையின் தந்தைக்கு தர்ப்பணம் செய்கிறேன், என்று 3 முறை எள் தீர்த்தம் விடுக.

    மூன்றாவதாக எனது பாட்டனார்க்கு தர்ப்பணம் விடுகிறேன் என்று மூன்றுமுறை எள், தண்ணீர் விடவும். அடுத்ததாக, எனக்கு தெரியாமல் என் வம்சாவழியில் வருகின்ற பித்ருக்களுக்கு (காருணீக பித்ரு) தர்ப்பணம் செய்கிறேன் என்று எள் நீர் விடவும். இதன் பொருட்டு தேவர்களும், தேவ ருலக வாசிகள் அனைவரும் எனது தர்ப்பண வழிபாட்டால் திருப்தி அடையட்டும் திருப்தியக;என்று 3 முறை கூறுக. இது தான் எளிய தர்ப்பண பூஜை முறை.

    பிறகு எழுந்து நின்று கையில் எள் நீர் எடுத்துக்கொண்டு மூன்று முறை தன்னையே சுற்றிக்கொண்டு முட்டி போட்ட நிலையில், கட்டி கொண்டுள்ள வேட்டி துணியால் எள் தீர்த்தத்தை தொட்டு கண்களில் ஏற்றிக்கொள்ள வேண்டும். அதில் உள்ள கூர்ச்ச முடிச்சை அவிழ்த்து எடுத்து எள்ளை சேர்த்துக் கொண்டு குலம் உறவினர்கள் தழைக்க தர்ப்பணம் செய்தேன். உலக மக்கள், என் மக்கள் நலன் காக்கப்பட்டும் என்று மூன்று முறை சொல்ல வேண்டும். பிறகு யாருக்கு தர்ப்பணம் செய்தோமோ அவருக்கு பிடித்தமான பண்டத்துடன், தேங்காய், வாழைப்பழம் வைத்து மலர் துளசி போட்டு நெய் தீபம் காட்ட வேண்டும்.

    தர்ப்பண நீரை அருகில் உள்ள நீர் நிலைகளில் அல்லது செடிகளில் விட்டுவிட வேண்டும். கால்படும் இடங்களில் எள் தண்ணீரை ஊற்றக்கூடாது.

    தர்ப்பணம் கொடுத்து முடிந்ததும் ஒரு பிடி சாதத்தை உருண்டையாகப் பிடித்து எள் நீர் விட்டு சிறிது பருப்பு கலந்து காக்கையை அழைத்து அது சாதத்தை எடுத்த பிறகு கயா....கயா... கயாதிதி சமர்ப்பணம் என்று மூன்று முறை கூறிய பின் விளக்கில் உள்ள திரியை மட்டும் மாற்றி தீபம் ஏற்றி விட்டு பிறகு வீட்டு தெய்வத்திற்கு பூஜை செய்த பிறகு குடும்பத்தில் உள்ளவர்கள் உணவு சாப்பிட வேண்டும்.

    பித்ருக்களும் தேவர்களும் காக்கை வடிவில் உணவு எடுக்க வருவதாக சாஸ்திரம் கூறுவதால் காக்கைக்கு அன்னமிட்டு கயாவில் சிரார்த்தம் செய்தது போல இந்த தர்ப்பணம் செய்தேன் என்று கூறுகிறோம்.

    பித்ரு தர்ப்பண பூஜை செய்வதால் மனிதர்களுக்கு உணவு, மற்ற தானங்கள், காக்கைக்கும் பசுவுக்கும் பிண்ட உணவு இறைகின்ற அரிசி எள் முதலியவற்றுக்கு உணவு என்று இயற்கையாகவே உயிரோம்புதல் நடைபெறுகிறது.

    சில கடுமையான பணி நிமித்தமாக வெளியூரில் இருப்பவர்களே தனக்கு சக்தி இல்லாமை காரணமாக தடை வந்து செய்ய முடியாவிட்டால் மட்டும் அதற்கு வேறு வழி கூறப்பட்டுள்ளது. ஏழைகளுக்கு அன்னம் இடலாம். எள் மற்றும் காசு வைத்து தானம் கொடுக்கலாம். அதுவும் முடியவில்லை எனில் கட்டை விரலை ஈரம் செய்து அதில் ஒட்டிய எள்ளை தானம் தந்து பித்ருக்களை நினைக்கலாம்.

    பசுவுக்கு புல் எடுத்துப்போட்டு அதை தர்ப்பணமாக ஏற்கும்படி பித்ருக்களை வணங்கி கேட்கலாம். அதுவும் முடியாதவர்கள் ஆகாயத்தை அன்னாந்து பார்த்து ஏ பித்ருக்களே! எனக்கு எதுவும் செய்ய இயலவில்லை வேண்டுகிறேன், திருப்தி பெறுவீர்களாக என்று வேண்டி விழுந்து வணங்கலாம்.

    • முறையாக சன்னியாசம் பெற்ற முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய சிரார்த்தம்.
    • இறந்தவர்கள் ஆன்மா சாந்தி அடையும்.

    * நம் குடும்பத்தில் நம்முடன் வாழ்ந்து அல்லது நமக்கு முன் வாழ்ந்து மறைந்த, முறையாக சன்னியாசம் பெற்ற முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய சிரார்த்தம் இது. மஹாளய பட்சத்தில் வரக்கூடிய துவாதசி திதி அன்று இதனை செய்ய வேண்டும். அன்று செய்யும் சிரார்த்தம், தர்ப்பணம் மிகுந்த புண்ணியத்தைக் கொடுக்கும். இதற்கு 'ஸன்யஸ்த மகாளயம்' என்று பெயர்.

    * கணவனும், மகனும் இல்லாத பெண், தன் கணவர், மாமனார், மாமியார் மற்றும் முன்னோர்களுக்காக மகாளய அமாவாசை அன்று சங்கல்ப சிரார்த்தம் செய்யலாம். இதற்கு 'விதவா மகாளயம்' என்று பெயர்.

    * சுமங்கலியாக வாழ்ந்து இறந்த பெண்களுக்காக (பாட்டி, சகோதரி, தாய், அத்தை, சித்தி), மகாளய பட்சத்தில் வரும் நவமி திதி அன்று திதி செய்ய வேண்டும். இதற்கு 'அவிதவா நவமி' என்று பெயர். இதை முறையாக செய்யும்பொழுது அந்த குடும்பத்தில் பெண் சாபங்கள் விலகும். நீண்ட ஆயுள் உண்டாகும். வரும் காலங்களில் அந்த குடும்பத்தில் பெண்கள் விதவையாகும் நிலை உருவாகாது. இந்த நாளில் தங்களால் இயன்றவர்கள், சுமங்கலிப் பெண்களை வீட்டிற்கு வரச் சொல்லி புடவை, ரவிக்கை, குண்டு மஞ்சள், குங்குமம், தாம்பூலம் தந்து வணங்கலாம்.

    * நம் குடும்பம் சம்பந்தப்பட்ட யாராவது துர்மரணம் அடைந்திருந்தால், அதாவது தண்ணீரிலோ, நெருப்பிலோ அல்லது தூக்கு போட்டு, விபத்துகளில், கொடிய மிருகங்களில் தாக்குதலில் அல்லது மற்றவர்களால் கொலை செய்யப்பட்டிருந்தால், அவர்களுக்கு மகாளய பட்ச காலத்தில் வரும் சதுர்த்தசி திதியன்று சிரார்த்தம், தர்ப்பணம் செய்யலாம். இதனால் அந்த குடும்பத்தில் துர்மரணம் நிகழாது. இறந்தவர்கள் ஆன்மா சாந்தி அடையும். இதற்கு `சஸ்திரஹத மகாளயம்' என்று பெயர்.

