search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டி20 உலக கோப்பை"

    • நேற்று நடந்த முதல் அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிக்கு முன்னேறியது.
    • டி20 உலக கோப்பை கிரிக்கெட்டில் 2வது அரையிறுதியில் இந்தியா இங்கிலாந்துடன் மோதுகிறது.

    அடிலெய்டு:

    8-வது டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. நேற்று நடந்த முதல் அரையிறுதியில் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்நிலையில், அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறும் 2-வது அரையிறுதியில் முன்னாள் சாம்பியன்களான இந்தியாவும், இங்கிலாந்தும் மோதுகின்றன.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தான், நெதர்லாந்து, வங்காளதேசம், ஜிம்பாப்வே அணிகளை பதம் பார்த்தது. தென்ஆப்பிரிக்காவுடன் மட்டும் தோல்வியை தழுவிய இந்திய அணி தனது பிரிவில் 8 புள்ளியுடன் முதலிடம் பிடித்து அரையிறுதிக்குள் நுழைந்தது.

    வெற்றி பெற்ற ஆட்டங்களில் விராட் கோலியும் (3 அரைசதத்துடன் 246 ரன்), சூர்யகுமார் யாதவும் (3 அரைசதத்துடன் 225 ரன்) ஹீரோவாக ஜொலித்தனர். இன்றைய ஆட்டத்திலும் அவர்களது பேட்டிங் மீது இமாலய எதிர்பார்ப்பு நிலவுகிறது. கோலி இன்னும் 42 ரன்கள் எடுத்தால் சர்வதேச 20 ஓவர் போட்டியில் 4 ஆயிரம் ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை படைப்பார். இதே போல் கேப்டன் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோரும் நேர்த்தியான தொடக்கத்தை தரும் பட்சத்தில் இந்தியாவால் சவாலான ஸ்கோரை எட்ட முடியும்.

    2011-ம் ஆண்டுக்கு பிறகு எந்தவித உலக கோப்பையும் வெல்லாத இந்திய அணி அந்த மகத்தான தருணத்தை அடைவதற்கு இன்னும் 2 வெற்றிகள் தேவைப்படுகிறது. அதற்கு பேட்ஸ்மேன்கள் பொறுப்புணர்வுடன் ஆட வேண்டியது அவசியமாகும்.

    பந்து வீச்சில் அர்ஷ்தீப்சிங் (10 விக்கெட்) மட்டும் தொடர்ச்சியாக விக்கெட் அறுவடை நடத்துகிறார். புவனேஷ்வர் குமார், முகமது ஷமி ஆகியோரும் கைகொடுத்தால் எதிரணியை அச்சுறுத்தலாம்.விக்கெட் கீப்பிங் பணியை கவனிப்பது யார் என்பதில் சஸ்பென்ஸ் நீடிக்கிறது.

    ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி சூப்பர் 12 சுற்றில் ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை ஆகிய அணிகளை பந்தாடியது. அயர்லாந்துக்கு எதிராக 5 ரன்னில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. 7 புள்ளிகளுடன் ரன்ரேட்டிலும் முன்னிலையில் இருந்ததால் தனது பிரிவில் 2-வது இடம் பெற்று அரையிறுதி வாய்ப்பை தட்டிச் சென்றது.

    இங்கிலாந்து அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக விளங்குகிறது. ஆனால் தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ஜோஸ் பட்லர் (ஒரு அரைசதத்துடன் 125 ரன்), அலெக்ஸ் ஹாலெஸ் (ஒரு அரைசதத்துடன் 119 ரன்) தவிர்த்து வேறு யாரும் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. என்றாலும் பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி, லிவிங்ஸ்டன் ஆகிய அதிரடி வீரர்கள் உள்ளனர்.

    பந்து வீச்சில் சாம் கர்ரன் (10 விக்கெட்), கிறிஸ் வோக்ஸ் உள்ளிட்டோர் நம்பிக்கை அளிக்கிறார்கள். காயத்தால் அவதிப்படும் மார்க்வுட் (9 விக்கெட்), டேவிட் மலான் ஆடுவது சந்தேகம் தான்.

