search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Trichy airport"

    • விமானத்தின் மூலம் பெங்களூரு சென்று அங்கிருந்து புதுடெல்லி, புனே, மும்பை நகரங்களுக்கு செல்லும் பயணிகள் முன்பதிவு செய்து இருந்தனர்.
    • விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டதை தொடர்ந்து பயணிகள் தொடர் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    கே.கே. நகர்:

    திருச்சி விமான நிலையத்திலிருந்து வெளிநாட்டு சேவைகளாக மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், அபுதாபி, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இதேபோன்று உள்நாட்டு சேவைகளாக சென்னை, ஐதராபாத், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் மற்ற மாநிலங்களுக்கு செல்பவர்கள் திருச்சி விமான நிலையத்திலிருந்து மேற்கண்ட விமான நிலையங்களுக்கு சென்று அங்கிருந்து வேறு விமானங்கள் மூலமோ அல்லது தொடர் விமானங்கள் மூலமோ பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் திருச்சியில் இருந்து பெங்களூருக்கு இன்று காலை 74 பயணிகளுடன் இண்டிகோ விமானம் புறப்பட தயாராக இருந்தது.

    அப்போது விமானத்தில் உள்ள தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து விமானத்தில் ஏற்றப்பட்ட பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டனர். தொடர்ந்து விமானம் புறப்படும் நேரம் அறிவிக்கப்படாத நிலையில் இருந்து வந்தது. ஏற்கனவே இந்த விமானத்தின் மூலம் பெங்களூரு சென்று அங்கிருந்து புதுடெல்லி, புனே, மும்பை நகரங்களுக்கு செல்லும் பயணிகள் முன்பதிவு செய்து இருந்தனர்.

    இந்த நிலையில் இந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்ட றியப்பட்டதை தொடர்ந்து அவர்கள் தொடர் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விமானம் எப்போது புறப்படும்? என்றும், தற்போது சிக்கித் தவிக்கும் பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் என்ன செய்ய இருக்கிறார்கள்? என்பது குறித்தும் இதுவரை பயணிகளுக்கு விமான நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்படவில்லை. இதனால் பயணிகள் திருச்சி விமான நிலையத்தில் தவித்து வருகின்றனர்.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி விமான நிலையத்தில் ரூ. 1.08 கோடி மதிப்புள்ள சுமார் ஒரு கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
    • உதவி கமிஷனராக பதவி உயர்வு பெற்றுள்ள கவுரி, ராஜேந்திரன் மற்றும் ராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    கே.கே. நகர்:

    திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதில் குறிப்பாக பல்வேறு புதிய முறைகளில் தங்கத்தை கடத்தி வரும் பயணிகளிடம் இருந்து தங்கத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்துவதில் திருச்சி சுங்கத்துறையில் பணியாற்றி வரும் டிரைவர் ஒருவர் உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. அவர் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி விமான நிலையத்தில் ரூ. 1.08 கோடி மதிப்புள்ள சுமார் ஒரு கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதன் தொடர்ச்சியாக திருச்சி விமான நிலையத்தில் பணியாற்றி வரும் 3 சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி திருச்சி விமான நிலைய சுங்கத்துறையில் பணியாற்றி வந்த துணை கமிஷனர்கள் இளமதி மற்றும் ராம்குமார், உதவி கமிஷனர் ஆக பணியாற்றி வந்த சிவகுமார் ஆகியோர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

    அவர்களுக்கு பதிலாக உதவி கமிஷனராக பதவி உயர்வு பெற்றுள்ள கவுரி, ராஜேந்திரன் மற்றும் ராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் திருச்சி விமான நிலையத்தில் நடைபெறும் தங்க கடத்தலை தடுக்கும் வகையில் மேலும் பல்வேறு அதிகாரிகள் மாற்றப்படும் நிலை உள்ளதாக தெரிய வருகிறது.

    • குமார் மீது கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் பல்வேறு பிரிவுகளில் வழக்கு இருப்பது தெரியவந்தது.
    • குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கே.கே. நகர்:

    சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு ஸ்கூட் விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா பட்டத்தி காடு கிராமத்தைச் சேர்ந்த குமார் (வயது 40 ) என்ற பயணியின் பாஸ்போர்ட்டை இமிக்ரிவேஷன் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது அவர் மீது கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் பல்வேறு பிரிவுகளில் வழக்கு இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து குமாரை ஏர்போர்ட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    ஏர்போர்ட் போலீசார் கந்தர்வகோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அவர்களிடம் குமார் ஒப்படைக்கப்பட்டார்.

    குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திருச்சியில் இருந்து செல்லும் பயணிகள் அரிய வகை உயிரினங்களை கடத்தி செல்கின்றனர்.
    • சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களிடம் உடமைகளை தவிர்த்து செல்ல விரும்பினால் பயணம் செய்யலாம் என தெரிவித்தனர்.

    கே.கே.நகர்:

    திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தங்கள் உடமைகள் மற்றும் உடைகளில் மறைத்து வைத்து தங்கம் உள்பட பல பொருட்களை கடத்தி வருவது வாடிக்கையான ஒன்றாக இருந்து வருகிறது.

    இதே போல் திருச்சியில் இருந்து செல்லும் பயணிகளும் அரிய வகை உயிரினங்களை கடத்தி செல்கின்றனர்.

    அவர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி அவற்றை தடுப்பதற்கான வழிமுறைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு செல்வதற்காக நேற்று காலை ஸ்ரீலங்கன் விமானம் புறப்பட தயாராக இருந்தது.

    அதில் பயணம் செய்ய இருந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது 14 பயணிகள் உரிய அனுமதியின்றி இந்தியாவில் தயாரிக்கப்பட்ட புதிய ஆடைகள் மற்றும் பல்வேறு பொருட்கள் வைத்திருந்தது தெரிய வந்தது.

    இதனை கண்டறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களை விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கவில்லை.

    இதே போல் இன்றும் 17 பயணிகள் சிக்கினர். அவர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் உடமைகளை தவிர்த்து செல்ல விரும்பினால் பயணம் செய்யலாம் என தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து 5 பயணிகள் மட்டும் விமானத்தில் பயணம் செய்தனர். மீதமுள்ள 12 பயணிகளும் விமான நிலையத்திலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது.

    நேற்று 14 பயணிகளும் இன்று காலை 12 பயணிகளும் என மொத்தம் 26 பயணிகள் விமானத்தில் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

    இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • விமான நிலையத்தின் கார் நிறுத்தும் இடங்களில் தேவையற்ற வாகனங்கள் ஏதேனும் நிறுத்தப்பட்டிருந்தால் அது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • பயணிகளின் உடைமைகள் மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

    திருச்சி:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகில் உள்ள களமசேரியில் நேற்று கிறிஸ்தவ கூட்டத்தில் குண்டு வெடிப்பு நடைபெற்றது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் முக்கியமான விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    திருச்சி விமான நிலையத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு மறு அறிவிப்பு வரும் வரை தொடரும் என விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரி தெரிவித்தார்.

    விமான நிலையத்தின் உள்ளே நுழையும் வாகனங்கள் சோதனை முதல் விமான பயணிகளின் உடைமைகள் வரை அனைத்தும் பரிசோதனைக்கு பின்னரே விமான நிலையப் பகுதிக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறது. மேலும் திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்களின் பெட்டிகளும் சோதனைக்கு பின்னரே விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகிறது.

    மேலும் விமான நிலையத்தின் கார் நிறுத்தும் இடங்களில் தேவையற்ற வாகனங்கள் ஏதேனும் நிறுத்தப்பட்டிருந்தால் அது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதைத் தவிர பயணிகள் எவரேனும் சந்தேகப்படும் வகையில் விமான நிலைய பகுதிக்குள் நுழைந்திருந்தால் அவர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பயணிகளின் உடைமைகள் மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

    • வெளிநாடுகளில் இருந்து வருவோர், தங்கம் கடத்தி வருவதும், சுங்கத்துறையினர் சோதனையில் பிடிபடுவதும் திருச்சி விமான நிலையத்தில் தொடர் கதையாகி வருகிறது.
    • பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் தங்கத்தின் மதிப்பு, இந்திய ரூபாயில் 1.69 கோடி என சுங்கத்துறையினர் தெரிவித்தனர்.

    கே.கே. நகர்:

    திருச்சியில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு இண்டிகோ, மலிந்தோ, ஸ்ரீலங்கன், ஏர் ஏசியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட விமான நிறுவனங்களின் விமான சேவை நடைபெற்று வருகிறது.

