search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மன் கி பாத்"

    • கடந்த சில நாட்களாக இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டு பல பகுதிகளில் அவதியடைந்தனர்.
    • உலகளாவிய நலனுக்கான உணர்வே இந்தியாவின் அடையாளம் மற்றும் இந்தியாவின் பலம்.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் மன் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.

    இன்று 103-வது மான் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார். அவர் கூறியதாவது:-

    கடந்த சில நாட்களாக இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டு பல பகுதிகளில் அவதியடைந்தனர். மலைப்பாங்கான பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது.

    இந்த பேரிடர்களுக்கு மத்தியில் மக்கள் அனைவரும் கூட்டு முயற்சியின் ஆற்றலை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தினர்.

    வெள்ளத்தின் போது நிவாரண பணிகளை மேற்கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் ராணுவத்துக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். இந்த உலகளாவிய நலனுக்கான உணர்வே இந்தியாவின் அடையாளம் மற்றும் இந்தியாவின் பலம்.

    இந்த மழைக் காலம் மரம் வளர்ப்பதற்கும், நீர் பாதுகாப்புக்கும் சமமாக முக்கியமானது. மக்கள் முழு விழிப்புணர்வு, பொறுப்புடன் நீர் பாதுகாப்புக்கான புதிய முயற்சிகளை மேற் கொண்டு வருகின்றனர்.

    சில நாட்களுக்கு முன்பு உத்தரபிரதேசத்தில் ஒரே நாளில் 30 கோடி மரக்கன்றுகள் நட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. இது பொது மக்களின் பங்கேற்பு, விழிப்புணர்வுக்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.

    அமெரிக்கா, நூற்றுக்கும் மேற்பட்ட அரிய மற்றும் பழமையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்துள்ளது. இந்த கலைப்பொருட்கள் 2,500 ஆண்டுகள் பழமையானவை.

    இவை டெரகோட்டா, கல், உலோகம், மரம் ஆகியவற்றை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டவை. இதில் 11-ம் நூற்றாண்டின் அழகிய மணற்கல் சிற்பமும் ஒன்று. இது மத்திய பிரதேசத்தின் அப்சரா நடனத்தின் கலைப்படைப்பாகும். சோழர் காலத்தின் பல சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன. தேவி மற்றும் முருகன் சிலைகள் 12-ம் நூற்றாண்டை சேர்ந்தவை. இவை தமிழ்நாட்டின் வளமான கலாச்சாரத்துடன் தொடர்புடையவை.

    4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்கள் ஆண் துணை இல்லாமல் ஹஜ் பயணம் செய்ய சவுதி அரேபியா அனுமதி அளித்துள்ளது. இதற்காக கொள்கைகளில் மாற்றம் செய்த அந்நாட்டு அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    ரூ.12 ஆயிரம் கோடி மதிப்புள்ள 10 லட்சம் கிலோ போதைப் பொருட்களை அழித்து இந்தியா சாதனை படைத்துள்ளது.

    சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நாம் அனைவரும் விழாவை முழு உற்சாகத்துடன் கொண்டாடுகிறோம். சுமார் 2 லட்சம் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இதில் அதிக அளவில் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

    சுதந்திர தினத்தை முன்னிட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    சுதந்திர தின விழாவுக்கு மத்தியில் நாட்டில் மற்றொரு பெரிய பிரசாரம் தொடங்கப்பட உள்ளது. நமது துணிச்சலான தியாகிகளை கவுரவிக்கும் வகையில் பிரசாரம் தொடங்கப்படும்.

    வீரமரணம் அடைந்த வீரர்களை கவுரவிக்கும் வகையிலும், நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தவர்களை நினைவு கூறும் வகையிலும் நாடு முழுவதும் 'என் மண் என் நாடு' என்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

    இந்த ஆளுமைகளின் நினைவாக லட்சக்கணக்கான கிராம பஞ்சாயத்துகளில் சிறப்பு கல்வெட்டுகள் நிறுவப்படும். இந்த பிரசாரத்தின் போது அம்ரித கலச யாத்திரை நடத்தப்படும்.

    நாட்டின் ஒவ்வொரு மூலையில் இருந்தும் 7,500 கலசங்களில் மண் சுமந்து செல்லும் இந்த கலச யாத்திரை தலைநகர் டெல்லியை சென்றடையும். இந்த பயணத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மரக் கன்றுகளும் கொண்டு வரப்படும்.

