search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலாளர்கள் பலி"

    • காற்றின் வேகத்தாலும், தொழிலாளர்கள் ஒரே பகுதியில் இறங்கியதாலும், 60 அடி உயர இரும்புத்தூண்கள் மெல்ல வளைய தொடங்கியது.
    • பாரம் தாங்காமல் அந்த இரும்புத் தூண்கள் மொத்தமாக சாய்ந்து டமார் என்ற சத்தத்துடன் தரையில் விழுந்தன.

    கோவை:

    கோவை அடுத்துள்ள கருமத்தம்பட்டி வடுகபாளையம் பிரிவு அருகே சாலையோரம், இத்தாலியன் பர்னிச்சர் நிறுவனத்தின் சார்பில் விளம்பர பேனர் அமைக்கும் பணி நடைபெற்றது.

    இதற்காக 60 அடி உயரத்துக்கு இரும்புத்தூண்கள் அமைக்கப்பட்டு, அதில் இரும்பு தகடுகள் பொருத்தப்பட்டன. இந்த ராட்சத விளம்பர பலகையில், பர்னிச்சர் நிறுவனத்தின் விளம்பர பேனர் பொருத்தும் பணி நேற்று மாலை நடைபெற்றது.

    இந்த பணியை சேலத்தை சேர்ந்த பழனிசாமி என்பவர் ஒப்பந்தம் எடுத்து செய்து வந்ததாக கூறப்படுகிறது. இரும்புத் தூண்களின் மேல் ஏறி பேனர் பொருத்தும் பணியில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த 7 தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் அந்த பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. பலத்த காற்று வீசியதால், அந்த இரும்புத்தூண்கள் லேசாக அசைந்தது.

    இதனால் இரும்புத்தூண்களின் மேல் நின்று பேனர் மாட்டிக்கொண்டு இருந்த தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் அதில் இருந்து கீழே இறங்க முயன்றதாக தெரிகிறது.

    காற்றின் வேகத்தாலும், தொழிலாளர்கள் ஒரே பகுதியில் இறங்கியதாலும், 60 அடி உயர இரும்புத்தூண்கள் மெல்ல வளைய தொடங்கியது. இதனால் அச்சத்தில் தொழிலாளர்கள் கூச்சல் போட்டனர்.

    இதற்கிடையே தரையில் இருந்து 10 அடி உயரத்தில் இரும்புத் தூண்களின் சில கம்பிகள் பயங்கர சத்தத்துடன் உடைந்தன.

    இதனால் பாரம் தாங்காமல் அந்த இரும்புத் தூண்கள் மொத்தமாக சாய்ந்து டமார் என்ற சத்தத்துடன் தரையில் விழுந்தன. அப்போது இறங்கிக்கொண்டு இருந்த தொழிலாளர்களும் இரும்புத்தூண்களுடன் விழுந்தனர்.

    இதில் சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தை சேர்ந்த குமார் (வயது 40), சேகர் (45), சேலத்தைச் சேர்ந்த குணசேகரன் (52) ஆகிய 3 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    மேலும் இடிபாடுகளில் சிக்கி அருண்குமார் (40), சண்முகசுந்தரம் (35) ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்த தகவலின் பேரில் கருமத்தம்பட்டி போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    இந்த சம்பவம் தொடர்பாக தனியார் ஒப்பந்த நிறுவன உரிமையாளர் மீது கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதற்கிடையே விளம்பர பேனர் முறையான அனுமதி பெற்று வைக்கப்பட்டதா? என்று கருமத்தம்பட்டி நகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதிக உயரத்தில் பேனர் அமைக்கப்பட்டதே விபத்துக்கு காரணம் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஆப்பிரிக்க நாடான சூடானில் பல்வேறு தங்க சுரங்கங்கள் உள்ளன.
    • இடிபாடுகளில் சிக்கி கொண்டிருந்த சுரங்க தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    கார்டூம்:

    ஆப்பிரிக்க நாடான சூடானில் பல்வேறு தங்க சுரங்கங்கள் உள்ளன. வடக்கு சூடான் பகுதியில் உள்ள ஒரு தங்க சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தபோது திடீரென அந்த சுரங்கத்தின் மேற்பகுதி இடிந்து விழுந்தது. இதில் அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் தவித்தனர்.

