search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்னல்"

    • தீ வேகமாக பரவியதால் உடனடியாக செவ்வாய்ப் பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
    • அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை.

    சேலம்:

    சேலம் எருமாபாளையம் ராமானுஜர் கோவில் செல்லும் வழியில் ஜெயகோபால் என்பவருக்கு சொந்தமான காட்டன்மில் உள்ளது. இந்த மில்லில் பஞ்சு மற்றும் நூல் குவிக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில், நேற்று இரவு சேலத்தில் தொடர் மழை பெய்தபோது மின்னல் மற்றும் பயங்கர சத்தத்துடன் இடி இடித்தது. அப்போது காட்டன் மில் மொட்டை மாடியில் பொருத்தப்பட்டிருந்த ஏ.சி. அவுட்டர் மிஷின் மீது மின்னல் தாக்கியதில், அதில் இருந்து மின் கசிவு ஏற்பட்டு, மில்லில் உள்பகுதியில் இருந்த பால்சீலிங் தீப்பி டித்தது. இந்த தீ குபு, குபுவென எரிய தொடங்கியது. இதனால் ஆலை முழுவதும் கரும்புகை மூட்டம் நிலவியது.

    இதை பார்த்த ஊழியர்கள் தீயை அணைக்க முற்பட்டனர். ஆனால் முடியவில்லை. தீ வேகமாக பரவியதால் உடனடியாக செவ்வாய்ப் பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    உதவி மாவட்ட அதிகாரி சிவகுமார், தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்ட காரணத்தினால், தீ ஆலையில் உள்ள பஞ்சு மற்றும் நூல்களில் பரவாமல் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. 

    • 3 மணி நேரம் இடைவிடாமல் பெய்தது
    • வியர்வையில் குளித்தவர்கள் மழையில் நனைந்தனர்

    நாகர்கோவில் :

    தமிழகத்தில் கோடை வெயில் கடந்த இரண்டு வாரங்களாக சுட்டெரித்து வருகிறது. தாங்க முடியாத வெப்பத்தால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினார்கள். இன்னும் சில நாட்கள் வெயிலின் தாக்கம் இதே போல் தான் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்ததை கேட்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 3. 45 மணிக்கு திடீரென்று இடி, மின்னலு டன் மழை கொட்டத் தொடங்கியது. காலை 6.45 மணி வரை 3 மணி நேரம் இடைவிடாமல் கொட்டி தீர்த்த மழையால் நகரில் பல இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சவேரியார் கோவில் சந்திப்பு, செட்டிகுளம் சந்திப்பு, ஈத்தாமொழி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் போக முடியாத அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    நாகர்கோவிலில் பெய்த இந்த திடீர் மழை பொது மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மேலும் கோடை வெயிலிலிருந்து ஓரளவு தப்பிக்க முடியும் என்று மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மழை கொட்டிய நிலையில் இன்றைய வெப்ப நிலையும் சற்று குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது அதாவது அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரிக்கு கீழ்தான் இருக்கும் என்றும் அறிவித்திருப்பது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னையில் இருந்து இன்று அதிகாலை 5.15 மணிக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் நாகர்கோவில் வந்தடைந்தது. இந்த  ரெயிலில் இருந்து இறங்கிய நூற்றுக்கணக்கான பயணிகள் மழை கொட்டியதை பார்த்து உற்சாகத்துடன் மழையில் நனைந்தபடியே சென்றனர். இது பற்றி அவர்கள் கூறும் போது சென்னையில் ரெயில் ஏறியதும் ரெயிலுக்குள்ளே இருக்க முடியாத அளவுக்கு வெப்பம் அனலாக தாக்கியது. நாகர்கோவில் வந்து இறங்கியதும் மழையைப் பார்த்து சந்தோஷமாக இருக்கிறது என்ற படியே மழை தண்ணீரில் உற்சாக குளியல் போட்டபடி ஊர்களுக்கு புறப்பட்டு சென்றார்கள்.

    நாகர்கோவிலில் இன்று அதிகபட்சமாக 34.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மயிலாடி, கொட்டாரம், மாம்பழத்துறையாறு, குருந்தன்கோடு பகுதிகளிலும் இன்று காலையில் மழை பெய்தது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது.

    அருவியில் குளிப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர். பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 38.87 அடியாக இருந்தது. அணைக்கு 146 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 41.35 அடியாக உள்ளது. அணைக்கு 95 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையிலிருந்து 50 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகளில் போது மான அளவு தண்ணீர் உள்ள காரணத்தினாலும் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக விவசாயிகள் சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    மாவட்டத்தில் கன்னி பூ சாகுபடி பணி தீவிரமாக நடந்து வருகிறது. விவசாயி களுக்கு தேவையான விதைகள் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் பல்வேறு இடங்களில் சாகுபடி செய்ததையடுத்து பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளை பாசனத்திற்காக வழக்கம்போல் ஜூன் 1-ந்தேதி திறக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

    • லெட்சுமி இடி மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    • ரூபிமனோகரன் எம்.எல்.ஏ. லெட்சுமியின் மகன்களை சந்தித்து ஆறுதல் கூறி உதவித்தொகை வழங்கினார்.