    தேசிய போர் நினைவிடம் அருகே 7,500 கலசங்களில் வரும் மண் மற்றும் மரக்கன்றுகளை வைத்து 'அமிர்த வாடிகர்' கட்டப்படும். இது நாட்டின் மாபெரும் அடையாளமாக மாறும்.

    கடந்த ஆண்டை போலவே இந்த முறையும் ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ண கொடியை ஏற்றி இந்த பாரம்பரியத்தை தொடர வேண்டும். இதன் மூலம் நமது கடமைகளை உணர்வோம். நாட்டின் சுதந்திரத்திற்காக செய்த எண்ணற்ற தியாகங்களை உணர்வோம். சுதந்திரத்தின் மதிப்பை உணர்வோம்.

    இந்த முயற்சிகளில் ஒவ்வொரு மக்களும் இணைய வேண்டும். இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ள சுதந்திர தின விழாவில் அனைவரும் அங்கம் வகிப்போம்.

    சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்தவர்களை நாம் எப்போதும் நினைவு கூற வேண்டும். அவர்களின் கனவுகளை நனவாக்க இரவு-பகலாக உழைக்க வேண்டும். மக்களின் இந்த கடின உழைப்பையும், கூட்டு முயற்சியையும் முன்னுக்கு கொண்டு வருவதற்கான ஒரு இணைப்பு பாலமே இந்த மான் கி பாத் நிகழ்ச்சி ஆகும்.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

    • சத்ரபதி சிவாஜியின் நிர்வாகம் மற்றும் தலைமைத்துவத் திறன்களில் இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்.
    • யோகாவை அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாக மாற்ற உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி, ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் மன்கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் பேசி வருகிறார்.

    இந்த மாதம் 21-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை அமெரிக்கா மற்றும் எகிப்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதால் இன்றே 102-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசினார். அதில் அவர் கூறியதாவது:-

    அடுத்த வாரம் நான் அமெரிக்காவில் இருப்பேன் என்பது உங்களுக்கு தெரியும். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன். அமெரிக்கா செல்வதற்கு முன் உங்களிடம் பேச விரும்புகிறேன். பிபோர்ஜோய் புயல், குஜராத்தின் கட்ச்சில் நிறைய அழிவை ஏற்படுத்தியது.

    ஆனால் கட்ச் சூறாவளியை எதிர்கொண்ட தைரியமும், தயார்நிலையும் முன்னோடியில்லாதது. சூறாவளி போன்ற கடினமான மற்றும் மிகப்பெரிய கடினமான மற்றும் மிகப் பெரிய சவால்களை சமாளிக்க இந்த உத்வேகம் இந்தியர்களுக்கு உதவுகிறது.

    பிபோர்ஜோய் புயலால் ஏற்பட்ட பேரழிவில் இருந்து கட்ச் மக்கள் விரைவில் மீண்டு வருவார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது. இயற்கை பேரிடர்களை எதிர்த்து போராட ஒரு சிறந்த வழி உள்ளது. அது இயற்கையை பாதுகாப்பது. இது பருவமழை காலத்தில் நமது பொறுப்பை இன்னும் அதிகரிக்கிறது. பருவமழை தொடங்கியுள்ள நிலையில் ஒவ்வொரு துளி மழை நீரையும் சேகரிக்க வேண்டும். இயற்கை பேரிடர்களை தடுத்து நிறுத்த முடியாது. ஆனால் அதில் இருந்து விரைவாக மீள முடியும்.

    இந்த ஆண்டு நியூயார்க்கில் உள்ள ஐ.நா.சபை தலைமையகத்தில் நடைபெறும் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்க எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. யோகாவை உங்களது வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும். அதை அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாக மாற்ற உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

    இந்தியா, ஜனநாயகத்தின் தாய். நமது ஜனநாயக மதிப்புகளை உயர்வாக கொண்டுள்ளோம். எனவே எமர்ஜென்சி விதிக்கப்பட்ட ஜூன் 25-ந்தேதியை நாம் மறக்க முடியாது. இந்திய வரலாற்றில் எமர்ஜென்சி ஒரு இருண்ட காலம். அதற்கு எதிராக லட்சக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தினர்.

