search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லஞ்சம்"

    • தீபாவளி நெருங்கும் நிலையில் அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்பதாக புகார்கள் வருகின்றன
    • திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டி.எஸ்.பி. அவர்களிடம் தகவல் தரலாம்

    திருப்பூர்:

    தீபாவளி நெருங்கும் நிலையில் அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்பதாக புகார்கள் வருகின்றன.எனவே இதனை தடுக்க திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டி.எஸ்.பி., 94450 - 48880, இன்ஸ்பெக்டர் 94981 - 02078, 0421 - 2482816 ஆகிய எண்களில் புகார் செய்யலாம்.

    ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு எண்:40, ஆஷர் நகர், 2வது வீதி, எஸ்.ஏ.பி., தியேட்டர் பின்புறம், அவிநாசி ரோடு, திருப்பூர் என்ற முகவரியில் நேரில் புகார் தெரிவிக்கலாம் என லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • பட்டா மாறுதல் வழங்க கிராம நிர்வாக அலுவலர் சுதா ரூ.6 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
    • திருவாரூர் லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு போலீசில் மதியழகன் புகார் அளித்துள்ளார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே கிருஷ்ணகோட்டகம் கிராமத்தைச் சேர்ந்தவர் மதியழகன் (65). இவர் தனது சகோதரர் மாசிலாமணி என்பவரிடமிருந்து தான செட்டில்மெண்ட் அடிப்படையில் 2 ஏக்கர் நிலம் வாங்கினார்.

    இதற்காக பட்டா மாறுதல் கோரி பெருமாளகரம் கிராம நிர்வாக அலுவலர் சுதா (42) என்பவரிடம் விண்ணப்பித்தார். அப்போது பட்டா மாறுதல் வழங்க கிராம நிர்வாக அலுவலர் சுதா ரூ 6000 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சமாக பணம் கொடுக்க மதியழகன் விரும்பவில்லை. அதனால் கிராம நிர்வாக அலுவலர் சுதா லஞ்சம் கேட்டது குறித்து திருவாரூர் லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு காவல் நிலையத்தில் மதியழகன் புகார் அளித்துள்ளார்.

    புகாரைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறை ஆலோசனைப்படி ரசாயனம் தடவி வழங்கப்பட்ட பணத்தை மதியழகன் கிராம நிர்வாக அலுவலர் சுதாவிடம் வழங்கியுள்ளார். அப்போது துணை காவல் கண்காணிப்பாளர் நந்தகோபால் தலைமையில் கூடியிருந்த லட்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவப்பட்ட பணத்தை மதியழகன் கொடுக்கும்போது கையும் களவுமாக கிராம நிர்வாக அலுவலர் சுதாவை பிடித்தனர். இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் சுதாவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டா மாறுதலுக்காக லஞ்சம் வாங்கி கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்ட விவகாரம் கொரடாச்சேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • லஞ்ச ஒழிப்பு போலீசார் ஜெகதீஸ்வரிடம் ரசாயன பவுடர் தடவிய ரூ.25 ஆயிரம் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர்.
    • தாலுகா அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் சிலவற்றையும் கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டது.

    நாகர்கோவில்:

    இரணியல் அருகே கண்டன்விளை மட விளாகம் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரி. இவருக்கு அதே பகுதியில் 7 சென்ட் விவசாய நிலம் உள்ளது.

    அந்த இடத்தில் வீடு கட்டுவதற்கு விவசாய நிலத்தை தரிசு நிலமாக மாற்றி தரக்கோரி கல் குளம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். விண்ணப்பித்தை பரீசிலித்த கல்குளம் துணை தாசில்தார் ருக்மணி தரிசு நிலமாக மாற்ற ரூ.25 ஆயிரம் லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜெகதீஸ்வரி இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று ஜெகதீஸ்வரிடம் ரசாயன பவுடர் தடவிய ரூ.25 ஆயிரம் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர்.

