search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    • விருந்தானது வாழை இலையில் சாதமும் ஆட்டு கறி குழம்பும் ஆண்களுக்கு பரிமாறப்பட்டது.
    • செல்லம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆண் பக்தர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள சொரிக்காம்பட்டி ஊராட்சி பெருமாள்கோவில்பட்டி கிராமத்தில் உள்ள காவல் தெய்வமான கரும்பாறை முத்தையா கோவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் அசைவ உணவு திருவிழா இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.


    இவ்விழாவில் பாரம்பரிய முறைப்படி ஆண் பக்தர்கள் மட்டுமே பங்கேற்றனர். ஆண்டு தோறும் நடைபெறும் விழாவில் பக்தர்கள் வேலை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் , நோய் நொடியின்றி வாழவும், பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு நடத்துவது வழக்கம். தங்களது நேர்த்திக்கடன் நிறைவேறிய பக்தர்கள் கருப்பசாமிக்கு கருப்பு ஆடுகள் மட்டுமே பலியிடுவார்கள். பக்தர்கள் கோவிலில் விட்டுச் செல்லும் ஆடுகள் மேய்ச்சலுக்காக வயல் மற்றும் விளைநிலங்களில் உணவை தேடி செல்லும்போது முத்தையா சாமியே வந்து தங்களது வயலில் இரை தேடுவதாக நம்பிக்கை வைத்து அந்த ஆடுகளை பொதுமக்கள், விவசாயிகள் யாரும் விரட்டமாட்டார்கள். விழாவிற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக கிராமப்புறங்களில் சுற்றி திரியும் ஆடுகளை எல்லாம் ஒன்று சேர்த்து சுவாமிக்கு பலியிடப்படும்.

    இந்த நிலையில் திருவிழா இன்று காலை தொடங்கிய நிலையில் கோவிலில் சாமிக்கு பொங்கல் வைத்து வழிபாட்டை தொடங்கினர்.பின்னர், நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட 125 ஆடுகள் பலியிடப்பட்டு, 2500 கிலோ அரிசியுடன் உணவு சமைக்கப்பட்டது. பின்னர் சமைத்த உணவு, இறைச்சியை சாமிக்கு படைத்து பூஜை செய்தனர். அதன் பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


    இந்த கறி விருந்தில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு விருந்து வழங்கப்பட்டது. இந்த விருந்தானது வாழை இலையில் சாதமும் ஆட்டு கறி குழம்பும் ஆண்களுக்கு பரிமாறப்பட்டது. இதனை சாப்பிட்ட பிறகு இலையை எடுக்காமல் அப்படியே விட்டுச் செல்வது வழக்கம். ஒரு வாரத்திற்கு பின்பு இலைகள் காய்ந்த பிறகே பெண்கள் கோவிலின் தரிசனத்திற்கு வருவார்கள்.

    இந்த கறிவிருந்தில் திருமங்கலம், சொரிக்கம் பட்டி, பெருமாள் கோவில்பட்டி, கரடிக்கல், மாவிலிபட்டி, செக்கானூரணி, சோழவந்தான், கருமாத்தூர், செல்லம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆண் பக்தர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

    • எடப்பாடி பழனிசாமியோ, ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் கட்சிக்குள் வந்தால் மீண்டும் இரட்டை தலைமை உருவாகி விடும் என்று அஞ்சுகிறார்.
    • ஜூன் 4-ந் தேதிக்கு பிறகு அ.தி.மு.க.வில் அதிரடி மாற்றங்கள் நிகழ வாய்ப்பிருப்பதாகவே பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

    சென்னை:

    தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் வட மாநிலங்களிலும் இன்னும் சில தினங்களில் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு ஜூன் 4-ந்தேதி அன்று முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.

