search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்டெர்லைட்"

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் டெல்லி பசுமைத்தீர்ப்பாயத்தில் இன்று மேல்முறையீடு செய்துள்ளது. #Sterlite #ThoothukudiShooting
    புதுடெல்லி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் நடத்திய போராட்டத்தை கலைக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 13 பேர் உயிரிழந்தனர். இதனை அடுத்து, ஆலையை மூட தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. ஆலையும் சீல் வைத்து மூடப்பட்டது.

    இந்நிலையில், தமிழக அரசின் இந்த அரசாணைக்கு எதிராக டெல்லி பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் இன்று மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. 


    முதல்வர் எடப்பாடி பழனிசாமி பற்றி டி.டி.வி.தினகரன் பேச்சுக்கு அதிமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். #ThoothukudiFiring #TNCM #EdappadiPalanisamy

    சென்னை:

    தூத்துக்குடி சம்பவம் குறித்து சட்டசபையில் நடந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    தூத்துக்குடி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போதுதான் அங்கு சகஜ நிலை திரும்புகிறது.

    இங்கு முதல்-அமைச்சர் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் சிலவற்றை குறை சொல்லி மக்கள் மத்தியில் உள்ள உணர்வுகளை வெளிப்படுத்துகிறேன். எதிர் காலத்தில் எந்த ஆட்சியிலும் இது போன்ற கொடிய சம்பவம் நடக்கக்கூடாது என்று கூறிக்கொள்கிறேன்.

    முதல்- அமைச்சரின் அறிக்கையில், கலெக்டர் அலுவலகர் முற்றுகை போராட்டத்தை மக்கள் கைவிட்டு தூத்துக்குடி பழைய பஸ்நிலையம் அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை இல்லாமல் அமைதியாக போராட்டம் நடத்த ஒப்புக் கொண்டதாகவும் என்றாலும் முன் எச்சரிக்கையாக 2 ஆயிரம் போலீசார் பணி அமர்த்தப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

    அப்படி இருக்கையில் 144 தடை உத்தரவு எதனால் போடப்பட்டது? அங்கு எல்லா கட்சிக்காரர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    ஆனால் முதல்வரின் அறிக்கையில் அவர்களை கொச்சைப்படுத்துவது போல உள்ளது. இது அவர் வகிக்கும் பதவிக்கு அழகா?

    பேரணியில் சமூக விரோதிகள் ஊடுருவியதாக முதல்வர் கூறியுள்ளார். போலீஸ் உளவுத்துறை என்ன செய்தது?

     


    நாங்கள் எல்லாம் சென்று அங்கு ஆறுதல் கூறுகிறோம். ஆனால் நீங்கள் (அ.தி.மு.க.) அங்கு செல்ல துணிச்சல் இல்லை. நான்கு, ஐந்து நாட்களாக உங்கள் எம்.எல்.ஏ.க்களை தூத்துக்குடியில் பார்க்க முடியவில்லை என்றார்.

    உடனே அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒட்டு மொத்தமாக குரல் எழுப்பி டி.டி.வி. தினகரனுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு தினகரன், “உண்மையை சொன்னால் உங்களுக்கு கோபம் வருகிறது. அமைதியாக இருங்கள்” என்றார்.

    ஆனாலும் டி.டி.வி. தினகரனுக்கும் அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்களுக்கும் வாக்குவாதம் நீடித்தது.

    சபாநாயகர் தலையிட்டு இரு தரப்பையும் அமைதிப்படுத்தினார். டி.டி.வி. தினகரன் பேசி முடித்ததும் மின்துறை அமைச்சர் தங்கமணி எழுந்து விளக்கம் சொல்ல முற்பட்டார்.

    அப்போது தினகரனும் எழுந்து பேச முயன்றார். உடனே, அமைச்சர் தினகரனை பார்த்து “நீ யார் கேட்பதற்கு?” என்றார்.