    ஜெகதீஸ்வரி அந்த பணத்துடன் கல்குளம் தாலுகா அலுவலகத்திற்கு சென்றார். அங்கிருந்த துணை தாசில்தார் ருக்மணியிடம் பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி. ஹெக்டேர் தர்மராஜ் தலைமையிலான போலீசார் துணை தாசில்தார் ருக்மணியை கையும் களவுமாக பிடித்தனர்.

    பிடிபட்ட அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் தாலுகா அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் சிலவற்றையும் கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டது.

    மதியம் 1 மணிக்கு தொடங்கிய சோதனை மாலை 6 மணி வரை நடந்தது. இதைத்தொடர்ந்து நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோட்டில் உள்ள துணை தாசில்தார் ருக்மணி வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். ருக்மணி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ருக்மணியை இரவு கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள்.

    நீதிபதி அவரை வருகிற 26-ந்தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து துணை தாசில்தார் ருக்மணி தக்கலை பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்த லஞ்ச விவகாரத்தில் வேறு அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். துணை தாசில்தார் ருக்மணி கைது செய்யப்பட்டு ஜெயில் அடைக்கப்பட்டதையடுத்து அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்துள்ளனர்.

    • ரூ.14 ஆயிரத்தை தனது மோட்டார் சைக்கிளின் டேங்க் கவருக்குள் வைக்குமாறு கூறினாா்.
    • போலீசார் தஞ்சாவூா் பழைய பஸ் நிலையம் அருகே மறைந்திருந்து கண்காணித்தனா்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் நாஞ்சி க்கோட்டை சாலையில் புதிதாகக் கட்டடப்படும் ஆஸ்பத்திரிக்கு தடையில்லாச் சான்று பெற அதன் உரிமையாளா் அரண்மனை வளாகத்திலுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் மாவட்ட உதவி அலுவலா் முனியாண்டியிடம் (வயது 56) கடந்த செப்டம்பா் 13 ஆம் தேதி விண்ணப்பித்தாா்.

    அப்போது ரூ. 15 ஆயிரம் லஞ்சம் கேட்ட முனியாண்டி, பின்னா் அதில் ரூ. 1000 குறைத்துக் கொண்டு ரூ. 14 ஆயிரத்தை பழைய பஸ் நிலையத்துக்கு வந்து தருமாறு கூறினாா்.

    ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத மருத்துவமனை உரிமையாளா் தஞ்சாவூா் ஊழல் தடுப்பு காவல் பிரிவினரிடம் புகாா் செய்தாா்.

    இதையடுத்து ஊழல் தடுப்பு பிரிவு போலீஸ் துணைக் சூப்பிரண்டு நந்தகோபால் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் அருண் பிரசாத், பத்மாவதி ஆகியோர் தஞ்சாவூா் பழைய பஸ் நிலையம் அருகே மறைந்திருந்து கண்காணித்தனா்.

    அப்போது பழைய பஸ் நிலையத்துக்கு வந்த முனியாண்டி கைப்பேசி மூலம் மருத்துவமனை உரிமையாளரை வரவழைத்து ரூ. 14 ஆயிரத்தை தனது மோட்டார் சைக்கிளின் டேங்க் கவருக்குள் வைக்கு மாறு கூறினாா்.

    அதன்படி உரிமையாளா் பணத்தை வைத்ததும், புறப்பட முயன்ற முனியா ண்டியை ஊழல் தடுப்பு காவல் பிரிவினா் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    பின்னர் முனியாண்டியை அரண்மனை வளாகத்தில் உள்ள தீயணைப்பு அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து முனியாண்டியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • நரசிம்ம ரெட்டி 1984-ம் ஆண்டு ரூ.650 சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தார்.
    • தற்போது ரூ.40,000 சம்பளமாக வாங்கும் நரசிம்ம ரெட்டிக்கு எங்கிருந்து இவ்வளவு சொத்துக்கள் கிடைத்தது என விசாரணை நடத்தினர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், நெல்லூரை சேர்ந்தவர் நரசிம்ம ரெட்டி (வயது 55). நெல்லூரில் உள்ள துணை வட்டாரப் போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக வேலை செய்து வருகிறார்.

