search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆம்னி பஸ்"

    • பஸ் ஐதராபாத் அடுத்த குக்கட் பள்ளி, ஜே, என்.டி.யூ மெட்ரோ ரெயில் நிலையம் அருகே வந்தபோது என்ஜினில் இருந்து திடீரென புகை வந்தது.
    • பயணிகள் அனைவரும் உயிர் பயத்தில் பஸ்சில் இருந்து அலறி அடித்துக் கொண்டு கீழே இறங்கினர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து திருப்பதிக்கு இன்று அதிகாலை தனியார் ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டு வந்து கொண்டு இருந்தது.

    20-க்கும் மேற்பட்ட பயணிகள் பஸ்சில் இருந்தனர். பஸ் ஐதராபாத் அடுத்த குக்கட் பள்ளி, ஜே, என்.டி.யூ மெட்ரோ ரெயில் நிலையம் அருகே வந்தபோது என்ஜினில் இருந்து திடீரென புகை வந்தது.

    இதனை கண்ட பஸ் டிரைவர் சாலையோரம் பஸ்சை நிறுத்திவிட்டு பயணிகள் அனைவரையும் கீழே இறங்கும்படி தெரிவித்தார்.

    இதையடுத்து பயணிகள் அனைவரும் உயிர் பயத்தில் பஸ்சில் இருந்து அலறி அடித்துக் கொண்டு கீழே இறங்கினர். அதற்குள் பஸ் முழுவதும் தீ மளமளவென பரவ தொடங்கியது.

    இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்குள் பஸ் முழுவதும் எரிந்து தீக்கிரையானது.

    இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பஸ் தீ பிடித்து எரிவதற்கு முன்பாகவே டிரைவர் பயணிகளுக்கு தகவல் தெரிவித்து இறக்கிவிடப்பட்டதால் அதிர்ஷ்டவசமாக 20 பயணிகள் உயிர் தப்பினர். அதிகாலை நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னையில் இருந்து மதுரை செல்வதற்கு ரூ.2,500 கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
    • கோவைக்கு ரூ.2,800, நெல்லைக்கு ரூ.3,300, பெங்களூருக்கு ரூ.2000, கொச்சினுக்கு ரூ.2,700 என கட்டணம் முடிவு செய்து இணைய தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்களில் பண்டிகை காலங்களில் அதிக கட்டணம் வசூலிப்பது வாடிக்கையாகவே இருந்து வருகிறது.

    கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கடந்த 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. புத்தாண்டையொட்டி தென்மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்களிலும் அதிக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    புத்தாண்டையொட்டி நாளை சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பஸ்களில் 2 ஆயிரத்துக்கு மேல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் இருந்து மதுரை செல்வதற்கு ரூ.2,500 கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. கோவைக்கு ரூ.2,800, நெல்லைக்கு ரூ.3,300, பெங்களூருக்கு ரூ.2000, கொச்சினுக்கு ரூ.2,700 என கட்டணம் முடிவு செய்து இணைய தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

    இதேபோன்று பொங்கல் பண்டிகையையொட்டியும் கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 13, 14-ந் தேதிகளில் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் கட்டண விவரம் வருமாறு:-

    சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ.2,200, கோவை ரூ.2,500, நெல்லை ரூ.3000, பெங்களூர் ரூ.2,300, கேரள மாநிலம் கொச்சினுக்கு ரூ.2,500-ல் இருந்து ரூ.3 ஆயிரமாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஆம்னி பஸ்களில் இதுபோன்ற கட்டண உயர்வால் பொங்கலை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ள நடுத்தர மக்கள் திண்டாட்டத்துக்குள்ளாகி இருக்கிறார்கள். கட்டண உயர்வால் மிரண்டு போயுள்ள அவர்கள் சொந்த ஊருக்கு செல்லலாமா? சென்னையிலேயே பொங்கல் கொண்டாடலாமா? என்கிற சிந்தனையில் ஆழ்ந்துள்ளனர்.

    ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் அதைப்பற்றி எல்லாம் கண்டு கொள்ளாமல் ஆம்னி பஸ்களில் பலமடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • ஒரு சில தனியார் பஸ் ஆபரேட்டர்கள், நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கிறார்கள்.
    • நெல்லை, தூத்துக்குடியில் இருந்து ரூ.2900 கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ரூ.3500, ரூ.4000 வரை இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை கொண்டாட வெளியூர் சென்றவர்கள் 1-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் சென்னை திரும்புகிறார்கள்.

    தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருப்பதால் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இருந்து சொந்த ஊர்களுக்கு சுமார் 5 லட்சம் பேர் பஸ்களில் பயணம் செய்துள்ளனர்.

    கடந்த வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அரசு பஸ்களில் மட்டும் 4 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இது தவிர சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், ரெயில் நிலையங்களில் பல்லாயிரக் கணக்கானவர்கள் பயணம் செய்தனர். மேலும் ஆம்னி பஸ்களிலும் கடைசி நேரத்தில் அதிக கட்டணம் செலுத்தி பலர் பயணம் செய்தனர்.

    இந்த நிலையில் பண்டிகை விடுமுறை முடிந்து ஜனவரி 2-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அதனால் 1-ந் தேதி புத்தாண்டு முடித்து விட்டு பலர் சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்புகிறார்கள்.

    அனைத்து ரெயில்களிலும், எல்லா வகுப்பு பெட்டிகளும் நிரம்பிவிட்ட நிலையில் சிறப்பு ரெயில்களிலும் இடமில்லை. அதனால் மக்கள் கூடுதல் பஸ் சேவைக்காக காத்து உள்ளனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 30, 31-ந் தேதிகளில் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மதுரை, நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு கூடுதலாக பஸ்கள் விடஏற்பாடு செய்யப்படுகிறது.

    மேலும் ஆம்னி பஸ்களில் அந்த தேதியில் பயணம் செய்ய இடங்கள் நிரம்பி வருகின்றன. ஒரு சில தனியார் பஸ் ஆபரேட்டர்கள், நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கிறார்கள்.

    குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, மதுரை மற்றும் கோவை, திருப்பூர் நகரங் களில் இருந்து சென்னைக்கு சங்கம் நிர்ணயித்த கட்ட ணத்தை விட அதிகமாக கட்டணம் நிர்ணயித்து உள்ளனர்.

    மதுரை, கோவையில் இருந்து ஏ.சி. படுக்கை கட்டணம் ரூ.2581 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரூ.3500 வரை வசூலிக்கிறார்கள். நெல்லை, தூத்துக்குடியில் இருந்து ரூ.2900 கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ரூ.3500, ரூ.4000 வரை இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஆம்னி பஸ்களுக்கு கட்டணம் அரசு நிர்ணயிக்க முடியாத நிலையில் அவர்களே நிர்ணயித்து இயக்குகிறார்கள். ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கட்டணம் நிர்ணயம் செய்து அறிவிக்கப்பட்ட நிலையில் அதைவிட கூடுதலாக கட்டணம் வசூலிப்பது முறையற்ற செயல். தேவையை அறிந்து அதற்கேற்ப பல மடங்கு கட்டணம் உயர்த்துவதை அரசு தடுக்க வேண்டும்.

    இதே போல பெங்களூருக்கு ரூ.2000, கொச்சினுக்கு ரூ. 2700 கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில் அதை விட கூடுதலாக வசூலிப்பதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

    பண்டிகை மற்றும் விசேஷ காலங்களில் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக பயணிகள் சங்கம் சார்பில் தெரிவிக்கின்றனர்.

    • கோயம்பேடு, போரூர் சுங்கச்சாவடி பகுதிகளில் சிறப்பு ஆம்னி பஸ்களில் சோதனை செய்யப்பட்டது.
    • 49 ஆம்னி பஸ்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு ரூ.92,500 அபராதமாக வசூலிக்கப்பட்டது.

