search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தஞ்சை பெரிய கோவில்"

    • முகூர்த்தக்காலுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
    • தேரோட்டம் 1-ந் தேதி நடக்கிறது.

    தஞ்சையில் பெரிய கோவில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. ஆயிரம் ஆண்டு கால அதிசயமாக பார்க்கப்படும் இக்கோவில் உலக அளவில் பிரசித்திப்பெற்ற கோவிலாகும். இந்த கோவிலுக்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

    பல்வேறு சிறப்புகள் வாய்ந்த பெரிய கோவிலில் பெருவுடையார் அருள்பாலித்து வருகிறார். பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், விநாயகர் மற்றும் சுப்பிரமணியர் சன்னதிகளும் உள்ளன. ஆண்டு தோறும் சித்திரை மாதம் பெரிய கோவிலில் சித்திரை திருவிழா 18 நாட்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து நாள்தோறும் காலை, மாலையில் சாமி வீதி உலா நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 1-ந் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது. அப்போது தஞ்சை மேலவீதி, வடக்குவீதி, கீழவீதி, தெற்குவீதி ஆகிய 4 வீதிகளில் தேர் வலம் வருகிறது. தேரோட்டம் நடைபெறுவதை முன்னிட்டு தஞ்சை மேல வீதி தேர்நிலையில் உள்ள தேரில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது.

    முன்னதாக முகூர்த்தக்காலுக்கு மஞ்சள், பால், திரவியப்பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தேரில் முகூர்த்தக்கால் நடப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கவிதா, செயல் அலுவலர் மாதவன், மேற்பார்வையாளர்கள் செந்தில்குமரன், ரெங்கராஜ் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • தேரோட்டம் 1-ந்தேதி நடைபெறவுள்ளது.
    • தற்போதுள்ள தேர் 2015-ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது.

    தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழும் இந்த கோவில் உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை பெருவிழா நடைபெறும். இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெறும்.

    அதன்படி இந்த ஆண்டு சித்திரை பெருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 1-ந்தேதி (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இந்த நிலையில் தேரோட்டம் நடைபெறும் 4 ராஜவீதிகளில் செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்.

    பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தஞ்சை பெரியகோவில் தேரோட்டம் வருகிற 1-ந் தேதி காலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. இதற்காக தேர் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் தற்போது ஆய்வு செய்யப்பட்டுள்ளது. தேரோட்டம் நடைபெறும் நான்கு வீதிகளிலும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. சில இடங்களில் சாலையில் பள்ளங்கள் உள்ளதை சரி செய்யவும், மழைநீர் வடிகால் கட்டமைப்பு பகுதிகளில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    இந்த தேர் திருவிழாவில் சுமார் 1 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் அதற்கேற்ற வகையில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தேரோட்டத்துக்கு வெளியூரிலிருந்து வரும் பக்தர்களுக்கு கூடுதல் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளது. அனைத்து அரசுத்துறை அதிகாரிகளை கொண்டு ஏற்கெனவே ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடத்தப்பட்டு, அதன்படி அந்ததந்த துறைகள் சார்பில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    தேரோட்டத்தின் போது முதலில் விநாயகர், சுப்பிரமணியர், தியாகராஜர், அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளும் ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து நான்கு வீதிகளிலும் வலம் வரும், தேர் வடம் பிடிக்கப்பட்டு பிற்பகல் தேர் நிலைக்கு மேலவீதியில் உள்ள தேர் மண்டபத்தை வந்தடையும். இத்தேர் திருவிழா நான்கு ராஜ வீதிகளான மேல ராஜவீதி, வடக்கு ராஜவீதி, கீழராஜவீதி, தெற்கு ராஜ வீதிகளில் நடைபெறும்.

    தற்போதுள்ள தேர் 2015-ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. இந்த தேரோட்டம் கொரோனா காரணமாக 2020, 2021 ஆகிய 2 ஆண்டுகள் நடைபெறவில்லை. தேரின் சாதாரண உயரம் 19 அடி, தேர் அலங்காரம் செய்யப்பட்டவுடன் 50 அடியாக இருக்கும். இந்த தேரின் அகலம் 18 அடியாகும். சக்கரத்தின் உயரம் 6 அடி, தேர் சாதாரண எடை 40 டன், அலங்காரம் செய்யப்பட்டவுடன் 43 டன் எடையில் இருக்கும்.