    நரசிம்ம ரெட்டி வருமானத்திற்கு அதிகமாக கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து வைத்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்தன.

    புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ரமாதேவி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் நரசிம்ம ரெட்டி வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர்.

    சோதனையின் போது அவரது வீட்டில் இருந்து 2 கிலோ தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் ரூ 1. 1 கோடி மதிப்பிலான இன்சூரன்ஸ் முதலீடுகள், ரூ. 10 லட்சம் மதிப்பிலான பாலிசி ஆவணங்கள், நெல்லூரில் வாங்கப்பட்டுள்ள 18 வீட்டு மனை பத்திரங்கள் கைப்பற்றப்பட்டன.

    அவரது மேஜையில் இருந்து ரூ.7.5 லட்சம் மதிப்பிலான ரூ.2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டன.

    மொத்தம் ரூ.9 கோடி மதிப்பிலான பொருட்கள், பணம் கைபற்றப்பட்டுள்ளன.

    கூட்டுறவு வங்கிக் கிளைகளில் உள்ள அவரது லாக்கரை திறந்து சோதனை செய்தால் மேலும் முக்கிய ஆவணங்கள் சிக்கும் என லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நரசிம்ம ரெட்டி 1984-ம் ஆண்டு ரூ.650 சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தார். தற்போது ரூ.40,000 சம்பளமாக வாங்கும் நரசிம்ம ரெட்டிக்கு எங்கிருந்து இவ்வளவு சொத்துக்கள் கிடைத்தது என விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் தனது அலுவலகம் மற்றும் சோதனை சாவடிகளில் லஞ்சமாக பெற்ற பணத்தை அதிக வட்டிக்கு கொடுத்து சொத்து சேர்த்ததாக தெரிவித்துள்ளார்.

    • லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூ.3 ஆயிரம் பணத்தை பாலகிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் பாலமுரளியிடம் கொடுத்தார்.
    • பாலமுரளி இதுவரை யார் யாரிடம் எவ்வளவு பணம் லஞ்சமாக வாங்கி உள்ளார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள காளையார் கரிசல்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது சகோதரி ஜானகி. இவர்களுக்கு சொந்தமான நிலம் அந்த பகுதியில் உள்ளது. இந்த நிலம் கூட்டு பட்டாவாக இருப்பதால் தனது தம்பி பாலகிருஷ்ணனுக்கு பட்டா பிரித்து தர ஜானகி முடிவு செய்தார்.

    இதையடுத்து அந்த இடத்தின் பட்டாவை பிரித்து தர கிராம நிர்வாக அலுவலர் பாலமுரளியிடம் இருவரும் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் அவரும், நில அளவையரும் அந்த இடத்திற்கு சென்று நிலத்தை அளந்துள்ளனர். பின்னர் பாலமுரளி தனிப்பட்டா வழங்க வேண்டும் என்றால் தனக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என கேட்டுள்ளார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த பாலகிருஷ்ணன் விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்று காலை லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூ.3 ஆயிரம் பணத்தை பாலகிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் பாலமுரளியிடம் கொடுத்தார்.

    பணத்தை பெற்றுக்கொண்ட பாலமுரளி அதை சரிபார்த்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பாலமுரளியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    பின்னர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும் சோதனை நடத்தி வருகின்றனர். பாலமுரளி இதுவரை யார் யாரிடம் எவ்வளவு பணம் லஞ்சமாக வாங்கி உள்ளார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பேராசிரியர் மற்றும் மாணவர்கள் பேசிய ஆடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகியது.
    • விசாரணை அறிக்கையை உயர் கல்வித்துறை செயலாளர் மற்றும் கல்லூரி கல்வியியல் துறை இயக்குனருக்கு அனுப்பி வைத்தார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது.