    இது குறித்து தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் அங்கு இடிபாடுகளில் சிக்கி கொண்டிருந்த சுரங்க தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் இந்த விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பல தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனவே அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாறையை வெடிவைத்து தகர்ப்பதற்காக இன்று காலை டெட்டனேட்டர் வைத்து சோதனை செய்துள்ளனர்.
    • எதிர்பாராதவிதமாக டெட்டனேட்டர் வெடித்ததில் பணியில் ஈடுபட்டிருந்த அரவிந்த் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார். மற்றவர்கள் படுகாயம் அடைந்தனர்.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள காளத்திமடத்தை அடுத்த அய்யனூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல்.

    இவரிடம் ஆனையப்பபுரத்தை சேர்ந்த அரவிந்த், ஆலங்குளத்தை சேர்ந்த ஆசீர் சாம்சன் உள்ளிட்ட 5 பேர் கிணறு வெட்டும் தொழிலாளிகளாக வேலை பார்த்து வந்தனர்.

    இவர்கள் ஆலங்குளம் அருகே ராம்நகர்-புதுப்பட்டி சாலையில் உள்ள காட்டுப்பகுதியில் புதுப்பட்டியை சேர்ந்த பால் என்பவருக்கு சொந்தமான இடத்தில் கடந்த சில நாட்களாக கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இன்று காலை பாறையை வெடிவைத்து தகர்ப்பதற்காக டெட்டனேட்டர் வைத்து சோதனை செய்துள்ளனர்.

    அப்போது எதிர்பாராதவிதமாக டெட்டனேட்டர் வெடித்ததில் பணியில் ஈடுபட்டிருந்த அரவிந்த் (வயது 21) சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார். மற்ற 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    உடனே கிணற்றின் மேல் பகுதியில் நின்று கொண்டிருந்த சக தொழிலாளிகள் விபத்தில் சிக்கியவர்களை மீட்க போராடினர். தகவல் அறிந்து ஆலங்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு படுகாயம் அடைந்த ஆசீர் சாம்சன் உள்பட 2 பேர் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தனர்.

    இந்த விபத்தில் சிக்கிய மேலும் 2 பேரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கரூரில் கழிவுநீர் தொட்டியில் இருந்து விஷவாயு தாக்கி கட்டிட தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
    • சம்பவ இடத்திற்கு கருர் எஸ்.பி. நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    கரூர்:

    கரூர் மாவட்டம் சுக்காலியூர் காந்திநகர் பகுதியில் குணசேகரன் என்பவருக்குச் சொந்தமான வீட்டின் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த வீட்டின் பின்புறம் உள்ள கழிவுநீர் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாக கான்கிரீட் வேலை நடந்துள்ளது.

    இந்நிலையில், அதில் போடப்பட்ட சவுக்கு குச்சிகள் மற்றும் கான்கிரீட் பலகைகளைப் பிரிப்பதற்காக கழிவுநீர் தொட்டியின் மேன்ஹோல் எனப்படும் மூடியை திறந்து பார்த்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு பணியில் ஈடுபட்டு வந்த மோகன்ராஜ், ராஜேஷ் ஆகிய 2 தொழிலாளர்கள் மயங்கி விழுந்தனர்.

    இவர்களது அலறல் சத்தத்தைக் கேட்டு அங்கு சென்ற சிவா என்ற மற்றொரு தொழிலாளியும் விஷவாயு தாக்கி மயங்கி விழுந்தார். சிறிது நேரத்தில் மற்ற தொழிலாளர்கள் அங்கு வந்து பார்த்த போது, 3 பேரும் மயங்கி கிடப்பதைப் பார்த்து உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், 3 பேரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு கருர் எஸ்.பி. நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மேலும், புதிதாக கட்டுமான பணி நடைபெற்று வரும் கழிவுநீர் தொட்டியில் எவ்வாறு விஷவாயு தாக்கியது என்பது குறித்தும், அது ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வந்ததா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • பெட்ரோல் பங்க் அருகில் சாலையில் வலதுபக்கம் திரும்பும்போது பின்னால் வந்த அரசு பஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • விபத்து குறித்து திசையன்விளை இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கன்னங்குளத்தை சேர்ந்தவர்கள் முருகன் (வயது 70), நாகமல் (65). தொழிலாளிகள்.