    தமிழகத்தில் தி.மு.க. கூட்டணிக்கு எதிராக அ.தி.மு.க. மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் தனித்தனி அணியாக களம் கண்டதால் வாக்குகள் பிரிந்து தி.மு.க.வுக்கே அது சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தி.மு.க. வுக்கு எதிராக மெகா கூட்டணியை உருவாக்க திட்டமிட்டிருந்த அ.தி.மு.க.வின் கனவு பலிக்காமலேயே போய் விட்டது. தே.மு.தி.க.வை கூட்டணியில் சேர்த்து களம் கண்ட அ.தி.மு.க., பா.ம.க.வையும் கூட்டணியில் சேர்த்திருந்தால் தி.மு.க. கூட்டணிக்கு கடும் போட்டியை ஏற்படுத்தி இருக்க முடியும் என்றே அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர்.

    அதே நேரத்தில் அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக பாரதிய ஜனதா கூட்டணியில் போய் சேர்ந்துள்ளார். ராமநாதபுரம் தொகுதியில் களம் கண்டுள்ள அவர் வெற்றி பெறுவாரா? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. அதே நேரத்தில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டு தனிக்கட்சியை தொடங்கிய டி.டி.வி. தினகரனும் பாரதிய ஜனதாவோடு கைகோர்த்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார். இப்படி ஓ.பி.எஸ், டி.டி.வி. தினகரன் இருவருமே பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு எதிராக கைகோர்த்திருப்பது அந்த கட்சிக்கு பலவீனமாகவே பார்க்கப்படுகிறது.

    அதே நேரத்தில் பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறி இருக்கக் கூடாது என்றே அ.தி.மு.க. இரண்டாம் கட்ட தலைவர்கள் பலரும் கட்சி மேலிடத்திடம் குறைபட்டுக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாரதிய ஜனதா கூட்டணியில் இடம்பெற்று, ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரனையும் அரவணைத்துச் சென்றிருந்தால் நிச்சயம் அ.தி.மு.க. கூட்டணி வலுவானதாகவே மாறி இருக்கும் என்று அரசியல் நிபுணர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

    பா.ஜனதா கூட்டணியில் அ.தி.மு.க. இடம்பெற்று பா.ம.க.வும் அந்த கூட்டணியில் சேர்ந்திருந்தால் நிச்சயம் தி.மு.க. கூட்டணிக்கு அந்த அணி கடும் போட்டியாக இருந்திருக்கும் என்றே கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது.

    ஆனால் தற்போதைய சூழலில் ஓட்டுகள் பிரிந்து தி.மு.க. வெற்றிபெற வாய்ப்பு இருப்பதாக கருத்து கணிப்புகளும் தெரிவித்து உள்ளன.


    எனவே அ.தி.மு.க.வின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்தும் சில அதிரடியான முடிவுகளை அ.தி.மு.க. மேற்கொள்ள வேண்டிய கட்டாயமாகி இருப்பதாகவே கட்சியினர் பலர் கூறியுள்ளனர். குறிப்பாக ஒன்றுபட்ட அ.தி.மு.க.வை மீண்டும் உருவாக்கினால் தனித்து நின்றே வெற்றி பெற முடியும் என்றும் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் விளக்கமாக எடுத்துக் கூறி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்காக ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளலாம் என்றும் இதன் மூலம் அ.தி.மு.க. மீண்டும் வலுப்பெறும் என்றும் அவர்கள் கூறி உள்ளனர்.

    இது தொடர்பாக திரை மறைவில் ரகசிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    ஆனால் எடப்பாடி பழனிசாமியோ, ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் கட்சிக்குள் வந்தால் மீண்டும் இரட்டை தலைமை உருவாகி விடும் என்று அஞ்சுகிறார். அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வத்தால் ஏற்பட்ட பிரச்சனைகள் இன்னமும் முழுமையாக தீர்க்கப்படாமலேயே இருக்கும் நிலையில் அவருடன் எப்படி கை கோர்த்து செயல்பட முடியும்? என்கிற கேள்விகளையும் அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலர் எழுப்பியுள்ளனர். இப்படி அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ்.சை மீண்டும் சேர்ப்பது தொடர்பாக மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வருகிறது.

