search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fishermen boat"

    எல்லை தாண்டி வந்ததாக கூறி ராமேசுவரம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். #RameswaramFishermen

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று 562 விசைப்படகுகளில் கடலுக்கு சென்றனர்.

    இவர்களில் ஒரு தரப்பினர் இந்திய கடல எல்லையை ஒட்டியுள்ள கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், இது சர்வதேச கடல் பகுதி. மீன் பிடிக்க அனுமதி இல்லை. எனவே உங்கள் பகுதிக்கு செல்லுங்கள் என ராமேசுவரம் மீனவர்களை எச்சரித்தனர்.

    மேலும் சில கடற்படை வீரர்கள் மீனவர்களின் படகுகளில் ஏறி அவர்களை தாக்கியதோடு, மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தி விரட்டியடித்தனர். இதையடுத்து மீனவர்கள் அவசரம், அவசரமாக கரைக்கு திரும்பினர்.

    அப்போது ராமேசுவரத்தை சேர்ந்த அமலன் என்பவரது படகு எல்லை தாண்டி வந்ததாக கூறி அதில் இருந்த மீனவர்கள் முருகேசன், முனியசாமி, ரெனிஸ்டன், சுப்பையா ஆகிய 4 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். படகும் பறிமுதல் செய்யப்பட்டது.

    சிறை பிடிக்கப்பட்ட 4 மீனவர்களும் இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு எல்லை தாண்டி வந்ததாக கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டு 4 பேரையும் இலங்கை கடற்படை கைது செய்தது. அவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். #RameswaramFishermen

    நாகை மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்ற சம்பவம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #Fishermen

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி மீன்பிடி கருவிகளை அபகரித்து செல்வது, சிறைபிடித்து சென்று சிறையில் அடைப்பது போன்ற சம்பவங்கள் தொடர்கதையாக நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் நாகை மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்ற சம்பவம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    நாகை அக்கரைப்பேட்டை டாட்டா நகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன்(வயது 42). மீனவர்.

    இவருக்கு சொந்தமான பைபர் படகில் சீனிவாசன் மற்றும் அக்கரைப்பேட்டை பகுதியை சேர்ந்த கந்தசாமி(25), கோபாலகிருஷ்ணன்(25), ஆனந்தபாபு(23), நிலவரசன் (21), வீரசெல்வன்(30), பிருதிவிராஜன்(20) ஆகிய 7 பேரும் கடந்த 7-ந் தேதி நாகை அக்கரைப்பேட்டை கடுவையாற்றங்கரையில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

    நேற்று மாலை வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரைக்கு தென்கிழக்கே 20 நாட்டிங்கல் கடல் மைல் தொலைவில் இவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு சிறிய ரக கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் நாகை மீனவர்களின் படகை சுற்றி வளைத்தனர். பின்னர் அவர்கள் நாகை மீனவர்களின் படகில் ஏறி எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி சீனிவாசன், கந்தசாமி, கோபாலகிருஷ்ணன், ஆனந்தபாபு, நிலவரசன், வீரசெல்வன், பிருதிவிராஜன் ஆகிய 7 பேரையும் சிறைபிடித்தனர்.

    சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் திரிகோணமலையில் உள்ள இலங்கை கடற்படை முகாமில் வைக்கப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து நாகை மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதால் மீனவ கிராம மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Fishermen

    கச்சத்தீவு அருகே மீன் பிடித்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர். அப்போது இலங்கை கடற்படை வீரர் கடலில் தவறி விழுந்தார். அவரை கடலுக்குள் தள்ளி விட்டதாக ராமேசுவரம் மீனவர்கள் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. #Fishermen #Srilankanavy

    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தில் இருந்து நேற்று 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அவர்களில் ஒரு பிரிவினர் கச்சத்தீவு அருகே இந்திய கடல் பகுதியில் மீன் பிடித்தனர்.

    அப்போது அங்கு இலங்கை கடற்படையினர் குட்டி ரோந்து கப்பல்களில் வந்தனர். அவர்கள் இங்கு மீன் பிடிக்ககூடாது என மீனவர்களை எச்சரித்து விரட்டியடித்தனர்.

    இதனை தொடர்ந்து மீனவர்கள் அங்கிருந்து அவசர அவசரமாக புறப்பட்டனர். அப்போது இலங்கை கடற்படையினர் மீனவர்களின் விசைப்படகில் சோதனை செய்வதாக கூறி ஏறினர்.

    அப்படி ஏறும்போது கடற்படை வீரர் ஒருவர் தவறி கடலில் விழுந்து விட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கடலில் விழுந்த வீரரை, இலங்கை கடற்படையினர் தீவிரமாக தேடினர்.

    ஆனால் அவரை மீட்க முடியவில்லை. இந்த சம்பவத்தால், மீன் பிடிப்பதை கைவிட்டு விட்டு, மீனவர்கள் மாலையிலேயே ராமேசுவரம் துறைமுகம் திரும்பி விட்டனர்.

    அவர்கள் கூறுகையில், கடற்படை வீரர் கடலில் விழுந்ததால் இலங்கை கடற்படையினர் ஆத்திரம் அடைந்தனர். கச்சத்தீவு தலைமன்னார் உள்ளிட்ட கடல் பகுதிகளை வலம் வந்த அவர்கள், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு, எங்களை (மீனவர்களை) விரட்டியடித்தனர்.

