என் மலர்
நீங்கள் தேடியது "Fishermen"
- நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
- 5 ஆயிரம் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.
நெல்லை:
அரபிக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தற்போது கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் வானிலை மைய அறிவிப்பை அடிப்படையாக கொண்டு நெல்லை மாவட்டத்தில் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதன் காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராமங்களான கூத்தங்குழி, கூட்டப்பனை, பஞ்சல், இடிந்தகரை, கூடங்குளம், கூடுதாழை, உவரி உள்ளிட்ட 9 கிராம மக்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
இதனால் சுமார் 1,200 நாட்டுப்படகுகள் கடற்கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மேலும் இந்த தடையால் சுமார் 5 ஆயிரம் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.
- மீனவர் சிக்கலுக்கு தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறது.
- வகுக்கப்படும் திட்டத்தை இலங்கை அரசுடன் இணைந்து செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மீனவர்கள் நலனுக்கான இந்திய, இலங்கைக் கூட்டுப் பணிக்குழுவின் கூட்டம் வரும் 29-ந் தேதி இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடந்து கைது செய்யப்படுவது, சிறையில் அடைக்கப்படுவது, அபராதம் விதிக்கப்படுவது உள்ளிட்ட அத்துமீறல்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதும், அதில் தமிழக அரசின் மீன்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்பதும் வரவேற்கத்தக்கவை.
கடைசியாக 2022-ம் ஆண்டில் இந்தியா-இலங்கை கூட்டுப் பணிக்குழுவின் கூட்டம் நடைபெற்றிருந்த நிலையில், இரு ஆண்டுகளுக்குப்பின் இந்தக் கூட்டம் நடைபெறுவது மீனவர் சிக்கலுக்கு தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறது.
இந்திய, இலங்கைக் கூட்டுப் பணிக்குழுவின் கூட்டம் கூடிக் கலையும் கூட்டமாக அமைந்து விடக் கூடாது. இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான கடற்பரப்பு மிகவும் குறுகியதாக உள்ள நிலையில், அந்த எதார்த்தத்தை உணர்ந்து கொண்டு இரு தரப்பு மீனவர்களும் சிக்கலின்றி மீன் பிடிக்க என்ன வழி? என்பதை இரு நாட்டு அதிகாரிகளும் ஆராய வேண்டும்.
மீனவர் சிக்கலுக்கு ஒரே நாளில் தீர்வு காண முடியாது என்பது அனைவரும் அறிந்தது தான் என்றாலும் கூட, இந்த சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண எத்தகைய அணுகு முறைகளை கடைபிடிப்பது, எந்தெந்த நிலைகளில் பேச்சுகளை நடத்துவது என்பது குறித்த தெளிவானத் திட்டம் இந்தக் கூட்டத்தில் வகுக்கப்பட வேண்டும். அவ்வாறு வகுக்கப்படும் திட்டத்தை இலங்கை அரசுடன் இணைந்து செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
- மீனவர்கள் 23 பேரையும் விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வங்கக்கடலில் மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மூன்று விசைப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.
மீனவர்கள் 23 பேரையும் விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், இந்திய-இலங்கை கூட்டுப் பணிக்குழுவின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி மீனவர் சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் இரு நாட்டு மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பேச்சுகளை விரைந்து நடத்த மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
- சுமார் ஆயிரக் கணக்கான மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
தூத்துக்குடி:
தமிழகத்தில் கடந்த மாதம் 15-ந்தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் பரவலாக பெய்து வருகிறது.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் அதிக மழை கிடைக்கும். இந்த ஆண்டு இதுவரை போதிய மழை இல்லாத நிலையில் தற்போது வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே இலங்கை அருகே கடலில் புயல் மையம் கொண்டுள்ளதால் நெல்லை மாவட்ட கடற்கரை பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் எனவும், மறு உத்தரவு வரும் வரை நெல்லை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் ராதாபுரம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் மீனவர்களுக்கு அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