    ஜனநாயகத்தை ஆதரிப்பவர்கள் அன்றைய காலத்தில் எவ்வளவு சித்ரவதை செய்யப்பட்டார்கள் என்பதை நினைத்தால் இன்றும் மனம் நடுங்குகிறது. காசநோயை 2025-ம் ஆண்டுக்குள் ஒழிக்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த இலக்கை அடைவதில் இளைஞர்களும் பங்களிக்கின்றனர்.

    காசநோய்க்கு எதிரான இயக்கம் கிராமப்புறங்களில் ஆயிரக்கணக்கான நோயாளிகளை தத்தெடுத்து வருகிறது. இதுவே இந்தியாவின் உண்மையான பலமாகும்.

    சத்ரபதி சிவாஜியின் நிர்வாகம் மற்றும் தலைமைத்துவத் திறன்களில் இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். அவரது நீர் மேலாண்மை, கடற்படை இன்றும் இந்தியாவின் பெருமையாக உள்ளது. அவர் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய கோட்டைகள் இன்று வரை கம்பீரமாக நிற்கின்றன.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    • இந்தியாவில் நமது கடந்த காலத்தை வெளிப்படுத்தும் பல அருங்காட்சியகங்கள் உள்ளன.
    • சுதந்திர போராட்டத்தில் பழங்குடியினர் பங்களிப்பை நினைவுகூறும் வகையில் 10 புதிய அருங்காட்சியகங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி, ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் மன் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார்.

    இன்று 101-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி உரையாடினார். அவர் பேசியதாவது:-

    இன்றைய மன் கி பாத் நிகழ்ச்சி அதன் இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தை குறிக்கிறது. கடந்த மாதம் நாடு முழுவதும் ஒன்று கூடினர். இது ஒளிபரப்பப்பட்டபோது உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான மக்கள் வெவ்வேறு நேரத்தில் இருந்தாலும் அதை கேட்டனர். இந்தியாவின் பலம் அதன் பன்முகத்தன்மையில் உள்ளது.

    நாட்டின் பன்முகத்தன்மையை மேம்படுத்துவதற்கும், மக்களுடன் மக்கள் தொடர்பு கொள்வதற்கும் கல்வி அமைச்சகத்தின் இளைஞர் பரிமாற்ற திட்டமான யுவ சங்கம் ஒரு சிறந்த முயற்சி ஆகும்.

    இந்த திட்டம் நாட்டின் ஒரு பகுதியை சேர்ந்த மாணவர்கள் மற்ற பகுதிகளுக்கு சென்று அங்குள்ள கலாச்சாரம், பாரம்பரியத்தை புரிந்து கொள்ளும் வாய்ப்பு வழங்குகிறது.

    இந்த முன்முயற்சியின் நோக்கம் மக்களிடையேயான தொடர்பை ஊக்குவிப்பதாகும். இந்த திட்டத்தில் முதல் கட்டமாக 22 மாநிலங்களுக்கு சுமார் 1200 மாணவர்கள் வருகை தந்துள்ளனர்.

    மாபெரும் சுதந்திர போராட்ட வீரர் வீர் சாவர்க்கரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவரது தியாகம், தைரியம், உறுதிப்பாடு இன்றும் நம் அனைவரையும் ஊக்குவிக்கிறது. அவரது அச்சமற்ற சுய மரியாதை குணத்தால் அடிமை மனப்பான்மையை சகித்து கொள்ள முடியவில்லை. சுதந்திர இயக்கத்தில் மட்டு மல்ல, சமூக சமத்துவம் மற்றும் சமூக நீதிக்காக வீர் சாவர்க்கர் என்ன செய்தார் என்று இன்று நினைவு கூறப்படுகிறது.

    சில நாட்களுக்கு முன்பு இந்தியாவில் சர்வதேச அருங்காட்சியக கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தியாவில் நமது கடந்த காலத்தை வெளிப்படுத்தும் பல அருங்காட்சியகங்கள் உள்ளன.

    குருகிராமில் மியூசியோ கேமரா என்ற தனித்துவமான அருங்காட்சியம் உள்ளது. 1860-ம் ஆண்டுக்கு முந்தைய 8 ஆயிரம் கேமராக்களின் தொகுப்பு உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அருங்காட்சியம் தெய்வீகத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் அருங்காட்சியகம் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்களை கொண்டு உள்ளது.

    சுதந்திர போராட்டத்தில் பழங்குடியினர் பங்களிப்பை நினைவுகூறும் வகையில் 10 புதிய அருங்காட்சியகங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு மோடி பேசினார்.

