search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சட்டக்கல்வியில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் - துணைவேந்தர் தகவல்
    X

    சட்டக்கல்வியில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் - துணைவேந்தர் தகவல்

    சட்டக்கல்வியில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக துணைவேந்தர் கூறினார்.
    சென்னை:

    தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் தம்ம.சூரியநாராணய சாஸ்திரி நிருபர்களிடம் கூறியதாவது:-

    2018-2019-ம் ஆண்டிற்கான சட்ட கல்வியில் மாணவர்களை சேர்க்க இருக்கிறோம். இதற்காக பல்கலைக்கழக இணையதளத்திலும் ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை நேரிலும் பெற்றுக்கொள்ளலாம். இந்த வருடம் ஆன்லைனில் விண்ணப்பிப்பதில் நல்ல ஆதரவு இருந்தால் ஆன்லைலின் விண்ணப்பிப்பது வருங்காலத்தில் முழுமையாக கொண்டு வரப்படும்.

    சென்னையில் உள்ள சீர்மிகு சட்டகல்லூரியில் பி.ஏ.எல்.எல்.பி.(ஆனர்ஸ்), பி.பி.ஏ.எல்.எல்.பி.(ஆனர்ஸ்), பி.காம். எல்.எல்.பி.(ஆனர்ஸ்), பி.சி.ஏ.எல்.எல்.பி.(ஆனர்ஸ்) ஆகிய 5 ஆண்டு படிப்புகளில் சேர பிளஸ்-2 தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். இந்த படிப்பில் சேர நாளை (28-ந்தேதி) முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 18-ந்தேதி.

    டாக்டர் அம்பேத்கர் சட்டகல்லூரி உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டகல்லூரிகளிலும் 5 வருட பி.ஏ.எல்.எல்.பி. படிக்க ஜூன் மாதம் 1-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 29-ந்தேதி.

    விண்ணப்பிக்கவும், விண்ணப்பிக்கும் விவரம் அறியவும் (www.tndalu.ac.in) என்ற இணையதளத்தை பார்க்கவேண்டும்.

    தமிழ்நாட்டில் 10 அரசு சட்டகல்லூரிகள் உள்ளன. ஒரு தனியார் சட்டகல்லூரியும் உள்ளது. பட்டபடிப்பு முடித்து விட்டு 3 வருட சட்டக்கல்வியில் சேர விண்ணப்பிப்பவர்களுக்கு தமிழகம் முழுவதும் 1,541 இடங்களும், பிளஸ்-2 முடித்து விட்டு 5 வருடம் சட்டக்கல்லூரியில் சேர உள்ள மாணவர்களுக்கு தமிழ்நாட்டில் 1,411 இடங்களும் உள்ளன.

    விண்ணப்ப கட்டணம் உயர்த்தப்படவில்லை. மேலும் சீர்மிகு சட்டகல்லூரியில் மட்டும் கல்வி கட்டணம் ரூ.10 ஆயிரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3 வருட சட்டப்படிப்புக்கு ஜூன் 26-ந்தேதி முதல் ஜூலை 27-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

    வெளிநாடுவாழ் (என்.ஆர்.ஐ.) இந்தியர்களுக்கான படிப்பிற்கான இடங்களில் சேர முறையான இட ஒதுக்கீடு வெளிப்படையான முறையில் கடைப்பிடிக்கப்படும். சட்டபல்கலைக்கழகத்தில் பணியாற்ற ஆசிரியர்கள் இடம் 29 காலியாக உள்ளன. அந்த இடங்களை நிரப்ப விண்ணப்பம் வரவேற்கப்பட்டு உள்ளது. விண்ணப்பம் வந்துகொண்டிருக்கிறது. அதற்கு நாளை(திங்கட்கிழமை) கடைசி நாள். உதவி பேராசிரியர்கள் தேர்வு, வெளிப்படையான முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

    இவ்வாறு துணைவேந்தர் சூரிய நாராயணசாஸ்திரி கூறினார்.

    பேட்டியின் போது மாணவர் சேர்க்கை குழு தலைவர் நாராயணபெருமாள் உடன் இருந்தார். 
    Next Story
    ×