இந்த தகவல் நெல்லை மாவட்ட கடலோர மீனவ கிராமங்களில் உள்ள ஆலய ஒலிபெருக்கிகள் மூலம் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து இன்று நெல்லை மாவட்டம் உவரி, கூட்டப்பனை, கூடுதாழை மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் மீன்பிடி படகுகள் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம் இடிந்தகரை, கூட்டப்புளி, பெருமணல், தோமையர்புரம் பகுதியில் கட்டுமரத்தில் 8 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் இன்று அதிகாலை 3 மணி அளவில் புறப்பட்டு சென்று விட்டனர். நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
வங்கக்கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் என்பதால் தூத்துக்குடி வ.உ.சி. துறை முகம் உள்ளிட்ட பல்வேறு துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மேலும் வங்க கடல் பகுதி மற்றும் குமரி கடல் பகுதிகளில் காற்று 75 கிலோமீட்டர் வரை வீசக்கூடும். இதனால் பாதுகாப்பு கருதி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். மேலும் ஆழ்கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருக்கும் மீனவர்கள் பத்திரமாக கரை திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் முதல் பெரிய தாழை வரை 300 விசைப் படகுகள் மீன்பிடி துறை முகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சுமார் ஆயிரக்கணக்கான நாட்டுப் படகுகள் மற்றும் பைபர் படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுமார் ஆயிரக் கணக்கான மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
இதே போல கனமழை எச்சரிக்கை காரணமாக திருச்செந்தூர், மணப்பாடு, ஆலந்தலை, கொம்புத்துறை, புன்னக்காயல் பகுதிகளிலும் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
- ஆன்மிக மையம் அமைக்கவோ, கலாச்சார மையம் அமைக்கவோ பாட்டாளி மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
- எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் மக்களை பாதிக்கும் வகையில் இருக்கக் கூடாது.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் திருவிடந்தைக்கு அருகில் 233 ஏக்கர் நிலப்பரப்பில் ஆன்மிகம் மற்றும் கலாச்சார மையம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. இத்திட்டத்திற்கு மீனவ மக்களிடையே கடுமையான எதிர்ப்பு எழுந்தும் கூட அதைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல் ஆன்மிக மையம் அமைக்க இந்து சமய அறநிலையத்துறையும், சுற்றுலாத்துறையும் துடிப்பது கண்டிக்கத்தக்கது.
ஆன்மிக மையம் அமைக்கவோ, கலாச்சார மையம் அமைக்கவோ பாட்டாளி மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மாறாக, தமிழ்நாட்டின் பூர்வகுடி மக்களான மீனவர்களின் வாழ்வாதாரங்களை அழித்து விட்டு, அந்த மையங்களை அமைக்க வேண்டுமா? என்பது தான் எனது வினா.
ஆன்மிக மற்றும் கலாச்சார மையம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டிருக்கும் இடத்தை தான் மீனவர்கள் அவர்களின் படகுகளை நிறுத்துவது, வலைகள் மற்றும் மீன்களை காய வைப்பது போன்றவற்றுக்காக பயன்படுத்தி வந்தனர். இப்போது அங்கு ஆன்மிக மையம் அமைக்கப்பட்டால் மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும்.
திருவிடந்தையில் ஆன்மிக மற்றும் கலாச்சார மையம் அமைக்கும் திட்டம் மீனவர்களை மட்டுமின்றி, பேரிடர்களுக்கும் வழி வகுக்கும். ஆன்மிக மையம் அமைக்கப்படுவதற்கு அருகில் உள்ள ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களில் இயற்கையான மணல் மேடுகள் உள்ளன.
அவை சுனாமி அலைகளைக் கூட தடுக்கும் வல்லமை பெற்றவை. இந்தத் திட்டத்திற்காக அவை அகற்றப்படும் என்று கூறப்படும் நிலையில், சுனாமியிலிருந்து திருவிடந்தை உள்ளிட்ட பகுதிகளுக்கு பாதுகாப்பு கிடைக்காது. அந்தப் பகுதி தான் நிலத்தடி நீர்வளத்தை சேமிக்கும் தளங்களைக் கொண்டிருக்கிறது. இயற்கையையும், மீனவ மக்களின் வாழ்வாதாரத்தையும் சிதைத்து விட்டு ஆன்மிக , கலாச்சார மையம் அமைக்க வேண்டுமா? என தமிழக அரசு சிந்திக்க வேண்டும்.
ஆன்மிக, கலாச்சார மையம் அமைப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதி அளிப்பதில் காட்டப்பட்ட அசாத்திய வேகம் பல்வேறு ஐயங்களை ஏற்படுத்தியுள்ளது. இத்திட்டத்திற்கான மாநில அளவிலான சுற்றுச்சூழல் அனுமதி ஒரே நாளில் வழங்கப்பட்டதாகவும், அதுகுறித்த கூட்டத்தில் மீனவ சமுதாய பிரதிநிதிகள் ஒருவர் கூட அழைக்கப்படவில்லை என்றும் மீனவ அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன. எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் மக்களை பாதிக்கும் வகையில் இருக்கக் கூடாது; உள்ளூர் மக்களால் வரவேற்கப்படும் வகையில் இருக்க வேண்டும். இந்த இரு தகுதிகளையும் பெறாத ஆன்மிக, கலாச்சார மையத்தை திருவிடந்தை பகுதியில் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க முன்னுரிமை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- காரைக்கால் மற்றும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதால் மிகுந்த துயரத்திலும் மனவேதனையிலும் உள்ளனர்.
