search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    தர்ப்பணம் எப்போது கொடுப்பது?
    X

    தர்ப்பணம் எப்போது கொடுப்பது?

    • உங்கள் முன்னோர்கள் எல்லாருமே பித்ருலோகத்தில் நல்ல நிலையில் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது.
    • நீங்கள் கொடுக்கும் தர்ப்பணம்தான் தாகம் தணிப்பதாக இருக்கும்.

    தர்ப்பணம் செய்ய வேண்டிய தினத்தன்று அதிகாலையில் எழுந்துவிட வேண்டும். குளித்து, சுத்தமான ஆடை அணிந்து மூதாதையர்களை நினைத்துக்கொண்டே தர்ப்பணம் செய்ய வேண்டும். காலை 6.30 மணிக்குள் தர்ப்பணம் கொடுத்து விடுவது நல்லது.

    முடியாதவர்கள் காலையில் சீக்கிரம் தர்ப்பணத்தை முடித்து விடவேண்டும். ஏனெனில் நாம் கொடுக்கும் எள் கலந்த நீரை பித்ருக்கள் ஏற்றுக்கொள்ளும் நேரம் என்பது மிக, மிக புனிதமானது. எனவே நாம் அதில் கவனமாக இருக்க வேண்டும்.

    எந்த காரணத்தையும் கொண்டும் சூரியன் மறைந்த பிறகு தர்ப்பணம் செய்யக்கூடாது.

    நாம் தர்ப்பணம் செய்ததும் அதை பெற்றுக் கொள்ளும் ஸ்வதா தேவி கண் இமைக்கும் நேரத்துக்குள் அதை நம் பித்ருக்களிடம் ஒப்படைத்து விடுவாள். எனவே தர்ப்பணம் செய்யும் போது'ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி' என்று சொல்ல மறந்து விடக்கூடாது.

    பொதுவாக நம் வீட்டு பெரியவர்கள் இயற்கையாக மரணம் அடையும் போது, இறந்த நேரம், திதி ஆகியவற்றை ஒரு டைரியில் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் அந்த திதியில் தர்ப்பணம், சிதார்த்தம் உள்ளிட்டவைகளை செய்தல் வேண்டும்.

    பெரும்பாலனவர்கள் இந்த திதி தினத்தை முறையாக செய்வதில்லை. கணிசமானவர்களுக்கு அந்த திதி என்றாலே என்ன என்ற விவரம் கூட தெரியாமல் உள்ளது.

    ஆதிகாலத்தில் தமிழர்கள் 'நீத்தார் வழிபாடு' நடத்தி பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய எல்லா கடமைகளையும் செய்தனர். அதை செஞ்சோற்று கடனாக நினைத்தனர்.

    இப்போதும் பித்ருசாரியம் செய்கிறார்கள். ஆனால் அதை முறையாக, பித்ருக்கள் திருப்திபடும்படி செய்வதில்லை.

    அதனால்தான் குடும்பங்களில் மங்கள காரியங்கள் நடப்பது தடைபடுகிறது அல்லது தாமதமாகிறது. புத்திர சுகம் கிடைக்காமல் போய் விடுகிறது.

    எனவே நம் வம்சம் விளங்க வேண்டுமானால் நம்மை வளர்த்து ஆளாக்கிய முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யப்பட வேண்டும்.

    அமாவாசை, மாதப்பிறப்பு, கிரகண நாட்களில் அவசியம் தர்ப்பணம் செய்தல் வேண்டும். முடியாதவர்கள் வரும் மகலாயபட்சத்தின் 15 நாட்களும் தர்ப்பண பூஜைகளை கட்டாயமாக செய்ய வேண்டும்.

    உங்கள் முன்னோர்கள் எல்லாருமே பித்ருலோகத்தில் நல்ல நிலையில் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. சிலருக்கு அவர்கள் செய்த கர்ம வினைகள் தொடரக்கூடும். அப்படிப்பட்டவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் தர்ப்பணம்தான் தாகம் தணிப்பதாக இருக்கும்.

    தாத்தாவுக்கு அப்பா எல்லாம் மறுபிறவி எடுத்திருப்பார் எனவே அவருக்கு ஏன் தர்ப்பணம் செய்ய வேண்டும் என்று சிலர் நினைக்கலாம். உங்கள் முன்னோர்கள் மறுபிறவி எடுத்திருந்தாலும் கூட நீங்கள் கொடுக்கும் தர்ப்பணம் அவர்களுக்கு பெரும்பலனை கொடுக்கும் என்பதை மறந்து விடக்கூடாது.

    எனவே நீங்கள் முன்னோர் வழிபாட்டை ஆழ்ந்த நம்பிக்கையுடன் செய்தல் வேண்டும். நீங்கள் வழிபாடு செய்வீர்கள் என்ற நம்பிக்கையில்தான் பித்ருலோகத்தில் இருந்து மகாளய பட்சத்தின் 15 நாட்களும் உங்களோடு இருக்க உங்கள் முன்னோர்கள், உங்கள் வீடு தேடி வருகிறார்கள் என்பதை மறந்து விடக்கூடாது.

    Next Story
    ×