    * தர்ப்பணம் செய்வதில், 'தேவ தர்ப்பணம்' என்று ஒன்று உள்ளது. சுண்டுவிரல் அடிப் பாகத்தால் இந்த தர்ப்பணத்தை செய்ய வேண்டும். தண்ணீர், அட்சதை (அரிசி) மட்டும் இதில் பயன்படுத்தப்படும். சிலர் எள் சேர்த்தும் செய்வர். இந்த தர்ப்பணத்தை, தாய் - தந்தை உயிருடன் உள்ளவர்கள் கூட செய்யலாம்.

    இந்த தர்ப்பணத்தைச் செய்யும்போது, கேசவம் தர்ப்பயாமி, நாராயணம் தர்ப்பயாமி, மாதவம் தர்ப்பயாமி, கோவிந்தம் தர்ப்பயாமி, விஷ்ணும் தர்ப்பயாமி, மதுசூதனம் தர்ப்பயாமி, த்ரிவிக்கிரமம் தர்ப்பயாமி, வாமனம் தர்ப்பயாமி, ஸ்ரீதரம் தர்ப்பயாமி, ரிஷிகேசம் தர்ப்பயாமி, பத்மநாபனம் தர்ப்பயாமி, தாமோதரம் தர்ப்பயாமி, ஆதித்யம் தர்ப்பயாமி, சோமம் தர்ப்பயாமி, அங்காரகம் தர்ப்பயாமி, புதம் தர்ப்பயாமி, பிரகஸ்பதி தர்ப்பயாமி, சுக்ரம் தர்ப்பயாமி, சனீஸ்வரம் தர்ப்பயாமி, ராகும் தர்ப்பயாமி, கேதும் தர்ப்பயாமி என்று சொல்ல வேண்டும்.

    • ஒவ்வொரு ஆண்டும் திதி கொடுப்பது அவசியம்.
    • ஓராண்டுக்கு திதி கொடுத்த புண்ணியம் கிடைக்கும்.

    முன்னோர்கள் இறந்த மாதம், பட்சம், திதி அறிந்து, ஒவ்வொரு ஆண்டும் திதி கொடுப்பது அவசியம். இல்லாவிட்டால் குடும்பத்தில் சிரமம், பிரச்சினை, துயர சம்பவங்கள் நடைபெறும் என்று சொல்லப்படுகிறது. முன்னோர் வழிபாட்டை முறையாக மேற்கொண்டால், இந்தப் பிரச்சினைகளில் இருந்து நாம் விடுபடலாம்.

    சிலருக்கு தங்களுடைய முன்னோர்கள் இறந்த திதி தெரியாமல் இருக்கலாம். அவர்களும் மகாளய பட்சத்தில் திதி கொடுக்கலாம். மகாளய பட்சத்தில் கொடுக்கப்படும் தர்ப்பணத்தால், ஓராண்டுக்கு திதி கொடுத்த புண்ணியம் கிடைக்கும். மற்ற மாதங்களில் அமாவாசை தர்ப்பணம் செய்யாதவர்கள் கூட இந்த மகாளய பட்ச தர்ப்பணத்தை தவிர்க்காமல் செய்ய வேண்டும்.

    ஒரு முறை சத்தியலோகத்தில் உள்ள பிரம்மனை, சில தேவர்கள் சென்று தரிசித் தனர். அப்போது அவர்களிடம், "நீங்கள் என்னை பூஜை செய்யுங்கள்" என்றார். ஆனால் அந்த வார்த்தையை சரியாக புரிந்து கொள்ளாத தேவர்கள், தங்களைத் தாங்களே பூஜித்துக் கொண்டனர். இதைக் கண்ட பிரம்மா "ஏ மூடர்களே! நீங்கள் அறிவற்றவர்களாக போவீர்கள்" என்று சபித்தார். தங்கள் தவறை உணர்ந்து வருந்திய தேவர்கள், சாப விமோசனம் கேட்டனர். அதற்கு பிரம்மதேவன், "நீங்கள் என் மகன்களிடம் சென்று சாப விமோசனம் பெற்றுக் கொள்ளுங்கள்" என்றார்.

    தேவர்கள் பிரம்மபுத்திரர்களிடம் சென்று வணங்க, அவர்கள் தேவர்களைப் பார்த்து, "புத்திரர்களே.." என அழைத்தனர். பின், "உங்கள் சாபம் விலகிவிட்டது. உங்கள் விருப்பம் போல் நீங்கள் சந்தோஷமாக செல்லுங்கள்" என்றனர். இதனைப் பார்த்த பிரம்மதேவன், "என் மகன்கள் உங்களை புத்திரர்களே என்று அழைத்தனர். நீங்கள்அவர்களை வணங்கி சாப விமோசனம் பெற்றீர்கள். இன்று முதல் என் புத்திரர்கள் 'பித்ருக்கள்' (பித்ரு தேவதைகள்) என்று அழைக்கப்படுவார்கள். யார் இவர்களை பூஜிக்கின்றனரோ, அவர்களுக்கு பித்ரு தோஷம் விலகும்" என்றார். கவ்யவாகன், அனலன், சோமன், யாமன், அரியமான், அக்னிஷ்வார்தன், பர்ஹிஷதன் ஆகிய ஏழு பேரும் பித்ரு தேவர்களாக இருக்கிறார்கள்.

    பித்ரு தோஷம், பித்ரு சாபம் என்பது, ஒருவருக்கு அவருடைய முன்னோர்களால் வருவதாக சிலர் சொல்வார்கள். ஒரு மகன் தன்னுடைய தாய்- தந்தையை உயிருடன் இருக்கும் பொழுது கவனிக்காவிட்டால் கூட, பசியால் வாடியபோதும், துன்பத்தை அனுபவித்த போதும், அந்த தாயும் தந்தையும் தன்னுடைய பிள்ளையை சபிக்க மாட்டார்கள். அப்படி இருக்கையில் இறந்த பிறகு சாபம் இடுவார்களா என்ன? பித்ரு தோஷம் (சாபம்) என்பது, நம் தாய், தந்தை, தாத்தா, பாட்டியால் வருவது அல்ல. அவர்களை சரியாக பராமரிக்காவிட்டால், பித்ரு தேவதைகள் நமக்குக் கொடுக்கக் கூடிய சாபம்தான், 'பித்ரு சாபம்' ஆகும்.

    உயிருடன் இருக்கும் பொழுது தாய், தந்தையை பராமரிக்காத மகன், அவர்கள் இறந்த பிறகு வெகு சிறப்பாக சிரார்த்தம் செய்தாலும், அது காக்கை தின்னும் மலத்திற்கே சமம். இதை நன்கு மனதில் பதியவைத்துக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் மகனால் கைவிடப்பட்ட தாய்-தந்தையரை, மகள் பராமரிக்கும் பட்சத்தில், அவர்கள் இறந்த பிறகு சிரார்த் தம் செய்த புண்ணியம் மகளையே சென்று சேரும்.

    ஒருவரின் தாய் -தந்தையர் அல்லது தாத்தா - பாட்டி இறந்த பிறகு, அவர்கள் நிச்சயம் வேறு ஜென்மம் எடுக்க வாய்ப்பு உண்டு என்பது இந்து மதத்தின் நம்பிக்கை. அப்படி இருக்கையில் மீண்டும் பிறந்தவர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது சரியாகுமா? என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது. மேலும் அப்படி நாம் அவர்களுக்கு கொடுக்கும் தர்ப்பணம் அவர்களுக்குப் போய் சேருமா? அதன் மூலம் நமக்கு புண்ணியம் கிடைக்குமா? என்ற கேள்விகளும் எழுகின்றன. தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா மறுபிறவி எடுத்தால் கூட, நாம் செய்யக்கூடிய எள் தர்ப்பண பலனை, பித்ரு தேவதைகள் ஏற்றுக்கொண்டு, நமக்கு புண்ணியத்தை தருகிறார்கள் என்பதுதான் உண்மை.