    ஆய்வின் போது தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், செயற்பொறியாளர் ஜெகதீசன், மாநகர் நல அலுவலர் டாக்டர் சுபாஷ்காந்தி, நகரமைப்பு அலுவலர் ராஜசேகர், உதவி பொறியாளர் கார்த்திகேயன், அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, மாவட்ட தீயணைப்பு அலுவலர் மனோ பிரசன்னா, தாசில்தார் சக்திவேல், உணவு பாதுகாப்பு அலுவலர் சித்ரா, அழகிய தஞ்சை திட்ட இயக்குனர் ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • சித்திரை பெருவிழாவின் முதல் நாளான இன்று மாலை 6.30 மணியளவில் பஞ்ச மூர்த்திகள் படிச்சட்டத்தில் புறப்பாடு நடைபெறுகிறது.
    • 2-ம் நாளான நாளை காலை 8 மணிக்கு மேல் பல்லக்கில் விநாயகர் புறப்பாடும், மாலை 6.30 மணிக்கு சிம்ம வாகனத்தில் விநாயகர் புறப்பாடும் நடைபெறுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பெரிய கோவில் மாமன்னர் ராஜராஜசோழனால் கட்டப்பட்டது. உலக பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

    இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டு சித்திரை திருவிழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் கடந்த மாதம் (மார்ச்) 3-ந்தேதி நடப்பட்டது.

    இந்த நிலையில் 18 நாட்கள் நடைபெறும் சித்திரை பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு சந்திரசேகரர் பஞ்சமூர்த்தி சுவாமிகளுடன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்தருளினர். தொடர்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு மங்கள வாத்தியம் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது.

    முன்னதாக, கோவிலில் பஞ்சமூர்த்திகளுக்கு கொடிமரம் முன்பு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கோவில் வளாகத்தில் பல்லக்கில் எடுத்து வந்து தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

    சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் அடுத்த மாதம் (மே) 1-ந்தேதி காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் நடைபெறுகிறது.

    கொடியேற்ற விழாவில் அரண்மனை பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கவிதா, செயல் அலுவலர் மாதவன், கண்காணிப்பாளர்கள் பாலசுப்பிரமணியன், ரெங்கராஜ், முருகன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    சித்திரை பெருவிழாவின் முதல் நாளான இன்று மாலை 6.30 மணியளவில் பஞ்ச மூர்த்திகள் படிச்சட்டத்தில் புறப்பாடு நடைபெறுகிறது.

    2-ம் நாளான நாளை (செவ்வாய்கிழமை) காலை 8 மணிக்கு மேல் பல்லக்கில் விநாயகர் புறப்பாடும், மாலை 6.30 மணிக்கு சிம்ம வாகனத்தில் விநாயகர் புறப்பாடும் நடைபெறுகிறது.

    3-ம் நாளான 19-ந்தேதி காலை 8 மணிக்கு பல்லக்கில் விநாயகர் புறப்பாடும், மாலை 6.30 மணிக்கு மூஞ்சுறு வாகனத்தில் விநாயகர் புறப்பாடும் நடைபெற உள்ளது.

    4-ம் நாளான 20-ந்தேதி காலையில் விநாயகருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. மாலையில் மேஷ வாகனத்தில் சுப்பிரமணியர் புறப்பாடு நடக்கிறது.

    இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து வரும் நாட்களில் நாள்தோறும் சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகளுடன் சாமி புறப்பாடு நடைபெறுகிறது. மே 1-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. விழாவின் கடைசி நாளான மே 4-ந்தேதி தீர்த்தவாரி விழாவும், மாலையில் வெள்ளி ரிஷப வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலையில் கொடியிறக்கத்துடன் விழா முடிவடைகிறது.

    • சித்திரை திருவிழாவுக்கான கொடியேற்றம் ஏப்ரல் 17-ந்தேதி நடக்கிறது.
    • மே 1-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

    தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்றது. கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்வதுடன் உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. பெரிய கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

    ஆண்டு தோறும் பெரிய கோவிலில் சித்திரை பெருவிழா, சதய விழா, ஆஷாட நவராத்திரி விழா உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன.