    இங்கு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் 2023-24-ம் ஆண்டுக்கான இளங்கலை மாணவர் சேர்க்கை கடந்த ஜூன் மாதம் முடிந்தது.

    இதில் முதல்கட்ட கலந்தாய்வில் மாணவர்கள் தங்கள் விண்ணப்பித்த பாடப்பிரிவு கிடைக்காதபோது, முதலில் கிடைத்த பாடப்பிரிவில் சேர்ந்துள்ளனர்.

    இதன் பின்னர் அடுத்தடுத்த கலந்தாய்வுகளின்போது அவர்கள் விரும்பிய பாடப்பிரிவில் காலியிடம் இருந்ததால் கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டு அந்த பாடப்பிரிவிற்கு மாறி உள்ளனர்.

    இவ்வாறு ஒரு துறையில் இருந்து மற்றொரு துறைக்கு மாறுவதற்காக தாவரவியல் துறை பேராசிரியர் ரவி, மாணவர்களிடம் கூகுள்பே மூலமும், ரொக்கமாகவும் பணம் வாங்கியதாக கடந்த 14-ந்தேதி குற்றச்சாட்டு எழுந்தது.

    இதைத் தொடர்ந்து கூகுள் பே மூலம் பணம் அனுப்பிய செல்போன் ஸ்க்ரீன் ஷாட்டுகள் மூலம் முதலமைச்சரின் தனிப்பிரிவு, கல்லூரி கல்வி இயக்குனரகம், தமிழக டி.ஜி.பி ஆகியோருக்கு ஆன்லைன் மூலம் மாணவ-மாணவிகள் புகார் பதிவு செய்து உள்ளனர்.

    மேலும் பேராசிரியர் மற்றும் மாணவர்கள் பேசிய ஆடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகியது.

    இதையடுத்து கோவை மண்டல கல்லூரி கல்வியியல் இணை இயக்குனர் கலைச்செல்வி கடந்த வாரம் ஊட்டி அரசு கலைக் கல்லூரிக்கு நேரில் வந்து 30 மாணவ-மாணவிகள், 4 பேராசிரியர்கள், மற்றும் கல்லூரி முதல்வரிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்தினார்.

    இதன்பின்னர் விசாரணை அறிக்கையை உயர் கல்வித்துறை செயலாளர் மற்றும் கல்லூரி கல்வியியல் துறை இயக்குனருக்கு அனுப்பி வைத்தார்.

    இதற்கிடையே ஊட்டி அரசு கல்லூரியில் மாணவர்களுக்கு விடுதியில் இடம் கிடைக்க கல்லூரி முதல்வர் பணம் வாங்கியதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில் கல்லூரி முதல்வர் அருள் ஆண்டனியிடம் ஒரு மாணவர் பிரவுன் கவரை வழங்குகிறார். அந்த கவரில் ரூ.10 ஆயிரம் பணம் இருந்ததாக சொல்லப்படுகிறது. மாணவரை பார்த்து சீக்கிரம் கொடுத்து விடுங்கள். அப்போது தான் இடம் கிடைக்கும் என கல்லூரி முதல்வர் கூறுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இது தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக உயர்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் ஊட்டி அரசு கலைக்கல்லூரி முதல்வர் அருள் அந்தோணி மற்றும் தாவரவியல் துறை பேராசிரியர் ரவி ஆகிய 2 பேரும் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்.

    இதற்கான நடவடிக்கையை உயர்கல்வித்துறை எடுத்துள்ளது.

    • கண்ணூர் மாவட்டம் பையனூர் பேரூராட்சியில் கட்டிட ஆய்வாளராக பணிபுரிபவர் பிஜூ.
    • லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் விண்ணப்பதாரர் புகார் செய்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பையனூர் பேரூராட்சியில் கட்டிட ஆய்வாளராக பணிபுரிபவர் பிஜூ. இவரிடம் பையனூர் பகுதியை சேர்ந்த ஒருவர், புதிதாக கட்டப்பட்ட தனது வீட்டுக்கு கட்டிட அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தார்.

