search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vice Chancellor"

    நிர்மலாதேவி விவகாரம் வெளியே வந்தால் பல பழம் பெருச்சாளிகள் சிக்குவார்கள் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். #BJP #PonRadhakrishnan #NirmalaDevi
    சென்னை:

    மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    நிர்மலாதேவி விவகாரம் வெளியே வந்தால் பல பழம் பெருச்சாளிகள் சிக்குவார்கள். இதில் கவர்னரை தொடர்பு படுத்தி பேசுவதன் பின்னணியில் மிகப்பெரிய சதி இருக்கிறது. அரசு இது குறித்து விரிவாக விசாரிக்க வேண்டும்.

    துணை வேந்தர்கள் நியமனத்தில் ஊழல் என்றால் ஒரு விசயத்தை கவர்னர் சொல்லும் போது முழு ஆதாரமும் தெரிந்த பிறகுதான் கூறி இருப்பார். எந்த காலகட்டத்தில் ஊழல் நடந்திருக்கிறது என்று தெரிவிக்கவில்லை. அந்த உண்மைகள் வெளிவந்தால் பலரது அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும்.

    யாரையும் பின்னால் இருந்து இயக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. இயக்க வேண்டும் என்றால் முன்னாள் இருந்தே இயக்குவோம்.


    சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் இதுவரை நாங்கள் தலையிட்டது இல்லை. எச்.ராஜா, எஸ்.வி.சேகர் விவகாரங்கள் பற்றி போலீசிடம்தான் கேட்க வேண்டும்.

    அ.தி.மு.க. அரசு மீது தி.மு.க. ஊழல் பட்டியல் கொடுப்பதாக கூறுகிறீர்கள். அதோடு அவர்கள் ஆட்சி காலத்தில் நடந்த தவறுகள் பற்றிய புகாரையும் சேர்த்து கொடுத்தால் நன்றாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #PonRadhakrishnan #NirmalaDevi
    தகுதி அடிப்படையில் தான் சென்னை பல்கலைக்கழக துணை வேந்தராக நியமனம் செய்யப்பட்டதாக துணை வேந்தர் துரைசாமி தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமனம் செய்ய லஞ்சம் பெறப்பட்டுள்ளதாக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார்.

    இது கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சிதலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    இந்த நிலையில் சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் பி.துரைசாமி சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார்.

    அவரிடம் நிருபர்கள், கடந்த காலங்களில் துணை வேந்தர்கள் நியமனத்துக்கு கோடிக்கணக்கில் பணம் கை மாறியுள்ளதாக கவர்னர் பன்வாரிலால் எழுப்பியுள்ள புகார் தொடர்பாக கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்து துணை வேந்தர் துரைசாமி கூறியதாவது:-

    தகுதி அடிப்படையில் தான் துணை வேந்தர் நியமனம் நடைபெற்று வருகிறது. அப்போதைய கவர்னர் வித்யாசாகர்ராவ் இருக்கும் போது தான் நான் சென்னை பல்கலைக்கழக துணை வேந்தராக நியமனம் செய்யப்பட்டேன்.

    அதாவது துணை வேந்தர் பதவிக்கான நேர்முகத்தேர்வில் 3 பேர் பங்கேற்றோம். இதில் விதிமுறைகளின் படி தகுதி மற்றும் மதிப்பெண் அடிப்படையில் தான் இப்பதவி கிடைக்கப்பெற்றேன். இதில் எவ்வித பணப்பரிமாற்றமோ, சிபாரிசுகளோ நடைபெறவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தராக ஜி.பாலசுப்பிரமணியனை நியமனம் செய்துள்ளதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. #GBalasubramanian #ViceChancellor #TanjoreTamilUniversity
    சென்னை:

