search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின் இணைப்பு"

    • கட்டடத்தில் வாடகைக்கு இருக்கும் நபர்களின் ஆதார் விவரம் மட்டுமே இணைக்கப்பட வேண்டும்.
    • மின் களப்பணியாளர், வீடு வீடாக சென்று மீண்டும் ஆதார் இணைக்க அறிவுறுத்தி வருகின்றனர்.

    தாராபுரம்:

    தமிழக மின்சார வாரியம், மானியம் பெறும் இணைப்புகளை வரன்முறைப்படுத்தும் நோக்கில், மின்நுகர்வோரின் ஆதார் விவரம் இணைக்க திட்டமிட்டது. அதன்படி கடந்த சில மாதங்களாக ஆதார் இணைப்பு பணி ஆன்லைன் வாயிலாக நடந்தது. உதவி மையங்களும் அமைக்கப்பட்டிருந்தன.

    திருப்பூர் மாவட்டத்தில் ஆதார் இணைப்பு பணி மந்தமாக நடந்தது. அரசு அளித்த அவகாசத்துக்குள் ஆதார் இணைப்பு பணி 80 சதவீதத்திற்கும் அதிகமாக நிறைவடைந்தது. இருப்பினும் ஒரே உரிமையாளர், ஒன்றுக்கும் மேற்பட்ட கட்டடங்களுக்கு மின் இணைப்பு பெற்றுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியது.

    கட்டடத்தில் வாடகைக்கு இருக்கும் நபர்களின் ஆதார் விவரம் மட்டுமே இணைக்கப்பட வேண்டும். மாறாக உரிமையாளர் ஆதார், அனைத்து இணைப்புகளிலும் இணைக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் ஒன்றுக்கு மேற்பட்ட இணைப்புகளில், ஒரே குடும்ப உறுப்பினரின் ஆதார் இணைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. வீடு வீடாக சென்று வாடகைக்கு இருக்கும் நபரின் ஆதார் விவரம் இணைக்க அறிவுறுத்தப்பட்டது.அதற்கு பிறகும் இரட்டைப்பதிவு போன்ற ஒரே ஆதார் பதிவு விவரங்களை சேகரித்து மீண்டும் தற்போது பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. மின் களப்பணியாளர், வீடு வீடாக சென்று மீண்டும் ஆதார் இணைக்க அறிவுறுத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து மின்வாரிய அலுவலர்கள் கூறுகையில், மின்வாரியத்தில் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்படவில்லை. இருப்பினும் வாரிய அறிவிப்பை ஏற்று அனைவரும் ஆதார் இணைத்தனர். ஒரே உரிமையாளரின் பல கட்டடங்களுக்கு ஆதார் இணைப்பதில் சிக்கல் இருக்கிறது. வாடகை வீட்டில் குடியிருப்பவரின் ஆதார் இணைக்கப்பட வேண்டும். அதற்காக மீண்டும் வீடு வீடாக கள ஆய்வு நடத்தி வருகிறோம். எதிர்காலத்தில் மின் கட்டணம் செலுத்துவதிலும் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. மின்நுகர்வோர் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றனர்.

    • போலி ஆவணங்கள் மூலம் மின் இணைப்பு செய்த மின்வாரிய அதிகாரிகளுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.
    • மைதீன் மதார், தேனி நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தில் புகார் செய்தார்.

    மதுரை

    மதுரை கே.புதூர் கற்பக விநாயகர் காலனியை சேர்ந்தவர் மைதீன் மதார். இவருக்கு சுந்தர்ராஜன்பட்டியில் ஒரு வீடு உள்ளது.

    அதே பகுதியைச் சேர்ந்த முகமது யாகூப், முகமது அனிபா ஆகியோர் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மூலம் மைதீன் மதார் வீட்டுக்கான மின் இணைப்பு பெற்றதாக தெரிகிறது.

    இது தொடர்பாக மைதீன் மதார், தேனி நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தில் புகார் செய்தார். அதனை விசாரித்த நீதிமன்றம், மனுதாரருக்கு மீண்டும் மின் இணைப்பு வழங்க வேண்டும், அவருக்கு நிவாரணமாக மின்வாரிய அதிகாரிகள் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், வழக்கு செலவு தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

    • மின் இணைப்புகளின் மின் அளவிகள் திருடப்பட்டுள்ளது.
    • மின்வாரிய பணியாளர் எனக்கூறி மோசடி செய்து ரூ.5 ஆயிரம் பெற்றுள்ளார்.

