search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காட்டு யானை"

    • காட்டு யானை வாழை மரங்களை முறித்து சேதப்படுத்தியது.
    • யானைகள் ஊருக்குள் வராமல் இருக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் அவ்வப்போது வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காகவும், தண்ணீருக்காகவும் வன எல்லையில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருவது வாடிக்கையாக உள்ளது.

    இந்நிலையில் கள்ளிப்பட்டி அருகே உள்ள பெருமுகை கிராம வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை ஒன்று சஞ்சீவராயன் குளம் அருகே மணி என்பவரது விவசாய தோட்டத்திற்குள் புகுந்தது.

    சுமார் 1½ ஏக்கரில் கரும்பு விளைவித்து இருந்த விவசாய தோட்டத்தில் புகுந்த காட்டு யானை 50-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை முறித்து சேதப்படுத்தியது.

    வாழை மரங்களை யானை சேதப்படுத்துவதை அறிந்த கிராம மக்கள் பட்டாசு வெடித்தும், சத்த மிட்டவாறும் யானையை வனபகுதிக்குள் விரட்டி யதாக கூறப்படுகிறது.

    அப்போது யானை வனப்பகுதியை யொட்டிய குடியிருப்பு வழியாக சென்று மீண்டும் வனப்பகு திக்குள் சென்று மறைந்தது.

    அடிக்கடி யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாய நிலங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் அந்தியூர் வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்த அந்தியூர் வனத்துறையினர் அப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தும், யானைகள் ஊருக்குள் வராமல் இருக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

    • இரவு நேரங்களில் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் புகுந்து உலா வருகின்றன.
    • பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர வேண்டாம்.

    வால்பாறை:

    கேரளா மாநிலத்தில் இருந்து ஆண்டுதோறும் நவம்பர் மாதங்களில் காட்டு யானைகள் கூட்டம்-கூட்டமாக வால்பாறை வனப்பகுதிக்கு திரண்டு வருவது வழக்கம்.

    இங்கு அவை 3 மாதங்களுக்கு மேல் தங்கியிருக்கும். மேலும் கேரளாவில் இருந்து காட்டு யானைகளின் இடப்பெயர்வு தொடர்ந்து 3 மாதம்வரை நீடிக்கும்.

    இந்நிலையில் கேரளாவில் இருந்து காட்டு யானைகள் கூட்டம்-கூட்டமாக வால்பாறைக்கு வந்தபடி உள்ளன. அவை தற்போது கேரள மாநில வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள சின்கோனா, மூடிஸ், நல்லமுடி, ஷேக்கல்முடி எஸ்டேட்டுகள் வழியாக வால்பாறைக்கு வந்து கொண்டு உள்ளன.

    இதன் ஒரு பகுதியாக கேரளாவில் இருந்து இடம்பெயர்ந்து வந்து உள்ள 20 காட்டு யானைகள் தற்போது வால்பாறை தேயிலை எஸ்டேட் பகுதியில் முகாமிட்டு உள்ளன. அவை இரவு நேரங்களில் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் புகுந்து உலா வருகின்றன. மேலும் அங்குள்ள விளைநிலங்களில் புகுந்து சேதம் ஏற்படுத்தி வருகின்றன.

    வால்பாறை தேயிலை எஸ்டேட் பகுதிகளில் முகாமிட்டு உள்ள காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணிகளில் வன ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் தேயிலை எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் கூட்டம்-கூட்டமாக முகாமிட்டு நிற்பதால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர வேண்டாம், அப்படியே வெளியில் செல்வதாக இருந்தால் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    • பலத்த காயமடைந்த சாக்கப்பாவை பொது மக்கள் மற்றும் வனத்துறையினர் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
    • சான மாவு வனப்பகுதியில் 5 காட்டு யானைகளும் சுற்றித் திரிவதால் பொது மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள கெலமங்கலம் அடுத்த விருப்பாச்சி நகரை சேர்ந்தவர் சாக்கப்பா (வயது45).

    இவரது மனைவி திம்மக்கா. கூலி வேலை செய்து வரும் சாக்கப்பாவுக்கு 6 குழந்தைகள் உள்ளனர். சாக்கப்பா இன்று விருப்பாச்சி நகரிலிருந்து சினிகிரிப்பள்ளி கிராமத்திற்கு கூலி வேலைக்கு சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் சுற்றித்திரிந்த ஒற்றை காட்டு யானை சாக்கப்பாவை தாக்கி உள்ளது.

