search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடைகள்"

    • சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்த சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
    • சுமார் 20 டன் குப்பைகளை திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் உடனுக்குடன் அகற்றினர்.

    காரைக்கால்:

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் நேற்று முன்தினம் நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழா அன்று பக்தர்கள் விட்டுச் சென்ற 20 டன் குப்பை, 40 டன் ஆடைகளை துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் ஆடை அகற்றும் ஊழியர்கள் அகற்றினர்.

    காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில், உலகப் புகழ்மிக்க தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், சனீஸ்வரர் தனி சன்னதிகொண்டு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் உள்ள சனீஸ்வரரை தரிசனம் செய்வதற்காக, சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்த சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 5.20 மணிக்கு சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. அப்போது மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் பிரவேசம் செய்தார். சனி பெயர்ச்சியன்று திருநள்ளாறு நளன் குளம், கோவில் வளாகம் மற்றும் கோவிலை சுற்றியுள்ள நான்கு வீதிகளில் சுமார் 20 டன் குப்பைகளை திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் உடனுக்குடன் அகற்றினர்.

    அதேபோல் நளன் குளத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விட்டுச் சென்ற சுமார் 40 ஆயிரம் டன் ஆடைகளை நளன்குளத்தில் ஆடைகளை அகற்ற ஏலம் எடுத்தவர்கள் அகற்றியுள்ளனர். வருகிற சனிக்கிழமை சனி பெயர்ச்சியன்று வராத பக்தர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கோவில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் மற்றும் ஊழியர்கள், போலீசார் அடிப்படை மற்றும் பாதுகாப்பு வசதிகளை செய்து வருகின்றனர்.

    சனி பெயர்ச்சியன்று கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள ரூபாய் 300, 600, 1000 கட்டண டிக்கெட் வசதி மீண்டும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோவில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சனி பெயர்ச்சியன்று வழங்கப்பட்டுள்ள இலவச சிறப்பு பாஸ் இனிமேல் செல்லாது எனவும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் கூட்ட நெரிசலை தவிர்க்க பக்தர்கள் கட்டண டிக்கெட்டை பெற்று எளிதாக தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

    • மிஷின் வீதியில் உள்ள காசாபிலங்கா வணிக வளாகத்தில் பேஷன் ஷோ நடந்தது.
    • ஆரோவில் பகுதி வாசிகளும் சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியை அடுத்த தமிழக பகுதியான ஆரோவில்லில் கிராமப்புற பெண்கள் மற்றும் வெளி நாட்டவர்கள் முயற்சியால் விதவிதமான ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன.

    இந்த நவீன ஆடைகளை அறிமுகப்படுத்தும் விதமாக புதுவை மிஷின் வீதியில் உள்ள காசாபிலங்கா வணிக வளாகத்தில் பேஷன் ஷோ நடந்தது.

    இதில் 20-க்கும் மேற்பட்ட இளம் பெண்களும், இளைஞர்களும் விதவிதமான ஆடை மற்றும் அணி கலன்களை அணிந்து ஸ்டைலாக நடந்து வந்தனர்.

    இதனை ஆரோவில் பகுதி வாசிகளும் சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

    கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக பேஷன் ஷோ நடத்தப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். 

    • ரோட்டரி கிளப் ஆப் திருத்துறைப்பூண்டி சார்பில் தீபாவளி விழா கொண்டாடப்பட்டது.
    • ரூ.40 ஆயிரம் மதிப்பில் ஆடைகள் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    நாகை மாவட்டம் கீழையூர் ராம்கோ தொண்டு நிறுவனத்தில் ரோட்டரி கிளப் ஆப் திருத்துறைப்பூண்டி சார்பில் தீபாவளி திருநாள் விழா கொண்டாடப்பட்டது.

    இவ்விழாவிற்கு ரோட்டரி சங்கத் தலைவர் கணேசன் தலைமை தாங்கினார், செயலாளர் சோமசுந்தரம் அனைவரையும் வரவேற்றார்.

    இந் நிகழ்ச்சிக்கு துணை ஆளுநர் அறிவழகன் முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் சுமார் 35 பயனாளிகளுக்குசங்க உறுப்பினர்கள் பங்களிப்புடன் ரூபாய் 40 ஆயிரம் மதிப்பில் ஆடைகள் மற்றும் இனிப்பு வழங்கி சிறப்பிக்க ப்பட்டது.