    இந்த நிலையில் பாராளு மன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியை தழுவினால் இந்த பிரச்சனை பூதாகரமாக வெடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    எனவே ஜூன் 4-ந் தேதிக்கு பிறகு அ.தி.மு.க.வில் அதிரடி மாற்றங்கள் நிகழ வாய்ப்பிருப்பதாகவே பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

    • வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து மர்மநபர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
    • கொள்ளை குறித்து வழக்குப்பதிவு செய்து 3 தனிப்படைகள் அமைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சின்னமணி நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சுகுமார்(வயது 70). இவர் நாகை ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    இவரது மனைவி புனிதா சென்னையில் ஆடிட்டராக உள்ளார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். சுகுமார் கடந்த 10-ந்தேதி சென்னையில் உள்ள தனது குடும்பத்தினரை பார்க்க சென்று உள்ளார். சமீபத்தில் இவர் தனது குடும்பத்தினருடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.

    இவரது வீட்டில் தூத்துக்குடி சிலோன் காலனியை சேர்ந்த அமுதா என்பவர் வீட்டு வேலைகளை பார்த்து வருகிறார். நேற்று மாலை வழக்கம் போல அவர் வீட்டை பூட்டி விட்டு சென்று விட்டார். இன்று அதிகாலை கதவை திறக்க அமுதா வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்ட அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே அவர் சுகுமாருக்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து சுகுமார் தூத்துக்குடி தென்பாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த போலீசார் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த பொருட்கள், துணிமணிகள் சிதறிக்கிடந்தன.

    வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து மர்மநபர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர் என்பதை அறிந்த போலீசார், சென்னையில் உள்ள சுகுமாரை செல்போனில் தொடர்பு கொண்டு வீட்டில் வைக்கப்பட்டிருந்த நகை, பணம் குறித்து கேட்டறிந்தனர்.

    இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மோப்பநாய் சீனோ வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அந்த நாய் சுகுமாரின் வீடு அமைந்துள்ள தெருவின் முனை பகுதி வரை ஓடிச்சென்று திரும்பிவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. தடயவியல் நிபுணர்களுடன் சென்று சோதனை நடத்தி வருகின்றனர்.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இவரது வீட்டின் முன்பக்க சுவர் ஏறி குதித்து உள்ள சென்ற மர்மநபர்கள் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து லாக்கரில் வைத்திருந்த சுமார் 100 பவுனுக்கும் மேற்பட்ட தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர் என்பது தெரியவந்தது.

    சுகுமார் வந்த பின்பு தான் வீட்டில் எவ்வளவு தங்க நகைகள் மற்றும் பணம் எவ்வளவு இருந்தது என்பது முழுமையாக தெரியவரும்.

    இதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்படி போலீசார் திருட்டு போன வீடு மற்றும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து 3 தனிப்படைகள் அமைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • புதிய விமான சேவைகள், வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படும்.
    • பயணிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஆலந்தூர்:

    சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தாய்லாந்து, சவுதி அரேபியாவின் தமாம் ஆகிய இடங்களுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளன.

    அந்தப் பயணிகளின் வசதிக்காக, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், சென்னையில் இருந்து தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக் நகருக்கும், இதை போல் பாங்காக்கில் இருந்து சென்னைக்கும், இரண்டு விமான சேவைகளை புதிதாக, கடந்த 15-ந்தேதியில் இருந்து, இயக்கத் தொடங்கியுள்ளது.

    இந்த விமான சேவைகள் வாரத்தில் 4 நாட்கள் இயக்கப்படுகின்றன.

    அதேபோல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம், சவுதி அரேபியாவின் தமாமிற்கு, சென்னை யில் இருந்தும், தாமாமில் இருந்து சென்னைக்கும் இடையே, இரண்டு விமான சேவைகளை, வருகின்ற ஜூன் மாதம் 1-ந்தேதியில் இருந்து புதிதாக இயக்கத் தொடங்குகிறது.

    இந்த விமான சேவைகள் வாரத்தில் இரண்டு நாட்கள், செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் நேரடி விமானமாக இயங்கத் தொடங்குகிறது.

