search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 3 விசைப்படகுகளை இலங்கை அரசுடைமை ஆக்குகிறது - மீனவர்கள் அதிர்ச்சி
    X

    சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 3 விசைப்படகுகளை இலங்கை அரசுடைமை ஆக்குகிறது - மீனவர்கள் அதிர்ச்சி

    சிங்கள கடற்படையினர் சிறைபிடித்து சென்ற தமிழக மீனவர்களின் 3 விசைப்படகுகளை இலங்கை அரசுடமையாக்க அந்த நாட்டு கோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். #fishermanboat #boat

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் மண்டபத்தை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கடந்த ஜூலை மாதம் 5-ந்தேதி ஒரு படகிலும், 8-ந்தேதி 2 படகிலும் என மொத்தம் 3 படகுகளில் சென்று 16 மீனவர்கள் இணைந்து நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த சிங்கள கடற்படையினர் 3 படகுகளுடன் மீனவர்களை பிடித்துச் சென்று இலங்கை ஊர்காவல் துறை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    பின்னர் அடுத்தகட்ட விசாரணைக்கு பின்பு கடந்த 11-ந்தேதி அந்த மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் படகுகள் விடுவிக்கப்படவில்லை.

    இந்த நிலையில் ராமேசுவரம், மண்டபத்தை சேர்ந்த 3 விசைப்படகுகளின் உரிமையாளர்களும் கடந்த 28-ந்தேதி ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தார்.

    இதுகுறித்த தகவல் படகு உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. மேலும் மத்திய-மாநில அரசுகளும் இதுகுறித்து எவ்வித தகவலும் தரவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

    படகு உரிமையாளர்கள் ஆஜராகவில்லை. இதைத் தொடர்ந்து இலங்கை ஊர்க்காவல் துறை நீதிபதி, இலங்கை அரசின் வெளிநாட்டு மீன்பிடி தடை சட்டப்படி 3 விசைப்படகுகளையும், அதில் இருந்த உபகரணங்களையும் இலங்கை அரசு அரசுடைமையாக்க உத்தரவிட்டார்.

    சிறைபிடிக்கப்பட்ட படகுகளை இலங்கை அரசுடைமையாக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக தமிழக மீனவர்கள் தெரிவித்தனர். #fishermanboat #boat

    Next Story
    ×