    நெல்லை:

    நாங்குநேரி சட்டமன்ற தொகுதி பாளை ஒன்றியம், பாளை கிழக்கு வட்டாரத்திற்கு உட்பட்ட உடையார்குளம் பஞ்சாயத்தில் உள்ள வாகைகுளம் கிராமத்தை சேர்ந்தவர் லெட்சுமி (வயது 55). ஏழை விவசாயியான இவர் சில தினங்களுக்கு முன்பு கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டு சென்று அழைத்து வரும்போது இடி மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதையறிந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபிமனோகரன் எம்.எல்.ஏ. வாகைகுளம் கிராமத்திற்கு நேரில் சென்று குடும்ப தலைவியை இழந்து தவிக்கும் அப்பெண்ணின் மகன்களை சந்தித்து ஆறுதல் கூறியதோடு உதவித்தொகையும் வழங்கினார்.

    அவருடன் நாங்குநேரி தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி,மூத்த காங்கிரஸ் தலைவர் புத்தனேரி சண்முகம்,மாவட்ட துணைத்தலைவர் செல்லப்பாண்டி, பாளையங்கோட்டை வடக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கனகராஜ், மாவட்ட பொதுச்செயலாளர் இட்டமொழி நம்பித்துரை, இளைஞர் காங்கிரஸ் நாங்குநேரி தொகுதி தலைவர் ராஜ்குமார், உடையார்குளம் பஞ்சாயத்து காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் உச்சிமாகாளி, கிராம காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகள் சங்கரகோனார், முத்துபாண்டி, கண்ணன் மற்றும் வாகைகுளம் ஊர் பெரியவர்கள் உடன் இருந்தனர்.

    • கனமழையால் தஞ்சை சீத்தா நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தெருக்களில் தண்ணீர் தேங்கியது.
    • தொடர்ந்து 4 நாட்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் பருவ கால மாற்றத்தின் காரணமாக கடந்த 2 மாதங்களாக மழை பெய்வதும், வெயில் அடிப்பதுமாக மாறி மாறி பருவநிலை நிலவி வருகிறது. கடந்த மாதத்தில் பல நாட்கள் மழை பெய்தது.

    ஆனால் கடந்த மாத இறுதியில் இருந்து அக்னி நட்சத்திரம் போல் வெயில் சுட்டெரித்து வந்தது.

    கோடை காலத்தை மிஞ்சும் வகையில் வெயில் கொளுத்தியதால் மக்கள் அவதி அடைந்தனர்.

    கடந்த ஒரு வாரமாகவே 100 டிகிரியைத் தாண்டி வெயில் கொளுத்தியது. பகலில் அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

    இந்த நிலையில் தஞ்சையில் நேற்று பகல் முழுவதும் வெயில் சுட்டெரித்து வந்தது.

    இரவு 7 மணி அளவில் திடீரென சாரல் மழை பொழிந்தது. தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது.

    நள்ளிரவு 12 மணி அளவில் பயங்கர சத்தத்துடன் இடி முழங்கியது.

    அவ்வப்போது மின்னல் அடித்துக் கொண்டிருந்தது.

    அடுத்த சில நிமிடங்களில் மழை பெய்ய தொடங்கியது.

    ஆரம்பத்தில் மிதமான அளவில் பெய்து வந்த மழை நேரம் செல்ல செல்ல அதிகரிக்க தொடங்கியது.

    கனமழையாக மாறி வெளுத்து வாங்கியது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    தொடர்ந்து 2 மணி நேரம் மழை நீடித்தது.

    அதன் பின்னர் இன்று அதிகாலை 4 மணியில் இருந்து மீண்டும் மழை பெய்ய தொடங்கியது.

    தொடர்ந்து இரண்டு மணி நேரம் அதாவது காலை 6 மணி வரை மிதமான அளவில் மழை பெய்தது.

    இதன் காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவியது.

    தொடர்ந்து பெய்த கனமழையால் தஞ்சை சீத்தா நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தெருக்களில் தண்ணீர் தேங்கியது.

    மேலும் வீடுகளை சுற்றி தண்ணீர் சூழ்ந்து கொண்டது.

    இதனால் பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே வர அவதி அடைந்தனர்.

    தஞ்சை சாந்த பிள்ளைக்கேட் ரெயில்வே கீழ் பாலத்தில் தண்ணீர் தேங்கியது.