    இதில் அவருக்கு வலது காலில் பலத்த காயங்கள் ஏற்பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பி உள்ளார்.

    பலத்த காயமடைந்த சாக்கப்பாவை பொது மக்கள் மற்றும் வனத்துறையினர் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இது குறித்து ஓசூர் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சினிகிரிப் பள்ளி பகுதியில் ஒற்றை காட்டு யானையும் சான மாவு வனப்பகுதியில் 5 காட்டு யானைகளும் சுற்றித் திரிவதால் பொது மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • தருமபுரி அருகே காட்டு யானை தாக்கியதில் விவசாயி படுகாயம் அடைந்தார். அவரை உடனே அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • வனத்தை ஒட்டி உள்ள பொதுமக்களும் விவ–சாயிகளும் வனப்பகுதிக்குள் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    தருமபுரி

    தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அருகே வன பகுதியை ஒட்டியுள்ள ஜில் திம்மனூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி குள்ளப்பன் (வயது .60) இவர் நேற்று மதியம் அதே பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்தில் விவசாய பணிசெய்து கொண்டி ருந்தார்.

    அப்போது தனது விவசாய நிலத்தில் இருந்து இலை தலை பறிப்பதற்காக தேன்கனிக்கோட்டை வன சரகத்திற்கு உட்பட்ட வன சரகம் ஆகும் இந்த இந்த வனத்திற்குள் குள்ளப்பன் சென்றுள்ளார். அந்த வனப்பகுதியில் 2 காட்டு யானைகள் இருந்துள்ளது இந்த நிலையில் குள்ளப்பனை கண்ட இரண்டு காட்டு யானைகளில் ஒன்று திடீரென ஆக்ரோசமாகி குள்ளப்பனை தும்பிக்கையால் தாக்கியும்,

    தொடையை தந்தந்தால் குத்தி கிழித்து விட்டு அங்கி ருந்து சென்றது. இதில் குள்ளப்பன் பலத்த காயமடைந்து மயக்கமடைந்தார், அப்போ து வனப்பகுதியில் மாடு மேய்த்து கொண்டிருந்தவர்கள், இதனை கண்டு காயமடைந்த விவசாயி குள்ளப்பனை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விவ சாயி குள்ளப்பன் யா னையால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது.

    இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது:-

    தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் ஆடு மாடுகள் மேய்க்கவும் கனிம வளங்களை எடுப்பதற்காகவும் உள்ளே செல்லக் கூடாது என அரசு கட்டுப்பாடுகள் விதித்தும் விதிமுறைகளை மீறி பாதுகாக்கப்பட்ட வனப்ப குதிக்குள் செல்லும்போது இது போன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. வனத்தை ஒட்டி உள்ள பொதுமக்களும் விவ–சாயிகளும் வனப்பகுதிக்குள் செல்வதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். மேலும் அரசு விதிமுறைகளை மீறி வனப்–பகுதிக்குள் செல்வார்கள் மீது கடுமை யான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

    • திடீரென வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானை ஒன்று அந்த சரக்கு வாகனத்தை வழிமறித்து நிறுத்தியது.
    • சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட திம்பம் மலைப்பாதை உள்ளது.

    இங்கு சாம்ராஜ்நகர், தாளவாடி, ஆசனூர் ஆகிய பகுதிகளில் இருந்து அறுவடை செய்யப்படும் உரு ளைக்கிழங்கு மற்றும் காய்கறிகள் ஏராளமான மினி ஆட்டோக்களில் தினமும் ஈரோடு மற்றும் மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளுக்கு விற்பனைக்காக எடுத்துச் செல்லப்படுகிறது.

    நேற்று இரவு தாளவாடி பகுதியில் அறுவடை செய்யப்பட்ட உருளைக்கிழங்கு மூட்டைகளை ஏற்றி கொண்டு சரக்கு வாகனம் திம்பம் மலைப் பாதையில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானை ஒன்று அந்த சரக்கு வாகனத்தை வழிமறித்து நிறுத்தியது.

