search icon
என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    • பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒரு போதும் பலிக்காது.
    • பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணத்தால் மெட்ரோ ரெயில்களில் கூட்டமில்லை என புதுப்புரளி கிளப்பி இருக்கிறார் பிரதமர்.

    சென்னை:

    பிரதமர் நரேந்திர மோடி சமீபத்திய நேர்காணலில், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக சில கட்சிகள் மகளிருக்கு இலவச பேருந்து பயணம் வழங்குகிறார்கள். இதனால் மெட்ரோ ரெயில்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் குறைந்து விடுகிறது. பேருந்துகளால் போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது. சுற்றுப்புற சூழலும் கடுமையாக பாதிக்கப்படுகிறது என்றார்.

    இதற்கு தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒரு போதும் பலிக்காது. வெற்றி முகட்டை நோக்கி இந்தியா கூட்டணி பீடுநடை போடுவதால், தோல்வி பயத்தில், பிரதமர் பதவியின் கண்ணியத்தை மறந்துவிட்டு நாளொரு பொய்ப் பரப்புரை - பொழுதொரு வெறுப்பு விதை எனப் பிரதமர் மோடி பேசி வருகிறார்.

    பிரதமரின் பொறுப்பற்ற பேச்சுகளையும் - அதனைத் தடுக்க வேண்டிய தேர்தல் ஆணையத்தின் அமைதியையும் நாட்டு மக்கள் அதிர்ச்சியோடும் வேதனையோடும் பார்த்து வருகிறார்கள்.

    10 ஆண்டு சாதனைகளை சொல்ல எதுவும் இல்லாததால், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் செயல்படும் நலத்திட்டங்களை கொச்சைப்படுத்துகிறார்.

    பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணத்தால் மெட்ரோ ரெயில்களில் கூட்டமில்லை என புதுப்புரளி கிளப்பி இருக்கிறார் பிரதமர்.

    சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்திற்கு ஒப்புக்கொண்ட படி நிதி தராமல் அந்தத் திட்டத்தையே முடக்கியுள்ளார் பிரதமர் மோடி.

    உண்மைகளை மறைத்து, மகளிர் இலவச பயணத்திட்டத்தின் மீது வீண்பழி சுமத்தி இருக்கிறார்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    • வருகிற 20-ந்தேதி காலை 4.15 மணிக்கு கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
    • செங்கல்பட்டில் இருந்து இன்று மற்றும் நாளை இரவு 11 மணிக்கு சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரெயில் எழும்பூர்- கடற்கரை இடையே ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இன்றும், நாளையும் என 2 நாட்கள் இரவு நேரத்தில் இயக்கப்படும் 15 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

    அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து இன்று (சனிக்கிழமை) இரவு 9.30, 11.30, 11.59 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக தாம்பரத்தில் இருந்து இன்று இரவு 10.40, 11.20, 11.40 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.

    இதேபோல் சென்னை கடற்கரையில் இருந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 4.15 மற்றும் இரவு 9.30, 11.20, 11.59 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்களும், தாம்பரத்தில் இருந்து நாளை இரவு 10.40, 11.15, 11.35 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.

    மேலும் 20-ந்தேதி காலை 4.15 மணிக்கு கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.

    செங்கல்பட்டில் இருந்து இன்று மற்றும் நாளை இரவு 11 மணிக்கு சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரெயில் எழும்பூர்- கடற்கரை இடையே ரத்து செய்யப்படுகிறது. செங்கல்பட்டில் இருந்து இன்று மற்றும் நாளை இரவு 10.10 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில்கள் தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. சென்னை கடற்கரையில் இருந்து நாளை காலை 3.55, 4.35 மணி மற்றும் 20-ந்தேதி காலை 3.55 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில் கடற்கரை- எழும்பூர் இடையே ரத்து செய்யப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அரியானாவில் இன்று அதிகாலை சுற்றுலா பேருந்து தீப்பிடித்து எரிந்தது.
    • இந்த விபத்தில் 8 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர்.

    சண்டிகர்:

    அரியானா மாநிலம் நு நகரில் இன்று அதிகாலை சுற்றுலா பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் 8 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். மேலும் 24 பேர் படுகாயம் அடைந்தனர்.

    தகவலறிந்து அங்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

    முதல் கட்ட விசாரணையில், சுற்றுலா பேருந்தில் மொத்தம் 60 பேர் பயணம் செய்தனர் என்றும், ஆன்மிக தலங்களுக்கு சுற்றுலா சென்றதும் தெரிய வந்துள்ளது. தீவிபத்துக்கான காரணம் தெரியவில்லை.

