search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோரமண்டல் விரைவு ரெயில் விபத்து"

    • சரக்கு ரெயில் மீது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மோதி பெட்டிகள் தடம் புரண்டது
    • விபத்தில் இதுவரை 260 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்

    ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் நேற்று மூன்று ரெயில்கள் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இதுவரை 261 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 900 பேர் காயமடைந்துள்ளனர். ஒரே இடத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் மூன்று ரெயில்கள் விபத்துக்குள்ளானது பல கேள்விகளை எழுப்பியுள்ளன. இருந்தாலும் எதிர்க்கட்சிகள், அரசியல் கட்சிகள் தற்போது இதுகுறித்து விமர்சனம் செய்யவில்லை.

    மீட்பு பணி நிறைவடைந்து ரெயில் தண்டவாளங்கள் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. ரெயில் விபத்து குறித்து உயர்மட்ட குழு விசாரிக்கும் என இந்திய ரெயில்வே துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

    தற்போது தொடக்க கட்ட விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. முதற்கட்ட விசாரணையில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் லைன் மாறி சென்றதுதான் இந்த கோர விபத்துக்கு முக்கிய காரணம் என தகவல் தெரிவிப்பதாக பி.டி.ஐ. செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

    பஹனாகா பஜார் ரெயில் நிலையம் அருகே நான்கு ரெயில் தண்டவாளங்கள் உள்ளன. அதில் ஒன்று லூப் லைன். லூப் லைன் ரெயில் நிலையம் அருகே மற்ற ரெயில்களுக்கு வழி விடவும், ரெயில்கள் எளிதாக சென்று வருவதற்காகவும் அமைக்கப்படும். அந்த லூப் லைன் சுமார் 750 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும்.

    அந்த லூப் லைனில்தான் சரக்கு ரெயில் நின்று கொண்டிருந்துள்ளது. மெயின் லைனில் வரக்கூடிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் திடீரென லூப் லைன் வழியாக சென்றுள்ளது. கோரமண்டல் ரெயில் 128 கி.மீட்டர் வேகத்தில் எதிர்பாராத விதமாக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரெயில் மேல் மோதி விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் தடம் புரண்ட பெட்டிகள் மற்றொரு தண்டவாளத்தில் சரிந்து விழுந்ததால் அந்த வழியாக 116 கி.மீட்டர் வேகத்தில் வந்த பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ், தடம் புரண்ட கோரமண்டல் ரெயில் பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால்தான் இந்த கோர விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இது குறித்து ரெயில்வே துறையில் உள்ள அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. முழுமையான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், நாசவேலைக்கான சாத்தியக்கூறுகள் குறித்து இதுவரை அதிகாரிகள் யாரும் பேசவில்லை.

    முழு விசாரணை முடிந்த பின்னர்தான் இதுகுறித்து தகவல் வெளிப்படையாக தெரியவரும்.

    கவாச் என்ற ரெயில் மோதல் தவிர்ப்பு சிஸ்டம் அந்த வழிப்பாதையில் இல்லை என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

    • நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்ததால் மருத்துவமனையில் கூட்டம் அலைமோதல்
    • 2000-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த பயணிகளுக்கு உதவி முன்வந்தனர்

    ஒடிசாவில் நடைபெற்ற ரெயில் விபத்து பாலசோர் மாவட்டத்திற்கு உட்பட்ட பஹனாகா பகுதியில் நடைபெற்றது. இதனால் காயம் அடைந்த 900-க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். குறிப்பாக பாலசோர் மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    விபத்து குறித்து அறிந்ததும் மருத்துவமனை நிர்வாகிகள் படுக்கை எண்ணிக்கைகளை அதிரிகத்தனர். இருந்தாலும் ஒரே நேரத்தில் ரத்தம் சொட்ட சொட்ட, கை கால்கள் இழந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதால் மருத்துவமனை போர்க்கள பகுதி போன்று காட்சியளித்தது.

    மேலும், மேற்கு வங்காளம், தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலத்தை சேர்ந்தவர்கள் பயணம் செய்ததால் மொழி தெரியாத காரணத்தினால் மருத்துவ உதவி செய்வதில் கம்யூனிகேசன் பிரச்சினை ஏற்பட்டது.