    சென்னை:

    சென்னை வடக்கு சரக இணை போக்குவரத்து ஆணையர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை போக்குவரத்து ஆணையர் உத்தரவின்படி கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை தினங்களை ஒட்டி ஆம்னி பஸ்களில் வழக்கத்துக்கு மாறான அதிக கட்டணம் வசூலிக்கும் புகார் குறித்து கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு வருகிற 2.1.2023 வரை சென்னை வடக்கு சரக பகுதியில் சோதனை நடத்தப்படுகிறது.

    இதன்படி கோயம்பேடு, போரூர் சுங்கச்சாவடி பகுதிகளில் சிறப்பு ஆம்னி பஸ்களில் சோதனை செய்யப்பட்டது. இதில் வழக்கத்திற்கு மாறாக அதிக கட்டணம் வசூலிக்கும் புகார் மற்றும் வரி செலுத்தப்படாமல் இயக்கப்படும் பிற மாநில ஆம்னி பஸ்கள் குறித்து சோதனை நடத்தப்பட்டது.

    இதில் 49 ஆம்னி பஸ்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு ரூ.92,500 அபராதமாக வசூலிக்கப்பட்டது. மேலும் வழக்கத்துக்கு மாறான அதிக கட்டணம் வசூலித்ததாக புகார் பெறப்பட்ட ஆம்னி பேருந்துகளில் இருந்து 9 பயணிகளுக்கு ரூ.9,200 அதிக கட்டணம் திருப்பி அளிக்கப்பட்டது.

    இதுபோன்ற வரி செலுத்தப்படாமல் அதிக கட்டணம் வசூலிப்பது மற்றும் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்கள் மீது மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் விதிகளின்படி தொடர்ந்து கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கோவை ரெயில் நிலையம், பஸ் நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது.
    • கோவையில் இருந்து இயக்கப்படும் ஆம்னி பஸ்களில் வசூலிக்கப்படும் கட்டணம் குறித்து, போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    கோவை:

    வருகிற 24-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கோவையில் தங்கி வேலை பார்த்து வருபவர்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்து வரும் மாணவர்கள் என அனைவரும் தீபாவளியை கொண்டாட ஊருக்கு செல்வதற்கு தயாராகி வருகிறார்கள்.

    இதனால் கோவை ரெயில் நிலையம், பஸ் நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது. பயணிகள் சிரமமின்றி பயணிப்பதற்காக கோவையில் இருந்து பல்வேறு வெளி மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது.

    கரூர், திருச்சி மார்க்கமாக செல்லும் பஸ்கள் சூலூர் பஸ் நிலையத்தில் இருந்தும், மதுரை, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு சிங்காநல்லூரில் இருந்தும், சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு காந்திபுரம் மத்திய பஸ் நிலையத்தில் இருந்தும் பஸ்கள் இயக்கப்பட்டது. இந்த பஸ்களில் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணமாகினர்.

    இதுதவிர ஏராளமானோர் அரசு விரைவு பஸ்கள் மற்றும் ஆம்னி பஸ்களில் முன்பதிவு செய்தவர்களும் ஊருக்கு புறப்பட்டனர். இதனால் கோவை காந்திபுரம் திருவள்ளுவர் பஸ் நிலையம், சிங்காநல்லூர் பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    இந்த நிலையில் கோவையில் இருந்து இயக்கப்படும் ஆம்னி பஸ்களில் வசூலிக்கப்படும் கட்டணம் குறித்து, போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    இணைகமிஷனர் சிவக்குமார் தலைமையிலான அதிகாரிகள் சம்பவத்தன்று ஆம்னி பஸ்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகளவு சரக்கு ஏற்றி செல்லுதல் உள்பட பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்ட ஆம்னி பஸ்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    இதுகுறித்து சரக போக்குவரத்து இணை கமிஷனர் சிவக்குமார் கூறுகையில், கோவை சரகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் 20 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆம்னி பஸ் உரிமையாளர்களுடன் கூட்டம் நடத்தி, அதிக கட்டணம் வசூலிக்க கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பயணிகள் 1800 425 6151 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றார்.

    • திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் ஆம்னி பஸ் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் சாவடைந்தார்.
    • பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.