    ஆன்மிக சுற்றுலா சென்ற பேருந்து தீவிபத்தில் சிக்கி 8 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கடந்த வாரம் ரபா பகுதியை இஸ்ரேல் கைப்பற்றியதால் எல்லையை கடந்துசெல்லும் பகுதி மூடப்பட்டது.
    • ரபா நகரில் இருந்து எகிப்து செல்லும் எல்லைப்பகுதி மூடப்பட்டதால் வெளிநாட்டவர்கள் சிக்கிக்கொண்டனர்.

    வாஷிங்டன்:

    இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதலில் ஈடுபட்டது. இந்த தாக்குதலில் இஸ்ரேலைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தது. நூற்றுக்கணக்கானோரை பிணைக் கைதிகளாக சிறை பிடித்தது.

    போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில் அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்போம் என சூளுரைத்து காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து வருகிறது. ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும்வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்தார்.

    இதற்கிடையே, ரபா பகுதியை கடந்த வாரம் இஸ்ரேலின் ராணுவம் கைப்பற்றியது. இதனை தொடர்ந்து காசாவின் ரபா நகரில் இருந்து எகிப்து செல்லும் எல்லைப்பகுதி மூடப்பட்டதால் வெளிநாட்டவர்கள் பலர் சிக்கிக் கொண்டனர்.

    இந்நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், காசாவில் 20 அமெரிக்க டாக்டர்கள் சிக்கி இருந்தனர். அவர்களில் 17 அமெரிக்க டாக்டர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் வெளியேற விருப்பம் தெரிவித்தனர். காசாவில் இருந்து வெளியேற வேண்டும் என விரும்பியவர்கள் வெளியேறி வந்துவிட்டனர் என தெரிவித்துள்ளார்.

    • டெல்லியில் மே 25-ம் தேதி பாராளுமன்ற தேர்தலுக்கான 6-வது கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
    • வடகிழக்கு டெல்லி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கன்னையா குமார் களமிறங்குகிறார்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் மே 25-ம் தேதி பாராளுமன்ற தேர்தலுக்கான 6-வது கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

    வடகிழக்கு டெல்லி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கன்னையா குமார் வேட்பாளராக களமிறங்கி உள்ளார். இதில் பா.ஜ.க. சார்பில் இரு முறை எம்.பியாக தேர்வு செய்யப்பட்ட மனோஜ் திவாரி போட்டியிடுகிறார்.

    இந்நிலையில், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த கன்னையா குமார் மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பான

    வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.

    டெல்லி நியூ உஸ்மான்பூர் பகுதியில் உள்ள ஆம் ஆத்மி அலுவலகம் அருகே பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்களால் கன்னையா குமார் தாக்கப்பட்டதாக ஆம் ஆத்மி கவுன்சிலர் புகார் தெரிவித்தார்.

    அதில், சில நபர்கள் கன்னையா குமாருக்கு மாலை அணிவித்ததாகவும், அதன்பின் அவர்கள் கன்னையா மீது மையை பூசி அவரை தாக்க முயன்றதாகவும் கூறப்பட்டுள்ளது.

    இதுகுறித்து கன்னையா குமார் கூறுகையில், தாக்குதலின் பின்னணியில் பா.ஜ.க. வேட்பாளர் மனோஜ் திவாரி இருக்கிறார். தனது புகழ் அதிகரித்து வருவதால் விரக்தியில் இருக்கும் மனோஜ் திவாரி ரவுடிகளை அனுப்பி இதனை செய்துள்ளார் என தெரிவித்தார்.

    • தற்போது அதிக ஆபத்து கொண்ட பொதைப்பொருள் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
    • கஞ்சா பயன்படுத்துவது தொடர்பான கைது நடவடிக்கை குறைந்த அளவே உள்ளன.

    அமெரிக்காவில் ஹெராயின், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. இவைகள் அனைத்தும் அதிக ஆபத்து கொண்ட பொதைப்பொருள் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஹெராயின் போன்ற போதைப்பொருட்கள் பயன்படுத்துதல் மற்றும் கடத்தல் போன்ற சம்பங்களில் ஈடுபடுவோருக்கு அதிகமான தண்டனை வழங்கப்படுகிறது.

    கஞ்சா பயன்படுத்துவது தொடர்பான கைது நடவடிக்கை குறைந்த அளவே உள்ளன. இந்த நிலையில் கஞ்சாவை குறைந்த ஆபத்து கொண்ட போதைப்பாருள் என மறுவகைப்படுத்த ஜோ பைடன் தலைமையிலான அரசு முன்மொழிந்துள்ளது.