    இதில் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றது. அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா பந்தக்கால் முகூர்த்தம் இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி காலை 9.30 மணிக்கு பெரியநாயகி அம்மன் சன்னதி வளாகத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    அதன் பின்னர் பந்தக்காலுக்கு பால், தயிர், மஞ்சள் மற்றும் வாசனை திரவியங்களை கொண்டு அபிசேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதன் பின்னர் தமிழில் தேவாரம், திருமுறைகள் பாடி பந்தக்கால் நடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    இதில் அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கவிதா, செயல் அலுவலர் மாதவன், மேற்பார்வையாளர் செந்தில், சிவாச்சாரியார்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    சித்திரை திருவிழாவுக்கான கொடியேற்றம் ஏப்ரல் மாதம் 17-ந்தேதியும், அதைத்தொடர்ந்து மே 1-ந்தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது.

    • தஞ்சை பெரிய கோவிலில் இன்று மாட்டு பொங்கலை முன்னிட்டு மகா நந்திக்கு 2 டன் அளவிலான காய்கறி, பழம், இனிப்பு, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.
    • இந்த கோவில் கஜ பூஜை செய்வதற்கு15 வருடங்களாக யானை இல்லை, யானை இல்லாதது மிகப்பெரிய வருத்தத்தை அளிக்கிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பெரிய கோவிலில் இன்று மாட்டு பொங்கலை முன்னிட்டு மகா நந்திக்கு 2 டன் அளவிலான காய்கறி, பழம், இனிப்பு, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. 108 பசுக்களுக்கு கோ பூஜை நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    அப்போது அ.ம.மு.க. மாநகர செயலாளர் ராஜேஸ்வரன் இந்த வழிபாட்டில் கலந்து கொண்டு தரிசனம் செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;-

    தமிழ்நாடு மக்கள் நோய் நொடியின்றி எல்லா செல்வங்களும் பெற, விவசாயம் செழிக்க, நீர் பற்றாக்குறை இருக்க கூடாது. அனைத்து ஜீவ நாடிகள் நன்றாக வாழ வேண்டும் என கோரிக்கை வைத்து கோ பூஜை சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது.

    தஞ்சை பெரிய கோயில் உலகப் புகழ் பெற்றது .

    இந்த கோவில் கஜ பூஜை செய்வதற்கு15 வருடங்களாக யானை இல்லை.

    யானை இல்லாதது மிகப்பெரிய வருத்தத்தை அளிக்கிறது. தஞ்சை மக்களுக்கும் பெரிய கோயிலுக்கும் புகழ் சேர்க்கும் வகையில் பெரிய கோயிலுக்கு யானை அளிக்குமாறு தமிழக அரசுக்கு தஞ்சை மக்கள் சார்பில் வேண்டுகோள் வைக்கிறேன்.

    தஞ்சை பெரிய கோயிலுக்கு பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் அதிகமாக வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு மாற்று பாதை அமைத்து தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 108 பசுக்களுக்கு கோ-பூஜையும் நடத்தப்பட்டது
    • மகா நந்திக்கு 16 வகையான தீபாராதனைகள், பூஜைகள் காட்டப்பட்டது.

    தஞ்சை பெரியகோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.

    உலக பாரம்பரிய சின்னமாக விளங்கும் இந்த கோவில் கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்து வருகிறது.

    இந்த கோவிலில் மிகப்பெரிய நந்திபெருமான் சிலை உள்ளது. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இந்த நந்தி 20 டன் எடை கொண்டது.

    இந்த நந்தி பெருமானுக்கு ஆண்டு தோறும் மாட்டுப் பொங்கல் அன்று மகரசங்கராந்தி விழா நடத்தப்படுவது வழக்கம்.

    அதன்படி இன்று மகர சங்கராந்தி பெருவிழா நடைபெற்றது.

    காலையில் நந்தி பெருமானுக்கு 2 டன் எடையிலான காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

    இதில் கத்தரிக்காய், முட்டைகோஸ், பூசணிக்காய், சவ்சவ், உருளைக்கிழங்கு, வாழைக்காய், பாகற்காய், கேரட், மிளகாய், நெல்லிக்காய், வெண்டைக்காய் போன்ற அனைத்து வகையான காய்களாலும், ஆரஞ்சுப் பழம், வாழை, ஆப்பிள், மாதுளை, கொய்யா போன்ற பலவகையான பழங்களாலும் , பால்கோவா உள்பட இனிப்புகளாலும், பல்வேறு வகையான மலர்களாலும் நந்தி பெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட மகா நந்திக்கு சிறப்பு சோடச உபசாரம் என்கின்ற 16 வகையான தீபாராதனைகள், பூஜைகள் காட்டப்பட்டது.