    திருமங்கலம்

    மதுரை சமயநல்லூரை சேர்ந்தவர் சங்கர். இவர் மதுரை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் சங்கர் கடந்த 9-ந் தேதி திருமங்கலம் அருகே உள்ள மேலஉரப்பனூரில் உள்ள நண்பர் சிவகுமார் வீட்டிற்கு சென்றார். பின்னர் ஒரே மோட்டார் சைக்கிளில் சங்கர், சிவகுமார் இவர்களது நண்பர் சிவன்ராஜ்(வயது24) ஆகியோர் செங்குளத்தில் இருந்து திருமங்கலம் செல்லவதற்காக மதுரை-விருதுநகர் நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக அந்த வழியாக வந்த ஆம்னி பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சிவகுமார் மற்றும் சிவன்ராஜ் ஆகியோர் சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 10-ந் தேதி சிகிச்சை பலனளிக்காமல் சிவகுமார் இறந்தார். இதை ெதாடர்ந்து சிகிச்சை பெற்று வந்த சிவன்ராஜூ நேற்று (13-ந் தேதி) சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.

    இந்த விபத்து குறித்து திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுகன்யா நள்ளிரவு நேரத்தில் வேறு வழியில்லாமல் பக்கத்து இருக்கையில் இருந்த பயணி ஒருவரிடம் பணம் கடனாக வாங்கி டிக்கெட் எடுத்துள்ளார்.
    • திசையன்விளை அருகே உள்ள சண்முகாபுரத்தில் பஸ் வந்தபோது அதனை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

    திசையன்விளை:

    திசையன்விளை அருகே உள்ள இடைச்சிவிளையை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரது மனைவி சுகன்யா(வயது 35). இவர்களுக்கு 3 வயது மற்றும் 4 வயதில் 2 குழந்தைகள் உள்ளனர்.

    கோயம்புத்தூர் மாவட்டம் காரணம்பேட்டையில் முத்துகிருஷ்ணன் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இதனால் குடும்பத்துடன் அங்கு வசித்து வருகிறார். தற்போது தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா நடைபெற்று வருவதால் அதில் பங்கேற்பதற்காக சுகன்யாவை சொந்த ஊருக்கு செல்லுமாறு கூறி உள்ளார்.

    தொடர்ந்து சுகன்யா மற்றும் அவரது உறவினர் ஆகியோருக்கு ஆன்லைனில் தனியார் ஆம்னி பஸ்சில் முத்துகிருஷ்ணன் டிக்கெட் எடுத்துள்ளார். பின்னர் நேற்றிரவு சுகன்யா தனது 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு ஊருக்கு புறப்பட்டுள்ளார்.

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே ஆம்னி பஸ் வந்தபோது அங்குள்ள ஓட்டலில் பயணிகள் சாப்பிட சென்றுள்ளனர். அப்போது பஸ்சில் இருந்த நடத்துனர், சுகன்யாவிடம் அவரது 3 வயது குழந்தைக்கு டிக்கெட் எடுக்குமாறு கூறி உள்ளார்.

    உடனே அவர் ஆன்லைனில் எனக்கு டிக்கெட் எடுத்துவிட்டோம். பின்பு எதற்காக குழந்தைக்கு டிக்கெட் எடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். இதுதொடர்பாக வாக்குவாதம் ஏற்படவே, கண்டிப்பாக டிக்கெட் எடுத்தாக வேண்டும். இல்லையெனில் பஸ்சில் இருந்து இறங்கிவிடுமாறு அவர் கூறி உள்ளார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சுகன்யா நள்ளிரவு நேரத்தில் வேறு வழியில்லாமல் பக்கத்து இருக்கையில் இருந்த பயணி ஒருவரிடம் பணம் கடனாக வாங்கி டிக்கெட் எடுத்துள்ளார். இந்த விபரத்தை தனது சொந்த ஊரில் உள்ள உறவினர்களிடம் அவர் கூறி உள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் இன்று காலை திசையன்விளை அருகே உள்ள சண்முகாபுரத்தில் பஸ் வந்தபோது அதனை சிறைபிடித்தனர். அவர்கள் பஸ்சின் முன்பு அமர்ந்து கொண்டு போராட்டம் நடத்தினர்.