    நேற்று மாலை 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் மன்னார் புரத்தில் உள்ள பெட்ரோல் பங்க்கில் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போடுவதற்காக வந்தனர். மோட்டார் சைக்கிளை முருகன் ஓட்டி வந்துள்ளார்.

    பெட்ரோல் பங்க் அருகில் சாலையில் வலதுபக்கம் திரும்பும்போது பின்னால் வந்த அரசு பஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

    அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக இறந்தார். மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நாகமல் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். விபத்து குறித்து திசையன்விளை இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கழிவுநீர் தொட்டியை திறந்து சுத்தம் செய்துகொண்டு இருந்தபோது திடீரென விஷவாயு தாக்கியது.
    • தொழிலாளர்கள் விழுந்த கழிவுநீர் தொட்டி சுமார் 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டது.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர், தேசிய நெடுஞ்சாலையில் சத்தியன் கிராண்ட் சொகுசு விடுதி உள்ளது. இங்குள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய இன்று காலை 5 தொழிலாளர்கள் வந்தனர்.

    அவர்கள் கழிவுநீர் தொட்டியை திறந்து சுத்தம் செய்துகொண்டு இருந்தபோது திடீரென விஷவாயு தாக்கியது.

    இதில் அருகில் நின்று கொண்டிருந்த 3 தொழிலாளர்கள் அடுத்தடுத்து மயங்கி கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்தனர்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற தொழிலாளர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் மீட்க முயன்றும் முடியவில்லை. சிறிது நேரத்தில் 3 தொழிலாளர்களும் கழிவுநீர் தொட்டிக்குள் மூழ்கினர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த விடுதி நிர்வாகத்தினர் ஸ்ரீபெரும்புதூர் போலீசுக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    தொழிலாளர்கள் விழுந்த கழிவுநீர் தொட்டி சுமார் 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டது. இதனால் பலியான 3 தொழிலாளர்களின் உடல்களையும் மீட்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

    பலியான 3 பேரும் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கச்சிப்பட்டு பகுதியைச் சேர்ந்த ரங்கநாதன் (50), திருமலை (18), நவீன் (30) என்பது தெரிய வந்துள்ளது.

    கழிவுநீர் தொட்டியில் உள்ள தண்ணீரை பாதுகாப்பாக முழுவதும் வெளியேற்றி உடல்களை மீட்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

    உரிய பாதுகாப்பு இன்றி கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ததால் 3 தொழிலாளர்களும் விஷவாயு தாக்கி இறந்து இருப்பது தெரிய வந்துள்ளது. இதுபற்றி போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வன விலங்குகள் வராமல் இருப்பதற்காகவும், தேங்காய் திருட்டை தடுக்கவும் தோட்டத்தை சுற்றி மின்வேலி அமைக்கப்பட்டிருந்தது.
    • தினமும் இரவு மின்வேலியை இயக்கி விட்டு மறுநாள் காலை மோகன்ராஜ் ஆப் செய்வது வழக்கம்.

    விருதுநகர்:

    விருதுநகர் அருகே உள்ள முதலிப்பட்டியை சேர்ந்தவர் முனியசாமி (வயது50). சுமை தூக்கும் வேலை பார்த்து வந்தார். அதே பகுதியில் உள்ள சதானந்தபுரத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (42). தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார்.

    நண்பர்களான 2 பேரும் இன்று காலை அங்குள்ள மோகன்ராஜ் (60) என்பவருக்கு சொந்தமான தோட்டத்து கிணற்றில் குளிக்க சென்றனர். வன விலங்குகள் வராமல் இருப்பதற்காகவும், தேங்காய் திருட்டை தடுக்கவும் தோட்டத்தை சுற்றி மின்வேலி அமைக்கப்பட்டிருந்தது.