    இதனால் அந்த வழியை கடந்து பூக்கார தெரு, விளாருக்கு செல்லும் பொதுமக்கள் மாற்று பாதையில் சென்றனர்.

    சிலர் தண்ணீரை கடந்தும் சென்றனர்.

    தஞ்சை மாவட்டம் பூதலூரில் நள்ளிரவில் இருந்து இன்று காலை வரை கனமழை கொட்டி தீர்த்தது.

    சாலை, தெருக்களில் தண்ணீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது.

    தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. மாவட்டத்திலேயே அதிகபட்சமாக பூதலூரில் தான் 167.60 மி.மீ. மழை அளவு பதிவானது.

    இதேபோல் வல்லம், செங்கிப்பட்டி, திருக்காட்டுப்பள்ளி, பாபநாசம், கும்பகோணம், பட்டுக்கோட்டை, மதுக்கூர், வெட்டிக்காடு, ஒரத்தநாடு, அய்யம்பேட்டை, பேராவூரணி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.

    இதற்கிடையே தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுவதால் தொடர்ந்து 4 நாட்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதன் காரணமாக மீண்டும் தஞ்சை மாவட்டத்தில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தஞ்சை மாவட்டத்தில் இன்று காலை 9 மணியுடன் முடிவடைந்த மழையின் அளவு வருமாறு (மி.மீ.) :-

    பூதலூர்-167.69, கல்லணை- 155, தஞ்சாவூர் -122, நெய்வாசல் தென்பாதி -118.20, வல்லம் -117, திருக்காட்டுப்பள்ளி- 89.40, பட்டுக்கோட்டை -88, ஒரத்தநாடு- 41.60, மதுக்கூர்-36, வெட்டிக்காடு- 36.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காக மேதினிராய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
    • பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.

    ஜார்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் ஒரு பெண் உட்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர். பலியான பல்ராம் யாதவ் (56), மன்மதி தேவி (45) ஆகியோர் வயலில் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது, இடி தாக்கியதில் அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காக மேதினிராய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    இந்நிலையில், பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று துணை ஆணையர் ஆஞ்சநேயுலு டோடே தெரிவித்தார்.

    திண்டுக்கல்லில் இடி-மின்னலுடன் பெய்த மழையினால் மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்தார்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் நகரில் நேற்று மாலை பலத்த சூறாவளி காற்றுடன் சாரல் மழை பெய்தது. பின்னர் இடி-மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. விண்ணை பிளக்கும் வகையில் ஒலித்த இடியினால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் அதிர்ச்சியடைந்தனர்.

    சிறிது நேரத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஒரு மணி நேரம் மழை பெய்து ஓய்ந்த பின் மின் இணப்பு மீண்டும் வந்தது. அதன்பின் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. இரவுவரை இநத மழை நீடிக்கவே மின் இணைப்பு துண்டானது.

    இதனால் நகர் முழுவதும் இருளில் மூழ்கியது. பலத்த சூறாவளி காற்றினால் மரங்கள், மின்சார வயர்கள் முறிந்தும், அறுந்தும் விழுந்தன. திண்டுக்கல் மட்டுமின்றி புறநகர் பகுதியிலும் கன்னிவாடி, நிலக்கோட்டை, வத்தலக்குண்டு,, பழனி, நத்தம் போன்ற பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

    திண்டுக்கல் அருகே உள்ள ராமையன்பட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஜெயராஜ் (வயது 50). இவர் நேற்றிரவு தனது வீட்டு அருகே உள்ள தோட்டத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சூறாவளி காற்றுடன் மழை பெய்ததில் மின்சார வயர் அறுந்து விழுந்தது.

    இதனை கவனிக்காமல் சென்ற ஜெயராஜ் மின்சார வயர் மீது கால் வைத்ததில் தூக்கி வீசப்பட்டார் இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தாடிக்கொம்பு போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    குமரி மாவட்டத்தில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இந்த மழைக்கு மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

    நாகர்கோவில்:

    தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய பின்பு அனைத்து மாவட்டங் களிலும் வெயில் கொளுத்தியது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க கோடை மழை பெய்யுமா? என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் ஏற்பட்டது. இந்த நிலையில் தென்மேற்கு அரபிக்கடலில் ஏடன் வளைகுடா பகுதியில் குறைந்த காற்றழுத்தம் உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

    இது புயலாக மாறியது. இதற்கு சாகர் என்று பெயரிட்டு இருப்பதாக தெரிவித்த வானிலை ஆய்வு மையம், இந்த புயல் ஏமன் பகுதிக்கு கிழக்கில் 400 கிலோ மீட்டர் தூரத்தில் மையங்கொண்டிருப்பதாக கூறியது. இது தென்மேற்கு திசையில் நகரும் என்றும் இதனால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் எச்சரித்தது. மேலும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் தெரிவித்தது.