    இதேப்போல் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து மேற்குவங்க மாநிலம் துர்காப்பூருக்கும், அதேப்போல் துர்காப்பூரில் இருந்து சென்னைக்கும் புதிதாக நேரடி விமான சேவை, கடந்த 16-ந்தேதி தேதியில் இருந்து தொடங்கப்பட்டுள்ளது.

    இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் இயக்கும் இந்த புதிய விமான சேவைகள், வாரத்தில் 3 நாட்கள் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இயக்கப்படும் என்று அறி விக்கப்பட்டுள்ளது.

    சென்னை சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிலையங்களில், புதிய நேரடி விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது, பயணிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • ரெயிலில் கஞ்சா கடத்தப்பட்டு வரும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
    • போலீசை பார்த்ததும் கஞ்சா பையை போட்டு விட்டு தப்பி ஓட்டம்.

    ஈரோடு:

    ஈரோடு ரெயில் நிலையத்திற்கு தினமும் 100-க்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கின்றன. கடந்த சில நாட்களாக ஈரோடு வழியாக செல்லும் ரெயிலில் கஞ்சா கடத்தப்பட்டு வரும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

    இதையடுத்து ஈரோடு ரெயில்வே போலீசார் உஷார் படுத்தப்பட்டு ரெயில் நிலையத்துக்கு வரும் அனைத்து ரெயில் களையும் ஒவ்வொரு பெட்டியாக சென்று சோத னை செய்து வருகின்றனர்.

    அதன்படி ஜார்க்கென்ட் மாநிலம் டாட்டா நகர் பகுதியில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் வரை செல்லும் டாட்டா நகர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஈரோடு நோக்கி வந்து கொண்டு இருந்தது.

    நேற்று இரவு ஈரோடு ரெயில் நிலையம் அருகே வந்த போது ரெயில்வே போலீசார் ரெயிலில் சோதனை நடத்தினர்.

    அப்போது முன்பதிவு செய்யப்பட்ட எஸ்.1 பெட்டியின் கழிப்பறை அருகே சோதனை செய்த போது பை ஒன்று கேட்பாரற்று கிடந்தது. போலீசார் அதனை பிரித்து பார்த்த பொழுது அதில் 9 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

    ரெயிலில் கஞ்சா கடத்திய கும்பல் போலீஸ் வருவதை பார்த்ததும் கஞ்சா பையை போட்டு விட்டு தப்பி சென்றது தெரிய வந்தது.

    கஞ்சாவை கைப்பற்றிய ஈரோடு ரெயில்வே போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் கைப்பற்றப்பட்ட கஞ்சாவை ஈரோடு மது விலக்கு அமலாக்கத்துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    TNL01180524: முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கோவிலில் இந்த ஆண்டு வைகாசி விசாக திருவிழா வருகிற 22-ந் தேதி (புதன்கிழமை) நடக்கிறது. முருக பெருமான் அ

    திருச்செந்தூர்:

    முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    கோவிலில் இந்த ஆண்டு வைகாசி விசாக திருவிழா வருகிற 22-ந் தேதி (புதன்கிழமை) நடக்கிறது. முருக பெருமான் அவதரித்த வைகாசி விசாக தினத்தன்று அவரை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு வருகிற 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7.15 மணிக்கு இராக்கால அபிஷேகம் நடைபெறுகிறது.

    விசாக திருநாளான வருகிற 22-ந் தேதி (புதன்கிழமை) அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. காலை 10.30 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம், சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.

    மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையை தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு முனிகுமாரர்களுக்கு சாபவிமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இரவு 7.15 மணிக்கு இராக்கால அபிஷேகம் நடக்கிறது.

    23-ந் தேதி (வியாழக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. மாலை 5 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7.15 மணிக்கு இராக்கால அபிஷேகம் நடக்கிறது. விழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள். ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் நேற்றே கோவிலில் குவியத்தொடங்கிவிட்டனர்.