    தாராபுரம் :

    தாராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் வ.பாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தாராபுரம் கோட்டம், தாராபுரம் நகர் மற்றும் கிராமியம் தாராபுரம் பிரிவு அலுவலகங்களுக்கு உட்பட்ட, பகுதிகளில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் ஏற்கனவே வழங்கப்பட்ட மின் இணைப்புகளின் மின் அளவிகள் திருடப்பட்டுள்ளது. அவினாசி பகுதியில் மின்வாரியம் அல்லாத தனிநபர் ஒருவர், புதிதாக மின் இணைப்பு பெற விண்ணப்பித்துள்ள விண்ணப்பத்தாரரிடம் திருடப்பட்ட மின் அளவியை மின்வாரியத்திலிருந்து மின் அளவி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து தன்னை மின்வாரிய பணியாளர் எனக்கூறி மோசடி செய்து ரூ.5 ஆயிரம் பெற்றுள்ளார்.

    அவினாசி மின்வாரிய பொறியாளர் தகவல் தெரிவி்த்ததால் இது தொடர்பாக அவினாசி, தாராபுரம் போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோல் பல்லடம் மின்பகிர்மான பகுதியில் மின் இணைப்பு பெற விண்ணப்பித்த விண்ணப்பதாரரிடம் மின்அளவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறி உடுமலை வட்டத்தில் ஏற்கனவே வழங்கப்பட்ட மின் அளவியை திருடி அதை தனிநபர் ஒருவர் தன்னை மின்வாரிய பணியாளர் எனக்கூறி மோசடி செய்து ரூ.6 ஆயிரம் பெற்று சென்றுள்ளார். இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    தாராபுரம் கோட்டத்தில் உள்ள அனைத்து மின் நுகர்வோர்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்புகளில் பொருத்தப்பட்ட மின் அளவிகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. புதிதாக மின் இணைப்பு பெற விண்ணப்பித்த விண்ணப்பத்தாரர்கள் மின்வாரியம் அல்லாத தனிநபர் தன்னை மின்வாரிய பணியாளர் எனக்கூறி மின் அளவி ஒதுக்கப்பட்டதாக கூறி பணம் கேட்டால் உடனடியாக உதவி மின்பொறியாளர் (விண்ணப்பித்த பிரிவு அலுவலகம்) அல்லது தாராபுரம் செயற்பொறியாளர் செல்போன் எண்: 94458 51562-க்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதுபோல் சந்தேகப்படும் படி மோசடி நபர்கள் தங்கள் பகுதிக்குள் கண்டறியப்பட்டால் உடனடியாக தங்கள் பகுதிக்கு உட்பட்ட போலீஸ் நிலையத்திலும் மற்றும் மின்வாரிய அலுவலர்களிடமும் புகார் அளிக்கலாம்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    • அரிசி ஆலையால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் கூறி வந்தனர்.
    • பொதுமக்கள் ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் ஊராட்சி சிங்கனூரில் பகுதியில் தனியார் அரிசி ஆலை செயல்பட்டு வருகிறது. அரிசி ஆலையால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் கூறி வந்தனர். உரிய அனுமதி இன்றியும், விதிமுறைகளை மீறி இயங்கி வரும் அரிசி ஆலையின் உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தும், அரிசி ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    இதையடுத்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் அரிசி ஆலையை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ( திருப்பூர் தெற்கு ) சுற்றுச்சூழல் பொறியாளர் சாமிநாதன் அறிவுறுத்தலின்படிஉதவி சுற்றுச்சூழல் பொறியாளர் வனஜா தலைமையில் அதிகாரிகள் அரிசி ஆலையில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதி பெறாமல் அரிசி ஆலை இயங்கி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், அந்த ஆலையின் மின் இணைப்பை துண்டிக்க, மின்வாரிய த்திற்கு பரிந்துரை செய்தனர். பரிந்துரையின் பேரில் அரிசி ஆலையின் மின் இணைப்பை மின்வாரிய அதிகாரிகள் துண்டித்தனர். இதனால் உரிய அனுமதி பெறாமல் இயங்கி வந்த அரிசி ஆலை இயக்கம் நிறுத்தப்பட்டது.

