என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சாத்தூரில் மண் சரிந்து விழுந்து 2 தொழிலாளர்கள் பலி
    X

    சாத்தூரில் மண் சரிந்து விழுந்து 2 தொழிலாளர்கள் பலி

    • சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் நேற்று நள்ளிரவு பாதாள சாக்கடை பணிக்காக குழி தோண்டும் பணி நடந்தது.
    • சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் சக்திவேல், கிருஷ்ணமூர்த்தி ஆகிய 2 பேர் பிணமாக மீட்கப்பட்டனர்.

    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகர் பகுதியில் கடந்த சில வாரங்களாக பாதாள சாக்கடைக்காக குழாய்கள் பதிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக நகரின் பல்வேறு பகுதிகளில் குழிகள் தோண்டப்பட்டு வருகின்றன.

    அதன்படி சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் நேற்று நள்ளிரவு பாதாள சாக்கடை பணிக்காக குழி தோண்டும் பணி நடந்தது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள குகையூர் கிராமத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

    சக்திவேல் (வயது 40), கிருஷ்ணமூர்த்தி (50) ஆகிய 2 பேர் குழியில் இறங்கி மண் அள்ளிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென பக்கவாட்டு மண் சரிந்து விழுந்தது. இதில் குழியில் இருந்த 2 தொழிலாளர்களும் மண்ணில் புதையுண்டனர்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள் உடனே சாத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மண்ணில் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணியை துரிதப்படுத்தினர். ஜே.சி.பி. எந்திரமும் வரவழைக்கப்பட்டு குழியில் சரிந்த மண்ணை அள்ளும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

    சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் சக்திவேல், கிருஷ்ணமூர்த்தி ஆகிய 2 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். தொடர்ந்து அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாதாள சாக்கடை பணியின்போது மண் சரிந்து விழுந்து 2 தொழிலாளர்கள் இறந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×