    தஞ்சை மாவட்டத்தில் உள்ள தமிழ் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரை ஆளுநர் இன்று நியமனம் செய்துள்ளார். திராவிடன் பல்கலைக்கழகத்தின் இணைவேந்தராக இருக்கும் டாக்டர் ஜி.பாலசுப்பிரமணியன், தமிழ் பலகலைக்கழக இணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இவர், 3 ஆண்டுகள் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தராக இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டாக்டர் ஜி.பாலசுப்பிரமணியன், தேசிய மற்றும் சர்வதேச அளவில் 22 ஆராய்ச்சிக்கட்டுரைகளை சமர்ப்பித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. #GBalasubramanian #ViceChancellor #TanjoreTamilUniversity
    சட்ட கல்லூரியில் ராகிங் தொடர்ந்து நீடிப்பதாலும், சரியான நடவடிக்கை எடுக்காததாலும், கவர்னர் பன்வாரிலால் சட்ட பல்கலைக்கழக துணைவேந்தரிடம் விளக்க அறிக்கை கேட்டு இருக்கிறார். #StudentRagging
    சென்னை:

    சென்னை அடையாறில் டாக்டர் அம்பேத்கார் சட்ட பல்கலைக்கழகம் உள்ளது. இதன் துணைவேந்தராக தம்மா சூரியநாராயண சாஸ்திரி பதவி வகித்து வருகிறார்.

    சட்டப் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட சட்டக் கல்லூரிகளில் ராகிங் கொடுமைகள் நடைபெற்று வருவது தமிழக கவர்னர் பன்வாரிலால் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

    சமீபத்தில் சட்டக் கல்லூரி மாணவர்கள் ராகிங் தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக இரு பிரிவாக மோதிக் கொண்டார்கள். இதில் கே.கே.பிரசாந்த் என்ற மாணவர் தாக்கப்பட்டதில் அவரது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டு விலகியது.

    இது தொடர்பாக மாணவரின் பெற்றோர் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் செய்தனர். அதன் பேரில் இதுபற்றி விசாரிக்க ஆர்.சிங்காரவேலன் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழு நாளை (சனிக்கிழமை) கூடி விசாரணை நடத்துகிறது.

    இதற்கிடையே இந்த குழுவில் இடம் பெற்ற சிண்டிகேட் உறுப்பினர்கள் ராகிங் தொடர்பான புகார்களை விசாரிப்பதில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    மாணவர் பிரசாந்த் தாக்கப்பட்டது தொடர்பாக வேளச்சேரி போலீசில் புகார் செய்யப்பட்டு 6 மூத்த மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய 2 மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்தால் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்.



    இதே போல் மற்றொரு 2-ம் ஆண்டு மாணவர் கே. தனுஷ் என்பவரும் ராகிங் கொடுமைக்கு ஆளானார். இவரையும் இவரது நண்பரையும் மூத்த மாணவர்கள் சிலர் அவர்கள் தங்கி இருந்த அறைக்கு வரவழைத்து பீர் பாட்டிலில் சிறுநீரை நிரப்பி குடிக்க சொல்லி வற்புறுத்தி உள்ளனர். இதுபற்றியும் வேளச்சேரி போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    முன்னதாக நடந்த ஒரு சம்பவத்தில் கடந்த ஆண்டு கல்லூரியில் சேர்ந்த மாணவரை பரீட்சை எழுத விடாமல் தடுத்து இருக்கிறார்கள்.

    ராகிங் கொடுமை தொடர்ந்து நீடிப்பதாலும், சரியான நடவடிக்கை எடுக்காததாலும், கவர்னர் பன்வாரிலால் சட்ட பல்கலைக்கழக துணைவேந்தரிடம் விளக்க அறிக்கை கேட்டு இருக்கிறார்.

    இந்த நிலையில் நாளை ராகிங் தொடர்பான விசாரணை குழு கூட்டம் நடைபெறுகிறது. #StudentRagging
    மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நேற்று தள்ளுபடி செய்தது. #MaduraiKamarajUniversity #SupremeCourt
    புதுடெல்லி:

    மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்டச் செயலாளரான லயோனல் அந்தோணிராஜ் மற்றும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஆகியோர், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த பி.பி.செல்லத்துரைக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் தனித்தனியாக மனுக்களை தாக்கல் செய்து இருந்தனர்.