    • வாடகைக்கு குடியிருப்போர் ஒரு சிலர்தான் ஆதார் எண்களை கொடுத்தனர்.
    • வாடகைதாரர்கள் ஆதார் எண்களை இணைப்பதால் வீட்டின் உரிமையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பதை விளக்க வேண்டும் என்று வீட்டின் உரிமையாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள 2.68 கோடி மின் நுகர்வோரையும் ஆதாருடன் இணைக்கும் திட்டம் கடந்த 3 மாதமாக நடந்து முடிந்துள்ளது.

    மின் இணைப்புடன் ஆதார் எண்கள் இணைக்க அரசு 3 முறை கால அவகாசம் கொடுத்து கடந்த மாதம் 25-ந் தேதியுடன் அவகாசம் முடிந்தது. சுமார் 50 ஆயிரம் பேர் தவிர, 99 சதவீதம் பேர் மின் இணைப்புடன் ஆதாரை இணைத்துள்ளனர்.

    வீட்டின் உரிமையாளர்களே பெரும்பாலும் தங்களது வாடகை வீடுகளுக்கும் ஆதார் எண்களை கொடுத்து இணைத்தனர். ஒருவருக்கு சொந்தமாக 5 வீடுகள் இருந்தால் அனைத்திற்கும் வீட்டின் உரிமையாளர் ஒருவரின் ஆதார் எண்களை பெரும்பாலும் இணைத்தனர். வாடகைக்கு குடியிருப்போர் ஒரு சிலர்தான் ஆதார் எண்களை கொடுத்தனர்.

    இந்த நிலையில் வாடகை வீடுகளில் குடியிருப்பவர்களின் ஆதார் எண்களை இணைக்க வேண்டும் என்று தற்போது புதிய சர்ச்சையை கிளப்பு உள்ளனர். வாடகை வீடுகளுக்கும் வீட்டின் உரிமையாளர் கொடுத்த ஆதார் எண்களை ஏற்காமல் தற்போது வாடகை தாரர்களின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

    மின்வாரிய அதிகாரிகளுக்கு இந்த பணியை செய்து முடிக்க வேண்டும் என கூறப்பட்டதை அடுத்து தமிழகம் முழுவதும் மீண்டும் மின்வாரிய ஊழியர்கள் வீடு வீடாக ஆய்வு மேற் கொண்டு வருகின்றனர்.

    ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று வீட்டின் உரிமையாளரா, வாடகைதாரரா என கேள்வி கேட்டு வாடகை தாரராக இருந்தால் அந்த வீட்டின் மின் இணைப்புடன் அவரின் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர்.

    அவசர அவசரமாக ஆதார் எண்களை இணைக்க முயன்றபோது இதனை தனித்தனியாக மேற்கொண்டு இருக்கலாம்.

    வீட்டின் உரிமையாளர் குடியிருக்கும் வீட்டிற்கு அவரது ஆதார் எண்ணை மட்டும் இணைத்து இருக்கலாம். ஆனால் அப்போது வீட்டின் உரிமையாளரே அனைத்து வாடகை வீட்டிற்கும் தனது ஆதார் எண்ணை கொடுக்கலாம் எனக் கூறி இணைத்தனர்.

    இப்போது மீண்டும் வாடகைதாரர்களின் ஆதார் எண்களை கேட்டு வருகிறார்கள். இது வீட்டின் உரிமையாளர்களுக்கும் வாடகைக்கு குடியிருப்போருக்கும் பல சங்கடங்களை ஏற்படுத்தி வருகிறது என்று ஆதங்கப்படுகிறார்கள்.

    ஆதார் எண்கள் எந்த நோக்கத்திற்காக இணைக்கப்படுகிறது என்பதை மின்வாரியம் இது வரையில் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.

    இந்த நிலையில் தற்போது வாடகைதாரர்கள் ஆதாரை இணைக்கும் பணி வீதி வீதியாக நடந்து வருகிறது. வாடகைதாரர்கள் ஒரு வீட்டில் எத்தனை ஆண்டுகள் குடியிருப்பார்கள். எத்தனை மாதங்கள் குடியிருப்பார்கள் என்று சொல்ல முடியாது. இடம் மாறி சென்று கொண்டே இருந்தால் இந்த புள்ளி விவரம் முழுமை அடைய வாய்ப்பு இல்லை.