    இதனால் அமெரிக்காவில் இனிமேல் கஞ்சா பயன்படுத்துவது அதிகாரப்பூர்வாக்கப்படலாம் எனத எதிர்பார்க்கப்படுகிறது.

    இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறுகையில் "கஞ்சா (marijuana) பயன்படுத்தியதற்காக யாரும் சிறையில் இருக்கக்கூடாது. கஞ்சாவை அணுகுவதில் தோல்வியுற்றதால், பல உயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த தவறுகளை சரிசெய்வதில் நான் உறுதியாக இருக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • ஆதாரங்களை சேகரிக்க போலீசார் வீட்டை சுற்றி தேடுதல் வேட்டை நடத்தினர்.
    • முதியவர் உயிருடன் புதைக்கப்பட்டு இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

    கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நாடு மால்டோவா. இந்நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள சிறிய கிராமம் தான் உஸ்தியா. இந்த கிராமத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்ததாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், படுகாயங்களுடன் உயிரிழந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    பிறகு, மூதாட்டி உயிரிழப்பு தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த 18 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட போது, அந்த இளைஞர் மதுபோதையில் மயக்க நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இளைஞர் கைதை தொடர்ந்து ஆதாரங்களை சேகரிக்க போலீசார் வீட்டை சுற்றி தேடுதல் வேட்டை நடத்தினர்.

    அப்போது வீட்டின் பின்புறம் யாரோ உதவி கேட்கும் குரல் போலீசாருக்கு கேட்டது. எங்கிருந்து குரல் வருகிறது என போலீசார் தேடினர். சிறிது நேரத்தில் உதவி கேட்கும் குரல் மண்ணுக்குள் இருந்து வந்ததை போலீசார் உறுதிப்படுத்தினர். அதன்பின், சம்பவ இடத்தை குழி தோண்டும் பணியில் போலீசார் இறங்கினர். அப்போது 62 வயது முதியவர் உயிருடன் புதைக்கப்பட்டு இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

    உயிருடன் புதைக்கப்பட்ட முதியவரை மீட்ட போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மீட்கப்பட்ட முதியவரும், போலீசார் சற்று முன் கைது செய்த 18 வயது இளைஞரும் கடந்த நான்கு நாட்களுக்கு முன் ஒன்றாக இணைந்து மது அருந்தியுள்ளனர். மது அருந்தும் போது இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

    உடனே முதியவரை கடுமையாக தாக்கிய இளைஞர் அவரை கழுத்தில் கத்தியால் வெட்டியுள்ளார். அப்போது மயக்கமடைந்த முதியவரை, அந்த இளைஞர் வீட்டின் பின்புறம் உள்ள கீழ்தளத்தில் மறைத்துவைத்துள்ளார். அதன்பிறகு இளைஞர் வீட்டின் பின்புறம் குழி தோண்டி, முதியவரை அதில் தள்ளி புதைத்துள்ளார். மது போதையில் முதியவர் உயிருடன் புதைக்கப்பட்டு, நான்கு நாட்கள் கழித்து உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • நரேந்திர மோடி ஜி உங்களால் அதானி, அம்பானி பெயரை உச்சரிக்க முடியாது என நான் சொன்னேன்.
    • இரண்டு நாள் கழித்து நரேந்திர மோடி அதானி, அம்பானி குறித்து சொன்னார்.

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு ராகுல் காந்தி பேசினார்.

    அப்போது பிரதமர் மோடியை என்ன வேண்டுமென்றாலும் என்னால் சொல்ல வைக்க முடியும் எனக் கூறினார். இது தொடர்பாக ராகுல் காந்தி கூறியதாவது:-

    நரேந்திர மோடி ஜி, உங்களால் அதானி, அம்பானி பெயரை உச்சரிக்க முடியாது என நான் சொன்னேன். இரண்டு நாள் கழித்து நரேந்திர மோடி அதானி, அம்பானி குறித்து சொன்னார்.

    வங்கி கணக்கிற்கு பணம் செலுத்தப்படும் taka-tak taka-tak taka-tak... என நான் சொன்னேன். பின்னர் பிரதமர் மோடி அவரது பேச்சில் taka-tak பயன்படுத்தினார்.

