search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜனாதிபதி திரவுபதி முர்மு"

    • எதிர்க்கட்சி கூட்டணியினர் ஜனாதிபதி திரவுபதி முர்முவை இன்று சந்திக்க உள்ளனர்.
    • உள்துறை மந்திரி அமித் ஷா நேற்று ஜனாதிபதி முர்முவை நேரில் சந்தித்தார்.

    புதுடெல்லி:

    மணிப்பூர் விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்முவை எதிர்க்கட்சிகள் (I.N.D.I.A.)கூட்டணியினர் சந்திக்க உள்ளனர்.

    மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் ஜனாதிபதியிடம் மனு அளிக்க உள்ளன. மேலும், பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெறாதது குறித்தும் முறையிட உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று மரியாதை நிமித்தமாக ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்துப் பேசினார். ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

    மரியாதை நிமித்தமாக ஜனாதிபதி திரவுபதி முர்முவை உள்துறை மந்திரி அமித்ஷா சந்தித்துப் பேசினார் என ஜனாதிபதி மாளிகை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

    • அரவிந்தரின் 150-வது பிறந்த நாள் விழா அடுத்த மாதம் (ஆகஸ்டு) 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
    • ஆரோவில் மாத்ரி மந்திரில் கூட்டு தியானமும், ஆம்பி தியேட்டரில் ‘போன்பயர்’ எனப்படும் தீ மூட்டி கூட்டு தியானமும் நடக்கிறது.

    புதுச்சேரி:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியான ஆரோவில் பவுண்டேஷன் செயலாளர் ஜெயந்தி ரவி நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆரோவில் சர்வதேச நகரம் 55 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது. அதன் நோக்கம் வேற்றுமையில் மனித ஒற்றுமையாகும்.

    இந்த நிலையில் ஆரோவில் நிறுவன தினத்தையொட்டியும், அரவிந்தரின் 150-வது பிறந்தநாளையொட்டியும் ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகிற 8-ந்தேதி ஆரோவில்லுக்கு வருகை தருகிறார்.

    அன்று நண்பகல் 11 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ரவி, புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் பலர் கலந்து கொள்கிறார்கள்.

    மேலும் அரவிந்தரின் 150-வது பிறந்த நாள் விழா அடுத்த மாதம் (ஆகஸ்டு) 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அதையொட்டி ஆரோவில் மாத்ரி மந்திரில் கூட்டு தியானமும், ஆம்பி தியேட்டரில் 'போன்பயர்' எனப்படும் தீ மூட்டி கூட்டு தியானமும் நடக்கிறது.

    அரவிந்தர் பிறந்த மாதமான ஆகஸ்டு மாதம் முழுவதும் ஆரோவில்லில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதன்படி வருகிற 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை ஒற்றுமை நடைபயணம், மரம் வளர்ப்பு குறித்து கலந்துரையாடல், 25 முதல் 27-ந் தேதி வரை அரவிந்தரின் பன்முக திறன் குறித்து சர்வதேச எழுத்தாளர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது.
    • ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஜனாதிபதியாக பதவியேற்று ஓராண்டை நிறைவு செய்த திரவுபதி முர்முவுக்கு வாழ்த்துக்கள். பொது சேவையில் அவரது அயராத அர்ப்பணிப்பும், முன்னேற்றத்திற்கான இடைவிடாத நாட்டமும் மிகவும் ஊக்கமளிக்கிறது. அவரது பல்வேறு சாதனைகள் அவரது தலைமையின் உறுதியான தாக்கத்தை பிரதிபலிக்கின்றன என பதிவிட்டுள்ளார்.

    • ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு முதல் முறையாக திரவுபதி முர்மு சென்னை வர உள்ளார்.
    • சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்க உள்ளார்.

    சென்னை பல்கலைக்கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 6-ந்தேதி நடைபெற உள்ளது.

    பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெறும் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்க உள்ளார்.

    இதற்காக ஜனாதிபதி ஆகஸ்ட் 6-ந்தேதி சென்னை வர உள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு முதல் முறையாக திரவுபதி முர்மு சென்னை வர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இலங்கை அதிபர் விக்ரமசிங்கே ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து பேசினார்.
    • இந்தியா- இலங்கை வளர்ச்சி கூட்டாண்மை இலங்கையர்களின் வாழ்க்கையை நேர்மறையான வழியில் கொண்டு செல்லும்.

    இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இரண்டு நாள் அரசு முறை பயணமாக நேற்று இந்தியா வந்தார்.

    டெல்லிக்கு வந்தடைந்த அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இலங்கை அதிபர் விக்ரமசிங்கே இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது விக்ரமசிங்கேவை பிரதமர் மோடி கைகுலுக்கி வரவேற்றார்.

    பின்னர் இருவரும் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இதில் பல்வேறு விஷயங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசித்தனர்.

    பிறகு, இலங்கை அதிபர் விக்ரமசிங்கே ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து பேசினார்.