    யார், யாருக்கு..

    பொதுவாக 12 பேர்களுக்கு நாம் தர்ப்பணம் செய்ய வேண்டும். அவர்கள்தான் நம் முன்னோர்கள். அதன்படி

    1) பிதா - அப்பா

    2) பிதாமஹர் - பாட்டனார்

    3)பிரபிதாமஹர் - பாட்டனாருக்கு தகப்பனார்

    4) மாதா-அம்மா

    5) பிதாமஹி - பாட்டி

    6) பிரபிதாமஹி - பாட்டனாருக்கு தாயார்

    7) மாதாமஹர் - அம்மாவின் தகப்பனார்

    8) மாது: பிதாமஹர்- தாய்ப் பாட்டனாருக்குத் தகப்பனார்

    9) மாது: பிரபிதாமஹர் - தாய்ப் பாட்டனாருக்குப் பாட்டனார்

    10) மாதாமஹி - பாட்டி (தாயாருக்கு தாயார்)

    11) மாது: பிதாமஹி - தாய்ப் பாட்டனாருக்குத் தாயார்

    12) மாது: பிரபிதாமஹி - தாய்ப் பாட்டனாருக்குப் பாட்டி

    தர்ப்பணம் செய்ய ஆரம்பிப்பதற்கு முன், யார் யாருக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். அவர்களின் பெயர், கோத்ரம் போன்றவற்றை தெரிந்து கொண்டு தர்ப்பணம் செய்ய வேண்டும். பெயர் தெரியாவிட்டால், ஆண்களுக்கு 'நாராயணா' என்றும், பெண்களுக்கு 'லட்சுமி' என்றும் சொல்லும் வழக்கமும் உண்டு.

    மகாளய அமாவாசை தர்ப்பணத்தை, பசு கொட்டகை, பக்தர்கள் கூடக் கூடிய பொது இடங்கள், நதிக்கரை, சமுத்திரக்கரை, குளக்கரை, கோவில் மண்டபங்கள், புண்ணிய தலங்கள் ஆகியவற்றில் செய்வது விசேஷமானதாகும். சமுத்திரக்கரையில் செய்யும் பொழுது உப்பு நீரைக் கொண்டு தர்ப்பணம் செய்யக்கூடாது.

    கயா சென்று சிரார்த்தம் செய்ய முடியாதவர்கள், கன்னி ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் பொழுது வரக்கூடிய பரணி நட்சத்திரம் அன்று (மகா பரணி என்று அழைப்பார்கள்) சிரார்த்தம் செய்தால், அஷ்டகயா ஷேத்திரங்களுக்கு சென்று, பல்குனி நதி, அட்சயவடம் போன்ற இடத்தில் பிண்ட பிரதானம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.

    • அனைத்துவித சுப காரியங்கள் செய்ய மிகவும் உகந்த மாதம் ஆவணி மாதம்.
    • வாசலை சுத்தம் செய்யலாம் ஆனால் கோலம் போடக்கூடாது.

    ஆவணி அமாவாசை தினத்தில் பெற்றோர்கள் இல்லாத ஆண் எள்ளும், தண்ணீரும் கொடுத்து தர்ப்பணம் செய்வது அவசியம். முன்னோர்களுக்கு தர்ப்பணம், காகத்திற்கு உணவளிப்பதால் ஏழ்மை விலகி உங்கள் அனைத்து முயற்சிக்கும் நல்ல வெற்றி ஏற்படும். அனைத்துவித சுப காரியங்கள் செய்ய மிகவும் உகந்த மாதம் ஆவணி மாதம். இந்த அற்புத மாதத்தில் ஆவணி அவிட்டம், விநாயகர் சதுர்த்தி, ஆவணி அவிட்டம், ஆவணி அமாவாசை, பௌர்ணமி போன்ற தெய்வீக சிறப்புகள் பொருந்திய பல விசேஷங்கள் அடங்கியது.

    அதிலும் குறிப்பாக ஆவணி அமாவாசை எல்லா அமாவாசைகளைப் போல முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து, முன்னோர் வழிபாடு செய்ய மிகவும் உகந்த தினம். இந்த அற்புத நாளில் உங்கள் முன்னோர்களை நினைத்து பித்ருக்கள் வழிபாடு தர்ப்பணம் கொடுப்பதோடு, காக்கைக்கு உணவளித்து அவர்களின் ஆசி பெற உகந்த தினம். பித்ருக்களுக்கு தர்ப்பணம், கொடுப்பதன் மூலம் பித்ரு சாபம் நீங்கி, உங்கள் வாழ்வில் பெருமகிழ்ச்சியுடன் வாழலாம்.

    ஆவணி அமாவாசை தினத்தில் என்ன செய்யலாம்?

    ஒவ்வொரு அமாவாசை தினமும் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க உகந்த நாள். இந்த நாளில் முன்னோர்களுக்கு கருப்பு எள், தண்ணீர் விட்டு தர்ப்பணம் கொடுப்பதோடு, கருப்பு எள் மற்றும் வெள்ளை எள் கலந்த சாதத்தை காகங்களுக்கு வைப்பதன் மூலம், முன்னோர்களின் ஆசி பெற்றிடலாம்.

    இந்த தினத்தில் பெற்றோர்கள் இல்லாத ஆண் எள்ளும், தண்ணீரும் கொடுத்து தர்ப்பணம் செய்வது அவசியம். இந்த நாளில் காலையில் வீட்டு வாசலை சுத்தம் செய்யலாம் ஆனால் கோலம் போடக்கூடாது. வீட்டில் முன்னோர்களின் படங்களுக்கு பூக்கள் வைத்து, சந்தனம், குங்கும திலகமிடுங்கள். தீப, தூப ஆராதனை செய்யுங்கள்.

    விரதம் இருந்து முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுத்து, அன்று வீட்டில் நீங்கள் சமைத்த உணவை முன்னோர்களுக்கு படைப்பதோடு, அந்த உணவை காகத்திற்கு வைத்து அதன் பின்னர் உணவருந்தவும். முன்னோர்களின் ஆசி பெறுவது, குலதெய்வத்தை வணங்குதல், தினமும் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதால், வீட்டில் இருக்கும் தரித்திர நிலை நீங்கும். திருமண தாமதம், ஏழ்மை விலகி உங்கள் அனைத்து முயற்சிக்கும் நல்ல வெற்றி ஏற்படும்.

    • அறைக்குள் விளக்காக இருக்கும் முன்னோர்களை திருப்திப்படுத்த வழிபட வேண்டிய நாள்.
    • புரட்டாசி மாதம் வரும் அமாவாசையே மகாளய அமாவாசை.

    மறைந்தவர்களுக்கு மகாளய அமாவாசை என்று சொல்வது வழக்கம். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட நீங்கள் முன்னோர்களை வழிபட வேண்டிய நாள், இந்த மகாளய அமாவாசையை மறந்துவிடாதீர்கள். முன்னோர்களுக்கு திதி கொடுக்க வேண்டிய தேதியை மறந்தவர்கள், திதி கொடுக்க மறந்தவர்கள் அன்றைய தினத்தில் திதி கொடுத்தால் அதை முன்னோர்கள் மனதார ஏற்றுக்கொள்வர்.