புதுச்சேரி:
ஃபெஞ்சல் புயல் காரணமாக ஒரு வாரமாக தொழிலுக்குச் செல்லாமல் இருந்த புதுச்சேரி மாநில காரைக்கால் மாவட்ட மீனவர்கள், டிசம்பர் 1-ந்தேதி மீண்டும் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர்.
அதுபோல் காரைக்கால் மாவட்டம் கீழகாசாகுடிமேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த பால்மணி என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில், பால்மணியின் சகோதரர் கலைமணி மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த சிலம்பரசன், சுதின், பொன்னையன், ராமன், பூவரசன், மாணிக்கவேலு, ஆகாஷ், சக்திவேல், வினித் குமார், கமலேஷ், சிவக்குமார், ஜெயமணி, மோகன்குமார், ஆறுமுகம் (காரைக்கால்மேடு), நாகை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்மணி, ரத்தினவேலு, மயிலாடுதுறை செல்வநாதன் ஆகிய 18 மீனவர்கள் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்றனர்.
கோடியக்கரைக்கு அருகே மீன்பிடித்த போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் 18 மீனவர்கள் சிறைபிடித்து விசைபடகை பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் காரைக்கால் மீனவர்களை மீட்க கோரி முதல்-அமைச்சர் ரங்கசாமி மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
புதுச்சேரி காரைக்கால் பிராந்தியத்தில் இருந்து எந்திரப்படகில் 15 காரைக்கால் மீனவர்கள் மற்றும் 3 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் படகை கைப்பற்றி மீனவர்களை சிறைபிடித்து காவலில் வைத்துள்ளனர்.
சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க முன்னுரிமை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் டெல்லியில் மத்திய மந்திரி ஜெய்சங்கரை நேரில் சந்தித்து வைத்திலிங்கம் எம்.பி. அளித்த மனுவில், காரைக்கால் மற்றும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதால் மிகுந்த துயரத்திலும் மனவேதனையிலும் உள்ளனர். மீனவர்களுடன் மீன்பிடி படகை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
- ராமேசுவரம் தங்கச்சி மடம் பகுதியில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் வேலை நிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
- ஒவ்வொரு மீனவரும் தலா ரூ. 50 ஆயிரம் அபராதம் செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமேசுவரம்:
ராமேசுவரத்தில் இருந்து கடந்த டிசம்பர் 5-ந் தேதி 338 விசைப் படகுகளில் 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் சுமார் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை சேர்ந்த மீனவர்கள் தனுஷ்கோடிக்கும், தலைமன்னாருக்கும் இடைப்பட்ட பகுதியான நெடுந்தீவு அருகே ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிக்க வந்ததாக கூறி, ராமேசுவரத்தைச் சேர்ந்த ரிபாக்சன் (வயது 26), ராஜபிரபு சீனிபாண்டி (27), அரவிந்த் பாண்டி சீனிபாண்டி (24), ராபின்ஸ்டன் (41), பிரசாந்த் (56), ஆரோக்கியம் (58), யோபு (15), பெட்ரிக் நாதன் (37), ஜான் இம்மரசன் (38), அருள் பிரிட்சன் (29), நிஷாந்த் (25), பரலோக மேட்டன் வினித் (24), அந்தோணி லிஸ்பன் (24) ஆகிய 14 மீனவர்களையும் சிறைபிடித்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்த மீன்பிடி உபகரணங்களை சேதப்படுத்தியதோடு, மீனவர்கள் கடலில் விரித்திருந்த வலைகளையும் அறுத்து வீசினர். தொடர்ந்து 14 மீனவர்களும் இலங்கையில் உள்ள மன்னார் மீன்வளத்துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டனர் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி, ராமேசுவரம் தங்கச்சி மடம் பகுதியில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் வேலை நிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், கைது செய்ய மீனவர்கள் 14 பேரும் இலங்கை மன்னார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், 14 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு மீனவரும் தலா ரூ. 50 ஆயிரம் அபராதம் செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட செய்தி, ராமேசுவரம் மீனவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
- மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.
