search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகராட்சி கூட்டம்"

    • திருச்செங்கோடு நகராட்சி கூட்டம் நேற்று நகராட்சி கூட்டரங்கில் நடந்தது.
    • குறுக்கிட்ட ஆணையாளர் கணேசன், நகராட்சி கூட்டத்தில் கண்ணிய குறைவான வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தினார்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு நகராட்சி கூட்டம் நேற்று நகராட்சி கூட்டரங்கில் நடந்தது. நகராட்சி தலைவர் நளினி சுரேஷ்பாபு கூட்டத்தை தொடங்கி வைத்தார்.

    கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து 13-வது வார்டு கவுன்சிலர் சினேகா எழுந்து தனது கணவர் மீது காழ்ப்புணர்ச்சி காரணமாக தாக்குதல் நடத்தியதாகவும், அதற்கு காரணமானவர்களை ஒருமையில் பேசியதாகவும் தெரிகிறது.

    அப்போது குறுக்கிட்ட ஆணையாளர் கணேசன், நகராட்சி கூட்டத்தில் கண்ணிய குறைவான வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தினார். இதனை தொடர்ந்து பேசிய கவுன்சிலர் சினேகா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினார். அப்போது 23-வது வார்டு கவுன்சிலர் புவனேஸ்வரி எழுந்து சினேகாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் கோபம் அடைந்த கவுன்சிலர் சினேகா நகராட்சி துணைத்தலைவர் கார்த்திகேயன் மீது செருப்பை வீச முயன்றார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து கூட்டம் முடிந்துவிட்டதாக கூறி தலைவர் நளினி சுரேஷ்பாபு மற்றும் ஆணையாளர் கணேசன் ஆகியோர் தங்களது இருக்கைகளை விட்டு எழுந்து சென்றனர். ஆனால் இதன் பின்னரும் கவுன்சிலர்கள் இடையே காரசார வாதம் நீடித்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற திருச்செங்கோடு நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சமாதானம் அடைந்த கவுன்சிலர்கள் அங்கிருந்து சென்றனர்.

    • பல்வேறு தீர்மானம் நிறைவேற்றம்
    • அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்

    ஆம்பூர்:

    ஆம்பூர் நகராட்சி அவசர கூட்டம் நகர மன்ற தலைவர் ஏஜாஸ் அகமது தலைமையில் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்தில் நகர பொது நிதி செலவினங்கள் நிர்வாக மேம்பாடு குறித்து தீர்மானம் மற்றும் செலவி னங்கள் தீர்மானங்களுக்கு அங்கீகாரம் கோரப்பட்டது. நகர்ப்புற கிராம சபா குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் நகர மன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை கூறினார்கள் இதற்கு நகர மன்ற தலைவர் விரைவில் அனைத்து கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினார்.

    நகராட்சி ஆணையர் ஷகிலா நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • மக்கள் நலன் சார்ந்த மசோதாக்களுக்கு அனுமதி அளிக்காத ஆளுநரை விடுவிக்க வேண்டும்.
    • மொத்தம் 114 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது.

    உடுமலை :

    உடுமலை நகர்மன்ற சாதாரண கூட்டம் அதன் தலைவர் மு. மத்தீன் தலைமையில் நடந்தது. இதில் ஆணையர் சத்தியநாதன் மற்றும் அனைத்து கவுன்சிலர்களும் பங்கேற்றனர். கூட்ட துவக்கத்தில் துணைத்தலைவர் கலைராஜன் திருக்குறளை வாசித்தார். நகராட்சி தலைவரின் நேர்முக உதவியாளர் ரஞ்சித் தீர்மானங்களை வாசித்தார். இதைத்தொடர்ந்து உடுமலை பொள்ளாச்சி சாலை சந்திப்பில் இருந்து திருப்பூர் வரை விரைவுச்சாலையாக மாற்றியமைக்க வலியுறுத்தி நகர்மன்ற தலைவர் மத்தீன் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

    மேலும் உடுமலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்திற்கு கலைஞர் பெயர் வைக்க வேண்டும் .தமிழகத்தில் மக்கள் நலன் சார்ந்த மசோதாக்களுக்கு அனுமதி அளிக்காத ஆளுநரை விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்களை மூத்த கவுன்சிலரும் நகர தி.மு.க. செயலாளருமான வேலுச்சாமி கொண்டு வந்தார். மொத்தம் 114 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டதில் ஒரு தீர்மானம் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டு மற்றவை நிறைவேற்றப்பட்டன.