    அறைக்குள் விளக்காக இருக்கும் முன்னோர்களை திருப்திப்படுத்த வழிபட வேண்டிய நாள் அமாவாசை ஆகும். எல்லா மாதங்களிலும் அமாவாசை வந்தாலும் தை மாதம் வரும் அமாவாசையை 'தை அமாவாசை' என்றும், ஆடி மாதம் வரும் அமாவாசையை 'ஆடி அமாவாசை' என்றும், புரட்டாசி மாதம் வரும் அமாவாசையை 'மகாளய அமாவாசை' என்றும் சிறப்பு வாய்ந்ததாக சொல்வா்.

    புரட்டாசி மாதம் 27-ந் தேதி (14.10.2023) சனிக்கிழமை அன்று வருகிறது. அன்றைய தினம் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்வதன் மூலமும், பித்ருக்களுக்கு திதி கொடுப்பதன் மூலமும் முன்னேற்றங்களை வரவழைத்துக் கொள்ள இயலும். திதி கொடுத்தால் விதி மாறும் என்பது முன்னோர் வாக்கு. தடைக் கற்களை படிக்கற்களாக மாற்றுவது இந்த முன்னோர் வழிபாடுதான்.

    • திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரமாகும்.
    • கிருஷ்ண எனும் சொல்லுக்கு ‘கருமை’ என்றும் பொருள்.

    திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரமாகும்.

    1. சுக்ல பட்சம் (அல்லது) பூர்வ பட்சம் : வளர்பிறை

    2. கிருஷ்ண பட்சம் (அல்லது) அமர் பட்சம் : தேய்பிறை என இரண்டு வகைப்படும். சுக்லம் எனும் சமஸ்கிருத சொல்லுக்கு 'வெண்மை' என்றும், கிருஷ்ண எனும் சொல்லுக்கு 'கருமை' என்றும் பொருள்.

    பிரதமை முதல் அமாவாசை வரை தேய்பிறை 'கிருஷ்ண பட்சம்' அல்லது அமர பட்சம். பிரதமை முதல் பௌர்ணமி வரை வளர்பிறை 'சுக்ல பட்சம்' அல்லது பூர்வ பட்சம்.

    1. பிரதமை, 2. துவதியை, 3. திருதியை, 4. சதுர்த்தி, 5. பஞ்சமி, 6. சஷ்டி, 7. சப்தமி, 8. அஷ்டமி, 9. நவமி, 10. தசமி, 11. ஏகாதசி, 12. துவாதசி, 13. திரயோதசி, 14. சதுர்த்தசி, 15. பௌர்ணமி (அல்லது) அமாவாசை.

    சூரியனும் சந்திரனும் ஒரே பாகையில் இருப்பது 'அமாவாசை' ஆகும். சூரியன் நின்ற காகைகளுக்கு நேராக 180 டிகிரி சந்திரன் இருந்தால் 'பௌர்ணமி' ஆகும். சூரியனில் இருந்து சந்திரன் நகர்ந்து செல்லச்செல்ல சந்திரனின் பிறை நாளுக்கு நாள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாக கண்ணுக்கு தெரிய வரும். இவ்வாறு தினமும் வளர்ந்து வருவது 'வளர்பிறை' காலம் ஆகும்.

    பௌர்ணமிக்கு பின் முழுமதியில் இருந்து தினம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து தெரியவரும். இவ்வாறு தேய்வதால் 'தேய்பிறை' காலம் என்கிறோம். இவ்வாறு வளர்பிறை காலம் 15 நாட்களும், தேய்பிறை காலம் 15 நாட்களும் கொண்டது ஒரு மாதமாகும்.

    திதியில் பிறந்தவர்களின் குணநலன்கள்:

    பிரதமை:- சந்தோஷ பிரியன், எதையும் யோசிக்கும் புத்தி உடையவன். செல்வந்தன்.

    துதியை:- கீர்த்தி உடையவன், சத்திவாசகன், பொய் சொல்லாதவன், பொருள் சேர்ப்பவன், தன் இனத்தாரை ரட்சிப்பவன்.

    திருதியை:- எண்ணியதை முடிப்பவன், தனவான், பயம் உள்ளவன், பராக்கிரமம் உடையவன், சுத்தமுடையோன், திருக்கோவில் கைங்கரியம் செய்பவன்.

    சதுர்த்தி:- அளவற்ற காரியங்களை சிந்திப்பவன். தேச சஞ்சாரம் செய்பவன், எல்லோருக்கும் நண்பன், அருள் மந்திரவாதி.

    பஞ்சமி:- வேத ஆராய்ச்சி உடையோன், பெண் மேல் அதிக பிரியமுள்ளவன், கருமி, துக்கம் உடையோன்.

    சஷ்டி:- பிரபுக்களால் விரும்பதக்கவன், செல்வன், மெலிந்தவன், முன் கோபி.

    சப்தமி:- செல்வம், தயாள சிந்தனை உடையோன், பராக்கிரமசாலி, எதிலும் கண்டிப்பு உடையவன்.

    அஷ்டமி:- புத்ர செல்வம் உடையோன், காமூகன், பிறவி செல்வம் உடையவன், லட்சுமி வாசம் உடையோன்.

    நவமி:- கீர்த்தி உடையவன், மனைவி மக்களை விரும்பாதவன், அதிக பெண் சிநேகம் உடையவன், கமனம் செய்பவன்.

    தசமி:- சீலம் உள்ளவன், தர்மவான், யோகியவான்.

    ஏகாதசி:- செல்வந்தன், நீதியுடன் இருப்பவன், அழகற்றவன், உதிதமானதை செய்பவன்.

    துவாதசி:- செல்வந்தன், தர்மவான், நூதன தொழில் செய்பவன், சீலம் உள்ளம் உள்ளவன்.

    திரயோதசி:- உறவினர் இல்லாதவன், மாந்தீரிகன், யோபி, கஞ்சன், கீர்த்திசாலி.

    சதுர்தசி:- குரோதம் உடையோன், பிறர் பொருளை அபகரிப்பதில் பிரியன், கோபி, பிறரை துஷ்டிப்பவன்.

    பௌர்ணமி:- புத்தி, விந்தை, பொறுமை, சத்யவான், தயாள சிந்தனை உடையோன், கலங்க முடையோன், உக்ரமுள்ள தேவதையை பூஜிப்பவன்.

    • பதினைந்து திதிகள் கொண்டது ஒரு பட்சம் ஆகும்.
    • திரிநேத்ரன் என்றால் முக்கண்ணன் என்று சிவனைக் குறிக்கும்.

    சந்திரன் பூமியை சுற்றி வரும்பொழுது அது தேய்ந்து வருகின்ற காலம் தேய்பிறைக் காலமாகும். இது அமாவாசையில் முடிவுறும். இதை கிருஷ்ண பட்சம் என்பர்.

    கிருஷ்ண என்றால் இருளான என்று பொருள். இதில் இருந்தே கருமை நிறக் கண்ணனுக்கு கிருஷ்ணன் என்ற பெயர் வந்தது.

    பூரண சந்திரன் நிலையில் இருந்து அது கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து வரும்போது ஒவ்வொரு நாளும் தேய்வடையும் பாகத்தைக் கலை என்பார்கள். இவ்வாறு பௌர்ணமியில் தொடங்கி நாளுக்கு ஒன்றாக பதினைந்து கலைகள் தேய்ந்ததும் வானில் நிலவில்லாத, ஒரு கலையுடன் கூடிய அமாவாசை வருகின்றது.