    எனவே, மின்வாரியம் இதுபற்றி தெளிவுபடுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். வாடகைதாரர்கள் ஆதார் எண்களை இணைப்பதால் வீட்டின் உரிமையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்பதை விளக்க வேண்டும் என்று வீட்டின் உரிமையாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    • சீலநா யக்கன்பட்டி, அம்மாப்பேட்டை, ஜாரி கொண்டலாம்பட்டி பகுதியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதி இல்லாமல் 7 சாயப்பட்டறைகள் இயங்கி வந்தது கண்டறியப்பட்டது. மேலும் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்காமல் கழிவு நீரை வெளியேற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
    • இதையடுத்து இந்த 7 சாயப்பட்டறைகளின் மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் என மாவட்ட சுற்றுச்சூழல் என்ஜினீயர் செந்தில் விநாயகம், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின்பேரில் விதிமுறையை மீறி இயங்கிய 7 சாயப்பட்டறைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதி பெறாமலும், கழிவு நீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றும் வகையிலும் சாயப்பட்டறைகள் இயங்கு வதாக புகார் எழுந்தது. இதையடுத்து மாவட்ட சுற்றுச்சூழல் என்ஜினீயர் செந்தில் விநாயகம் தலை மையில் உதவி என்ஜினீ யர்கள் ஜாரி கொண்டலாம்பட்டி, சீலநா யக்கன்பட்டி, அம்மாப்பேட்டை, நெய்கா ரப்பட்டி உள்ளிட்ட பகுதி களில் ஆய்வு செய்தனர்.

    அதில், சீலநா யக்கன்பட்டி, அம்மாப்பேட்டை, ஜாரி கொண்டலாம்பட்டி பகுதியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதி இல்லாமல் 7 சாயப்பட்டறைகள் இயங்கி வந்தது கண்டறியப்பட்டது. மேலும் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்காமல் கழிவு நீரை வெளியேற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து இந்த 7 சாயப்பட்டறைகளின் மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் என மாவட்ட சுற்றுச்சூழல் என்ஜினீயர் செந்தில் விநாயகம், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின்பேரில் விதிமுறையை மீறி இயங்கிய 7 சாயப்பட்டறைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    • வெளிநாட்டில் வசிப்பவர்கள் சிலர் இங்குள்ள வீடுகளுக்கு இன்னும் ஆதாரை இணைக்காமல் உள்ளனர்.
    • பெரும்பாலான வீட்டு உரிமையாளர்கள் வாடகைதாரர்களின் ஆதாரை இணைக்க அனுமதிப்பதில்லை.

    சென்னை:

    தமிழ்நாட்டில் இலவச மற்றும் மானிய விலை மின்சாரம் பெறும் வீடுகள், குடிசை வீடுகள், விவசாயம், விசைத்தறி மின் இணைப்புகளை சேர்த்து மொத்தம் 2 கோடியே 67 லட்சத்து 50 ஆயிரம் மின் இணைப்புகள் உள்ளன.

    அனைத்து மின் இணைப்புகளையும் ஆதார் எண்ணுடன் இணைக்க கடந்த 4 மாதங்களாக மின் வாரியம் சிறப்பு முகாம்கள் நடத்தியது.

    ஆரம்பத்தில் ஆதார் எண்ணை இணைக்க பலர் தயக்கம் காட்டி வந்தனர். ஒருவர் எத்தனை மின் இணைப்பு வைத்திருந்தாலும் 100 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்கும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு வெளியிட்டதால் பலர் ஆதார் இணைக்க முன்வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த மாதத்துடன் ஆதாரை இணைக்கும் கால அவகாசம் முடிந்தது என்று அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி தமிழகத்தில் 2 கோடியே 60 லட்சம் பேர் ஆதாரை இணைத்துள்ளனர். 67 ஆயிரம் பேர் ஆதாரை இணைக்காமல் உள்ளனர். இவர்களது வீடுகளுக்கு மின்வாரிய ஊழியர்கள் இப்போது நேரில் சென்று இவர்களும் ஆதாரை இணைப்பதற்கு வசதியாக இணையதள சேவைகள் இன்னும் திறந்துள்ளன. கால அவகாசம் முடிந்திருந்தாலும் ஆதார் எண்ணை இணைக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதனால் இன்னும் ஆதாரை இணைக்கும் பணி நடந்து கொண்டுதான் இருக்கிறது.

    இதுகுறித்து மின்வாரிய அதிகாரி கூறியதாவது:-

    வெளிநாட்டில் வசிப்பவர்கள் சிலர் இங்குள்ள வீடுகளுக்கு இன்னும் ஆதாரை இணைக்காமல் உள்ளனர். அந்த வீடுகளில் வசிப்பவர்களிடம் ஆதாரை இணைக்கும்படி அறிவுறுத்தி உள்ளோம்.