    இதைப்பார்த்த தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் எழுந்து, “எப்படி ஒரு உறுப்பினரை நீங்கள் ஒருமையில் பேசலாம்?” என்றார். உடனே பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் ஒருமையில் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதையடுத்து அமைச்சர் தங்கமணி, “நான் தெரியாமல் ஒருமையில் பேசி இருந்தால் அதை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன்” என்றார். உடனே அமளி முடிவுக்கு வந்தது. #ThoothukudiFiring #TNCM #EdappadiPalanisamy

    ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வழிவகுக்காது என்று வைகோ, ஜவாஹிருல்லா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர். #SterliteProtest #ThoothukudiShooting
    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ:- ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. பொது மக்களை ஏமாற்றுவதற்காக, தென் மண்டல பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் தமிழக அரசு வழக்குத் தொடுத்தது. நானும் வழக்குத் தொடுத்தேன்.

    ஸ்டெர்லைட் நிறுவனரும், வேதாந்தா குழுமத்தின் அதிபருமான அனில் அகர்வால், அரசிடம் அல்லது நீதிமன்றத்தில் அனுமதி பெற்று, ஆலையைத் தொடர்ந்து இயக்குவேன் என்று நான்கு நாள்களுக்கு முன்பு திமிராக அறிவித்தார்.

    ஸ்டெர்லைட் ஆலையை எங்கள் தமிழ் மண்ணில் நடத்த விட மாட்டோம். ரத்தின கிரியில் திரண்டது போல், லட்சக்கணக்கானவர்கள் திரண்டு ஆலையை அப்புறப்படுத்துவோம்.

    கடந்த 22-ஆம் தேதி போல காவல்துறையை அனுப்பி துப்பாக்கி வேட்டை நடத்தலாம் என்று நினைத்தால், அதனையும் எதிர்கொள்வோம். மத்திய அரசு துணை ராணுவத்தை அனுப்பினாலும், எங்கள் மண்ணையும், மக்களையும் காக்க, மரணத்தைத் துச்சமாக நினைத்து, அடக்குமுறையை எதிர்கொண்டு ஆலையை அகற்றியே தீர்வோம்.

    தூத்துக்குடியில் நடைபெற்ற படுகொலைகளுக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் கூண்டில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். தமிழகக் காவல் துறை டி.ஜி.பி. ராஜேந்திரன் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். இதற்கெல்லாம் பொறுப்பு ஏற்று, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவியில் இருந்து விலக வேண்டும்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்:- ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தாலும் ஆதாரங்களோ, காரணங்களோ குறிப்பிடப்படாமல் அது வெளியிட்டுள்ள அரசாணை நமக்கு சந்தேகத்தை எழுப்புகிறது.


    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது தான் தமிழக அரசின் நோக்கம் என்றால் அதற்கான விரிவான ஆதாரங்களை கொண்ட அரசாணையை அது வெளியிட்டிருக்க வேண்டும். அப்படி செய்யாதது ஏன்?

    தமிழக அரசு தற்போது செய்திருப்பது போராட்டக்காரர்களையும், எதிர்கட்சிகளையும் திசை திருப்புவதற்காகவும், வழக்கம் போல ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் நீதிமன்றத்தில் தடை ஆணை பெறுவதற்கு வசதி செய்வதற்காகவுமான தந்திரம் என்றே கருத வேண்டியுள்ளது. இதற்கு தமிழக அரசு உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும்.

    பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி:- தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. நாசகார ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய அப்பாவி பொது மக்களை கொடூரமாக படுகொலை செய்ததால் ஏற்பட்ட அவப்பெயரைத் துடைத்துக் கொள்ளவே இப்படி ஓர் ஆணையை அரசு பிறப்பித்திருக்கிறது. ஆனால் இது யாருக்கும் பயனளிக்காத, அப்பட்டமான ஏமாற்று வேலையாகும்.

    கடந்த 2013-ம் ஆண்டு ஆலைக்கான அனுமதி புதுப்பிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரையிலான ஐந்தாண்டுகளில் சுற்றுச்சூழலுக்கும், மனித குலுத்திற்கும் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய ஏராளமான விபத்துகள் ஸ்டெர்லைட் ஆலையில் நிகழ்ந்துள்ளன. அத்தகைய விபத்துகளில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். ஆலையிலிருந்து வெளியேறும் நச்சுக்காற்றை சுவாசிப்பதால் ஆயிரக்கணக்கானோர் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இவற்றையெல்லாம் ஆதாரங்களுடன் பட்டியலிட்டு, ஆலைக்கு எதிராக பொது மக்கள் நடத்தி வரும் போராட்டங்களையும் பதிவு செய்து அதனடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக உத்தரவு பிறப்பித்து இருந்தால் அது மிகவும் வலிமையானதாக இருந்திருக்கும். அதை எதிர்த்து எந்த நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தாலும் ஸ்டெர்லைட் ஆலையால் வெற்றி பெற முடியாது.

    மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா:- ஸ்டெர்லைட் ஆலையை மூடப்படுவதற்கு தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறையின் சார்பில் அரசாணை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே ஸ்டெர்லைட் நிறுவனத்தின் அதிபர் அறிவித்தது போல் தமிழக அரசின் இந்த அரசாணையை எதிர்த்து நீதிமன்றம் சென்றால் இந்த அரசாணையை ரத்து செய்யும் வாய்ப்பு உள்ளது.

    எனவே, உடனடியாக தமிழக அமைச்சரவையைக் கூட்டி, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.

    ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு வெறுமனே அரசாணை வெளியிடுவது ஏற்புடையது அல்ல. அமைச்சரவை உடனே கூடி ஆலையை நிரந்தரமாக மூடுவதை தமிழக அரசின் கொள்கையை அறிவித்து தீர்மானம் நிறைவேற்றி அதனை நடைபெற்று வரும் சட்டமன்றக் கூட்டத் தொடரிலும் சட்டமாக நிறைவேற்ற வேண்டும். #SterliteProtest #ThoothukudiShooting
    தூத்துக்குடியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மத்திய படைகளை அனுப்ப தயாராக இருப்பதாக தமிழக தலைமை செயலாளரிடம் மத்திய உள்துறை செயலாளர் ராஜிவ் கவுபா கூறியுள்ளார். #SterliteProtest #Thoothukudi
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது நேற்று போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்திருந்தனர். அண்ணாநகர் பகுதியில் இன்று போலீசார் - போராட்டக்காரர்கள் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதனை அடுத்து, அங்கு ரப்பர் குண்டு மூலம் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதில், காளியப்பன் என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில், தமிழக தலைமை செயலாளரிடம் பேசிய மத்திய உள்துறை செயலாளர் ராஜிவ் கவுபா, தூத்துக்குடி நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.



    அங்கு சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் கொண்டுவர மத்திய படைகளை அனுப்ப தயாராக உள்ளதாக கவுபா தெரிவித்துள்ளார். எனினும், தமிழக அரசு கேட்கும் பட்சத்தில் மட்டுமே மத்திய படைகள் அனுப்பப்படும் என அவர் கூறியுள்ளார்.
    தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியான 11 பேரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்வதாக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் குறிப்பிட்டுள்ளார். #SterliteProtest #BanwarilalPurohit
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். போராட்டம் இன்றுடன் 100 நாட்களை எட்டியுள்ள நிலையில், கலெக்டர் அலுவலகத்தை நோக்கி மக்கள் இன்று பேரணியாக சென்றனர். அப்போது, போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    அப்போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தும் போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. மோதல் கலவரமாக மாறிய சூழலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதுடன் தீக்கிரையாக்கப்பட்டது.

    இதனை அடுத்து, போராட்டக்காரர்களை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 9 பேர் தற்போது வரை உயிரிழந்துள்ளதாக அரசுத்தரப்பு மற்றும் அனைத்து ஊடகங்களும் தெரிவித்துள்ளன.  துப்பாக்கிச்சூட்டுக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

    துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது. படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.3 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், நிவாரணம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில்,  ‘தூத்துக்குடியில் 11 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் அதிர்ச்சி அடைந்தேன். அவர்களது குடும்பத்திற்கு என்னுடைய அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன். மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட அனைவரும் அமைதியை கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடும், தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. #SterliteProtest
    சென்னை:

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான இன்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

    அப்போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தும் போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. மோதல் கலவரமாக மாறிய சூழலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதுடன் தீக்கிரையாக்கப்பட்டது.