    சுக்ல பட்சம்

    சந்திரன் பூமியைச்சுற்றி வரும்பொழுது அது வளர்ந்து வருகின்ற காலம் வளர்பிறைக் காலமாகும். இது பௌர்ணமி என்னும் முழுநிலவில் முடிவுறும். இதை சுக்ல பட்சம் என்பர்.

    சுக்ல என்றால் பிரகாசமான என்று பொருள். " சுக்லாம் பரதரம்" என்று தொடங்கும் பிள்ளையார் மந்திரம் பிரகாசமானவர் என்று பிள்ளையாரைக் குறிக்கின்றது.

    சந்திரன் கொஞ்சம் கொஞ்சமாக முழு நிலவாக வளரும்பொழுது ஒவ்வொரு நாளும் அதிகரிக்கும் பாகத்தை கலை என்பார்கள். இவ்வாறு அமாவாசையில் தொடங்கி நாளுக்கு ஒன்றாக பதினாறு கலைகள் வளர்ந்ததும் அது பதினாறு கலைகளுள்ள பௌர்ணமி என்னும் முழுநிலவாக பரிணமிக்கின்றது.

    திதி

    இவ்வாறு சந்திரனின் ஒவ்வொரு கலையும் வளரும் அல்லது தேயும் காலம் திதி எனப்படுகின்றது. திதி என்ற சொல்லில் இருந்துதான் 'திகதி', 'தேதி' என்ற சொற்கள் வந்தன.

    இவ்வாறு வளர் பிறைக்காலத்தில் பதினைந்து திதிகளும், தேய்பிறைக்காலத்தில் பதினைந்து திதிகளும் வருகின்றன. இந்தப்பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை அமாவாசையும் பௌர்ணமியும் மாதமொரு முறை மாறி மாறி வந்து போகின்றன.

    பதினைந்து திதிகள் கொண்டது ஒரு பட்சம் ஆகும். இவ்வாறுள்ள பதினைந்து திதிகள் வருமாறு;

    அமாவாசை - நிலவில்லாத நாள். இன்று நிலவுக்கு ஒரு கலை.

    1. பிரதமை - முதலாம் பிறை. இன்று நிலவுக்கு இரண்டு கலைகள் உள்ளன.

    2. துதியை - இரண்டாம் பிறை. இன்று நிலவுக்கு மூன்று கலைகள். துவி என்பது இரண்டு என்று பொருள் படும். ஆங்கிலத்தில் இரண்டைக் குறிக்கும் 'ஷீஸீமீ' என்ற சொல்லும் இதிலிருந்ந்தே வந்தது. இதில் இருந்துதான் துவிச்சக்கர வண்டி, துவைதம் போன்ற சொற்கள் வந்தன. அத்துவைதம் என்றால் இரண்டு அல்லாதது என்று பொருள்.

    3. திருதியை- மூன்றாம் பிறை. இன்று நிலவுக்கு நான்கு கலைகள். திரி என்ற சொல் மூன்று என்று பொருள்படும். திரிபுரம் என்பது முப்புரங்களான மூன்று நகரங்களைக் குறிக்கும். திரிநேத்ரன் என்றால் முக்கண்ணன் என்று சிவனைக் குறிக்கும்.

    4. சதுர்த்தி- நாலாம் பிறை. இன்று நிலவுக்கு ஐந்து கலைகள். சதுர் என்றால் நான்கு என்று பொருள். சதுரம் என்றால் நான்கு பக்கங்கள் உள்ளது என்று பொருள். சதுர்முகன் என்றால் நான்கு முகங்களை உடைய பிரம்மாவைக் குறிக்கும். 'சுக்லாம் பரதரம்' என்ற பிள்ளையார் மந்திரத்தில் வருகின்ற சதுர்ப்புஜம் என்பது பிள்ளையாரின் நான்கு தோள்களைக் குறிக்கும். சதுர்யுகம் என்பது கிருதயுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என்ற நான்கு யுகங்களினதும் கூட்டாகும்.

    5. பஞ்சமி -ஐந்தாம் பிறை. இன்று நிலவுக்கு ஆறு கலைகள். பஞ்ச என்றால் ஐந்து என்று பொருள். ஆங்கிலத்தில் ஐந்தைக் குறிக்கும் 'யீவீஸ்மீ' என்ற சொல் இதிலிருந்துதான் வந்தது. பஞ்சாட்சரம் என்பது சைவத்தின் ந-ம-சி-வா-ய என்ற ஐந்து எழுத்து மந்திரத்தைக் குறிக்கும். பஞ்ச பூதங்கள் என்பது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐந்து பௌதிகப் பேரலகுகளைக குறிக்கும். பஞ்சாங்கம் என்பது ஒவ்வொரு நாளுக்கும் உரிய வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய ஐந்து அங்கங்களை உடைய வானியல் கணிப்பைக் குறிக்கும்.

    6. சஷ்டி-ஆறாம் பிறை. இன்று நிலவுக்கு ஏழு கலைகள். ஷ என்றால் ஆறு என்று பொருள். ஆங்கிலத்தில் ஆறு என்ற எண்ணைக் குறிக்கும் 'sவீஜ்' என்ற சொல் இதிலிருந்துதான் வந்தது.ஷண்முகன் என்பது ஆறு முகங்களுடைய முருகனைக் குறிக்கும். ஷடாட்சரம் என்பது முருகனின் ச-ர-வ-ண-ப-வ என்ற ஆறு எழுத்து மந்திரமாகும்..

    7. சப்தமி-ஏழாம் பிறை. இன்று நிலவுக்கு எட்டு கலைகள். ஸப்த என்றால் ஏழு என்று பொருள். ஆங்கிலத்தில் ஏழைக் குறிக்கும் 'sமீஸ்மீஸீ' என்ற சொல் இதிலிருந்துதான் வந்தது. ஸப்த ரிஷிகள் என்பது ஏழு முனிவர்களைக் குறிக்கும்.

    8. அஷ்டமி-எட்டாம் பிறை. இன்று நிலவுக்கு ஒன்பது கலைகள். ஆங்கிலத்தில் எட்டு என்னும் எண்ணைக் குறிக்கும் 'ணிவீரீலீt'என்ற சொல் இதிலிருந்தே வந்தது. அட்டம் என்றால் எட்டு என்று பொருள். அட்டலட்சுமி என்றால் எட்டு இலட்சுமிகளைக் குறிக்கும்.

    அட்ட திக்குகள் என்றால் கிழக்கு, தென் கிழக்கு, தெற்கு, தென் மேற்கு, மேற்கு, வட மேற்கு, வடக்கு, வடகிழக்கு என்னும் எட்டுத் திக்குகளைக் குறிக்கும். அட்டதிக்குப் பாலகர்கள் என்றால் முறையே இந்த எட்டு திக்குகளுக்கும் உரிய இந்திரன்.

    அக்கினி, இயமன், நிருதன், வருணன், வாயு, குபேரன், ஈசானன் எட்டு திக்குத்தெய்வங்களையும் குறிக்கும். ' அருணன் இந்திரன் திசை அணுகினான்' என்றால் சூரியனின் சாரதியாகிய அருணன் இந்திரனுக்குரிய கிழக்குத் திசையை அணுகினான் என்று பொருள். இந்த வரி திருவாசகத்தின் திருப்பள்ளி எழுச்சியில் வருகின்றது.

    9. நவமி- ஒன்பாதம் பிறை. நிலவுக்கு பத்து கலைகள். நவம் என்றால் ஒன்பது. நவராத்திரி என்றால் ஒன்பது இரவுகளைக்குறிக்கும். நவதானியம் என்றால் ஒன்பது தானியங்களைக் குறிக்கும். நவக்கிரகம் என்பது ஒன்பது கிரகங்களைக் குறிக்கும்.