    எப்படி பார்த்தாலும் இரு அணிகளும் கிட்டத்தட்ட சரிசம பலத்துடனே தென்படுகிறது. அதனால் நெருக்கடியை திறம்பட சமாளிக்கும் அணியின் கையே ஓங்கும் என்பதில் சந்தேகமில்லை. இவ்விரு அணிகளும் இதுவரை 22 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 12-ல் இந்தியாவும், 10-ல் இங்கிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:

    இந்தியா: லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பண்ட் அல்லது தினேஷ் கார்த்திக், அக்‌ஷர் பட்டேல், அஸ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.

    இங்கிலாந்து: ஜோஸ் பட்லர் (கேப்டன்), அலெக்ஸ் ஹாலெஸ், டேவிட் மலான் அல்லது பில் சால்ட், பென் ஸ்டோக்ஸ், ஹாரி புரூக், லிவிங்ஸ்டன், மொயீன் அலி, சாம் கர்ரன், கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட் அல்லது கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷித்.

    இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    • நியூசிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தி 2-வது முறை இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது.
    • பாகிஸ்தான் அணி 3-வது தடவையாக இறுதிப்போட்டிக்குள் நுழையும் வேட்கையில் இருக்கிறது.

    சிட்னி:

    டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. சிட்னியில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தி 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது. கடந்த உலக கோப்பையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நியூசிலாந்து ஆஸ்திரேலியாவிடம் தோற்று கோப்பையை இழந்தது.

    நியூசிலாந்து அணியின் பேட்டிங்கில் பிலிப்ஸ் (195 ரன்), கான்வே, கேப்டன் வில்லியம்சன் ஆகியோரும், பந்துவீச்சில் சான்ட்னெர் (8 விக்கெட்), சவுத்தி, பெர்குசன் (தலா 7 விக்கெட்) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி 3-வது தடவையாக இறுதிப்போட்டிக்குள் நுழையும் வேட்கையில் இருக்கிறது. அந்த அணி இதற்கு முன்பு 2007, 2009-ம் ஆண்டுகளில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்து இருந்தது. இதில் 2009-ல் இலங்கையை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. 2007-ல் இந்தியாவிடம் தோற்று இருந்தது.

    அந்த அணியில் முகமது ரிஸ்வான், ஷான் மசூத், இப்திகார் அகமது போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர். கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கில் மோசமான நிலையில் காணப்படுகிறார். பாகிஸ்தான் அணியின் பலமே பந்துவீச்சுதான். ஷதாப் கான் (10 விக்கெட்), ஷாஹின் ஷா அப்ரிடி (8 விக்கெட்), முகமது வாசிம் (7 விக்கெட்) ஆகியோர் பந்து வீச்சில் நல்ல நிலையில் உள்ளனர்.

    இரு அணிகளுக்கும் இடையே கடைசியாக கடந்த மாதம் 14-ம் தேதி நடந்த போட்டியில் பாகிஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.

    இறுதிப்போட்டிக்குள் நுழைய நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் கடுமையாக போராடும் என்பதால் இன்றைய அரையிறுதி ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • மெல்போர்னில் இருந்து அரையிறுதியில் பங்கேற்க இந்திய அணி விமானத்தில் அடிலெய்டு வந்தனர்.
    • அடிலெய்டில் நவம்பர் 10-ம் தேதி 2-வது அரையிறுதிப் போட்டியில் இந்தியா இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

    அடிலெய்டு:

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்திய அணி அடிலெய்டில் நாளை நடைபெறும் 2-வது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இதனால் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தை மெல்போர்னில் விளையாடி விட்டு, அரையிறுதி போட்டியில் பங்கேற்பதற்காக விமானத்தில் அடிலெய்டு வந்தனர்.

    ஐ.சி.சி.யின் விதிப்படி ஒவ்வொரு அணியிலிருந்து 4 வீரர்களுக்கு மட்டுமே நவீன வசதிதளை உடைய வணிக வகுப்பு இருக்கைகள் (பிசினஸ் கிளாஸ் சீட்) வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்திய அணியில் கோலி, ரோகித், ராகுல் டிராவிட் ஆகியோருக்கு பிசினஸ் வகுப்பு இருக்கைகள் வழங்கப்பட்டது. ஆனால் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சரியான ஓய்வு தேவை என்பதால் விராட் கோலி, ரோகித் சர்மா, ராகுல் டிராவிட் ஆகியோர் தங்களது பிசினஸ் விகுப்பு இருக்கையை வேகப்பந்துவீச்சாளர்களுக்கு விட்டுக்கொடுத்துள்ளனர்.