    • சண்டிகார் மாநிலத்தில் உள்ளது பிஜிமர் தேசிய நர்சிங் கல்வி மையம்.
    • கடந்த 30-ந் தேதி பிரதமர் மோடி பேசிய 100-வது ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி ஒலிபரப்பு செய்யப்பட்டது.

    சண்டிகார் :

    சண்டிகார் மாநிலத்தில் உள்ளது பிஜிமர் தேசிய நர்சிங் கல்வி மையம். மத்திய அரசு கல்வி நிறுவனமான இங்கு கடந்த 30-ந் தேதி பிரதமர் மோடி வானொலியில் பேசிய 100-வது 'மன் கி பாத்' நிகழ்ச்சி ஒலிபரப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கல்லூரியில் படிக்கும் முதல் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவ மாணவிகள் கண்டிப்பாக இந்த ஒலிபரப்பு நிகழ்ச்சியை கேட்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. கலந்து கொள்ளாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது.

    இருந்தபோதிலும், 36 மாணவிகள், அந்த ஒலிபரப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. அவர்களில் 28 பேர் மூன்றாம் ஆண்டு மாணவிகள், 8 பேர் முதலாம் ஆண்டு மாணவிகள் என்று தெரியவந்தது.இதையடுத்து இந்த மாணவிகள் மீது நடவடிக்கை எடுக்க நோட்டீசு ஒட்டப்பட்டது. அவர்கள் எச்சரிக்கப்பட்டபடி, ஒரு வாரத்திற்கு விடுதியைவிட்டு வெளியே எங்கும் செல்ல முடியாது என்று கல்லூரி அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இந்த உத்தரவு சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

    • உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் ஒரு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திரளான மாணவர்கள் பங்கு பெற்றனர்.
    • பள்ளி நிர்வாகத்தின் வாட்ஸ்-அப் குரூப்பில் வந்த உத்தரவின் ஸ்கிரின்ஷாட்டை காட்டி பெற்றோர் புகார் செய்தனர்.

    டேராடூன்:

    பிரதமர் மோடியின் மனதின் குரல் (மன் கி பாத்) 100-வது நிகழ்ச்சி கடந்த 30-ந்தேதி நடந்தது. இதையொட்டி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் ஒரு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திரளான மாணவர்கள் பங்கு பெற்றனர்.

    அதே நேரம் இந்த நிகழ்ச்சிக்காக பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டதாகவும், அல்லது மருத்துவ சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என டேராடூனின் ஜி.ஆர்.டி. நிரஞ்சன் பூர் அகடாமி உத்தரவிடப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்தின் வாட்ஸ்-அப் குரூப்பில் வந்த உத்தரவின் ஸ்கிரின்ஷாட்டை காட்டி பெற்றோர் புகார் செய்தனர்.

    இது தொடர்பாக பெற்றோர் மற்றும் மாணவர்கள் உரிமைக்கான தேசிய சங்கத்தில் தேசிய தலைவர் ஆரிப்கான் டேராடூன் முதன்மை கல்வி அதிகாரிக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

    • பிரதமரின் மனதின் குரல் 100-வது நிகழ்ச்சி, மிகுந்த ஆரவாரத்துடன் அறிவிக்கப்படுகிறது.
    • ஐ.ஐ.எம். கல்வி நிறுவனம், மனதின் குரல் நிகழ்ச்சியின் தாக்கம் பற்றி ஆய்வு நடத்துகிறது.

    புதுடெல்லி :

    பிரதமர் மோடியின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பப்பட்டது. இதையொட்டி, அவரை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

    அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    பிரதமரின் மனதின் குரல் 100-வது நிகழ்ச்சி, மிகுந்த ஆரவாரத்துடன் அறிவிக்கப்படுகிறது. ஆனால், சீனா, அதானி, அதிகரித்து வரும் பொருளாதார சமத்துவமின்மை, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல், மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை, விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது, கர்நாடகா போன்ற பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் நடக்கும் ஊழல், பா.ஜனதாவுடன் மோசடியாளர்களுக்கு உள்ள நெருக்கம் போன்ற முக்கியமான பிரச்சினைகளில் 'மவுனத்தின் குரல்' ஆக அவர் இருந்து விடுகிறார்.

    ரோதக்கில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனம், மனதின் குரல் நிகழ்ச்சியின் தாக்கம் பற்றி ஆய்வு நடத்துகிறது.