    இதனை அடுத்து, போராட்டக்காரர்களை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 9 பேர் தற்போது வரை உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  துப்பாக்கிச்சூட்டுக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

    இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது. படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.3 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், நிவாரணம் வழங்கப்படும். 

    சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்படும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் வரை பலியாகியுள்ள நிலையில், பொதுஜன உயிரிழப்புக்கு தமிழக அரசே பொறுப்பு என நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். #SterliteProtest #Rajinikanth
    சென்னை:

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான இன்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

    அப்போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தும் போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. மோதல் கலவரமாக மாறிய சூழலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதுடன் தீக்கிரையாக்கப்பட்டது.

    இதனை அடுத்து, போராட்டக்காரர்களை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 9 பேர் தற்போது வரை உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  துப்பாக்கிச்சூட்டுக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக ரஜினிகாந்த் கூறியுள்ளதாவது:-

    மக்களின் உணர்வுகளை மதிக்காத இந்த அரசின் அலட்சியப்போக்கின் விளைவாக இன்று பொதுமக்கள் சுடப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது மிகவும் வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது.நடந்த வன்முறை மற்றும் பொது ஜன உயிரிழப்புகளுக்கு தமிழக அரசே பொறுப்பு.

    என தெரிவிக்கப்பட்டுள்ளது. #SterliteProtest #Rajinikanth
    ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் மீது போலீசார் இன்று நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலியான நிலையில், மக்கள் அமைதி காக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். #SterliteProtest #BanSterlite
    சென்னை:

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான இன்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

    அப்போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தும் போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. மோதல் கலவரமாக மாறிய சூழலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதுடன் தீக்கிரையாக்கப்பட்டது.

    இதனை அடுத்து, போராட்டக்காரர்களை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 5 பேர் தற்போது வரை உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கூறப்பட்டுள்ளதாவது:-

    வேதாந்தா குழுமத்தின் தாமிர உருக்காலை நிறுவனம் தூத்துக்குடி மாவட்டம், மீளவிட்டான் கிராமத்தில் அமைந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்படி தொழிற்சாலை இயங்கி வருகின்றது.

    கடந்த 23.3.2013ல் மேற்படி தொழிற்சாலையிலிருந்து வாயு கசிவு ஏற்பட்டு பொது மக்களுக்கு கண் எரிச்சல் ஏற்படுவதாக புகார் வந்ததன் அடிப்படையில், தொழிற்சாலையை மூடுவதற்கும், மின் இணைப்பை துண்டிப்பதற்கும், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 29.3.2013 அன்று உத்தரவிட்டார்கள்.

    இதனை எதிர்த்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் முதன்மை அமர்வு முன்பு தொழிற்சாலை முறையீடு செய்தது. இதனை விசாரித்த தீர்ப்பாயம், தொழிற்சாலையை ஆய்வு செய்ய வல்லுநர் குழுவை அமைத்து, அக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் மூடுதல் உத்தரவை ரத்து செய்து தொழிற்சாலையை இயக்குவதற்கு 31.5.2013 அன்று தனது உத்தரவில் அனுமதி அளித்தது.

    தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு மூடுதல் உத்தரவை ரத்து செய்ததை எதிர்த்து, ஜெயலலிதா அவர்கள் 2013ல் மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்கள். இவ்வழக்கு தற்போதும் நிலுவையில் உள்ளது.


    இந்நிறுவனத்தை தொடர்ந்து இயக்குவதற்கான இசைவாணை 2018 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், இந்நிறுவனம் தாமிர உருக்காலை 2018-2023 வருடத்திற்கான இசைவாணையை புதுப்பிக்க தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்திடம் விண்ணப்பம் செய்தது.

    இதனை பரிசீலனை செய்ததில், பின்வரும் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்பது தெரிய வந்தது:

    1. தொழிற்சாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் எடுக்கப்பட்ட நிலத்தடி நீர் பகுப்பாய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை.