நாகப்பட்டினம்:
தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி சுனாமி பேரலை தாக்கியது.
இதனால் கடலோர கிராமங்கள் முற்றிலும் பாதிக்கபட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதனால் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26-ந்தேதி சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
இந்நிலையில் நாகை மாவட்டத்தில் சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு வேளாங்கண்ணி கடற்கரையில் வேளாங்கண்ணி பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் மீனவர்கள், வணிகர்கள், பொதுமக்கள், பாதிரியார்கள், கன்னியாஸ்திரிர்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கருப்பு பட்டைய அணிந்து அமைதி பேரணியாக 3 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றனர்.
பின்னர் சுனாமியால் உயிர் இழந்தவர்களை அடக்கம் செய்த நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் வைத்து மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
மும்மதத்தினரும் உயிரிழந்ததின் நினைவாக அங்கு பகவத் கீதை, குரான், விவிலியம் உள்ளிட்டவைகளில் இருந்து வாசகங்களை அந்தந்த மதத்தினர் வாசித்து ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்தனர்.
உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அவர்களுக்கு பிடித்த காரம், இனிப்பு, குளிர்பானங்கள் உள்ளிட்ட உணவு வகைகளை வைத்து மாலை அணிவித்து மலர் தூவி அங்கு கண்ணீர் அஞ்சலி செய்து வருகின்றனர்.
நாகை மாவட்டத்தில் உள்ள 25 மீனவர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்லாமல் அந்தந்த மீனவர் கிராமங்களில் உள்ள நினைவு ஸ்தூபியில் பேரணியாக சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள அனைத்து கடைகளுக்கும் அடைக்கப்பட்டுள்ளது.
- இதில் 3 மீனவர்களுக்கு காயம் ஏற்பட்டு இலங்கையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- நாளை காரைக்கால் மாவட்டத்தில் கடையடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில், கடந்த ஜனவரி 27-ந் தேதி, காரைக்கால் மீன் பிடி துறைமுகத்திலிருந்து, காரைக்கால் கிளிஞ்சல் மேட்டை சேர்ந்த 13 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, மீனவர்கள் மீது இலங்கை கடற்படை அராஜக முறையில் துப்பாக்கி சூடு நடத்தி கைது செய்தனர்.
இதில் 3 மீனவர்களுக்கு காயம் ஏற்பட்டு இலங்கையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் மீனவர் செந்தமிழ் காலில் பயங்கர அடிபட்டு காலை அகற்றும் நிலைக்கும், மணிகண்டன் கண் பறிபோகும் நிலைக்கும், மற்றொருவர் லேசான காயத்துடனும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இலங்கை கடற்படையை கண்டித்தும், காயப்பட்டு இலங்கை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 3 மீனவர்களை மேல் சிகிச்சை செய்ய விடுவிக்க வலியுறுத்தியும், இலங்கையில் உள்ள தங்களது படகுகளை விடுதலை செய்ய வலியுறுத்தியும், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 11 மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள், கடந்த 11-ந் தேதி முதல் முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
4-வது நாள் போரட்டமாக, கடற்கரை சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இலங்கை கடற்படையை கண்டித்து, காரைக்கால் மாவட்ட 11 மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள், இன்று 7-வது நாள் போராட்டமாக, காரைக்கால் ரெயில் நிலையத்தில், வேளாங்கண்ணி ரெயில் முன்பு மீனவர்கள் குடும்பத்தோடு தண்டவாளத்தில் படுத்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து ரெயில்வே போலீசார் மற்றும் காரைக்கால் மாவட்ட போலீசார் மீனவர்களிடம் சமாதானம் பேசி ஒவ்வொருவரையும் தனித்தனியாக தண்டவாளத்தை விட்டு அகற்றி ரெயில் செல்ல அனுமதித்தனர்.
இதனால் ரெயில் 30 நிமிடம் தாமதமாக சென்றது. மேலும் ரெயில் நிலையத்தை ஒட்டிய தோமாஸ் அருள் வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தங்களது கோரிக்கைகளுக்கு மத்திய, மாநில மற்றும் இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நாளை காரைக்கால் மாவட்டத்தில் கடையடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மீனவர்களின் தொடர் போராட்டம் காரணமாக காரைக்காலில் 400-க்கு மேற்பட்ட விசைப்படகுகள் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது. மீன் விற்பனை இல்லாததால் மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது.






