search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    பத்திரிகையாளரின் கேள்வியால் ஆடிப்போன ஷாகிப் அல் ஹசன்: உரையாடல் உள்ளே...
    X

    பத்திரிகையாளரின் கேள்வியால் ஆடிப்போன ஷாகிப் அல் ஹசன்: உரையாடல் உள்ளே...

    • இந்தியா- வங்காளதேச அணிகள் விளையாடிய போட்டி மழையால் 16 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
    • மழைக்கு முன் வங்காளதேச அணியின் ஆட்டம் வெற்றி பெறுவதுபோல் இருந்தது.

    டி20 உலகக் கோப்பையில் இந்தியா- வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று நடைபெற்றது. 185 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களம் இறங்கியது. ஒரு கட்டத்தில் வங்காளதேசம் 7 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கிட்டது.

    அப்போது, வங்காளதேசம் 49 ரன்கள் எடுத்திருந்தது. டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்தியாவை விட 17 ரன்கள் அதிகமாக இருந்தது. மழை தொடர்ந்து பெய்ய வேண்டும். போட்டி அத்துடன் நிற்க வேண்டும் என வங்காள தேச வீரர்கள் மற்றும் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

    ஆனால் மழை நின்று ஆட்டம் மீண்டும் தொடங்கியது. ஓவர்கள் குறைக்கப்பட்டது. 16 ஓவரில் 151 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் வங்காளதேசம் அணியால் 145 ரன்களே அடிக்க முடிந்தது. இதனால் இந்தியா 5 ரன்னில் வெற்றி பெற்றது.

    மழை நின்று மீண்டும் ஆட்டம் தொடங்குவதற்கு முன் வங்காளதேச அணி கேப்டன் ஷாகிப் அல் ஹசன் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா மற்றும் நடுவருடன் பேசிக் கொண்டிருந்தார்.

    போட்டி முடிந்த பின்னர் வங்காளதேச அணி கேப்டன் ஷாகிப் அல் ஹசன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்வியால் ஷாகிப் அல் ஹசன் ஷாக் ஆகிவிட்டார்.

    ஷாகிப் அல் ஹசனுக்கும், பத்திரிகையாளருக்கும் இடையில் நடைபெற்ற சுவாரஸ்யமான உரையாடல் பின்வருமாறு:-

    பத்திரிகையாளர்: மழைக்குப்பின் நீங்கள் உண்மையிலேயே விளையாடாமல் இருக்க முயற்சித்தீர்களா?

    ஷாகிப்: எங்களுக்கு ஏதாவது ஆப்சன் இருக்கிறதா?

    பத்திரிகையாளர்: இல்லை. அது ஒரு காரணம்தான். இருந்தாலும், அவர்களை சம்மதிக்க வைக்க முயற்சித்தீர்களா?

    ஷாகிப்: யாரை சம்மதிக்க வைப்பது?

    பத்திரிகையாளர்: நடுவர்கள் மற்றும் ரோகித் சர்மா

    ஷாகிப்: நடுவரை சம்மதிக்க வைக்கும் திறன் என்னிடம் உள்ளதா?

    பத்திரிகையாளர்: அது சரிதான்... அப்படியென்றால் நீங்கள் வங்காளதேச ஆறுகளைப் பற்றியா விவாதித்துக் கொண்டிருந்தீர்கள்?

    ஷாகிப்: .... (பதில் அளிக்க முடியாமல் திகைத்து அப்படியே இருந்தார்.)

    பத்திரிகையாளர்: நீங்கள் வங்காளதேச ஆறுகள் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தீர்களா? அல்லது வேறு ஏதாவது பற்றி விவாதித்தீர்களா? என்ன பேசிக் கொண்டிருந்தீர்கள்? அதை வெளிப்படுத்த முடியுமா?

    ஷாகிப்: தற்போது நீங்கள் சரியான கேள்வியை எழுப்பியுள்ளீர்கள். நடுவர் இரு நாட்டு கேப்டன்களையும் அழைத்து டார்கெட், இன்னும் எத்தனை ஓவர் வீச வேண்டும், கடைபிடிக்க வேண்டிய விதிமுறை குறித்து பேசினார்.

    பத்திரிகையாளர்: அவ்வளவுதான்... நீங்கள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டீர்களா?

    ஷாகிப்: ஆமாம்.

    பத்திரிகையாளர்: அற்புதம்... நன்றி...

    Next Story
    ×