    தகவல் அறிந்து அங்கு வந்த திசையன்விளை போலீசார் பஸ்சை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இதுதொடர்பாக டிரைவர், கண்டக்டரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அனைத்து வழித்தடங்களுக்கும் உண்டான கட்டண விபரம் எங்களின் இணையதளத்தில் உள்ளது.
    • ஒரு வழித்தடத்தில் அனைத்து விதமான பஸ்களுக்கும் ஒரே கட்டணம் நிர்ணயிக்க இயலாது.

    போரூர்:

    ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் அப்சல் பெரம்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    தமிழகத்தில் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு இடையே 4000 ஆம்னி பஸ்கள் வரை இயக்கப்பட்டு வந்தது. கொரோனா தொற்று பாதிப்புக்கு பின்னர் தற்போது 1500 பஸ்கள் மட்டுமே தினசரி இயக்கப்பட்டு வருகிறது.

    இதில் ஏ.சி. வசதி, படுக்கை வசதி என ஏழு வகையான ஆம்னி பஸ்கள் உள்ளன. இவ்வாறு இயக்கப்படும் பஸ்களுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு வழித்தடத்திலும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2 ஆண்டுகளாக போக்குவரத்து துறை மோசமான சூழலில் உள்ளது. மேலும் வரி, இன்சுரன்ஸ், ஜி.எஸ்.டி, சுங்க வரி, டீசல் விலை ஏற்றம் உள்ளிட்ட பல கடுமையான சூழலில் தவித்து வருகிறோம்.

    ஆனால் கடந்த 2016ம் நிர்ணயிக்கப்பட்ட அதே கட்டணம்தான் இன்று வரை நிலுவையில் உள்ளது.

    ஒரு சிலர் செய்யும் தவறால் ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

    மேலும் இந்த தொழிலை நம்பி ஏறத்தாழ 3 லட்சம் குடும்பங்கள் உள்ளது. கூடுதல் கட்டணம் வசூல் என்கிற தவறான தகவல் தொடர்ந்து பரப்பப்பட்டு வருவதால் எங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    சாதாரண நாட்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை விட குறைந்த கட்டணம் மட்டுமே பெறப்படுகிறது. ஆனால் பண்டிகை காலங்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் பெறப்படும்போது அதை கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    ஆன்லைன் மூலமாக சீட் விற்பனை செய்வதில் கூடுதல் கட்டணமாக விற்பனை செய்கின்றனர். தவறு செய்பவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கலாம்.

    அனைத்து வழித்தடங்களுக்கும் உண்டான கட்டண விபரம் எங்களின் இணையதளத்தில் உள்ளது. நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் குறித்து சங்கத்தின் சார்பில் நாங்களே போக்குவரத்து துறைக்கு புகார் தெரிவித்து வருகிறோம்.

    அதே நேரத்தில் பயணிகளிடம் கூடுதலாக பெறப்பட்ட கட்டணத்தையும் திருப்பி அளிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    ஒரு வழித்தடத்தில் அனைத்து விதமான பஸ்களுக்கும் ஒரே கட்டணம் நிர்ணயிக்க இயலாது. மேலும் ஆம்னி பஸ்களுக்கு மோட்டார் வாகன விதிகளின்படி கட்டணம் நிர்ணயிக்க வழிவகை இல்லை. பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பஸ் உரிமையாளர்கள் மீது போக்குவரத்து துறை அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராஜபாளையம் அருகே ஆம்னி பஸ் மோதி சூப்பர் மார்க்கெட் ஊழியர் பலியானார்.
    • ரைவர் ராமர் என்பவரிடம் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த சுந்தரராஜபுரத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 37). இவர் ராஜபாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் சூப்பர் மார்க்கெட்டில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு 8.30 மணி அளவில் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் தென்காசி ரோட்டில் சென்றார்.

    அப்போது தென்காசியில் இருந்து சென்னை நோக்கி வேகமாக வந்த ஆம்னி பஸ் ஆனந்தராஜ் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பரிதாபமாக இறந்து விட்டார். பலியான ஆனந்தராஜிக்கு திருமணமாகி மேரி ஷகிலா என்ற மனைவி உள்ளார்.