    இந்த விமானங்களில் வெளிநாடுகளில் இருந்து வருவோர், தங்கம் கடத்தி வருவதும், சுங்கத்துறையினர் சோதனையில் பிடிபடுவதும் திருச்சி விமான நிலையத்தில் தொடர் கதையாகி வருகிறது.

    நேற்று முன்தினம் மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து வந்த ஏர் ஏசியா விமானத்தில் வந்த சென்னையைச் சேர்ந்த சாதிக் அலி(வயது 40), அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளின் காலணியில் மறைத்து எடுத்து வந்த ரூ.1.08 கோடி மதிப்பிலான 1.872 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போன்று கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு நேற்று வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்து வந்த, புதுக்கோட்டையைச் சேர்ந்த செங்குட்டுவன்(வயது 37) என்பவர் தனது உடலில் மறைத்து எடுத்து வந்த ரூபாய் 61.21 லட்சம் மதிப்பிலான 1.06 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    கடந்த 2 நாட்களில் மட்டும், திருச்சி விமான நிலையத்தில் 2.15 கிலோ கடத்தல் தங்கம், வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் தங்கத்தின் மதிப்பு, இந்திய ரூபாயில் 1.69 கோடி என சுங்கத்துறையினர் தெரிவித்தனர்.

    • தங்கக்கடத்தலில் ஈடுபடும் நபருக்கு கடத்தும் தங்கத்தின் அளவைப் பொறுத்து டிரிப் ஒன்றுக்கு குறைந்தபட்சம் பத்தாயிரம் முதல் ஒரு லட்சம் வரையில் கூலி கொடுப்பதாக சொல்கிறார்கள்.
    • விமான நிலையங்களில் பல கட்ட கண்காணிப்பு, சோதனைகள் இருந்த போதிலும் கடத்தல் தங்கம் தொடர்ச்சியாக பிடிபடுவது ஆச்சரியத்தையும் வியப்பையும் அளிக்கிறது.

    திருச்சி:

    திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் பயணி மறைத்து கடத்தி வரப்பட்ட 1 கிலோ 300 கிராம் தங்கம் பிடிபட்டது. சென்னை விமான நிலையத்தில் ஸ்க்ரூ, கம்பி, பேட்டரியில் மறைத்து கடத்தி வரப்பட்ட சுமார் 1 கிலோ 200 கிராம் தங்கத்தை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றினர்.

    இது போன்ற செய்திகள் நாளும் பத்திரிகைகளில் தவறாமல் இடம்பெறுகிறது. கட்டிங் பிளேயர் கம்பிகளுக்குள் மறைத்து, தலைமுடிக்குள் மறைத்து வைத்து, பேஸ்ட் வடிவில், பேரிச்சம்பழக் கொட்டைகளை நீக்கிவிட்டு அதற்குப்பதில் தங்கத்தை வைத்து, ஊட்டச்சத்து பவுடருக்குள் தூளாக்கி, பிரவுன் டேப்புக்குள் பவுடர்களாக தூவி என நூதன முறையில் கடத்தல்காரர்கள் தங்கம் கடத்தி வருவது சுவாரசியம் தரக்கூடிய செய்தியாக மாறி உள்ளது.

    இவர்கள் "ரூம் போட்டு யோசிப்பாங்களோ?"னு வடிவேலு பாணியில்தான் கேட்கத் தோன்றுகிறது.

    திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஜூலை மாதம் முதல் தற்போது வரை 5 ஆயிரத்து 264 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது. இதன் சந்தை மதிப்பு ரூ. 3 கோடியே 16 லட்சத்து 12 ஆயிரமாகும்.

    கடந்த 2020 முதல் 2023 பிப்ரவரி வரையிலான மூன்றாண்டு காலத்தில் மட்டும் நாடு முழுவதும் தங்கம் கடத்தல் தொடர்பாக சுமார் 9, 869 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இந்த வழக்குகளில் 8, 956.49 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

    இவ்வாறு விமான நிலையங்கள் வழியே தங்கம் கடத்தப்படுவதில் கேரளம் முதலிடத்திலும், தமிழகம் 2-வது இடத்திலும் இருக்கிறது.

    3-வது இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது. இவை மாநிலங்களவையில் மத்திய நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சௌத்ரி வழங்கிய அதிகாரப்பூர்வமான புள்ளிவிவரங்கள். நமது பாரத தேசத்தின் தங்க தேவை ஆண்டொன்றுக்கு 800 டன் என்கிறார்கள். இதில் மூன்றில் ஒரு பங்கு தங்கம் விமானம் வழியாக சட்டவிரோதமான முறையில் கடத்தப்பட்டு வருவதாக கவலையுடன் குறிப்பிடுகிறது உலக தங்க கவுன்சில்.