    ஆனால், அதன் இயக்குனரின் கல்வித்தகுதி பற்றி மத்திய கல்வி அமைச்சகமே கேள்வி எழுப்பி இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மெரினா நடுக்குப்பத்தில் பிரதமரின் நிகழ்ச்சியை பொதுமக்கள் நேரில் கண்டுகளிக்க பிரமாண்ட பந்தல் போடப்பட்டு எல்.இ.டி. திரையும் அமைக்கப்பட்டிருந்தது.
    • பா.ஜனதாவை சேர்ந்த பெண்கள் அதிகாலையிலேயே சமையலில் ஈடுபட்டனர்.

    பிரதமர் மோடியின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சியை பா.ஜனதாவினர் இன்று திருவிழா போல் கொண்டாடினார்கள்.

    சென்னை மெரினா நடுக்குப்பத்தில் பிரதமரின் நிகழ்ச்சியை பொதுமக்கள் நேரில் கண்டுகளிக்க பிரமாண்ட பந்தல் போடப்பட்டு எல்.இ.டி. திரையும் அமைக்கப்பட்டிருந்தது.

    நிகழ்ச்சி முடிந்ததும் அனைவருக்கும் மீன் சாப்பாடு விருந்து அளிக்கப்பட்டது. இதற்காக பா.ஜனதாவை சேர்ந்த பெண்கள் அதிகாலையிலேயே சமையலில் ஈடுபட்டனர்.

    மாநில செயலாளர் சதீஷ்குமார் என்பவர் மனைவி சுபசித்ரா. இவரும் கட்சி பொறுப்பில் இருக்கிறார். தனியார் பள்ளியில் ஆசிரியை வேலைபார்த்த சுபசித்ரா கட்சி ஈடுபாடு காரணமாக கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட வேலையை ராஜினாமா செய்தார். தேர்தலிலும் வெற்றி பெறவில்லை.

    அதன்பிறகு மீன் உணவகம் என்ற பெயரில் சிறிய உணவகத்தை தொடங்கினார். அதுவும் கொரோனாவுடன் மூடப்பட்டது. வாழ்க்கையோடு போராடினாலும் கட்சிக்காகவும் போராடும் இந்த தம்பதி இன்று விருந்துக்கும் சமையல்காரர்கள் யாரையும் அழைக்கவில்லை. 25-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்று சேர்ந்து சமையலில் ஈடுபட்டார்கள்.

    மீன்களை கழுவி சுத்தப்படுத்துதல், உணவு தயாரித்தல் என்று உணவு கூடமே பெண்கள் கைவண்ணத்தில் களை கட்டியது. மீன் விருந்து பற்றி சுபசித்ரா கூறியதாவது:-

    தாமரை சொந்தங்களுக்கு என் கையினால் சமைத்து விருந்து கொடுக்க ஆசை. எனவே சமையல்காரர்களை அழைக்கவில்லை. நாங்களே செய்கிறோம்.

    நண்டு சூப், இறால் தொக்கு, வஞ்சிரம் வறுவல், பாறை மீன் குழம்பு தயார் செய்துள்ளோம் என்றார்.

    விருந்தில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, சுதாகர் ரெட்டி, நடிகை நமீதா, நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., கரு.நாகராஜன் உள்ளிட்ட பா.ஜனதா நிர்வாகிகளும் பொதுமக்களுடன் அமர்ந்து விருந்தை ருசித்து சாப்பிட்டனர்.

    சூப், வறுவல், தொக்கு எல்லாவற்றையும் ரசித்து சாப்பிட்டனர். சுமார் 1000 பேருக்கு விருந்து வழங்கப்பட்டது.

    • பிரதமர் நரேந்திர மோடி 100-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் தமிழக பழங்குடியின பெண்களை பாராட்டினார்.
    • தமிழ்நாட்டில் 20 ஆயிரம் பெண்கள் ஒன்றிணைந்து வேலூரில் உள்ள நாக நதிக்கு புத்துயிர் அளித்தனர்.