    இதையடுத்து நந்திபெருமான் சிலை முன்பு 108 பசுமாடுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு அவற்றின் மீது சந்தனம், குங்குமம் பூசப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு, பட்டுத்துணி போர்த்தப்பட்டு கோ பூஜை நடந்தது. மாட்டின் உரிமையாளர்களுக்கும் பட்டு துண்டு வழங்கி கவுரவிக்கப்பட்டது. தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. நந்தி பெருமான் அலங்கார நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவலால் மகரசங்கராந்தி விழா எளிமையான முறையில் நடந்தது. ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்தால் பிரமாண்ட முறையில் நந்திக்கு அலங்காரம் செய்யப்பட்டு 108 பசுக்களுக்கு கோ-பூஜை நடத்தப்பட்டது.

    • நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
    • பக்தர்கள் நெல்மணிகளை சுவாமி மீது தூவி வழிபாடு நடத்தினர்.

    உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் சிவகாம சுந்தரி சமேத நடராஜப் பெருமான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திர தினத்தன்று நடராஜருக்கு ஆருத்ரா தரிசனம் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜ பெருமானுக்கு நேற்றிரவு விபூதி, பால், தயிர், பழங்கள், மஞ்சள், திரவியபொடி, சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    இன்று காலை நடராஜர் சுவாமிக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து வளாகத்தில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சிவகாம சுந்தரியுடன், நடராஜ பெருமான் கோவிலில் வலம் வந்து நான்கு ராஜ வீதிகளில் வீதி உலா வந்தார். முன்னதாக சிவகங்கை பூங்காவில் தீர்த்தவாரி நடைபெற்றது.

    இதையடுத்து மீண்டும் சிவகாம சுந்தரியுடன், நடராஜ பெருமான் பெரிய கோவிலுக்கு வந்தார். அப்போது மும்மாரி மழை பொழிந்து விளைச்சல் நல்ல முறையில் இருக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான பக்தர்கள் நெல்மணிகளை சுவாமி மீது தூவி வழிபாடு நடத்தினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்றது.
    • ஏப்ரல் மாதத்திற்கு பிறகு வர்ணம் பூசும் பணி நடைபெற உள்ளது.

    தஞ்சை பெரிய கோவில் விமான கோபுரத்தில் படிந்துள்ள பறவைகள் எச்சம், மழைநீரால் பாசி படிந்திருப்பதை அகற்றும் வகையில் ரசாயன கலவையால் வர்ணம் பூசும் பணி விரைவில் தொடங்க உள்ளது. இதையடுத்து கோபுரத்தில் உள்ள சிற்பங்கள், பணிகள் மேற்கொள்வது குறித்து தொல்லியல் துறையினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

    தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவில் தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு, உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. இந்த கோவில் கட்டப்பட்டு 1010 ஆண்டுகளை கடந்து விட்டது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

    தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5-ந்தேதி நடைபெற்றது. 23 ஆண்டுகளுக்குப்பிறகு கோவில் குடமுழுக்கு நடைபெற்றதையொட்டி அதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கோவில் உள்ள திருச்சுற்று மண்டபங்கள் புனரமைக்கப்பட்டன. மராட்டா நுழைவு வாயில், கேரளாந்தகன் கோபுரம், விமான கோபுரம், பெரியநாயகி அம்மன், முருகர், நடராஜர், விநாயகர் சன்னதி கோபுரங்களும் ரசாயன கலவை மூலம் வர்ணம் பூசப்பட்டது.

    அதன்படி விமான கோபுரத்தில் படிந்திருந்த பறவைகளின் எச்சங்கள், மழைநீரால் படிந்திருந்த பாசிகள் உள்ளிட்டவற்றை சுத்தம் செய்ததோடு, பழமை மாறாமல் இருப்பதற்காக ரசாயன கலவை பூசும் பணியும் நடைபெற்றது. சிதிலமடைந்து இருந்த சுதை சிற்பங்களும் சீரமைக்கப்பட்டன. இந்த பணிகள் 2018-19-ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டது.