    கட்டிட அனுமதி சான்றிதழ் தருவதற்கு அந்த விண்ணப்பதாரரிடம்,ரூ.25 ஆயிரம் லஞ்சம் தருமாறு கட்டிட ஆய்வாளர் கேட்டுள்ளார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் விண்ணப்பதாரர் புகார் செய்தார். அவர்களது கூறியபடி ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை கட்டிட ஆய்வாளர் பிஜூவிடம் அவரது அலுவலகத்துக்கு சென்று வழங்கினார். அப்போது அவரை துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்பு அவரை லஞ்ச ஒழிப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    • உதவி பொறியாளர் பாலசுப்பிரமணியம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
    • கிருஷ்ணகுமார் அது பற்றி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

    சென்னை:

    அடையாறை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவர் புதிதாக கட்டியுள்ள வீட்டுக்கு மின் இணைப்பை பெறுவதற்காக பெசன்ட் நகரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அப்போது உதவி பொறியாளர் பாலசுப்பிரமணியம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

    இதனை கொடுக்க விரும்பாத கிருஷ்ணகுமார் அது பற்றி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் கொடுத்த ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டை கிருஷ்ணகுமார் பாலசுப்பிரமணியத்திடம் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பாலசுப்பிரமணியத்தை கைது செய்தனர்.

    • பள்ளியில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவரிடம் கொடுக்க சொல்லியதை தொடர்ந்து, பணம் கொடுத்துவிட்டு சான்றிதழை வாங்கி வந்துள்ளார்.
    • சான்றிதழ் , மாற்று சான்றிதழ் வாங்க வருபவர்களிடம் கட்டாயபடுத்தி பணம் வாங்கி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், அமானி மல்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவர் தான் படித்த பள்ளியான அமானி மல்லாபுரம் அரசு மேல்நிலைபள்ளிக்கு சென்று தமிழ் வழி கல்வி சான்று கேட்டு தலைமை ஆசிரியர் சசிக்குமாரை அணுகி உள்ளார். அப்போது சான்றிதழ் வழங்க வேண்டும் என்றால் முதலில் பள்ளிக்கு நோட்டுகள், பேப்பர் பண்டல்கள் வாங்கி தருமாறு தலைமை ஆசிரியர் கேட்டுள்ளார்.

    அதன் பிறகு நோட்டு, பேப்பர் பண்டல்களை நாங்களே வாங்கி கொள்கிறோம் பணமாக கொடுத்து விடுங்கள் எனக்கூறி 300 ரூபாய் பணத்தை பள்ளியில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவரிடம் கொடுக்க சொல்லியதை தொடர்ந்து, பணம் கொடுத்துவிட்டு சான்றிதழை வாங்கி வந்துள்ளார. மேலும் கார்த்திக், பணம் கொடுத்ததை தனது செல்போன் மூலம் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டிருக்கிறார்.

    குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள தலைமை ஆசிரியர் சசிக்குமார், இது போன்று சான்றிதழ் , மாற்று சான்றிதழ் வாங்க வருபவர்களிடம் கட்டாயபடுத்தி பணம் வாங்கி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

    இது தொடர்பாக மாவட்ட கல்வித்துறையும், தமிழக அரசும் உரிய விசாரணை நடத்தி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் மாணவர் கார்த்திக் கோரிக்கை வைத்துள்ளார்.

    • பட்டணம் பட்டியில் உள்ள முனியப்பன் கோவில் பகுதியில் வசிக்கும் நண்பரான ஆனந்தன் என்பவரிடம் வழங்கும்படி மணிகண்டன் தெரிவித்தார்.
    • மணிகண்டன் மற்றும் ஆனந்தன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    சேலம்:

    சென்னையை சேர்ந்தவர் கார்த்திக்கேயன், இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே உள்ள எர்ணாபுரம் ஜெய்புரி கிராமத்தில் 5.5 ஏக்கர் நிலத்தை வாங்கி 120 வீட்டு மனைகளாக பிரித்தார்.

