என் மலர்
தமிழ்நாடு

காட்டு யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க அதிநவீன கருவிகளுடன் எச்சரிக்கை கோபுரம்
- நள்ளிரவு நேரத்தில் தொலைதூரத்தில் நடந்து வரும் காட்டு யானைகளையும் தெளிவாக படம் பிடிக்க இயலும்.
- காட்டு யானைகளின் வரத்தை முன்கூட்டியே அறிவிக்கும் வகையில் சைரன் ஒலியும் எழுப்பப்படும்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் பிதர்காடு, சேரம்பாடி, ஓவேலி உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் அதிகம் உள்ளன. அவை தற்போது காட்டுக்குள் இருந்து அடிக்கடி வெளியேறி ஊருக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருகின்றன.
காட்டு யானைகள் பெரும்பாலும் இரவு நேரங்களில் தான் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்கு செல்கிறது.
எனவே அவற்றின் நடமா ட்டத்தை பொதுமக்களால் சரிவர கணிக்க முடியவில்லை. இதனால் அங்கு மனிதன்-விலங்கு மோதல் தொடர்கதையாக உள்ளது.
இந்நிலையில் கூடலூர் பகுதியில் அதிநவீன கேமிராக்களுடன் கூடிய எச்சரிக்கை கோபுரங்களை அமைப்பது என வனத்துறையினர் முடிவு செய்து உள்ளனர். இதன்ஒருபகுதியாக அங்கு காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகம் இருப்பதாக கருதப்படும் முக்கட்டி, நெலாக்கோட்டை, கோட்டாடு உள்பட 18 பகுதிகளில் அதிநவீன காமிராக்களுடன் எச்சரிக்கை கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து பிதர்காடு வனச்சரக அதிகாரி ரவி கூறுகையில்,
ஊரைஒட்டிய காட்டுப்பகுதியில் எச்சரிக்கை கோபுரம் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் கேமிரா, சிம்கார்டு மற்றும் சைரன் கருவி ஆகியவை பொருத்தப்பட்டு உள்ளன.
எச்சரிக்கை கோபுரத்தில் உள்ள தானியங்கி கேமிரா மூலம் நள்ளிரவு நேரத்தில் தொலைதூரத்தில் நடந்து வரும் காட்டு யானைகளையும் தெளிவாக படம் பிடிக்க இயலும். அவை உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
மேலும் காட்டு யானைகளின் வரத்தை முன்கூட்டியே அறிவிக்கும் வகையில் சைரன் ஒலியும் எழுப்பப்படும். இதனால் பொதுமக்கள் சுதாரித்து கொண்டு தப்பி பிழைக்கலாம். வனத்துறை அதிகாரிகளும் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று காட்டு யானைகளை விரட்ட முடியும் என்று தெரிவித்து உள்ளார்.