search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வழிவகுக்காது - வைகோ, ஜவாஹிருல்லா அறிக்கை
    X

    ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வழிவகுக்காது - வைகோ, ஜவாஹிருல்லா அறிக்கை

    ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வழிவகுக்காது என்று வைகோ, ஜவாஹிருல்லா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர். #SterliteProtest #ThoothukudiShooting
    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ:- ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. பொது மக்களை ஏமாற்றுவதற்காக, தென் மண்டல பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் தமிழக அரசு வழக்குத் தொடுத்தது. நானும் வழக்குத் தொடுத்தேன்.

    ஸ்டெர்லைட் நிறுவனரும், வேதாந்தா குழுமத்தின் அதிபருமான அனில் அகர்வால், அரசிடம் அல்லது நீதிமன்றத்தில் அனுமதி பெற்று, ஆலையைத் தொடர்ந்து இயக்குவேன் என்று நான்கு நாள்களுக்கு முன்பு திமிராக அறிவித்தார்.

    ஸ்டெர்லைட் ஆலையை எங்கள் தமிழ் மண்ணில் நடத்த விட மாட்டோம். ரத்தின கிரியில் திரண்டது போல், லட்சக்கணக்கானவர்கள் திரண்டு ஆலையை அப்புறப்படுத்துவோம்.

    கடந்த 22-ஆம் தேதி போல காவல்துறையை அனுப்பி துப்பாக்கி வேட்டை நடத்தலாம் என்று நினைத்தால், அதனையும் எதிர்கொள்வோம். மத்திய அரசு துணை ராணுவத்தை அனுப்பினாலும், எங்கள் மண்ணையும், மக்களையும் காக்க, மரணத்தைத் துச்சமாக நினைத்து, அடக்குமுறையை எதிர்கொண்டு ஆலையை அகற்றியே தீர்வோம்.

    தூத்துக்குடியில் நடைபெற்ற படுகொலைகளுக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் கூண்டில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். தமிழகக் காவல் துறை டி.ஜி.பி. ராஜேந்திரன் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். இதற்கெல்லாம் பொறுப்பு ஏற்று, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவியில் இருந்து விலக வேண்டும்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்:- ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தாலும் ஆதாரங்களோ, காரணங்களோ குறிப்பிடப்படாமல் அது வெளியிட்டுள்ள அரசாணை நமக்கு சந்தேகத்தை எழுப்புகிறது.


    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது தான் தமிழக அரசின் நோக்கம் என்றால் அதற்கான விரிவான ஆதாரங்களை கொண்ட அரசாணையை அது வெளியிட்டிருக்க வேண்டும். அப்படி செய்யாதது ஏன்?

    தமிழக அரசு தற்போது செய்திருப்பது போராட்டக்காரர்களையும், எதிர்கட்சிகளையும் திசை திருப்புவதற்காகவும், வழக்கம் போல ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் நீதிமன்றத்தில் தடை ஆணை பெறுவதற்கு வசதி செய்வதற்காகவுமான தந்திரம் என்றே கருத வேண்டியுள்ளது. இதற்கு தமிழக அரசு உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும்.

    பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி:- தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. நாசகார ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய அப்பாவி பொது மக்களை கொடூரமாக படுகொலை செய்ததால் ஏற்பட்ட அவப்பெயரைத் துடைத்துக் கொள்ளவே இப்படி ஓர் ஆணையை அரசு பிறப்பித்திருக்கிறது. ஆனால் இது யாருக்கும் பயனளிக்காத, அப்பட்டமான ஏமாற்று வேலையாகும்.

    கடந்த 2013-ம் ஆண்டு ஆலைக்கான அனுமதி புதுப்பிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரையிலான ஐந்தாண்டுகளில் சுற்றுச்சூழலுக்கும், மனித குலுத்திற்கும் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய ஏராளமான விபத்துகள் ஸ்டெர்லைட் ஆலையில் நிகழ்ந்துள்ளன. அத்தகைய விபத்துகளில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். ஆலையிலிருந்து வெளியேறும் நச்சுக்காற்றை சுவாசிப்பதால் ஆயிரக்கணக்கானோர் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இவற்றையெல்லாம் ஆதாரங்களுடன் பட்டியலிட்டு, ஆலைக்கு எதிராக பொது மக்கள் நடத்தி வரும் போராட்டங்களையும் பதிவு செய்து அதனடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக உத்தரவு பிறப்பித்து இருந்தால் அது மிகவும் வலிமையானதாக இருந்திருக்கும். அதை எதிர்த்து எந்த நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தாலும் ஸ்டெர்லைட் ஆலையால் வெற்றி பெற முடியாது.

    மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா:- ஸ்டெர்லைட் ஆலையை மூடப்படுவதற்கு தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறையின் சார்பில் அரசாணை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே ஸ்டெர்லைட் நிறுவனத்தின் அதிபர் அறிவித்தது போல் தமிழக அரசின் இந்த அரசாணையை எதிர்த்து நீதிமன்றம் சென்றால் இந்த அரசாணையை ரத்து செய்யும் வாய்ப்பு உள்ளது.

    எனவே, உடனடியாக தமிழக அமைச்சரவையைக் கூட்டி, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.

    ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு வெறுமனே அரசாணை வெளியிடுவது ஏற்புடையது அல்ல. அமைச்சரவை உடனே கூடி ஆலையை நிரந்தரமாக மூடுவதை தமிழக அரசின் கொள்கையை அறிவித்து தீர்மானம் நிறைவேற்றி அதனை நடைபெற்று வரும் சட்டமன்றக் கூட்டத் தொடரிலும் சட்டமாக நிறைவேற்ற வேண்டும். #SterliteProtest #ThoothukudiShooting
    Next Story
    ×