    விமான கோபுரம் உள்ளிட்ட அனைத்து கோபுரங்களிலும் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. விமான கோபுரலத்தில் உள்ள கலசமும் தங்க முலாம் பூசப்பட்டது. கொடிமரம் புதிதாக நடப்பட்டது. தஞ்சை பெரிய கோவில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய தொல்லியல் துறை பராமரிப்பில் இருந்து வருகிறது. இதனால் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தஞ்சை பெரிய கோவில் பழமை மாறாமல் ரசாயன கலவை கொண்டு வர்ணம் பூசும் பணி நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி வருகிற நிதி ஆண்டு முதல் (ஏப்ரல் மாதத்திற்கு பிறகு) வர்ணம் பூசும் பணி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தொல்லியல் துறையினர் நேற்று 216 அடி விமான கோபுரத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். தொல்லியல் துறையை சேர்ந்த 4 பேர் நேற்று கயிறு உதவியுடன் விமான கோபுரத்தின் மீது ஏறி ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். 1 மணி நேர ஆய்வுக்குப்பின்னர் அவர்கள் கீழே இறங்கி வந்தனர்.

    இது குறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் கூறுகையில், தஞ்சை பெரிய கோவிலில் உள்ள விமான கோபுரம் உள்ளிட்ட அனைத்து கோபுரங்களிலும் ரசயான கலவையுடன் வர்ணம் பூசும் பணி வருகிற ஏப்ரல் மாதத்திற்கு பிறகு நடைபெற உள்ளது. மழைநீரால் பாசி படியாமல் இருப்பதற்காகவும், பறவைகளின் எச்சத்தை அகற்றி அதன் பொலிவு மாறாமல் இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    மேலும் கோபுரத்தில் வேறு ஏதும் பணிகள் மேற்கொள்ள வேண்டி உள்ளதா? சிற்பங்கள் எதுவும் சிதிலமடைந்து உள்ளதா? அவ்வாறு இருந்தால் அதனை எவ்வாறு சரி செய்வது? ரசாயன கலவை பூசுவது எப்படி? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விமான கோபுரத்தில் வர்ணம் பூசும் பணி நிறைவடைந்ததும் இதர கோபுரத்திலும் பணிகள் மேற்கொள்ளப்படும்"என்றனர்.

    • தஞ்சை பெரிய கோவில் நந்தி சிலையில் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளது.
    • அதனை சரிெசய்ய வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தஞ்சாவூர்,

    தஞ்சாவூர் பெரிய கோவில் உலக அளவில் பேசப்படும் ஒரு அற்புதமான பொக்கிஷமாக விளங்குகிறது.

    கோவிலின் சிறப்பை கண்டு வியந்து போன யுனெஸ்கோ நிறுவனம் உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது.

    இந்திய தொல்லியல் துறை பாதுகாக்கப்பட்ட பகுதியாக பெரிய கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை அறிவித்து கண்காணித்து வருகிறது.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் மிகப்பெரிய நந்தியெம்பெருமான் சிலை அமைந்துள்ளது.

    இந்த நந்தி சிலையில் நேற்று திடீரென விரிசல் ஏற்பட்டுள்ளது. கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் இதனை கண்டதும் அதிர்ச்சி அடைந்தனர். மாதம் இரு முறை பிரதோஷ வழிபாடு நடக்கும் நந்தி சிலையில் ஏற்பட்ட விரிசல்களை மத்திய தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து சரி செய்ய வேண்டும்.

    மிகவும் பிரசித்தி பெற்ற நந்தி மண்டபத்தின் மேற்புற சுவரில் வரையப்பட்ட ஓவியங்கள் பழமை அடைந்துள்ளதால் அதனையும் சரிசெய்ய வேண்டும் என் பக்தர்கள் தெரிவித்தனர்.

    • 500 கிலோ காய்கறி, இனிப்பு வகைகளால் அலங்காரம் செய்யப்பட்டது
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழும் தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கி வருகிறது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

    தஞ்சை பெரியகோவிலில் கருவறையில் உள்ள பெருவுடையார் மிகப்பெரிய லிங்கத்திருமேனியாகும். லிங்கம் 12 அடி உயரமும், 23 அடி சுற்றளவும் கொண்டது. ஆவுடையார் எனப்படும் பீடம் 13 அடி உயரமும், 54 அடி சுற்றளவும் கொண்ட ஒரே கல்லால் உருவாக்கப்பட்ட பிரமாண்டத்திருமேனியாக மூலவரான பெருவுடையார் திகழ்கிறார்.