    10. தசமி- பத்தாம் பிறை. இன்று நிலவுக்கு பதினொரு கலைகள். தசம் என்றால் பத்து. கணிதத்தில் தசமத்தை அறிமுகப்படுத்தியவர்கள் இந்துக்களே. தசகாரியம் என்பது ஆத்மீகப்பாதையிலுள்ள பத்துப்படிநிலைகளைக் குறிக்கும்.

    தசரா என்று நமது நவராத்திரியை வட இந்தியாவில் பத்து நாட் கொண்டாட்டமாக கொண்டாடுவர். 'தக்க தசமதி தாயடு தான்படும் துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்' - திருவாசகம். இங்கு தசமதி என்பது பத்து மாதங்கள். இது தாயின் வயிற்றில் நாம் இருந்த காலத்தைக் குறிக்கின்றது.

    11. ஏகாதசி- பதினோராம் பிறை. இன்று நிலவுக்கு பன்னிரண்டு கலைகள். தசம் என்றால் பத்து என்று பார்த்தோம். ஏகம் என்றால் ஒன்று. ஏகாதசி என்றால் பத்தும் ஒன்றும் சேர்ந்த பதினொன்று.

    12. துவாதசி- பன்னிரண்டாம் பிறை. இன்று நிலவுக்கு பதின்மூன்று கலைகள். துவி என்றால் இரண்டு என்று பார்த்தோம். தசம் என்றால் பத்து என்று பார்த்தோம். துவாதசி என்பது பத்தும் இரண்டும் சேர்ந்த பன்னிரண்டைக் குறிக்கும்.

    13. திரயோதசி-பதின்மூன்றாம் பிறை. இன்று நிலவுக்குப் பதினான்கு கலைகள். திரி என்றால் மூன்று என்று பார்த்தோம். தசம் என்றால் பத்து என்று பார்த்தோம். திரயோதசி என்பது பத்தும் மூன்றும் சேர்ந்த பதின்மூன்றைக் குறிக்கும்.

    14. சதுர்த்தசி- பதினான்காம் பிறை. இன்று நிலவுக்குப் பதினைந்து கலைகள். சதுர் என்றால் நான்கு என்று பார்த்தோம். தசம் என்றால் பத்து என்று பார்த்தோம். சதுர்த்தசி என்பது பத்தும் நான்கும் சேர்ந்த பதினான்கைக் குறிக்கும்.

    15. பௌர்ணமி- பூரண நிலவு. இன்று பூரண நிலவுக்கு கலைகள் பதினாறு. அமாவசையில் இருந்து ஒவொரு கலைகளாக வளர்ந்து இன்று பதினாறு கலைகள் கொண்ட பூரண நிலவாகப் பரிணமிக்கின்றது. .

    இந்த திதிகளை தேய்பிறைக்காலத்தில் கிருஷ்ணபட்ச திதிகள் என்றும் வளர்பிறை காலத்தில் சுக்ல பட்ச திதிகள் என்றும் அழைக்கிறோம். ஆக மொத்தம் திதிகள் முப்பது.

    ஒவ்வொரு மாதமும் வரும் திதிகள் ஒரே கால அளவு கொண்டதாக இருப்பதில்லை. ஒவ்வொரு திதியும் கால அளவில் வித்தாயசப்படுகின்றன.

    ஒரே திதியே ஒரு மாதத்தில் நீண்டதாகவும் இன்னொரு மாதத்தில் குறுகியதாகவும் இருக்கின்றது. ஒரே திதி ஒரே மாதத்தில் வளர்பிறைக்காலத்தில் ஒர் கால அளவுக்கும் தேய்பிறைக்காலத்தில் இன்னொரு கால அளவுக்கும் இருக்கின்றது.

    நமது கால அளவை துல்லியமான வானியல் கணக்கீட்டை ஆதாரமாக கொண்டிருப்பதால்தான். பூமியில் இருந்து சந்திரன் நிற்கும் தூரம் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சில சமயங்களில் கிட்ட இருக்கும். சில சமயங்களில் தூர விலகிப் போகும். அதிக தூரத்தில் இருக்கும்போது திதியும் 28 மணித்தியாலங்கள் வரை நீண்டதாக இருக்கும்.

    அதிக கிட்டத்தில் இருக்கும்போது திதியும் 19 மணித்தியாலங்கள் வரை குறுகியதாக இருக்கும். இடைப்பட்ட காலங்களில் திதியின் அளவும் இவற்றுக்கு இடைப்பட்ட கால அளவில் இருக்கும்.

    • பித்ருக்களின் ஆராதனைக்கு மஹாளயம் என்று பெயர்.
    • கல்யாணத்தை விரும்புகிற மனிதன் மஹாளயம் செய்ய வேண்டும்.

    மனிதர்கள் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து என வலியுறுத்துகிறது இந்து மதம். அவை பிதுர்யக்ஞம், தேவயக்ஞம், பூதயக்ஞம் (பசு, காக்கைக்கு உணவு அளிப்பது) மனித யக்ஞம் (சுற்றத்தார், பிச்சைக்காரர்கள், துறவிகள் ஆகியோருக்கு உணவு அளிப்பது), வேத சாஸ்திரங்களைப் பயில்வது ஆகியவை. இவற்றுள் பிதுர் யக்ஞம் மிகவும் புனிதமானது எனக் கருதி முன்னோர் அதனைக் கடைபிடித்து வந்ததுடன் நம்மையும் மேற்கொள்ள அறிவுறுத்தினர். தென்புலத்தார் வழிபாடு என இதன் சிறப்பை வள்ளுவர் குறிப்பிட்டுள்ளார்.

    `தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை' என்று இல்லறத்தானின் கடமையாக வலியுறுத்தியுள்ளார்.

    இறை விருப்பப்படி மானிடருக்கு ஆசி கூறி நல்வாழ்வுக்கு வழிகாட்டும் அதிகாரம் படைத்தவர்கள் தேவர்களும், பித்ருக்களும்!

    பித்ருக்களின் ஆராதனைக்கு மஹாளயம் என்று பெயர். பொதுவாக புரட்டாசி மாதம், தேய்பிறை பிரதமை முதல் அமாவாசை வரை உள்ள பதினைந்து திதிகளே (நாட்களே) மஹாளயபட்சமாகும்.

    நமக்கு இந்த உடலைக் கொடுத்தவர்கள் தாய், தந்தையர். நம்மை ஆளாக்க, தாங்கள் அனுபவித்த கஷ்டங்களைப் பொருட்படுத்தாமல் நற்கதி அடைந்த அவர்களுக்கும், முன்னோர்களுக்கும் வருடத்தில் 365 நாட்களும் செய்ய வேண்டிய தர்ப்பணங்களை சரிவர செய்யாததற்கான பிராயச்சித்தமாகவும் மஹாளயபட்ச தர்ப்பண முறை உள்ளது.

    இந்த மஹாளயபட்ச தினங்களாகிய பதினைந்து நாட்களிலும் பித்ரு தேவதைகள் எம தர்மனிடம் விடைபெற்றுக்கொண்டு தங்கள் குடும்பத்தினருடன் தங்கி விடுவர் என்பர். எனவேதான் இந்த நாட்களில் அவர்கள் பசியாற அன்னமாகவோ (திதி) அல்லது எள்ளும் தண்ணீருமாகவோ (தர்ப்பணம்) அளிக்க வேண்டும் என்றார்கள். அவர்களும் அதன் மூலம் திருப்தியடைந்து, நமக்கு அருளாசி வழங்குகின்றனர். நோயற்ற வாழ்வினை வழங்குகிறார்கள்.