    இந்த அனுபவம் குறித்து மருத்துவமனையின் கூடுதல் மாவட்ட மருத்துவ அதிகாரி மிருதுன்ஜாய் மிஷ்ரா கூறியதாவது ''நான் பல ஆண்டுகளாக வேலை பார்த்திருக்கிறேன். எனது வாழ்நாளில் இதுபோன்ற பரபரப்பான, அலறல் சத்தத்துடன் கூடிய நிகழ்வை பார்த்தது கிடையாது.

    திடீரென 251 பேர் காயத்துடன் சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்டனர். போதுமான படுக்கைகள் இல்லை. மருத்துவ ஊழியரகள் இரவு பகலாக முதலுதவி அளித்தனர். ஐந்தாறு பயணிகளை பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரை செய்தோம். தற்போது 60 பயணிகள் படுக்கையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். சிறு காயம் அடைந்தவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். உதவி செய்த அனைவருக்கும் நன்றி. இது வாழ்நாள் அனுபவமாக இருக்கும். தற்போது எல்லாம் சகஜ நிலைக்கு வந்துள்ளது.

    பாலசோர் மருத்துவமனைக்கு முன்பு சுமார் 2000 பேர் கூடினர். அவர்கள் காயம் அடைந்தவர்களுக்கு உதவி செய்ததுடன், ரத்த தானமும் வழங்கினர்.

    • அமைச்சர் உதயநிதி தலைமையில் தமிழக குழு ஒடிசாவில் உள்ளது
    • தமிழகத்தில் சிகிச்சைக்காக மூன்று மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன

    ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனாகா என்ற இடத்தில் நேற்றிரவு 3 ரெயில்கள் விபத்துக்குள்ளாகிய கோர சம்பவம் நடைபெற்றது. இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 261 ஆக அதிகரித்துள்ளது. 900க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5 மணியளவில் ஒடிசாவில் இருக்கும் உதயநிதி தலைமையிலான தமிழக குழுவுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.

    அப்போது, அங்குள்ள நிலை குறித்து கேட்டறிந்தார். சென்னை தலைமை செயலகத்தில் காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர், அரசுத்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • விபத்து குறித்து தகவலறிந்ததும் தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உள்ளூர் மக்கள் துணையுடன் மீட்புப் பணியை தொடங்கினர்.
    • சுமார் 900 பயணிகள் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனாகா என்ற இடத்தில் நேற்றிரவு கோர மண்டல் மற்றும் பெங்களூரு ரெயில்களின் பெட்டிகள் அருகில் தண்டவாளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரெயிலுடன் மோதி நொறுங்கின. இவ்வாறு 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதியதால் அந்த பகுதி முழுவதுமே அதிர்ந்தது. சில நிமிடங்களுக்குள் அரங்கேறிய இந்த விபத்தால் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.

    விபத்து குறித்து தகவலறிந்ததும் தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உள்ளூர் மக்கள் துணையுடன் மீட்புப் பணியை தொடங்கினர்.

    மீட்கப்பட்ட பயணிகள் பாலசோர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், சோரோ கோபால்பூர் மற்றும் காந்தா படா பகுதிகளில் அமைந்து உள்ள மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேரம் செல்ல செல்ல காயம் அடைந்து வந்த பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது.

    இந்த நிலையில் இன்று காலை ரெயில்கள் விபத்தில் 238 பயணிகள் பலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இன்று மதியம் 12 மணியளவில் தென்கிழக்கு ரெயில்வே அதிகாரிகள் நிருபர்களிடம் கூறுகையில், '3 ரெயில்கள் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 261 ஆக உயர்ந்துள்ளது' என்று தெரிவித்தனர்.

    இதற்கிடையே சுமார் 900 பயணிகள் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் 650 பேருக்கு பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக தென்கிழக்கு ரெயில்வே செய்தி தொடர்பாளர் ஆதித்ய சவுத்ரி தெரிவித்தார்.