    மக்களாகிய நீங்கள் பிரதமர் மோடியிடம் கேட்க விரும்புவதை, அதை மோடியால் என்னால் சொல்ல வைக்க முடியும். அதேபோல் பிரதமர் மோடியிடம் ஏதாவது சொல்ல விரும்பவில்லை என்றாலும், நீங்கள் என்னிடம் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

    ராகுல் காந்தி அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார். இங்கே வருகிற 20-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

    • எஸ்.பி. சொக்கலிங்கம்  தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.
    • இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

    'காக்கா முட்டை' ,'விசாரணை', 'கொடி' ,'வட சென்னை' உட்பட பல வெற்றி படங்கள்ளை தயாரித்த கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பனி பிளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸ் உடன் இணைந்து தயாரிக்கும் புதிய படம் "மாஸ்க்". இந்த படத்தின் மூலம் நிர்வாக தயாரிப்பாளர் எஸ்.பி. சொக்கலிங்கம்  தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.

    இத்திரைப்படத்தை விகர்ணன் அசோக்  இயக்குகிறார். இவர் 'தருமி' என்ற குறும்படத்திற்காக தனியார் நிறுவனம் வழங்கிய சிறந்த குறும்படத்திற்கான கோல்ட் மெடல் விருதை பெற்றுள்ளார்.

    இத்திரைப்படத்தின் கவின் கதாநாயகனாக நடிக்கிறார். இவருடன் ஆண்ட்ரியா, சார்லி, ருஹானி ஷர்மா, பாலா சரவணன், வி.ஜே. அர்ச்சனா, சந்தோஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

    இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார், ராமர் படத்தொகுப்பு கவனிக்கிறார், கலை இயக்குனராக ஜாக்கியும் ,ஆடை வடிவமைப்பாளர்களக பூர்த்தி மற்றும் விபின் ஆகியோரும் பணியாற்றுகின்றனர். மாஸ்க் திரைப்படம் பூஜையுடன் துவங்கியது. இந்த படத்தின் படப்பிடிப்பு மே மாத இறுதியில் சென்னையில் துவங்குகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்திய அணியின் பயிற்சியாளராக ஸ்டீபன் பிளெமிங், ரிக்கி பாண்டிங் ஆகியோர் நியமனம் செய்யப்படுவதற்கு வாய்ப்பு இருந்தது.
    • பிசிசிஐ உயர்கட்ட நிர்வாகிகளின் பட்டியலில் அவரின் பெயர் முதலிடத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது.

    மும்பை:

    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக் காலம் டி20 உலகக்கோப்பை தொடருடன் முடிவடைய உள்ளது. அதன்பின் ராகுல் டிராவிட் பயிற்சியாளர் பொறுப்பில் தொடர விரும்பாததால், அடுத்த பயிற்சியாளருக்கான தேடுதலில் பிசிசிஐ ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பிசிசிஐ தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மண் விருப்பம் காட்டவில்லை. இதனால் வெளிநாட்டு பயிற்சியாளரை நியமிப்பதாக தகவலகள் வெளியானது. குறிப்பாக ஸ்டீபன் பிளெமிங், ரிக்கி பாண்டிங், உள்ளிட்டோர் நியமனம் செய்யப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

    இந்த நிலையில் கேகேஆர் அணியின் ஆலோசகராக செயல்பட்டு வரும் கவுதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக வர அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பிசிசிஐ உயர்கட்ட நிர்வாகிகளின் பட்டியலில் கவுதம் கம்பீரின் பெயர் முதலிடத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது. கவுதம் கம்பீர் உடனான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு பின் நடக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் ஆலோசகராக கவுதம் கம்பீர் செயல்பட்ட 2 ஆண்டுகளும் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. அதேபோல் கேகேஆர் அணியின் ஆலோசகராக கவுதம் கம்பீர் அந்த அணியை மீண்டும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


    • காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அயோத்தி ராமர் கோயிலை இடித்து விடுவார்கள்.
    • ராமர் மீண்டும் கூடாரத்துக்குச் செல்ல நேரிடுவார் என் பிரதமர் மோடி தெரிவித்தார்.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலம் பாரபங்கியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-

    அயோத்தி தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மாற்ற விரும்புவதாக காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறியுள்ளார். இது எப்படி சாத்தியம் என்று சிலர் நினைக்கலாம்.

    சுதந்திரப் போராட்டத்தின் போது நாட்டைப் பிரிக்கவேண்டும் என்று பேசும்போது, நாட்டைப் பிரிக்கமுடியாது என்று மக்கள் சொன்னார்கள். ஆனாலும் அது நடந்தது. அவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள். அவர்களின் சாதனை பதிவு அத்தகையது. அவர்களுக்கு நாடு முக்கியமில்லை. குடும்பம், அதிகாரம்தான் முக்கியம்.