    பிரதமர் நரேந்திர மோடி 100-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் தமிழக பழங்குடியின பெண்களை பாராட்டினார். இது தொடர்பாக அவர் தனது உரையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக பழங்குடியின பெண்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த டெரகோட்டா குவளைகளை ஏற்றுமதி செய்தனர். தமிழ்நாட்டில் 20 ஆயிரம் பெண்கள் ஒன்றிணைந்து வேலூரில் உள்ள நாக நதிக்கு புத்துயிர் அளித்தனர். பல பரப்புரைகள் பெண்களால் வழிநடத்தப்பட்டு முயற்சிகளை முன்னுக்கு கொண்டு வர இந்த நிகழ்ச்சி சிறந்த தளமாக உள்ளது.

    நாட்டின் பெண் சக்தியின் நூற்றுக்கணக்கான எழுச்சியூட்டும் கதைகளை மனதின் குரலில் குறிப்பிட்டு இருப்பது எனக்கு நிறைவான விஷயமாகும்.

    நமது ராணுவமாக இருந்தாலும் சரி, விளையாட்டு உலகமாக இருந்தாலும் சரி பெண்களின் சாதனைகளை பற்றி நான் பேசும்போது அது அதிகமாக பாராட்டப்பட்டது.

    இவ்வாறு மோடி பேசினார்.

    • கிண்டி கவர்னர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் பிரம்மாண்ட சிறப்பு எல்.இ.டி திரையில் பிரதமர் மோடியின் 100-வது மனதின் குரல் ஒலிபரப்பு செய்யப்பட்டது.
    • பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி தமிழில் ஒலிபரப்பப்பட்டது.

    சென்னை:

    சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் பிரதமர் மோடியின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சி ஒலிபரப்பு நடந்தது. கிண்டி கவர்னர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் இதற்காக பிரம்மாண்ட சிறப்பு எல்.இ.டி திரையில் பிரதமர் மோடியின் 100-வது மனதின் குரல் ஒலிபரப்பு செய்யப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி தமிழில் ஒலிபரப்பப்பட்டது. இதில் முக்கிய பிரமுகர்கள், முன்னாள் ராணுவத்தினர், முன்னாள் போலீஸ் அதிகாரி நடராஜ், ஐசரி கணேஷ், உள்பட 150க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

    • மன் கி பாத் நிகழ்ச்சி எனக்கு ஆன்மீக பயணமாகும். மக்களுடன் தொடர்பு கொள்ள என்னை அனுமதித்தது.
    • இயற்கை வளங்களான நீர்நிலைகள், மலைகள், புனித தலங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடியின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பு செய்யப்பட்டது. காலை 11 மணி முதல் 11.30 மணி வரை அவரது மன் கி பாத் நிகழ்ச்சி ஒலிபரப்பானது.

    100-வது அத்தியாயம் என்பதால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அவர் இந்தியில் உரையாற்றியது 22 இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு நாடு முழுவதும் மக்கள் கேட்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதோடு ஆங்கிலம் உள்ளிட்ட 12 வெளிநாட்டு மொழிகளிலும் ஒலிபரப்பானது.

    மனதின் குரலின் வரலாற்று சிறப்புமிக்க 100-வது நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றியதாவது:-

    மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி கோடிக்கணக்கான இந்தியர்களின் மன் கி பாத் பிரதிபலிப்பாகும். இது அவர்களின் உணர்வுகளின் வெளிப்பாடாகும்.

    இந்த நிகழ்ச்சி நேர்மையான கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்வதற்கான மிகச் சிறந்த வழித்தடமாக இருந்துள்ளது. நிகழ்ச்சி குறித்த நாட்டு மக்களின் கடிதங்களை படித்து பார்த்தேன். எனக்கு நெகிழ்ச்சியை கொடுத்தது.

    மனதின் குரல் நிகழ்ச்சி மக்களின் நல்ல செயல்களை கொண்டாட கூடிய இடமாக இருக்கிறது. சாமானிய மக்களுடன் இணைவதற்காக ஒரு வழியை இந்த நிகழ்ச்சி எனக்கு அளித்தது. ஒவ்வொரு முறை பேசும் போதும் நாட்டு மக்களிடம் இருந்து விலகாமல் உடன் இருப்பது போல் எண்ணம் வரும்.

    100-வது நிகழ்ச்சியை எட்டியதற்கு காரணமாக இருந்த நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இந்த நிகழ்ச்சி, நான் என்ற எண்ணத்தில் இருந்து நாம் என்ற எண்ணத்தை எனக்கு கொடுத்துள்ளது.