    • காரமடை நகராட்சி மன்ற மாதாந்திர கூட்டம் நடைபெற்றது
    • நகராட்சியில் உள்ள பகுதிகளில் அரசு நிலங்களை பலர் ஆக்கிரமித்துள்ளனர்.

    மேட்டுப்பாளையம்

    காரமடை நகராட்சி மன்ற மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. நகர் மன்ற தலைவர் உஷா வெங்கடேஸ் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் ஆணையாளர் பால்ராஜ், துணைத்தலைவர் மல்லிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் நடந்த விவாதங்கள் பின்வருமாறு:

    ராம்குட்டி (திமுக): நகராட்சியில் உள்ள பகுதிகளில் அரசு நிலங்களை பலர் ஆக்கிரமித்துள்ளனர்.

    இதனை ஆய்வு செய்து தற்போதுள்ள நகராட்சிக்கு சொந்தமான இடங்களை வேலிகள் அமைத்து அந்த இடங்களில் அப்பகுதி மக்களுக்கு விளையாட்டு மைதானம் மற்றும் பூங்கா, அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சித்ரா(திமுக): எனது வார்டுக்குட்பட்ட பகுதியில் ெரயில்வே மேம்பாலத்திற்கு அடியில் சப்வே உள்ளது. அங்கு வாகனம் சென்று வர முடியாத நிலையில் கழிவுநீர் தேங்கி உள்ளதால் அப்பகுதியிலுள்ள மக்களுக்கு பல்வேறு சர்ம வியாதிகள் ஏற்பட்டு வருகிறது. இதனை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கவிதா (மதிமுக): எனது வார்டுக்குட்பட்ட பகுதியில் தெருவிளக்கு, குடிநீர்குழாய் சீரமைப்பு, உள்ளிட்ட பணிகளை செய்து தரக்கோரி கடந்த 7 மாத காலமாக கூறி வருகிறேன். இதுகுறித்து சம்மந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகளுக்கு தெரிவித்தும் மெத்தன போக்காக உள்ளன. பெயரளவிற்கு கூட யாரும் வந்து பார்த்தது இல்லை. மேலும் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரர்கள் பணிகள் எடுத்தும் எந்த பணிகளும் மேற்கொள்ளவில்லை. தவறும் பட்சத்தில் எனது வார்டுக்குட்பட்ட பொதுமக்களை திரட்டி நகராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படுவதாக தெரிவித்தார்.

    மஞ்சுளா(திமுக): அரங்கநாதர் கோவிலில் வாரந்தோறும் வெளியூர் பக்தர்கள் வந்து செல்கின்றனர். அன்று மட்டும் கூடுதலாக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    27 வார்டு வனிதா (அதிமுக): எனது வார்டுக்குட்பட்ட ஆர்.வி நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. இப்பகுதியில் கழிவுநீர் செல்ல போதிய வடிகால் கால்வாய் அமைக்காததால் குளம் போன்று கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் இப்பகுதி மக்களுக்கு பல்வேறு சரும நோய்கள் ஏற்பட்டு வருகிறது. எனவே கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் எனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குடிநீர் குழாய்கள் சேதமடைந்ததால் பழுதுநீக்க நகராட்சி நிர்வாகத்திற்கு தெரிவித்தால் ஊழியர்கள் ரசீது இருந்தால் மட்டுமே குழாய்களை பழுது பார்க்க முடியும் என கூறி வருகின்றனர். இதனை நகராட்சி நிர்வாகம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    விக்னேஷ்(பாஜக): காரமடை நகராட்சி பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது. சாலையோரம் மற்றும் நடை பாதைகளில் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். இதனை உடனடியாக நகராட்சி நிர்வாகம் அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

    ஆணையாளர் பால்ராஜ்: குடிநீர் தெருவிளக்கு சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில்வே மேம்பாலம் சப்வே பகுதியில் ரயில்வே கட்டுப்பாட்டு துறையில் உள்ளதால் அதனை அகற்ற ெரயில்வே மூலம் டெண்டர் விடப்பட்டுள்ளது என்றார்.