    வானிலை ஆய்வு மையம் தெரிவித்தபடி குமரி மாவட்டத்தில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. நாகர்கோவிலில் நள்ளிரவு 1.30 மணிக்கு தொடங்கிய மழை சுமார் 4 மணி நேரம் நீடித்தது. இதனால் செம்மாங்குடி ரோடு, கோட்டார் ரோடு, மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    குருந்தன்கோடு பகுதியில் இடி-மின்னலுடன் கன மழை கொட்டி தீர்த்தது. அங்க அதிகபட்சமாக 15 செ.மீ. மழை பதிவானது. பூதப்பாண்டி, சுருளோடு, முள்ளங்கினாவிளை, புத்தன் அணை, ஆரல்வாய் மொழி, மயிலாடி, கொட்டாரம், இரணியல், குளச்சல், அடையாமடை, கோழிப் போர்விளை பகுதி களிலும் மழை பெய்தது.

    திற்பரப்பு அருவி பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள்.

    இடி-மின்னலுடன் மழை பெய்ததை அடுத்து ராஜாக் கமங்கலம், கொட்டாரம், சாமிதோப்பு, அஞ்சுகிராமம், குலசேகரம், திருவட்டார், நாகர்கோவில் பகுதிகளில் நேற்று இரவு மின்சாரம் தடைபட்டது. இதனால் பல்வேறு கிராமங்கள் இருளில் மூழ்கியது.

    நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்திற்கு செல்லும் சாலையில் நின்ற பழமை வாய்ந்த மரம் ஒன்று வேரோடு ரோட்டில் சாய்ந்தது. மரக்கிளைகள் மின் கம்பம் மீது விழுந்ததில் மின் ஒயர்கள் அறுந்தது. மின் கம்பங்களும் உடைந்தன. மரம் ரோட்டில் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

    இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மரக்கிளைகள் முறிந்து மின்கம்பங்கள் மீது விழுந்தன.

    மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியிலும் பெய்து வரும் மழையினால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.

    48 அடி அளவு கொள்ளளவு கொண்ட பேச்சிப் பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 4.80 அடியாக இருந்தது. அணைக்கு 534 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 460 கனஅடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.

    77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 59.10 அடியாக இருந்தது. அணைக்கு 286 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 8.75 அடியாக இருந்தது.

    சானல்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பாசன குளங்களும் நிரம்பி வருகிறது. மாவட்டம் முழுவதும் உள்ள 2000-க்கு மேற்பட்ட குளங்களில் 250-க்கு மேற்பட்ட குளங்கள் நிரம்பி வழிகின்றன.

    திருவட்டார், குலசேகரம், ஈத்தாமொழி பகுதிகளில் இன்று காலையிலும் தொடர்ந்து சாரல்மழை பெய்தது. மழை பெய்து வருவதையடுத்து விவசாயிகள் சாகுபடி பணியில் தீவிரம் காட்டி வருகிறார்கள். கன்னிப்பூ சாகுபடிக்காக நாற்று பாவும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மி.மீ. வருமாறு:-

    பேச்சிப்பாறை-51.6, பெருஞ்சாணி - 38.8, சிற்றாறு 1-31.6, சிற்றாறு 2-30.4, மாம்பழத்துறையாறு-112, நாகர்கோவில்-96, பூதப்பாண்டி - 54, சுருளோடு- 60, கன்னிமார் - 11, முள்ளங்கினாவிளை - 54, புத்தன் அணை- 41, திற்பரப்பு -72, ஆரல்வாய்மொழி- 13, குருந்தன்கோடு - 154, பாலமோர் - 22, மயிலாடி -63, கொட்டாரம் - 44, இரணியல் -47, ஆணைக்கிடங்கு - 112, குளச்சல் - 64, அடையாமடை - 48, கோழிப்போர்விளை - 52.

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் இன்று காலை மின்னல் தாக்கி 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #WestBengallightning
    கொல்கத்தா:

    வடமாநிலங்களில் கடந்த 2 மாதங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்படும் இடி, மின்னல் மற்றும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி பல அப்பாவி மக்கள் தங்கள் உயிரை இழந்தனர்.

    இந்நிலையில், மேற்கு வங்காளம் மாநிலத்தில் இன்று காலை மட்டும் மின்னல் தாக்கி 7 பேர் தங்கள் உயிரை இழந்துள்ளனர். நாடியா மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பேரும், வடக்கு 24 பாரகான் மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேரும் தங்கள் உயிரை இழந்துள்ளனர்.

    மேலும், பான்குருகா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரும் மின்னல் தாக்கி உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் இதுவரை மேற்கு வங்காளம் மாநிலத்தில் மட்டும் மின்னல் தாக்கி 25 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. #WestBengallightning 
    ×