    2-வது நாளாக இன்று காலை மீட்பு பணி தீவிரமாக நடந்தது. 11 மணிக்கு அது நிறைவு பெற்றது. அதன்பிறகு அங்கு சீரமைப்பு பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இன்று காலையில் தான் கடைசி ரெயில் பெட்டி துண்டிக்கப்பட்டு மீட்புப் பணிகள் நடந்தன. எனவே பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

    • மீட்பு பணியில் ஒடிசா அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என ஏற்கனவே மம்தா அறிவிப்பு
    • மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் பலர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல்

    மூன்று ரெயில்கள் விபத்துக்குள்ளான பகுதிக்குச் சென்று பார்வையிட்டார் மேற்கு வங்காள மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி. அதன்பின் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

    இந்த நூற்றாண்டின் இந்தியாவில் மிகப்பெரிய ரெயில் விபத்து இது. பலியானோர் எண்ணிக்கை உயரலாம். ரெயில்வே துறை உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்குவாக அறிவித்துள்ளது.

    நாங்கள் மேற்கு வங்காள மாநிலத்தைச் சார்ந்தவர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்க இருக்கிறோம். வேலை முடியும் வரை மேற்கு வங்காள மக்கள் ரெயில்வே மற்றும் ஒடிசா அரசுடன் இணைந்து வேலை செய்வார்கள்'' எனத் தெரிவித்தார்.

    இந்த விபத்தில் இரண்டு ரெயில்களின் 17 பெட்டிகள் தடம் புரண்டன. இதுவரை 261 பேர் உயிரிழந்துள்ளனர். 900-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

    மீட்பு பணி நிறைவடைந்த நிலையில், தற்போது தண்டவாளம் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது.

    • விபத்துக்குள்ளான கோரமண்டல் ரெயிலில் 867 பயணிகள் சென்னை வர முன்பதிவு செய்துள்ளனர்.
    • சென்ட்ரல் விசாரணை மையத்திற்கு ஆயிரத்திற்கும் மேலான போன்கள் வந்துள்ளன.

    சென்னை:

    ஒடிசா ரெயில் விபத்து குறித்து சென்னை ரெயில்வே கோட்ட மேலாளர் கணேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    விபத்துக்குள்ளான கோரமண்டல் ரெயிலில் 867 பயணிகள் சென்னை வர முன்பதிவு செய்துள்ளனர். அதிகாரிகளுடன் தொடர்ந்து மீட்பு பணிகள் குறித்து கேட்ட றிந்து வருகிறோம். சென்ட்ரல் விசாரணை மையத்திற்கு ஆயிரத்திற்கும் மேலான போன்கள் வந்துள்ளன. உறவினர்களுக்கு உரிய தகவல், விவரங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 70 ஐசியு படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.
    • அறுவை சிகிச்சை மேற்கொள்ளவும் 50 பேர் கொண்ட மருத்துவ குழு தயார் நிலையில் உள்ளது.

    ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனாகா என்ற இடத்தில் நேற்றிரவு 3 ரெயில்கள் விபத்துக்குள்ளாகிய கோர சம்பவம் நடைபெற்றது. இந்த கோர விபத்தில் 17 பெட்டிகள் தடம்புரண்டன. விபத்தில் 261 பேர் பலியாகியுள்ளனர். 600-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். சுமார் 16 மணி நேரம் நடைபெற்ற மீட்பு பணிகள் இன்று காலை 11 மணியளவில் நிறைவடைந்தன.

    விபத்தில் சிக்கிய 2 ரெயில்களிலும் 132 தமிழக பயணிகள் பயணம் செய்தனர். இதில் 35 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    இந்நிலையில், விபத்தில் சிக்கியவர்களுக்கு சிகிக்சை அளிக்க கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைகளில் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 70 ஐசியு படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. அறுவை சிகிச்சை மேற்கொள்ளவும் 50 பேர் கொண்ட மருத்துவ குழு தயார் நிலையில் உள்ளது.