    மெல்போர்னில் இருந்து அடிலெய்டுக்கு விமான பயண நேரம் 1 மணி 20 நிமிடங்கள் ஆகும். இந்தப் பயண நேரத்தில் இந்திய வேகப் பந்துவீச்சாளர்கள் தங்களின் கால் மற்றும் முதுகில் வலியை எதிர்கொள்ள நேரிடலாம். இதனால் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களான முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், புவனேஷ்வர் குமார் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு பயிற்சியாளர் ராகுல் டிராவிட், கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தங்களுக்கு வழங்கப்பட்ட பிசினஸ் கிளாஸ் சீட்களை கொடுத்துள்ளனர். அதனால் அவர்களுக்கு போட்டிக்கு முன்பு சரியான ஓய்வு கிடைக்கும்.

    இதுதொடர்பாக இந்திய அணியின் துணை ஊழியர் ஒருவர் பேசுகையில், போட்டிக்கு முன் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நல்ல ஓய்வு வேண்டும். அவர்கள் கால்களை நீட்ட வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்தோம் என கூறினார்.

    டிராவிட், ரோகித் சர்மா மற்றும் கோலியின் இந்த செயல் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.

    • வலுவான இந்திய அணியை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது.
    • இறுதிப் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் மோதினால் அது சிறந்த போட்டியாக அமையும்.

    அடிலெய்டு:

    டி20 உலகக் கோப்பை தொடரில் வியாழன் அன்று அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெறும்  2வது அரையிறுதி போட்டியில் இந்தியா, இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டி குறித்து இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:

    இங்கிலாந்து அணி இன்னும் சிறப்பாக விளையாடவில்லை. இந்தியாவுடனான அரையிறுதி மோதலுக்கு முன்னதாக எங்களது ஆட்டத்தை மேம்படுத்தி வருகிறோம். இந்த விளையாட்டில் வெற்றி பெறுவதற்கு செய்ய வேண்டிய அனைத்தையும் செய்துள்ளீர்கள் என்பதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். வியாழன் அன்று விக்கெட் எப்படி இருக்கப் போகிறது என்று பார்க்க வேண்டும்.

    அடிலெய்டு நாங்கள் விளையாடிய மைதானங்களில் இருந்து வேறுபட்டது, நாங்கள் பெரிய சதுர எல்லைகள் கொண்ட மைதானங்களில் விளையாடியுள்ளோம், ஆனால் இங்கே நாங்கள் எங்கள் திட்டங்களை கொஞ்சம் மாற்ற வேண்டும். இது போன்ற சூழ்நிலைகளைப் பொறுத்தவரை, அழுத்தத்தைக் குறைக்க நான் ஸ்கோர்போர்டைப் பார்த்து, விளையாட்டை எளிதாக்க முயற்சிக்கிறேன்.

    வலுவான வீரர்கள் இடம் பெற்ற இந்திய அணியை எந்த அணியும் எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. எதிர் அணியை பற்றி அதிகம் சிந்திக்காமல், எங்கள் மீது கவனம் செலுத்த நாங்கள் விரும்புகிறோம். செய்ய வேண்டியதை மட்டும் செய்வோம்.

    இறுதிப் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் மோதுமா என்பது சத்தியமாக எனக்கு தெரியாது. ஆனால் நான் நம்புகிறேன், அப்படி இருந்தால் அது இந்தியா மற்றும் பாகிஸ்தான் மக்களுக்கு சிறந்த போட்டியாக அமையும். நாங்கள் எங்களின் சிறந்த ஆட்டத்தை விளையாடி வெல்வதற்காக இங்கு வந்துள்ளோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அரையிறுதி போட்டிகளில் பணியாற்றவுள்ள நடுவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
    • நவம்பர் 10-ல் நடக்கவுள்ள அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

    சிட்னி:

    ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

    லீக் சுற்றுகளின் முடிவில் இந்திய அணி புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. இதையடுத்து இந்திய அணி நவம்பர் 10-ம் தேதி நடக்கவுள்ள அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. அதேபோல், முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    இந்நிலையில், இந்திய அணி விளையாடும் அரையிறுதி போட்டியில் பணியாற்றவுள்ள நடுவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி குமார் தர்மசேனா மற்றும் பால் ரீபெல் ஆகியோர் கள நடுவர்களாகவும், கிறிஸ் கேவ்னி மூன்றாவது நடுவராகவும் செயல்பட உள்ளனர். நான்காவது நடுவராக ராட் டக்கர் செயல்படுவார். டேவிட் பூன் போட்டி நடுவராக (ரெப்ரீ) இருப்பார்.