    • நகராட்சிகூட்டத்தில் 45 தீர்மானங்கள் கவுன்சிலர்களின் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டிருந்தது.
    • மார்க்கெட்டை இடமாற்றம் செய்தாலும் நகர வளர்ச்சி இருக்கும் என்று தி.மு.க. கவுன்சிலர் செல்வராஜ் தெரிவித்தார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் நகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. நகராட்சி தலைவி உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார்.

    கமிஷனர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் 45 தீர்மானங்கள் கவுன்சிலர்களின் ஒப்பு தலுக்காக வைக்கப்பட்டிருந்தது.

    சங்கரன்கோவில் பஸ் நிலையம் விரிவாக்க பணி களுக்காக தற்காலிகமாக மூடப்பட்டு ரூ.9 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. பஸ் நிலைய விரிவாக்க பணிகளுக்காக காய்கறி மார்க்கெட்டை நிரந்தரமாக நகராட்சி அலுவலகம் அருகில் இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. காய்கறி மார்க்கெட்டை இடமாற்றம் செய்வதற்கு வியாபாரிகள் கோர்ட்டில் தடை உத்தரவு பெற்றுள்ளனர்.

    இந்நிலையில் நேற்று நடந்த நகராட்சி கூட்டத்தில் துணைத் தலைவர் கண்ணன் மற்றும் தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க., காங்கிரஸ் கவுன்சிலர்கள் 21 பேர், நகர வளர்ச்சியை கருத்தில் கொண்டு நகராட்சி அலுவலகம் அருகில் புதிய பஸ் நிலையத்தை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    அப்போது நகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன், இதுகுறித்து கவுன்சிலர்கள் முன்பே தெரிவித்து இருக்கலாம். தற்போது பணிகள் டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டிருக்கிறது. இனிமேல் எப்படி மாற்ற முடியும் என்று கூறினார்.

    அப்போது தி.மு.க., கவுன்சிலர் வேல்ராஜ், பஸ் நிலையத்தை இடமாற்றம் செய்வதற்கு முன்பு கவுன்சிலர்களிடம் கருத்து கேட்டீர்களா? பஸ் ஸ்டாண்ட் இடமாற்றம் செய்யப்படுவதை மற்றவர்கள் மூலமாக தான் நாங்கள் தெரிந்து கொண்டோம் என்று கூறினார்.

    பஸ் நிலையம் இடமாற்றம் செய்தால் தான் நகர வளர்ச்சி இருக்கும் என்பது இல்லை. மார்க்கெட்டை இடமாற்றம் செய்தாலும் நகர வளர்ச்சி இருக்கும் என்று தி.மு.க. கவுன்சிலர் செல்வராஜ் தெரிவித்தார்.

    அப்போது நகராட்சி அலுவலகம் அருகில் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்ப வேண்டும் என்று 21 கவுன்சிலர்களும் கோரிக்கை விடுத்தனர்.

    சங்கரன்கோவிலில் பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் 21 கவுன்சிலர்களின் எதிர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • கீழக்கரையில் தரமற்ற முறையில் தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
    • ஒவ்வொரு நகராட்சி கூட்டத்திலும் வரவு- செலவு கணக்குகளை வார்டு கவுன்சிலர்களுக்கு முறையாக காண்பிக்க வேண்டும்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி கூட்டம் தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் ஹமீது சுல்தான் முன்னிலை வகித்தார். கமிஷனர் செல்வராஜ் வரவேற்றார்.

    கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

    துணைத் தலைவர் ஹமீது சுல்த்தான்:-

    ஒவ்வொரு நகராட்சி கூட்டத்திலும் வரவு- செலவு கணக்குகளை வார்டு கவுன்சிலர்களுக்கு முறையாக காண்பிக்க வேண்டும். அதை விடுத்து விட்டு எப்போது கேட்டாலும் பின்னர் தருகிறேன் என்று சொல்லி அதனை காட்டாமல் இருப்பது சரியல்ல.

    இதுகுறித்து பலமுறை பேசியும் பயனில்லை. வார்டு குறைகளை நிவர்த்தி செய்யக்கோரி கூட்டத்தில் கூறினாலும் சரி செய்யப்படுவதில்லை.

    பாதுஷா (சுயேட்சை):-

    நகராட்சியில் முன்வைக்கப்படும் தீர்மானங்களை நிறைவே ற்றாமல் மெத்தனப் போக்கை அதிகாரிகள் கடைப்பிடிக்கின்றனர். பொதுமக்களின் பிரதிநிதிதியாக இருந்து குறைகளை நிவர்த்தி செய்வதற்கு மட்டுமே இக்கூட்டம் நடைபெறுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    சேக் உசேன் (சுயேட்சை):-

    கீழக்கரை வடக்குத்தெருவில் தார்சாலை முறையாக அமைக்காததால் தரமற்று உள்ளது. கமிஷனர் ஆய்வு செய்ய வேண்டும். கவுன்சிலர்களின் கேள்விக்கு முறையாக பதில் சொல்லி பிரச்னைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    துணைத்தலைவர்:-

    கேரளாவில் இருந்து கீழக்கரை நகருக்குள் தினமும்அதிக எண்ணிக்கை யில்சுற்றுலா பஸ்கள், வாகனங்கள் வருகிறது.

    இதனால் காலை, மாலையில் போக்குவரத்து நெரிசலால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். போக்குவரத்து தடைபடுகிறது. இதில் தீர்வு காண போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நகராட்சி தலைவர்:-

    கீழக்கரை நகருக்குள் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் கேரள வாகனங்கள் பிரச்னை தொடர்பாக போலீசாருடன் கலந்து பேசி பிரச்னைக்கு தீர்வு காணப்படும்.

    சப்ரஸ் நவாஸ்:-

    கீழக்கரையில் உள்ள வார்டுகளில் மற்ற நகராட்சிகளில் குடிநீர் வழங்குவது போன்று லாரிகள் மூலமாக குடிநீர் சப்ளை செய்வதற்கு முன்வர வேண்டும்.

    நகராட்சி தலைவர்:-

    நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் பொதுக்குழாய்கள் 39 உள்ளது.

    இவற்றில் 15 பயன்பாட்டில் இருக்கிறது. மீதமுள்ள 24 குழாய்கள் ஆய்வு செய்யப்பட்டு ஒரு மாத கால அவகாசத்தில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு விவாதம் நடந்தது.

    • நகராட்சிக்கு வருவாய் அதிகரிக்கும் நோக்கத்தில் நகராட்சிக்கு சொந்தமான காலியிடங்களை குத்தகைக்கு ஏலம் விடலாம் என்று தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
    • கழுத்தறுத்தான் பள்ளத்தில் (ஓடை) இருந்து ஏரிப்பாளையம் வரை ஓடையை தூர்வாரி இருபுறமும் தடுப்புச் சுவர் கட்டும் பணிகள் நடைபெறுகிறது.

    உடுமலை :

    உடுமலை நகராட்சியின் சாதாரண கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் நடந்தது .கூட்டத்தை நகராட்சி தலைவர் மு.மத்தின் தலைமை தாங்கி நடத்தினார். கூட்டத்தில் நடந்த உறுப்பினர்களின் காரசார விவாதம் வருமாறு:-சி. வேலுச்சாமி: நகராட்சி பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான காலியிடங்களை குத்தகைக்கு விடுவதற்கான ஏலத்திற்கு தீர்மானம் கொண்டு வந்துள்ளீர்களே அவ்வாறு ஏலம் விட சட்டத்தில் இடம் உள்ளதா. சில தீர்மானங்களை அதிகாரிகள் சரியாக கவனித்து அஜெண்டாவில் சேர்க்க வேண்டும் .அதிகாரிகள் சென்று விடுவீர்கள். பின்னர் கவுன்சிலர்கள் பதில் சொல்ல வேண்டியதாகிவிடும்.

