search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நகராட்சி கூட்டத்தில் அதிகாரிகள் மீது கவுன்சிலர்கள் பரபரப்பு புகார்
    X

    நகராட்சி கூட்டத்தில் அதிகாரிகள் மீது கவுன்சிலர்கள் பரபரப்பு புகார்

    • ஜெயங்கொண்டம் நகராட்சி கூட்டத்தில் அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுவதாக கவுன்சிலர்கள் பரபரப்பு புகார் தெரிவித்தனர்
    • ஏலம் எடுத்த குத்தகைக்காரர்கள் இதுவரை பணம் கட்டவில்லை, பணம் வசூல் செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை, வாரச்சந்தைக்கும் இதே நிலை தான் நீடிக்கிறது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகர்மன்ற அலுவலகத்தில் நகராட்சி கவுன்சிலர்கள் சாதாரன கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் சுமதிசிவகுமார் தலைமை தாங்கினார்.

    துணைத்தலைவர் வெ.கொ.கருணாநிதி முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையர் சித்ரா (பொறுப்பு) வரவேற்று பேசினார்.

    தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, ஏரி, குளங்கள் தூர்வாருதல் உள்ளிட்ட பொதுமக்களின் அடிப்படை தேவை மற்றும் வசதிகள் நிறைவேற்றுவது குறித்து உறுப்பினர்கள் வலியுறுத்தி பேசினர்.

    கூட்டத்தில் 65 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக இளநிலை உதவியாளர் சாவித்திரி தீர்மான அறிக்கையினை வாசித்தார்.

    கூட்டத்தில் தி.மு.க. 9, அ.தி.மு.க. 4, பா.ம.க. 4, விடுதலை சிறுத்தைகள் கட்சி 2, ம.தி.மு.க. 1, சுயேச்சை 1 உள்ளிட்ட 21 நகராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு சென்ற ஆண்டில் 40-க்கும் மேற்பட்ட குத்தகைக்காரர்கள் தாங்கள் செலுத்த வேண்டிய ரூ.1 கோடி குத்தகை பணம் பாக்கி இருப்பதாகவும், அதனை வசூல் செய்ய நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நகராட்சி நிர்வாகத்திற்கு பல்வேறு பிரச்சனைகள் இருந்து வருவதாக புகார்கள் கூறப்பட்டன.

    மேலும் பா.ம.க. 2-வது வார்டு கவுன்சிலர் ரெங்கநாதன் பேசுகையில், ஜெயங்கொண்டம் வார சந்தையில் தனி நபர்கள் 50 ஆயிரம், 1 லட்சம் என கடைக்கு அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு உள்வாடகைக்கு விடுவதாகவும்,

    இது சம்பந்தமாக நகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதற்கு நகராட்சியில் பணிபுரியும் அதிகரிகள் துணை போவதாக பா.ம.க. கவுன்சிலர் தெரிவித்தார்.

    இதுகுறித்து பலமுறை அதிகாரியிடம் தகவல் தெரிவித்தும் அதைப்பற்றி கண்டு கொள்ளவில்லை என தெரிவித்தார். சென்ற ஆண்டில் புதிதாக கட்டப்பட்ட கடைகளை நகராட்சி மூலமாக ஏலம் விடப்பட்டது.

    ஏலம் எடுத்த குத்தகைக்காரர்கள் இதுவரை பணம் கட்டவில்லை, பணம் வசூல் செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை, வாரச்சந்தைக்கும் இதே நிலை தான் நீடிக்கிறது.

    பெரும்பலான கவுன்சிலர்கள் கூறும்போது, நகரில் அதிகாலையிலேயே தூய்மை பணியாளர்கள் குப்பைகளை சேகரிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    மேலும் வார்டுகளில் எந்த பணிகள் செய்தாலும் வார்டு கவுன்சிலர்களின் ஒப்புதல் பெற்ற பின்னரே பணி செய்ய வேண்டுமென கவுன்சிலர்கள் மன்றத்திற்கு கோரிக்கை வைத்தனர். கவுன்சிலர்கள் இல்லாதபோது அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுவதாகவும் கவுன்சிலர்கள் குற்றம் சாட்டி பேசினர்.

    மேற்கண்ட கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்கவில்லை என்று கூறியதால் அதிகாரிகளுக்கும், கவுன்சிலர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    அடுத்த முறை நடைபெறும் கவுன்சிலர்கள் சாதாரண கூட்டத்தில் அதிகாரிகள் முறைப்படி செயல்பட வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று கூட்டம் நிறைவுற்றது.

    Next Story
    ×