    சில பகுதிகளில் தாத்தா, அப்பா பெயரில் மின் இணைப்பு இருந்து அவர்கள் இறந்துவிட்ட பிறகு சொத்துக்கள் பிரிக்கப்படாத நிலையில் ஆதார் எண்ணை இணைப்பதில் வாரிசுகளிடையே பிரச்சினை உள்ளதால் அந்த வீடுகளிலும் ஆதாரை இணைக்காமல் இருப்பது தெரியவந்துள்ளது.

    அது மட்டுமின்றி ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளை வாடகைக்கு விட்டுள்ள வீட்டு உரிமையாளர்கள் வாடகைதாரர்களின் ஆதார் எண்ணை இணைக்க அனுமதிப்பதில்லை.

    இதுபோன்ற காரணங்களால் ஆதார் எண்களை இணைக்காமல் இருப்பது தெரியவந்துள்ளது.

    எனவே அந்தந்த வீடுகளுக்கு மின்வாரிய ஊழியர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். வீட்டு உரிமையாளர், வாடகைதாரர் ஆதார் எண்களையும் இணைக்க வழிவகை உள்ளது.

    ஆதார் இணைப்பு என்பது ஒரு விவரம் மட்டுமே என்று எடுத்து சொல்லி வருகிறோம்.

    ஆனாலும் பெரும்பாலான வீட்டு உரிமையாளர்கள் வாடகைதாரர்களின் ஆதாரை இணைக்க அனுமதிப்பதில்லை. அதற்கு பதில் குடும்பத்தில் உள்ள மற்றவர்களின் ஆதாரை இணைத்து வைத்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தாட்கோ மூலம் துரித மின் இணைப்பு பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.
    • நிலத்தில் கிணறு அல்லது ஆழ்குழாய்கிணறு அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் மின் மோட்டார் குதிரைத் திறனுக்கு ஏற்ப 90 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3.60 லட்சம் மானியத்தில் ஆதிதிராவி டர்களுக்கு 900 எண்ணிக்கை யும் பழங்குடியினருக்கு 100 எண்ணிக்கையிலும் மொத்தம் 1000 விவசா யிகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கு தாட்கோவின் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சேர்ந்த விவசாயிகளாகவும் விவசாய நிலம் மற்றும் நிலப்பட்டா அவர்களின் பெயரில் இருப்பவர்கள் மட்டும் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் நிலத்தில் கிணறு அல்லது ஆழ்குழாய்கிணறு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மின் இணைப்பு கோரி விண்ணப்பத்திருக்க வேண்டும். துரித மின் இணைப்புத் திட்டத்தில் தாட்கோ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு மாவட்ட மேலாளரால் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு 5 எச்.பி. குதிரைத்திறன் மின் இணைப்புக் கட்டணம் ரூ.2.50 லட்சத்திற்கான 10 சதவீத பயனாளி பங்குத் தொகை ரூ.25 ஆயிரமும், 7.5 எச்.பி குதிரைத்திறன் மின் இணைப்புக் கட்டணம் ரூ.2.75 லட்சத்திற்கான 10 சதவீத பயனாளி பங்குத் தொகை ரூ.27 ஆயரத்து 500-ம், 10 எச்.பி குதிரைத்திறன் மின் இணைப்புக் கட்டணம் ரூ.3 லட்சத்திற்கான 10 சதவீத பயனாளி பங்குத்தொகை ரூ.30 ஆயிரமும், 15 எச்.பி. குதிரைத்திறன் மின் இணைப்புக் கட்டணம் ரூ.4 லட்சத்திற்கான 10 சதவீத பங்குத் தொகை ரூ.40 ஆயிரத்துக்கான வங்கி வரைவோ லை அளிப்பவ ர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தகுதியில்லாத விண்ணப்பதாரர்கள் பங்குத்தொகை 10 சதவீதம் திருப்பி அளிக்கப்படும். கடந்த 2017 முதல் 2022 ஆண்டுகளில் மின் இணைப்பு வேண்டி மாவட்ட மேலாளரால் பரிந்துரைக்கப்பட்ட விவசாயிகளும், தற்போது மேம்படுத்தப்பட்ட தாட்கோ இணையதளத்தில் 10 சதவீத பயனாளி பங்குத்தொ கையுடன் புதியதாக விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே மின் இணைப்பு கோரி காத்திருப்பவர்களுக்கு மின் இணைப்பு வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும்.