    அந்த மனுக்களில், செல்லத்துரைக்கு துணைவேந்தர் பதவிக்கு தேவையான பேராசிரியர் அனுபவம் கிடையாது என்றும், பல்கலைக்கழக விதிகளுக்கு புறம்பாக அவர் துணைவேந்தராக நியமிக்கப்பட்டு உள்ளார் என்றும், இது சட்டவிரோதமானது என்றும், எனவே அவரை துணைவேந்தராக நியமனம் செய்ததை ரத்துசெய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

    இந்த மனுக்களை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு, மதுரை காமராஜர் பல்கலைக் கழக துணைவேந்தராக பி.பி.செல்லத்துரையை நியமித்ததை ரத்துசெய்து கடந்த ஜூன் 14-ந்தேதி தீர்ப்பு வழங்கியது.



    மேலும் புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய மீண்டும் சிண்டிகேட், செனட் மற்றும் கவர்னரின் பிரதிநிதிகள் அடங்கிய தேடுதல் குழுவை அமைக்க வேண்டும் என்றும், இந்த குழு 3 மாதத்திற்குள் புதிய துணைவேந்தரை சட்டத்திற்குட்பட்டு பரிந்துரைக்க வேண்டும் என்றும், மீண்டும் பி.பி.செல்லத்துரை துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்தால் அதையும் சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலிக்க வேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டு இருந்தது.

    சென்னை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி பி.பி.செல்லத்துரை சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு ஜூன் 20-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது, சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது என்று கூறிய சுப்ரீம் கோர்ட்டு, மனுதாரரின் மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

    இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சார்பில் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், தமிழக அரசு வக்கீல் பா.வினோத் கன்னா, உயர்கல்வித்துறை செயலாளர் சார்பில் மூத்த வக்கீல் ரஞ்சித் குமார், தமிழக கவர்னர் தரப்பில் மூத்த வக்கீல் சேகர் நாப்டே, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் மூத்த வக்கீல் ஆர்.வெங்கட்ரமணி ஆகியோர் ஆஜரானார்கள்.

    மனுதாரர் பி.பி.செல்லத்துரை சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி ஆஜரானார்.

    மனுதாரரின் வக்கீல் முகுல் ரோகத்கி வாதாடுகையில் கூறியதாவது:-

    இந்த பிரச்சினை தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு தரப்பில், இந்த நியமனம் சரியான விதிமுறைப்படி செய்யப்பட்டுள்ளது என்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நியமனத்தை முற்றிலும் ஆதரிக்கும் வகையில் அந்த பிரமாண பத்திரம் அமைந்து இருந்தது. இப்போது சுப்ரீம் கோர்ட்டில் அதற்கு முற்றிலும் எதிராக வாதங்கள் முன்வைக் கப்படுகின்றன.

    மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவிக்கான நியமனம் செய்யப்பட்ட போது தேடுதல் குழுவில் இருந்த 2 உறுப்பினர்கள் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. அவர் களின் ஒப்புதல் பெற்றுத்தான் இந்த நியமனம் செய்யப்பட்டது. ஆனால் கோர்ட்டில் அவர்கள் வேறு மாதிரி பிரமாண பத்திரங்கள் அளித்து இருக்கிறார்கள். இதனை கோர்ட்டு ஏற்றுக்கொண்டால் இந்தியாவில் செய்யப்படும் அனைத்து நியமனங்களையும் முன்பு ஏற்றுக்கொண்டு பிற்பாடு முரண்பட்ட கருத்துகளை கூறலாம் என்ற முன்மாதிரி உருவாக்கப்படும். இது தவறானது. இதனை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழக கவர்னர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சேகர் நாப்டே வாதாடுகையில் கூறியதாவது:-

