search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆம்னி பஸ் கட்டணங்கள் ஆன்லைனில் தான் அதிகம்- ஆம்னி பஸ் உரிமையாளர் பேட்டி
    X

    ஆம்னி பஸ் கட்டணங்கள் ஆன்லைனில் தான் அதிகம்- ஆம்னி பஸ் உரிமையாளர் பேட்டி

    • அனைத்து வழித்தடங்களுக்கும் உண்டான கட்டண விபரம் எங்களின் இணையதளத்தில் உள்ளது.
    • ஒரு வழித்தடத்தில் அனைத்து விதமான பஸ்களுக்கும் ஒரே கட்டணம் நிர்ணயிக்க இயலாது.

    போரூர்:

    ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் அப்சல் பெரம்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    தமிழகத்தில் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு இடையே 4000 ஆம்னி பஸ்கள் வரை இயக்கப்பட்டு வந்தது. கொரோனா தொற்று பாதிப்புக்கு பின்னர் தற்போது 1500 பஸ்கள் மட்டுமே தினசரி இயக்கப்பட்டு வருகிறது.

    இதில் ஏ.சி. வசதி, படுக்கை வசதி என ஏழு வகையான ஆம்னி பஸ்கள் உள்ளன. இவ்வாறு இயக்கப்படும் பஸ்களுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு வழித்தடத்திலும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2 ஆண்டுகளாக போக்குவரத்து துறை மோசமான சூழலில் உள்ளது. மேலும் வரி, இன்சுரன்ஸ், ஜி.எஸ்.டி, சுங்க வரி, டீசல் விலை ஏற்றம் உள்ளிட்ட பல கடுமையான சூழலில் தவித்து வருகிறோம்.

    ஆனால் கடந்த 2016ம் நிர்ணயிக்கப்பட்ட அதே கட்டணம்தான் இன்று வரை நிலுவையில் உள்ளது.

    ஒரு சிலர் செய்யும் தவறால் ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

    மேலும் இந்த தொழிலை நம்பி ஏறத்தாழ 3 லட்சம் குடும்பங்கள் உள்ளது. கூடுதல் கட்டணம் வசூல் என்கிற தவறான தகவல் தொடர்ந்து பரப்பப்பட்டு வருவதால் எங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    சாதாரண நாட்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை விட குறைந்த கட்டணம் மட்டுமே பெறப்படுகிறது. ஆனால் பண்டிகை காலங்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் பெறப்படும்போது அதை கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    ஆன்லைன் மூலமாக சீட் விற்பனை செய்வதில் கூடுதல் கட்டணமாக விற்பனை செய்கின்றனர். தவறு செய்பவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கலாம்.

    அனைத்து வழித்தடங்களுக்கும் உண்டான கட்டண விபரம் எங்களின் இணையதளத்தில் உள்ளது. நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் குறித்து சங்கத்தின் சார்பில் நாங்களே போக்குவரத்து துறைக்கு புகார் தெரிவித்து வருகிறோம்.

    அதே நேரத்தில் பயணிகளிடம் கூடுதலாக பெறப்பட்ட கட்டணத்தையும் திருப்பி அளிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    ஒரு வழித்தடத்தில் அனைத்து விதமான பஸ்களுக்கும் ஒரே கட்டணம் நிர்ணயிக்க இயலாது. மேலும் ஆம்னி பஸ்களுக்கு மோட்டார் வாகன விதிகளின்படி கட்டணம் நிர்ணயிக்க வழிவகை இல்லை. பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பஸ் உரிமையாளர்கள் மீது போக்குவரத்து துறை அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×