    இந்த திட்டத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் www.tahdco.com என்ற இணையதள முகவரியில் நிலத்தின் சிட்டா, அடங்கல் நகல், "அ" பதிவேடு நகல், கிணறு அல்லது ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்ட நிலத்தின் வரைப்படம், சர்வே எண், மின் வாரியத்தில் பதிவு செய்த ரசீது நகல் மற்றும் புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும்.

    கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, அறை எண். 106, முதல் தளம், பழைய ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், மதுரை-625 020 என்ற முகவரியிலும், 0452-2529848 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் அதிக அளவில் பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 1,000 எண்ணிக்கையில் மின் இணைப்பு வழங்குவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    • தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தில் மின் இணைப்பு கோரி விண்ணப்பித்திருக்க வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டத்தில் ஆதிதிராவிடா், பழங்குடியின விவசாயிகள் துரித மின் இணைப்புக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:- தமிழக சட்டப்பேரவை யில் 2022-23 ம் ஆண்டுக்கான மானிய கோரிக்கையின்போது தாட்கோ திட்டத்தின்கீழ் ஆதிதிராவிடா், பழங்குடி யின விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.இத்திட்டத்தில் குதிரை மோட்டார் மின் திறனுக்கு ஏற்ப 90 சதவீதம் அல்லது அதிகப்பட்சமாக ரூ.3.60 லட்சம் மானியத்தில் 900 ஆதிதிராவிடா், 100 பழங்குடியினா் என மொத்தம் 1,000 எண்ணிக்கையில் மின் இணைப்பு வழங்குவதற்கு தாட்கோவின் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.ஆதிதிராவிடா், பழங்குடியின வகுப்பை சோ்ந்த விவசாயிகள், விவசாய நிலம் மற்றும் நிலப்பட்டா அவா்களது பெயரில் இருப்பவா்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தில் மின் இணைப்பு கோரி விண்ணப்பித்திருக்க வேண்டும். இத்திட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின விவசாயிகள் www.tahdco.com இணையதளத்தில் நிலத்தின் சிட்டா, அடங்கல் நகல், கிணறு அல்லது ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்ட தற்கான நிலத்தின் வரைபடம், சா்வே எண், மின் வாரியத்தில் பதிவு செய்தற்கான ரசீது நகல் மற்றும் புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும்.இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளரை அணுகி விவரங்களைப் பெற்று உரிய ஆவணங்க ளுடன் விண்ணப்பதைப் பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் இதுவரை 99 சதவீதத்துக்கும் மேல் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.
    • கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் மின் இணைப்பு தொடர்பாக தவறான கருத்து பதியப்பட்டு பரவி வருகிறது.

    சென்னை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் இதுவரை 99 சதவீதத்துக்கும் மேல் வீடு, குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியானது வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், கடந்த சில நாட்களில் சமூக வலைதளங்களில், ஒரே வீட்டில் ஒரே நபரின் பெயரில் உள்ள ஒன்றிற்கும் மேற்பட்ட வீட்டு மின் இணைப்புகள் ஒன்றிணைக்கப்படுவதற்காகவே ஆதார் எண் பெறப்பட்டு மின் இணைப்புடன் இணைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது என்ற கருத்து பதியப்பட்டு பரவி வருகிறது. இந்த கருத்து முற்றிலும் தவறானது மற்றும் உண்மைக்கு புறம்பானது ஆகும்.

    தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த 9-9-2022 அன்று வெளியிட்ட வீதப்பட்டியலில் மாற்ற ஆணையின் சரத்துக்களின்படி, கள ஆய்வின் அடிப்படையில் ஒரே வீட்டில், குடியிருப்பில், ஒரே நபரின் பெயரில், ஒரு குடும்பத்தினரே உபயோகிக்கும் ஒன்றிற்கும் மேற்பட்ட வீட்டு மின் இணைப்புகளை ஒன்றிணைக்க அல்லது அத்தகைய கூடுதல் மின் இணைப்புகளை பொதுப் பயன்பாட்டிற்கான மின் இணைப்பாக மாற்ற உத்தரவு பிறப்பித்திருந்த போதிலும், சில நிர்வாக காரணங்களால் மேற்படி ஒன்றிணைப்பு, வீதப்பட்டியல் மாற்றும் பணி தொடங்க கூடுதல் கால அவகாசம் கோரப்பட்டுள்ளது.