    இதனால் உயிர் பயத்தில் நாங்கள், பாதியிலேயே மீன் பிடிப்பதை நிறுத்திவிட்டு கரை திரும்பி விட்டோம். இதுவரை கடலில் விழுந்த கடற்படை வீரரை மீட்டதாக தெரியவில்லை.

    எனவே இலங்கை கடற்படையினர் மிகுந்த கோபத்தில் இருப்பார்கள். நாங்கள் அடுத்தமுறை மீன் பிடிக்கச் செல்லும்போது எங்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவார்களோ? என்ற அச்சம் உள்ளது. மத்திய மாநில பாதுகாப்புத் துறையினர், இதுகுறித்து இலங்கை அரசிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்றனர்.

    இதற்கிடையில் இலங்கை கடற்படையில் இருந்து இந்திய கடற்படைக்கும், மீன்வளத்துறையினருக்கும் தகவல் அனுப்பி உள்ளனர். அதில் கச்சத்தீவு அருகே டி.என்.10 எம்.எம்.364 என்ற பதிவு எண் கொண்ட தமிழக விசைப்படகு நேற்று மீன்பிடியில் ஈடுபட்டிருந்தது. அந்த படகில் 7 மீனவர்கள் இருந்தனர். அவர்கள், படகிற்குள் சோதனைக்கு சென்ற எங்கள் வீரரை (இலங்கை கடற்படை வீரர்) கடலுக்குள் தள்ளி விட்டனர். இது குறித்து 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அவர்கள் பெயர் விவரங்களை தெரிவிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரின் துப்பாக்கி சூடு மீனவர்கள் விரட்டியடிப்பு, கடலில் விழுந்த வீரரை தேடும் பணி போன்ற சம்பவங்களால் ராமேசுவரம் பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. #Fishermen #Srilankanavy

    சிங்கள கடற்படையினர் சிறைபிடித்து சென்ற தமிழக மீனவர்களின் 3 விசைப்படகுகளை இலங்கை அரசுடமையாக்க அந்த நாட்டு கோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். #fishermanboat #boat

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் மண்டபத்தை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கடந்த ஜூலை மாதம் 5-ந்தேதி ஒரு படகிலும், 8-ந்தேதி 2 படகிலும் என மொத்தம் 3 படகுகளில் சென்று 16 மீனவர்கள் இணைந்து நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த சிங்கள கடற்படையினர் 3 படகுகளுடன் மீனவர்களை பிடித்துச் சென்று இலங்கை ஊர்காவல் துறை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    பின்னர் அடுத்தகட்ட விசாரணைக்கு பின்பு கடந்த 11-ந்தேதி அந்த மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் படகுகள் விடுவிக்கப்படவில்லை.

    இந்த நிலையில் ராமேசுவரம், மண்டபத்தை சேர்ந்த 3 விசைப்படகுகளின் உரிமையாளர்களும் கடந்த 28-ந்தேதி ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தார்.

    இதுகுறித்த தகவல் படகு உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. மேலும் மத்திய-மாநில அரசுகளும் இதுகுறித்து எவ்வித தகவலும் தரவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

    படகு உரிமையாளர்கள் ஆஜராகவில்லை. இதைத் தொடர்ந்து இலங்கை ஊர்க்காவல் துறை நீதிபதி, இலங்கை அரசின் வெளிநாட்டு மீன்பிடி தடை சட்டப்படி 3 விசைப்படகுகளையும், அதில் இருந்த உபகரணங்களையும் இலங்கை அரசு அரசுடைமையாக்க உத்தரவிட்டார்.

    சிறைபிடிக்கப்பட்ட படகுகளை இலங்கை அரசுடைமையாக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக தமிழக மீனவர்கள் தெரிவித்தனர். #fishermanboat #boat

    சூறாவளி காற்று ஓய்ந்து 9 நாட்களுக்கு பின் ராமேசுவரம் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் 600 விசைப்படகுகளில் கடலுக்கு சென்றனர். #Fishermenboat

    ராமேசுவரம்:

    கடந்த வாரம் வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ராமேசுவரம், மண்டபம், பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசியது. கடல் சீற்றமும் அதிகமாக இருந்ததால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டது.

    மேலும் மீன்வளத்துறை கடலுக்கு செல்வதற்கான அனுமதி டோக்கனை வழங்க வில்லை. ஒரு வாரமாக இதே நிலை நீடித்ததால் மீனவர்கள் வருமானமின்றி தவித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை முதல் ராமேசுவரம், மண்டபம், தனுஷ்கோடி ஆகிய பகுதிகளில் காற்று குறைந்து இயல்பு நிலை திரும்பியது. இதையடுத்து இன்று முதல் மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என மீன் வளத்துறை அறிவித்தது.

    அதன்படி 9 நாட்களுக்கு பின் இன்று அதிகாலை அனுமதி டோக்கன் பெற்று ராமேசுவரம் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் 600 விசைப்படகுகளில் கடலுக்கு சென்றனர்.

    இதனால் கடந்த ஒரு வாரமாக வெறிச்சோடி காணப்பட்ட ராமேசுவரம் மீண்டும் பரபரப்பாக செயல்பட தொடங்கியது. #Fishermenboat

    ×