    முன்னாள் ஆளுநர் ஆர்.எஸ். ஆர் இளங்கோவன் உணவுகளையும் வழங்கினார்.

    இதில் முன்னாள் தலைவர் ராஜாராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் சங்க பொருளாளர் பத்மநாதன்நன்றி கூறினார்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை தொண்டு நிறுவன ஊழியர்கள் செல்வம் மற்றும் எழிலரசி ஏற்பாடு செய்திருந்தனர்.

    • கடந்த3 மாதங்களாக திருப்பூரில் வணிக வரித்துறையின் பறக்கும்படை பிரிவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பின்னலாடை ஏற்றிச்செல்லும் வாகனங்களை வணிக வரி பறக்கும்படையினர் ஆங்காங்கே மடக்கி சோதனை செய்கின்றனர்.

    திருப்பூர்:

    ஈரோடு கோட்டத்தின் கீழ் திருப்பூர் வணிகவரி மாவட்டம் இயங்கி வந்தது. வணிக வரி அமலாக்க பிரிவு அதிகாரிகள், ஈரோட்டிலிருந்து திருப்பூருக்கு வந்து வாகன சோதனைகள் நடத்தி வந்தனர். திருப்பூர் வணிக வரி கோட்டம் உருவாக்கப்பட்டு கடந்த ஜூலை மாதம் முதல் செயல்பாட்டை துவக்கியுள்ளது.அவிநாசி அருகே கைகாட்டிப்புதூரில் அமலாக்கப்பிரிவுடன் கூடிய வணிக வரி இணை கமிஷனர் அலுவலகம் செயல்படுகிறது. வரி ஏய்ப்புகளை கண்டறிந்து பிடிக்க 8 பறக்கும்படை ரோந்து வாகனங்கள் களத்தில் உள்ளன. இதையடுத்து, கடந்த3 மாதங்களாக திருப்பூரில் வணிக வரித்துறையின் பறக்கும்படை பிரிவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வாகனங்களில் எடுத்துச்செல்லப்படும் சரக்குகளுக்கு உரிய இ-வே பில், இ- இன்வாய்ஸ் உள்ளதா,சரக்குகளின் தொகை விவரங்கள் சரியாக குறிப்பிடப்பட்டுள்ளனவா, வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளதா என ஆய்வு நடத்துகின்றனர்.

    தீபாவளி நெருங்கும் நிலையில் உற்பத்தி செய்த பின்னலாடைகளை, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கு விரைந்து அனுப்புவதில் திருப்பூர் நிறுவனங்கள் முனைப்பு காட்டி வருகின்றன. பின்னலாடை ஏற்றிச்செல்லும் வாகனங்களை வணிக வரி பறக்கும்படையினர் ஆங்காங்கே மடக்கி சோதனை செய்கின்றனர். வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டால் அபராதங்கள் விதிக்கின்றனர்.

    இது குறித்து ஆடிட்டர் தனஞ்செயன் கூறியதாவது:-

    திருப்பூர் வணிக வரி கோட்டம் உருவானதையடுத்து அமலாக்க பிரிவினர் தினந்தோறும் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் சோதனைகளால் வரி ஏய்ப்பு பெருமளவு கண்டறிந்து தடுக்கப்படும். இது வரவேற்கத்தக்கது.

    இ-இன்வாய்ஸ், இ-வே பில் உருவாக்கப்பட்டு விட்டது என்றாலே வரி ஏய்ப்பு நடைபெற வாய்ப்பு இல்லை. வாகன சோதனையில் ஈடுபடும் அமலாக்க பிரிவு பறக்கும்படையினரோ, உரிய ஆவணங்கள் இருந்தாலும், அவற்றில் சிறு சிறு பிழைகள் இருந்தாலும்கூட (கிளெரிக்கல் மிஸ்டேக்), 5 ஆயிரம், 10 ஆயிரம் ரூபாய் என அபரிமிதமான வரி விதிக்கின்றனர்.

    அதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கை பின்னலாடை துறையினரை பாதிக்க செய்கிறது. சாதாரண பிழைக்கு கூட பெருந்தொகையை அபராதமாக செலுத்த நேரிடுவதோடு குறித்த நேரத்தில் ஆடைகளை, துறைமுகங்களுக்கு கொண்டு சேர்ப்பதில் காலதாமதமும் ஏற்படுகிறது.முறையான ஆவணங்கள் இருந்து, வரி ஏய்ப்பு நோக்கமில்லை என தெரிந்தால், சிறு பிழைகளுக்கு, குறைந்தபட்ச அபராதம் மட்டும் வசூலித்துவிட்டு வாகனங்களை விடுவித்து விட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இது குறித்து, வணிகவரி அமலாக்கப்பிரிவு உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், இ-வே பில், இ-இன்வாய்ஸ் இருந்து, சிறு சிறு பிழைகள் இருப்பின் அவற்றை பெரிதுபடுத்த வேண்டாம் என பறக்கும் படையினருக்கு அறிவுறுத்தப்படும் என்றார். 

    • சுமார் 4 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணி நடைபெற்றது.
    • தீ விபத்தால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என தெரிவித்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் காதர்பேட்டையில் பனியன் பஜார் செயல்பட்டு வருகிறது. இங்கு 50 கடைகள் உள்ளன. திருப்பூரில் உள்ள பனியன் உற்பத்தி நிறுவனங்களில் இருந்து ஆடைகள் வாங்கி இங்கு விற்பனை செய்து வருகின்றனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலான உள்நாட்டு பனியன் ஆடைகள், உள்ளாடைகள் என அனைத்து ஆடை ரகங்களும் இங்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வந்து விற்பனைக்கு தேவையான ஆடைகளை வாங்கி செல்வார்கள். மேலும் பொதுமக்களும் தங்களுக்கு தேவையான ஆடைகளை வாங்கி செல்கின்றனர். இதனால் காதர்பேட்டை பனியன் சந்தை காலை முதல் இரவு வரை எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

    இந்நிலையில் நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் கடைகள் அனைத்தையும் பூட்டி விட்டு வியாபாரிகள் வீடுகளுக்கு புறப்பட்டனர். 2 காவலாளிகள் மட்டும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    வியாபாரிகள் கடையை பூட்டி விட்டு சென்ற சிறிது நேரத்தில் பனியன் பஜாருக்குள் உள்ள ஒரு கடையில் திடீரென தீப்பற்றியது. இதைப்பார்த்த காவலாளிகள் சத்தம் போடவே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் முடியவில்லை.

    ஆடைகள் என்பதால் தீ மளமளவென பற்றி அருகில் உள்ள கடைகளுக்கும் பரவியது. ஒவ்வொரு கடைகளிலும் பனியன் ஆடைகள் அதிகளவில் இருந்ததால் தீ மளமளவென பற்றி கொளுந்து விட்டு எரிந்தது. உடனே இது குறித்து திருப்பூர் வடக்கு, மற்றும் தெற்கு தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 4 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. இருப்பினும் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. 10 நிமிடத்துக்குள் 50 கடைகளுக்கும் தீ பரவி கொளுந்து விட்டு எரிந்தது.

    தீயணைப்பு வீரர்கள் இரவு 9-30மணி முதல் இரவு 12-30 மணி வரை சுமார் 3 மணி நேரம் வரை போராடி தீயை மேலும் பரவவிடாமல் அணை த்தனர். தீ விபத்து காரணமாக அந்த பகுதியில் உடனடியாக மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதன்காரணமாக ராயபுரம் பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது.

    ஒவ்வொரு கடையிலும் பல லட்சம் மதிப்பிலான பனியன் ஆடைகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டு இருந்தது. 50 கடைகளிலும் சேர்த்து மொத்தம் ரூ.3 கோடி மதிப்பிலான ஆடைகள் தீயில் எரிந்து நாசமாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.

    மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இன்று காலை வியாபாரிகள் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் தீயில் எரிந்து சேதமான பொருட்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். பொக்லைன் எந்திரங்கள் மூலம் சேதமான பொருட்கள் அகற்றப்பட்டு லாரிகளில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், கலெக்டர் கிறிஸ்துராஜ் , செல்வராஜ் எம்.எல்.ஏ., ஆகியோர் இன்று காலை தீ விபத்து நிகழ்ந்த பனியன் பஜார் பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது தீ விபத்தால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என தெரிவித்தனர். 