    எனவே, இது தொடர்பான எந்த ஒரு செயல் உத்தரவும் மின் பகிர்மான வட்டங்களில் உள்ள பிரிவு அலுவலகங்களுக்கு பிறப்பிக்கப்படவில்லை. எனினும் இக்குறிப்பிட்ட கள ஆய்வின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பிரிவு அலுவலரின் கடித வரைவு செயல், ஒரு தனிப்பட்ட நிகழ்வு ஆகும். இதில் சம்பந்தப்பட்ட அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நுகர்வோர் இணைப்பதற்கு முன்வரா விட்டால் அதை 1-டி கட்டண விகித பட்டியல் ஆக மாற்ற வேண்டும்.
    • குடியிருப்புகளில் பொது பயன்பாட்டுக்கான மின்சார இணைப்பு 1டி கட்டண விகித பட்டியலாக மாற்றப்பட வேண்டும்.

    சென்னை:

    மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த ஆண்டு (2022) செப்டம்பர் 10-ந்தேதி வெளியிட்ட கட்டண விகித பட்டியல் மாற்ற உத்தரவில் பிரிவு 5.8.5 அல்லது 8.6-ன் படி ஒரு வீட்டில் அல்லது ஒரு குடியிருப்பில் அல்லது ஒரு இடத்தில் 2 மின் இணைப்புகளை வழங்குவது பற்றியும், ஏற்கனவே 2 அல்லது அதற்கு மேற்பட்ட மின் இணைப்பு இருந்தால் அவற்றை இணைப்பது பற்றியும் மின்வாரியத்துக்கு அறிவுறுத்தி உள்ளது.

    அதன்படி, ஒரு வீடு அல்லது ஒரு குடியிருப்பு அல்லது ஒரு இடத்திற்கு ஒரு மின் இணைப்பு மட்டுமே தரப்பட வேண்டும். ஏற்கனவே ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்பு கொடுக்கப்பட்டு இருந்தால், அதை முறையான நோட்டீஸ் கொடுத்து கட்டண விகித பட்டியல் படி 1ஏ-ல் ஒரே மின் இணைப்பாக ஆக்க வேண்டும்.

    நுகர்வோர் இணைப்பதற்கு முன்வரா விட்டால் அதை 1-டி கட்டண விகித பட்டியல் ஆக மாற்ற வேண்டும். மேலும் மின் வாரியம் மின்இணைப்பு கொடுக்க அந்தப்பகுதி வாடகை ஒப்பந்தம் அல்லது குத்தகை ஒப்பந்தம் இருக்க வேண்டும். சிலர் ஒரே வீட்டில் சொந்த பந்தங்களாக, அண்ணன்- தங்கைகள், அக்காள்- தம்பிகள், தந்தை- மகன், தந்தை- மகள் என்று தனித்தனி குடும்பமாக வாழலாம். அங்கு வாடகை ஒப்பந்தமோ, குத்தகை ஒப்பந்தமோ வருவதற்கு வாய்ப்பு இல்லை.

    இதனால், இதுபோன்ற குடும்பங்கள் உள்ள முறையாக பிரிக்கப்பட்ட குடியிருப்பில் அங்கு மற்றொரு கூடுதல் மின் இணைப்பு 2004 மின் பகிர்மான விதியின் படி பெற்றிருந்தால் அம்மாதிரி இடங்களில் தனி ரேஷன் கார்டு இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும். இதன் நோக்கம் என்னவெனில் 100 யூனிட் மானியம் என்பது முறையாக இருக்க வேண்டும் என்பதே ஆகும்.

    குடியிருப்புகளில் பொது பயன்பாட்டுக்கான மின்சார இணைப்பு 1டி கட்டண விகித பட்டியலாக மாற்றப்பட வேண்டும். ஒரு குடும்பம் உள்ள வீடு அல்லது இடம் அல்லது குடியிருப்பில் கூடுதலாக இருக்கும் மின்சார இணைப்புகளை ஒன்றிணைக்க வேண்டும் அல்லது அவை 1டி கட்டண விகித பட்டியலாக மாற்றம் செய்ய வேண்டும்.