    அதேபோல், சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள நியூசிலாந்து, பாகிஸ்தான் இடையிலான அரையிறுதியில் மரைஸ் எராஸ்மஸ் மற்றும் ரிச்சர்ட் இல்லிங்வொர்த் கள நடுவராகவும், ரிச்சர்ட் கெட்டில்பரோ மூன்றாவது நடுவராகவும் செயல்பட உள்ளனர். மைக்கேல் கோக் நான்காவது நடுவராகவும் மற்றும் கிறிஸ் பிராட் போட்டி நடுவராகவும் (ரெப்ரீ) நியமிக்கப்பட்டுள்ளனர்.

    • டி20 உலக கோப்பை தொடரை நடத்தும் அணி கோப்பையை வென்றதில்லை என்ற சோகம் தொடர்கிறது.
    • அறிமுகமான 2007-ம் ஆண்டின் முதல் தொடரில் இந்தியா கோப்பை வென்று அசத்தியது.

    சிட்னி:

    கடந்த 2007-ல் அறிமுகப்படுத்தப்பட்ட டி20 உலக கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்காவில் முதலில் நடைபெற்றது. அதில் தொடரை நடத்தும் தென் ஆப்பிரிக்க அணி குரூப் சுற்றுடன் வெளியேறியது. இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

    2009-ம் ஆண்டு இங்கிலாந்தில் டி20 உலக கோப்பை தொடர் நடந்தது. அதில் இங்கிலாந்து அணி குரூப் சுற்றுடன் வெளியேறியது. பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

    2010-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசில் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற்றது. அதில் தொடரை நடத்தும் வெஸ்ட் இண்டீஸ் அணி குரூப் சுற்றுடன் வெளியேறிய நிலையில், இங்கிலாந்து அணி கோப்பையை வென்றது.

    2012 டி20 உலக கோப்பை தொடர் இலங்கையில் நடைபெற்றது. அதில் இலங்கை இறுதிப்போட்டி வரை முன்னேறி தோல்வியடைந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

    2014ல் டி20 உலக கோப்பை தொடரை நடத்திய வங்காளதேசம் லீக் சுற்றுடன் நடையை கட்ட, அதில் இலங்கை அணி சாம்பியன் ஆனது.

    2016 டி20 உலக கோப்பை இந்தியாவில் நடைபெற்றது. இந்திய அணி அரையிறுதி வரை சென்று வாய்ப்பை தவறவிட்டதால், வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது முறையாக சாம்பியன் ஆனது.

    2021-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகமும், ஓமனும் இணைந்து டி20 உலக கோப்பை தொடரை நடத்தின. ஆனால் ஐக்கிய அரபு அமீரகம் தகுதிச்சுற்றுக்கு கூட தகுதிபெறவில்லை. ஓமனோ தகுதிச்சுற்றை தாண்டவில்லை. அதில் ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது.

    இதுவரை நடந்த 7 தொடர்களிலும் போட்டியை நடத்திய அணிகள் கோப்பையை வென்றதில்லை.

    இந்நிலையில், 8-வது டி20 உலக கோப்பை தொடரை ஆஸ்திரேலியா நடத்திவரும் நிலையில், அந்த அணி தற்போது குரூப் சுற்றுடன் நடையை கட்டியது. இதையடுத்து, போட்டியை நடத்தும் அணி கோப்பையை வெல்ல முடியாமல் போகும் சோகம் இந்த முறையும் தொடர்கதையாகி உள்ளது.

    • டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
    • முதலில் ஆடிய நெதர்லாந்து 158 ரன்களை எடுத்துள்ளது.

    அடிலெய்டு:

    டி20 உலக கோப்பை கிரிக்கெட்டில் அடிலெய்டில் நடைபெறும் லீக் ஆட்டம் ஒன்றில் தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி இன்றைய ஆட்டத்தில் நெதர்லாந்தை தோற்கடித்தால் அரையிறுதி செல்லும்.