    சந்திப்பிற்கு பின்னர் ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியதாவது:-

    கடந்த ஒரு வருடத்தில் இலங்கையின் பொருளாதார சவால்களை முறியடிக்க இந்தியா அளித்த பலமுனை ஆதரவு இலங்கையுடனான இருதரப்பு உறவுகளுக்கான இந்தியாவின் நீண்டகால அர்ப்பணிப்புக்கு சான்றாகும்.

    இந்தியா எப்போதுமே இலங்கைக்குத் தேவையான நேரத்தில் துணை நிற்கிறது, எதிர்காலத்திலும் அதைத் தொடரும்.

    இந்தியா- இலங்கை கூட்டாண்மை நீடித்து வருகிறது. நமது இரு நாடுகள் மற்றும் பெரிய இந்தியப் பெருங்கடல் பகுதியின் சாமானிய மக்களுக்கு நன்மை பயக்கும். இலங்கையுடனான வளர்ச்சி கூட்டாண்மையை வலுப்படுத்த இந்தியா எதிர்நோக்குகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த சந்திப்பின் போது, இந்தியாவும் இலங்கையும் பல துறைகளில் பல முக்கிய திட்டங்களில் பணியாற்றி வருவதாகவும், இந்தியா- இலங்கை வளர்ச்சி கூட்டாண்மை இலங்கையர்களின் வாழ்க்கையை நேர்மறையான வழியில் தொட்டுள்ளது என்றும் இரு தலைவர்களும் குறிப்பிட்டனர்.

    • புதுவைக்கு வரும் ஜனாதிபதி கடற்கரை சாலையில் உள்ள நீதித்துறை விருந்தினர் மாளிகையில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
    • ஜனாதிபதியின் பாதுகாப்புக்காக பெங்களூரில் இருந்து குண்டு துளைக்காத கார் கொண்டு வரவும் போலீசார் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக புதுச்சேரிக்கு வருகிற 6-ந்தேதி வருகை தருகிறார். ஜனாதிபதி திரவுபதி முர்மு ஜூலை மாதம் புதுச்சேரி வருவதாக முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார்.

    ஆனால் ஜனாதிபதி வருகை திடீரென ரத்தானது. இந்நிலையில் இருநாள் பயணமாக வருகிற 6, 7-ந் தேதிகளில் ஜனாதிபதி திரவுபதி முர்மு புதுச்சேரி வர திட்டமிட்டுள்ளார்.

    அவர் புதுச்சேரியில் அரசு சார்பில் சமையல் கியாஸ் மானியம் ரூ.300 வழங்கும் திட்டம், குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம், பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வைப்புத்தொகை திட்டம் ஆகியவற்றை தொடங்கி வைக்கிறார்.

    புதுவைக்கு வரும் ஜனாதிபதி கடற்கரை சாலையில் உள்ள நீதித்துறை விருந்தினர் மாளிகையில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அவரின் பாதுகாப்புக்காக பெங்களூரில் இருந்து குண்டு துளைக்காத கார் கொண்டு வரவும் போலீசார் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    ஏற்கனவே ஜனாதிபதி இந்த மாதம் வருகை தருவதாக தெரிவிக்கப்பட்டு கடைசியில் அவர் பயணம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • பெங்களூரு கவர்னர் மாளிகையில் பழங்குடியின மக்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடினார்.
    • அப்போது பேசிய அவர், பெண்கள் கல்வி பயின்று முன்னேற்றம் அடைய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    பெங்களூரு:

    ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று தனி விமானம் மூலம் பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்தில் வந்து இறங்கினார். அவரை ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதல் மந்திரி சித்தராமையா உள்ளிட்டோர் பூங்கொடுத்து கொடுத்தும், மைசூரு தலைப்பாகை அணிவித்தும் வரவேற்றனர்.

    அதன்பின், அங்கிருந்து சிக்பள்ளாப்பூருக்கு புறப்பட்டுச் சென்ற ஜனாதிபதி திரவுபதி முர்மு, அங்கு நடைபெற்ற சத்யசாய் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். அங்கு அவர் பேசியதாவது:

    பல்வேறு துறைகளில் பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றம் இந்தியாவில் நிகழும் மாற்றத்தின் ஒரு பார்வையை முன்வைக்கிறது.

    இந்த ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் எங்கள் மகள்கள் முதல் 4 ரேங்க்களுக்குள் வந்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். சம வாய்ப்புகள் கிடைக்கும் போதெல்லாம் நம் மகள்கள் நம் ஆண்களை விட சிறப்பாக செயல்படுகிறார்கள் என்பதை இது குறிக்கிறது.

    இது இந்தியாவில் நிகழும் மாற்றம் மற்றும் நமது நாட்டின் பொன்னான எதிர்காலத்தின் ஒரு பார்வை என தெரிவித்தார்.

    யே டூ டிரெய்லர் ஹை. பிக்சர் அபி பாக்கி ஹை. (இது வெறும் டிரெய்லர். முக்கியப் படம் இன்னும் வெளிவரவில்லை) என பிரபல இந்தி திரைப்படத்தின் வசனத்தைச் சொல்லும்போது பார்வையாளர்கள் கரவொலி எழுப்பினர்.

    • ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு பக்ரீத் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    • அதில் ஈத் பண்டிகை அன்பையும், தியாகத்தையும் விளக்கும் புனித பண்டிகை என குறிப்பிட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு பக்ரீத் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஈத் பண்டிகை அன்பையும், தியாகத்தையும் விளக்கும் புனித பண்டிகை என்று குறிப்பிட்டுள்ளார்.

    தியாகம் மற்றும் மனித குலத்திற்கு தன்னலமற்ற சேவையை வழங்கும் பாதையைப் பின்பற்ற இந்தப் பண்டிகை நம்மை ஊக்குவிக்கிறது.

    இந்நாளில் சமுதாயத்திற்கு பரஸ்பர சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்தைப் பரப்ப நாம் அனைவரும் உறுதி எடுத்துக் கொள்வோம் என தெரிவித்துள்ளார்.

    • அர்ப்பணிப்பு, கடமை மற்றும் சமூக சேவைக்காக 30 செவிலியர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
    • மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா, இணை மந்திரி எஸ்.பி.பாகெல் கலந்து கொண்டனர்.

    புதுடெல்லி:

    நாடு முழுவதிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில், சிறப்பாக பணியாற்றும் செவிலியர்களைத் தேர்வு செய்து அவர்களை கவுரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருதை மத்திய அரசு வழங்கி வருகிறது. இது செவிலியர்களுக்கான மிக உயரிய விருது ஆகும்.

    அவ்வகையில் 2022 மற்றும் 2023ம் ஆண்டுகளுக்கான புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகள் இன்று வழங்கப்பட்டன. விருது வழங்கும் விழா ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. தேர்வு செய்யப்பட்ட செவிலியர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி வாழ்த்தினார்.

    செவிலியர் பணியில் அர்ப்பணிப்பு, கடமை மற்றும் சமூக சேவைக்காக 30 செவிலியர்களுக்கு இந்த மதிப்புமிக்க விருது வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா, இணை மந்திரி எஸ்.பி.பாகெல் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    • இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
    • அனைவருக்கும் ஊக்கமளிக்கும் வகையில் அவரது பொது வாழ்வு அமைந்திடவும் வாழ்த்துகிறேன்.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். இதையொட்டி அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் அவர் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:-

    இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். குடியரசுத் தலைவர் நல்ல உடல் நலத்துடனும், மகிழ்ச்சியுடனும் திகழவும், அனைவருக்கும் ஊக்கமளிக்கும் வகையில் அவரது பொது வாழ்வு அமைந்திடவும் வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    • வியட்நாம் ராணுவ மந்திரி பான் வான் ஜியாங் 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
    • ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்த அவர் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    புதுடெல்லி:

    வியட்நாம் நாட்டின் ராணுவ மந்திரி பான் வான் ஜியாங் 2 நாள் அரசுமுறை பயணமாக நேற்று இந்தியா வந்தார். முப்படை வீரர்களின் ராணுவ மரியாதையை ஏற்றுக்கொண்ட வியட்நாம் ராணுவ மந்திரி பான் வான் ஜியாங், டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

    தலைநகர் டெல்லியில் மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது, சீனாவின் ஆதிக்கம் மிகுந்த தென் சீனக் கடலின் நிலைமையை மறுபரிசீலனை செய்வது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். இருதரப்பு பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் இருவரும் தங்களது கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

    இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்முவை வியட்நாம் ராணுவ மந்திரி பான் வான் ஜியாங் நேற்று சந்தித்தார். இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது.

    • பராமரிபோ விமான நிலையத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு திரவுபதி முர்முவின் முதல் ஐரோப்பிய பயணம் இதுவாகும்.

    பராமரிபோ:

    தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சுரினாம் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான செர்பியா ஆகிய நாடுகளுக்கு இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு 6 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு அவரது முதல் ஐரோப்பிய பயணம் இதுவாகும்.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று விமானம் மூலமாக சுரினாம் நாட்டிற்குச் சென்றடைந்தார். அந்நாட்டின் தலைநகரான பராமரிபோவில் உள்ள ஜோஹன் அடால்ஃப் பெங்கல் சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்ற அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதற்கிடையே, சுரினாம் நாட்டின் அதிபர் சந்திரிகாபெர்சாத் சாந்தோகியை ஜனாதிபதி திரவுபதி முர்மு சந்தித்தார். அப்போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் விதமாக பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் சுகாதாரம், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

    இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு சுரினாம் நாட்டின் உயரிய விருதான, கிராண்ட் ஆர்டர் ஆப் தி செயின் ஆப் தி யெல்லோ ஸ்டார் விருதை அந்நாட்டு அதிபர் சாந்தோகி வழங்கி கவுரவித்தார்.

    அப்போது பேசிய ஜனாதிபதி திரவுபதி முர்மு, இந்த அங்கீகாரம் எனக்கு மட்டுமல்ல, இந்திய-சுரினாமியர் சமூகத்தின் அடுத்தடுத்த தலைமுறையினருக்கு இந்த விருதை அர்ப்பணிக்கிறேன் என தெரிவித்தார்.

    ×