search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ரெயில் விபத்துக்கு காரணம் தொழில்நுட்பம் கோளாறா? அல்லது மனிதத் தவறா?- எழும் பல்வேறு கேள்விகள்
    X

    ரெயில் விபத்துக்கு காரணம் தொழில்நுட்பம் கோளாறா? அல்லது மனிதத் தவறா?- எழும் பல்வேறு கேள்விகள்

    • விபத்து நடந்த வழித்தடத்தில் கவாச் சிஸ்டம் இன்னும் செயல்படுத்தவில்லை என ரெயில்வேதுறை செய்தி தொடர்பாளர் அமிதாப் ஷர்மா தெரிவித்துள்ளார்.
    • விபத்து நடைபெற்ற இடத்திற்கு சென்று பார்வையிட்ட ரெயில்வேதுறை மந்திரி, விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

    ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனாகா என்ற இடத்தில் நேற்றிரவு மூன்று ரெயில்கள் விபத்துக்குள்ளாகிய கோர சம்பவம் நடைபெற்றது. சுமார் 16 மணி நேரம் இடைவிடாத மீட்புப்பணியில் வீரர்கள் ஈடுபட இன்று காலை 11 மணியளவில் மீட்புப்பணிகள் நிறைவடைந்தன.

    இந்த கோர விபத்தில் 17 பெட்டிகள் தடம்புரண்டன. இந்த மோசமான சம்பவத்தில் 238 பேர் பலியாகியுள்ளனர். 600-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

    விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக ரெயில்வே நிர்வாகம் அறிவிக்காத நிலையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    முதலில் மேற்கு வங்காள மாநிலம் ஷாலிமாரில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி கோரமண்டல் ஷாலிமார் எக்ஸ்பிரஸ் சம்பவ இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள் தடம் புரண்டன.

    தடம் புரண்ட ரெயில் பெட்டிகள் அருகில் உள்ள தண்டவாளத்தில் விழுந்ததாக கூறப்படுகிறது. அதேவேளையில் பெட்டிகள் கிடந்த தண்டவாளத்தில் கர்நாடகா மாநிலம் யஸ்வந்த்புரில் இருந்து மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா சென்ற அதிவேக ரெயில், கோரமண்டல ரெயில் பெட்டிகள் மீது மோதியதால் அந்த ரெயிலும் தடம் புரண்டது.

    மொத்தம் 17 பெட்டிகள் தடம் புரண்டு ஒரு பெட்டி மீது இன்னொரு பெட்டி இடித்துக் கொண்டிருந்தன. பல பெட்டிகள் பலத்த சேதம் அடைந்தனர்.

    தலைவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்த வண்ணம் உள்ளனர். இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு இரங்கலும், இழப்பீடும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இருந்தாலும், இந்த கோர விபத்துக்கு தொழில்நுட்ப கோளாறு காரணமா? அல்லது மனிதத் தவறா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    எழுப்பப்படும் கேள்விகள்:-

    1. அனைவருடைய பார்வையிலும் ஒரே இடத்தில் அடுத்தடுத்த விபத்து, அதுவும் மூன்று ரெயில்கள் ஒரே இடத்தில் மோதியது எப்படி? என்பதுதான்.

    2. சரக்கு ரெயில் நின்று கொண்டிருக்கும்போது, அதே ரெயில்பாதையில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் வந்தது எப்படி?. இது தொழில்நுட்பக் கோளாறா? அல்லது மனிதத்தவறா?

    3. பலர் சிக்னல் தவறு என கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

    4. ரெயில்வே அமைச்சகம் விபத்துகளை தடுப்பதற்கான 'கவாச்' சிஸ்டத்தை செயல்படுத்தி வருகிறது. ரெயில் சிக்னலை தாண்டும்போது, மோதலுக்கான வாய்ப்புகள் இருக்குமெனில் எச்சரிக்கை தகவலை அனுப்பும். அப்போது எதிரே வரும் ரெயிலை அறிந்து டிரைவர் சுதாரித்துக் கொண்டு பிரேக் மூலம் ரெயில்களை நிறுத்த முடியும்.

    இப்படி இருக்கும்போது 3 ரெயில்கள் எப்படி ஒரே இடத்தில் மோதியது என்ற கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

    விபத்து நடந்த வழித்தடத்தில் கவாச் சிஸ்டம் இன்னும் செயல்படுத்தவில்லை என ரெயில்வேதுறை செய்தி தொடர்பாளர் அமிதாப் ஷர்மா தெரிவித்துள்ளார்.

    விபத்து நடைபெற்ற இடத்திற்கு சென்று பார்வையிட்ட ரெயில்வேதுறை மந்திரி, விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். விசாரணைக்குப் பின்புதான் முழுத் தகவல் தெரியவரும்.

    Next Story
    ×