    மேலும், கோடை விடுமுறையையொட்டி தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக வந்து, கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்கின்றனர். கோவிலில் குவியும் பக்தர்கள் ஆங்காங்கே குழுக்களாக அமர்ந்து முருகபெருமானின் திருப்புகழை பாடி வழிபடுகின்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.
    • 1,500 நாட்டு படகுகள் கடற்கரை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    இந்திய வானிலை ஆய்வு மையம் மன்னார் வளைகுடா மற்றும் கன்னியாகுமரி கடல் பகுதிகளில் காற்றானது மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் அதிகபட்சமாக 55 கிலோமீட்டர் வரை வீசக்கூடும் என எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால் நெல்லை மாவட்டத்தில் கனமழை முதல் மிக கனமழை வரையிலும் பெய்ய வாய்ப்புள்ளது என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து நெல்லை மாவட்டத்தில் நேற்று மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    இந்நிலையில் இன்று 2-வது நாளாக மாவட்டத்தில் கூட்டப்புளி, பெருமணல், இடிந்தகரை, உவரி, கூத்தன்குழி, பஞ்சல், தோமையர்புரம் உள்ளிட்ட 10 மீனவ கிராமங்களில் உள்ள சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதனால் சுமார் 1,500 நாட்டு படகுகள் கடற்கரை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    • காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதியிலும் நீர்வரத்து அதிகரித்து வர தொடங்கியது.
    • தொடர்ந்து 1000 கனஅடிக்கு மேல் நீர்வரத்து வருவதால், மெயின்அருவி, சினிபால்ஸ் ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    ஒகேனக்கல்:

    கர்நாடகா மாநிலம் மற்றும் தமிழக-கர்நாடகா எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் சில தினங்களாக கனமழை பெய்தது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல், கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி, நாட்றம்பாளையம், ஓசூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மலை குன்றுகளில் பெய்த மழையின் காரணமாகவும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாகும் நேற்று முன்தினம் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது.

    காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதியிலும் நீர்வரத்து அதிகரித்து வர தொடங்கியது.

    இந்த நிலையில் ஒகேனக்கல்லில் நேற்று 3 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை அளவு குறைந்ததால், இன்று காலை சற்று சரிந்து 1500 கனஅடியாக நீர்வரத்து குறைந்து வந்து கொண்டிருக்கிறது.

    ஒகேனக்கல்லில் தொடர்ந்து 1000 கனஅடிக்கு மேல் நீர்வரத்து வருவதால், மெயின்அருவி, சினிபால்ஸ் ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    • வார இறுதி நாட்களில் அதிகளவு பக்தர்களும், மற்ற நாட்களில் குறைந்த பக்தர்களும் மலையேற்றத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • 5,6,7-வது மலையில் அடிக்கடி காலநிலை மாற்றம் ஏற்பட்டு காற்றுடன் கூடிய மழை பெய்வதால் அங்கு கடும் குளிர்ச்சியான காலநிலை நிலவி வருகிறது.

    கோவை:

    கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பூண்டியில் பிரசித்திபெற்ற வெள்ளியங்கிரி மலை அமைந்து உள்ளது.

    இங்குள்ள 7-வது மலையில் சுயம்புவடிவில் வெள்ளியங்கிரி ஆண்டவர் அருள்பாலித்து வருகிறார். பூலோகத்தின் தென்கயிலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல வேண்டுமெனில், சுமார் 5.5 கி.மீ. தொலைவுக்கு நீண்ட மலைப்பாதை வழியாக சென்று வழியிலுள்ள வெள்ளை விநாயகர் கோவில், பாம்பாட்டி சனை, கைதட்டி சனை, சீதைவனம், அர்ச்சுனன் வில், பீமன் களி உருண்டை, ஆண்டி சுனை போன்ற மலைகளை கடந்தால் 7-வது மலையில் வீற்றிருக்கும் சுயம்புலிங்க பெருமானை தரிசிக்க முடியும். மேலும் இந்த மலைப்பாதை பயணம் என்பது மிகவும் கரடு-முரடானது.