    நெதர்லாந்து அணியின் அரைஇறுதி வாய்ப்பு முடிந்து போய் விட்டது.

    அதன்படி, நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்கள் பொறுப்புடன் ஆடினர். இதனால் முதல் விக்கெட்டுக்கு 58 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்டீபன் மைபர்க் 37 ரன்கள் எடுத்து அவுட்டானார். மேக்ஸ் ஒடவ் 29 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அதிரடியாக ஆடிய டாம் கூப்பர் 19 பந்தில் 2 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 35 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    இறுதியில், நெதர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்களை எடுத்துள்ளது. ஆக்கர்மேன் 41 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இதையடுத்து, 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்குகிறது.

    • இந்தியா, ஜிம்பாப்வே அணிகளிடம் தோல்வியடைந்ததால் அரையிறுதி வாய்ப்பு மங்கியது
    • இந்தியா, தென்ஆப்பிரிக்கா தோல்வியடைந்தால் பாகிஸ்தானுக்கு அரையிறுதி வாய்ப்பு

    டி20 உலகக் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்பட்டது பாகிஸ்தான். ஆனால் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளிடம் தோல்வியடைந்ததால் புள்ளிகள் பட்டியலில் இதுவரை 2-வது இடம் பிடிக்க முடியாமல் உள்ளது.

    நாளை கடைசி லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளது. ஏறக்குறைய பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பு மங்கிவிட்டது. இருந்தாலும் அடுத்த அணிகளின் செயல்பாடுகளை பொறுத்து வாய்ப்புள்ளது.

    தற்போது இந்தியா 6 புள்ளிகளுடன் (ரன்ரேட்- +0.730) முதல் இடத்தில் உள்ளது. தென்ஆப்பிரிக்கா 5 புள்ளிகளுடன் (ரன்ரேட்- +1.441) 2-வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 4 புள்ளிகளுடன் (ரன்ரேட்- +1.117) 3-வது இடத்தில் உள்ளது.

    நாளை தென்ஆப்பிரிக்கா நெதர்லாந்தையும், இந்தியா ஜிம்பாப்வேவையும், பாகிஸ்தான் வங்காளதேசத்தையும் எதிர்த்து விளையாட இருக்கின்றன.

    இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா ஆகிய மூன்று அணிகளும் வெற்றி பெற்றால் இந்தியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிவிடும். ஒருவேளை இந்தியா தோல்வியடைந்தால் பாகிஸ்தான் ரன்ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு முன்னேறும். அப்படி இல்லாமல் இந்தியா வெற்றி பெற்று தென்ஆப்பிரிக்கா தோல்வியடைந்தால் பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறும். இல்லையெனில் தென்ஆப்பிரிக்கா- நெதர்லாந்து ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டால் தென்ஆப்பிரிக்காவுடன் ரன்ரேட் அடிப்படையில் போட்டியிட்டு அரையிறுதிக்கு முன்னேறும்.

    இந்த நிலையில் நாளைய ஆட்டம் குறித்து பாகிஸ்தான் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷான் மசூத் கூறியதாவது:-

    இழந்த தருணங்கள் எங்களுக்கு விலைமதிப்புமிக்கது என்பது நிரூபணமாகி உள்ளது. ஏனென்றால் நாங்கள் இன்னும் புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடத்திற்கு முன்னேற முடியவில்லை.

    அதேசமயம் நாங்கள் நம்பிக்கையை இழக்கவில்லை. வாழ்க்கை நமக்கு கடினமான பாடங்களை கற்று தருகிறது. அதில் இதுவும் ஒன்றாகும். இந்தத் தோல்வி பாகிஸ்தான் வீரர்களின் தூக்கத்தை தொலைத்ததுடன், அவர்களின் மன உறுதியையும் கெடுத்துவிட்டது.

    அந்த பின்னடைவுகளுக்குப் பிறகு நாங்கள் எவ்வாறு மீண்டு வந்தோம் என்பது எங்கள் தன்மையை காட்டியது. அது ஒரு பெரிய விஷயம்.

