search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூதாட்டி கொலை"

    • எல்லம்மாளின் உடலை மீட்டு உறவினர்கள் இறுதி சடங்குகள் செய்தனர்.
    • மர்ம நபர்கள் மூதாட்டியை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு நகையை கொள்ளையடித்து சென்று இருக்கலாம் என்று தெரிகிறது.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள கொல்லபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் எல்லம்மாள் (வயது 75 ). கணவரை இழந்த இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

    இரவு அவர் சாப்பிட்டு விட்டு வழக்கம்போல் வீட்டில் தூங்கினார். நேற்று காலை நீண்டநேரம் வரை வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் அதேபகுதியில் வசிக்கும் அவரது மகள் ஜெயலட்சுமிக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர் விரைந்து வந்து ஜன்னல் வழியாக பார்த்தபோது எல்லம்மாள் வீட்டுக்குள் பிணமாக கிடந்தார். இதையடுத்து அவர் இயற்கையாக இறந்து இருக்கலாம் என்று அனைவரும் நினைத்தனர். இதைத் தொடர்ந்து எல்லம்மாளின் உடலை மீட்டு உறவினர்கள் இறுதி சடங்குகள் செய்தனர்.

    அப்போது எல்லம்மாளின் காதில் அணிந்திருந்த முக்கால் பவுன் கம்மல் மாயமாகி இருந்தது. மேலும் அவரது கழுத்தில் நகக்கீறல்கள் இருந்தன. எனவே மர்ம நபர்கள் மூதாட்டி எல்லம்மாளின் உடலை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு நகையை கொள்ளையடித்து சென்று இருக்கலாம் என்று தெரிகிறது.

    இதுகுறித்து பென்னாலூர் பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஏழுமலை, சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் விரைந்து சென்று எல்லம்மாளை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் எல்லம்மாளின் வலது காதில் கம்மல், மூக்குத்தி மற்றும் கழுத்தில் தங்கச் செயின் அப்படியே இருந்தது. இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மூதாட்டி அணிந்திருந்த நகையை பறித்துக்கொண்டு அவரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
    • சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மூதாட்டி உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    போளூர்:

    போளூர் அடுத்த புலிவானந்தல் கிராமத்தை சேர்ந்தவர் காசி அம்மாள் (வயது 85). இவரது கணவர் சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். மகன் சின்ன பையனுடன் வசித்து வந்தார். இவர்களது விவசாய நிலம் அந்தப் பகுதி ஏரிக்கரை ஓரம் உள்ளது.

    நிலத்திற்கு எதிரே உள்ள சமுதாயக்கூடத்தில் காசியம்மாள் தினமும் இரவில் படுத்து உறங்குவது வழக்கம்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை மூதாட்டி அங்கு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

    அதிகாலையில் அவரது மகன் வந்து பார்த்தபோது காசி அம்மாள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது தெரியவந்தது.

    மூதாட்டி அணிந்திருந்த நகையை பறித்துக்கொண்டு அவரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

    இதுகுறித்து போளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மூதாட்டி உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டுக்கு நேரில் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
    • முதியவர்களை குறி வைத்து கொள்ளையடித்தது தெரியவந்தது.

    சூலூர்,

    சூலூர் பள்ளபாளையம் காந்தி நகரைச் சேர்ந்த சரோஜினி (வயது 82) கடந்த சில நாட்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார்.

    அவரது வாய், கை, கால்களை பார்சல் கட்டும் டேப்பால் ஒட்டி கொலை செய்த கும்பல் வீட்டில் இருந்த நகை, பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றது. இதுதொடர்பாக தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் இந்த கொலையில் ஈடுபட்டது குமரி மாவட்டம் திங்கள் சந்தை பகுதியைச் சேர்ந்த வசந்த் (வயது 19), அபினேஷ் (23) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. பெங்களூருவில் பதுங்கியிருந்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    கண்காணிப்பு காமிராக்கள் உதவியுடன் அவர்கள் சிக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.