    தாய், தந்தையர் இறந்த தினத்தில் சிரார்த்தம் (திதி) செய்யாதவர்கூட, மறக்காமல் மஹாளயத்தை அவசியம் செய்ய வேண்டும். தகுந்த நபர்களை வைத்துக் கொண்டு முறைப்படி செய்ய முடியாதவர்கள், அரிசி, வாழைக்காய், தட்சிணை போன்றவற்றைக் கொடுத்தாவது பித்ருக்களை இந்த மஹாளயபட்சத்தில் திருப்தி செய்ய வேண்டும்.

    சிறுகச் செய்தாலும், பித்ரு காரியங்களை மனப்பூர்வமாக சிரத்தையாகச் செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம். வசிஷ்ட மகரிஷி, தசரதர், யயாதி, துஷ்யந்தன், நளன், அரிச்சந்திரன், கார்த்தவீர்யார்சுனன், ஸ்ரீராமர், தர்மர் முதலானோர் மஹாளயம் செய்து பெரும் பேறு பெற்றனர் என்கின்றன புராணங்கள்.

    மும்மூர்த்தி உருவில் உலகுக்கே குருவாக வந்த ஸ்ரீதத்தாத்ரேயரும் வேதாளம் பற்றிக்கொண்ட துராசாரன் என்ற அந்தணனுக்கு சாப விமோசனமாக புரட்டாசி மாதம், கிருஷ்ண பட்சத்தில் மஹாளயம் செய்யுமாறு வழிகூறினார்.

    மஹா-கல்யாணம், ஆலயம் -இருப்பிடம் என்ற பொருளில் கல்யாணத்திற்கு இருப்பிடமாயிருப்பதால் மஹாளயம் என்று பெயர் வந்ததாகவும் கருதலாம். திருமணப் பிராப்தி அதாவது கல்யாணத்தை விரும்புகிற மனிதன் மஹாளயம் செய்ய வேண்டும். `மஹாளயம் செய்யாதவனுக்கு மங்களம் உண்டாகாது' என்பது பழமொழி.

    இனம்புரியாத நோய்கள், உடற்குறையுடன் பிறக்கும் குழந்தைகள், குடும்பத்தில் தள்ளிப் போகும் திருமணங்கள், செய்யும் காரியங்களில் தடைகள்- குழப்பம், பெற்றோர்களை அவர்கள் வாழ்நாளில் சரிவர கவனிக்காமை போன்ற குறைகளுக்கு ஒரு சிறந்த, எளிய பரிகாரம் இந்த மஹாளய பட்ச நாட்களில் பித்ரு தேவதைகளை பூஜை செய்வதுதான். இந்த பித்ரு பூஜையை ஆறு, நதிக்கரைகளிலோ, குளக் கரைகளிலோ, முடியாவிட்டால் இல்லத்தில் இருந்தபடியோ செய்யலாம்.

    மஹாளய பட்ச தர்ப்பண பலன்கள்!

    பிரதமை : செல்வம் பெருகும் (தனலாபம்)

    துவிதியை : வாரிசு வளர்ச்சி (வம்ச விருத்தி)

    திருதியை : திருப்திகரமான இல்வாழ்க்கை (வரன்) அமையும்

    சதுர்த்தி : பகை விலகும் (எதிரிகள் தொல்லை நீங்கும்)

    பஞ்சமி : விரும்பிய பொருள் சேரும் (ஸம்பத்து விருத்தி)

    சஷ்டி : தெய்வீகத் தன்மை ஓங்கும் (மற்றவர் மதிப்பர்)

    சப்தமி : மேலுலகோர் ஆசி

    அஷ்டமி : நல்லறிவு வளரும்

    நவமி : ஏழுபிறவிக்கும் நல்ல வாழ்க்கைத் துணை

    தசமி : தடைகள் நீங்கி விருப்பங்கள் நிறைவேறும்

    ஏகாதசி : வேதவித்யை, கல்வி, கலைகளில் சிறக்கலாம்

    துவாதசி : தங்கம், வைர ஆபரணங்கள் சேரும்

    திரியோதசி : நல்ல குழந்தைகள், கால்நடைச் செல்வம், நீண்ட ஆயுள் கிட்டும்

    சதுர்த்தசி : முழுமையான இல்லறம் (கணவன் - மனைவி ஒற்றுமை)

    அமாவாசை : மூதாதையர், ரிஷிகள், தேவர்களின் ஆசி கிட்டும்

    (ஆதாரம்: யஜூர் வேத ஆபஸ்தம்ப தர்ப்பணம்)

    • நமது மூதாதையர்களான பித்ருக்கள் தாம் நினைத்தபோதெல்லாம் பூலோகத்திற்கு வர இயலாது.
    • புரட்டாசி மாத அமாவாசைக்கு முன்பாக கிருஷ்ணபட்சம் பிரதமையிலிருந்து அமாவாசை வரை பதினைந்து திதிகளிலும் தினசரி தர்ப்பணம் செய்வது மிக விசேஷமானது.

    முதன் முதலில் பிரபஞ்சத்தில் தோன்றிய ஆதிமூலச் சூரிய கிரகமும், ஆதிமூலச் சந்திர கிரகமும் இணைகின்ற கிரகமண்டல சங்கமத்தில் தோன்றுவதே மஹாளயபூஷித லோகமாகும்

    இங்குதான் மஹாளயபட்சத்தை பெருந் திருவிழாவாக தேவர்களும் பித்ருக்களும் கொண்டாடுகிறார்கள். அதாவது, நமது மூதாதையர்களது பித்ரு லோகங்களில் கொண்டாடப்படுகின்ற பிரம்மோற்சவமே மஹாளய பட்சமாகும்.

    பூலோகத்தில் நாம் அளிக்கின்ற தர்ப்பணத்தில் எழுகின்ற தர்ப்பண நீரைக் கொண்டு, பித்ரு லோகங்கள் பலவற்றிலும், பித்ருக்களும் பித்ரு கணங்களும் பித்ரு பத்தினிகளும் கலச பூஜை செய்து, அளப்பரிய ஆசீர்வாதப் பலன்களைப் பெறுகின்றனர்.

    புரட்டாசி மாத அமாவாசையே மஹாளயபட்ச அமாவாசையாகும். அதாவது சூரிய- சந்திர கிரகங்களின் சங்கமத்தில் தோன்றுகின்ற சோமாதித்ய (சோம + ஆதித்ய) யதி மண்டலத்தின் தோற்றமாகும்.

    மஹாளய பட்சத்தின் பதினான்கு திதிகளிலும், பித்ருக்கள் நடத்துகின்ற பூஜா பலன்களுக்காக பித்ருக்களின் தேவதையான ஸ்ரீமந்நாராயணனே சோமனாகிய சந்திரனையும் ஆதித்யனாகிய சூரியனையும் இயங்க வைத்து, யதி மண்டலத்தைத் தோற்றுவிக்கிறார். இதில்தான் பித்ருக்களுடைய ஜீவசக்தியை இறைவன் யதி மண்டலக் கலசமாய் ஆராதனை செய்து தருகின்றார்.

    எவ்வாறு சிருஷ்டியின்போது இறைவன் ஜீவன்களது ஜீவசக்தி நிறைந்த கும்பத்தை வைத்து சிருஷ்டியைத் தொடங்குகிறாரோ, அதே போன்று பித்ருக்களின் ஜீவசக்தி அமுதகலசமாக உற்பவிக்கும் இடமே சோமாதித்ய மண்டலமாகக் கருதப்படுகிறது.