    அப்போது சாலையின் ஓரமாக யானையை தாண்டி சென்று விடலாம் என எண்ணி ஓட்டுனர் வாகனத்தை இயக்கிய போது, காட்டு யானை அந்த சரக்கு வாகனத்தை தனது தும்பிக்கையால் பிடித்து நிறுத்தியது. அதன் பிறகு மேல் பகுதியில் வைத்திருந்த உருளைக்கிழங்கு மூட்டையை தும்பிக்கையால் இழுத்து கீழே தள்ளியது.

    பின்பு உருளைகிழங்கு மூட்டையை உண்பதற்காக எடுத்துச் சென்றது. இதனால் அந்தப் பகுதியில் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது. சுமார் அரை மணி நேரத்தி ற்கு பிறகு யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பிறகே போக்குவரத்து மீண்டும் சீரானது.

    • யானை ஊருக்குள் வந்ததை அறிந்ததும் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.
    • வேட்டை தடுப்பு காவலர்கள் காட்டு யானையிடம் போ ராசா. இது மக்கள் வாழும் பகுதி வராதே என சத்தமாக பேசி விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது,

    காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து மளிகை கடை, சத்துணவு மையம், வீடுகள் போன்றவைகளை உடைத்து உணவுகளை சாப்பிட்டு சென்று வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் புதுத்தோட்டம் எஸ்டேட் பகுதியில் பகல் நேரத்தில் ஒற்றைக் காட்டு யானை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது.

    பின்னர் வீடுகளில் அருகில் யானை சுற்றி வந்தது.

    யானை ஊருக்குள் வந்ததை அறிந்ததும் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குள் முடங்கினர். மேலும் இதுகுறித்து வனத்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

    தகவல் அறிந்து வந்த வால்பாறை வன சரக வேட்டை தடுப்பு காவலர்கள் குடியிருப்பு பகுதியில் நுழைந்த காட்டு யானையை விரட்டும் பணிகள் ஈடுபட்டனர்.

    அப்போது வேட்டை தடுப்பு காவலர்கள் காட்டு யானையிடம் போ ராசா. இது மக்கள் வாழும் பகுதி வராதே என சத்தமாக பேசி விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது யானை திடீரென வேட்டை தடுப்பு காவலர்களை நோக்கி விரட்டி வந்தது. இதனால் அவர்கள் அச்சம் அடைந்து ஓடினர். பின்பு யானையிடம் சத்தமாக பேசி வனப்பகுதிக்கு விரட்டினர். யானையும் அவர்களின் பேச்சை கேட்டு அங்கிருந்து அடர்ந்த வனத்திற்குள் சென்றது.

    வேட்டுத்தடுப்பு காவலர்கள் யானையிடம் பேசியே யானையை விரட்டியது அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

    • எதிர்பாராதவிதமாக திடீரென அந்த ஒற்றை யானை டிராக்டரை காலால் உதைத்து சேதப்படுத்தியது.
    • பல மணிநேரம் போராட்டத்திற்கு பிறகு ஒற்றை காட்டு யானையை பொதுமக்கள் உதவியுடன் வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், பவானிசாகர், புளியம்பட்டி வனப்பகுதிகளில் யானைகள் உள்பட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் யானைகள் அருகே உள்ள கிராமங்களில் அடிக்கடி புகுந்து விடுகிறது. மேலும் அந்த யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து வாழைகள் மற்றும் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அடுத்த பவானிசாகர் விளாமுண்டி வனச்சரகத்துக்கு உட்பட்ட சித்தன் குட்டை அய்யம்பாளையம் செல்வ கணேசபுரம் கிராமத்துக்குள் ஒற்றை காட்டு யானை புகுந்தது. இதை தொடர்ந்து அந்த யானை விவசாய நிலங்களில் புகுந்து அங்கு பயிரிடப்பட்ட சுமார் 2000-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை உடைத்து சுவைத்து தின்று சேதப்படுத்தியது.

    இதையடுத்து ஓட்டு சாலைகள், தண்ணீர் குழாய்கள், கம்பி வேலிகள் உள்ளிட்டவைகளை சேதப்படுத்தியது. இதை கண்ட பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

    தகவல் அறிந்து வந்த வனத்துறை அதிகாரிகள் டிராக்டர் மற்றும் வனத்துறை வாகனங்கள் மூலம் பொதுமக்கள் உதவியுடன் அந்த ஒற்றை காட்டு யானையை வனத்துக்குள் விரட்டி அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென அந்த ஒற்றை யானை டிராக்டரை காலால் உதைத்து சேதப்படுத்தியது. மேலும் வனத்துறை ஜீப் மற்றும் வாகனத்தை யானை விரட்டி சென்றது. இதையடுத்து அதன் தும்பிக்கையால் தூக்கி அடித்ததில் வாகனம் முன்பகுதி சேதமடைந்தது.