    இன்று காலை கைதானவர்களை போலீசார் சரோஜினியின் வீட்டுக்கு நேரில் அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது கொலை செய்ததை அவர்கள் நடித்துக் காட்டினர். கைதான 3 பேரும் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக முதியவர்களை குறி வைத்து கொள்ளையடித்தது தெரியவந்தது. குமரி மாவட்டத்தில் இதேபோல பல முதியவர்களை அவர்கள் கட்டிப்போட்டு கொள்ளையடித்து அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு ஜாலியாக வாழ்ந்துள்ளனர். கைதான அபினேசின் தந்தை வெளிநாட்டில் வேலை பார்த்து தற்போது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். அபினேஷ் ஏற்கனவே செயின் பறிப்பு மற்றும் வாகனத்திற்கு வழக்கில் சம்பந்தப்பட்டு மூன்று மாதம் ஜெயில் தண்டனை அனுபவித்தவர். இந்த விவரங்கள் தெரிந்தும் கூட மருத்துவ மாணவி ஒருவர் இவரை தீவிரமாக காதலித்து உள்ளார். இதை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். வசந்த் என்பவருடைய பெற்றோர் கூலி வேலைக்கு செல்கின்றனர். 17 வயது சிறுவனின் தாய் அங்கன்வாடி பணியாளராக உள்ளார். தந்தை ஓட்டுனராக பணிபுரிகிறார் என தெரிவித்தனர்.

    • மர்ம நபர்கள் கொலை செய்து வீட்டில் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
    • சரோஜினியின் வீட்டில் கோரைப்பாய் வியாபாரிகள் சிலர் வாடகைக்கு இருந்துள்ளனர். அவர்கள் சரோஜினி கொலையுண்ட பிறகு தலைமறைவாகி உள்ளனர்.

    சூலூர்:

    சூலூர் அருகே பள்ள பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் சரோஜினி (வயது 82). கடந்த 4-ந் தேதி இவரை மர்ம நபர்கள் கொலை செய்து வீட்டில் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

    சரோஜினியின் வாய், கை, கால்களை பேக்கிங் டேப்பால் ஒட்டி கொள்ளையர்கள் இந்த துணிகர செயலில் ஈடுபட்டு ள்ளனர். சரோஜினியை கொலை செய்தவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    சரோஜினியின் வீட்டில் கோரைப்பாய் வியாபாரிகள் சிலர் வாடகைக்கு இருந்துள்ளனர். அவர்கள் சரோஜினி கொலையுண்ட பிறகு தலைமறைவாகி உள்ளனர். இதனால் போலீசார் அவர்கள் மீது சந்தேகம் கொண்டு விசாரித்து வருகிறார்கள்.

    இதற்காக அவர்களது சொந்த ஊரான தர்மபுரிக்கு சென்று போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர். கொலை செய்யப்பட்ட பகுதிக்கு அருகில் கண்காணிப்பு காமிராக்கள் இல்லா ததால் கொலையாளியை அடையாளம் காண போலீசார் மிகவும் சிரமமான சூழ்நிலையில் திணறி வருகின்றனர். இதில் பழைய குற்றவாளிகள் யாரேனும் உள்ளனரா என விசாரித்து வருகின்றனர்.

    சரோஜினி கொல்லப்பட்ட அதே நாளில் கோவை ஆர்.எஸ். புரத்தில் வாடகைக்கு வீடு பார்ப்பது போல் வந்த மர்ம நபர், முதியவரை கட்டிப்போட்டு பணத்தை கொள்ளையடித்துச் சென்றார். முதியவரை கட்டிப் போட்ட நபரும் பேக்கிங் டேப் பயன்படுத்தி இருந்தார். முதியவரின் வாயை டேப் கொண்டு கட்டியிருந்தனர்.

    கடந்த வெள்ளிக்கிழமை கண்ணம்பாளையத்தில் தனியாக இருந்த மூதாட்டியை இரு மர்ம நபர்கள் திடீரென வீட்டுக்குள் புகுந்து மூதாட்டியின் வாயை பொத்தி கட்டி போட முயற்சி செய்துள்ளனர். ஆனால் அந்த மூதாட்டி தைரியமாக திருடர்களை எட்டி உதைத்ததில் ஒரு திருடன் கீழே விழுந்தவுடன் பயந்து போய் இருவரும் அப்பகுதியை விட்டு தப்பி ஓடி விட்டனர். மூதாட்டியிடம் கொள்ளை முயற்சி தடுக்கப்பட்டதால் இந்த சம்பவம் பற்றி புகார் தரப்படவில்லை.

