search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    3 ரெயில்கள் மோதி பயங்கர விபத்து- பலி எண்ணிக்கை 261ஆக உயர்வு
    X

    3 ரெயில்கள் மோதி பயங்கர விபத்து- பலி எண்ணிக்கை 261ஆக உயர்வு

    • விபத்து குறித்து தகவலறிந்ததும் தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உள்ளூர் மக்கள் துணையுடன் மீட்புப் பணியை தொடங்கினர்.
    • சுமார் 900 பயணிகள் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனாகா என்ற இடத்தில் நேற்றிரவு கோர மண்டல் மற்றும் பெங்களூரு ரெயில்களின் பெட்டிகள் அருகில் தண்டவாளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரெயிலுடன் மோதி நொறுங்கின. இவ்வாறு 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதியதால் அந்த பகுதி முழுவதுமே அதிர்ந்தது. சில நிமிடங்களுக்குள் அரங்கேறிய இந்த விபத்தால் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.

    விபத்து குறித்து தகவலறிந்ததும் தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உள்ளூர் மக்கள் துணையுடன் மீட்புப் பணியை தொடங்கினர்.

    மீட்கப்பட்ட பயணிகள் பாலசோர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், சோரோ கோபால்பூர் மற்றும் காந்தா படா பகுதிகளில் அமைந்து உள்ள மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேரம் செல்ல செல்ல காயம் அடைந்து வந்த பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது.

    இந்த நிலையில் இன்று காலை ரெயில்கள் விபத்தில் 238 பயணிகள் பலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இன்று மதியம் 12 மணியளவில் தென்கிழக்கு ரெயில்வே அதிகாரிகள் நிருபர்களிடம் கூறுகையில், '3 ரெயில்கள் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 261 ஆக உயர்ந்துள்ளது' என்று தெரிவித்தனர்.

    இதற்கிடையே சுமார் 900 பயணிகள் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் 650 பேருக்கு பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக தென்கிழக்கு ரெயில்வே செய்தி தொடர்பாளர் ஆதித்ய சவுத்ரி தெரிவித்தார்.

    2-வது நாளாக இன்று காலை மீட்பு பணி தீவிரமாக நடந்தது. 11 மணிக்கு அது நிறைவு பெற்றது. அதன்பிறகு அங்கு சீரமைப்பு பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இன்று காலையில் தான் கடைசி ரெயில் பெட்டி துண்டிக்கப்பட்டு மீட்புப் பணிகள் நடந்தன. எனவே பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

    Next Story
    ×