    அந்த வீட்டு மனைகளுக்கு டி.டி.சி. அனுமதி பெற வேண்டி மகுடஞ்சாவடி பஞ்சாயத்து அலுவலகத்தில் விண்ணப்பம் கொடுத்தார். இது தொடர்பாக பஞ்சாயத்து தலைவியின் கணவரான மணிகண்டனை நாடினார். அவர் வீட்டுமனையில் சதுர அடிக்கு 50 வீதம் மொத்தம் ரூ.50 லட்சம் லஞ்சம் கொடுத்தால் அனுமதி கொடுப்பதாக தெரிவித்தார்.

    ஆனால் லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத கார்த்திக்கேயன் சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி. கிருஷ்ணராஜனிடம் புகார் கொடுத்தார். அவரது அறிவுரையின் பேரில் நேற்று கார்த்திக்கேயன் முதற்கட்டமாக ரூ.5 லட்சம் லஞ்சமாக கொடுப்பதாக தெரிவித்தார்.

    அதனை பட்டணம் பட்டியில் உள்ள முனியப்பன் கோவில் பகுதியில் வசிக்கும் நண்பரான ஆனந்தன் என்பவரிடம் வழங்கும்படி மணிகண்டன் தெரிவித்தார். அதன்படி நேற்று கார்த்திக்கேயன் பணத்தை கொண்டு சென்று ஆனந்தனிடம் கொடுத்தார். இதுகுறித்து அவர் மணிகண்டனை செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தார்.

    இதையடுத்து அவர் அங்கு வந்து சிறிது நேரத்தில் 5 லட்சத்தை வாங்கினார். அப்போது அங்கு பதுங்கியிருந்த லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி. கிருஷ்ணராஜன் மற்றும் இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் மணிகண்டனை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவரை மகுடஞ்சாவடி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று வேறு எங்காவது வீட்டு மனைகள் பிரிக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தினர்.

    விசாரணைக்கு பின்பு மணிகண்டன் மற்றும் ஆனந்தன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் மணிகண்டன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் சோதனை செய்தனர். தொடர்ந்து இரவு 8 மணியளவில் 2 பேரையும் தனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க அழைத்து செல்ல முயன்றனர். அப்போது மணிகண்டனின் உறவினர்கள் போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டனர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். மணிகண்டனின் தங்கை பேபி போலீஸ் வாகனம் முன்பு அமர்ந்து கோஷமிட்டார். இதையடுத்து பேபியை அப்புறப்படுத்தி விட்டு மணிகண்டன் மற்றும் ஆனந்தனை போலீசார் சேலத்திற்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து தனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் நள்ளிரவு 11.30 மணியளவில் 2 பேரையும் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • பட்டாவில் பெயர் நீக்கம் செய்ய ஜெகநாதனிடம் கிராம நிர்வாக அலுவலர் தீபா ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
    • துறை ரீதியான நடவடிக்கை எடுத்த திருச்செங்கோடு உதவி கலெக்டர் சுகந்தி தீபாவை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மனைவி தீபா (43) கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் கொந்தளம் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த விவசாயி ஜெகநாதன் (45) என்பவர் பட்டாவில் உள்ள பூர்வீக சொத்தில் இருந்து பெயர் நீக்கம் செய்ய ஊராட்சி நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்தார். பட்டாவில் பெயர் நீக்கம் செய்ய ஜெகநாதனிடம் கிராம நிர்வாக அலுவலர் தீபா ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

    இதுகுறித்து ஜெகநாதன் நாமக்கல் லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் மற்றும் போலீசார் தீபாவை நேற்று முன்தினம் கைது செய்து சேலம் பெண்கள் கிளை சிறையில் அடைத்தனர்.

    தொடர்ந்து அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்த திருச்செங்கோடு உதவி கலெக்டர் சுகந்தி தீபாவை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    ×