    இதனால் முதியவர்களை குறி வைத்து நகை, பணத்தை கொள்ளையடிக்கும் கும்பல் கோவையில் ஊடுருவி இருப்பது தெரியவந்துள்ளது. சரோஜினி கொலை உள்ளிட்ட அடுத்தடுத்து நடந்த 3 சம்பவங்களிலும் ஒரே கும்பலைச் சேர்ந்த வர்கள் ஈடுபட்டுள்ளார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கிறார்கள்.

    இந்த கும்பலுடன் பெண் ஒருவருக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. முதியவர்களை அந்த பெண் முதலில் சந்தித்து பேசுவது, அதன்பிறகு மற்ற நபர்கள் புகுந்து தங்கள் திட்டத்தை அரங்கேற்றி இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு உள்ளது. இதுதொடர்பாகவும் போலீ சார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். 

    • வீட்டிற்குள் பிளாஸ்திரியால் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்ததார்.
    • மூதாட்டியை கொலை செய்தவர்களை கண்டுபிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    சூலூர்

    சூலூர் அருகே காந்தி நகரை சேர்ந்தவர் சரோஜி(வயது82). சம்பவத்தன்று இவர் வீட்டிற்குள் பிளாஸ்திரியால் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்ததார்.

    அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையும் மாயமாகி இருந்தது. அவரை யாரோ கொலை செய்து விட்டு நகையை திருடி சென்றுள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் மூதாட்டியை கொலை செய்தவர்களை கண்டுபிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மூதாட்டியின் வீட்டில் இருந்த கோரை பாய் வியாபாரிகள் 3 பேர் கொலை நடந்த நாளில் இருந்து தலைமறைவாக உள்ளனர்.

    இதனால் அவர்களை தேடி ஒரு தனிப்படை குழு தர்மபுரி விரைந்துள்ளது.தர்மபுரி மாவட்டம் முழுவதும் சல்லடை போட்டு, தேடும் போலீசார் அவர்கள் குறித்த தகவல்கள் கிடைக்கிறதா? என்றும் விசாரித்து வருகின்றனர்.

    மற்றொரு தனிப்படை குழுவினர், காந்திநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இதுவரை 50க்கும் மேற்பட்ட கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்தனர்.

    அந்த காட்சியில் பதிவாகி இருந்த காட்சிகளை வைத்து, சந்தேகத்திற்கு இடமான நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.இதுகுறித்து போலீசார் கூறுகையில், சந்தேக நபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். மூதாட்டியின் கொலையில் முக்கிய தடயம் சிக்கி உள்ளது. குற்றவாளிகளை நெருங்கி விட்டோம்.

    இன்று அல்லது நாளைக்குள் குற்றாவளிகளை பிடித்து விடுவோம். மேலும் தனிப்படையினர் தொடர்ந்து தர்மபுரி, ஓசூர் பகுதிகளில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்றனர்.

    • கை, கால், முகத்தை டேப்பால் கட்டி கொடூரமாக கொன்றுள்ளனர்.
    • 11 மணியாகியும், பாலை எடுக்காமல் அப்படியே வாசலில் கிடந்தது.

    சூலூர்:

    கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள காந்தி நகரை சேர்ந்தவர் சரோஜினி(வயது82).

    இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். 2 பேருக்கும் திருமணம் முடிந்து பெரிய நாயக்கன் பாளையம் பகுதியில் தனியாக வசித்து வருகின்றனர்.

    இதையடுத்து சரோஜினி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். அவ்வப்போது மகன்கள் 2 பேரும் வந்து தாயை பார்த்து செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் இன்று காலை இவரது வீட்டிற்கு பால் பாக்கெட் போடுபவர் காலையிலேயே போட்டு சென்று விட்டார். ஆனால் 11 மணியாகியும், பாலை எடுக்காமல் அப்படியே வாசலில் கிடந்தது.

    இதனால் அக்கம்பக்க த்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது கதவு திறந்த நிலையில் கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, மூதாட்டி இறந்த நிலையில் கிடந்தார்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் சூலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.

    அப்போது அவரது கை, கால்கள் மற்றும் வாய் டேப்பால் கட்டப்பட்டிரு ந்தது. மேலும் அவர் அணிந்திருந்த நகைகளையும் காணவில்லை. இதனால் மர்மநபர்கள் யாரோ இவர் தனியாக இருப்பதை அறிந்து, நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து கொலை செய்து விட்டு தப்பியோடியது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விட்டு வீட்டில் ஏதாவது தடயங்கள் உள்ளதா? என தேடி பார்த்தனர்.

