search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வீட்டின் உரிமையாளர்கள் எண்கள் இணைத்த பிறகு வாடகைதாரர்களின் ஆதாரை கேட்பதால் தேவையற்ற குழப்பம் நீடிப்பு
    X

    வீட்டின் உரிமையாளர்கள் எண்கள் இணைத்த பிறகு வாடகைதாரர்களின் ஆதாரை கேட்பதால் தேவையற்ற குழப்பம் நீடிப்பு

    • வாடகைக்கு குடியிருப்போர் ஒரு சிலர்தான் ஆதார் எண்களை கொடுத்தனர்.
    • வாடகைதாரர்கள் ஆதார் எண்களை இணைப்பதால் வீட்டின் உரிமையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பதை விளக்க வேண்டும் என்று வீட்டின் உரிமையாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள 2.68 கோடி மின் நுகர்வோரையும் ஆதாருடன் இணைக்கும் திட்டம் கடந்த 3 மாதமாக நடந்து முடிந்துள்ளது.

    மின் இணைப்புடன் ஆதார் எண்கள் இணைக்க அரசு 3 முறை கால அவகாசம் கொடுத்து கடந்த மாதம் 25-ந் தேதியுடன் அவகாசம் முடிந்தது. சுமார் 50 ஆயிரம் பேர் தவிர, 99 சதவீதம் பேர் மின் இணைப்புடன் ஆதாரை இணைத்துள்ளனர்.

    வீட்டின் உரிமையாளர்களே பெரும்பாலும் தங்களது வாடகை வீடுகளுக்கும் ஆதார் எண்களை கொடுத்து இணைத்தனர். ஒருவருக்கு சொந்தமாக 5 வீடுகள் இருந்தால் அனைத்திற்கும் வீட்டின் உரிமையாளர் ஒருவரின் ஆதார் எண்களை பெரும்பாலும் இணைத்தனர். வாடகைக்கு குடியிருப்போர் ஒரு சிலர்தான் ஆதார் எண்களை கொடுத்தனர்.

    இந்த நிலையில் வாடகை வீடுகளில் குடியிருப்பவர்களின் ஆதார் எண்களை இணைக்க வேண்டும் என்று தற்போது புதிய சர்ச்சையை கிளப்பு உள்ளனர். வாடகை வீடுகளுக்கும் வீட்டின் உரிமையாளர் கொடுத்த ஆதார் எண்களை ஏற்காமல் தற்போது வாடகை தாரர்களின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

    மின்வாரிய அதிகாரிகளுக்கு இந்த பணியை செய்து முடிக்க வேண்டும் என கூறப்பட்டதை அடுத்து தமிழகம் முழுவதும் மீண்டும் மின்வாரிய ஊழியர்கள் வீடு வீடாக ஆய்வு மேற் கொண்டு வருகின்றனர்.

    ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று வீட்டின் உரிமையாளரா, வாடகைதாரரா என கேள்வி கேட்டு வாடகை தாரராக இருந்தால் அந்த வீட்டின் மின் இணைப்புடன் அவரின் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர்.

    அவசர அவசரமாக ஆதார் எண்களை இணைக்க முயன்றபோது இதனை தனித்தனியாக மேற்கொண்டு இருக்கலாம்.

    வீட்டின் உரிமையாளர் குடியிருக்கும் வீட்டிற்கு அவரது ஆதார் எண்ணை மட்டும் இணைத்து இருக்கலாம். ஆனால் அப்போது வீட்டின் உரிமையாளரே அனைத்து வாடகை வீட்டிற்கும் தனது ஆதார் எண்ணை கொடுக்கலாம் எனக் கூறி இணைத்தனர்.

    இப்போது மீண்டும் வாடகைதாரர்களின் ஆதார் எண்களை கேட்டு வருகிறார்கள். இது வீட்டின் உரிமையாளர்களுக்கும் வாடகைக்கு குடியிருப்போருக்கும் பல சங்கடங்களை ஏற்படுத்தி வருகிறது என்று ஆதங்கப்படுகிறார்கள்.

    ஆதார் எண்கள் எந்த நோக்கத்திற்காக இணைக்கப்படுகிறது என்பதை மின்வாரியம் இது வரையில் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.

    இந்த நிலையில் தற்போது வாடகைதாரர்கள் ஆதாரை இணைக்கும் பணி வீதி வீதியாக நடந்து வருகிறது. வாடகைதாரர்கள் ஒரு வீட்டில் எத்தனை ஆண்டுகள் குடியிருப்பார்கள். எத்தனை மாதங்கள் குடியிருப்பார்கள் என்று சொல்ல முடியாது. இடம் மாறி சென்று கொண்டே இருந்தால் இந்த புள்ளி விவரம் முழுமை அடைய வாய்ப்பு இல்லை.

    எனவே, மின்வாரியம் இதுபற்றி தெளிவுபடுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். வாடகைதாரர்கள் ஆதார் எண்களை இணைப்பதால் வீட்டின் உரிமையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்பதை விளக்க வேண்டும் என்று வீட்டின் உரிமையாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    Next Story
    ×