search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காசநோயை 2025-ம் ஆண்டுக்குள் ஒழிக்க இலக்கு- மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு
    X

    காசநோயை 2025-ம் ஆண்டுக்குள் ஒழிக்க இலக்கு- 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

    • சத்ரபதி சிவாஜியின் நிர்வாகம் மற்றும் தலைமைத்துவத் திறன்களில் இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்.
    • யோகாவை அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாக மாற்ற உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி, ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் மன்கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் பேசி வருகிறார்.

    இந்த மாதம் 21-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை அமெரிக்கா மற்றும் எகிப்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதால் இன்றே 102-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசினார். அதில் அவர் கூறியதாவது:-

    அடுத்த வாரம் நான் அமெரிக்காவில் இருப்பேன் என்பது உங்களுக்கு தெரியும். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன். அமெரிக்கா செல்வதற்கு முன் உங்களிடம் பேச விரும்புகிறேன். பிபோர்ஜோய் புயல், குஜராத்தின் கட்ச்சில் நிறைய அழிவை ஏற்படுத்தியது.

    ஆனால் கட்ச் சூறாவளியை எதிர்கொண்ட தைரியமும், தயார்நிலையும் முன்னோடியில்லாதது. சூறாவளி போன்ற கடினமான மற்றும் மிகப்பெரிய கடினமான மற்றும் மிகப் பெரிய சவால்களை சமாளிக்க இந்த உத்வேகம் இந்தியர்களுக்கு உதவுகிறது.

    பிபோர்ஜோய் புயலால் ஏற்பட்ட பேரழிவில் இருந்து கட்ச் மக்கள் விரைவில் மீண்டு வருவார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது. இயற்கை பேரிடர்களை எதிர்த்து போராட ஒரு சிறந்த வழி உள்ளது. அது இயற்கையை பாதுகாப்பது. இது பருவமழை காலத்தில் நமது பொறுப்பை இன்னும் அதிகரிக்கிறது. பருவமழை தொடங்கியுள்ள நிலையில் ஒவ்வொரு துளி மழை நீரையும் சேகரிக்க வேண்டும். இயற்கை பேரிடர்களை தடுத்து நிறுத்த முடியாது. ஆனால் அதில் இருந்து விரைவாக மீள முடியும்.

    இந்த ஆண்டு நியூயார்க்கில் உள்ள ஐ.நா.சபை தலைமையகத்தில் நடைபெறும் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்க எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. யோகாவை உங்களது வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும். அதை அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாக மாற்ற உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

    இந்தியா, ஜனநாயகத்தின் தாய். நமது ஜனநாயக மதிப்புகளை உயர்வாக கொண்டுள்ளோம். எனவே எமர்ஜென்சி விதிக்கப்பட்ட ஜூன் 25-ந்தேதியை நாம் மறக்க முடியாது. இந்திய வரலாற்றில் எமர்ஜென்சி ஒரு இருண்ட காலம். அதற்கு எதிராக லட்சக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தினர்.

    ஜனநாயகத்தை ஆதரிப்பவர்கள் அன்றைய காலத்தில் எவ்வளவு சித்ரவதை செய்யப்பட்டார்கள் என்பதை நினைத்தால் இன்றும் மனம் நடுங்குகிறது. காசநோயை 2025-ம் ஆண்டுக்குள் ஒழிக்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த இலக்கை அடைவதில் இளைஞர்களும் பங்களிக்கின்றனர்.

    காசநோய்க்கு எதிரான இயக்கம் கிராமப்புறங்களில் ஆயிரக்கணக்கான நோயாளிகளை தத்தெடுத்து வருகிறது. இதுவே இந்தியாவின் உண்மையான பலமாகும்.

    சத்ரபதி சிவாஜியின் நிர்வாகம் மற்றும் தலைமைத்துவத் திறன்களில் இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். அவரது நீர் மேலாண்மை, கடற்படை இன்றும் இந்தியாவின் பெருமையாக உள்ளது. அவர் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய கோட்டைகள் இன்று வரை கம்பீரமாக நிற்கின்றன.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    Next Story
    ×