    வெள்ளியங்கிரி மலைப்பாதையில் பக்தர்கள் ஏறுவதற்கு வனத்துறை சார்பில் ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம்வரை அனுமதி வழங்கப்படுகிறது. அதன்படி இந்தாண்டு கடந்த பிப்ரவரி மாதம் 12-ந்தேதி முதல் மலையேற பக்தர்களுக்கு வனத்துறை அனுமதியளித்து உள்ளது. இதனால் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் அதிகளவு பக்தர்களும், மற்ற நாட்களில் குறைந்த பக்தர்களும் மலையேற்றத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக 5,6,7-வது மலையில் அடிக்கடி காலநிலை மாற்றம் ஏற்பட்டு காற்றுடன் கூடிய மழை பெய்வதால் அங்கு கடும் குளிர்ச்சியான காலநிலை நிலவி வருகிறது.

    வெள்ளியங்கிரி மலையில் நேற்று சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்து பலத்த மழை பெய்ததால் அங்கு பக்தர்கள் நடந்து செல்லும் பாதைகள் சிதலமடைந்து உள்ளன. தொடர்ந்து வெள்ளியங்கிரி மலையில் காலநிலை மாற்றம் காரணமாக அடிக்கடி மழை பெய்து வருவதாலும், கடும் குளிர் நிலவி வருவதாலும், வெள்ளியங்கிரி மலையேறுவதற்கு பக்தர்கள் வரவேண்டாம் என வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

    • வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது.
    • தங்கம் மற்றும் வெள்ளி விலை போட்டி போட்டு உயர்வதால் நடுத்தர மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

    சென்னை:

    அட்சய திருதியை நாளான மே 10-ந்தேதிக்கு பிறகு தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்கமும் காணப்பட்டு வருகிறது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.

    கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 6,850-க்கும் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 54,800-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 4 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.96.50-க்கும் பார் வெள்ளி ரூ.96,500-க்கும் விற்பனையாகிறது.

    தங்கம் மற்றும் வெள்ளி விலை போட்டி போட்டு உயர்வதால் நடுத்தர மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

    • குடியரசுத் துணைத்தலைவர் ஜகதீப் தன்கருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.
    • நல்ல உடல்நலத்தோடும், மகிழ்ச்சியோடும் நீண்டகாலம் வாழ விழைகிறேன்.

    சென்னை:

    தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறி இருப்பதாவது:-

    குடியரசுத் துணைத்தலைவர் ஜகதீப் தன்கருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நல்ல உடல்நலத்தோடும், மகிழ்ச்சியோடும் நீண்டகாலம் நிறைவான வாழ்க்கை வாழ விழைகிறேன்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதில் கூறியுள்ளார்.

    • கடந்த சில நாட்களாக தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
    • தற்போது அணையில் 17.68 டி.எம்.சி. தண்ணீரே இருப்பு உள்ளது.

    மேட்டூர்:

    மேட்டூர் அணையின் மூலம் காவிரி டெல்டா மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இது தவிர ஏராளமான கூட்டுகுடிநீர் திட்டப்பணிகள் செயல்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் அணைக்கு போதிய நீர்வரத்து இல்லாததாலும், மழை இல்லாததாலும் அணையின் நீர்மட்டம் குறைந்து வந்தது. இதன் காரணமாக அணையின் நீர்த்தேக்க பகுதிகள் வறண்டு காணப்படுகிறது. இதனால் பருவமழையை எதிர்பார்த்து பொதுமக்கள், விவசாயிகள் காத்து உள்ளனர்.

    இதற்கிடையே கடந்த சில நாட்களாக தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. நேற்று மாலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 822 கனஅடியாக இருந்த நிலையில் இன்று காலை நீர்வரத்து வினாடிக்கு 1120 கனஅடியாக அதிகரித்து உள்ளது.

    மேலும் அணையின் நீர்மட்டம் 49.79 அடியாகவும், அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறப்பு வினாடிக்கு 2 ஆயிரத்து 100 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது அணையில் 17.68 டி.எம்.சி. தண்ணீரே இருப்பு உள்ளது.

    ×