    தினமும் இரவு அதனை இயக்கி விட்டு மறுநாள் காலை மோகன்ராஜ் ஆப் செய்வது வழக்கம். ஆனால் இன்று அதை மறந்து விட்டார். இதற்கிடையில் தோட்டத்து கிணற்றில் குளிக்க வந்த முனியசாமி, சீனிவாசன் ஆகியோர் மின்வேலியை தொட்டதாக தெரிகிறது.

    இதில் மின்சாரம் பாய்ந்து அடுத்தடுத்து 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். சிறிது நேரத்தில் அவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் 2 பேர் இறந்து கிடப்பதை பார்த்து வச்சக்காரப்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மின்சாரம் தாக்கி 2 பேர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • படுகாயம் அடைந்தவர்கள் மேல்சிகிச்சைக்காக விஜயவாடா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    திருமலை:

    ஆந்திர மாநிலம், ஏலூர் மாவட்டத்தில் உள்ள லிங்கபாலம் அடுத்த போகலுவ் கிராமத்தில் ஜமாயில் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் சீமை கருவேல மரங்கள் ஏராளமாக உள்ளன.

    இதனை வெட்ட காக்கிநாடா மாவட்டம், அன்னவரத்தில் இருந்து 40-க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு வந்தனர்.

    அனைவரும் அங்கு கூடாரம் அமைத்து தங்கியிருந்தனர். இரவு வேலை செய்த களைப்பில் அனைவரும் காத்தோட்டமாக வெளியே படுத்து தூங்கி கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு திடீரென இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் இடிதாக்கி சம்பவ இடத்திலேயே கொண்டபாபு(35), ராஜூ (28), தர்மராஜு(25), வேணு (19) ஆகிய 4 கூலித்தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    மேலும் பலர் படுகாயமடைந்தனர். அவர்களை அங்கே இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஏலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக விஜயவாடா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • இரவில் வெடி வைத்து தகர்க்கப்பட்ட பாறைகளை அகற்றும் பணிகள் துரிதமாக நடைபெற்றது.
    • உடைக்கப்படும் கற்களை ஏற்றிச்செல்ல தயார் நிலையில் லாரிகளும் நிறுத்தப்பட்டு இருந்தன.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் கல்பாடி ஊராட்சிக்கு உட்பட்டது கவுல்பாளையம் கிராமம். பெரம்பலூர் நகர் பகுதியில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ள இந்த பகுதியில் ஏராளமான குவாரிகள், தொழிற்சாலைகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன.

    இந்த தொழிற்சாலைகள் மற்றும் கல் குவாரிகளுக்கு அருகிலுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து வேலைக்காக ஆண், பெண் தொழிலாளர்கள் அழைத்து வரப்படுகிறார்கள். குறிப்பாக கல் குவாரியில் பாறைகளை உடைத்து ஜல்லி கற்களாக மாற்றும் பணியில் அதிக அளவில் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

    இதற்கிடையே கவுல்பாளையத்தில் அ.தி.மு.க. நிர்வாகி ஒருவருக்கு சொந்தமான கல் குவாரி ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இதில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தினக்கூலி அடிப்படையில் வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை வழக்கமான பணிகள் தொடங்கின. இரவில் வெடி வைத்து தகர்க்கப்பட்ட பாறைகளை அகற்றும் பணிகள் துரிதமாக நடைபெற்றது. இதில் சில பொக்லைன் எந்திரங்களும் ஈடுபடுத்தப்பட்டன. மேலும் உடைக்கப்படும் கற்களை ஏற்றிச்செல்ல தயார் நிலையில் லாரிகளும் நிறுத்தப்பட்டு இருந்தன.

    அப்போது வெடி வைத்து தகர்க்கப்பட்ட பாறைகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணி நடைபெற்றது. அதன் அருகிலேயே தொழிலாளர்களும் பணியில் இருந்தனர். இதில் எதிர்பாராத விதமாக சற்று கீழே பணியில் இருந்த தொழிலாளர்கள் மீது பாறைகள் சரிந்து விழுந்தன.