    தோல்வியில் இருந்து மீண்டு வருவதற்கு சிறந்த விஷயம், தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்வதுதான். சமநிலையான பார்வையில் இருந்து நாம் பார்த்தோம் என்றால், ஜிம்பாப்வேயுடனான தோல்விக்குப்பின் நாங்கள் சிறப்பாக விளையாடி மீண்டு வந்தோம்.

    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில், தொடக்கத்தில் தென்ஆப்பிரிக்கா ஆதிக்கம் செலுத்தியது. பின்னர், நாங்கள் நன்றாக பந்து வீசி ஆட்டத்தை எங்கள் பக்கம் கொண்டு வந்தோம். மழைக்குப்பின் கூட நாங்கள் எங்களுடைய உத்வேகத்தை இழக்கவில்லை.

    ஆகவே, கடைசி போட்டியில் வங்காளதேசத்தை வீழ்த்தி இரண்டு புள்ளிகள் பெறுவதில் கவனம் செலுத்துவோம். இதுதான் எங்கள் கையில் உள்ளது. எங்களுடைய குரூப்பில் கடைசி பந்து வீசும் வரை நாங்கள் நம்பிக்கையுடன் இருப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • குரூப் பி பிரிவில் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது
    • இந்தியா ஜிம்பாப்வேக்கு எதிராக வெற்றி பெற்றால் பாகிஸ்தான் அணி வெளியேறும்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது. சூப்பர் 12 சுற்று லீக் போட்டிகளின் முடிவில் இரண்டு குரூப்பிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். சூப்பர் 12 சுற்று முடிவுக்கு வர போகும் நிலையில் தற்போது வரை ஒரு அணி கூட அதிகாரபூர்வமாக அரையிறுதிக்கு தகுதி பெறவில்லை. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை பாகிஸ்தான் அணி வீழ்த்தியதன்மூலம் அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. ஒவ்வொரு அணிக்கும் இன்னும் ஒரு லீக் ஆட்டம் மட்டுமே உள்ளது.

    குரூப் பி பிரிவில் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில் மீதம் உள்ள ஒரு இடத்திற்கு பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    இன்றைய வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி 4 போட்டிகளில் 2 வெற்றி 2 தோல்வி என புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. இந்திய அணி 6 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், தென் ஆப்பிரிக்கா அணி 2-வது இடத்திலும் உள்ளது. இந்த நிலையில் குரூப் பி பிரிவில் ஒரே நாளில் இதற்கு முடிவு கிடைக்கவுள்ளது. அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி தனது கடைசி லீக் போட்டியில் நெதர்லாந்து அணியையும், பாகிஸ்தான் அணி வங்காளதேச அணியையும், இந்திய அணி ஜிம்பாப்வே அணியையும் வரும் 6-ஆம் தேதி எதிர்கொள்கிறது. இந்த மூன்று போட்டிகளும் ஒரே நாளில் அடுத்தடுத்து நடைபெறுகிறது.

    ஒருவேளை அன்று நடக்கும் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றால் (7 புள்ளிகள்) நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெறும். அன்றைய நாளின் 2-வது போட்டியில் பாகிஸ்தான் அணி வங்காளதேசத்தை வீழ்த்தினாலும் (6 புள்ளிகள்), இந்தியா ஜிம்பாப்வேக்கு எதிராக வெற்றி பெற்றால் (8 புள்ளிகள்) பாகிஸ்தான் அணி வெளியேறும். இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறும். ஒருவேளை தென் ஆப்பிரிக்கா- நெதர்லாந்து போட்டி மழையால் கைவிடப்பட்டு பாகிஸ்தான் அணி வங்காளதேசத்தை வீழ்த்தினால் இரு அணிகளும் 6 புள்ளிகளுடன் சம நிலையில் இருக்கும். பின்னர் ரன் ரேட் அடிப்படையில் தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகளின் அரையிறுதி வாய்ப்பு முடிவாகும்.

    ஒருவேளை பாகிஸ்தான் அணி வங்காளதேசத்தை வீழ்த்தி, எதிர்பாராத விதமாக ஜிம்பாப்வே அணி இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்தால் இந்தியா, பாகிஸ்தான் அணிகளின் புள்ளிகள் சமமாகும். பின்னர் ரன் ரேட் அடிப்படையில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளின் அரையிறுதி வாய்ப்பு முடிவாகும். இந்த அனைத்து சாத்தியங்களிலும் பாகிஸ்தான் அணி முதலில் கட்டாயம் வெற்றி பெற்றால் மட்டுமே அந்த அணிக்கு அரையிறுதி வாய்ப்பு நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியா- வங்காளதேச அணிகள் விளையாடிய போட்டி மழையால் 16 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
    • மழைக்கு முன் வங்காளதேச அணியின் ஆட்டம் வெற்றி பெறுவதுபோல் இருந்தது.