    தங்கம் இறக்குமதி தொடர்பான அரசின் கட்டுப்பாடுகள், விதிக்கப்படும் அளவுக்கு அதிகமான வரிகள் முக்கிய காரணங்களாக இருக்கின்றன. தற்போது இறக்குமதி வரி, ஜி.எஸ்.டி. என 18.45 சதவீதம் வரை தங்கத்திற்கு வரி விதிக்கப்படுகிறது.

    கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவிற்கு நடப்பு ஆண்டில் தங்க கடத்தலின் அளவு அதிகரித்திருப்பதையடுத்து, தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 12.5% லிருந்து 7.5% ஆக குறைக்க மத்திய அரசு தற்போது பரிசீலித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

    திருச்சி, சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து சவுதி அரேபியா, குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு அதிகம் விமானங்கள் இயக்கப்படுகிறது.

    மேற்கண்ட நாடுகளில் தங்கத்தின் மச்சம் (தரம்) சரியாக இருக்கும் என்பதாலேயே அதிகளவில் தங்கம் வளைகுடா நாடுகளிலிருந்து கடத்தி வரப்படுகிறது.

    முழுக்க முழுக்க இத்தகைய தங்கக்கடத்தல் என்பது உள்ளூர் மார்க்கெட்டை சார்ந்து தான் நடைபெறுகிறது.

    இதற்கென்று பாரம்பரியமான வலை பின்னலை மிகக்கச்சிதமாக கட்டமைத்து வைத்திருக்கிறார்கள்.

    ஒரு முறை தங்கக்கடத்தலுக்காக பயணிக்க குருவி (கடத்தல்காரர்) ஒருவருக்கு மிகக்குறைந்தபட்சம் 50 ஆயிரத்திலிருந்து 1 லட்சம் வரை செலவு செய்கிறார்கள்.

    தங்கக்கடத்தலில் ஈடுபடும் நபருக்கு கடத்தும் தங்கத்தின் அளவைப் பொறுத்து டிரிப் ஒன்றுக்கு குறைந்தபட்சம் பத்தாயிரம் முதல் ஒரு லட்சம் வரையில் கூலி கொடுப்பதாக சொல்கிறார்கள்.

    இதில் தினமும் சிக்குவது சிறிய வியாபாரிகள். பெரிய திமிங்கலங்கள் சத்தம் இல்லாமல் தப்பி சென்று விடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் பொதுவாக இருக்கிறது.

    கல்லூரி மாணவர்கள் தங்களின் ஆடம்பர செலவுகளுக்காக குருவிகளாக மாறி கடத்தலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இவ்வாறு கடத்தலில் ஈடுபடுபவர்கள் பிடிபட்டால் அதன் உரிமையாளர்கள் கடத்தல் தங்கத்திற்கான முழு வரியையும் செலுத்தி தங்கத்தையும் மாணவனையும் மீட்டு விடுகிறார்கள்.

    இதனை சாதாரணமாக சில மாணவர்கள் பகுதி நேர வேலையாக தொடர்ச்சியாக பார்த்து வருகிறார்கள்.

    விமான நிலையங்களில் பல கட்ட கண்காணிப்பு, சோதனைகள் இருந்த போதிலும் கடத்தல் தங்கம் தொடர்ச்சியாக பிடிபடுவது ஆச்சரியத்தையும் வியப்பையும் அளிக்கிறது. விமான நிலையங்களில் பிடிபடும் தங்கத்தை விட கடத்தப்படும் தங்கத்தின் அளவு பல மடங்கு அதிகம் என சொல்கிறார்கள். இதன் மூலம் மத்திய அரசுக்கு கோடிக்கணக்கில் வரிஏய்ப்பு சப்தமில்லாமல் நடக்கிறது. அதிகாரிகள் நேர்மையாக இருந்து நாட்டை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருக்குவளையில் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி படித்த பள்ளியில் தமிழக அரசின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
    • அமைச்சர் கே.என்நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    திருச்சி:

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் இல்ல விசேஷங்களில் கலந்து கொள்கிறார்.

