search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    தஞ்சை பெரிய கோவிலில் மகர சங்கராந்தி விழா: மகா நந்திக்கு 2 டன் காய்கறி, பழங்களால் சிறப்பு அலங்காரம்
    X

    தஞ்சை பெரிய கோவிலில் மகர சங்கராந்தி விழா: மகா நந்திக்கு 2 டன் காய்கறி, பழங்களால் சிறப்பு அலங்காரம்

    • 108 பசுக்களுக்கு கோ-பூஜையும் நடத்தப்பட்டது
    • மகா நந்திக்கு 16 வகையான தீபாராதனைகள், பூஜைகள் காட்டப்பட்டது.

    தஞ்சை பெரியகோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.

    உலக பாரம்பரிய சின்னமாக விளங்கும் இந்த கோவில் கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்து வருகிறது.

    இந்த கோவிலில் மிகப்பெரிய நந்திபெருமான் சிலை உள்ளது. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இந்த நந்தி 20 டன் எடை கொண்டது.

    இந்த நந்தி பெருமானுக்கு ஆண்டு தோறும் மாட்டுப் பொங்கல் அன்று மகரசங்கராந்தி விழா நடத்தப்படுவது வழக்கம்.

    அதன்படி இன்று மகர சங்கராந்தி பெருவிழா நடைபெற்றது.

    காலையில் நந்தி பெருமானுக்கு 2 டன் எடையிலான காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

    இதில் கத்தரிக்காய், முட்டைகோஸ், பூசணிக்காய், சவ்சவ், உருளைக்கிழங்கு, வாழைக்காய், பாகற்காய், கேரட், மிளகாய், நெல்லிக்காய், வெண்டைக்காய் போன்ற அனைத்து வகையான காய்களாலும், ஆரஞ்சுப் பழம், வாழை, ஆப்பிள், மாதுளை, கொய்யா போன்ற பலவகையான பழங்களாலும் , பால்கோவா உள்பட இனிப்புகளாலும், பல்வேறு வகையான மலர்களாலும் நந்தி பெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட மகா நந்திக்கு சிறப்பு சோடச உபசாரம் என்கின்ற 16 வகையான தீபாராதனைகள், பூஜைகள் காட்டப்பட்டது.

    இதையடுத்து நந்திபெருமான் சிலை முன்பு 108 பசுமாடுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு அவற்றின் மீது சந்தனம், குங்குமம் பூசப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு, பட்டுத்துணி போர்த்தப்பட்டு கோ பூஜை நடந்தது. மாட்டின் உரிமையாளர்களுக்கும் பட்டு துண்டு வழங்கி கவுரவிக்கப்பட்டது. தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. நந்தி பெருமான் அலங்கார நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவலால் மகரசங்கராந்தி விழா எளிமையான முறையில் நடந்தது. ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்தால் பிரமாண்ட முறையில் நந்திக்கு அலங்காரம் செய்யப்பட்டு 108 பசுக்களுக்கு கோ-பூஜை நடத்தப்பட்டது.

    Next Story
    ×