    மு.மத்தின் (தலைவர்): நகராட்சிக்கு வருவாய் அதிகரிக்கும் நோக்கத்தில் தான் நகராட்சிக்கு சொந்தமான காலியிடங்களை குத்தகைக்கு ஏலம் விடலாம் என்று தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. உடனடியாக செய்ய முடியாது. உயர் அதிகாரியிடம் ஒப்புதல் பெற வேண்டும். அதனால் தீர்மானத்தை நிறைவேற்றி உயர் அதிகாரிகளின் ஒப்புதலுக்கு அனுப்பி வைப்போம்.

    சு.கலைராஜன், துணைத் தலைவர்:

    உடுமலை நகராட்சி நூற்றாண்டு நினைவாக நடைபெறும் வளர்ச்சி திட்டபணிகளில் கழுத்தறுத்தான் பள்ளத்தில் (ஓடை) இருந்து ஏரிப்பாளையம் வரை ஓடையை தூர்வாரி இருபுறமும் தடுப்புச் சுவர் கட்டும் பணிகள் நடைபெறுகிறது. இந்த பணிகள் ஓரிடத்தில் தொடங்கப்பட்டால் அந்த இடத்தில் பணிகள் முழுமையாக செய்யப்படுவதில்லை. ஆங்காங்கே இடையேஇடையே செய்யப்படுகிறது.

    இப்போது இந்த ஓடைப்பகுதியில் ஆக்கிரமிப்பு உள்ளதாக கூறுகின்றனர். ஆக்கிரமிப்பு களை அகற்றிவிட்டு அந்த இடங்களைஅளவீடு செய்து திட்டம் தயாரித்திருக்க வேண்டும். மொத்தத்தில் உடுமலை நகராட்சியில் உள்ள துறைகளுக்குள் ஒருங்கிணைப்பு இல்லை .உதாரணமாக பொறியியல் துறைக்கும் சுகாதாரத்துறைக்கும் ஒத்துழைப்பு இல்லை. இது போன்று தான் மற்ற துறைகளும் உள்ளது. நகராட்சியில் உள்ள அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் பணிகள் நன்றாக நடைபெறும்.

    மு.ஜெயக்குமார்:

    உடுமலை நகராட்சியில் முந்தைய ஆட்சியில் ரூபாய் 13 கோடி அளவில் முறைகேடு நடந்துள்ளது .அதனால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது .இது சிறப்பு தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தற்போதைய நிலை என்ன?

    மு.மத்தின் (தலைவர்)

    இது தொடர்பான நடவடிக்கை குறித்து அடுத்த கூட்டத்தில் வெள்ளை அறிக்கையாக தாக்கல் செய்யப்படும் .இவ்வாறு உறுப்பினர்களின் காரசார விவாதம் நடந்தது.

    கூட்டத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நகராட்சி ஆணையர் சத்தியநாதன் உள்ளிட்ட அலுவலர்களும் பதில் அளித்தனர் .கூட்டத்தில் நகராட்சி கவுன்சிலர்கள் செல்லப்பா என்கிற அப்துல் கய்யூம். சாந்தி. ஆசாத். ரீகன் .விஜயலட்சுமி .ராமதாஸ். சௌந்தரராஜன் உள்ளிட்டோரும் பேசினர் .கூட்டத்தில் மொத்தம் 128 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதில் இரண்டு தீர்மானங்களை தவிர மற்ற 126 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

    • ஜெயங்கொண்டம் நகராட்சி கூட்டத்தில் அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுவதாக கவுன்சிலர்கள் பரபரப்பு புகார் தெரிவித்தனர்
    • ஏலம் எடுத்த குத்தகைக்காரர்கள் இதுவரை பணம் கட்டவில்லை, பணம் வசூல் செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை, வாரச்சந்தைக்கும் இதே நிலை தான் நீடிக்கிறது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகர்மன்ற அலுவலகத்தில் நகராட்சி கவுன்சிலர்கள் சாதாரன கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் சுமதிசிவகுமார் தலைமை தாங்கினார்.