    டி20 உலகக் கோப்பையில் இந்தியா- வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று நடைபெற்றது. 185 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களம் இறங்கியது. ஒரு கட்டத்தில் வங்காளதேசம் 7 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கிட்டது.

    அப்போது, வங்காளதேசம் 49 ரன்கள் எடுத்திருந்தது. டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்தியாவை விட 17 ரன்கள் அதிகமாக இருந்தது. மழை தொடர்ந்து பெய்ய வேண்டும். போட்டி அத்துடன் நிற்க வேண்டும் என வங்காள தேச வீரர்கள் மற்றும் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

    ஆனால் மழை நின்று ஆட்டம் மீண்டும் தொடங்கியது. ஓவர்கள் குறைக்கப்பட்டது. 16 ஓவரில் 151 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் வங்காளதேசம் அணியால் 145 ரன்களே அடிக்க முடிந்தது. இதனால் இந்தியா 5 ரன்னில் வெற்றி பெற்றது.

    மழை நின்று மீண்டும் ஆட்டம் தொடங்குவதற்கு முன் வங்காளதேச அணி கேப்டன் ஷாகிப் அல் ஹசன் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா மற்றும் நடுவருடன் பேசிக் கொண்டிருந்தார்.

    போட்டி முடிந்த பின்னர் வங்காளதேச அணி கேப்டன் ஷாகிப் அல் ஹசன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்வியால் ஷாகிப் அல் ஹசன் ஷாக் ஆகிவிட்டார்.

    ஷாகிப் அல் ஹசனுக்கும், பத்திரிகையாளருக்கும் இடையில் நடைபெற்ற சுவாரஸ்யமான உரையாடல் பின்வருமாறு:-

    பத்திரிகையாளர்: மழைக்குப்பின் நீங்கள் உண்மையிலேயே விளையாடாமல் இருக்க முயற்சித்தீர்களா?

    ஷாகிப்: எங்களுக்கு ஏதாவது ஆப்சன் இருக்கிறதா?

    பத்திரிகையாளர்: இல்லை. அது ஒரு காரணம்தான். இருந்தாலும், அவர்களை சம்மதிக்க வைக்க முயற்சித்தீர்களா?

    ஷாகிப்: யாரை சம்மதிக்க வைப்பது?

    பத்திரிகையாளர்: நடுவர்கள் மற்றும் ரோகித் சர்மா

    ஷாகிப்: நடுவரை சம்மதிக்க வைக்கும் திறன் என்னிடம் உள்ளதா?

    பத்திரிகையாளர்: அது சரிதான்... அப்படியென்றால் நீங்கள் வங்காளதேச ஆறுகளைப் பற்றியா விவாதித்துக் கொண்டிருந்தீர்கள்?

    ஷாகிப்: .... (பதில் அளிக்க முடியாமல் திகைத்து அப்படியே இருந்தார்.)

    பத்திரிகையாளர்: நீங்கள் வங்காளதேச ஆறுகள் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தீர்களா? அல்லது வேறு ஏதாவது பற்றி விவாதித்தீர்களா? என்ன பேசிக் கொண்டிருந்தீர்கள்? அதை வெளிப்படுத்த முடியுமா?

    ஷாகிப்: தற்போது நீங்கள் சரியான கேள்வியை எழுப்பியுள்ளீர்கள். நடுவர் இரு நாட்டு கேப்டன்களையும் அழைத்து டார்கெட், இன்னும் எத்தனை ஓவர் வீச வேண்டும், கடைபிடிக்க வேண்டிய விதிமுறை குறித்து பேசினார்.

    பத்திரிகையாளர்: அவ்வளவுதான்... நீங்கள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டீர்களா?

    ஷாகிப்: ஆமாம்.

    பத்திரிகையாளர்: அற்புதம்... நன்றி...