    • நம்பிக்கை மனநல காப்பகத்தில் தங்கி உள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.
    • புதிய ஆடைகள் , இனிப்பு மற்றும் பட்டாசுகள் டெல்டா ரோட்டரி சங்க உறுப்பினர்கள் வழங்கினர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி டெல்டா ரோட்டரி சங்கம் சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி கீழ வீதியில் இயங்கி வரும் நம்பிக்கை மனநல காப்பகத்தில் தங்கி உள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய ஆடைகள், இனிப்பு மற்றும் பட்டாசுகள் டெல்டா ரோட்டரி சங்க உறுப்பினர்கள் அனைவரின் ஒத்துழைப்போடும் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்விற்கு தலைவர்ரமேஷ் தலைமை தாங்கினார்.

    மண்டலம் 25 உதவி ஆளுநர் சிவக்குமார் முன்னிலை வகித்தார்.

    டெல்டா ரோட்டரி சங்கத்தின் செயல்பாடுகளை வாழ்த்தி நம்பிக்கை மனநல காப்பக சேர்மன் சௌந்தர்ராஜன், அவரது துணைவியார் காப்பகத்தின் துணை சேர்மன் விஜயா ஆகியோர் வாழ்த்துரை வழங்கி டெல்டா ரோட்டரி உறுப்பினர்களை கௌரவித்தனர்.

    முடிவில் செயலாளர் ராஜதுரை நன்றி கூறினார்.

    இந்த தீபாவளி சிறப்பு புத்தாடை வழங்கும் ஏற்பாட்டினை பொருளாளர் அகிலன், உடனடி முன்னாள் தலைவர் காளிதாஸ் உள்ளிட்ட முன்னாள் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    மனநல காப்பகத்தில் உள்ளவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

    • வெளிநாட்டு வர்த்தகர்களுடன் தொடர்பை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
    • இந்தியாவில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட ஆடைகளை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றார்.

    திருப்பூர்:

    திருப்பூர் அருகே பழங்கரையில் உள்ள ஐ.கே.எப். வளாகத்தில் சர்வதேச பின்னலாடை கண்காட்சிதொடங்கியது. இந்த கண்காட்சி குறித்து திருப்பூர் அனைத்து ஏற்றுமதி வர்த்தக அமைப்பின் தலைவர் இளங்கோவன் கூறும்போது, திருப்பூர் ஏற்றுமதியாளர்களில் 60 சதவீதம் முதல் 70 சதவீதம் பேர் வெளிநாட்டு வர்த்தக முகமைகளின் (பையிங் ஏஜென்சி) மூலமாக வர்த்தகம் செய்கிறார்கள். பெரும்பாலான ஏற்றுமதியாளருக்கு நேரடி வர்த்தகம் செய்யும் அளவுக்கு சர்வதேச சந்தை விவரம் முழுமையாக தெரியவில்லை. உற்பத்தியை தரமாக மேற்கொண்டாலும், மார்க்கெட்டிங் தொழில் திறன் குறைவு. வர்த்தக முகமைகளை அவர்கள் சார்ந்துள்ளனர். புதிய வாய்ப்புகளை உருவாக்க வர்த்தக முகமைகளுடன் கைகோர்த்து செயல்பட வேண்டியது அவசியமாகும். அனைவரும் இணைந்து 'பிராண்ட் திருப்பூர்' என்பதை புதிதாக அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். சுற்றுச்சூழல் பாதுகாப்பு தரக்கொள்கையை பின்பற்றி 'பிராண்ட் திருப்பூர்' என்ற பெயரில் புதிய பிராண்ட் உருவாக்கப்படும்' என்றார்.

    டெல்லியை சேர்ந்த வர்த்தக முகமை அமைப்பின் ரோகிணி சூரி கூறும்போது, 'வர்த்தக முகமையுடன் இணைந்து கண்காட்சி நடக்கிறது. புதிய வர்த்தக வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் மார்க்கெட்டிங் முக்கியம். சரியான சந்தைப்படுத்துதல் அமைந்துவிட்டால் வெற்றி எளிதில் கிடைக்கும். அதற்கு வர்த்தக முகமைகள் உதவ முன்வந்துள்ளன என்றார்.