    இந்த விபத்து குறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மன்னவன் வழக்குப்பதிவு செய்து மோதிய ஆம்னி பஸ்சை ஓட்டி வந்த தென்காசியை சேர்ந்த டிரைவர் ராமர் என்பவரிடம் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்.

    • ஆம்னி பஸ்களில் மதுரைக்கு போதை பொருள் கடத்தியவர்கள் பிடிபட்டனர்.
    • இதனைத் தொடர்ந்து மேற்கண்ட 4 பேரையும் தெற்கு வாசல் போலீசார் கைது செய்தனர்.

    மதுரை

    மதுரை தெற்கு வெளி வீதியில் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக போலீசுக்கு தகவல் வந்தது.

    இதில் தொடர்பு உடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் மேற்பார்வையில், தெற்கு வாசல் துணை கமிஷனர் சண்முகம் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்தில் சோதனை நடத்தினர். அங்கு தக்காளி கூடைகளுடன் ஷேர் ஆட்டோ நின்று கொண்டு இருந்தது. அதில் 4 பேர் இருந்தனர்.

    அவர்களிடம் போலீசார் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். போலீசார் சந்தேகத்தின் பேரில் ஷேர் ஆட்டோவை சோதனை செய்தனர். தக்காளி கூடைகளுக்கு அடியில், 287 கிலோ குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஷேர் ஆட்டோவில் இருந்த 4 பேரையும் போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர்கள் மேலூர் கல்லம்பட்டி, அப்துல் கலாம் நகர் சதாம் உசேன் (29), மேலூர் முகமது ஆசிப் (29), மாடக்குளம் மெயின் ரோடு அன்வர் (35), தேனி மாவட்டம், உத்தமபாளையம் வல்லவன் (36) என்பது தெரியவந்தது.

    அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். டிராவல்ஸ் அலுவலகத்தில் குட்கா புகையிலைப் பொருட்களை புக்கிங் செய்தது சதாம் உசேன் என்பது தெரியவந்தது. இதனை டெலிவரி எடுப்பதற்காக அவர் மேலூர் காய்கறி சந்தையில் ஆட்டோ ஓட்டி வரும் முகமது ஆசிப் என்பவரை அழைத்து வந்து ள்ளார்.

    கர்நாடகாவில் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை, இறக்குமதி செய்யும் விஷயத்தில் சதாம் உசேனுக்கு, குஜராத்தில் வேலை பார்க்கும் அன்வர் உதவியாக இருந்தார்.

    பண்ணைபுரத்தைச் சேர்ந்த வல்லவன் மதுரை டிராவல்ஸ் பார்சல் புக்கிங் அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். அவரது உதவியுடன் இந்த கும்பல் சில மாதங்களாக தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை மதுரைக்கு கடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மேற்கண்ட 4 பேரையும் தெற்கு வாசல் போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய ஆம்னி பஸ் டிரைவர்கள் ராமு (42), ஜனார்த்தனன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் புகையிலைப் பொருட்களுக்கு தடை இல்லை. இந்த கும்பல், ஆம்னி பஸ்கள் மூலம் மதுரைக்கு புகையிலை பொருட்களை கடத்தி வந்துள்ளனர். இதே போல மதுரையில் இருந்து வெளிமாநிலங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பஸ்களிலும் புகையிலை பொருட்கள் கடத்தப்படுகிறதா? என்பது தெரியவில்லை.

    இதுகுறித்து மதுரையில் இயங்கும் அனைத்து ஆம்னி பஸ் பார்சல் சர்வீஸ் அலுவலகங்களிலும் விசாரணை நடத்துவது என்று போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    • கீழக்கரை நகருக்குள் நாளை முதல் ஆம்னி பஸ்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • சரக்கு லாரிகள் காலை 11 மணி முதல் 3 மணி வரை மட்டும் நகருக்குள் அனுமதிக்கப்படும்.