    மேலும் அவரை கொலை செய்தது யார்? நகைக்காக கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதாவது காரணமா எனவும் விசாரித்து வருகின்றனர். மேலும் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு காமிராக்களையும் ஆய்வு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.இதற்கிடையே மூதாட்டியின் வீட்டில் 3 பேர் வாடகைக்கு இருந்ததாகவும், அவர்களை காலை முதல் காணவில்லை என்றும் பொதுமக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

    இதனால் அந்த நபர்கள் மூதாட்டியை கொன்று விட்டு, நகை பணத்தை கொள்ளையடித்து சென்றிருக்கலாமோ என்றும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த கோணத்தி லும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இருப்பினும் போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 25-ந்தேதி வீட்டில் இருந்து வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற மூதாட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
    • மூதாட்டி கொலை குறித்து சுசீந்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    என்.ஜி.ஓ.காலனி:

    சுசீந்திரம் அருகே மணி கட்டி பொட்டல் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜான்சன். இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 60). இவர்களது மகன் கோபி (21) ஜான்சன் இறந்து விட்டதால் தாயாரும் மகனும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

    முத்துலட்சுமி மேலகிருஷ்ணன் புதூர்பகுதியில் உள்ள வலை கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அவர் தனது மகனிடம் கடன் பிரச்சினை இருப்பதாக கூறி வருத்தப்பட்டு வந்தார்.

    கடந்த 25-ந்தேதி வீட்டில் இருந்து வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். மறுநாள் முத்துலட்சுமி மணிக்கட்டி பொட்டல் பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் பிணமாக கிடப்பதாக கோபிக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து கோபி சம்பவ இடத்திற்கு சென்றார். அங்கு பிணமாக கிடந்த தனது தாயார் முத்துலட்சுமியின் உடலை ஆம்புலன்ஸ் மூலமாக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். பின்னர் இது குறித்து சுசீந்திரம் போலீசுக்கும் தகவல் தெரிவித்தார்.

    மேலும் சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் தற்கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் முத்துலட்சுமியின் உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவரது மூக்கில் பலத்த காயங்கள் இருப்பதாக தெரிவித்தனர். மேலும் பாலியல் பலாத்காரம் செய்திருப்பதாகவும் கூறினார்கள்.

    இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் சாய் லட்சுமி தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் அந்த பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் சிலரை பிடித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • 12 பவுன் நகை கொள்ளை
    • 2 தனிப்படை தீவிரம்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குன்னத்தூர் அனுமன்பட்டி பகுதியைச் சேர்ந்த அப்பாவு மனைவி காந்தா (வயது 65). இவருக்கு 3 பிள்ளைகள் உள்ளன. இதில் முதல் மகன் சரவணகுமார் (46) மற்றும் இவருடைய மனைவி சுபா ஆகியோர் பக்கத்து கிராமமான காமராஜர் நகர் பகுதியில் உள்ள நிலத்தை பார்த்துக் கொள்ள சென்று விட்டனர்.

    இந்த நிலையில் தனியாக காந்தா வீட்டில் இருந்ததாக தெரிகிறது. இதனை அறிந்த மர்ம நபர்கள் நேற்று மாலை சுமார் 5 மணியளவில் பட்ட பகலில் வீட்டில் உள்ளே புகுந்து காந்தாவின் கழுத்தில் அணிந்து இருந்த தங்க நகை கொள்ளை அடிக்க முயன்றனர்.

    அப்போது மூதாட்டி கூச்சல் போடவே மர்ம கும்பல் மூதாட்டியை தாக்கி கீழே தள்ளி சத்தம் போடாமல் இருக்க வாயில் துணியை வைத்து கொலை செய்துவிட்டு மூதாட்டி கழுத்தில் அணிந்து இருந்த 7 பவுன் தங்க செயின் மற்றும் கையில் அணிந்து இருந்த 5 பவுன் வளையல் என மொத்தம் 12 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