    மன் கி பாத் நிகழ்ச்சி எனக்கு ஆன்மீக பயணமாகும். மக்களுடன் தொடர்பு கொள்ள என்னை அனுமதித்தது. தூய்மை இந்தியா உள்ளிட்ட மன் கி பாத்தில் எழுப்பப்பட்ட பிரச்சினைகள் மக்கள் இயக்கங்களாக மாறியது.

    மாதாந்திர வானொலி ஒலிபரப்பு மற்றவர்களிடம் இருந்து கற்கும் முக்கிய ஊடகமாக மாறியுள்ளது. நான் உங்களிடம் இருந்து ஒரு போதும் துண்டிக்கப்படவில்லை.

    இயற்கை வளங்களான நீர்நிலைகள், மலைகள், புனித தலங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இயற்கை வளங்களை சுத்தமாக வைத்திருப்பது வளர்ந்து வரும் சுற்றுலா துறைக்கு மிகவும் உதவும்.

    வெளிநாடு சுற்றுலா செல்வதற்கு முன்னர் நம் நாட்டில் உள்ள 15 இடங்களுக்கு நாம் செல்ல வேண்டும். சுத்தமான சியாச்சின், பிளாஸ்டிக் மற்றும் இ கழிவுகள் ஆகியவற்றை பற்றி தொடர்ந்து பேசி வருகிறோம். மரம் நடுவது, நீர் நிலைகளை சுத்தம் செய்வது, குழந்தைகளின் கல்வி என பல விஷயங்கள் குறித்து ஏற்கனவே பேசியுள்ளேன்.

    இவ்வாறு மோடி தனது உரையில் கூறியுள்ளார்.

    • மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் பெருமை பெற்ற பூனம்-பிரமோத்குமார் தம்பதிகள் தனது குழந்தைக்கும் ‘மன் கி பாத்’ என்று பெயர் சூட்டினார்கள்.
    • பூனம் பேசும் போது, பிரதமர் மோடி எனது பெயரை குறிப்பிட்டு பேசியது கடினமாக உழைக்கவும், வாழ்க்கையில் அதிக உயரங்களை எட்டவும் உத்வேகத்தை அளிப்பதாக கூறினார்.

    பிரதமர் மோடியின் மன தின் குரல் வானொலி நிகழ்ச்சியின் 100-வது பகுதி இன்று நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதும் வெளிச்சத்துக்கு வராத சாதனையாளர்கள், செயற்கரிய செயல்கள் செய்தவர்கள் என்று பலதரப்பினரையும் அடையாளம் கண்டு நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தி கவுரவித்து வருகிறார்.

    அவ்வாறு பாராட்டப்பட்டவர்களில் உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர்கெரி மாவட்டத்தை சேர்ந்த பூனம் என்ற பெண்ணும் ஒருவர். இவர் கழிவு வாழைத்தண்டுகளில் இருந்து பல்வேறு விதமான பொருட்களை தயாரித்து வருகிறார். இதன் மூலம் சுயஉதவிக்குழு ஒன்றையும் உருவாக்கி பல பெண்களுக்கு வேலை வாய்ப்பும் வழங்கி இருக்கிறார். ஒரு சாமானிய பெண்ணின் இந்த முயற்சியையும், உழைப்பையும் பாராட்டிய மோடி அவருடன் உரையாடவும் செய்தார்.

    இவ்வாறு மோடி பாராட்டியவர்கள் அனைவரையும் கடந்த 26-ந்தேதி டெல்லிக்கு வரவழைத்து துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் தலைமையில் மாநாடு நடத்தப்பட்டது.

    இதில் பூனமும் அவரது கணவர் பிரமோத்குமார் ராஜ்புத்துடன் கலந்து கொண்டார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பூனத்துக்கு நிகழ்ச்சியில் இருந்தபோதே பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அவரை ஆர்.எம்.எல். ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

    மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் பெருமை பெற்ற பூனம்-பிரமோத்குமார் தம்பதிகள் தனது குழந்தைக்கும் 'மன் கி பாத்' என்று பெயர் சூட்டினார்கள்.

    பூனம் தம்பதியை மத்திய செய்தித் துறை மந்திரி அனு ராக் சிங் தாக்கூர் மற்றும் அதிகாரிகள் வாழ்த்தினார்கள். டெல்லியில் நடை பெற்ற மாநாட்டில் பூனம் பேசும் போது, பிரதமர் மோடி எனது பெயரை குறிப்பிட்டு பேசியது கடினமாக உழைக்கவும், வாழ்க்கையில் அதிக உயரங்களை எட்டவும் உத்வேகத்தை அளிப்பதாக கூறினார்.