    மேலும் பல மணிநேரம் போராட்டத்திற்கு பிறகு ஒற்றை காட்டு யானையை பொதுமக்கள் உதவியுடன் வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

    இதுகுறித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கூறியதாவது:-

    இந்த பகுதியில் ஏராளமான விளை நிலங்கள் உள்ளன. இங்கு விவசாயம் செய்து வருகிறோம். வாழை மரங்களை நடவு செய்து அறுவடைக்கு வரும் வரை பாதுகாத்து வருகிறோம்.

    ஆனால் வாழைதார்கள் அறுவடைக்கு வரும் முன் யானைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து வாழைகளை சேதப்படுத்தி விடுகிறது. மேலும் இரவு நேரங்களில் யானைகள் வருவதால் நாங்கள் அதை விரட்டி செல்லும் போது எங்களுக்கு அசம்பாவித சம்பவங்கள் நடக்கலாம். எங்களுக்கு எந்த ஒரு பாதுகாப்பும் இல்லை.

    எனவே இது போன்ற காட்டு யானைகளால் எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்காமல் தடுக்க வேண்டும். யானைகள் உருக்குள் புகாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே போல் யானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடித்து செல்ல வேண்டும்.

    இவ்வாறு விவசாயிகள் வேதனையுடன் கூறினர்.

    • யானை நிற்பதை பார்த்ததும் சண்முகசுந்தரம் அதிர்ச்சி அடைந்தார்.
    • இறந்த முதியவரின் உடலை பார்வையிட்டு, யானை மிதித்து கொன்றதை உறுதி செய்தனர்.

    கோவை:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள வடவேடம்பட்டியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 60).

    இவர் கடந்த 1 அரை வருடங்களுக்கு முன்பு கோவைக்கு வந்தார். பின்னர் வடிவேலாம்பாளையம் பகுதியில் தங்கி மோளப்பாளையம், வடிவேலம்பாளையம் பகுதியில் தோட்ட வேலைக்கு சென்று வந்தார்.

    நேற்று இரவு இயற்கை உபாதை கழிப்பதற்காக மோளப்பாளையத்தில் உள்ள தனியார் தோட்டத்திற்கு சென்றார். அப்போது அங்கு புதர் மறைவில் யானை ஒன்று மறைந்திருந்தது.

    யானை நிற்பதை பார்த்ததும் சண்முகசுந்தரம் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் யானையிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். ஆனால் யானை விடாது துரத்தி வந்தது.

    சில தூரம் சென்ற நிலையில் அவர் கீழே விழுந்தார். இதையடுத்து யானை சண்முகசுந்தரத்தை தாக்கியது. இதில் அவருக்கு தலை, கை, கால் என உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் அவரின மீது ஏறியும் மிதித்து விட்டு சென்றது.

    இதில் சண்முகசுந்தரம் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    யானை தாக்கி முதியவர் இறந்த தகவல் அறிந்ததும் மதுக்கரை வனவர் ஐயப்பன் தலைமையிலான வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் இறந்த முதியவரின் உடலை பார்வையிட்டு, யானை மிதித்து கொன்றதை உறுதி செய்தனர். தொடர்ந்து ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் விரைந்து வந்து இறந்த சண்முகசுந்தரத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக விசாரணையும் நடந்து வருகிறது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக யானை நடமாட்டம் அதிகமாக உள்ளது. ஊருக்குள் புகும் யானையால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    தற்போது யானை தாக்கி ஒருவர் இறந்துள்ளது மிகப்பெரிய அச்சத்தை உருவாக்கி உள்ளது. எனவே இந்த பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    அதன்படி வனத்துறையினர் அந்த பகுதியில் ரோந்து மேற்கொண்டு யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

    • குடியிருப்பு பகுதியை நோக்கி வரும் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
    • கும்கி யானைகள் தற்போது கண்காணிப்புப் பணியை மேற்கொண்டு வருகின்றன.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் பந்தலூா் வட்டம், சேரம்பாடி வனச் சரகத்துக்கு உள்பட்ட சப்பந்தோடு பகுதியில் அண்மைக் காலங்களாக கட்டபொம்மன் என்ற ஒற்றை காட்டு யானை நடமாட்டம் உள்ளது.