    அதாவது ஒரு மின்சார இணைப்பு மட்டுமே 1ஏ-வில் கட்டண விகித பட்டியலாக இருக்க வேண்டும். இது முறையாக தெளிவாக ஆய்வு செய்து அறியப்பட்டு பின்பு அமல்படுத்த வேண்டும் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

    • தமிழகத்தில் இதுவரை 2.66 கோடி மின் இணைப்புகளுடன் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டு உள்ளது.
    • தமிழகத்தில் சொந்த மின் உற்பத்தி 6 ஆயிரம் மெகாவாட் தயாரிப்பிற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

    கரூர்:

    தமிழ்நாட்டில் வீடு, கைத்தறி, விசைத்தறி மற்றும் விவசாய மின் இணைப்புகளுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் மானிய விலையில் மின்சாரம் வழங்கப்படுகிறது.

    அதாவது தமிழ்நாடு முழுக்க அனைத்து வீடுகளுக்கும் முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. அதேபோல விவசாயிகளுக்கும் நெசவாளர்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டின் மின் நுகர்வோர் குறித்து உரிய தரவுகள் இல்லாததால் ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்களை இணைக்கும் பணிகளை தமிழ்நாடு மின்வாரியம் தொடங்கியது.

    தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச மின்சாரத்தை பெற ஆதார் இணைப்பு அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல மின்சார கட்டணத்தை ஆன்லைன் வழியாக செலுத்தவும் ஆதார் மின் இணைப்பு கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பைக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டார்.

    அதன்படி, கடந்தாண்டு நவம்பர் 15-ந்தேதி முதல் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடங்கி நடைபெற்றது. இதற்காகச் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு ஆதார் மின் இணைப்பு பணிகள் நடைபெற்றன. முதலில் டிசம்பர் 31-ந்தேதிக்குள் ஆதாரை இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் அதுவே பிப்ரவரி 15-ந்தேதி வரை முதலில் நீட்டிக்கப்பட்ட நிலையில், அதன் பிறகு பிப்ரவரி 28-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது. பெரும்பாலானோர் தங்கள் ஆதாரை மின் இணைப்பு எண்ணுடன் இணைத்துவிட்ட போதிலும், இன்னும் சிலர் இணைக்காமல் இருந்தனர்.

    இன்றே ஆதார் மின் இணைப்பு எண்ணை இணைக்கக் கடைசி நாள் என்பதால் இதுவரை ஆதாரை மின் இணைப்பை இணைக்காதவர்கள் இணைத்துக் கொள்ளலாம். ஏற்கனவே கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில், இனிமேல் ஆதாருடன் மின் இணைப்பை இணைக்க கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்தநிலையில் கரூரில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கரூர் மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க வருகை தரும் இளைஞர் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். மேலும் மார்ச் 4-ந்தேதி நடைபெறும் அரசு விழாவில் ரூ.267 கோடி மதிப்பீட்டில் ஒரு லட்சத்து 22 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். பின்னர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 12 லட்சம் மரக்கன்றுகளை நடும் விழாவையும் தொடங்கி வைக்கிறார். பின்னர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் துறை சார்ந்த ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது.

    இதுவரை தமிழகத்தில் 2.66 கோடி மின் இணைப்புகளுடன் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 1.50 லட்சம் இணைப்புகளை இணைக்க வேண்டிய உள்ளது. இன்று மாலையுடன் ஆதார் எண் இணைக்கும் பணிக்கான கால அவகாசம் நிறைவடைகிறது.

    மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்காக ஏற்கனவே பலமுறை மக்களின் விருப்பத்தின் பேரிலும், வேண்டுகோளின் அடிப்படையிலும் அவகாசம் கொடுக்கப்பட்டதால் கூடுதல் அவகாசம் இனிமேல் தரப்படாது. எனவே இன்று மாலைக்குள் தங்களது மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்காத பயனாளிகள், விரைந்து ஆதார் எண்களை இணைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    குறுகிய காலத்தில் 2.66 கோடி பயனாளர்கள் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். ஏற்கனவே இருந்த சிறு சிறு பிரச்சனைகள் சரி செய்யப்பட்டு இணையதளம் மேம்படுத்தப்பட்டுள்ளது. எனவே ஆன்லைன் வாயிலாக மின் சேவைகளுக்கான பயன்பாட்டில் எந்த குறைபாடும் இருக்காது.

    சூரிய மின்சக்தியில் ராஜஸ்தான் முதல் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் முதன் முறையாக நேற்று அதிகபட்சமாக சூரிய மின்சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சொந்த மின் உற்பத்தி 6 ஆயிரம் மெகாவாட் தயாரிப்பிற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. திருவாரூரில் முதல் சூரிய மின் உற்பத்தி பூங்காவை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைக்க இருக்கிறார். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×