    • இந்தியாவிற்கு ஆக்சிஜன் அளிப்பவர்களாக பெண்கள் உள்ளனர்.
    • அடுத்தவர் உயிரை காப்பாற்ற தங்கள் உடல் உறுப்பை தானம் செய்ய முன் வருபவர்கள் கடவுளுக்கு சமமானவர்கள்.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் மன் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.

    இன்று அவர் 99-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    மன் கி பாத்தின் 100-வது நிகழ்ச்சி குறித்து நாட்டு மக்களிடையே மிகுந்த உற்சாகம் இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. 100-வது நிகழ்ச்சி தொடர்பான உங்கள் ஆலோசனைகளையும் எண்ணங்களையும் அறிய ஆவலாக உள்ளேன்.

    இந்தியாவிற்கு ஆக்சிஜன் அளிப்பவர்களாக பெண்கள் உள்ளனர். அவர்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகிறார்கள். சமீபத்தில் வந்தே பாரத் ரெயிலை ஆசியாவின் முதல் பெண் டிரைவர் சுரேகா யாதவ் இயக்கினார்.

    சியாச்சினில் முதல் பெண் அதிகாரியாக கேப்டன் ஷிவா சவுகான் பணியமர்த்தப்பட்டார். நாகாலாந்தில் முதல் முறையாக எம்.எல்.ஏ.க்களாக 2 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆஸ்கர் விருதை பெண் இயக்குனர் வென்றுள்ளார்.

    இந்தியாவில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    அடுத்தவர் உயிரை காப்பாற்ற தங்கள் உடல் உறுப்பை தானம் செய்ய முன் வருபவர்கள் கடவுளுக்கு சமமானவர்கள். உறுப்புகளை பெற்றவர்கள், தானம் செய்தவர்களை கடவுளாக பார்க்கிறார்கள்.

    பஞ்சாப்பில் சுக்பீர்சிங்-சுக்பீத் கவுர் தம்பதிக்கு பிறந்த பெண் குழந்தை 39 நாட்களில் உலகை விட்டு பிரிந்தார். அந்த மகளின் உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டது.

    சில மாதங்களுக்கு முன்பு காசி-தமிழ் சங்கமத்தின் போது காசிக்கும் தமிழ் நாட்டுக்கும் இடையே பல நூற்றாண்டுகள் பழமையான வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகள் கொண்டாடப்பட்டன. நாம் ஒருவரையொருவர் தெரிந்து, அறிந்து கொள்ளும் போது ஒற்றுமை உணர்வு வலுவடைகிறது.

    இந்த ஒற்றுமை உணர்வுடன் சவுராஷ்டிரா-தமிழ் சங்கமம் அடுத்த மாதம் குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் நடை பெற உள்ளது. சவுராஷ்டிரா-தமிழ் சங்கமம் ஏப்ரல் 17 முதல் 30-ந்தேதி வரை நடைபெறும்.

    குஜராத்தில் உள்ள சவுராஷ்டிராவுக்கும், தமிழ் நாட்டுக்கும் என்ன தொடர்பு? என்று சிலர் ஆச்சரியப்படுவார்கள். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சவுராஷ்டிராவை சேர்ந்த பலர் தமிழ்நாட்டின் பகுதிகளில் குடியேறினர். இவர்கள் இன்றும் சவுராஷ்டிரா தமிழர் என்று அழைக்கப்படுகிறார்கள்.

    இந்நிகழ்ச்சி குறித்து தமிழகத்தை சேர்ந்த பலர் எனக்கு பாராட்டு கடிதங்கள் எழுதியுள்ளனர். மதுரையில் வசிக்கும் ஜெயச்சந்திரன் எழுதிள்ள கடிதத்தில், ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு சவுராஷ்டிரா-தமிழ் உறவுகளை பற்றி முதன் முறையாக ஒருவர் சிந்தித்து, சவுராஷ்டிராவில் இருந்து தமிழ்நாட்டில் குடியேறிய மக்களை முன்னுக்கு கொண்டு வந்துள்ளார். இவரது இந்த வார்த்தைகள் ஆயிரக்கணக்கான தமிழ் சகோதர, சகோதரிகளின் வெளிப்பாடு.

    நாட்டின் சில பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். சுகாதாரமான சூழலை மக்கள் அமைத்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×