    இந்த காட்டு யானை அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து வருகிறது. அவ்வாறு வரும் யானை விளைநிலங்களில் பயிரிட்டுள்ள பயிர்களை சேதப்படுத்துவதும் வாடிக்கையாக உள்ளது.

    தொடர்ந்து குடியிருப்பு பகுதியை நோக்கி வரும் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    அதனை தொடர்ந்து வனத்துறையினர் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வரும் காட்டு யானையை வனத்திற்குள் விரட்டும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் இருப்பதற்காக முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வசீம், விஜய் ஆகிய 2 கும்கி யானைகளும் வரவழைக்கப்பட்டு, அந்த பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த யானைகள் ஊருக்குள் நுழையும் காட்டு யானையை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்டும் பணியைச் செய்து வருகின்றன.

    சேரம்பாடி மண்டாசாமி கோவில் பகுதி மற்றும் செவியோடு பகுதியில் இந்த கும்கி யானைகள் தற்போது கண்காணிப்புப் பணியை மேற்கொண்டு வருகின்றன.

    • கிராம மக்கள் அச்சம்
    • இயல்பு வாழ்க்கை பாதிப்பு

    வேலூர்:

    குடியாத்தம் அருகே பக்கத்து கிராமத்திற்கு குடி புகுந்த காட்டு யானையால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கதிர்குளம் கிராமத்தில் தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக ஒற்றை காட்டு யானை முகாமிட்டு விவசாய நிலங்களை சேதப்படுத்தி வந்தது.

    இதனால் அந்த பகுதி மக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்லாமல் வீடுகளிலே முடங்கினர். மேலும் அந்த கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.

    காட்டு யானைக்கு பயந்து கிராமத்தில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிர்களை அறுவடைக்கு முன்னதாகவே விவசாயிகள் அறுவடை செய்தனர்.

    இந்த நிலையில் கதிர்குளம் கிராமத்தில் இருந்து வெளியேறி, மேல்அனுப்பு கிராமத்திற்குள் புகுந்தது காட்டு யானை. விவசாய நிலங்களை நாசம் செய்து வருகிறது.

    அந்த கிராமத்தைச் சேர்ந்த முனிசாமி என்பவரின் நிலத்தில் அறுவடை செய்து வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மற்றும் நெல் பயிர்களை மிதித்து சேதம் செய்தது.

    அதேபோல் அதே கிராமத்தைச் சேர்ந்த வனஜா என்பவரின் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள வாழை மரங்கள் மற்றும் வேர்க்கடலை பயிர்களையும் சேதப்படுத்தியது.

    பகல் நேரங்களிலும் கிராமத்திற்குள் ஒற்றைக் காட்டு யானை சுற்றி வருவதால் கிராம மக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.

    கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக காட்டு யானை அட்டகாசம் செய்து வருவதால், அதனை தடுக்கவோ அல்லது பிடித்து வேறு பகுதியில் விடவோ வனத்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    காட்டு யானையை பிடித்து உடனடியாக வேறு பகுதியில் கொண்டு சென்று விட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • பண்ணாரி அம்மன் கோவில் அருகே சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அமைந்துள்ளதால் இங்கு ஏராளமான வனவிலங்குகள் உலா வருகின்றன.
    • யானை அந்த வழியாக சென்ற வாகனங்களை வழிமறித்து நின்றதை கண்ட பக்கர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. புகழ்பெற்ற இந்த கோவிலில் வழிபடுவதற்காக ஈரோடு, கோவை, சேலம், திருப்பூர், நாமக்கல், திருச்செங்கோடு மட்டுமின்றி கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.

    பண்ணாரி அம்மன் கோவில் அருகே சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அமைந்துள்ளதால் இங்கு ஏராளமான வனவிலங்குகள் உலா வருகின்றன. குறிப்பாக யானைகள் அதிகளவில் பண்ணாரி வனப்பகுதியில் உலா வருகின்றன. வனப்பகுதியில் இருந்து இரவு நேரத்தில் வெளியே வரும் யானைகள் திண்டுக்கல்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி சோதனை சாவடி அருகே இரவு நேரங்களில் நடமாடுவது வழக்கம்.