    முன்பு பல்வேறு காரணங் களுக்காக இந்த நியமனத்தை அரசு ஏற்றுக்கொண்டது. ஐகோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்த பிறகு அரசின் கவனத்துக்கு பல்வேறு விஷயங்கள் கொண்டு வரப்பட்டன. மேலும் ஒரு ஆண்டுக்கும் மேலாக துணை வேந்தரின் நடவடிக்கைகளை கவனித்த போது ஐகோர்ட்டு தீர்ப்பு சரியானதே என்று அரசு ஏற்றுக்கொண்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அத்துடன் தமிழக கவர்னர் அலுவலகத்தின் ஒரு கோப்பில் இருந்து, துணைவேந்தர் நியமனம் தொடர்பான சில பகுதிகளை கோர்ட்டுக்கு வாசித்து காட்டினார்.

    அவரை தொடர்ந்து வாதாடிய அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் கூறுகையில், துணைவேந்தர் நியமனத்தை ஐகோர்ட்டில் நாங்கள் ஆதரித்தாலும் பிற்பாடு இவருடைய (பி.பி.செல்லத்துரை) நடவடிக்கைகள் சரியில்லாத காரணத்தால் அந்த நியமனத்தை ரத்து செய்ய பரிந்துரைக்கிறோம் என்றார்.

    மேலும், தேடுதல் குழுவின் 3 உறுப்பினர்களின் ஆலோசனையின் பேரில் இந்த நியமனம் செய்யப்பட்டு இருந்தாலும், அவருடைய நடவடிக்கைகளால் அவர் இந்த பதவிக்கு தகுதியானவர் அல்ல என்று தெரியவந்ததாகவும், அதனால்தான் இந்த மேல்முறையீட்டு மனுவை தாங்கள் எதிர்ப்பதாகவும் அவர் தனது வாதத்தின் போது குறிப்பிட்டார்.

    அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பி.பி.செல்லத்துரையின் நியமனத்தை ரத்துசெய்து ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு எதிராக அவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பு கூறினார்கள்.

    அப்போது மனுதாரர் பி.பி.செல்லத்துரையின் வக்கீலிடம் நீதிபதிகள், “உங்கள் தரப்பில் சட்டரீதியாக வாதங்களை முன்வைக்க இடமிருந்தாலும் தார்மீக ரீதியில் இந்த வழக்கில் முகாந்திரம் எதுவும் இல்லை என்பதால் இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறோம்” என்று கூறினார்கள். 
    சட்டக்கல்வியில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக துணைவேந்தர் கூறினார்.
    சென்னை:

    தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் தம்ம.சூரியநாராணய சாஸ்திரி நிருபர்களிடம் கூறியதாவது:-

    2018-2019-ம் ஆண்டிற்கான சட்ட கல்வியில் மாணவர்களை சேர்க்க இருக்கிறோம். இதற்காக பல்கலைக்கழக இணையதளத்திலும் ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை நேரிலும் பெற்றுக்கொள்ளலாம். இந்த வருடம் ஆன்லைனில் விண்ணப்பிப்பதில் நல்ல ஆதரவு இருந்தால் ஆன்லைலின் விண்ணப்பிப்பது வருங்காலத்தில் முழுமையாக கொண்டு வரப்படும்.

    சென்னையில் உள்ள சீர்மிகு சட்டகல்லூரியில் பி.ஏ.எல்.எல்.பி.(ஆனர்ஸ்), பி.பி.ஏ.எல்.எல்.பி.(ஆனர்ஸ்), பி.காம். எல்.எல்.பி.(ஆனர்ஸ்), பி.சி.ஏ.எல்.எல்.பி.(ஆனர்ஸ்) ஆகிய 5 ஆண்டு படிப்புகளில் சேர பிளஸ்-2 தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். இந்த படிப்பில் சேர நாளை (28-ந்தேதி) முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 18-ந்தேதி.

    டாக்டர் அம்பேத்கர் சட்டகல்லூரி உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டகல்லூரிகளிலும் 5 வருட பி.ஏ.எல்.எல்.பி. படிக்க ஜூன் மாதம் 1-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 29-ந்தேதி.