    2. உப்பார் ஆற்றங்கரை மற்றும் தனியார் நிலங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள தாமிர உருக்குக் கழிவுகளை அகற்றுவதற்கும், உருக்குக் கழிவுகள் உப்பாற்றில் கலப்பதை தடுப்பதற்கு தடுப்புச் சுவர் அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    3. தீங்கு விளைவிக்கும் கழிவுகளை கையாள்வதற்கான அங்கீகாரம் முடிவடைந்து விட்டது. ஆனால், தொழிற்சாலை தீங்கு விளைவிக்கும் மற்றும் பிற கழிவுகள் விதிகள் 2016-ன் கீழ் அங்கீகாரம் பெறாமல், கழிவுகளை தொடர்ந்து
    வெளியேற்றி வந்துள்ளது.

    4. தொழிற்சாலை காற்றின் தரத்தை அறிவதற்கு நைட்ரஸ் ஆக்ஸைடு, மிதக்கும் துகள்கள் மற்றும் சல்ஃபர்-டை-ஆக்ஸைடு போன்ற காரணிகளை வாரிய ஆய்வகத்தில் பரிசோதனை செய்யும்போது, ஆர்சனிக் போன்ற கன உலோகக் காரணியையும் ஆய்வு செய்ய வேண்டும். ஆனால், காற்றில் ஆர்சனிக் இல்லை என்பதற்கான அங்கீகரிக்கப்பட்ட அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை.

    5. ஜிப்சம் கழிவுகளை சேகரிப்பதற்கான குளங்கள் மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் வழிகாட்டுதலின்படி அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தியதை தொழிற்சாலை நடைமுறைப்படுத்தவில்லை.

    மேற்கூறிய காரணங்களினால், இசைவாணை புதுப்பிப்பதற்கான தொழிற்சாலையின் விண்ணப்பத்தினை 9.4.2018 அன்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் நிராகரித்தது. மேலும், “வாரியத்தின் முன் அனுமதி இல்லாமல் தொழிற்சாலை இயக்கத்தினை தொடங்கக் கூடாது” என்று 12.4.2018 நாளிட்ட நடப்பாணையின் மூலம் இந்நிறுவனம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    9.4.2018 தேதியிட்ட நிராகரித்தல் ஆணையை எதிர்த்து, இந்நிறுவனம் மேல்முறையீட்டு ஆணையத்தில் மேல்முறையீடு செய்தது. 17.5.2018 அன்று இம்மனு விசாரணைக்கு வந்து விசாரணை 6.6.2018க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இவ்விசாரணையின்போது, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் வாதிட்ட தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் அவர்கள், இத்தொழிற்சாலையை மீண்டும் இயக்க அனுமதிக்கக் கூடாது என கடுமையாக வாதிட்டார். இவ்விவரம் அன்றைய செய்தித் தாள்களிலும் விரிவாக பிரசுரிக்கப்பட்டுள்ளது.

    மாண்புமிகு அம்மாவின் வழியில் செயல்படும் இந்த அரசு, பொது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றது. 2013ல் ஜெயலலிதா அவர்கள் இவ்வாலையை மூடுவதற்கு உத்தரவிட்டதைப் போலவே, தற்போதும் இவ்வாலை இயங்காமல் இருப்பதற்கு மாண்புமிகு அம்மாவின் அரசு உத்தரவிட்டுள்ளது.



    இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புக் குழு மற்றும் சில அமைப்புகள் சார்பில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி, இன்று (22.5.2018) மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து முற்றுகையிட்டு, போராட்டம் நடத்துவதென முடிவு செய்து சுமார் 20 ஆயிரம் நபர்கள் ஊர்வலமாகச் சென்றனர்.

    அப்போது, அக்கூட்டத்தினர் வன்முறையில் ஈடுபட்டு, காவல்துறை வாகனங்களைத் தீயிட்டும், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்குள் புகுந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீயிட்டும், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தையும் கல்வீசித் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர்.

    இக்கூட்டத்தினரின் வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர, தவிர்க்க முடியாத சூழ்நிலையில் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க நேரிட்டது. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் பொருட்டு, கூடுதலாக காவல் துறையினர் தூத்துக்குடி
    மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனையில் அரசு சட்டபூர்வமான மேல்நடவடிக்கை எடுக்கும். இதனை ஏற்று மக்கள் அமைதி காக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுக்கிறது.

    இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #SterliteProtest #BanSterlite
    ×