    புரட்டாசி மாத மஹாளயபட்ச அமாவாசை யன்று, சர்வகோடி லோகங்களிலுமுள்ள மகரிஷிகள் உட்பட அனைத்து ஜீவன்களும் தேவதைகளும் பூலோகத்திற்கு வந்து, புண்ணிய நதிக்கரைகளிலும் சமுத்திரங்களிலும் மற்றும் காசி, ராமேஸ்வரம், கயை, அலகாபாத் திரிவேணி சங்கமம், கும்பகோணம் சக்கரப்படித்துறை போன்ற புனித தலங்களிலும் தர்ப்பண பூஜையை மேற்கொள்கின்றனர். வசு, ருத்ர, ஆதித்ய, பித்ரு தேவர்களே இந்நாளில் தர்ப்பணம் இடுகின்றனர் என்றால், மஹாளய பட்ச மகிமை சொல்லவும் அரிதன்றோ?

    நமது மூதாதையர்களான பித்ருக்கள் தாம் நினைத்தபோதெல்லாம் பூலோகத்திற்கு வர இயலாது. ஆனால் அமாவாசை, மாதப்பிறப்பு, இறந்த அவர்கள் திதி மற்றும் மஹாளயபட்ச தினங்களில் தான் அவர்கள் பூலோகத்திற்கு வர அனுமதிக்கப்படுகிறார்கள். எனவே அவர்கள் சூட்சும தேகத்துடன் பூலோகத்திற்கு வருகின்ற நாட்களில் நாம் பித்ரு தர்ப்பண பூஜைகளை நிறைவேற்றிட, அவர்களும் அதை இங்கு நேரடியாகப் பெற்று ஆசியளிக்கின்றனர்.

    பொதுவாக அனைத்து அமாவாசை திதிகளிலும் ஸ்ரீ அக்னி பகவானின் பத்தினியான ஸ்வதா தேவியானவள், நாம் இடுகின்ற எள்ளையும் நீரையும் வாங்கி வானத்தில் எங்கெங்கோ உள்ள நீத்தார் உலகங்களுக்கு எடுத்துச் செல்கிறாள். ஆனால், மஹாளய பட்ச அமாவாசையில் எல்லா மூதாதையர்களும் சூரிய- சந்திர உலகிற்கு வந்துபோவதால் ஸ்வதா தேவியால் அனைத்து உறவினர்களையும் அங்கு சந்திக்க முடிகிறது. எனவே மஹாளய பட்ச அமாவாசையில் நாம் சமர்ப்பிக்கும் எள், நீர் ஆகியவற்றை இறந்த நமது உறவினர்களிடையே உடனடியாக அவள் சேர்த்துவிடுகிறாள். இறந்த உறவினர்கள் மீண்டும் எந்தப் பிறவி எடுத்தாலும், அந்தப் பிறவியில் அவர்களுக்கு மிக முக்கியமாகத் தேவைப்படுகின்ற காரியத்துக்குத் தேவையான உதவியை, காலச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு "மாற்றுப் பண்டங்களாக உருவாக்கித் தந்துவிடுகிறாள் ஸ்வதா தேவி.

    புரட்டாசி மாத அமாவாசைக்கு முன்பாக கிருஷ்ணபட்சம் பிரதமையிலிருந்து அமாவாசை வரை பதினைந்து திதிகளிலும் தினசரி தர்ப்பணம் செய்வது மிக விசேஷமானது.

    பித்ரு தர்ப்பணம் என்பது ஜாதி, மத, இன வேறுபாடின்றி அனைவரும் செய்ய வேண்டிய முக்கியமான ஒன்றாகும். நமது மூதாதையர்களுக்குரிய அமாவாசை, கிரகணகால, மாதப்பிறப்புத் தர்ப்பணங்களை முறையாகச் செய்யாமையால்தான் உலகில் பல துன்பங்கள் உண்டாகின்றன. எனவே இதுகாறும் செய்யாமல்விட்ட தர்ப்பணங்களுக்கு ஓரளவு பிராயச் சித்தமாக மஹாளயபட்சத்தின் பதினைந்து நாட்களிலும் தினந்தோறும் தர்ப்பணம் செய்வது அவசியம். மேலும் அந்நாட்களில் அன்னதானம் செய்வது வெகு விசேஷமானது! அப்படிச் செய்வது, தர்ப்பண பலன்களைப் பன்மடங்காகப் பெற்றுத் தரும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை! இறந்துபோன மூதாதையர்களின் நினைவாக நாம் அளிக்கும் உணவானது, (இந்த மஹாளயபட்ச காலத்தில்) உடனே அவர்களைச் சென்று அடைவதாய் ஐதீகம்.

    நமது மூதாதையர்களுக்கே உரித்தான இந்த தர்ப்பண பூஜையானது பித்ருக்களுக்கு மட்டுமின்றி, நமது வம்சாவளியினரான நமக்குத்தான் பெரிதும் பயன் தருவதாய் உள்ளது. இதனாலேயே மஹாளயபட்சத் திதி வழிபாடு மிகவும் சிறப்புடையதாய் விளங்குகிறது.

    மஹாளயபட்ச பதினைந்து நாட்களிலும், தர்ப்பணத்தைச் செய்யும் தத்தம் கணவன்மார்களுக்கு உதவிபுரிவது ஒவ்வொரு இல்லறப் பெண்ணின் தலையாய கடமையாகும். அதாவது தர்ப்பணத்திற்கான பலகை, தாம்பாளம், எள், தர்ப்பை போன்றவற்றை எடுத்து வைத்து கணவனுக்கு ஆர்வமூட்டி தர்ப்பணம் செய்ய வைத்தல் என்பது அவளது முக்கிய கடமைகளுள் ஒன்றாகக் கருத வேண்டும்.

    பொதுவாக வலது ஆள்காட்டி (குரு விரல்) விரலுக்கும், கட்டை விரலுக்கும் (சுக்கிர விரல்) இடையிலுள்ள "பித்ரு- பூம்ய ரேகைகள் வழியாக தர்ப்பணங்கள் அளிக்கப்படுகின்றன. இந்த தர்ப்பண நீரின் சக்தியானது, பூமியின் ஆகர்ஷண சக்தியை மீறி மேல்நோக்கி எழும்பிச் சென்று, எத்தனையோ கோடி மைல்களுக்கு அப்பாலுள்ள பித்ரு லோகத்தை அடைகின்றது. சாதாரணமாக, அமாவாசையன்று கீழிருந்து மேல் செல்வதே இந்த "பித்ரு லோக- அந்தர ஆகர்ஷண சக்தியின் தெய்வீகத் தன்மையாகும். மஹாளயபட்ச அமாவாசையன்று இச்சக்தியானது மிகவும் அபரிமிதமாகப் பெருகுகின்றது.

    பித்ருக்களுக்கு தர்ப்பணமிடும்போது பசுந்தயிர் கொண்டு தர்ப்பணமிடுவது வெகு விசேஷமானது. மேலும் அவர்களுக்கு ஆத்ம திருப்தியளிப்பதாய் கருதப்படுவது புடலங்காயாகும். (பித்ரு லோகத்திலுள்ள மூலிகையாய் விளங்குவது புடலங்காயே; இதன் நிழலில்தான் பித்ரு- தேவர்கள் இளைப்பாறுவதாய் ஐதீகம்.)

    ஆக, அதியற்புதமான- தெய்வீக ஆற்றல்களைக் கொண்ட நமது பித்ருக்களுக்குத் தர்ப்பணங்கள், திவசங்கள், படையல்களை முறையாக அளித்து, பல்லாயிரக்கணக்கான நம் கர்ம வினைகளுக்குப் பரிகாரம் தரும் மஹாளய பட்ச தர்ப்பண தான- தர்மங்களை நிறைவேற்றி நல்வழி காண்போமாக!

    ×