    பெருவுடையாருக்கு ஆண்டுதோறும் ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தன்று அன்னாபிஷேகம் நடைபெறும். இந்தாண்டு ஐப்பசி பவுர்ணமியையொட்டி நேற்று பக்தர்களால் 1,000 கிலோ பச்சரிசி, 500 கிலோ காய்கறிகள், இனிப்பு வகைகள், மலர்கள் வழங்கப்பட்டன.

    பக்தர்கள் வழங்கிய அரிசியை சாதமாக தயார் செய்து பெருவுடையார் திருமேனி முழுவதும் சாத்தப்பட்டு, காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு, அன்னாபிஷேகம் நடந்தது.

    தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இரவு லிங்கத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட சாதம், பக்தர்களுக்கும், கால்நடைகளுக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது. மீதமுள்ள சாதம், அருகில் உள்ள கல்லணைக் கால்வாயில் நீர் வாழ் உயிரினங்களுக்கு உணவாக போடப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜா போன்ஸ்லே, உதவி ஆணையர் கவிதா, கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், செயல் அலுவலர் மாதவன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினர், கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

    • தஞ்சை பெரிய கோவில் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.
    • கருவறையில் உள்ள பெருவுடையார் மிகப்பெரிய லிங்கத்திருமேனியாகும்.

    தஞ்சை பெரிய கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது உலக பாரம்பரிய சின்னமாக விளங்குவதோடு, தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். பெரியகோவிலில் கருவறையில் உள்ள பெருவுடையார் மிகப்பெரிய லிங்கத்திருமேனியாகும். 6 அடி உயரமும், 54 அடி சுற்றளவும் கொண்ட பீடமும், அதன்மேல் 13 அடி உயரம், 23 அடி சுற்றளவும் உள்ள லிங்கம் எனத் தனித்தனி கருங்கற்களினால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது.

    இத்தகைய சிறப்பு மிக்க பெருவுடையாருக்கு ஐப்பசி பவுர்ணமி தினத்தில் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இன்று (திங்கட்கிழமை) ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் வழங்கிய அரிசியை சாதமாக தயார் செய்து, பெருவுடையார் திருமேனி முழுவதும் சாத்தப்பட்டு, காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு, அன்னாபிஷேகம் நடைபெறவுள்ளது.

    பின்னர் மாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.

    • வராகிஅம்மன் சன்னதி அருகே பிரகாரத்தில் கொலு கண்காட்சி நடைபெற்றது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு மட்டுமல்லாமல் உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இங்கு தமிழகம் மட்டும் அல்லாது வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி கலை விழா நடைபெறுவது வழக்கம். அதன் படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி கலை விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது. முதல்நாளான நேற்று பெரியநாயகி அம்மனுக்கு மனோன்மணி அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    மேலும் வராகிஅம்மன் சன்னதி அருகே பிரகாரத்தில் நவராத்திரி கலைவிழாவையொட்டி கொலு கண்காட்சி நடைபெற்றது. இதை பக்தர்கள் பார்த்து மகிழ்ந்தனர். நவராத்திரி விழாவின் போது தினமும் பெரிய நாயகி அம்மனுக்கு காலை 7.30 மணிக்கு அபிஷேக ஆராதனையும், மாலை 6.30 மணிக்கு சிறப்பு அலங்காரமும் நடைபெறுகிறது.

    2-ம் நாளான இன்று (திங்கட்கிழமை) மீனாட்சி அலங்காரமும், நாளை (செவ்வாய்க்கிழமை) சதஸ் அலங்காரமும், 28-ந் தேதி காயத்திரி அலங்காரமும், 29-ந் தேதி அன்னபூரணி அலங்காரமும் நடைபெறுகிறது. 30-ந் தேதி பெரியநாயகி அம்மனுக்கு கஜலட்சுமி அலங்காரமும், 1-ந் தேதி சரஸ்வதி அலங்காரமும், 2-ந் தேதி ராஜராஜேஸ்வரி அலங்காரமும், 3-ந் தேதி மகிஷாசுரமர்த்தினி அலங்காரமும், 4-ந் தேதி விஜயதசமி அலங்காரமும் நடைபெறுகிறது.

    ×