    முதல் நாள் நிகழ்வாக நாளை (25-ந் தேதி) திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி படித்த பள்ளியில் தமிழக அரசின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

    அதன் பின்னர் பிற்பகல் நாகை மாவட்டத்திற்கு புறப்பட்டு செல்கிறார். அங்கு கலெக்டர் அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை துறை வாரியாக ஆய்வு செய்கிறார்.

    2-வது நாள் 26-ந் தேதி ( சனிக்கிழமை) காலையில் நாகை மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். பின்னர் 27-ந் தேதி நாகை எம்பி செல்வராஜ் இல்ல திருமண நிகழ்ச்சியில் முதல்வர் கலந்து கொள்கிறார்.

    மேற்கண்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து விமான மூலம் இன்று (வியாழக்கிழமை) காலை திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தார்.

    அவருக்கு தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    • விமான நிலைய இயக்குனர் இது குறித்து கேள்வி எதுவும் கேட்காமல் அமைதியாக சென்றுள்ளார்.
    • பாதுகாப்பு படை வீரர் உடனடியாக வேறு பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்தின் பாதுகாப்பு பணியில் சுமார் 300-க்கும் அதிகமான மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். அவ்வாறு பணியில் இருப்பவர்கள் விமான பயணிகள் உள்ளிட்ட அனைவரையும் சோதனை செய்த பின்னரே விமான நிலையத்திற்குள் அனுப்புவது வழக்கமான நடைமுறையாகும்.

    திருச்சி விமான நிலைய இயக்குனராக பணிபுரிந்து வருபவர் சுப்ரமணி. இவர் சில மாதங்களுக்கு முன்பு வெளிமாநிலத்தில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு மாற்றப்பட்டு பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று மாலை திருச்சி விமான நிலையத்தின் முனைய பகுதிக்குள் அவர் வந்தார். அப்போது மத்திய தொழில் பாதுகாப்பு படையின் காவலர் அவரை தடுத்து நிறுத்தியுள்ளார். பின்னர் அவரிடம் அடையாள அட்டையை கேட்டுள்ளார்.

    அதனை விமான நிலைய இயக்குனர் சுப்ரமணி காண்பித்த பின்னரும் அவரை உள்ளே அனுமதிக்காமல், அவர் அளித்த அடையாள அட்டையை ஸ்கேனர் கருவி மூலம் மீண்டும் சோதனை செய்துள்ளார்.

    இருந்தபோதிலும் விமான நிலைய இயக்குனர் இது குறித்து கேள்வி எதுவும் கேட்காமல் அமைதியாக சென்றுள்ளார். இதுபற்றிய தகவல் அறிந்த அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து அவரிடம் விளக்கம் கேட்டனர்.

    இதனைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படை வீரர் உடனடியாக வேறு பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த நிகழ்வானது விமான நிலையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பணியில் இருந்த காவலருக்கு விமான நிலைய இயக்குனரை கூட தெரியாமல் அவர் எவ்வாறு பணிபுரிந்தார் என மத்திய தொழில் பாதுகாப்பு படையினரிடம் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

    மேலும் விமான நிலைய இயக்குனரை சோதனை செய்யும் நிலை இதுபோன்று பலமுறை நடைபெற்று இருப்பதும், இதனை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் செய்து வருவதாகவும் தெரிவித்தனர்.

    மற்ற அலுவலர்களோ, அதிகாரிகளோ விமான நிலையத்திற்குள் நுழையும் போது அவர்களது அடையாள அட்டையை காண்பித்தால் உள்ளே அனுமதிக்கும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், ஒரு விமான நிலைய இயக்குனர் முனையத்திற்குள் நுழையும்போது அவரின் அடையாள அட்டையை ஸ்கேனர் கருவி மூலம் சோதனை செய்த பின்பு உள்ளே அனுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இன்று அதிகாலை துபாயில் இருந்து இண்டிகோ விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தினர்.
    • அதிகாரிகள் துபாயில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்து அந்த பயணியிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி:

    திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் அதிக அளவில் அளிக்கப்பட்டு வருகிறது. வருகிற கோடை விடுமுறையை முன்னிட்டு கூடுதல் விமானங்கள் இயக்கவும் ஆலோசனைக்குழுவில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே சர்வதேச நாடுகளில் இருந்து திருச்சிக்கு குருவிகள் மூலம் தங்கம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் அதிக அளவில் கடத்தி வரப்படுகின்றன. இதனை தடுக்க திருச்சி விமான நிலையத்தில் விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர். இந்த அதிகாரிகளின் கண்ணில் சிக்காமல் இருக்க கடத்தல் புள்ளிகள் பல்வேறு நூதன வழிகளில் தங்கத்தை கடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை துபாயில் இருந்து இண்டிகோ விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தினர். இதில் ஆண் பயணி ஒருவர் மீதான சந்தேகத்தின் அடிப்படையில் அவரையும், அவர் கொண்டு வந்த உடமைகளையும் நவீன ஸ்கேனர் கருவி மூலம் அங்குலம் அங்குலமாக சோதனை செய்தனர்.