    உடனடியாக அருகில் வேலை பார்த்துக்கொண்டிருந்த குவாரி ஊழியர்கள், தொழிலாளர்கள் பதறியடித்துக்கொண்டு ஓடி வந்தனர். மேலும் அவர்கள் சற்றும் தாமதிக்காமல் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    ஆனால் அதற்குள் இந்த கோர விபத்தில் கவுல்பாளையம் காளியம்மன் நகர் பகுதியை சேர்ந்த லாரி உரிமையாளரும், தொழிலாளியுமான சுப்பிரமணி (வயது 30) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த வினோத் ஆகியோர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உரிழந்தனர். தகவல் அறிந்ததும் உடனடியாக சம்பவ இடத்துக்கு போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்து வந்தனர்.

    தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாமல் பாறைகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றியதே விபத்துக்கு காரணம் என்று போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் விபத்து நடந்த பகுதிக்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி ஆகியோர் விரைந்து சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். பலியான 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதற்கிடையே விபத்தில் பலியானவர்களின் உறவினர்கள் தகவல் அறிந்து குவாரிக்கு வந்தனர். அவர்கள் பலியான இருவரின் உடல்களையும் பார்த்து கதறி அழுதனர்.

    • சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் நேற்று நள்ளிரவு பாதாள சாக்கடை பணிக்காக குழி தோண்டும் பணி நடந்தது.
    • சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் சக்திவேல், கிருஷ்ணமூர்த்தி ஆகிய 2 பேர் பிணமாக மீட்கப்பட்டனர்.

    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகர் பகுதியில் கடந்த சில வாரங்களாக பாதாள சாக்கடைக்காக குழாய்கள் பதிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக நகரின் பல்வேறு பகுதிகளில் குழிகள் தோண்டப்பட்டு வருகின்றன.

    அதன்படி சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் நேற்று நள்ளிரவு பாதாள சாக்கடை பணிக்காக குழி தோண்டும் பணி நடந்தது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள குகையூர் கிராமத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

    சக்திவேல் (வயது 40), கிருஷ்ணமூர்த்தி (50) ஆகிய 2 பேர் குழியில் இறங்கி மண் அள்ளிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென பக்கவாட்டு மண் சரிந்து விழுந்தது. இதில் குழியில் இருந்த 2 தொழிலாளர்களும் மண்ணில் புதையுண்டனர்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள் உடனே சாத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மண்ணில் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணியை துரிதப்படுத்தினர். ஜே.சி.பி. எந்திரமும் வரவழைக்கப்பட்டு குழியில் சரிந்த மண்ணை அள்ளும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

    சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் சக்திவேல், கிருஷ்ணமூர்த்தி ஆகிய 2 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். தொடர்ந்து அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாதாள சாக்கடை பணியின்போது மண் சரிந்து விழுந்து 2 தொழிலாளர்கள் இறந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஆப்கானிஸ்தான், கந்தஹார் பகுதியில் இந்தியாவுக்கு சமையல் எரிவாயு கொண்டுவரும் குழாய் பதிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். #AfghanTalibanAttack
    காபுல்:

    துருக்மேனிஸ்தான் நாட்டில் இருந்து ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு குழாய் மூலம் எரிவாயு கொண்டு வருவதற்காக, சுமார் 1800 கிலோமீட்டர் தூரத்துக்கு குழாய் பதிக்கும் பணிகள் மேற்கண்ட நாடுகளின் பல பகுதிகளில் நடைபெற்று வருகின்றன.

    சுமார் 800 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான இந்த திட்டப்பணிகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் கந்தஹார் மாகாணத்தில் உள்ள மாய்வன்ட் மாவட்டத்தில் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டும் பாதையை செப்பனிடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    தலிபான்களின் ஆதிக்கத்தில் உள்ள இந்த பகுதியில் இன்று வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த பயங்கரவாதிகள் கண்ணிமைக்கும் நேரத்தில் 5 தொழிலாளர்களை துடிதுடிக்க சுட்டுக் கொன்றனர்.

    ஒரு தொழிலாளியை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
    ×