    இது குறித்து தகவலறிந்ததும் சம்பவம் இடத்திற்கு வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் ஆனி விஜயா திருப்பத்தூர் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகணேஷ் வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் இது குறித்து மூதாட்டி மகன் சரவணகுமார் கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் மர்ம நபர்களை பிடிக்க திருப்பத்தூர் டிஎஸ்பி கணேஷ் மற்றும் வாணியம்பாடி டிஎஸ்பி சுரேஷ் பாண்டியன் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படையினர் அமைக்கப்பட்டுள்ளது. மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட போவதாகவும் மேலும் சந்தேகத்தின் பேரில் 4 பேரையும் போலீசார் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் அப்பகுதியில் ஏதேனும் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை செய்து வருகின்றனர் என முதற்கட்டமாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • கூடுவாஞ்சேரி அடுத்த காரணை புதுச்சேரி பெரியார் நகர் 13வது தெருவைச் சேர்ந்தவர் லட்சுமி.
    • கோவிலுக்கு சென்ற மூதாட்டி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த காரணை புதுச்சேரி பெரியார் நகர் 13வது தெருவைச் சேர்ந்தவர் லட்சுமி வயது (70). இவர் நேற்று முன்தினம் இரவு பக்கத்து தெருவில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலுக்கு சென்று திரும்பும் போது அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஆறுமுகம் வயது (52) என்பவர் லட்சுமியை வீட்டில் விடுவதாக கூறி அழைத்துச் சென்றுள்ளார். அதன்பிறகு லட்சுமியை காணவில்லை என அவரது கணவர் வேடசாமி கூடுவாஞ்சேரி போலிஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

    இதுகுறித்து காணாமல் போன லட்சுமியை கூடுவாஞ்சேரி போலீசார் தேடி வந்த நிலையில், சிங்கப்பெருமாள் கோயில் அடுத்த ஆப்பூர் அருகே உள்ள அரசு காப்புக்காட்டில் லட்சுமி கழுத்தில் கத்தியால் குத்தியும், தலையில் பலத்த காயங்களுடன் சடலமாக கிடப்பதாக பாலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மூதாட்டி லட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பாலூர் போலீசார் தலைமறைவாக உள்ள ஆட்டோ ஓட்டுநர் ஆறுமுகத்தை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். கோவிலுக்கு சென்ற மூதாட்டி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மூதாட்டி தொழிற்சாலைகளில் வேலை செய்யும் வட மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு தனது வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார்.
    • மூதாட்டி முகத்தில் ரத்த காயங்கள் இருந்ததால் அவரை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

    புதுச்சேரி:

    புதுவை அருகே உள்ள சேதராப்பட்டு காமராஜர் வீதியை சேர்ந்தவர் சின்னையன். இவரது மனைவி உண்ணாமலை, (வயது75). இவருக்கு ஆதிகேசவன், நாராயணமூர்த்தி ஆகிய மகன்களும் கவுரி, ராணி, கண்ணகி ஆகிய மகள்களும் உள்ளனர்.

    அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி தனியாக வசிக்கின்றனர். கணவரை இழந்த உண்ணாமலை தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

    அருகில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்யும் வட மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு தனது வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார். மேலும், பசு மாடுகள் வளர்த்து கூட்டுறவு சொசைட்டியில் பால் ஊற்றி வந்தார். பால் மூலமாக கிடைக்கும் வருவாய், வீட்டு வாடகை வருமானத்தால் எப்போதும் பண புழக்கத்துடன் மூதாட்டி இருந்துள்ளார். தங்கச் செயின், மூக்குத்தி, கம்மல் உள்ளிட்ட 10 சவரன் தங்க நகைகளை அணிந்திருப்பதும் வழக்கம்.

    இந்நிலையில், நேற்று பால் சொசைட்டிக்கு உண்ணாமலை செல்லவில்லை. மேலும், வீட்டு வாசலிலும் தண்ணீர் தெளிக்கப்படாமல் கதவு மூடி கிடந்தது. இதனால் அருகே வசித்துவரும் உறவினர்கள் நேற்று மாலை 4 மணியளவில் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, மூதாட்டி உண்ணாமலை ரத்தக்காயங்களுடன் குப்புற கவிழ்ந்தபடி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து மகன்களுக்கும் மற்றும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த சேதராப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார், தடயங்களை சேகரித்து உண்ணாமலை உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீஸ் விசாரணையில் இறந்து கிடந்த மூதாட்டி அணிந்திருந்த தங்க செயின், கம்மல், வளையல் உள்ளிட்ட தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது உறுதியானது.

    மூதாட்டி முகத்தில் ரத்த காயங்கள் இருந்ததால் அவரை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

    சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மேலும் தடயவியல் நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்து சென்றனர். மூதாட்டி வடமாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு வீட்டை வாடகைக்கு விட்டிருந்ததால் மூதாட்டியை வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×