    அப்போது அவர் எடுத்து வந்த மொபைல் போன் செல்பி ஸ்டிக்கில் மறைத்து கடத்தி வந்த ரூ.27 லட்சத்து 98 ஆயிரத்து 189 மதிப்புள்ள 53 கிராம் பிடிபட்டது.

    பின்னர் அதிகாரிகள் துபாயில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்து அந்த பயணியிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முத்துலிங்கம் என்ற பயணி கொண்டு வந்த உடைமைகளை சோதனையிட்டபோது தங்க நிறத்தில் சாயம் பூசப்பட்டு இருந்த லுங்கியை கண்டுபிடித்தனர்.
    • அதிகாரிகள் லுங்கியில் இருந்து தங்கத்தை பிரித்தெடுத்தனர். அதில் சுமார் 128 கிராம் எடையிலான தங்கம் இருந்தது.

    திருச்சி:

    திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருவது தினசரி வாடிக்கையாகி விட்டது. கடந்த 2 மாதங்களில் மட்டும் 3 வெவ்வேறு சம்பவங்களில் ரூ.1 கோடியே 37 லட்சத்து 67 ஆயிரம் மதிப்புள்ள தங்கத்தை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

    இந்த நிலையில் துபாயில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நேற்று இரவு வந்து சேர்ந்தது. அதில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அந்த சோதனையில் முத்துலிங்கம் (வயது 46) என்ற பயணி கொண்டு வந்த உடைமைகளை சோதனையிட்டபோது தங்க நிறத்தில் சாயம் பூசப்பட்டு இருந்த லுங்கியை கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து அந்த பயணி கொண்டு வந்த லுங்கியை அதிகாரிகள் கைப்பற்றினர். பின்னர் அதனை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்திய போது அதில் தங்கத்தை சாயம் போல் மாற்றி நவீன உத்தியை கையாண்டு நூதன முறையில் பூசப்பட்டு இருந்தது உறுதியானது.

    இதையடுத்து அதிகாரிகள் அந்த லுங்கியில் இருந்து தங்கத்தை பிரித்தெடுத்தனர். அதில் சுமார் 128 கிராம் எடையிலான தங்கம் இருந்தது. அதன் மதிப்பு ரூ.6 லட்சத்து 51 ஆயிரம் என மதிப்பிடப்பட்டது.

    தொடர்ந்து அந்த தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை கடத்தி வந்த விமான பயணி முத்துலிங்கத்திடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆண் பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரை தனியே அழைத்து சென்று சோதனை செய்தனர்.
    • பயணி தனது உடலில் பேஸ்ட் வடிவில் ரூ.46.37 லட்சம் மதிப்பிலான 846 கிராம் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது நவீன ஸ்கேனர் கருவி மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், இலங்கை, அபுதாபி ஆகிய வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல் சென்னை, பெங்களூர், ஐதராபாத், டெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கு உள்நாட்டு விமான சேவையும் அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருவதும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அவர்கள் மீது தொடர் நடவடிக்கை மேற்கொள்வதும் வாடிக்கையாகி விட்டது.

    அந்த வகையில் கடந்த வாரம் ரூ.8 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் ஒரு பயணியிடமும், ரூ.41.65 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் மற்றொரு பயணியிடமும் என மொத்தமாக ரூ.49.65 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று இரவு சார்ஜாவிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர்.

    அப்போது ஆண் பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரை தனியே அழைத்து சென்று சோதனை செய்தனர்.

    அப்போது அவர் தனது உடலில் பேஸ்ட் வடிவில் ரூ.46.37 லட்சம் மதிப்பிலான 846 கிராம் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது நவீன ஸ்கேனர் கருவி மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தவிர வியாபாரிகளாக வெளிநாடுகளுக்கு செல்பவர்கள், குருவிகள் என பல்வேறு தரப்பை சேர்ந்தவர்கள் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    ×