    • விபத்து நடந்த வழித்தடத்தில் கவாச் சிஸ்டம் இன்னும் செயல்படுத்தவில்லை என ரெயில்வேதுறை செய்தி தொடர்பாளர் அமிதாப் ஷர்மா தெரிவித்துள்ளார்.
    • விபத்து நடைபெற்ற இடத்திற்கு சென்று பார்வையிட்ட ரெயில்வேதுறை மந்திரி, விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

    ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனாகா என்ற இடத்தில் நேற்றிரவு மூன்று ரெயில்கள் விபத்துக்குள்ளாகிய கோர சம்பவம் நடைபெற்றது. சுமார் 16 மணி நேரம் இடைவிடாத மீட்புப்பணியில் வீரர்கள் ஈடுபட இன்று காலை 11 மணியளவில் மீட்புப்பணிகள் நிறைவடைந்தன.

    இந்த கோர விபத்தில் 17 பெட்டிகள் தடம்புரண்டன. இந்த மோசமான சம்பவத்தில் 238 பேர் பலியாகியுள்ளனர். 600-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

    விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக ரெயில்வே நிர்வாகம் அறிவிக்காத நிலையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    முதலில் மேற்கு வங்காள மாநிலம் ஷாலிமாரில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி கோரமண்டல் ஷாலிமார் எக்ஸ்பிரஸ் சம்பவ இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள் தடம் புரண்டன.

    தடம் புரண்ட ரெயில் பெட்டிகள் அருகில் உள்ள தண்டவாளத்தில் விழுந்ததாக கூறப்படுகிறது. அதேவேளையில் பெட்டிகள் கிடந்த தண்டவாளத்தில் கர்நாடகா மாநிலம் யஸ்வந்த்புரில் இருந்து மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா சென்ற அதிவேக ரெயில், கோரமண்டல ரெயில் பெட்டிகள் மீது மோதியதால் அந்த ரெயிலும் தடம் புரண்டது.

    மொத்தம் 17 பெட்டிகள் தடம் புரண்டு ஒரு பெட்டி மீது இன்னொரு பெட்டி இடித்துக் கொண்டிருந்தன. பல பெட்டிகள் பலத்த சேதம் அடைந்தனர்.

    தலைவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்த வண்ணம் உள்ளனர். இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு இரங்கலும், இழப்பீடும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இருந்தாலும், இந்த கோர விபத்துக்கு தொழில்நுட்ப கோளாறு காரணமா? அல்லது மனிதத் தவறா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    எழுப்பப்படும் கேள்விகள்:-

    1. அனைவருடைய பார்வையிலும் ஒரே இடத்தில் அடுத்தடுத்த விபத்து, அதுவும் மூன்று ரெயில்கள் ஒரே இடத்தில் மோதியது எப்படி? என்பதுதான்.

    2. சரக்கு ரெயில் நின்று கொண்டிருக்கும்போது, அதே ரெயில்பாதையில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் வந்தது எப்படி?. இது தொழில்நுட்பக் கோளாறா? அல்லது மனிதத்தவறா?

    3. பலர் சிக்னல் தவறு என கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

    4. ரெயில்வே அமைச்சகம் விபத்துகளை தடுப்பதற்கான 'கவாச்' சிஸ்டத்தை செயல்படுத்தி வருகிறது. ரெயில் சிக்னலை தாண்டும்போது, மோதலுக்கான வாய்ப்புகள் இருக்குமெனில் எச்சரிக்கை தகவலை அனுப்பும். அப்போது எதிரே வரும் ரெயிலை அறிந்து டிரைவர் சுதாரித்துக் கொண்டு பிரேக் மூலம் ரெயில்களை நிறுத்த முடியும்.

    இப்படி இருக்கும்போது 3 ரெயில்கள் எப்படி ஒரே இடத்தில் மோதியது என்ற கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

    விபத்து நடந்த வழித்தடத்தில் கவாச் சிஸ்டம் இன்னும் செயல்படுத்தவில்லை என ரெயில்வேதுறை செய்தி தொடர்பாளர் அமிதாப் ஷர்மா தெரிவித்துள்ளார்.

    விபத்து நடைபெற்ற இடத்திற்கு சென்று பார்வையிட்ட ரெயில்வேதுறை மந்திரி, விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். விசாரணைக்குப் பின்புதான் முழுத் தகவல் தெரியவரும்.

    • கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலின் 10க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டன.
    • இந்த கோர விபத்தில் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.

    புதுடெல்லி:

    ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே கோரமண்டல் விரைவு ரெயில் உள்ளிட்ட பயணிகள் ரெயில்கள் தடம் புரண்டு விபத்தில் சிக்கின. இதில் 60 பேர் உயிரிழந்துள்ளனர், 600க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    ரெயில் விபத்து தொடர்பாக பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் நிவாரணம் அறிவித்துள்ளார்.

    இந்நிலையில், ரெயில் விபத்து தொடர்பாக உயர்மட்ட குழுவை அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும், ரெயில் விபத்து எப்படி நடைபெற்றது என்பது குறித்து விசாரணை நடத்தவும் மத்திய ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டுள்ளார்.

    • ஒடிசாவின் பாலசோர் அருகே பயணிகள் ரெயில் தடம் புரண்டு விபத்தில் சிக்கியது.
    • இதில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    புதுடெல்லி:

    கோரமண்டல் விரைவு ரெயில் ஒடிசா மாநிலம் பாலஷோர் அருகே சரக்கு ரெயிலுடன் மோதியதில் தடம் புரண்டு விபத்தில் சிக்கியது. இதில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்தில் 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    வனப்பகுதியில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. இரவு நேரம் என்பதால் கடும் சிரமங்களுக்கு இடையே மீட்புப்பணிகள் நடக்கின்றன. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விபத்து நடைபெற்ற இடத்திற்கு விரைந்துள்ளனர்.

    ரெயில் விபத்து தொடர்பாக பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் நிவாரணம் அறிவித்துள்ளார்.

    இந்நிலையில், ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • கோரமண்டல் விரைவு ரெயில் ஒடிசாவின் பாலஷோர் அருகே சரக்கு ரெயிலுடன் மோதியதில் தடம் புரண்டு விபத்தில் சிக்கியது.
    • இதில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    புவனேஷ்வர்:

    கோரமண்டல் விரைவு ரெயில் ஒடிசா மாநிலம் பாலஷோர் அருகே சரக்கு ரெயிலுடன் மோதியதில் தடம் புரண்டு விபத்தில் சிக்கியது. இதில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்தில் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரெயில் விபத்து பற்றிய முழுமையான தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

    வனப்பகுதியில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. இரவு நேரம் என்பதால் கடும் சிரமங்களுக்கு இடையே மீட்புப்பணிகள் நடக்கின்றன. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விபத்து நடைபெற்ற இடத்திற்கு விரைந்துள்ளனர்.

    ரெயில் விபத்து தொடர்பாக பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் நிவாரணம் அறிவித்துள்ளார்.

    ரெயில் விபத்து நிகழ்ந்த இடத்துக்கு செல்ல உள்ளேன். ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சமும், படுகாயம் அடைந்துள்ளவர்களுக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம் அறிவித்துள்ளார்.

    • ஒடிசாவின் பலாஷோர் அருகே கோரமண்டல் விரைவு ரெயில் சரக்கு ரெயிலுடன் மோதியதில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
    • கோரமண்டல் ரெயில் விபத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    புவனேஷ்வர்:

    கோரமண்டல் விரைவு ரெயில் ஒடிசா மாநிலம் பலாஷோர் அருகே சரக்கு ரெயிலுடன் மோதியதில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது. விபத்தில் காயம் அடைந்தவர்கள் 300 பேர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். எனினும் ரெயில் விபத்து பற்றிய முழுமையான தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

    வனப்பகுதியில் இந்த விபத்து நடைபெற்று இருப்பதாகவும் இரவு நேரம் என்பதால் கடும் சிரமங்களுக்கு இடையே மீட்பு பணிகள் நடப்பதாகவும் பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விபத்து நடைபெற்ற இடத்திற்கு விரைந்துள்ளனர்.

    இந்நிலையில், இந்த ரெயில் விபத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்தால் வேதனை அடைந்துள்ளேன். துக்கத்தின் இந்த நேரத்தில், என் எண்ணங்கள் இறந்த குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவிடம் பேசினேன். விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன, பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன என பதிவிட்டுள்ளார்.

    ×