    இந்த பகுதியில் நூற்றுக்கணக்கான லாரிகளில் கரும்புகள் ஏற்றி செல்லப்படுவதால் கரும்புக்கட்டுகளை சாப்பிடுவதற்காக வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் கரும்புக்கட்டுகளை ஏற்றி சொல்லும் லாரிகளை வழிமறித்து கரும்புகளை சாப்பிடுவது தொடர்கதை ஆகி வருகிறது.

    மேலும் சாலை நடுவே நின்றுகொண்டு பஸ்களை வழிமறிப்பதும் தொடக்கதையாகி வருகிறது. இதனால் இந்த பகுதியில் இரவு நேரங்களில் கவனமுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு பண்ணாரி அம்மன் கோவில் அருகே வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஒற்றை யானை திடீரென பண்ணாரி கோவில் முன் மைசூரு நெடுஞ்சாலை ரோட்டில் நடமாடியது. இதைத்கண்ட கடைக்காரர்கள், பக்தர்கள், வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    யானை அந்த வழியாக சென்ற வாகனங்களை வழிமறித்து நின்றதை கண்ட பக்கர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தகவல் அறிந்த வந்த சத்தியமங்கலம் வனத்துறையினர் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் போராட்டத்துக்கு பிறகு அந்த ஒற்றை யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதன் பிறகு வனத்துறையினர், பொதுமக்கள், பக்தர்கள் நிம்மதி அடைந்தனர்.

    • நள்ளிரவு நேரத்தில் தொலைதூரத்தில் நடந்து வரும் காட்டு யானைகளையும் தெளிவாக படம் பிடிக்க இயலும்.
    • காட்டு யானைகளின் வரத்தை முன்கூட்டியே அறிவிக்கும் வகையில் சைரன் ஒலியும் எழுப்பப்படும்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் பிதர்காடு, சேரம்பாடி, ஓவேலி உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் அதிகம் உள்ளன. அவை தற்போது காட்டுக்குள் இருந்து அடிக்கடி வெளியேறி ஊருக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருகின்றன.

    காட்டு யானைகள் பெரும்பாலும் இரவு நேரங்களில் தான் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்கு செல்கிறது.

    எனவே அவற்றின் நடமா ட்டத்தை பொதுமக்களால் சரிவர கணிக்க முடியவில்லை. இதனால் அங்கு மனிதன்-விலங்கு மோதல் தொடர்கதையாக உள்ளது.

    இந்நிலையில் கூடலூர் பகுதியில் அதிநவீன கேமிராக்களுடன் கூடிய எச்சரிக்கை கோபுரங்களை அமைப்பது என வனத்துறையினர் முடிவு செய்து உள்ளனர். இதன்ஒருபகுதியாக அங்கு காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகம் இருப்பதாக கருதப்படும் முக்கட்டி, நெலாக்கோட்டை, கோட்டாடு உள்பட 18 பகுதிகளில் அதிநவீன காமிராக்களுடன் எச்சரிக்கை கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து பிதர்காடு வனச்சரக அதிகாரி ரவி கூறுகையில்,

    ஊரைஒட்டிய காட்டுப்பகுதியில் எச்சரிக்கை கோபுரம் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் கேமிரா, சிம்கார்டு மற்றும் சைரன் கருவி ஆகியவை பொருத்தப்பட்டு உள்ளன.

    எச்சரிக்கை கோபுரத்தில் உள்ள தானியங்கி கேமிரா மூலம் நள்ளிரவு நேரத்தில் தொலைதூரத்தில் நடந்து வரும் காட்டு யானைகளையும் தெளிவாக படம் பிடிக்க இயலும். அவை உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    மேலும் காட்டு யானைகளின் வரத்தை முன்கூட்டியே அறிவிக்கும் வகையில் சைரன் ஒலியும் எழுப்பப்படும். இதனால் பொதுமக்கள் சுதாரித்து கொண்டு தப்பி பிழைக்கலாம். வனத்துறை அதிகாரிகளும் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று காட்டு யானைகளை விரட்ட முடியும் என்று தெரிவித்து உள்ளார். 

    ×