    • தென் ஆப்பிரிக்கா 4 விக்கெட் இழப்பிற்கு 69 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது
    • டக்வொர்த் லூயிஸ் விதிப்படி தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற 14 ஓவர்களில் 142 ரன்கள் ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    டி20 உலகக் கோப்பையில் இன்று தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் (குரூப்2) மோதின. முதலில் ஆடிய பாகிஸ்தான் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷபாப் கான் 52 ரன்களும், இஃப்திகார் அகமது 51 ரன்களும், முகமது ஹாரிஸ் மற்றும் முகமது நவாஸ் ஆகியோர் தலா 28 ரன்களும் எடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து, 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. அந்த அணி 9 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட் இழப்பிற்கு 69 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. டக்வொர்த் லூயிஸ் முறைப்படி பாகிஸ்தான் அணியை விட தென் ஆப்பிரிக்கா 15 ரன்கள் பின்தங்கியிருந்தது. இதனால் இப்போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டால் பாகிஸ்தான் அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் என்ற நிலை இருந்தது.

    ஆனால் சிறிது நேரத்தில் மழை நின்றதால் மீண்டும் போட்டி தொடங்கியது. போட்டி நேரம் பாதிக்கப்பட்டதால் ஓவர்கள் குறைக்கப்பட்டது. டக்வொர்த் லூயிஸ் விதிப்படி தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற 14 ஓவர்களில் 142 ரன்கள் ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    இந்த இலக்கை நோக்கி பயணித்த தென் ஆப்பிரிக்கா, 14 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்களே எடுத்தது. இதனால் பாகிஸ்தான் அணி, 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் டெம்பா பவுமா 36 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தானின் ஷாகீன் ஷா அப்ரிடி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி குரூப்2 புள்ளி பட்டியலில் 3ம் இடத்திற்கு முன்னேறியது. அரையிறுதி வாய்ப்பிலும் நீடிக்கிறது.

    • கடைசி ஓவர்களை ஒரு இளம் வீரர் வீசுவது அத்தனை சுலபம் கிடையாது.
    • பும்ரா இல்லாத நிலையில் அர்ஷ்தீப் சிங் இதனை சிறப்பாக செய்து வருகிறார்.

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் அடிலெய்ட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற வங்களாதேசம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி கடைசி ஓவரில் 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

    முன்னதாக கடைசி ஓவரில் வங்காளதேச அணியின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அதை வீசப் போவது அனுபவம் மிக்க ஷமியா அல்லது அர்ஷ்தீப் சிங்கா என ரசிகர்கள் இடையே குழப்பம் ஏற்பட்டது. ஆனால் கேப்டன் ரோகித் சர்மா அந்த ஓவரை அர்ஷ்தீப் சிங்கிடம் வழங்கினார். தமக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திய அர்ஷ்தீப், யார்க்கர் பந்து வீச்சை பயன்படுத்தினார்.

    இதனால் அந்த ஓவரில் வங்காளதேச அணியால் 14 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்தியாவின் வெற்றி குறித்து பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா இல்லாத சமயங்களில் டெத் ஓவர்களை வீச தயாராக இருக்கும்படி அர்ஷ்தீப் சிங்யிடம் ஏற்கனவே கூறியிருந்தாக தெரிவித்தார்.

    ஒரு இளம் வீரர் இதை செய்வது அத்தனை சுலபம் கிடையாது, அதற்கான நாங்கள் அவரை தயார்படுத்தினோம், கடந்த 9 மாதங்களாக அர்ஷ்தீப் சிறப்பாக அதை கையாளுகிறார் என்றும் அவர் தெரிவித்தார். இனியும் தொடர்ந்து அவர் சரியாக செய்வார் என்றும் ரோகித் சர்மா நம்பிக்கை தெரிவித்தார்.

    மேலும் நேற்றைய போட்டியில் தங்களது பீல்டிங் அற்புதமாக இருந்ததாகவும், சில கேட்சுகள் சிறப்பாக அமைந்தன. அழுத்தமான சூழலில் கேட்சுகளை பிடிப்பது எங்களது வீரர்களின் திறனை வெளிப்படுத்துகிறது, எங்களது பீல்டிங்கில் எனக்கு எந்த சந்தேகமும் இருந்ததில்லை என்றும் ரோகித் குறிப்பிட்டுள்ளார்.

    ×