    கீழக்கரை

    கீழக்கரை நகராட்சி க்குட்பட்ட கீழக்கரை முக்கு ரோடு முதல் கடற்கரை வரை உள்ள வள்ளல் சீதக்காதி சாலையில் ஆக்கிரமிப்பு அதிகரிப்பால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் அவதி அடைந்தனர்.

    இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் மாவட்ட கலெக்டரிடம் புகார் செய்த னர். இதைத் தொடர்ந்து கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவின் பேரில் கீழக்கரை தாசில்தார் சரவணன் தலைமையில் துணை தாசில்தார் பழனி குமார், நகராட்சி ஆணை யாளர் செல்வராஜ், பொறி யாளர் மீரான்அலி, துப்புரவு ஆய்வாளர் பரக்கத்துல்லா, கீழக்கரை இன்ஸ்பெக்டர் பாலமுரளி, ஆகியோர் முன்னிலையில் நெடுஞ்சாலை துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

    மேலும் நகருக்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்துவதை தவிர்க்கும் வகையில் நாளை (29-ந்தேதி) முதல் ஆம்னி பஸ்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. கனரக வாகனங்கள், சரக்கு லாரிகள் காலை 11 மணி முதல் 3 மணி வரை மட்டும் நகருக்குள் அனுமதிக்கப்படும். சீதக்காதி சாலையில் ஒருபுறம் மட்டுமே இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு அனுமதிக்கப்படும் என தாசில்தார் சரவணன் தெரிவித்தார்.

    • விடுமுறை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து நேற்று இரவு முதல் பலர் சென்னை திரும்பினர்.
    • பெரும்பாலான பஸ்கள் சாதாரண நாட்களைவிட அதிக கட்டணத்தையே வசூலித்ததாக புகார்.

    சென்னை :

    சுதந்திர தினத்தையொட்டி சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை 3 நாட்கள் தொடர் விடுமுறை வந்தது. இதையடுத்து, சென்னையில் பணிபுரியும் பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டனர். இதுபோன்ற தொடர் விடுமுறை நாட்களில் ஆம்னி பஸ்களில் கிடுகிடுவென கட்டணத்தை உயர்த்திவிடுவது வாடிக்கை.

    அந்தவகையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ஆம்னி பஸ்களின் கட்டணமும் தாறுமாறாக உயர்த்தப்பட்டிருந்தது.

    இது தொடர்பான செய்திகள் வெளியிடப்பட்ட நிலையில், போக்குவரத்துத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தி, அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பஸ்களின் பயணிகளுக்கு கட்டணத்தை திருப்பி பெற்றுக்கொடுத்ததாக கூறப்பட்டது.

    அதுமட்டுமில்லாமல், அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பஸ்களின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. இந்த நிலையில் விடுமுறை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து நேற்று இரவு முதல் பலர் சென்னை திரும்பினர்.

    எப்போதும்போல நேற்றும் சென்னை திரும்புவதற்கான ஆம்னி பஸ் கட்டணம் உயர்ந்தே காணப்பட்டது. உதாரணமாக திருநெல்வேலி, நாகர்கோவில், மதுரையில் இருந்து புறப்பட்ட ஆம்னி பஸ்களின் கட்டணம் அதிகபட்சமாக ரூ.3 ஆயிரத்து 500 வரை நிர்ணயிக்கப்பட்டு இருந்ததாகவும், திருச்சி, கோவை, சேலம், ஓசூரில் இருந்து புறப்பட்ட பஸ்களின் கட்டணம் அதிகபட்சமாக ரூ.3 ஆயிரம் என்ற அளவில் இருந்ததாகவும் பயணிகள் குற்றஞ்சாட்டினர்.

    சில பஸ்கள் மட்டும் வழக்கமான கட்டணத்தை நிர்ணயித்திருந்தாலும், பெரும்பாலான பஸ்கள் சாதாரண நாட்களைவிட அதிக கட்டணத்தையே வசூலித்ததாக கூறப்படுகிறது. அரசின் எச்சரிக்கையையும் மீறி அடாவடியாக அதிக கட்டண வசூல் தொடர்ந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    ×