    துணைத்தலைவர் வெ.கொ.கருணாநிதி முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையர் சித்ரா (பொறுப்பு) வரவேற்று பேசினார்.

    தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, ஏரி, குளங்கள் தூர்வாருதல் உள்ளிட்ட பொதுமக்களின் அடிப்படை தேவை மற்றும் வசதிகள் நிறைவேற்றுவது குறித்து உறுப்பினர்கள் வலியுறுத்தி பேசினர்.

    கூட்டத்தில் 65 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக இளநிலை உதவியாளர் சாவித்திரி தீர்மான அறிக்கையினை வாசித்தார்.

    கூட்டத்தில் தி.மு.க. 9, அ.தி.மு.க. 4, பா.ம.க. 4, விடுதலை சிறுத்தைகள் கட்சி 2, ம.தி.மு.க. 1, சுயேச்சை 1 உள்ளிட்ட 21 நகராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு சென்ற ஆண்டில் 40-க்கும் மேற்பட்ட குத்தகைக்காரர்கள் தாங்கள் செலுத்த வேண்டிய ரூ.1 கோடி குத்தகை பணம் பாக்கி இருப்பதாகவும், அதனை வசூல் செய்ய நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நகராட்சி நிர்வாகத்திற்கு பல்வேறு பிரச்சனைகள் இருந்து வருவதாக புகார்கள் கூறப்பட்டன.

    மேலும் பா.ம.க. 2-வது வார்டு கவுன்சிலர் ரெங்கநாதன் பேசுகையில், ஜெயங்கொண்டம் வார சந்தையில் தனி நபர்கள் 50 ஆயிரம், 1 லட்சம் என கடைக்கு அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு உள்வாடகைக்கு விடுவதாகவும்,

    இது சம்பந்தமாக நகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதற்கு நகராட்சியில் பணிபுரியும் அதிகரிகள் துணை போவதாக பா.ம.க. கவுன்சிலர் தெரிவித்தார்.

    இதுகுறித்து பலமுறை அதிகாரியிடம் தகவல் தெரிவித்தும் அதைப்பற்றி கண்டு கொள்ளவில்லை என தெரிவித்தார். சென்ற ஆண்டில் புதிதாக கட்டப்பட்ட கடைகளை நகராட்சி மூலமாக ஏலம் விடப்பட்டது.

    ஏலம் எடுத்த குத்தகைக்காரர்கள் இதுவரை பணம் கட்டவில்லை, பணம் வசூல் செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை, வாரச்சந்தைக்கும் இதே நிலை தான் நீடிக்கிறது.

    பெரும்பலான கவுன்சிலர்கள் கூறும்போது, நகரில் அதிகாலையிலேயே தூய்மை பணியாளர்கள் குப்பைகளை சேகரிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    மேலும் வார்டுகளில் எந்த பணிகள் செய்தாலும் வார்டு கவுன்சிலர்களின் ஒப்புதல் பெற்ற பின்னரே பணி செய்ய வேண்டுமென கவுன்சிலர்கள் மன்றத்திற்கு கோரிக்கை வைத்தனர். கவுன்சிலர்கள் இல்லாதபோது அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுவதாகவும் கவுன்சிலர்கள் குற்றம் சாட்டி பேசினர்.

    மேற்கண்ட கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்கவில்லை என்று கூறியதால் அதிகாரிகளுக்கும், கவுன்சிலர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    அடுத்த முறை நடைபெறும் கவுன்சிலர்கள் சாதாரண கூட்டத்தில் அதிகாரிகள் முறைப்படி செயல்பட வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று கூட்டம் நிறைவுற்றது.

    ×