    காங்கிரசும், சமாஜ்வாடியும் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவிலை புல்டோசர் மூலம் இடித்துவிடுவார்கள். காங்கிரஸ் வெற்றி பெற்றால் குழந்தை ராமர் கோவிலில் இருந்து மீண்டும் கூடாரத்திற்கே செல்வார். புல்டோசரை எங்கு பயன்படுத்த வேண்டும், எங்கு பயன் படுத்தக்கூடாது என்று யோகி ஆதித்யநாத்திடம் அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

    தேர்தலில் வெற்றி பெற்று மோடி அரசு ஹாட்ரிக் சாதனை படைக்கும். தேர்தல் நடந்து கொண்டிருக்கும் வேளையில் இந்தியா கூட்டணி கட்சிகள் சீட்டுக்கட்டு போல சரியத் தொடங்கி உள்ளன.

    பா.ஜக-தேசிய ஜனநாயக கூட்டணி தேசிய நலனுக்காக அர்ப்பணித்து உழைக்கிறது. ஆனால் இந்தியா கூட்டணி நாட்டில் உறுதியற்ற தன்மையை உருவாக்க களத்தில் உள்ளது.

    புதிய அரசில் ஏழைகள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகளுக்காக பல முக்கிய முடிவுகளை நான் எடுக்க உள்ளேன். ரேபரேலி மக்கள் பிரதமரை தேர்ந்தெடுப்பார்கள் என காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறினார்.

    இதைக்கேட்ட சமாஜ்வாதி இளவரசரின் (அகிலேஷ் யாதவ்) இதயம் உடைந்தது. கண்ணீர் மட்டும்தான் வரவில்லை. ஆனால் அவரது இதயத்தின் ஆசைகள் அனைத்தும் உடைந்துவிட்டன. அகிலேஷ் யாதவ் புதிய அத்தையின் (மம்தா பானர்ஜி) கீழ் அடைக்கலம் அடைந்துள்ளார்.

    இந்த புதிய அத்தை மேற்கு வங்காளத்தில் இருக்கிறார். அவர் (மம்தா பானர்ஜி) இந்தியா கூட்டணிக்கு வெளியில் இருந்துதான் ஆதரவு தருவேன் என கூறியுள்ளார்.

    உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தின் 'ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு' திட்டத்தின் காரணமாக தற்போது நான் வெளிநாடுகளுக்குச் செல்லும் பரிசுகளைத் தேர்ந்தெடுக்க எனது மூளையை அதிகம் பயன்படுத்த வேண்டியதில்லை. மாநில இணையதளத்தைப் பார்த்து பரிசு பொருட்களை எடுத்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

    • ஊழியர்கள் அலுவலகம் வந்து வேலை செய்ய வேண்டும் என காக்னிசன்ட் தெரிவித்தது.
    • காக்னிசன்ட் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    புதுடெல்லி:

    கொரோனா பெருந்தொற்று காலத்தில் பல்வேறு நாடுகளில் உள்ள ஐ.டி. நிறுவனங்கள் அனைத்து ஊழியர்களும் வீட்டில் இருந்தே வேலை செய்யும்படி வலியுறுத்தின. அதன்பின், படிப்படியாக சில நிறுவனங்கள் ஊழியர்களை அலுவலகம் வந்து வேலை செய்யுமாறு கூறின.

    இந்தியாவிலும் அனைத்து முன்னணி ஐடி நிறுவனங்களும் அதன் ஊழியர்களை வாரத்தில் சில நாட்கள் வந்து வேலை செய்யும்படியும், மீதி நாட்கள் வீட்டில் இருந்து வேலைசெய்யும்படியும் அறிவுறுத்தி வருகின்றன. ஆனால் சில ஐடி நிறுவனங்கள் தன் ஊழியர்களை வாரம் முழுவதும் அலுவலகம் வந்து வேலைசெய்யுமாறு கூறி வருகின்றன.

    இதற்கிடையே, காக்னிசன்ட் நிறுவனம் தனது ஊழியர்களை அலுவலகம் வந்து வேலை செய்ய தேவையில்லை. அனைவரும் வீட்டில் இருந்தே வேலை செய்யும்படி கடந்த ஆண்டு தெரிவித்தது. இதனால் ஊழியர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர்.

    இந்நிலையில், காக்னிசன்ட் நிறுவனம் ஊழியர்கள் அனைவரும் அலுவலகம் வந்து வேலை செய்ய வேண்டும் எனவும், அப்படி வேலை செய்யவில்லை என்றால் வேலையை விட்டு சென்று விடுங்கள் எனவும் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

    காக்னிசன்ட் நிறுவனத்தின் இந்த திடீர் அறிவிப்பு ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    ×