    விண்ணப்பிக்கவும், விண்ணப்பிக்கும் விவரம் அறியவும் (www.tndalu.ac.in) என்ற இணையதளத்தை பார்க்கவேண்டும்.

    தமிழ்நாட்டில் 10 அரசு சட்டகல்லூரிகள் உள்ளன. ஒரு தனியார் சட்டகல்லூரியும் உள்ளது. பட்டபடிப்பு முடித்து விட்டு 3 வருட சட்டக்கல்வியில் சேர விண்ணப்பிப்பவர்களுக்கு தமிழகம் முழுவதும் 1,541 இடங்களும், பிளஸ்-2 முடித்து விட்டு 5 வருடம் சட்டக்கல்லூரியில் சேர உள்ள மாணவர்களுக்கு தமிழ்நாட்டில் 1,411 இடங்களும் உள்ளன.

    விண்ணப்ப கட்டணம் உயர்த்தப்படவில்லை. மேலும் சீர்மிகு சட்டகல்லூரியில் மட்டும் கல்வி கட்டணம் ரூ.10 ஆயிரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3 வருட சட்டப்படிப்புக்கு ஜூன் 26-ந்தேதி முதல் ஜூலை 27-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

    வெளிநாடுவாழ் (என்.ஆர்.ஐ.) இந்தியர்களுக்கான படிப்பிற்கான இடங்களில் சேர முறையான இட ஒதுக்கீடு வெளிப்படையான முறையில் கடைப்பிடிக்கப்படும். சட்டபல்கலைக்கழகத்தில் பணியாற்ற ஆசிரியர்கள் இடம் 29 காலியாக உள்ளன. அந்த இடங்களை நிரப்ப விண்ணப்பம் வரவேற்கப்பட்டு உள்ளது. விண்ணப்பம் வந்துகொண்டிருக்கிறது. அதற்கு நாளை(திங்கட்கிழமை) கடைசி நாள். உதவி பேராசிரியர்கள் தேர்வு, வெளிப்படையான முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

    இவ்வாறு துணைவேந்தர் சூரிய நாராயணசாஸ்திரி கூறினார்.

    பேட்டியின் போது மாணவர் சேர்க்கை குழு தலைவர் நாராயணபெருமாள் உடன் இருந்தார். 
    காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்ட சுவாமிநாதனுக்கு துணைவேந்தர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    காரைக்குடி:

    தமிழக கவர்னரும், பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோகித், காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் ஆட்சி மன்றக்குழு உறுப்பினராக புதுவயல் வித்யாகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் சுவாமிநாதனை 3.5.2018 முதல் மூன்றாண்டுகளுக்கு நியமித்துள்ளார்.

    இவர் சிறந்த கல்வியாளர். 32 ஆண்டுகளாக கணிதவியல் பாடத்தில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பின்தங்கிய மாணவர்கள் பலரையும் தனது கற்பிக்கும் திறனால் முன்னுக்கு கொண்டு வந்தவர்.

    சுவாமிநாதன் கணிதத்தில் எம்.எஸ்.சி.,எம்.பில். மற்றும் கணிதவியல் பாடத்தில் கல்வியியல் துறையில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.

    2002- 2003-ம் கல்வியாண்டில் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார். 2005-ம் ஆண்டு “இந்திய கல்வியியலில் சிறந்த ஆசிரியர்”விருது பெற்றுள்ளார். 2014-ம் ஆண்டில் இருந்து சுவாமிநாதன் சிவகங்கை மாவட்ட சாரணர் இயக்கத்தின் ஆணையராக பணியாற்றி வருகிறார். பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு கணிதப் பாடப்புத்தகங்களை எழுதி உள்ளார்.

    தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான கணிதப் புத்தகங்களையும் எழுதியுள்ளார். வெளிநாடுகளுக்கும் கல்விப்பயணமாக சென்றுள்ளார்.

    அழகப்பா பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்ட சுவாமிநாதன், துணைவேந்தர் சுப்பையாவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
    ×