    டெல்லி வர்த்தக முகவர் சஞ்சய் சுக்லா கூறும்போது, சாதகமான சூழல் நிலவுவதால் தற்போதைய பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் அடுத்த 5 ஆண்டுகளில் 25 சதவீதம் உயர வாய்ப்புள்ளது. உற்பத்தியாளர்கள், சார்பு நிறுவனங்கள், செலவினங்களை குறைத்து உற்பத்தியை பெருக்க வேண்டும். உற்பத்திக்கு இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பி.எல்.ஐ.) திட்டத்தில் அரசு சலுகைகளை பெற்று மதிப்புக்கூட்டப்பட்ட ஆடைகளை உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்' என்றார்.

    நிப்ட் முன்னாள் மாணவர் அமைப்பு தலைவர் ரோகித் கூறும்போது, திருப்பூர் நகரம் 35 கிலோ மீட்டர் சுற்றளவில் பனியன் தொழில்களை நடத்தி வருகிறது. சீனா, வங்கதேசம், வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்து ஆர்டர்கள் திருப்பூருக்கு வரப்போகிறது. வெளிநாட்டு வர்த்தகர்களுடன் தொடர்பை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

    கைத்தறி ஆடை, ஆயத்த ஆடை ஏற்றுமதி அமைப்பின் தலைவர் அஜய் அகர்வால் கூறும்போது, 'பின்னலாடைத்துறையில் இந்தியாவின் போட்டி நாடுகளில் தற்போது அசாதாரண சூழல் நிலவுகிறது. அமெரிக்கா, ஐரோப்பா நிறுவனங்கள், சீனாவில் இருந்து வெளியேற தொடங்கியுள்ளன. போட்டி நாடுகளுக்கான ஆர்டர் இந்தியாவுக்கு கிடைக்கும். இந்தியாவில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட ஆடைகளை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றார்.

    • மயிலாடுதுறை விற்பனை நிலையத்திற்கு ரூ.1 கோடி விற்பனை குறியீடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • அரசு ஊழியர்களுக்கு தவணை முறை கடன் விற்பனை வசதியும் உண்டு.

    தரங்கம்பாடி:

    தமிழக அரசின்தலைமை கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளி விற்பனை நடைபெற்று வருகின்றது.

    இந்த சிறப்பு விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய மென்பட்டு புடவைகள், காஞ்சிபுரம், ஆரணி, திருபுவனம் போன்ற ஊர்களில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுப்புடவைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், கூறைநாடு புடவைகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவ ண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், போர்வைகள். படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டி, லுங்கி, துண்டு இரகங்கள், பருத்தி சட்டைகள், திரைச்சீலைகள், கால்மிதியடிகள், நைட்டிஸ், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி இரகங்கள் ஏராளமாகத் இறக்கப்பட்டுள்ளது.

    மயிலாடுதுறை கோ.ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி விற்பனையை மாவட்ட கலெக்டர் லலிதா குத்துவி ளக்கு ஏற்றி தொடக்கி வைத்தார்.

    இந்த ஆண்டு கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி-2022 பண்டிகையை முன்னிட்டு கடலூர் மண்டலத்திற்கு ரூ.14 கோடி விற்பனை குறியீடாகவும், அதில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை விற்பனை நிலையத்திற்கு ரூ.1 கோடியும், சீர்காழி விற்பனை நிலையத்திற்கு ரூ.50 லட்சமும் விற்பனை குறியீடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் செயல்படுத்தி வரும் கனவு நனவு திட்டத்தின்படி. வாடிக்கை யாளர்களின் மாதந்தோறும் ரூ.300 முதல் ரூ.5000 வரை 10 மாத தவணைகள் மட்டும் வாடிக்கையாளர்க ளிடமிருந்து பெறப்பட்டு 11 மற்றும் 12-வது மாத தவணைகளை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் செலுத்துவதுடன் கூடுதல் சேமிப்புடன் பருத்தி மற்றும் பட்டு இரக துணிகளை வாங்கி பயன்பெறலாம்.

    தீபாவளி சிறப்புத் தள்ளுபடி 30 சதவீத வசதியுடன் அரசு ஊழியர்களுக்கும் தவணை முறை கடன் விற்பனை வசதியும் உண்டு.

    இந்நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் ரமணி, வருவாய் கோட்டாட்சியர் யுரேகா மற்றும் விற்பனை நிலைய ஊழியர்களும் கலந்து கொண்டார்கள்.

    விழா ஏற்பாடுகளை மயிலாடுதுறை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய விற்பனை மேலாளர் குமார் செய்திருந்தார்.

    ×